Tuesday, April 23, 2024

இராமன் வாழ்ந்த த்ரேதா யுகம் லக்ஷகணக்கான ஆண்டுகளுக்கு முந்தையதா?

(Published in Geethcharyan Magazine)

இராமன் த்ரேதா யுகத்தில் வாழ்ந்தவன். த்ரேதா யுகம் என்பது லக்ஷகணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே இராமன் லக்ஷகணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன் என்னும் கருத்து இருந்து வருகிறது. இந்தக் கருத்து உண்மையென்றால், இராமன் வாழ்ந்த அடையாளங்களை நாம் காண முடியாது. அவன் பிறந்த இடம் இதுதான் என்றும் குறிப்பாக ஒரு இடத்தைச் சொல்லவும் முடியாது. பல லக்ஷகணக்கான வருடங்களில் இட அமைப்புகள் மாறிப் போயிருக்கும். அவ்வளவு வருடங்களில் மனிதகுலமே மாறியிருக்கும். அப்பொழுது மனித குலமே இருந்ததா என்று கேட்கும் வண்ணம், த்ரேதா யுகம் மிகப் பழமையானது. 

த்ரேதா யுகம் என்பது கலி யுகத்தைப் போல மூன்று மடங்கு கால அளவு கொண்டது. கலி யுகத்தின் அளவு 4,32,000 ஆண்டுகள். இதைப் போல இரண்டு மடங்கு த்வாபர யுகம். அதாவது 8, 64,000 ஆண்டுகள். அதற்கு முன் இருந்தது த்ரேதா யுகம். தற்சமயம், கலியுகத்தில் 5,124 ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. அவற்றுடன் த்வாபர யுகத்தைக் கூட்டினால், 8,69,124 ஆண்டுகள். த்ரேதா யுகம் என்பது இன்றைக்கு 8, 69, 124 ஆண்டுகளுக்கு முன் முடிந்தது. அதற்கு முன் இராமன் வாழ்ந்தான் என்றால், கண்டிப்பாக இராமன் காலச் சுவடுகளைக் கண்டு பிடிக்க முடியாது. அவ்வளவு காலத்துக்கு முன்பாக எழுதப்பட்டது இராமாயணம் என்றால், அப்பொழுது என்ன பேசினார்கள், சம்ஸ்க்ருதத்தில்தான் பேசினார்களா, அது அப்படியே காப்பாற்றப்பட்டு வந்த்ததா என்று விடை கிடைக்காத பல கேள்விகள் எழும். அப்பொழுது நடந்ததாகச் சொல்லப்படும் கதையும், இதிஹாசமாக இராது. செவி வழிக் கதையாகத்தான் இருக்கும் 

அப்படிப்பட்ட காலக் கட்டத்தில் இருந்த ஜன்மஸ்தானம் என்று எந்த ஒரு இடத்தையும், சொந்தம் கொண்டாட முடியாது. அப்பொழுது கட்டின சேதுப் பாலம் என்று எதையும் காட்ட முடியாது. இராமாயணம் என்பதே ஒரு கட்டுக் கதை என்றுதான் கருதப்படும். 

ஆனால், த்ரேதா யுகம் என்று சொல்லியிருக்கிறார்களே. ரிஷிகள் சொன்னது தவறாக இருக்க முடியுமா என்னும் கேள்வியும் வருகிறது. அங்குதான், ரிஷிகள் என்ன சொன்னார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இராமாயண காலத்தைச் சூத முனிவர் நைமிசாரண்ய முனிவர்களிடம் சொல்லும் விவரம் மஹாபாரதத்தில் வருகிறது. வர் இராமாயண காலத்தைப் பற்றி நேரிடையாகச் சொல்ல மாட்டார், ஆனால் இராமரது சம காலத்தவரான பரசுராமர் க்ஷத்திரியர்களை அழித்ததைப் பற்றிச் சொல்லியுள்ளார். குருக்ஷேத்திரத்தில் உள்ள சமந்தபஞ்சகம் என்னும் இடத்தில் பரசுராமர் க்ஷத்திரியர்களை அழித்தார் ன்று சொல்லும் போது, த்ரேதா- த்வாபர யுக சந்தியில் அவர்களை அங்கு அழித்தார் என்கிறார் சூத முனிவர். (ம.பா: 1-2-3). 

