http://www.tamilhindu.com/2010/04/thiruvalluvar-a-hindu-sage-in-tn-emblem/
"அரசுச் சின்னத்தில் திருவள்ளுவர் என்னும் இந்து ஞானி?
மூதேவியும், ஸ்ரீ தேவியும் இந்து மதத் தெய்வங்கள். இந்தக் குறள் அவர்களைப் பற்றிச் சொல்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது - இன்றைய தமிழக முதல்வர் உட்பட… திருவள்ளுவரையும், திருக்குறளையும் புகழும் அப்பாடல்கள் சங்கப் புலவர்கள் எழுதியவை. அவர்களில் ஒருவராவது, திருக்குறள் மத சார்பற்றது என்றோ அல்லது சமண பௌத்த மதக் கருத்துக்களை உடையது என்றெல்லாமா கூறியிருக்கிறார்கள்?...."
A similar article in English was already written by me in this blog.It can be read here:-
Thiruvalluvar Aandu - what Karunanidhi does not know of Thiruvalluvar!
The current article is supported by a research by me that establishes that Thiruvalluvar could have worshiped Sri Rama and concealed Rama's name in the first verse of his Thirukkural. It is given below.(This is a bit heavy explanation to understand. However I expect anyone wishing to reproduce this to seek my permission or quote this link)
ராமனே வள்ளுவரது இஷ்ட தெய்வமாகவும் இருந்திருக்க வேண்டும் என்பதை ஒரு ஆராய்ச்சி மூலம் அறியலாம். அகாரப் பிரம்மம் குறித்து அகர' முதல' என்று அவர் ஆரம்பித்தார் என்பதும், 'பகம்' என்னும் ஆறு குணங்களை உடையதால் 'பகவன்' என இறைவன் அழைக்கப்படுவதால் அவனை 'ஆதி பகவன்' என்றும் சொல்கிறார் என்பதும் தெளிவாக இருந்தாலும், இதற்கு மாற்றுக் கருத்துக்கள் சொல்பவர்கள் இருக்கிறார்கள். வள்ளுவர் எந்த ஒரு கடவுளையும் கடவுள் வணக்கப் பகுதியில் காட்டவில்லை என்பதே பலரும் நினைப்பது. அப்படி ஒரு நினைப்பை பள்ளிப் படிப்பிலேயே நமக்குள் புகுத்தி விட்டார்கள். நான்மறையை எளிமையாகத் தந்தவர், தான் ஒரு கடவுளைத் தொழாமல் இருந்திருப்பாரா? தன் படைப்பில் அந்தக் கடவுளை குறிக்காமல் இருந்திருப்பாரா?
அந்நாட்களில் புலவர்கள் தாங்கள் வணகும் தெய்வங்களையோ அல்லது, பாட்டுடைத் தலைவனையோ நேரிடையாகச் செய்யுளில் காட்டியதில்லை. மறைமுகமாகக் காட்ட சில வழி முறைகள் கடை பிடிக்கப்பட்டன. அந்த வழி முறைகளை தொல்காப்பியம் பொருளதிகாரம், புறத்திணை இயல் சூத்திரங்கள் 24, 25, 26 இல் காணலாம். 'தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி' என்னும் நூலில் மு. ராகவையங்கார் அவர்கள் பாடாண் பகுதியில், கடவுள் வாழ்த்தோடு, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்று மூன்று பகுதிகளை, திருவள்ளுவர் பாயிரமாக அமைத்துள்ளதை, இந்த சூத்திரங்கள் வாயிலாக விளக்குகிறார்.
