Sunday, April 28, 2013

மழை ஜோதிடம் (பகுதி 5) (கிரகச் சேர்க்கைகள்)

தமிழில்:- திரு டி.ஜி. ஸாரநாதன்


முந்தைய கட்டுரைகள்

பகுதி 4:- மழை ஜோதிடம் (பகுதி 4) (புதன் - சுக்கிரன் அருகாமை )


                                         
ந்தப் பகுதியில், மழை அல்லது மழை இன்மையைக் குறிக்கும் கிரகச் சேர்க்கைகளை தெரிந்து கொள்ளலாம். கிரகச் சேர்க்கைகள் எல்லா இடங்களுக்கும் பொது. ஒரு இடத்தில் மழை பொழிவு இருக்க வேண்டுமானால், 195 தினங்களுக்கு முன்னால் அதற்க்குச் சாதகமான வானிலை காரணிகள் (பகுதி 1ல் கூறியபடி) இருந்திருக்க வேண்டும். ஆகையால், ஒரு இடத்தின் மழைப் பொழிவை கணிக்க, இவற்றையும், கிரகச் சேர்க்கைகளையும் சேர்ந்தே பார்த்து கணிக்கவேண்டும்.

கிரகங்களின் சஞ்சாரத்தை நோக்கும்போது, சுக்கிரன் (வெள்ளி), புதன் இரண்டும் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன. இந்த இரண்டிலும், புதன் சுக்கிரனுக்கு முன்னால் சென்றால், காற்று வீசி மழை மேகங்களைச் சிதற அடித்துவிட்டு, மேகங்களைக் காணாமல் போக்கிவிடும். ஆனால் சுக்கிரன் முன் சென்றால், பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இந்த ஆண்டிற்கான  நற்செய்தி, சுக்கிரன் புதனுக்கு முன்னால் வருடக் கடைசி வரைக்கும் சஞ்சரிக்கிறது,  ஆனாலும், பருவ மழை தொடங்கும் மே மாதம் கடைசி வாரம், புதன், சுக்கிரனுக்கு வெகு அருகாமையிலும், சில சமயம் சுக்கிரனுக்கு முன்னாலேயும் சஞ்சரிக்கிறது. ஆனால், ஜூன் 20ம் தேதியிலிருந்து, சுக்கிரன் புதனை முந்திக் கொள்கிறது. மே 28லிருந்து ஜூன் 20 வரைக்கும், மழை எப்படி இருக்கப் போகிறது என்று பார்க்க வேண்டும். தொடர்ச்சியாக,குறைந்தது 9 வருடங்களுக்காவது, தீவிர ஆய்வு மேற்கொண்டு, மழை அளவுகளையும், கிரகங்களின் நிலைகளையும் குறித்து வைத்துக் கொண்டால், ஒரு நம்பகமான மழை அளவு கணிப்பு மாதிரியை உண்டாக்கலாம். 


ஒன்பது விதமான மேகங்கள்:

மழை பெய்வதற்கான வாய்ப்புகள், ஒன்பது வருட சுழற்சியில் இருக்கிறது. மழை பொழிதலின் தன்மை ஒன்பது விதமான மேகங்களில், ஒன்பது வருடங்களில் வகுக்கப்பட்டுள்ளது. இந்த்த் தன்மை, ஒன்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து ஏற்படும். யாராகிலும் ஒருவர், மழைப் பொழிவை கடந்த 9  வருடங்களிலிருந்து 45 வருடங்கள் வரை, மழை அளவு பதிவுகளை, கிரகங்களின் சஞ்சாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்,  மழை அளவு கணிப்பிற்கு,  ஒரு மிக நம்பகமான அடிப்படையை உருவாக்கலாம்.  அந்த ஒன்பது வருட மேகங்கள் பின்வருமாறு: 