அந்தப் பேச்சிலேயே, சமந்தபஞ்சகம் என்னும் அதே இடத்தில் த்வாபர- கலி யுக சந்தியில் மஹாபாரத யுத்தம் நடந்தது ன்கிறார் (ம.பா: 1-2-9). குருக்ஷேத்திரத்தில் மஹாபாரத யுத்தம் நடந்தது. அங்கேயே, பரசுராமர் க்ஷத்திரியர்களை அழித்தார் என்றால், கண்டிப்பாக, பல லக்ஷம் வருடங்களுக்கு முன் அது நிகழ்ந்திருக்க முடியாது. மந்த பஞ்சகம் என்பது க்ஷத்திரியர்களது இரத்தம் நிரம்பிய ஐந்து குளங்கள். அவை மஹாபாரத காலத்திலும் இருந்தன என்றால், பரசுராமரது காலத்துக்கும், மஹாபாரத காலத்துக்கும் இடையே அதிக கால வித்தியாசம் கிடையாது என்று அர்த்தம். ஆனால், பரசுராமர் காலத்தை த்ரேதா-த்வாபர சந்தி என்றும், மஹாபாரத காலத்தை த்வாபர- கலி யுக சந்தி என்றும் முனிவர் சொல்லியுள்ளாரே அது எப்படி என்ற கேள்வியும் வருகிறது 

இராமாயணத்திலேயே கலி யுகம். 

யுகம் என்பதை எந்த அர்த்தத்தில் சொல்லியுள்ளார்கள் என்பதை நாம் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. யுகம் என்பது யுக தர்மத்தைப் பொறுத்து, பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக, இராமாயணத்திலேயே, கலி யுகம் நடந்து கொண்டிருப்பதாக ஓரிடத்தில் சொல்லப்படுகிறது. இராமன் கடலைக் கடந்து இலங்காபுரியை நெருங்கிக் கொண்டிருக்கிறான் என்ற செய்தி இராவணனை எட்டுகிறது. அப்பொழுது அவனுடைய தாய் வழிப் பெரிய பாட்டனான மால்யவான் இராவணனைக் கடுஞ்சொல்லால் திட்டுவான். அதுவும் எப்படி 

தர்மமானது அதர்மத்தை விழுங்கும்போது க்ருத யுகம் நடக்கும். அதர்மம், தர்மத்தை விழுங்கும்போது கலி யுகம் நடக்கும். இராவணனே, நீ இருக்குமிடத்தில் அதர்மம் இருக்கிறது. எனவே நீ இருக்குமிடத்தில் கலி யுகம் நடந்து கொண்டிருக்கிறதுஎன்பான் மால்யவான். (வா. இரா: 6-35-14) கலியோ, க்ருதமோ, தர்மத்தைப் பொறுத்தே இருப்பதாக கருதப்பட்டிருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது 

இராமன் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் த்ரேதாயுகத்தில் வாழ்ந்தவன் தான் நளன். அவன் வாழ்வில் கலி புகுத்து தொந்திரவு கொடுத்தது. துபோல த்வாபர யுகத்தில் வாழ்ந்த துரியோதனனிடம் துவாபரம் வாழ்ந்தது என்றும், சகுனியிடம், கலி வாழ்ந்தது என்றும் வியாசர் கூறுகிறார். யுகங்கள் மாறி மாறி இருக்கும் என்பதாக, க்ருஷ்ணனும், கர்ணனிடம் கூறுவார். தூது சென்ற போது, கர்ணனைப் பார்த்து அவன் மனதை மாற்ற க்ருஷ்ணன் முயலுவார். அப்பொழுது சொல்வார், யுத்தம் என்று வந்து விட்டால், அங்கே க்ருதம் இருக்காது, த்ரேதா இருக்காது, த்வாபரம் இருக்காது. கலிதான் இருக்கும் என்பார். அவர் வாழ்ந்த யுகம் த்வாபர யுகம் என்றால், அங்கு எப்படி க்ருதம், த்ரேதா போன்றவை வருகின்றன 

