Thursday, January 20, 2011

Article on "Pongal".

My article on certain issues around Pongal festival written in Tamil and published in Poojari Murasu (circulated among the temple priests of Tamilnadu) is given below.


For those who can not read Tamil, I am giving here the main features discussed in this article.

  • The Tamil name of the month 'Thai' is discussed. 'Thai' means 'getting stitched to'. The celestial relevance of this month is such that it attracts or binds to itself the prayers and aspirations done by the people. The most relevant prayers pertain to marriage- wishes.  
  • Pongal is the name of the dish which is cooked on auspicious occasions that mark a fulfillment or satisfaction of aspirations. It is cooked at the end of harvest season.
  • Pongal is not the time of New Year as Karunanidhi government has declared.
  • There is no basis for the Thiruvalluvar year declared by the Government.
  • The naming of sahapthas such as Vikrama sahaptham, salivahana sahaptham etc was done to mark the victory of people of Bharath over Mlecchas (non vedic people). As such counting years as Thiruvalluvar aandu is a misnomer. 
  •  

    My speech on “Scientific secrets of Paavai nonbu” given in Tamil can be viewed here:




    பொங்கல் என்னும் அவியல் பண்டிகை

    தை பிறந்தாலே, பொங்கல் பண்டிகை நம் நினைவுக்கு வரும். இப்பொழுதெல்லாம், தமிழ்ப் புத்தாண்டு என்று ஒரு இடைச் செருகலையும் கொண்டு வந்துள்ளார்கள். இதற்கு முன் 1971-72 களிலேயே ஒரு இடைச் செருகலைக் கொண்டுவந்தார்கள். அதற்குப் பெயர் "திருவள்ளுவர் ஆண்டு".  ஒன்று கொடுத்தால் இரண்டு இலவசம் என்பதுபோல பொங்கல் பண்டிகையோடு புத்தாண்டும், திருவள்ளுவர் ஆண்டும் சேர்ந்து கொண்டு, பொங்கல், ஒரு அவியல் பண்டிகையாகி விட்டது! இந்த அவியலைக் கொஞ்சம் ஆராயலாமா? 

    தையின் மகத்துவம்.

    முதலில் தை மாதத்தின் சிறப்பைக் காண்போம். சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கும் காலம் தை மாதம் ஆகும். இந்தியாவின் மற்ற பகுதிகளில் இந்த மாதத்தை மகர மாதம் என்றழைப்பர். இந்த மாதத்தில் பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி வரவே புஷ்ய மாதம் என்றும் அழைப்பார்கள். தை என்பது தமிழ் நாட்டுக்கே உரிய பெயர். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 

    தமிழ் நிலங்களில் கார்த்திகை மாதம் வரை மழை இருக்கும். அதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். நிலப்பகுதியிலும் வெள்ளக்காடாக இருக்கும். மார்கழி மாதம் வெள்ளம் வடிந்து ஆங்காங்கே குளம் போல நீர் தேங்கி இருக்கும். அதனால் மார்கழி மாதத்திற்குக் 'குளம்" என்ற பெயர் தமிழ் நாட்டில் இருந்து வந்தது. அந்த மாதத்தில் ஆற்றங்கரையில் பாவை நோன்பு நோற்றால் அக வாழ்க்கை நன்றாக அமையும், வரப்போகும் கார்காலமும் சிறப்பாக இருக்கும்.

    மார்கழி முடிந்து வரும் தை மாதத்தில் நீர் தெளிந்து விடும். ஆற்று நீரைப் பார்த்தால் அன்ன நடை நடந்து வருவது போல இருக்கும். அந்த நீரில் நம் முகத்தைப் பார்க்க முடியும். அந்த அளவுக்குத் தெளிவாக இருக்கும். அந்த நீரைப் பார்த்து நாம் நினைக்கும் எண்ணங்களும் அந்த நீரில் பிரதிபலிப்பதுபோலத் தோன்றுமாம். அதாவது நம் எண்ணங்களையும், விருப்பங்களையும் அந்த நீர் தனக்குள் அப்படியே தைத்துக் கொள்ளுமாம்.  இதைத் தை- என்றார்கள். தை என்றால், தைத்தல் என்று பொருள்.
    தைத்தல், பின்னுதல், பொருத்துதல், சேர்த்தல் என்றும் சொல்லலாம்.