1.        தமோ மேகம் - அபரிமிதமான மழை தரும்.
2.        வாயு மேகம் - குறைந்த மழை. பஞ்சம் நிலவும்.
3.        வாருண மேகம் - பரவலான, மிக பலத்த மழை.
4.        நீல மேகம் -  கலப்படமான நிலை. ஒரு இடத்தில் நல்ல மழையும், மற்றொரு இடத்தில் பொய்க்கும்.
5.        காள மேகம் - புயலுடன் கூடிய மழை.
6.        துரோண மேகம் - கடுமையான பேய் மழையும், வெள்ளமும்.
7.        புஷ்கல மேகம் - பலத்த மழை.
8.        சங்க வர்த்த மேகம் - குறைந்த மழையும், பலத்த காற்றும்.
9.        ஆவர்த்த மேகம் -  பூமியை நனைக்கும் சொற்பமான மழை.
குறிப்பிட்ட ஆண்டுக்கான  மேக வகையை அந்த ஆண்டிற்கான பஞ்சாங்கத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். சென்ற வருடம் அது ஆவர்த்த மேகமாக இருந்தது. அதனால் சொற்ப மழையே பெய்தது. (ஆண்டு சித்திரையிலிருந்து ஆரம்பிக்கிறது), இந்த ஆண்டு - விஜய வருஷம்- தமோ மேகம். இதனால் நிறைய மழை பெய்ய வாய்ப்புண்டு. தமோ மேகத்தின் ஒரு முக்கிய அம்சம், அது தென் கிழக்கிலிருந்து உற்பத்தியாகும். இந்த திசையினால், வங்கக் கடலில் காற்றழுத்தம் ஏற்ப்பட்டு, தமிழகத்திற்கு, நன்மை பயக்கும்.

இந்த சமயத்தில் ( தென் கிழக்கு புயல் உற்பத்தியின் போது), அதாவது அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில், சுக்கிரன் - புதன் அருகாமை இந்த ஆண்டு இருக்காது. ஆனாலும், வேறு எந்த கிரகங்களின் குறுக்கீடும் அக்டோபர் 10ம் தேதிக்குப் பிறகு இல்லாததால், இது தென் கிழக்கிலிருந்து வரும்  தமோ மேகத்திற்குச் சாதகமாகவே இருக்கும். 

சுக்கிரன் - புதன் அருகாமையின் போது, செப்டம்பர் இரண்டாவது பாதியில், சனி இடையில் வருகிறான். செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10 வரை சுக்கிரன் புதன் அருகாமையை இடையில் வரும் சனி கெடுக்கிறான். இந்த காலம் மழை அளவை எவ்வாறு பாதிக்கும் என்பதை நோக்க வேண்டும். 
இந்த ஒன்பது விதமான மேகங்களையும், கிரகங்களின் பலவாறான நிலைகளையும்  குறைந்தது ஒரு சுழற்சியிலாவது (ஒன்பது வருடங்கள்) அல்லது பொருத்தமான 5 சுழற்ச்சிகளிலாவது கவனித்து அலசி  ஆராய்ந்து ஒரு நம்பகமான அடிப்படையை ஏற்படுத்த வேண்டும். 

இப்பொழுது .அதிவ்ருஷ்டி, அனாவ்ருஷ்டி யோகங்களுக்கான, கிரகங்களின் சேர்க்கைகளைப்  பார்ப்போம். 

அதிவ்ருஷ்டி யோகம் (ஏராளமான மழை)
  • சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும்போது, சுக்கிரன் சூரியனுக்கு முன்பான 2ம்  அல்லது பின்பான 12ம் இடத்தில் இருந்தால், சந்திரன் நீர் சம்பந்த நவாம்ச (கடகம், வ்ருச்சிகம், மீனம் ) இடங்களைக் கடக்கும்போது,அந்த தினங்களில் ஏராளமான மழை பெய்யும்.

  • சூரியன், சந்திரன், செவ்வாய், சனி, இராகு நீர் சம்பந்த இராசிகளில் இருந்துகொண்டும், சுக்கிரன், புதன் ஒரு இராசியில் ( ரிஷபம், சிம்மம் வ்ருச்சிகம், கும்பம்) இருந்தாலும் நல்ல மழை.


  • சூரியன், சுக்கிரன், புதன் ஒரே ராசியிலும், ஒரே நவாம்சத்திலும் இருந்தாலும் நல்ல மழை பெய்யும். அந்த இராசி, நவாம்சங்கள் நீர் சம்பந்தமானவையாக இருந்தால், மிக பலத்த மழை பெய்யும்.

  • புதனும் சுக்கிரனும் நெருக்கமாக இருந்தால்.


  • புதனும், சுக்கிரனும் ஒரே இராசியிலும் ஒரே நவாம்சத்திலும், அஸ்தமனத்திலும் இருந்தால்.

  • மேற்ப்படி நிலையில் சுக்கிரன்,செவ்வாய்க்குப் பின் இருந்தால். 


