Monday, December 23, 2019

ஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்

Reproducing my old article published in tamilhindu.com


‘வேதமனைத்துக்கும் வித்து’ என்று ஆன்றோரால் போற்றப்படும் திருப்பாவையில் அடிக்கடி சொல்லப்படும் ஒரு சொல், ‘பறை’ என்பதாகும். இது கையால் தட்டப்படும் ஒரு தோல் கருவி. பாணர்கள் முதல், சிறுவர்கள் வரை பலராலும் கொட்டப்படும் இந்தப் பறை, பாவைநோன்பின் போதும் சிறுமியரால் கொட்டப்படுவது. பாவைக் களம் புக வேண்டி, மற்ற சிறுமியரை அழைக்கும் ஆண்டாள் பறை கொட்டினது மட்டுமல்லாமல், நாராயணன் பறை தருவான், அவன்  பறை தர வேண்டும்  என்றும் கூறுகிறாள்.

அவளிடம்தான் ஏற்கெனவே  பறை இருக்கிறதே, அது என்ன வேறு ஒரு பறை – அதுவும் நாராயணன் தரும் பறை என்று நாம் ஆராயப் புகுந்தால், சில அரிய ஆன்மீகக் கருத்துகள் புலனாகின்றன. அதன் மூலம், வேதமனைத்துக்கும்  எவ்வாறு திருப்பாவை விதையாகிறது என்றும் புரிகிறது.
இவற்றை விவரிப்பதற்கு முன்னால், ஆண்டாள் கொட்டிய பறை எது என்று கண்டு பிடிக்க முடியுமா என்று பார்ப்போம்.

ஆண்டாள் கொட்டிய பறை

ஐந்திணைகளுக்கும் உரிய பறைகள் தொண்டகப்பறை (குறிஞ்சி), துடிப்பறை (பாலை) , ஏறுகோட்பறை (முல்லை), மணப்பறை மற்றும் கிணைப்பறை (மருதம்) , மீன்கோட்பறை (நெய்தல்).
இவை தவிர வேறு சில பறைகளும் அந்த நாளில் இருந்திருக்கின்றன. புறநானூறில் 12  விதமான பறைகள் சொல்லப்படுகின்றன. இவற்றுள் ஆண்டாள் எந்தப் பறையைக்கொட்டியிருப்பாள் எனக் காண்போம்.

(1) அரிப்பறை  :- அரிப்பது போல ஓசை எழுப்பும். வயல் வெளியில் பறவைகள், இலைகளின் மீது உரசிச் செல்லும் சப்தம் போலவும், பெண்டிர் அணிந்த  நகைகள் ஒன்றனோடு ஒன்று உரசுவது போலவும் என்று, அரிப்பறை ஓசை உவமை காட்டப் படுகிறது.
(2) அனந்தன் பறை :- சுடுகாட்டுப் பகுதிகளில், பேயாட்டம் ஆடும் மகளிர் இதைக் கொட்டுவர். சரசரவென்று பாம்பு செடிகளுக்கிடையே ஓடும் ஓசை போல் இருக்கும் போலிருக்கிறது. இதன் ஓசை கேட்டு பருந்துகள் வருமாம்.
(3)  ஆகுளிப்பறை மற்றும்
(4 ) சிறு பறை :- மிகச் சிறிய, கைக்கடக்கமான பறை இது. பாணர்கள் யாழுடன் எடுத்துச் செல்லும் பறை. அரசனைக் குறித்தோ, கடவுளைக் குறித்தோ பாடுவதற்குப் பயன் படுவது. இதை விடிவதற்கு முன் கொட்டுவார்கள்.
(5) சல்லிப்பறை :- இதைப்  பெரும் பறை என்பார்கள். விழாக்களிலும், ஊர்வலங்களிலும் கொட்டுவார்கள்.
6) சாக்காட்டுப்பறை :- இது சாவுக்கு அடிக்கும் பறை.
(7) செருப்பறை :- அரசன் போர்க்களத்தில் நுழையும்  போது அடிப்பது. யானைப் படைக்கு முன்னால் அடித்துச் செல்வர்.
(8) போர்ப்பறை :- இது போர் அறிவிக்கும் பறை. போருக்குச் செல்லும் போது  அடிக்கும்  பறை.
(௯) நெய்தல் பறை :- சாக்காட்டுப் பறை போல, சாவின் போது  நெய்தல் நிலத்தில் அடிக்கபடுவது.
(10) தடாரிப்பறை :- இதைக் கிணைப் பறை என்றும் பம்பைப் பறை என்றும் கூறுவர். இது உடுக்கையாக இருக்கலாம்.
(11) ஒரு கண் பறை:- அளவில்  பெரியதான  இப்பறையில், கண் போன்ற அடையாளம் தெரியும். அது யானையின் பாத வடிவில் இருக்கும், செய்திகளை அறிவிப்பதற்கும், போர்க்களங்களிலும், இது பயன் படுத்தப்பட்டது.
(12) மணப்பறை :- திருமணங்களில்  கொட்டப்படுவது.

புறநானூறில் ஆங்காங்கே பேசப் படும் இந்த 12 பறைகளில், ஆகுளிப் பறையும், சிறுபறையும் மென்மையாகவும், பாடலுக்கு இசைந்தும் கொட்டப்படுவதுடன், கடவுளைக் குறித்து, விடிவதற்கு முன்னமேயே கொட்டப் படுவதால், ஆண்டாளும் அவள் தோழிகளும், கொட்டிய  பறை சிறு பறை அல்லது ஆகுளிப் பறை எனக் கொள்ளலாம்.

இனி, பறை என்று ஆண்டாள் கூறும் செய்திகளைப் பார்ப்போம்.

மொத்தம் 10 இடங்களில் ஆண்டாள் பறை என்று குறிப்பிடுகிறாள்.

ஆண்டாள் கூறும் பறை
1. பறை தருவான்  (பாசுரம் – 1)
2. பாடிப்பறை கொண்டு  (பாசுரம்- 8 )
3. போற்றப் பறை தரும்  – (பாசுரம்- 10)
4. அறை பறை –  (பாசுரம் -16)
5. பறை தருகியாகில் – (பாசுரம் -25)
6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)
7. உன்றன்னை பாடிப்  பறைகொண்டு – (பாசுரம் -27)
8. நீ தாராய் பறை – (பாசுரம் -28)
9. இற்றைப்  பறை கொள்வான் –  (பாசுரம் -29)
10.அங்கப் பறை கொண்ட ஆற்றை  – (பாசுரம் -30)

அவற்றுள், 26  -ஆம் பாசுரத்தில் வரும் சாலப் பெரும் பறை, மேற் கண்ட 12 பறைகளுள் சல்லிப் பறையை ஒத்திருக்கிறது. சல்லிப் பறை என்பது, விழாக்களில் கொட்டப்படுவது.  சுற்றுப்புறத்து ஓசைகளையும் மீறி ஓங்கி ஒலிக்க வேண்டிய பறை.