இராமன் வாழ்ந்தது த்ரேதா யுகமாக இருக்கையில், அவன் தாத்தா, எதற்காக அவன் இருக்குமிடத்தில் கலி யுகம் நடக்கிறது என்கிறார்? அது போல க்ருஷ்ணர் மறைந்து கலி யுகம் ஆரம்பித்தபிறகு, பரீக்ஷித்து மஹாராஜாவின் காலத்தில் கலி உள்ளே நுழைய முற்படுகிறான். அவனை பரீக்ஷித்து தடுத்து விடுகிறான். ஆனால் அது அவனது யுகமாக இருக்கவே அவனுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று கலி புருஷன் கேட்கவே, ஐந்து இடங்களில் கலி புருஷன் இருக்கும் வண்ணம் இடம் அளிக்கிறான் என்பதை ஸ்ரீமத் பாகவதத்தில் படிக்கிறோம். இது போன்ற விவரங்களை ஆராயும் போதுதான் தெரிய வருகிறது, யுகம் என்பது, தர்மத்தைப் பொறுத்தது. 

ரசன் தர்மவானாக இருந்தால் அங்கு க்ருத யுகம் நடக்கும். இராவணன் தர்மவானாக நடந்துகொள்ளவில்லை. அதனால் அங்கு கலி யுகம் நடந்தது என்று மால்யவான் சொல்வதை நாம் நோக்க வேண்டும். தே கருத்தை மஹாபாரதத்தில் குந்தியும் கூறுவாள். நான்கு கால்களில் நிற்கும் ஒரு மாட்டை தர்ம தேவதைக்கு உருவகமாகச் சொல்வார்கள். ரீக்ஷித்து கதையிலும், அப்படி ஒரு மாடுதர்ம தேவதையின் உருவகமாகக் கால்கள் அடிபட்டுக் கிடக்கும் 

நான்கு கால்களிலும் அந்த மாடு நின்றால் அது க்ருத யுகம் எனப்படும். முழுமையான நான்க மடங்கு தர்மம் இருக்கிறது என்று அர்த்தம். அதை, சத்ய யுகம் என்றும் சொல்வார்கள். 

ஒரு கால் அடிபட்டு, மூன்று கால்களில் நின்றால், த்ரேதா யுகம் என்று அர்த்தம், முக்கால் பங்கு தர்மம் உள்ளது என்று அர்த்தம். 

ரண்டு கால்கள் அடிபட்டு, இருகால்களில் நின்றால், த்வாபர யுகம் நடக்கிறது; தர்மம் பாதியளவுதான் உள்ளது என்று அர்த்தம். 

மூன்று கால்கள் அடிபட்டு, ஒற்றைக் காலில் இருந்தால், கலி யுகம் என்று அர்த்தம். நாலில் ஒரு பங்குதான் தர்மம் இருக்கிது என்று அர்த்தம் 

இப்படிப்பட்ட தர்ம யுகத்தைப் பற்றி வாயு புராணம், ப்ரஹ்மாண்ட புராணம் போன்றவற்றில் விரிவாகக் காணலாம். தர்மத்தின் அளவைப் பல விதங்களிலும் கண்டு பிடிக்கலாம். உதாரணமாக, சாத்வீக குணம் அதிகமாக இருந்தால் அது க்ருத யுகம். ராஜச குணம் அதிகமாக இருந்தால் அது த்ரேதா யுகம். ராஜசமும், தாமசமும் கலந்திருந்தால் அது த்வாபர யுகம். தாமசம் மட்டுமே இருந்தால் அது கலி யுகம். 

