இராமர் பதினோராயிரம் ஆண்டுகள் ஆண்டார் என்ற விவரம் மூன்று இடங்களில் வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படிப் பதினோராயிரம் ஆண்டுகள் இராமர் வாழ்ந்தது சாத்தியமே என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். அப்படிச் சொல்வதில் சில கேள்விகள் வருகின்றன.
அவர் வாழ்ந்த காலம் வரையிலும், அவரது தம்பிமார்களான லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகியோரும் வாழ்ந்தார்களே, அவர்களும் 11,000 ஆண்டுகள் வாழ்ந்தார்களா. அவர்களுடன் அவர்கள் மனைவிமார்களும் இராமருடன் சரயு நதியில் இறங்கி வைகுந்தம் போனார்களே அவர்களும் 11,000 வருடங்கள் வாழ்ந்தார்களா?
சரயுவில் இறங்குவதற்கு முன், அவரவர் தங்கள் மகன்களை ஆங்காங்கே அரசர்களாக நிறுவினார்கள் - இராமரது மகன்களான லவ - குசன் உட்பட - அவர்கள் கூட 11,000 வருடங்கள் வாழ்ந்தார்களா? அதிலும் லவன், குசன் ஆகிய இருவரும், இராமர் ஆள ஆரம்பித்த சில வருடங்களிலேயே இராமாயணத்தைப் பாடி, இராமருடன் இணைந்தவர்கள். அவர்கள் இராமர் ஆண்ட 11,000 ஆண்டுகள் வரை வாழ்ந்து, அவர் உலகை விட்டு நீங்கிய பிறகும், வாழ்ந்து ஆண்டவர்கள். அப்படியென்றால் அவர்கள் 11,000 ஆண்டுகளுக்கு மேலேயே வாழ்ந்தார்கள்
என்று சொல்லலாமே?
அவர்களை விடுங்கள். வானரனான சுக்ரீவன், அங்கதனை அரியணையில் அமர்த்தி விட்டு, இராமனுடன் இணைந்து சரயுவில் இறங்கினான். அப்படியென்றால் அவனும், அங்கதனும் 11,000 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் ஆவார்களே, அதை ஏன் வால்மீகி சொல்லவில்லை?
விபீஷணனும், இராமரது கடைசி கணங்களில் அவரை வந்து பார்க்கிறான். இராமரால் ஜகன்னாதப் பெருமானைப் பூஜிக்குமாறு சொல்லப்பட்டு, இராமர் பூவுலகை விட்டு நீத்த பிறகும் வாழ்ந்திருக்கிறான்.
இவ்வளவு பேர் 11,000 வருடங்கள் வாழ்ந்து இருந்தார்கள் என்றால், இராமர் அவ்வளவு வருடங்கள் வாழ்ந்தார் என்பதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது?
உடனே கிரிப்டோக்களும், அவர்கள் விதைத்து வைத்த அறிஞர்களும் கிளம்பி விடுவார்கள் - அது வேற யுகம் அப்பொழுதெல்லாம் அந்த அளவு காலம் வாழ்ந்திருப்பார்கள் என்பார்கள்.
இப்படிக் கேட்டவர்கள் எல்லாம் அறிஞர்கள். அதிலும் விடாமல் சந்தியாவந்தனம் செய்பவர்கள். அதில் என்ன மந்திரம் சொல்கிறார்கள்?
'பஸ்யேம சரத சதம், ஜீவேம சரத சதம்'.
அது ஏன் சரதம் (சரத் காலம்), அது ஏன் சதம் (நூறு)?
யோசித்துப் பார்த்தார்களா ?
பூர்வர்கள் கேட்டதைப் போல எங்களுக்கும் நூறு வயது கிடைக்கட்டும் என்று வேதம் ஏன் சொல்கிறதே? அப்படியென்றால் நூறு வயது வாழ்வதே பெரிது என்பதால் தானே அப்படி வேதத்தில் சொல்லியுள்ளார்கள்?
சதம் ஜீவந்து சரத - நூறு வருடம் வாழட்டும் என்று ஏன் ரிஷிகள் எழுதி வைத்தார்கள்?
இதெல்லாம் மனிதர்களுக்கு, இராமருக்கு அல்ல என்பார்கள் அறிவு ஜீவிகள்.
ஆனால் இராமர் தன்னை மனிதனாகத் தான் காட்டிக் கொண்டார்.
'ஆத்மானம் மானுஷம் மன்யே' என்றுதான் சொல்கிறார்.
பிரம்மாவும், இராவணனைக் கொல்ல, இராமா, நீ மனிதனாக அவதரித்தாய் என்கிறார்.
ஒரு தாயின் கருவில் வளர்ந்து, இந்த உலகில் மனிதனாகப் பிறந்து, உதாரண புருஷனாக வாழ்ந்து, மனிதப் பிறவியை முடித்துக் கொள்ள சரயுவில் இறங்கியவர் இராமர்.
இராமாயணத்தில் பல இடங்களில் அவர் சந்தியா ஜெபம் செய்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. யஜூர் வேதியான அவர், சரத சதம் என்று நூறு வயதைக் கேட்கும் சந்தியா வந்தன மந்திரத்தைத்தான் சொல்லியிருக்கிறார்.
ஆனால் அவர் 11,000 ஆண்டுகள் ஆண்டார் என்று சொல்லப்பட்டுள்ளதே என்று கேட்டால், பிரமாணங்களைப் பாருங்கள்.