‘மாலே மணி வண்ணா’ எனத் தொடங்கும்  பாசுரத்தில், ‘சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே’ என்று ஆண்டாள் கூறும் வர்ணனை இறைவன்  வரும் வீதி ஊர்வலம் போல உள்ளது.

ஞாலத்தை எல்லாம் நடுங்கச் செய்யும் வகையில்  பாஞ்சசன்னியம் என்னும் சங்கூதும் ஒலியோடு, பிற ஒலி முழக்கங்களும், பல்லாண்டு இசைத்த வண்ணம் செல்வதும், கோல விளக்கும், கொடியும், விதானமும் செல்லும் பாங்கினையும் உரைத்திருப்பது, மார்கழி மாதத்து வைகுண்ட ஏகாதசி அன்று திருமால் வீதி வலம் வரும் கருட சேவை போன்று இருக்கிறது. வீதி ஊர்வலத்தில் கொட்டப்படும் சல்லிப் பறையை ஆண்டாள் சாலப் பெரும் பறை என்று கூறியிருக்கலாம்.

திருப்பாவையில் வைகுண்ட ஏகாதசி

முப்பது திருப்பாவை பாசுரங்களும், நாள் ஒன்றுக்கு ஒரு திருப்பாவை என்ற கணக்கில் முக்கியத்துவம் கொடுத்து பாடப் படுகிறது. அப்படிப் பார்க்கும் போது, முதல்  பாசுரத்தில் ‘மதி நிறைந்த நன்னாள்’ என்று சொல்வது, பௌர்ணமி கழிந்த மறு நாள் விடிகாலைக் காட்சி போலத் தெரிகிறது.

மார்கழி பௌர்ணமியில், பாவை நோன்பு ஆரம்பிக்கும் என்று பரிபாடல் – 11 தெரிவிக்கிறது. மார்கழி மாதம், திருவாதிரையில், சந்திரன் செல்லும் போது, பூரண சந்திரன் ஆகிறது. அன்று விடிகாலை, ஆற்றங்கரையில் ஹோமத் தீ வளர்த்து, ஆதிரையானை வழி படுவர். அவ்வமயம், அனைத்து பெண்களும் பாவை நோன்பு ஆரம்பிப்பார்.

திருமணமானவர்களும், கன்னிப் பெண்களும், சிறுமியரும் என, அனைத்துப் பெண்களும், அந்த வழிபாட்டில் கலந்து கொள்வர்.

அது முடிந்த மறு நாள் முதல், இளம் சிறுமியர் மட்டும ஆற்றங்கரை சென்று பாவை செய்து, பறை கொட்டி, அந்தப் பாவைக்குப்  பூச் சொரிந்து, விளையாட்டாகக் கடவுளை வணங்குவர்.

இதையே ஆண்டாள் துவங்கி வைக்கிறாள். பாவை நோன்பிருந்து நல்ல கணவனை  அடைவது என்னும் வழக்கப்படி கண்ணனையே கணவனாக அடைய விரும்பி ஆண்டாள் பாவைக் களம் புக விரும்புகிறாள். பௌர்ணமி கழிந்த மறுநாள் சிறுமியர் துவங்கும் பாவை நோன்புடன் முதல் பாசுரம் துவங்குகிறது. அப்பாசுரத்தில் வரும் வர்ணனை, பௌர்ணமி கழிந்த மறு நாள் விடிவதற்கு முன் இருக்கும்வானத்தைச்  சொல்கிறது. பௌர்ணமிக்கு மறுநாள் வைகறையில், முழு மதி இன்னும் வானில் இருக்கும்.

அன்று காலை  நிறை மதி இன்னும் வானில் தெரிய, அதைதான் ஆண்டாள், மதி நிறைந்த நன்னாள்  என்று சொல்லி இருக்கிறாள்.

நாள் ஒன்றுக்கு ஒரு பாசுரம் என்ற கணக்கில், பௌர்ணமிக்குப் பதினைந்தாம் நாள் வரும் அமாவாசை ‘எல்லே இளங்கிளியே’ பாசுரத்தில் வருகிறது. அதற்கு மறுதினத்திலிருந்து, வளர் பிறை ஆரம்பம். வளர் பிறையின்  ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி ஆகும். அது 11-ஆம் நாள் வருவது. அப்படி கணக்கு பார்த்தால்  ‘மாலே மணி வண்ணா’  பாசுரம் வைகுண்ட ஏகாதசி என்றாகிறது . அன்றுதான், எல்லா விஷ்ணு ஆலயங்களிலும், கருட வாகனத்தின் மீது திருமால் வீதிப் புறப்பாடு கிளம்பி விடுவார். ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வார், பாண்டிய அரசனின் சந்தேகத்தைத்  தீர்த்து, அவனால் கொண்டாடப்பட்டு, பட்டத்து யானை மீது நகர் வலம் வந்தபோது, அவருக்கு கருட வாகனத்தின் மீது காட்சி  தந்த திருமாலைப் பார்த்து, ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்று இறைவனையே வாழ்த்திப்பாடினார். சாலப் பறை பற்றி சொல்லும், ‘மாலே மணி வண்ணா’ பாசுரத்திலும், பல்லாண்டு இசைப்பதைப் பற்றி கூறுவதாலும், அது வீதி வலம் வரும் கருட சேவையாகவும், அந்தப் பாசுரம் இசைத்த அன்று வைகுண்ட ஏகாதசியாகவும்  இருந்திருக்கலாம்.

மறுநாள் துவாதசி என்பதற்கு ஏற்றாற் போல், அடுத்த பாடலான ‘கூடாரை’ யில் உண்ணுவது பற்றி சொல்லப்படுகிறது.