இப்படிப்பட்ட அளவீடுகளுடன், ராஜசம் அதிகமாக இருந்த த்ரேதா யுகத்தின் முடிவில் இராமன் பிறந்தான். மன்னர்கள் தீத ராஜசம் கொண்டவர்களாக இருக்கவே, பரசுராமர் அவர்களை அழித்தார். அந்த யுகத்தையடுத்து வந்த த்வாபர யுகத்தில் தாமசமும் கலந்திருந்தது. அதனால்தான் ராஜசம் கொண்ட மன்னர்கள் தாமச புத்தியுடன் பல தவறுகளைச் செய்தனர். அப்படிப்பட்ட யுகத்தின் முடிவில் மஹாபாரத யுத்தம் நடந்தது 

மஹாபாரதத்தில் ஆங்காங்கே இப்படிப்பட்ட யுக தர்மங்களைத்தான் சொல்லியிருப்பார்கள். தாரணமாக, பீமன், ஹனுமனைச் சந்திப்பான். அப்பொழுது, நான்கு யுகங்களுடைய தன்மையைத்தான் ஹனுமன் கூறுவார். ஒவ்வொரு யுக லக்ஷணத்தையும் சொல்லிக் கொண்டே வரும் ஹனுமன், தற்போதைய யுகம் என்று சொல்லும் போது, தாமசமான இந்த யுகம்என்று அப்பொழுது தாமசம் திகரித்து இருக்கிறது என்பார். அதன் மூலம் இனி கூடிய சீக்கிரம் கலி யுகம் வரப்போகிறது என்பார். இப்படித்தான் குணம், தர்மம் ஆகியவற்றின் அடிப்படையில் யுகத்தை அடையாளம் கண்டார்கள். 

இப்படிப்பட்ட யுகக் கணக்கு யுக சந்தி, யுக சந்த்யாம்சம் என்னும் இரு பகுதிகளைக் கொண்டது. ஒரு யுகத்தின் குணாதிசயம் குறைய ஆரம்பிக்கும் போது, யுக சந்தி ஏற்படும். அப்பொழுது அது வரை நடந்த யுக தர்மம் கால் பங்காக ஆகிவிடும். த்ரேதா யுக சந்தி என்றால், த்ரேதா யுக தர்மம் கால் பங்காக ஆகிவிடும். அவ்வாறே சிலகாலம் செல்லும். இராமனுடைய காலத்திலேயே வைதேஹியைக் குறை கூறும் மனிதர்கள் இருந்தனர். பிராயம் வராத குழந்தைகள் காரணம் இல்லாமல் இறந்தன. இவையெல்லாம் த்ரேதா யுக சந்தியின் அடையாளங்கள். அது மேலும் க்ஷீணம் அடைந்து பதினாறில் ஒரு பங்காக கும் பொழுது அதற்கு யுக சந்த்யாம்சம் என்று பெயர். 1/16 பங்காக த்ரேதா யுக தர்மம் ஆன போது, அது த்வாபர தர்மம் ஆக மாறும் 

அந்த த்வாபர தர்மம் எப்பொழுது க்ஷீணம் அடைந்து கால் பங்காகிறதோ, அப்பொழுது த்வாபர சந்தி ஏற்படுகிறது என்று அர்த்தம். அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் மஹாபாரத யுத்தம் நடந்தது. மனைவியைப் பணயம் வைப்பதும், மருமகளை மானபங்கப் படுத்துவதும், தாமசம் அதிகரித்து யுக சந்தி ஏற்பட்டதைக் காட்டுகிறது. போர் முடியும் வரை யுக சந்தி இருந்தது. 