பாடாண் பகுதியாக அமைந்துள்ள இவற்றுள், முதல் கடவுளை, அல்லது தான் வணங்கும் கடவுளை, அல்லது பாடாண் தலைவனது பெயரை முதலாகக் கொண்டு வாழ்த்துதல் மரபு. "குழவி மருங்கினும் கிழவது ஆகும்' என்னும் 24 -ஆவது சூத்திரப்படி, மனிதனின் வாழ்கையை குழந்தைப் பருவம் முதல் கிழவனாகி இறப்பது வரை ஐந்தாகப் பிரித்து, அவற்றுள் உச்ச கட்ட பருவத்தில், பாடாண் தலைவனது பெயரது முதல் எழுத்தை அமைப்பது மரபு. அதனுடன், ஊரும், தோற்றமும் (பிறந்த நாள் என்னும் நட்சத்திரம்) சேர்த்து, முதல் கடவுளை முதல் வரியில் அமைக்கவேண்டும் என்பார் புலவர் என்கிறார் தொல்காப்பியர். இந்த முறைகளின் விளக்கத்தை சூடாமணி நிகண்டில் காணலாம். அவற்றைப் பயன் படுத்தி ஆராய்ந்தால் திருக்குறளில் திருவள்ளுவர் தான் வணங்கும் தெய்வமாக ராமனை மறைமுகமாகக் காட்டியுள்ளார் என்று தெரிய வருகிறது.
அந்த வழிமுறைகள் பாடாண் தலைவனது பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டவை. நட்சத்திரம் பற்றி கூறுகையில், இந்து மதமும், தமிழ் இனமும், வாழ்கை முறையும் பிறந்த நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. பிறந்த நட்சத்திரத்தை 'நாண்மீன்' என்பர். நாண்மீன் பற்றி பல இடங்களில் சங்கத் தமிழ் கூறுகிறது. "குடையும் வாளும் நாள்கோள்" (தொல்காப்பியம். பொருளதிகாரம், புறத்திணை இயல் - 11 ) என்னும் தொல்காப்பிய சூத்திரம், அரசன் பிறந்த நாண்மீனின் முக்கியத்துவத்தைக் குறிப்பது.
போருக்குச் செல்லும் போது நாண்மீன் பார்ப்பது வழக்கம். போருக்கோ அல்லது, பயணத்துக்கோ பார்த்த நாள்- நட்சத்திரம், அரசனது பிறந்த நட்சத்திரத்துக்குபொருத்தமாக இருக்க வேண்டும். அப்படி அமையவில்லை என்றால், நாண்மீன்படி நல்ல நாளை தேர்வு செய்து, அன்றே வழக்கப்படி செய்யக் கூடிய சடங்குகளைச் செய்து விட்டு, அரசனின், யானை, குடை முதலான அரச மங்கலப் பொருட்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று வேறு ஒரு இடத்தில் வைப்பார். அரசன் என்று கிளம்புகிறானோ அன்று அந்த இடம் அடைந்து அங்கிருத்து விமரிசையாகக் கிளம்புவான்.
செய்யுளின் பாடாண் தலைவனது நாண்மீன் (பிறந்த நட்சத்திரம்) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. புறநானுறு -229- இல் கோச்சேரமான் யானைக் கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும் பொறையின் நாண்மீனை, வீழ் மீன் (எரி நட்சத்திரம்) பீடித்ததைக் கண்டு, ஏழு நாட்களுக்குள் அவனுக்கு கண்டம் வரக்கூடும் என்று சங்கப் புலவர் கூடலூர்க் கிழார் அஞ்சுகிறார். (இதன் ஜோதிட விளக்கத்தை வராஹா மிஹிரர் எழுதிய "ப்ருஹத் சம்ஹிதை"யில் 33- 15 & 18 -இலும், 46-17 - இலும் காணலாம்.) அவர் அஞ்சியபடியே ஏழாம் நாள் அரசன் இறந்த செய்தி வருகிறது. தொல்காப்பியம் புறத்திணை இயல் சூத்திரம் 30 -க்கு உரை எழுதுகையில், நச்சினார்க்கினியர் இந்த புறப்பாடலை மேற்கோள் காட்டி, "பாடாண் தலைவனது நாண்மீனை வீழ் மீன் நலிந்தமைப் பற்றிக் கூறியது" என்கிறார். பாடாண் தலைவனது நாண்மீனின் முக்கியத்துவத்தை இதன் மூலம் அறியலாம். மேலும், தன் அரசனது மீன் (பிறந்த நட்சத்திரம்) வாழ்க, எதிரியின் மீன் வீழ்க என்றும் புலவர்கள் பாடியுள்ளனர். ( புற நானுறு 24 - "நின்று நிலை இயர் நின் நாண்மீன், அல்லாது படாஅச் செலீயர் நின் பகைவர் மீனே")
