Saturday, December 9, 2023

இராமன் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள்

 Earlier published in Geethacharyan 

தமிழ் நாட்டுக்கும், இராமனுக்கும் உள்ள தொடர்பு சோழர்கள் காலம் முதலே தொடங்குகிறது. சோழ மன்னர்கள் தாங்கள் மனு, அவன் மகன் இக்ஷ்வாகு முதலானோரது பரம்பரையில் வந்தவர்கள் என்று செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் எழுதி வைத்துள்ளார்கள். சுந்தர சோழச் சக்கரவர்த்தி, தனது மந்திரியான அநிருத்த பிரம்மராயருக்கு அளித்த அன்பில் தான பத்திரத்தில், திருமாலின் கண்ணொளியிலிருந்து தோன்றியவர்கள் சோழ குடும்பத்தினர் என்று எழுதியுள்ளார்.

மன்னர்கள், தங்களை தெய்வத்துக்குச் சமமாக உயர்த்திக் காட்டுவதற்கு அவ்வாறு எழுதியிருக்கலாம் என்று இதனை எளிதாகக் கடந்து போய்விட முடியாது. சோழர்கள், தாங்கள் விஷ்ணுவைப் போன்றவர்கள் என்று சொல்லிக் கொள்ளவில்லை. தாங்கள் விஷ்ணுவின் அவதாரமான இராமனின் பரம்பரையில் வந்தவர்கள் என்றே சொல்லிக் கொண்டார்கள். விஷ்ணு பரம்பரைத் தொடர்பை, மற்ற இரு தமிழ் அரசர்களான சேரரும், பாண்டியர்களும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் அவர்களும், தங்களுக்கென சில தெய்வத் தொடர்புகளைச் சொல்லிக் கொண்டார்கள்.

சேரர்கள், இந்திரனிலிருந்து வந்தவர்கள் என்பதைத் தெரிவிக்கும் வண்ணம் ‘வானவர்’ என்னும் பட்டப் பெயரால் அழைக்கப்பட்டனர் என்று மு. இராகவையங்கார் அவர்கள் பண்டைய நூல்களும், நிகண்டுகளும் குறிக்கின்றன என்கிறார். சோழ, பாண்டியர்களைப் போலல்லாமல், ஆரம்பம் எங்கே, எப்பொழுது என்று தெரியாத புராதானத்தைக் கொண்டுள்ளதால், சேரர்களை முன் வைத்து, சேர, சோழ, பாண்டியர் என்று சொல்லும் வழக்கமும் வந்துள்ளது என்கிறார் அவர்.

பாண்டியர்கள், தாங்கள் தடாதகைப் பிராட்டி எனப்படும் மீனாக்ஷி அம்மையின் வழி வந்தவர்கள் என்றும், அதனால், தங்களைக் ‘கௌரியர்’ என்று அழைத்துக் கொண்டும், சிவ பெருமானின் அருளைப் பெற்றவர்கள் என்றும் சொல்லிக் கொண்டனர். எனினும், நாட்டைக் காக்கும் மன்னர் என்னும் போது, காக்கும் கடவுளான திருமால் அம்சமாகத் தங்களைச் சொல்லிக் கொண்ட பாண்டிய மன்னர் ஒருவருண்டு. அவரே, பெரியாழ்வார் பாடல்களில் காணப்படும் கோன் நெடுமாறன். இமய மலையின் பருப்பத சிகரத்தில் (அமர்நாத் சிகரம்) கயல் பொறித்ததும் அந்த மன்னன்தான். அந்த மன்னனது விஷ்ணு பக்தியைப் பற்றி வேறொரு கட்டுரையில் பார்ப்போம். இங்கு சொல்ல வருவது, பாண்டியர்களது வம்சாவளி, மீனாக்ஷி தேவியிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதே.

சேர, சோழ, பாண்டியர்களில் சோழர்கள் மட்டுமே தங்களை இக்ஷ்வாகு பரம்பரையில் வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டனர். இதுவரை நமக்குக் கிடைத்துள்ள செப்பேடு, கல்வெட்டு போன்றவற்றுள் நான்கு சாசனங்கள் சோழ வம்ச பரம்பரையைப் பட்டியலிடுகின்றன. அவை, சுந்தரசோழன் அளித்த அன்பில் செப்பேடுகள், முதலாம் இராஜேந்திர சோழன் பெயரில் உள்ள லேடன் செப்பேடுகள், முதலாம் இராஜேந்திரன் அளித்த திருவாலங்காடு செப்பேடுகள் மற்றும் வீரராஜேந்திர சோழனது கன்யாகுமரி கல்வெட்டு.