இந்த இடத்தில் வைகுண்ட ஏகாதசி பற்றி ஒரு கொசுறு செய்தி. வைகுண்ட ஏகாதசி அன்று,  நாம் இருக்கும் பூமியானது, இந்தப் பால் வெளி அண்டத்தின் மையத்திலிருந்து அதிக பட்சத்  தொலைவை அடைகிறது. தனுர் மாதம் என்னும் மார்கழி மாதமுடைய தனுர் ராசியானது நம் பால் வெளி அண்டத்தின் மையப் பகுதியாகும். தனுர் ராசிக்கு நேர் எதிரில் சூரியன் வரும் இந்த மாதத்தில், நாம் சூரியனுக்கு அப்பால் – சூரியனிடமிருந்தும், பால் வெளி மையத்திடமிருந்தும், அதிக பட்ச தொலைவை அடைகிறோம். இதை வேறு விதமாகக் கூறுவதென்றால், பால் வெளி கேலக்ஸ்சியின் (galaxy) வெளியே – எங்கிருந்தோ அது வந்து கொண்டிருக்கிறதே, அந்த அண்ட வெளிக்கு அருகே – அதிக பட்ச அருகாமையை வைகுண்ட ஏகாதசி அன்று நாம் அடைகிறோம். இந்த வெளி, தேவயானம் என்றும் உத்தர வீதி என்றும் சொல்லப்படும்.  இது  நமது கேலக்ஸ்சியின் மேல்புறமான இடம். பிறவா நிலையடையும் ஜீவன்கள் உத்தர வீதியில் செல்லும் என்பது ஐதிகம். அப்படிப்பட்ட உத்தர வீதியின் புறம், நமது பூமிக் கோளம், அதிகபட்ச  அருகாமையைப் பெறும் வைகுண்ட ஏகாதசி நாள், மோக்ஷ வாயில் திறக்கப்படும் நாளாகக் கருதப்படுகிறது. பிரபஞ்ச இயலும், அதன் வழி  ஆன்மீக  நிலையையும் அறிந்த நம் முன்னோர் வகுத்த வழிகள் ஒப்புவமையே இல்லாதவை.

அத்தகு சிறப்பும், தொன்மை வழக்கமும் கொண்ட வைகுண்ட ஏகாதசி அன்று, சாலப் பெரும் பறை கொட்டினர்  என்று ஆண்டாள் கூறுவது சாலவும் பொருத்தம்.


ஆண்டாள் கேட்ட பறை

பறை கொட்டி, பாவை நோன்பு நோற்ற ஆண்டாள், தனக்கு நாராயணன் பறை தருவான் என்கிறாள். மேற்கூறிய சாலப் பெரும் பறை தவிர மற்ற இடங்களில், அவள் கேட்கும் பறை, அதாவது நாராயணன் தருவான் என்று சொல்லும் பறை என்பது,  தட்டும் பறை அல்ல. அவள்  பெற வேண்டும் என்று கேட்கும் அந்தப் பறை எப்படிப்பட்டது என்பது, மீதம் ஒன்பது இடங்களில் அவள் சொல்லும் பறையை இணைத்துப் பார்த்தால் விளங்குகிறது.

அவள் நாராயணன்  திருக்கோவிலின்  வாசல் கதவைத் தட்டி, கதவைத் திறக்கச் சொல்லி வாயில் காப்பாளனிடம் ‘தான் ஒன்றும் அழையா விருந்தாளி அல்ல, அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தானே. அதனால் தான் வந்தோம். கதவைத் திற’ என்கிறாளே அங்கே இருக்கிறது சூட்சுமம்.

இங்கே பறை என்பது கொட்டும் பறை அல்ல. மாயன் மணிவண்ணன் என்னும் கண்ணன் அறை பறை அறிவித்து அன்றே சொன்னானே, அதை நம்பி அவனைத் தேடி நாங்கள் வந்திருக்கிறோம். கதவைத் திறக்காவிட்டால் எப்படி என்று கேட்கிறாள்.

அப்படி என்ன அறை பறை அறிவித்து மாயவன் சொன்னான்?

அறை பறை என்னும் சொல்லே ஒரு சிறப்புப் பொருளுடையது. ‘அறை பறை அன்ன கயவர்’ என்னும் குறள் – 1076 -இல், ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பகிங்கிரமாகச் சொல்லுவது அறை பறை என்கிறார் உரை ஆசிரியர் பரிமேலழகர். ரகசியமாக சொல்லப்பட்டு வந்த ஒரு விஷயத்தை கண்ணன் பகிங்கிரமாகச் சொல்லி இருக்கிறான். அதை உண்மை என்று நம்பி ஆண்டாள் கண்ணன் திருக்கோயில் தேடி வந்திருக்கிறாள்.

அபப்டி என்ன ரகசியம் – அதை ஊரறிய பகிங்கிரமாகக் கண்ணன் சொல்லி விட்டான் என்றால், அதுவே அவன் போர்க்களத்தில், அர்ஜுனனுக்கு, கொடுத்த வாக்குறுதி!

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஷுசஹ

எல்லா தர்மங்களையும் விட்டு விட்டு என்னையே சரணடை. நான் எல்லாப் பாபங்களிலிருந்தும் உனக்கு விடுதலை அளிக்கிறேன் என்று கண்ணன்  கூறுவது,  பிறவி பெரும் கடலைக் கடக்க அவன் கொடுக்கும் ஒரு உறுதிப் பிரமாணம். இது என்றுமே உள்ள பிரமாணம்தான். ஆனால் அந்நாளில் மக்கள்,  கடினமான ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு அதன் பயனாக இதை அறிந்தார்கள். எனவே இது ரகசியம் எனப்பட்டது. அப்படியான ஒரு ரகசியத்தை, எல்லார் முன்னிலையிலும், எல்லோரும் அறியும் வண்ணம் போட்டு உடைத்து விட்டான் கண்ணன். அறை பறை என அறிவித்துவிட்டான்.

அன்றைக்கு அவன் அர்ஜுனனுக்கு அறிவித்தது, உரக்க அறிவித்தது, பறை  கொட்டியது  போல் அறிவித்தது, மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. அவன் கொடுத்த உறுதி பிரமாணத்தை நம்பி, அவனே எல்லாம் என்று அவனைச் சரணடைந்து, அவனைத் தேடி வந்திருக்கிறோம். நீ கதவைத் திறக்க மாட்டேன் என்கிறாயே என்று ஆண்டாள் இங்கு கூறுகிறாள்.