செய்யுளை அமைக்கும் போது, பாடாண் தலைவனது நாண் மீனுக்கு ஏற்றவாறு முதல் எழுத்து அமைய வேண்டும். மேலும் எந்தப் புலவரும் தான் பாடும் பாடல் காலம் கடந்து நிற்க வேண்டும் என்று விரும்புவார். அதற்காக இரண்டு விஷயங்களை அவர் அமைக்க வேண்டும் என்ற ஒரு கருத்து நிலவி வந்திருக்கிறது. ஒன்று, பாட்டுடைத் தலைவனின் பெயரின் முதல் எழுத்தை, தானப் (ஸ்தான) பொருத்தமுடன் பாடலின் முதல் சொல்லில் அமைக்க வேண்டும்; இரண்டு, செய்யுளுக்கு நட்சத்திரப்பொருத்தம் இருக்க வேண்டும். இது பாட்டுடைத் தலைவனின் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைய வேண்டும்
சூடாமணி நிகண்டு சூத்திரம் 12- 31 ஐவகைத் தானப் பொருத்தம் பற்றி கூறுகிறது. ஒரு மனிதனின் வாழ்நாளில் வரும் ஐந்து பருவங்களே அந்தத் தானங்கள். அவை பாலன், குமாரன், யௌவனன் அல்லது அரசன், கிழவன், சாவு. இவை மனிதனின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் பற்றிக் குறிக்கின்றன.
பாலனே குமரன் மன்னன் படுமுதிர் கிழவன் சாவு
கோலுந்தன் பேர்எழுத்து குறித்தது முதலாகக் கொள்க
ஏலுமுன் எழுத்து மூன்றும்இன்பம் பின்னிரண்டும் தீதாம்
சாலுமூவகைச் சீர்தானே சாற்றிய கவிதைக் கின்பம் .”
இதன் பொருள் :- (" சூடாமணி நிகண்டு - மூலமும், உரையும்" - யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களால் பரிசோதிக்கப்பட்டு, சிதம்பர சைவப் பிரகாச வித்தியாசாலை தருமா பரிபாலகர் விஸ்வ ந்தப் பிள்ளை அவர்களால் எழுதப்பட்டது.)
"பாலன், குமரன், அரசன், கிழவன், மரணம் ஆகியவை ஸ்தானங்கள். (ஸ்)தானப் பொருத்தம் பார்க்கும் பொழுது, நெட்டெழுத்துக்களை அவ்வவற்றுக்கு இனமாயுள்ள குற்றெழுத்தில் அடக்கி, ஐந்தெழுத்தாகக் கொண்டு, பாட்டுடைத் தலைவனின் பெயரின் முதலெழுத்தைப் பாலன் தானமாக வைத்து எண்ணுக. எண்ணும்போது எடுத்துக் கொண்ட முதல் சீரின் முதலாம் எழுத்து முதல் மூன்று தானத்துள் ஒன்றாய் வரின் நன்றாகும். பின் இரண்டு தானத்திகுள் வருமாயின் தீதாகும். நற்கணமாகிய மூவகைச் சீரே எவ்வகைப்பட்ட பாக்களுக்கும் முதல் சீராகக் கொண்டு பாடல் வேண்டும்."
அதாவது பாட்டுடைத் தலைவனின் பெயரின் முதல் எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அது நெடிலாக இருந்தால், அதன் இணையான குறில் எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பாடலின் முதல் வரியில் முதல் ஐந்து எழுத்துக்கள் ஐவகைத் தானங்கள் ஆகும். அவற்றில் முதல் மூன்றனுள் (பாலன், குமரன், அரசன்) இந்த எழுத்தை அமைக்க வேண்டும்.
இதன்படி திருவள்ளுவர் அமைத்திருப்பார் எனில், முதல் மூன்று எழுத்துக்களான அ க ர இவை முறையே பாலன், குமரன், அரசன் என்னும் தானங்கள் ஆகும். இவற்றுள் மூன்றாவதான 'அரசன்' சாலச் சிறந்தது. பாட்டுடைத் தலைவனது பெயரின் முதல் எழுத்து அதன் குறிலாக, மூன்றாம் எழுத்தாய் அமைய வேண்டும். இங்கே அது 'ர' என்னும் எழுத்து. பாட்டுடைத் தலைவன் என்று குறளில் நாம் காண்பது கடவுள் வாழ்த்துப் பகுதியில் வள்ளுவர் வாழ்த்தும் கடவுள். அவர் பெயர் 'ர' அல்லது 'ரா' என்று ஆரம்பிக்க வேண்டும்.