சோழ பரம்பரையில் பரதனும், சிபியும், இராமனும்

இவை கொடுக்கும் வம்சாவளியின் ஆரம்ப கால அரசர்கள், வால்மீகி இராமாயணத்தில், இராமரது திருமணத்தின் போது வசிஷ்டரால் சொல்லப்படும் இராம வம்சாவளியை ஒத்திருக்கிறது. மாந்தாதா வரை ஒரே வம்சாவளிதான். மாந்தாதாவுக்குப் பிறகு, இராஜேந்திரன் செப்பேடுகளில் முசுகுந்தன் வருகிறான். அங்கிருந்து தொடரும் பெயர்கள் சிபிச் கக்கரவர்த்தியில் முடிகிறது. சிபிக்குப் பிறகு சோழ வர்மன் வருகிறான். இராஜேந்திரன் செப்பேட்டில், சிபிக்குப் பிறகு, மருத்தன், துஷ்யந்தன், அவனுக்கும், சகுந்தலைக்கும் பிறந்த பரதன், அவனது மகனாக சோழ வர்மன் குறிக்கப்பட்டுள்ளான்.


                                                          திருவாலங்காடு செப்பேடுகள்

இராஜேந்திரனது மகனான வீரராஜேந்திரன் கன்யாகுமரி அம்மனது கோயில் தூண்களில் செதுக்கியுள்ள சாசனத்தில்,  பிரம்மா, மரீசி, கஸ்யபர், வைவஸ்வதர், மனு, இக்ஷ்வாகு என்று ஆரம்பித்து, ஹரிசந்திரன், சகரன், பாகீரதன் என்று தொடர்ந்து, இராமன் வரை பட்டியல் நீள்கிறது. ராமனை நான்கு பாடல்களில் புகழ்ந்து, அதன்பின், அப்படிப்பட்ட ராமனது குடும்பத்தில் சோழன் என்னும் பெயர் கொண்டவன் பிறந்தான். அவனே சோழ ராஜ்ஜியத்தை நிறுவினான் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் சிபியின் பெயர் சொல்லப்படவில்லை. இந்த ஒரு கல்வெட்டில்தான் நேரிடையாக இராமனது சம்பந்தமும் சொல்லப்பட்டுள்ளது.

சம்ஸ்க்ருதத்தில் வம்சாவளிப் பெயர்கள்

இந்த நான்கு சாசனக்களில் காணப்படும் வம்சாவளி சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டுள்ளன. நான்குமே, அடுத்தடுத்த நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த மன்னர்களது ஆணையால் 10 மற்றும் 11-ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை. இந்த காரணங்களால் இவை உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்ற மறுப்பும் எழ வாய்ப்பிருக்கிறது. அத்துடன், சிபிக்கும், இராமனுக்கும் என்ன சம்பந்தம்; இந்த இருவரிடமிருந்தும் சோழ பரம்பரை வந்துள்ளது என்று எதைக் கொண்டு சொன்னார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

இவற்றுக்கு பதில் தேடுகையில், அரசர்களது ஒப்புதல் இல்லாமல் இந்த வம்சாவளிகளை யாரும் எழுதியிருக்க முடியாது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதே நேரம், அரசர்களும், பொய்யான பரம்பரையை எழுதிக் கொண்டிருக்க முடியாது. அதிலும், உலகம் புகழும் சிவாலயத்தைத் தஞ்சையில் எழுப்பிய முதலாம் இராஜராஜன் போன்ற அரசர்கள் இக்ஷ்வாகு வம்சத் தொடர்பு இல்லாமல், அந்த வம்சத்திலிருந்துதான் தான்  தோன்றியதாக ஒரு பொய்யுரையைப் பரப்பியிருக்க முடியாது.

சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டிருப்பதாலேயே இந்த வம்சாவளியை யாரோ புகுத்தியிருக்கிறார்கள் என்று சொல்வதும் ஏற்புடையது அல்ல. சோழர்கள் மட்டுமல்ல, பாண்டியர்களும், சம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ் என்று இரு மொழிகளிலுமே சாசனங்களை அளித்துள்ளனர். குறிப்பாக வம்சாவளியைச் சொல்லுமிடத்தில் சம்ஸ்க்ருத மொழியைப் பயன்படுத்தி இருப்பதை பாண்டியர்களது சின்னமனூர், வேள்விக்குடி செப்பேடுகள் போன்ற பல சாசனங்களில் பார்க்கிறோம். (தானப் பகுதி மட்டுமே தமிழில் இருக்கும்)  சம்ஸ்க்ருதம் பாரத தேசம் முழுவதும் பரவலாக அறியப்பட்டிருந்ததால், அந்த மொழியில் எழுதப்படும் வம்சாவளியை நாடு முழுவதுமுள்ள மக்கள் அறிந்து கொள்ள உதவும் என்பதே இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

மேலும், சம்ஸ்க்ருதம் என்பது, வடசொல் என்னும் பெயரில் தமிழின் ஒரு அங்கமாக உள்ளது என்று தொல்காப்பியம் கூறுவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் (சொல்லதிகாரம், சூத்ரம்: 401, 402). சம்ஸ்க்ருதமும், தமிழும் ஒன்றாக உருவாக்கப்பட்டவை என்பதே தமிழ்ச் சங்கம் மூலம் பாண்டியர்கள் தமிழ் வளர்த்த பாங்கினைக் கூறும் திருவிளயாடல் புராணம் தரும் செய்தி. அதுவே வைணவம் வலியுறுத்தும் கருத்தும் ஆகும். வடவேங்கடம் முதல் தென் குமரி வரை என்று மங்கல திசையான வடக்கில் ஆரம்பித்து, பிறகு தெற்குத் திசையைத் தொல்காப்பியம் சொன்னதற்கு ஒப்ப, தமிழ் அரசர்களும், வடசொல்லில் தங்கள் குலப் பெருமையைப் பகர்ந்துவிட்டு, பிறகு தென் சொல்லாம் தமிழ்ச் சொல்லில் உலகியல் விவகாரங்களை எழுதியுள்ளார்கள். 

சம்ஸ்க்ருதப் புலமை உள்ளவர்கள்தான் அந்தப் பகுதியை எழுதியுள்ளார்கள் என்பதை, எழுதியவர் தன்னைப் பற்றி அந்தந்த சாசனங்களிலேயே குறிப்பிட்டு இருப்பதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் அதைத் தான்தோன்றித்தனமாக எழுதியிருக்க முடியாது. அரசனது ஒப்புதலோடும், அரசனது வழிகாட்டுதலோடும்தான் எழுதியிருக்க முடியும். அந்த அரசர்களும் வழிவழியாகச் சொல்லப்பட்ட வம்ச பரம்பரைக் கருத்துக்களது அடிப்படையில்தான் அவற்றை ஏற்றுக் கொண்டிருக்க முடியும். இல்லையென்றால், தந்தையான முதலாம் இராஜராஜன், சிபிச் சக்கரவர்த்தியிலிருந்து வந்தவன் முதல் சோழன் என்று சொல்ல, தனயனான முதலாம் இராஜேந்திரன், துஷ்யந்தனது மகனான பரதனுக்குப் பிறந்தவன் தான் முதல் சோழன் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவனது மகனான வீரராஜேந்திரன், அந்த முதல் சோழன் இராமனது குடும்பத்தில் வந்தவன் என்று எவ்வாறு சொல்லியிருக்க முடியும்.

முதலாம் இராஜேந்திரன்

இதன் மூலம் தெரிவது என்னவென்றால், துஷ்யந்தன் மகனான பரதனுக்கும், சிபிக்கும், இராமனுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. தற்காலச் சிந்தனையில் சொல்வதென்றால், இவர்கள் மூவருமே ஒரே மரபணுவைக் கொண்டவர்கள், அதாவது தந்தை வழியில் ஒரே வம்சத்தில் தோன்றியவர்கள் என்று 11 ஆம் நூற்றாண்டு வரை தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதே. அந்தத் தொடர்பு என்ன?