    மார்கழி மாதத்தில் ஆரம்பித்தப் பாவை நோன்பைத் தையிலும் தொடர்வார்கள். அந்த நோன்பை ஒரு தவம் போலச் செய்தார்கள். இதைத் "தவத்-தை- நீராடல்" என்றார்கள். தெளிவாக இருக்கும் தை மாத நீர், மக்கள் செய்த தவத்தை, அவர்கள் எண்ணங்களைத் தைத்துக் கொள்ளும் பளிங்கு போல இருக்கிறது. அதனால் தை என்னும் பெயர் இந்த மாதத்திற்கு வந்தது.  

    இந்த மாதத்திற்கு நேர் எதிரில் இருக்கும் மாதம், ஆடி மாதம் ஆகும்.
    தை மாதத்தில் தைக்கப்பட்ட தவத்தையும், எண்ணத்தையும் பிரதி பலிக்கச் செய்யும் கண்ணாடி போல் இருக்கவே அது "ஆடி" மாதம் என்றாயிற்று. அதாவது ஆடி வருவதற்குள் வேண்டுதல்கள் நிறைவேறி விடும்.


    தையில், சில குறிப்பிட்ட வேண்டுதல்கள் செய்யப்படுகின்றன.
    நல்ல கணவன் வேண்டும் என்று கன்னிப் பெண் வேண்டுவாள்.
    கணவன் நன்கு ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று மனைவி வேண்டுவாள்.
    இந்த வேண்டுதல்களின் அடிபடையில் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியும் வந்தது. யாருக்கு வழி பிறக்கும்? திருமணத்துக்குக் காத்திருக்கும் பெண்களுக்கு வழி பிறக்கும். 

    மார்கழியில் அறுவடை முடிந்து கையில் காசு இருக்கும். திருமண செலவுகளுக்குத் தேவையான அளவு பணம் சேர்ந்திருக்கும். கன்னிகையும் நோன்பிருக்கவே, தெய்வ அருளும் கூடி வரும். மேலும் தை பிறந்தபின் முஹூர்த்த நாட்களும் அடுத்தடுத்து வரும். இதனால், திருமண முயற்சிகள் எளிதில் கூடி வரவே இந்தப் பழமொழி வழக்கில் வந்தது. இதுதான் தை மாதம் குறித்த பண்டைத் தமிழர் வாழ்கை இயல்பு. அப்படியென்றால், தை மாதம் பொங்கல் திருநாளாக ஆனது எப்படி? 


    பொங்கல் என்னும் உழவர் பண்டிகை.

    பொங்கல் பண்டிகையை ஒரு விழாவாகத் தமிழ் நூல்களில் சொல்லவில்லை. அது தமிழர் திருநாள் என்றும் சொல்லப்படவில்லை. தமிழர் திருநாள் என்று, தமிழருக்கே உள்ள பிரத்யேகமான பண்டிகை என்று ஒன்று இருக்குமானால் அது கார்த்திகை தீபம் மட்டும்தான். அதைத் தமிழர் தவிர வேறு யாரும் கொண்டாடுவதில்லை