போர் முடிந்து, 35 வருடங்கள் கழித்து, க்ருஷ்ணன் பரமபதம் சென்றார். அன்று முதல்கலி மஹா யுகம் ஆரம்பித்தது. இந்த மஹா யுகம் கிரக சேர்க்கை மூலம் அறியப்படுவதுக்ருஷ்ணன் வைகுந்தம் கிளம்பிய அன்று கூடிய எட்டு-கிரக சேர்க்கை, மீண்டும் 4,32,000 ஆண்டுகள் கழித்தே ஒன்று சேரும். இது காலக் கணிணியாக, காலம் கணிக்கும் நாள்காட்டியாக நமக்குப் பயன் படுகிறது. இந்தக் கணக்கில் இராமன் பிறந்த யுகம் சொல்லப்படவில்லை 

கிருஷ்ணன் கிளம்பிய நாளன்று கலியுகம் ஆரம்பித்தாலும், கலி தர்மத்தை, பரீக்ஷித்தால் நிறுத்தி வைக்க முடிந்தது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்பொழுது த்வாபர- கலி சந்தி நடந்து கொண்டிருந்தது. அது 1/16 பங்காகக் குறைய வேண்டும். அப்பொழுதுதான் த்வாபர- கலி சந்த்யாம்சம் வரும். அது வந்த பிறகுதான் கலி தர்ம யுகம் ஆரம்பிக்கும். 

கலி தர்ம யுகம் ஆரம்பித்த காலம் 

இதைப் பற்றி, பாகவத புராணம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. நந்த வம்சத்தினர் இந்த நாட்டை ஆள ஆரம்பித்த போது, கலி புருஷன் முழுவதுமாக நுழைந்தான் என்கிறது இந்த நூல். அது மட்டுமல்ல. கலி மஹா யுகம், கிருஷ்ணன் இந்த உலகை விட்டு நீங்கினபோது ஆரம்பித்தது. இதன் வருடம் 3101 BCE. ஆயினும், கலி தர்மம் என்பது நந்தர்கள் காலத்தில்தான் ஆரம்பித்தது என்று மீண்டும் கூறுவதன் மூலம், கலி தர்ம யுகம் வேறு, கிரகங்களால் அளக்கப்படும் மஹா யுகம் வேறு என்று பாகவதம் தெளிவாக்குகிறது. அது நடந்த காலம் 575 BCE. அன்று முதல், கலி தர்மம் முழு வீச்சில் ஆரம்பித்து விட்டது. தர்ம தேவதை மூன்று கால்களில் மட்டுமே நின்று கொண்டிருக்கிறாள். 

நம்மை ஆட்டுவிக்கும் கலி தர்மம் கால் பங்காகக் குறைந்தால்தான் கலி- க்ருத சந்தி ஏற்படும். தாமசம் குறைய, குறைய, தர்மம் ஓங்க, ஓங்க, இது நடக்கும். இதற்குக் கால வரையறை கிடையாது. அரசன் (ஆள்பவர்) சிறந்தவனாக இருந்தால், நீதி பரிபாலனம் நன்றாக நடந்தால் க்ருத யுகம் பிறக்கும் என்பதே மஹாபாரதம் பல இடங்களிலும் சொல்லும் செய்தி. இதன் அடிப்படையில், ஆழ்வார்கள் காலம் சொல்லப்பட்டுள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. உதாரணமாக, பூதத்தாழ்வார் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் என்று சொல்லும் வண்ணம்மாமல்லைஎன்னும் சொல்லை அவரது பாசுரத்தில் காண்கிறோம் (2-ஆம் திருவந்தாதி- 70). அவர் த்வாபர யுகத்தில் வாழ்ந்தவர் என்று சொல்லப்பட்டுள்ளது, பல்லவ அரசனது தர்ம பரிபாலனத்தின் அடிப்படையினால் இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது 

தர்ம யுகமும், மஹாயுகமும். 