அறை பறை மாயன் மணி வண்ணன் ‘நென்னேலே வாய் நேர்ந்தான்’. அன்றே வாய் விட்டு விட்டான். அதை  நம்பி ‘தூயோமாய் வந்தோம்’ நாங்கள். எல்லா தர்மங்களையும் விட்டு விட்டுத் தூயவர்களாய் வந்தோம் என்று ஆண்டாள் சொல்லுவதிலிருந்து, நாராயணன் தரும் பறை – அது அவன் உரை- அது நமக்கு மோட்சம் தருவேன் என்று அவன் தரும் உறுதி – என்று புலனாகிறது.

இந்த மாயன் உரையை  (பகவத் கீதையில் அவன் கொடுத்த உறுதி), திருப்பாவையில் பறை என்று வரும் மற்ற இடங்களில் சேர்த்துப் பார்த்தால், இதுவேஉள்ளுறைப் பொருளாக விளங்குவது தெரியும்.
இப்பொழுது, ஆண்டாள் கூறும் பறை – பட்டியலைப் பார்ப்போம்.

1. பறை தருவான் – (பாசுரம் – 1)
“நாராயணனே நமக்கே பறை தருவான்”.
அன்று அர்ஜுனனுக்குப்  பறை என்னும் உரை தந்தான். அர்ஜுனனைப் போல நாமும் அவனை  அடைவோம். நமக்கும் அந்த உரை தந்து, உறுதி அளிப்பான்.

2. பாடிப்பறை கொண்டு  (பாசுரம் -8)
“பாவை, எழுந்திராய் பாடிப் பறை கொண்டு…….
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்று ஆராய்ந்து அருளேல்..”

அவன் கொடுத்த உரை என்னும் பறையை நம்பி, அவனிடம் சென்று நாம் வணங்கி -‘ இது நீ கொடுத்த உறுதி தானே, எங்களையும், ஏற்றுக் கொள் என்று சொன்னால், ‘ஆஹா’ என்று ஆஹா-காரம் செய்து ஆராய்ந்து சொல்கிறேன் என்பான். ‘

அவன் சக்கரவர்த்தித் திருமகனான இராமனைப்போல் அல்ல. ஒருவனிடம்  தவறு  இருந்தாலும், அவன்  தன்னைப் பணிந்தால் இராமன் தன்னடி சேர்த்துக் கொண்டு விடுவான். இராவணனே, ‘அபயம்’ என்று அவன் அடி பணிந்தால் அவனைத் தண்டிக்காமல் விட்டு விடுவான் என்று சீதை சொல்கிறாள். அவளுக்குத் தீங்கு செய்த காகாசுரனை அப்படித் தான் அவன் மன்னித்தான். அனால், இந்த தேர்த் தட்டு பாகன் இருக்கிறானே,  அவன் அப்படி அல்லன்.

பாவத்துடன் வரினும் சரி, பரவாயில்லை என்பவன் இராமன். ஆனால் புண்ணியத்தையும்  விட்டு விட்டு வா என்பவன் கிருஷ்ணன். அதனால் “பறை (உறுதி) வேண்டும் என்று சொல்லி விட்டீர்கள்  இல்லையா. பார்க்கலாம். ஆராய்ந்து சொல்கிறேன்.” என்று கூறுபவன் கிருஷ்ணன். அதனால் சீக்கிரம் போவோம், அவனைப் பார்த்து கேட்டு – இன்னும் காத்திருக்க வேண்டும் என்னும் தொனியில், ஆண்டாள்  இந்த  இடத்தில் பறை என்னும்சொல்லைக் கையாண்டு உள்ளாள்.

3. போற்றப் பறை தரும்  – (பாசுரம்- 10)
“போற்றப் பறை தரும் புண்ணியன்”

அதனால், அவனை நன்கு போற்றிப் பாடுவோம், நமக்கும் உறுதி கொடுத்து விடுவான் – அர்ஜுனன இவ்வாறுதான், அவனைத்  தொடர்ந்து, அவனை விடாது இருந்தான். அவனுக்கு உறுதிகொடுக்கவில்லையா?

4. அறை பறை –  (பாசுரம் -16)
‘அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னேலே வாய் நேர்ந்தான்’.

இதன் கருத்தை முன்னமேயே பார்த்தோம். ரகசியமாக இருந்த மோக்ஷம் என்னும் பெரும் உபாயத்தை, அறைந்து பறை அறிவித்தாற்போல்  அன்றே அர்ஜுனனிடம் சொல்லி விட்டானே. அதை நம்பித்தானே நாங்கள் இன்று வந்திருக்கிறோம்.

5. பறை தருகியாகில் – (பாசுரம் -25)
“நெடு மாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருகியாகில்”

அன்றைக்கு உன்னைக் கொண்டாடிய அர்ஜுனனுக்குத் தந்தாயே உறுதி மொழி, அதைப் போல நாங்களும் உன்னைக்  கொண்டாடிக் கேட்கின்றோம், எங்களுக்கும்  அந்த உறுதி மொழி கொடுத்து விடு.

6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)
“சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே”

இதுவும் முன்னமே ஆராய்ந்தது. சாலப் பெரும் பறை  கொட்டி, பல்லாண்டு இசைத்து அவனை வணங்கிய முறைமையை இவ்வரிகள் புலப்படுத்துகின்றன.

7. உன்றன்னை பாடிப்  பறைகொண்டு – (பாசுரம் -27)
இங்கே அந்தப் பறை என்னும் உரையான உறுதி மொழி கிடைத்தபின் வரக்கூடிய பலன் கூறப்படுகிறது.
“கோவிந்தா உன்றன்னை பாடிப்  பறைகொண்டு யாம் பெரும் சன்மானம்” எதுவென்றால், கூடி இருந்து குளிர்தல் என்று முடிக்கிறாள்.

அன்று போர்க்களத்தில், அர்ஜுனனுக்கு உரை தந்த பின், அவனை விட்டு நீ பிரிந்தாயோ? இல்லையே. அவன் கூடவே ரத சாரதியாகவும் இருந்து, அவன் மனத்தை ஓட்டும் யோகேஸ்வரனாகவும் கூடி இருந்தாயே. அந்தக் கூடி இருக்கும் தன்மைதான் நான் பரிசாகக்  கேட்பது.

8. நீ தாராய் பறை – (பாசுரம் -28)
“அன்பினால் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே, இறைவா நீ தாராய் பறை “.