    ஆனால் பொங்கலிடுவது எல்லாப் பண்டிகையிலும் இருந்திருக்கிறது. பூம்புகார் நகரத்தில் இந்திர விழா நடந்தபோது மக்கள் பொங்கலிட்டுப் பூச் சொரிந்து வழிபாடுகள் செய்திருக்கின்றனர். இன்றைக்கும் எந்த விசேஷ நாளிலும் அம்மனுக்குப் பொங்கலிடுவர். தையில் மட்டும் அல்ல, மார்கழியிலேயே பொங்கல் பொங்குதல் ஆரம்பித்து விடுகிறது.
    அறுவடையைக் கொண்டாடிப் பொங்கலிடுவர். பொதுவாக புது அரிசியைச் சமைத்தால் அளிந்து விடும். அதைப் பொங்கலாகச் சமைத்தால்தான் சரியாக இருக்கும். அதனால் புது அரிசியைக் கொண்டு பொங்கலிடுவார்கள். புது அரிசி உண்பதற்கு நேரம் காலம் பார்த்துதான் சமைத்து உண்ண வேண்டும். இதற்கென்றே சோதிட விதிகள் உண்டு. அறுவடையாகி வந்த புது அரிசியை வியாழக் கிழமையிலோ அல்லது சனிக் கிழமையிலோ சமைத்துச் சாப்பிடலாம். அதனால் வியாழன் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட தனுர் ராசியிலிருந்து, சனியை அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்குச் சூரியன் செல்லும்போது பொங்கலிட்டு, சூரிய பகவானுக்குப் படைப்பார்கள். 

    சமீப காலம் வரை தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் உழுதுண்டும், உழுவித்துண்டும், உழவுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். அதனால் தமிழகம் தழுவிய அளவில் பொங்கல் ஒரு பண்டிகையாக ஆனது. பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் வரவே, பொங்கல் பண்டிகை, அறுவடைப் பண்டிகையாக இருந்திருக்கிறது என்றே தெரிகிறது. 

    பொங்கல் என்ற பெயர் ஏன் வந்தது என்று பார்ப்போம். பொங்கலாடுதல் என்ற ஒரு சொல்லாட்சி தமிழில் உண்டு. சங்கத் தமிழில் இது காணப்படுகிறது.  நன்கு பெய்து ஓய்ந்த மேகமானது, பஞ்சினைப் போல வெண்மையாகப் பரவி, விரிந்து, பொங்கி, வானத்தின் மேலே போய் நிற்கும். அதாவது நல்ல பலனைத் தந்தபின், பஞ்சு போல வெண்மையாக மேலெழுந்து மேகம் நின்றால் அதற்குப் பொங்கலாடுதல் என்று பெயர். அறுவடை செய்துக் கிடைத்த புது அரிசியைக் களைந்து போட்டால் அது வெண்மையாகப் பொங்கும். அது மேகத்தின் பொங்கலாடுதல் போல இருப்பதால், அந்த உணவுக்கும் பொங்கல் என்ற பெயர் வந்தது. பண்டிகைக்கும் பொங்கல் என்ற பெயர் வந்தது. மன நிறைவு ஒரு முக்கிய காரணம் என்பதால், விழாக்களிலும், பண்டிகையிலும், அறுவடை முடிந்த பின்னும், பொங்கலிடுதல் வழக்கமாக இருந்திருக்கின்றது.

    கரும்பும் அதே போல் தான். இப்பொழுதெல்லாம், தைப் பொங்கல் சமயத்தில்தான் கரும்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் சங்க காலத்தில், கரும்பு வருடம் முழுவதும் விளைந்திருக்கிறது. கரும்பும், பூவும் இல்லாமல் ஒரு பண்டிகையும் கிடையாது. 


    பொங்கல் திருநாள் புத்தாண்டு நாளா?

    பொங்கல் பண்டிகையும் தை மாதமும் எதற்குப் பெயர் பெற்றவை என்று இதுவரை பார்த்தோம். அதன்படி வருடப் பிறப்புக்கும் அவற்றுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிகிறது. 

    வானியல் அடிப்படியில் தான் சொல்கிறோம், சூரியன் வடக்குப் பயணம் துவங்கும் மகர சங்கராந்தி எனப்படும் தை முதல்நாளே வருடப் பிறப்பு என்று ஒரு வாதம் வைக்கப் படுகிறது.
     