இனி செய்யுளுக்குரிய நட்சத்திரம் என்று சூடாமணி நிகண்டு என்ன கூறுகிறது என்று பார்ப்போம். (12 - 102)
" தனது நாளிற் பின்னாளும், சார்ந்திடும் நாலும், ஆறும்,
வினவிய எட்டு ஒன்பானும் விருத்தமொன்றில்லை தன்னான்
இனைய மூன்றுடன் ஐந்தாநாள் ஏழானாள் இவை பொருந்தா
நினையுமிம் மூன்று ஒன்பானான் நேர்படு மூன்று வட்டம்"
இதன்படி செய்யுளுக்குரிய நட்சத்திரம் ஒன்பதாகப் பிரித்தறியப்படுகிறது. பாட்டுடைத் தலைவன் மீது பாடப்படும் முதல் பாவின் முதல் சீருக்குரிய முதல் எழுத்திற்கு அமைந்த நட்சத்திரம், அவன் நட்சத்திரத்திற்கு அடுத்த (இரண்டாவது) அல்லது, நான்காவது, ஆறாவது, எட்டாவது அல்லது ஒன்பதாவது நட்சத்திரமாக அமைத்தால் நன்று. அவ்வாறின்றி மூன்றாவது, ஐந்தாவது, அலல்து ஏழாவது நட்சத்திரமாக அமைந்தால் தீது என்கிறது இந்த சூத்திரம்.
இது தாரா பலம் என்று சொல்லப்பட்டு தொன்று தொட்டு வருவது. அதர்வண வேதத்தில் நான்முகன் என்னும் பிதாமகர் கஷ்யபருக்கு சொன்னது. இதையே நாள் என்று பிறந்த நட்சத்திரத்தைக் குறித்துச் சொல்வது. இந்த நட்சத்திரங்கள் மொத்தம் 27. இவை ஒன்பது ஒன்பதாக மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் சில எழுத்துக்கள் உள்ளன. இவற்ற்றை இன்றும் நாம், நாம நட்சத்திர எழுத்துக்கள் என்று பின் பற்றி குழந்தைகளுக்குப் பெயர் இடுகிறோம். (நாம நட்சத்திரத்தை 'நாளெழுத்து' என்று யாப்பருங்கல விருத்தியுரை - 536 குறிக்கிறது.)
இந்த சூத்திரத்தில் சொல்லப்படுவது என்னவென்றால், பாவின் முதல் சீரின் முதல் எழுத்து எந்த நட்சத்திரத்திற்கு உரியது என்று பார்க்க வேண்டும். அந்த நட்சத்திரம், பாட்டுடைத் தலைவனது பிறந்த நட்சத்திரத்துக்கு 2,4,6,8,9 ஆவது நட்சத்திரமாக இருந்தால் நன்று. அதுவே செய்யுளுக்குரியது. அப்படி இல்லாமல் 3,5,7 -ஆவது நட்சத்திரமாக அமைந்தால் தீது.
இந்த விஷயங்களை வைத்து நாம் முதல் குறளை ஆராய்வோம். பாட்டுடைத் தலைவனது பெயரின் முதல் எழுத்து 'ர' அல்லது 'ரா' ஆக இருக்க வேண்டும் என்று பார்த்தோம். மேல் சொன்ன சூத்திரப்படி முதல் எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அது 'அ' . இதன் நட்சத்திரம் என்ன என்று பார்த்தால் (பஞ்சாங்கங்களில் இவை கொடுக்கப்பட்டுள்ளன)
கிருத்திகை! 'ரா' என்று ஆரம்பிக்கும் பெயர் ராமனைக் குறிப்பதென்று எடுத்துக் கொண்டால், ராமன் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம். புனர் பூசத்திலிருந்து கணக்கிட்டால் கிருத்திகை ஆறாவது நட்சத்திரம் (மூன்றாவது வட்டத்தில்).