முதல் சோழனின் தந்தையான பரதன்

முதலில் பரதனது மகன், சோழ வர்மன் என்னும் திருவாலங்காடு செப்பேட்டு விவரத்தை ஆய்வோம். துஷ்யந்தனது மகனான பரதனுக்கு மூன்று மனைவியர் என்றும், அவர்கள் மூலம் மொத்தம் ஒன்பது மகன்கள் பிறந்தனர் என்பதும் விஷ்ணு புராணம் சொல்லும் செய்தி. அந்த ஒன்பது மகன்களும் தன்னைப் போல இல்லை என்று பரதன் சொன்னதாகவும், அதன் காரணமாக அந்த மனைவியர், அந்த ஒன்பது மகன்களையும் கொன்றுவிட்டதாகவும் விஷ்ணு புராணம் கூறுகிறது (வி.புரா: 4-19). பரதனுக்குப் பிறந்தவன்தான் சோழவர்மன் என்று திருவாலங்காடு செப்பேடு சொல்வதன் மூலம், அவன் அந்த மகன்களுள் ஒருவன் என்று தெரிகிறது.

அவன் தன் பெற்றோரைவிட்டு நீங்கி, தென் திசை நோக்கிப் பயணம் செய்து பூம்புகாரை வந்தடைந்திருக்கிறான். இந்தப் பயணத்தை, கன்யாகுமரி கல்வெட்டு விவரிக்கிறது. அவனைப் போலவே பரதனது மற்ற மகன்களும் எங்கெங்கோ சென்று தங்கள் பரம்பரையை வளர்த்திருக்கக் கூடும். பரதனது மகன்கள், தங்கள் தாய்மார்களால் கொல்லப்பட்டார்கள் என்பது ஒரு பேச்சுக்காகத்தான் என்று தெரிகிறது. அவர்கள் அனைவருமே பரதனைவிட்டு நீங்கினார்கள் என்பதை அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்.

சோழன், சிபிச் சக்கரவர்த்தியின் மகனானது எப்படி?

சோழவர்மன் பரதனது மகன் என்பது உண்மையென்றால், அவனே எப்படி சிபிச் சக்கரவர்த்திக்கும் மகனாக இருந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. சிபியை முன்னிட்டே, சோழர்களுக்கு, செம்பியன் என்ற பெயர் ஏற்பட்டது. இதை, சங்க நூல்களும் தெரிவிக்கின்றன.

சிபி யாரென்று பார்த்தால், அவன், பரதனது தந்தை வழிப் பாட்டனாருடைய சகோதரன் வழித் தோன்றலாகிறான். இதன் ஆரம்பம் ஐந்து சகோதரர்களில் இருக்கிறது. யது, துர்வஸு, த்ருஹ்யு, அநு, புரு என்னும் ஐந்து சகோதரர்களில், புருவில் வம்சத்தில் வந்தவன் துஷ்யந்தன். அவனை, புருவின் சகோதரனான துர்வஸுவின் வம்சத்தில் வந்த மருத்தன் தத்து எடுத்துக் கொள்கிறான் (வி.புரா. 4-16). மற்றொரு சகோதரனான அநுவின் வம்சத்தில் வந்த உசீனரனது மகன் சிபி ஆவான். ஆக, இவர்கள் எல்லோருமே, ஒரே தகப்பனுக்குப் பிறந்த மகன்கள் வழியில் வந்த பங்காளிகள்.

இவர்களுள், துஷ்யந்தனது மகனான பரதனுக்குப் பிறந்த சோழவர்மன், சிபிக்கு மகனாவான் என்று சொல்லப்பட்டுள்ளதால், சிற்றப்பன் வழி வந்த சிபி அல்லது அவன் குடும்பத்தினர் அவனை ஸ்வீகாரம் செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. பரதன் அவனைக் கைவிட்டுவிடவே, பரதனைப் பற்றி சோழ வம்சத்தினர் பெருமைப்பட்டுக் கொண்டதில்லை. சிபியைப் பற்றி மட்டுமே, அதிலும் அவன் புறாவுக்காக தன் தசையையே அரிந்து கொடுத்த செயலைப்பற்றிதான் சொல்லிக் கொண்டார்கள். அவ்வாறுதான் சங்கப் புலவர்கள் பாடியுள்ளார்கள். ஆனால், பரதனது தொடர்பை, திருவாலங்காடு செப்பேடு மட்டுமே தெரிவிக்கிறது. அதன் மூலம், வரலாற்றில் வேறு எங்கும் பதிவு செய்யப்படாத, மேற்சொன்ன விவரங்களும் தெரியவருகின்றன.