உன்னைப் பலவாறாக சிறுமைப் படுத்தியும் பேசியுள்ளோம். அதை எல்லாம் நீ பெரிது படுத்தாதே. அன்று அர்ஜுனன உன்னைப் பேசாததா? இந்த அண்டத்தையே தன்னுள் கொண்டு, தன்னுள்  விரிந்து இருக்கும் உன்னை, நண்பனை ஏசிப்பேசி பரிகாசம் செய்வது போல்,  உன்னிடம் நடந்து கொண்ட அர்ஜுனனிடம் நீ கோபம் கொண்டாயா? இல்லையே. அதைப்போல, அன்பினால் நாங்களும் உன்னை இரு மாறாகப் பேசியுள்ளோம். அதற்காகச் சீற்றம் கொண்டு பறை தாராமல் இருந்து விடாதே. நீ பறை என்னும் உறுதி மொழியை  எங்களுக்குத் தர வேண்டும்.

9. இற்றைப்  பறை கொள்வான் –  (பாசுரம் -29)
“இற்றை பறை கொள்வான் அன்று காண்”
ஏதோ இன்றைக்கு மட்டும் நீ பறை கொடுத்தால் போதும் என்றில்லை.
அர்ஜுனனுடன் என்றென்றைக்கும் கூடவே இருந்து அவனை கவனித்துக் கொண்டாய் அல்லவா? அதுபோல இன்றைக்கு மட்டும் எங்களுக்கு நீ தலை ஆட்டுவது போதாது. என்றென்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் எங்களை நீ ஆட் கொண்டு இருக்க வேண்டும்.

10.அங்கப் பறை கொண்ட ஆற்றை  – (பாசுரம் -10)
இவ்வரிகள் கடைசிப் பாசுரத்தில், பலன் கூறுவது போல் அமைந்துள்ளன.
அங்கு, அன்று அப்பறை கொண்ட விதத்தை, பட்டர் பிரான் மகளான ஆண்டாள் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டு அவன் அடி பணிபவர்கள், என்றும் அவனது திருவருளைப் பெற்று இனிதுடன் இருப்பர் என்று திருப்பாவைமுடிகிறது.

மாயன் தந்த இந்த உரையை நம்மாழ்வார் ‘வார்த்தை’ என்கிறார். மாயன் தந்த வார்த்தை அறிந்தால், “பிறப்போடு, நோயோடு, மூப்பொடு இறப்பில்லை’ என்கிறார் (திருவாய் மொழி 7-5-10)
பிறவா நிலையைத் தருவது பறை ஒலியான அவன் வார்த்தை.
அதனால் அவன் சரணன்றி வேறொன்றும் நமக்கில்லை என்று இருக்க வேண்டும்.

நம்மாழ்வார் “வார்த்தை” என்று சொன்னதை “மாயன் உரை” என்று திருமழிசை ஆழ்வார்  கூறுகிறார்.
“ஆற்றம் கரை கிடக்கும், கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்தெனக்கு”
(நான் முகன் திருவந்தாதி- 10)

அவன் ஆற்றங்கரை தோறும் படுத்துகொண்டிருக்கிறான். ஒருவர் படுத்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? ஓய்வாக இருக்கிறார். இப்பொழுதைக்கு இந்த இடத்தை விட்டுச் செல்ல மாட்டார் என்பது.
நாமும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி முடித்து, அவன் பறை தருவான் என்பதை  உணரும் போது, ‘ ஐயோ அவன் எங்கிருக்கிறானோ, அவனை எங்கே தேடுவது’  என்று கவலைப் பட வேண்டாம். ஆற்றங்கரை ஏதாவது தென்படுகிறதா என்று பாருங்கள். கண்டிப்பாக அங்கே பள்ளி கொண்டிருப்பான். பறை கேட்டு சிறுமியரான நாம் வரும் போது, நாம் ஏமார்ந்து விடக் கூடாது அல்லவா? தூங்கிக் கொண்டிருப்பவனை ஆண்டாள் எழுப்பியது போல,  நாமும் அவனை எழுப்பிக் கேட்பதில், பாவைச் சிறுமியர்  போல நமக்கும் ஒரு கிளுகிளுப்பு. ‘என்னையா தேடி வந்தீர்கள்’ , என்று ஒன்றும் தெரியாதது போல் எழுந்திருப்பதில் அவனுக்கும் ஒரு ஆனந்தம்.

அதனால்தான் ‘கடல் கிடக்கும் மாயன்’ – பாற்கடலில் கிடக்கும் மாயவன், நமக்கு எளிதாக இருக்கும் வண்ணம்  ஆற்றங்கரை  தோறும் தூங்குவது போல் பாசாங்கு செய்து படுத்துக் கொண்டிருக்கிறான்.

அவன் கொடுக்கும் உரையால் நமக்கு என்ன பயன் என்றால்,
“கூற்றமும் சாரா, கொடு வினையும் சாரா, தீ மாற்றமும் சாரா” என்கிறார் ஆழ்வார்.
யம பயமும் வராது, இறப்பையே வெல்வோம்.
கொடிய பாபங்களும் நம்மைத் தீண்டாது, வினை அறுப்போம்.
கெட்ட பெயரும் நம்மைச் சேராது.

இப்படி எல்லாம் அந்தப்  பரம் பொருள் தரும் பயனை வேதமும், ஆழ்வார்களும் பலவிதமாகச் சொன்னாலும், சிற்றறிவினரான நம்மை ஈர்க்கும் வண்ணம் ஆண்டாள், பறை என்னும் ஒரு சொல்லில் புதையலையே கொடுத்துள்ளாள். பறை கொட்டி, பறை கேட்டு அவனைப் பணிந்தாலே போதும். அவள் சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் வாசித்தாலே போதும், அவனாகவே நம் மனத்தில்  உள்ள மற்ற எண்ணங்களைப் போக்கி ‘மற்றை நம் காமங்கள் மாற்றி’ விடுவான்.