'அகர' என்று ஆரம்பிக்கும் முதல் குறள் திருவள்ளுவரது தெய்வமாக ராமனைக் குறிக்கிறது எனலாம். தானப் பொருத்தம் வகையில் பெயரின் முதல் எழுத்தின் குறில் (ர) 'அரசன்' என்னும் சிறந்த தானமாக, மூன்றாவதாக வருகிறது. முதல் எழுத்தான 'அ' ராமன் பிறந்த நட்சத்திரத்துக்கு ஆறாவது நட்சத்திரத்தின் எழுத்து.
திருக்குறளிலும், விஷ்ணு அவதாரமான, வாமனன் பற்றிய குறிப்பு வருகிறது. வேறு இடங்களிலும் விஷ்ணு, ஸ்ரீதேவியைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. மேலும் சித்தர் பாடல்களுள், 'திருவள்ளுவர் ஞானம்' என்ற பெயரில் சில பாடல்கள் உள்ளன. பொதுவாக சித்தர்கள் சிவனைத் துதித்துப் பாடியுள்ளனர். திருவள்ளுவர் ஞானம், முதல் அடியிலேயே, 'அயன் மால் போற்றி' என்று நான்முகனை நாபிக் கமலத்தில் கொண்ட திருமாலைப் போற்றுகிறது. இந்தப் பாடல்களும் திருவள்ளுவர் எழுதியவையாக இருக்கக்கூடும்.
'உத்தர வேதம்' என்று சொல்லப்படும் திருக்குறள் ராமனைத் துதித்து எழுதப்பட்டிருந்தால் அதில் வியப்பில்லை. அவதாரங்களிலேயே, ராமாவதாரம் நடந்த போது, வேத புருஷனும் அவனை விட்டுப் பிரிய இயலாமல் ராமாயணமாகப் பிறந்தான் என்று பெரியோர் கூறுவர்.
‘பரம புருஷன் தசரதருக்கு மகனாகப் பிறந்த பொழுது, வேத புருஷனும், ப்ராசேதஸ் எனப்படும் வால்மீகியிடம் ராமாயணமாகப் பிறந்தான்’ என்று பொருள் படும்
‘வேத வேத்யே பரே பும்சி ஜாதே தசராத்மஜே /
வேத ப்ராசேதசாத் தாசீத் சாக்ஷாத் ரமாயனாத் மனஹ //
என்னும் ஸ்லோகத்தை ஸ்மார்த்த, வைணவ, மத்வ என்னும் எல்லா வழியினரும் சொல்லித்தான் ராமாயணத்தை வாசிப்பார்.
காரணம், வேதங்கள் என்றும் அந்த பரமாத்மனைப் பார்த்துக்கொண்டே, அவனைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கின்றன. அந்த பரமாத்மன் மனுஷ்ய அவதாரம் எடுத்தால், வேத புருஷனும் அவனுடன் இப்பூவுலகில் அவதாரம் எடுக்க வேண்டும், அந்த பரமாத்மன் ராமனாகப் பிறந்த போது, வேதமும் ராமாயணமாகப் பிறந்தது.
திருக்குறளும் வேதமே என்றனர் ஆன்றோர். திருக்குறள் பிறந்த பொழுது, ராமனும் அங்கே இருக்க வேண்டும். வேதம் அந்த இறைவனை ரகசியப் பொருளாகக் காட்டுவது. ஏனெனில் அவனைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் அந்த வேதம் துதிக்கும் பரமாத்மனை ராமன் உருவில் திருவள்ளுவர் ரகசியமாக வைத்துள்ளார் என்று எண்ணுவதில் தவறில்லை.
அப்படிப்பட்ட ராம பக்தனுக்கு அரசுச் சின்னத்தில் இடம் - அவர் இந்து மதம் பற்றிச் சொல்லவில்லை என்ற போர்வையில்.
ராமன் என்ற ஒருவனே கிடையாது என்று கடலையே தோண்டத் தலைப்பட்டவர்கள். திருவள்ளுவரையும், திருக்குறளையும் கொஞ்சம் தோண்டிப் பார்திருக்ககூடாதா?
அங்கே தெரிவார்களே, ராமனும், வேதமும் !
ராமனை வெறுப்பவர்கள், ராம பக்தனைக் கொண்டாடுகிறார்கள்.
நல்ல காமெடி!
>