    சூரியனின் வடக்குப் பயணம், அதற்கு முன்பே தொடங்கி விடுகிறது. 72 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு பாகை என்று சூரியன் பின்னோக்கி நகர்கிறான். அந்தக் கணக்கின்படி தற்சமயம், சூரியன் தனுர் ராசி 6-ஆம் பாகையில் வடக்கு நோக்கித் திரும்பி விடுகிறான். ஆனால் நாம் கொண்டாடும் பொங்கல் பண்டிகையும், சங்கராந்திப் பண்டிகையும் சூரியன் மகர ராசியில் பூஜ்யம் பாகையில் நுழையும் நேரத்தில் கொண்டாடப்படுகிறது. 

    சங்கராந்தி என்பது "சங்க்ரமணம்" என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து வந்தது. சங்க்ரமணம் என்றால் 'நுழைதல்' என்று பொருள். ஒவ்வொரு ராசியிலும் சூரியன் நுழையும் போது அதை சங்க்ரமணம் என்பார்கள். மேஷ சங்க்ரமணம், ரிஷப சங்க்ரமணம் என்பது போல மகர ராசியில் நுழையும் நேரம் மகர சங்க்ரமணம் எனப்படுகிறது. அதை மகர சங்கராந்தி என்கிறோம். 

    சூரியன் வட திசை நோக்கி உத்தராயணம் என்று திரும்புகிற நேரம் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் மாறுகிறது. ஆனால் ராசிக்குள் நுழையும் நேரம் எளிதில் கணிக்ககூடியது. ஒவ்வொரு ராசி சங்க்ரமணத்திற்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. இவை எல்லாம் ஜோதிடம் சம்பந்தப்பட்டது. நாம் நினைத்தாற்போல மாற்ற முடியாது.
    வருஷ பலன் வேண்டுமென்றால் மேஷ சங்க்ரமணத்தைப் பார்க்க வேண்டும். அது சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழையும் நேரம் ஆகும். அப்பொழுது இருக்கும் கிரக சூழ்நிலையைக் கொண்டு, நாடு, மக்கள், ஆள்பவர், மழை, விளைச்சல் என்று எல்லாம் கணிக்கப்படுகிறது. ஆனால் மகர சங்கராந்தியில் அந்தப் பலன்களைச் சொல்ல முடியாது. கிரகங்களுக்கு அதிபதி யார் (நீரஸாதிபதி) என்பதை மகர சங்கராந்தியில் சொல்லலாம். அந்த நேரத்தில் இருக்கும் கரணத்தைக் கொண்டு செய்யும் செயல் வெற்றி பெறுமா என்றும் சொல்லலாம். ஆனால் புத்தாண்டு இதுதான் என்று தை மாதத்துக்கு நாம் மாற்றினாலும், சித்திர வருடப்பிறப்பின் அடிப்படையிலேயே கிரகங்கள் பலன் கொடுக்கும்.


    திருவள்ளுவர் ஆண்டு.

    ஆண்டுகள், காலம் என்று சொல்வதில் சகாப்தங்கள் என்று வருகின்றன. தற்சமயம் சாலிவாஹன சகாப்தம் நடக்கிறது. அதற்கு முன் விக்ரம சகாப்தம் இருந்தது. இவையெல்லம் வட மாநில மன்னர்கள் பெயரைக் கொண்டு எழுந்தவை. அந்த மன்னர்கள் தாங்கள் பெற்ற வெற்றிக்கு அடையாளமாக, தங்கள் பெயரில் சகாப்தங்களை ஆரம்பித்தனர். எனவே தமிழர்களாகிய நாம் அந்த வட இந்திய மன்னர் பெயரில் உள்ள சகாப்தத்தைப் பின்பற்ற வேண்டுமா என்ற விவாதங்கள் வந்து, தற்சமயம், திருவள்ளுவர் பெயரில் ஆண்டுகளை அழைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.