11 comments:

  1. Fascinating. A drum is certainly a metaphor for a proclamation. e.g., பறையறை-தல் paṟai-y-aṟai- , v. < பறை³ +. tr. & intr. To publish by beat of drum; செய்தி தெரிவிக்குமாறு பறை அடித்தல். பறையறைந் தல்லது செல்லற்க வென்னா (கலித். 56).பாடு¹-தல் pāṭu- , 5 v. tr. [K. hāḍu.] To declare, proclaim; கூறுதல். அறம் பாடிற்றே (புறநா. 34). படையுள்படுவோன் paṭai-y-uḷpaṭuvōṉ , n. < id. +. Royal herald who proclaims the king's commands to his army with trumpets; சின்னமூதி. படையுள்படுவோன் பணிமொழி கூற (சிலப். 8, 13). சின்னம் ciṉṉam is a kind of trumpet; காளம். சின்னங்கள் கேட்பச் சிவனென் றே வாய்திறப்பாய் (திருவாச. 7, 7). படு could be the old form of paṟa 'to proclaim': (Gram.) To pronounce in a low pitch; எழுத்துக்களின் ஸ்வரத்தைத் தாழ்த் துக் கூறுதல். படுத்துக் கூற (தொல். எழுத். 76, உரை). 16. To beat, as a drum; பறையறைதல். துடி படுத்து (பு. வெ. 1, 3).

    paṭaha m. ʻ kettle -- drum ʼ MBh. [← Mu. (PMWS 88)? or Drav. (T. Burrow BSOAS xii 382)? -- Thieme KZ 67, 183 metath. fr. *pahaṭa -- < prahr̥ta -- ʻ struck ʼ: very doubtful]
    Pa. paṭaha -- m. ʻ drum ʼ, Pk. paḍaha -- m., ˚hiyā -- f., B. paṛā; OG. paḍaha m. ʻ proclamation by beat of drum ʼ, paḍahaü m. ʻ drum ʼ, G. paṛɔ m. ʻ drum ʼ, paṛī f. ʻ proclamation ʼ; Si. paḷahaya ʻ drum ʼ.(CDIAL 7690) Ta. paṟai drum, a measure of capacity, Paṟaiya caste; paṟaiyaṉ member of the Paṟaiya caste; fem. paṟaicci. Ma. paṟa drum, a rice measure, disk, circle; paṟayan a Pariah; fem. paṟayi, (Shanmugam) paṟacci. Ko. par drum; parn Pariah; fem. parc. To. paṟ drum. Ka. paṟe id. Koḍ. pare drum (large, doubleheaded barrel drum beaten by Me·dë). Te. paṟṟa a certain measure of capacity. Go. (A.) para, (G.) parra, (Mu.) par(r)ay drum; (SR.) pharā small drum(DEDR 4032)Ta. paṟai (-v-, -nt-; -pp-, -tt-) to speak, say; n. word, saying, statement; paṟaiccal talk, speech; paṟaivu speaking, talking, chattering, proclaiming. Ma. paṟayuka to say, speak, tell; paṟaccal speech. To. parg aṟy- to know how to talk (or with 5204). Ka. paṟe abuse, censure; parcu, paccu to whisper; parisu to speak, chat; haraṭu to talk idly, prate; haraṭe idle talk, prate, jabber; (Hav.) parañcu to mutter. Koḍ. pare- (parev-, parand-) to utter. Tu. pareñcuni to prate, prattle, find fault with; parañcena, parañcelů prattling, grumbling, murmuring; parañcele prattler, babbler, grumbler; paraṇṭele prattler, grumbler; paraṇḍa murmuring, grumbling; haraṭuni to prate, blabber; (h)araṭè blabbing, prate, jabber. Ga. (S.) park- to say, speak; (S.3) park- (parik-) to speak, talk. Kui bargi order, command. (DEDR 4031)

    Gujarati etyma are consistent with the two meanings in Tamil: kettle-drum, proclamation.

    ReplyDelete
  2. Dear Madam,
    Excellent article and very useful and timely information.My humble request, why not you write a book on andal pasuram -with you own detailed researched explanation, certainly it will be a gift for those who are memorizing andal pasuram during this month. Already some details are available in your earlier book, please consider. T.Annamalai

    ReplyDelete
  3. Dear Sri Annamalai,

    Thanks for your comment. I am not keen on writing the explanation for Andal Pasuram, as there are many who are doing that via videos and TV shows. I will only be repeating what they say, as I wont like to deviate from traditional commentators. Where a research is needed I will chip in as I did in the case of Parai, Vairamuthu's version or Daniel Selvaraj's version. http://jayasreesaranathan.blogspot.com/2012/06/blasphemous-story-on-andal-and.html

    ReplyDelete
  4. Very nice article - thanks - apt for Vaikunta Ekadasi day

    ReplyDelete
  5. அம்மா, உங்கள் தமிழ்ப் புலமையும், ஆராய்ச்சித் திறனும், ஈடுபாடும் ஒப்பில்லாதவை! வியக்க வைக்கிறீர்கள்!எல்லாவற்றையும் விட, ஸனாதன தர்மத்தை இழித்து அழிக்கும் அசுரர்களை எதிர்க்கும் ஒரு dharmc warrior ஆகவே காட்சி தருகிறீர்கள்!

    'அறை பறை' என்றால் ஓங்கி அடிக்கப்படும் இசைக்கருவி என்றே நினைத்திருந்தேன்!

    ஆனாலும், 'கண்ணனையே கணவனாக அடைய விரும்பி ஆண்டாள் பாவைக் களம் புக விரும்புகிறாள்' என்று சொல்லுவது ஏன்?

    மழை பெய்து, ஊர்வளம் பெற்று, வாழ்வு செழிப்பதே நோன்பின் பயன் என்பது மூன்றாம் பாசுரத்தில் (ஓங்கி உலகளந்த உத்தமன்) தெளிவாக இருக்கிறதே! அதை ஏன் மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும்?

    ReplyDelete
  6. @ Srivathsan,

    //அம்மா, உங்கள் தமிழ்ப் புலமையும், ஆராய்ச்சித் திறனும், ஈடுபாடும் ஒப்பில்லாதவை! வியக்க வைக்கிறீர்கள்!எல்லாவற்றையும் விட, ஸனாதன தர்மத்தை இழித்து அழிக்கும் அசுரர்களை எதிர்க்கும் ஒரு dharmc warrior ஆகவே காட்சி தருகிறீர்கள்!//

    நன்றி. எழுத்து கைங்கரியத்தில் நான் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வது, திருச்சந்த விருத்தம் வரிகள்தான்:
    "சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்"
    'நீ' என்பது இங்கு தெய்வத்தைக் குறிக்கிறது
    தெய்வ சங்கல்பம் இல்லாமல் நான் /நாம் ஒன்றும் செய்து விட முடியாது.