வேதம் தான் பிரமாணம்.
இதிகாச, புராணங்களில், வேதப் பிரமாணத்துக்கு மாற்றாக ஏதேனும் சொல்லப்பட்டால், வேதம் சொல்வதைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது ரிஷிகளின் வாக்கு.
ஜைமினி மீமாம்ச சூத்திரத்திற்கு (6.7.13.31 முதல் 40 வரை) உரை எழுதிய ஸபர ஸ்வாமி சஹஸ்ர சம்வத்சரம் என்பதை ஆயிரம் நாட்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார்.
இதையே காத்யாயன ஶ்ரௌத்த சூத்திரமும் (1.6.17 - 27) ஆயிரம் வருடங்கள் என்பதை ஆயிரம் நாட்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில், अहर्वै संवत्सर: சம்வத்சரம் என்பது ஒரு நாள் - அஹர் என்கிறது.
இந்த வேத பிரமாணங்களைச் சுட்டிக் காட்டி, மகாபாரதத்தில், பீமன், யுதிஷ்டிரரிடம் சொல்கிறான் - வனவாசம் ஆரம்பித்து 13 நாட்கள் ஆகி விட்டன. இவை 13 வருடங்களுக்குச் சமானம்.
இவற்றை எல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? . முன்னோர் மொழிந்த மொழியை முறை தப்பாமல் பின்பற்ற வேண்டும் என்று சொல்லிக் கொள்பவர்கள், ரிஷிகள் எழுதி வைத்ததிலிருந்து முறை தப்பாமல் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இராமர் 11,000 வருடங்கள் ஆண்டார் என்றால் வேதப் பிரமாணப்படி, 11,000 நாட்கள் என்று அர்த்தம் செய்ய வேண்டும். சூரியன் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட 360 நாட்கள் கொண்ட சாவன வருடத்தால் வகுத்து 30 வருடங்கள் ஆண்டார் என்று பொருள் கொள்ள வேண்டும்.
அப்படியெனில் வால்மீகி 11,000 ஆண்டுகள் என்று சொல்லியே இருக்க வேண்டாமே என்று இன்னொரு கரூப் கேட்கும்.
இராமாயணம் என்பதன் கதாநாயகன் இராமர். அவர் பிறப்பு முதல், அவர் வாழ்வில் நடந்த ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சிக்கும் வால்மீகி அவருடைய வயது அல்லது காலத்தை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ சொல்லி விடுகிறார்.
பிறந்த நேரத்தைப் பற்றி வால்மீகி சொன்னதைப் போல வேறு யாருக்கும், எந்த ரிஷியும் சொல்லவில்லை. இராமர் திருமண வயது, சீதையின் வயது, வனவாசம் ஆரம்பித்த வயது, முடித்த வயது என்று எல்லாவற்றையும் காட்டிய வால்மீகி, இராமர் ஆண்ட காலத்தைச் சொல்லாமல் விடுவாரா? சொன்னார். பொடி வைத்துச் சொன்னார்.
மற்ற எல்லாவற்றுக்கும், நேரிடையாக மனித வயதைச் சொன்ன வால்மீகி அவர்களுக்கு, இராமர் இத்தனை ஆண்டுகள்தான் ஆண்டார் என்று மனித அளவில் குறுக்கிச் சொல்ல மனம் வரவில்லை. அதனால் இரகசியமாக code ரூபத்தில் சொல்லி விட்டார்.
வேதம் தெரிந்தவன் புரிந்து கொள்வான். வேதம் படித்தும், உள்வாங்கிக் கொள்ளாதவன், புரிந்து கொள்ள மாட்டான்.
கொசுறு:
இராமர் வாழ்ந்த காலம் வரை வாழ்ந்து, இராமருடன் சேர்ந்து மற்றவர்களும் சரயுவில் இறங்கினார்கள் என்பது உத்தர காண்டத்தில் வருவது. அது வால்மீகி இராமாயத்தில் சேர்த்தியே இல்லை என்று ஒரு க்ரூப் வரும்.
உத்தர காண்டத்தை வால்மீகிதான் எழுதினார். இதை, பால காண்டம் 3-38 இல் வைதேகியின் விசர்ஜனத்தையும் எழுதி விட்டார் என்பதிலிருந்தும், 4-2 இல் ஆறு காண்டங்களுடன், உத்தர பகுதியையும் ஒன்றாகவே எழுதி விட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது என்பதாலும் தெரிய வருகிறது.
பட்டாபிஷேகம் வரை லவ - குசர் மூலமாக வெளிப்படுத்தினார். அப்பொழுதே எழுதி முடித்த உத்தர காண்டத்தை, அந்த இதிகாசத்தின் பாத்திரங்கள் உலகை விட்டு நீங்கிய பின் வெளிப்படுத்தி உள்ளார். இவ்வாறே வியாசரும், மகாபாரதத்தை, அதன் கதாபாத்திரங்கள் மறைந்த பிறகுதான் வெளிப்படுத்தினார் என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே உத்தர காண்டம் வால்மீகியால் எழுதப்பட்டது உண்மை. இந்த விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளவும், யோசிக்கவும், விடாமல், மூளைச் சலவை செய்பவர்களிடமிருந்து ஒதுங்கி இருத்தல் நலம்.
No comments:
Post a Comment