    சகாப்தங்களின் உண்மை நிலவரத்தைப் பார்ப்போம். 'விஞ்ஞான சர்வஸ்வம்' என்னும் நூலில் இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பாரத மண்ணைச் சேர்ந்த மக்கள், பாரதீயம் அல்லாத, மற்றும் பாரதீயத்திற்கு எதிர்மாறான கொள்கைகளை உடைய அன்னிய நாட்டவரைப் படை பலத்தால் வென்றால், எந்த மன்னன் அப்படி வென்றானோ அவன் பெயரில் ஆண்டுகள் சொல்லப்படவேண்டும். அதை அந்த மன்னன் பெயரில் சகாப்தம் என்று அழைத்தனர். கலி யுகம் பிறந்தது முதல் இன்று வரை மூன்று மன்னர்கள் அவ்வாறு அன்னியர்களை வென்றிருக்கின்றனர்.


    முதலாமவர், பாரதப் போரில் வெற்றி பெற்ற பாண்டவர்களது மூத்தவரான யுதிஷ்டிரர். இந்தக் குறிப்பால், பாரதப் போரில் பாண்டவர்கள் அன்னியர்களை முறியடித்திருக்கின்றனர் என்று தெரிகிறது. கலியுகம் பிறந்தது முதல் யுதிஷ்டிர சகாப்தம் ஆரம்பித்தது.


    யுதிஷ்டிரருக்குப் பிறகு விக்கிரமாதித்யர் என்னும் அரசர் அரேபியப் பகுதிகளுக்குச் சென்று வெற்றிக் கொடி நாட்டித் திரும்பினார். 'வாலிகர்கள்' என்னும் மக்களை அவர் வெற்றி பெற்றார் என்று சொல்லும் இரும்புத் தூண் ஒன்று டில்லியில் இருக்கிறது. இது என்றுமே துருப்பிடிக்காதது. இந்த மன்னரை முன்னிட்டு விக்கிரம சகாப்தம் ஆரம்பித்து 2067 வருடங்கள் ஆகி விட்டன.

    இந்த மன்னனது பேரனான சாலிவாஹனன் மத்திய ஐரோப்பியப் பகுதியில் அன்னியர்களை முறியடித்தார். எனவே இவர் பெயரில் சாலிவாஹன சகாப்தம் இன்று வரை 1932 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்றது.

    இவருக்குப் பின் எந்த இந்திய மன்னரும் அன்னியர்களை வெல்லவில்லை. ஆனால் அப்படி ஒரு காலம் வரும் என்றும் கணித்துள்ளார்கள். அதன்படி இன்னும் மூன்று சகாப்தங்கள் பாக்கி இருக்கின்றன.

    விஷயம் இப்படி இருக்க, சாத்வீகமான திருவள்ளுவரை முன்னிட்டு வருடக் கணக்கு துவங்கி இருக்கிறார்கள். அவர் பிறந்த ஆண்டும், நாளும் யாருக்கும் தெரியாது. எல்லாம் ஒரு யூகம்தான். வள்ளுவரே இன்று இருந்திருந்தால், இப்படி வழி வழியாக இருந்த வருடக் கணக்கை மனம் போனபடி மாற்றியதோடு மட்டுமல்லாமல், தன் பெயரை உபயோகித்ததற்கும் ஆட்சேபம் தெரிவித்திருப்பார். ஏனென்றால் அவர் சாத்திர சம்பிரதாயம் தெரிந்தவர். அவை எல்லாம் இன்று மறக்கப்பட்டு விட்டன. மறக்கடிக்கப்பட்டும் விட்டன. இனியேனும் அவற்றை நாம் தெரிந்து கொள்வோம். தை பிறக்கும் நேரம் நம் அறியாமை அகலவும் வழி பிறக்கட்டும்.