    //'அறை பறை' என்றால் ஓங்கி அடிக்கப்படும் இசைக்கருவி என்றே நினைத்திருந்தேன்!//

    வள்ளுவன் வாக்கு தெளிவுபடுத்தி இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    //ஆனாலும், 'கண்ணனையே கணவனாக அடைய விரும்பி ஆண்டாள் பாவைக் களம் புக விரும்புகிறாள்' என்று சொல்லுவது ஏன்?//

    திருப்பாவையின் எந்த இடத்திலும் ஆண்டாள் அப்படிச் சொல்லவில்லை. ஒன்பது வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மட்டுமே பாவை நோன்பு செய்தார்கள். அந்த வயதில் கணவன், கல்யாணம் என்று என்ன புரிந்து கொள்ள முடியும்? பாவைப் பருவம் கடந்ததற்கு அப்பால்தான் நாச்சியார் திருமொழி கொடுத்திருக்கிறாள். காமன் நோன்புடன் முடியும் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட காலத்தில்தான் அவள் கண்ணனைக் கணவனாக அடைய வேண்டும் என்று விழைகிறாள். அந்த நாளில் அது திருமண வயது.

    எனவே திருப்பாவையைப் பொறுத்தமட்டில் அது குழந்தைகளுக்கு, பெற்றோர் ஊட்டி வளர்த்த ஆன்மீக நெறி. எனினும், பாவை நோன்பில், மணமான பெண்களும், மணமாகாத பெண்களும் கலந்து கொண்டு, கணவனுக்காக நோன்பு இருந்திருக்கின்றனர் என்பதை, பரிபாடல் மூலம் அறிகிறோம். இங்கு எழுதியுள்ளேன். http://jayasreesaranathan.blogspot.com/2008/12/paavai-nonbu-how-it-was-done.html

    //மழை பெய்து, ஊர்வளம் பெற்று, வாழ்வு செழிப்பதே நோன்பின் பயன் என்பது மூன்றாம் பாசுரத்தில் (ஓங்கி உலகளந்த உத்தமன்) தெளிவாக இருக்கிறதே! அதை ஏன் மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும்?//

    மாற்றிப் பொருள் கொள்ள வேண்டாம். உலக நிமித்தம் மார்கழியில் காற்று மண்டலத்தில் சலனங்கள் உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே சிறுமியரை, பாவை நோன்பு செய்ய வைத்திருக்கின்றனர். இங்கே படிக்கவும் http://jayasreesaranathan.blogspot.com/2010/12/blog-post.html

    மொத்தத்தில் பாவை நோன்பு என்பது, ஆன்மிகம், உலகியல் (மழை வேண்டி), உளவியல் (கணவன் - மனைவி நல்லுறவு) என்று மூன்று வகையிலும் பயன் தரக்கூடியது.


    ReplyDelete
  7. அவன் நியமனத்தால் 'சொல்லினால் படைக்க' வந்து தோன்றியிருக்கிறீர்கள்!

    தங்கள் விளக்கத்துக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  8. Only today I could get a very good meaning and usage of the word Parai in thiruppavai by Mother Andal. I was even thinking about the usage of this word in Malayalam to connote the meaning as 'Tell'which roughly tally your explanation. By the way can you throw some light as to how this word also related to caste name Paraiyar and whether this name was in existence from the days of mother Andal ? Thank you.Sundaram sadagopan

    ReplyDelete
  9. @ Sundaram Sadagopan,

    Already written about Paraiyar in my Tamil blog in the comment section.
    Reproducing here:

    From
    http://thamizhan-thiravidana.blogspot.com/2011/12/blog-post.html?showComment=1329916602853#c7916881307421320899

    புறம் 335 இல், 'துடியன், பாணன், பறையன், கடம்பன்' என்று 4 பழங்குடிகள் இருந்தனர் என்று மாங்குடி கிழார் கூருகிறாரே, அப்படி பழமை வாய்ந்த குடி.

    கிருஸ்துவ மத மாற்றச் சூழ்ச்சிக்கு முதல் பலி கடா ஆனது தமிழ்நாட்டுப் பறையர்கள்தாம். தமிழ் நாட்டில் உள்ள பறையர்கள் வேறு. வட இந்தியாவில், தீண்டத்தகாதவர்கள் என்று ‘பரையா’ என்று சொல்லப்படுபவர்கள் வேறு. அவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கியவர்கள் முகலாய மன்னர்களே. அவர்கள் வரும் வரை, இந்தியாவில் தீண்டாமை இல்லை. அவர்கள் வந்த பிறகுதான் அவரவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் கதி கலங்கிப் போனார்கள். அதுவரை நான்கு வர்ணத்தவர்களும் பூணூல் போட்டிருந்தார்கள். பூணூல் போட்டவன் தலையை வெட்டு என்றான் முகலாய மன்னன். உயிர் தப்ப விரும்பியவர்கள், பூணூலைத் தூக்கிப் போட்டார்கள். மீதம் இருந்தவர்களில் கத்தி முனையில் மதம் மாறியவர்கள் எத்தனையோ பேர். அடிமைகளாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கப்பட்டவர்கள் பல பேர். அப்பொழுது ஆரம்பித்த்து தான் ‘பரையா’ என்னும் சொல்.

    ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில், இந்த நிலை இல்லை. ஒரு வெட்டியான் கூட வரி செலுத்தும் நிலையில் இருந்தான் என்றால், அவனுக்கு வருமானம் இருந்தது என்பதைக் காட்டுகிறது. இந்த விவரத்தை, மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள கொறுக்கை என்னும் ஊரில் உள்ள வீரட்டான்ஸ்வரர் கோவில் மகா மண்டபத் தெற்குப் பகுதியில் உள்ள கல்வெட்டில் காணலாம். இது எழுதப்பட்ட காலம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டு. சமீப காலம் தான். அதுவரை வெட்டியான் முதற் கொண்டு பல தொழில் சாதியரும், வருமானத்துடனும், மதிப்புடனும்தான் வாழ்ந்திருக்கின்றனர். .

    பறையர்கள், பெருமையுடன் தங்களைப் பறையன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பறை அடிக்கும் தொழிலிலிருந்து பயிர்த் தொழிலுக்கு மாறி இருக்கின்றனர். அது மட்டுமல்ல நல்ல வருமானமும், அதிலிருந்து கோவிலுக்குத் தானம் செய்யும் அளவுக்கு வராஹம் என்னும் தங்கக் காசு கொடுக்கும் அளவுக்கு அந்தஸ்தும் பெற்றிருந்தனர். உதாரணத்துக்கு 4 கல்வெட்டுச் சான்றுகளைக் கூறுகிறேன்.