தர்மத்தால் அளக்கப்படும் யுகம், பாரத தேசத்தில் மழைக் காலம் வந்தபிறகுதான் ஆரம்பித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. பருவ மழையானது, இன்றைக்குப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்தான் உண்டானது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மழை வந்தவுடன் த்ரேதா யுகம் ஆரம்பித்தது என்று ப்ரஹ்மாண்ட புராணமும் (1-2-230), வாயு புராணமும் (1-8-79) தெரிவிகின்ன்றன. விவசாயம் ஆரம்பித்து, அதைக் காப்பாற்ற க்ஷத்திரியர்களும் உருவானார்கள். தக்காணப் பீடபூமியின் நதிகள் அப்பொழுதுதான் உருவாயின. அந்தக் காலக்கட்டத்தில்தான் பனி உருகி, கங்கையும் உருவானாள். அதற்குப் பிறகுதான் இராமன் பிறந்தான் 

சந்தி, சந்த்யாம்சம் ஆகியவற்றைக் கொண்ட தர்ம யுகங்கள் உண்டாயின. இவற்றுடன் ஒப்பிடும் போது, மஹா யுகம் 10% சந்தி மட்டுமே கொண்டது. மஹா யுகத்தில் சந்தி, சந்த்யாம்சம் என்னும் கணக்குகள் கிடையாது. கலி மஹா யுகம் உண்டான காலம் நமக்குத் தெரியும்; ஆனால் அதற்கு முந்தின த்வாபர யுகம் என்பது ஒரு கணித வழக்குதான். சந்தி, சந்த்யாம்சம் கொண்ட தர்ம யுகம் தான் மீண்டும் மீண்டும் அடிக்கடி உண்டாகும். காலச் சுழற்சியால், பனி யுகம் வந்து, பிறகு மழை வரும் போதெல்லாம், ஒரு புது யுகக் கணக்கு ஆரம்பிக்கும். இப்படியே 28 முறை யுகங்கள் வந்துள்ளன. லக்ஷகணக்கான வருடங்களில் வரும் மஹா யுகக் கணக்கில் இவை சாத்தியமில்லை 

அப்படிப்பட்ட யுகக் கணக்கில் இராமாயணம் நடக்கவில்லை. தர்ம யுகக் கணக்கில் வந்த த்ரேதா யுகத்தில்தான் இராமன் பிறந்திருக்கிறான். இராமர் சேதுவின் தொல்லியல் காலமும், கவாடம் என்பது பாண்டியர் தலைநகரமான காலமுமான 7000 வருடங்களுக்கு முந்தைய காலமுமே இராமன் பிறந்த த்ரேதா யுகமாகும். ஜோதிடக் கணிணியில் தேடும் போது, 5114 BCE வருடம், ஜனவரி 9 ஆம் தேதி இராமனது ஜனன காலம் கிடைக்கிறது 

அதிலிருந்து கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் கழித்து மஹாபாரதம் நடந்திருக்கிறது. அவ்வளவு குறுகிய யுக அளவுகளைத் திருவாலங்காடு செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. இன்றைக்கு, தர்ம யுக அளவிலான காலக் கணக்கீட்டை, இந்தச் செப்பேடுகளே தந்துள்ளன. இராமன் ஈறாக த்ரேதா யுகம். உபரிசரவசு முடிய த்வாபர யுகம். பெருநற்கிள்ளி ஆரம்பித்து கலி யுகம் என்றுதான் இந்தச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. ஹோலோசீன் (Holocene) எனப்படும் தற்போதைய வெப்பக் காலத்தை த்ரேதா, த்வாபர, கலி என்று வாழும் முறைப்படி பகுத்துள்ளார்கள். இதில் இராமன் 8 லக்ஷம் வருடங்களுக்கு முன் வாழ்ந்தான் என்று சொல்லிக் கொண்டிருந்தால், இராமாயணமே ஒரு கட்டுக் கதை என்று அலட்சியப்படுத்தி விடுவார்கள் 

 

*** 

No comments:

Post a Comment