Monday, July 13, 2020

பெண்ணை வர்ணிக்கிறதா கந்தர் சஷ்டி கவசம்?


கந்தர் சஷ்டி கவசத்தைப் பற்றி,கறுப்பர் கூட்டம்  பேசின பேச்சு பலருக்கும் தெரிந்திருக்கும். பேசியவர் இந்து மத வெறுப்பாளர் என்பது மட்டுமல்ல, தமிழறிவு சற்றும் இல்லாதவர் என்பதையும் காட்ட இந்தப் பதிவு

கந்த சஷ்டி கவசம் ஆண், பெண் என இரு பாலாருக்கும் பொதுவானது. இந்தக் கவசத்தைத் துதிப்பவர் எவரோ அவரது தலை முதல் கால் வரை ஒவ்வொரு அங்கத்துக்கும் காப்பு வேண்டும் என்னும் வரிகளில், தன் கறுப்பு (கறை, குற்றம் என்று பொருள்) புத்தியை அந்தக் கறுப்பர் காட்டிவிட்டார்.

“உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க”

என்று ஆரம்பிக்கும் வரிகளில், கவசத்தை எழுதிய புலவர் பால தேவராயன் அவர்கள்  தன் தலையில் ஆரம்பித்து, ‘அடியேன் வதனம்’ என்று தனக்காக மட்டுமல்லாமல்  சிந்தை கலங்காது இந்தக் கவசத்தைத் தியானிப்பவர் எவரோ  அவருக்கும் பொருந்துமாறு எழுதியுள்ளார். இந்தக் கவசத்தைத் தியானிப்பவர் பெண்ணாக இருந்தால், அவருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும்.

பெண்ணுக்கும் ஆணுக்கும் மாறுபடும் இரண்டே இரண்டு உறுப்புகளைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். அதைத்தான் அவர் எழுதியுள்ளார்.
கன்னம், கழுத்து, அதற்கடுத்து மார்பு என்று சொல்லும் போது, அங்கு அந்த அங்கம் பெண்ணுக்கு மாறுபடுகிறது. அதை அவர் படர்க்கை பலர் பால் விகுதியுடன் சொல்வதைக் கவனிக்க வேண்டும். சேரிள முலைமார் என்பதில் 'மார்’ என்னும் விகுதி வருவதை பாருங்கள். இது நன்னூல் இலக்கண விதி 140 ஆகும். அண்ணன்மார், தம்பிமார் என்று சொல்வதை போல, முலைமார் என்கிறார்.


கவசத்தைப் பாடும் ஆணின் மார்பை 'ரத்ன வடிவேல்' காக்கட்டும் என்று சொன்னவுடன், இந்த கவசத்தைச் சொல்லும் பெண்ணுக்கும் கவசமாக 'சேரிள முலைமார் திரு வேல் காக்க' என்கிறார்.
சேர் + இளமுலை + மார் (விகுதி).
சேர் என்றால் திரட்சி. 



செந்தமிழ் அகராதி, ந. சி. கந்தையா பிள்ளை


திரட்சியான இளமுலை உடையோர் என்று 'மார்' விகுதியுடன் பெண்களுக்கும் பொருந்துமாறு எழுதியுள்ளார்.இளமுலை என்று மட்டும் எழுதினால் ஆண் , சிறுவர், சிறுமியர் என அனைவருக்குமே  இள முலைக்  காம்பு உள்ளதால், பொருந்தாது. சேர் என்பதன் மூலம், இந்தக் கவசத்தைத் தியானம் செய்யும் பெண்ணுக்கும் பொருந்தும். அதைக் காக்க, 'திரு வேலை' அழைக்கிறார். திரு என்னும் அடை மொழி லக்ஷ்மியைக் குறிப்பதால், பெண்ணுக்குச் சொல்வதில் பொருத்தமாகிறது.  

வயிறு, இடை ஆகியவற்றுக்குப் பிறகு 'ஆண் குறி இரண்டும் யில் வேல் காக்க' என்கிறார். ஆணுக்கு ஒரு குறிதானே. இங்கு இரண்டும் என்று சொல்வதன் மூலம், ஆண் குறி, பெண் குறி என்று தனித் தனியே சொல்லாமல். இரண்டும் என்று சொல்லிவிட்டார். ஆண் - பெண் உடலமைப்பில் உள்ள வேறுபட்ட இரண்டு உறுப்புகளைச் சொல்லி அவற்றுக்கு கவசமாக அயில் (அழகுவேலை வைத்திருக்கிறார்.

இது புரியாமல் இந்தக் கவசத்தில் ஆபாசத்தைக் காண்பவன் கண்ணுக்கும், குறை கண்டு பிடித்த உறுப்புக்கும் குத்து குத்து கூர் வடிவேலால் என்று எதிர் வினையையும் எழுதி விட்டார் பாலன் தேவராயர்.
அப்படியே ஆகுக.
துதிப்போரைக் காக்கும் வேல் நிந்திப்போரைத் தாக்கும் வேலாகட்டும்