    (1) கோயம்புத்தூர் சங்கமேஸ்வரர் கோவில் கல்வெட்டு- 3 ஆம் விக்கரம சோழன் காலம் - கி.பி. 1292 - “வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டன்” என்பவன் சந்தியா தீபம் ஏற்ற ஓரச்சு காசு கொடுத்திருக்கிறான்.

    வெள்ளாழன் என்பது வேளாளன் என்பதாக இருக்க வேண்டும். இதில் புல்லிகள் என்று சொல்லியிருப்பதால், இவனது முன்னோர் ஆட்டிடையர்களாக இருந்திருக்க வேண்டும். கலித் தொகையில் புல்லினம், நல்லினம் என்று, முறையே ஆடு மேய்ப்பவர்களையும், மாடு மேய்ப்பவர்களையும் பற்றிய பெயர்கள் வருகின்றன. பின்னாளில் இவர்கள் பயிர்த் தொழிலில் ஈடு பட்டிருக்கிறார்கள்.

    (2) கோயம்புத்தூர், இடிகரையில் உள்ள வில்லீஸ்வரர் கோவில் கல்வெட்டு - 14 ஆம் நூற்றாண்டு - வீர பாண்டியன் காலம் - “வட பரிசார நாடுக் கொற்ற மங்கலத்திலிருக்கும் வெள்ளாழன் பையரில் பறையன் பறையனேன்” என்பவன் சந்தியா விளக்கு ஏற்ற 10 வராஹ பணம் தந்திருக்கிறான்.

    (3) அதே கோவிலில் “வட பரிசார நாட்டு இடிகரையில் இருக்கும் வெள்ளாழன் பைய்யரில் சடையன் நேரியான் பறையன்” என்பவன் சந்தியா தீபம் ஏற்ற 10 வராஹம் கொடுத்திருக்கிறான்.

    (4)அவினாசி வட்டம், சேவூர் கபாலீஸ்வரர் கோவில் கல்வெட்டு- வீர ராஜேந்திரன் காலம் - கி.பி 1230 - “இடங்கை நாயகன் நித்தப் பறையன் உள்ளிட்டார்” பிடாரி கோவிலுக்கு சந்தியா தீபம் ஏற்ற கொடை கொடுத்துள்ளனர்.

    (continued)

    ReplyDelete
  10. From

    http://thamizhan-thiravidana.blogspot.com/2012/12/121.html?showComment=1364014743828#c5630512286343541571

    ஆதி திராவிடர் என்ற ஜாதி இருக்கிறது. ஆனால் இந்தப் பெயர் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் சூட்டப்பட்ட பெயர். பரையர் (paraiah) என்று சொல்லப்பட்ட மக்களுக்கு - இவர்கள் சென்னை பகுதிகளில் வாழ்ந்தவர்கள்- திராவிடவாதிகளே சூட்டிய பெயர். இந்தப் பரையர்கள் பல கோவில் கல்வெட்டுகளில் தானம் கொடுத்த பறையர் குடி மக்களல்லர். கோவில் கல்வெட்டுகளில் காணப்படும் பறையர்கள், தொல்குடிப் பறையர்கள்.

    சென்னைப் பகுதி பரையர்கள் முஸ்லீம் காலத்தில் பல வட இந்தியப் பகுதிகளில் முஸ்லீம் அடக்கு முறையிலிருந்து தப்பி, அன்றைக்குப் பொட்டல் வெளியாக இருந்த சென்னைப் பகுதிக்கு வந்து குடியேறியவர்கள். ஆங்கிலேயர்கள் சென்னையில் கால் பதித்தபோது, கிட்டத்தட்ட 3 லட்சம் பரையர்கள் (இவ்வாறு வந்தவர்கள்) சென்னையில் இருந்தனர். அவர்களால் உண்டானதுதான் ‘மெட்ராஸ் பாஷை’. அதே காலக்கட்டத்தில் இந்தப் பரையர்கள் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் அறவே இல்லை என்றும் ஆங்கிலேயர் ரெகார்டுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பரையர்கள் வேறு, தொல்குடிப் பறையர்கள் வேறு.

    தொல்குடிப் பறையர்கள், விவசாயம், கால் நடை வளர்ப்பில் ஈடுபட்டு வளாமாக வாழ்ந்திருக்கின்றனர். இந்தப் பரையர்கள் பசுவதை செய்ததால், ஊரிலிருந்து ஒதுக்கப்பட்டு, பின்னர் முஸ்லீம் ஆதரவும் குறைந்த பின் இடம் பெயர்ந்து சென்னைக்கு வந்தவர்கள். இவர்கள் ஆதி திராவிடர்களென்று பெயர் சூட்டப்பட்டனர்.

    From Tamilhindu article:_

    ‘திராவிடர்’ என்ற சொல்லை முதன்முதலில் அமைப்பு ரீதியாக பயன்படுத்தியவர் டாக்டர். சி. நடேசனார் ஆவார். இவர்தான் ‘திராடவிடர் சங்கம்’ என்கிற அமைப்பை 1912இல் தொடங்கினார். இதிலிருந்து தான் திராவிடர் இயக்கத்தின் வரலாறு தொடங்குகிறது.
    திராவிடர் இயக்கச் சாதனைகள் - ப-3

    திராவிடர் சங்கம் என்ற அமைப்பை நடத்தி வந்த டாக்டர் சி.நடேசனார் நீதிக்கட்சி அரசுக்கு அனுப்பிய ஒரு வேண்டுகோளில் ‘பறையர்’ , ‘பஞ்சமர்’ என்ற சாதிப் பெயர்களை நீக்கிவிட்டு, அவர்களது வரலாற்றுக்குரிய சிறப்புப் பெயரான ‘ஆதிதிராவிடர்’ என்று அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். இக்கோரிக்கை ஏற்கப்பட்டு 1922-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 25ம்நாள் பெயர் மாற்றத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
    திராவிடர் இயக்கச் சாதனைகள் - ப-5

    *****

    எனவே 1922 க்குப் பிறகுதான் ஆதிதிராவிடர் என்ற ஜாதியே உருவானது.


    மாறாக, தொல்குடிப் பறையர்கள் வளமாகவும், மதிப்புடனும் வாழ்ந்த பாங்கைக் காட்டும் கல்வெட்டு ஆதாரங்கள் சிலவற்றை முந்தைய கருத்துரையில் எழுதியுள்ளேன்.

    ஆண்டாள் காலத்தில் இருந்தவர் தொல் குடிப் பறையர்.

    ReplyDelete