  • சூரியன், பூமி சம்பந்தப்பட்ட இராசியில் (ரிஷபம், கன்னி, மகரம்) இருந்தும், சந்திரன், புதன், சுக்கிரன் நீர் சம்பந்தப்பட்ட இராசியிலோ அல்லது நவாம்சத்திலோ இருந்தும், மேற்கு வானத்தில் வானவில் தோன்றினால்.  

  • சந்திரன், நீர் சம்பந்தப்பட்ட இராசியிலோ அல்லது நவாம்சத்திலோ இருந்து,  செவ்வாயும் சனியும் பூமி சம்பந்தப்பட்ட இராசியிலோ அல்லது பூமி சம்பந்தப்பட்ட நவாம்சத்திலோ இருந்து, கிழக்கே வானவில்லும் தோன்றினால். 


  • சுக்கிரனும்,புதனும் மேற்கு வானத்தில் (மாலை வேளை) அருகாமையில் இருந்தாலோ, அல்லது சூரியனுக்கு மேற்கிலோ, அல்லது ஒரு நிலையான ராசியிலோ (ரிஷபம், சிம்மம், விருச்சிகம்) அல்லது நீர் சம்பந்தப்பட்ட ராசியிலோ (கடகம், விருச்சிகம், மீனம்)

  • புதன் அஸ்தமித்து, சுக்கிரன் உதயமானால்.


  • புதன் வக்கிரத்தில், சுக்கிரன் வக்கிரத்திலிருந்து நேரப் பாதையில் முன்னேறினால்.

  • இவர்கள் நெருக்கத்தோடு, சூரியனும் முன்னாலோ அல்லது பின்னாலோ ஒரே ராசியிலும், ஒரே நவாம்சத்திலும் சேர்ந்து கொண்டாலோ.


  • மேற்கண்ட சேர்க்கை (அல்லது புதன் மட்டுமோ அல்லது சுக்கிரன் மட்டுமோ) நவாம்சம் நீர் சம்பந்தப்பட்டதாக இருந்தாலோ.

  • மேற்கண்ட சேர்க்கையில் (புதன் சுக்கிரன் அருகாமையில், சூரியன் அவர்களுக்கு முன்னேயோ அல்லது பின்னேயோ) இந்த இரு கிரகங்கள்  (அல்லது ஒன்று) அஸ்தமனத்தில் இருந்தால். புதன்  சூரியனுக்கு 14 டிகிரி அல்லது சுக்கிரன் சூரியனுக்கு 10 டிகிரி இந்தப் பக்கத்திலோ அல்லது அந்தப் பக்கத்திலோ இருந்தால் அஸ்தமனம்.


  • இந்த மூவர் கூட்டணியில், சூரியனுக்கு முன்னால் சுக்கிரன் இருந்தாலோ  ( கிழக்கு மேற்கான  இவர்கள் வரிசை புதன், சுக்கிரன், சூரியன்)

  • புதன் - குரு அல்லது சுக்கிரன் குரு நெருக்கத்தில், நடுவில் வேறு எந்த கிரகமும் குறிக்கிடாமல் இருந்தால்.


  • மழைக் காலத்தில், சூரியனும், சுக்கிரனும், சிம்மம், கன்னி, துலாம் இராசிகளில் இருக்கும்போது, செவ்வாய் அவர்களுக்கு நடுவில் வரும்போது.'

  •  சுக்கிரன், செவ்வாய்க்குப் பின்னால், சிம்மத்தில். 

  • செவ்வாய் சூரியனுக்குப் பின்னால்.

  • எல்லா கிரகங்களும் சூரியனுக்குப் பின்னால்.


  • எல்லா கிரகங்களும் சூரியனுக்கு முன்னால். (குறிப்பு: சூரியன் கிரகங்களுக்கு நடுவில் வந்தால், மழை மேகம் ஏற்படுவதைத்   தடுக்கும்.) இந்த முன்னும், பின்னுமான இரண்டு நிலைகளும், மழைக் காலத்தில் ஏற்ப்பட்டால், பெரு வெள்ளமும், குளிர் காலத்தில் ஏற்ப்பட்டால், பலத்த பனிப் பொழிவும் உண்டாகும்)

  • சூரியன், செவ்வாய், சனி ஒன்றுவிட்ட இராசிகளில் சஞ்சரிக்க வேண்டும். அப்பொழுது, சந்திரன் அவர்களிலிருந்து 150 அல்லது 180 அல்லது 270 டிகிரியில் சஞ்சரித்தால், இரண்டு நாட்கள் முன்பும் பின்பும் பலத்த மழை பெய்யும்.


  • ஒவ்வொரு அமாவாசையும், பௌர்ணமியும் நன்கு கவனிக்கப்பட வேண்டும். அமாவாசை அன்றும், அதற்கு அடுத்த நாளும் மழை இருந்தால், கிருஷ்ண பக்ஷத்தில் மழை இருக்காது.

  • அமாவாசைக்கு அல்லது பௌர்ணமிக்குப் பிறகு, சந்திரன் சூரியனிலிருந்து,  8லிருந்து 15 டிகிரி வரை தொலைவில் இருந்து அப்போது மழை பெய்தால், அடுத்த ஒரு மாதத்திற்கு, திரும்பவும் சந்திரன் அதே நிலைக்கு வரும் வரை மழை பெய்யும்.(வேறு விதமாகச் சொன்னால், பிரதமை திதியில் பிற்பாதி 15 நாழிகையிலிருந்து, த்விதீயை முற்பாதி 15 நாழிகை வரைக்கும் மழை இருந்தால், அடுத்து வரும் இரண்டு பக்ஷங்களுக்கும் மழை இருக்கும்) இதே இடைவெளியில், மிகப் பற்றாக்குறைவான மழை இருந்தால், ஒரு மாதத்திற்கு வானிலை அறிகுறிகள் இருக்கும். இதே இடைவெளியில் மழையே இல்லாமல் போனால், ஒரு மாதத்திற்கு மழை இருக்காது. 


  • மழைக் காலத்தில், எந்த ஒரு நாளிலும், உதய  சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் இருந்தும், நண்பகல் மிக்க உஷ்ணமாக இருந்தாலும், அதே நாளில், பிற்ப்பகல் மழை இருக்கும். 

அனாவ்ருஷ்டி யோகம் (மழையின்மைக்கு கிரகச் சேர்க்கைகள்)
  • பரஸ்பரம் எதிர் எதிராகச் செல்லும் கிரகங்கள் (180 டிகிரி தள்ளி இருப்பவை) குறைந்த மழையை கொடுக்கும்.

  • பரஸ்பரம் எதிரிடையான செவ்வாயும், குருவும்.


  • பரஸ்பரம் எதிரிடையான சுக்கிரனும், குருவும்.

  • பரஸ்பரம் எதிரிடையான சூரியனும், குருவும்.


  • பரஸ்பரம் எதிரிடையான சூரியனும், வேறு எந்த கிரகமும்.

  • மழைக் காலத்தில், செவ்வாய் சிம்ம இராசியில் இருந்தால், மழை மேகம் ஏற்படுவதைக் குறைக்கும்.


  •  செவ்வாய் எந்த கிரகத்தின் முன்னால், இருந்தாலும் (சூரியன் உட்பட), பூமியைச் சுட்டெரிக்கும்.(ஜோதிட பாஷையில் இதற்க்கு செவ்வாயின் வெற்றி என்பர்)

  • மழைக்கு முக்கியமான சுக்கிரனும், புதனும். வெளிப்புறத்தில் உள்ள மற்ற கிரகங்களும், அதாவது செவ்வாய், குரு, சனி, இவைகளுக்கு முன்னால், மழைக் காலத்தில் வந்தால், பஞ்ச கால நிலைமைகள் தோன்றும்.


  • சனி, சுக்கிரனுக்கு முன்னால் இருந்தால், குறைந்த மழை பெய்யும். 

  • செவ்வாய், சுக்கிரனுக்கு முன்னால் இருந்தால், வெப்பச் சூழ்நிலை நிலவும்.


  • புதன், சுக்கிரனுக்கு முன்னால் இருந்தால், காற்றுச் சூழ்நிலை நிலவும்.
  • செவ்வாய், ரோகிணி, திருவாதிரை, ஆயில்யம், மகம், சுவாதி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, கேட்டை நக்ஷத்திரங்களில் சஞ்சரித்தால்.
இவற்றைத் தவிர சில கிரகச் சேர்க்கைகள், குறிப்பிட்ட நக்ஷத்திரங்களில் சஞ்சரிக்கும் போது, மழைக்குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும். அவற்றை அடுத்த பாகத்தில் விவாதிக்கலாம். 

(தொடரும்)