சோழனுக்கு இராமனுடனான தொடர்பு

பரதன் – சிபி ஆகியோருடனான சோழவர்மன் தொடர்பு, இராமனுடனும் எவ்வாறு தொடர்கிறது? இங்குதான் அந்த ஐந்து சகோதரர்களது தந்தையான யயாதி வருகிறார். யயாதியின் கதை பலரும் அறிந்ததே. ஆனால் அந்த யயாதி இராமனது முன்னோன் என்பது பலரும் அறியாதது. வால்மீகி இராமாயணத்தில் (1-70-42), இராமரது திருமணத்தின்போது வசிஷ்டரால் சொல்லப்படும் இராம வம்சாவளியில், நஹுஷன், அவன் மகன் யயாதி ஆகியோரது பெயர்கள் வருவதால், இராமனுக்கும், யயாதிக்கும் நேரடி மரபணுத் தொடர்பு இருக்கிறது புலனாகிறது.

அதே வால்மீகி இராமாயணத்தில், பரதனுடன் காட்டுக்குச் சென்று இராமனைத் திரும்பி வருமாறு அழைக்கும் கட்டத்திலும், வசிஷ்டர் இராம வம்சாவளியைச் சொல்கிறார். இராமனது பரம்பரையில் மூத்த மகன்தான் அரசுரிமை பெறுகிறான் என்று சொல்லும் போது, இன்னாருடைய மூத்த மகன் இன்னார் அரசரானார்கள் என்று வரிசையாக வசிஷ்டர் பட்டியலிடும்போது யயாதியின் பெயரைச் சொல்லவில்லை. நஹுஷனுக்குப் பிறகு அவனது மகனான நாபாகன் அயோத்தி அரசனானான் என்கிறார் (2-110-32).  இதன் மூலம் யயாதி மூத்த மகன் அல்லன் என்று தெரிகிறது.

மேலும், விஷ்ணு புராணத்தில் (4-6), அவன் சந்திர குலத்தில் வந்தவனாகச் சொல்லப்படுகிறான். இந்த குலத்தினர், இக்ஷ்வாகுவின் மூத்த சகோதரியான இலாவின் வழிவந்தவர்கள். இந்த குலத்திலும், நஹுஷன்- யயாதி என்பவர்கள் தந்தை-மகனாகச் சொல்லப் பட்டிருப்பது வினோதமாக இருக்கிறது. பரதன், சிபி, இராமன் என அனைவர் தொடர்பையும் சோழர்கள் சொல்லுவதால், இந்த யயாதி, சூரிய வம்சமான இக்ஷ்வாகு குலத்தில் பிறந்து சந்திர குலத்துக்குத் தத்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவன் மகன்களுக்குப் பிறந்தவர்கள் பரதனும், சிபியும். இந்த வகையில் இவர்கள் இருவரும், இராமனுடன் ஒரே மரபணுத் தொடர்பில் வருகிறார்கள். இதனால் சோழர்கள் பரம்பரையில் இம்மூவரும் வருகிறார்கள்.

இராமன் குலதனம் சோழர்களுக்கு

இராமனது பரம்பரையுடன் தொடர்பு இருந்ததால், பட்டாபிஷேகத்தின் போது இராமனால் விபீஷணனுக்குக் கொடுக்கப்பட்ட ‘குலதனம்’, சோழர்களிடம் சேர்ப்பிப்பதற்காக இருந்திருக்கலாம்.  பட்டாபிஷேகம் முடிந்து 'குலதனத்துடன்' விபீஷணன் திரும்புகிறான் (வா.இரா. 6-128 -90). இராமன் வைகுந்தம் செல்லத் தயாராகும் போது விபீஷணனிடம் இக்ஷ்வாகு குல தெய்வமான  'ஜெகந்நாதனை' வழிபடுமாறு இராமன் சொல்கிறான். (வா.இரா 7-121)

இதற்கு முன்னால் இராமன் விஷ்ணுவை வழிபடுவதைப் பற்றி வால்மீகி கூறுகிறார். தசரதன் ஏற்பாடு செய்த பட்டாபிஷேகத்தை முன்னிட்டு அதற்கு முந்தின தினம், இராமனும், சீதையும், அவர்களது வீட்டில் சில நியமங்கள், பூஜைகளை செய்கிறார்கள். அப்பொழுது விஷ்ணுவை வழிபட்டார்கள் என்றும் விஷ்ணுவை முன்னிட்டு ஹோமம் செய்தார்கள் என்றும், அதன் பிறகு விஷ்ணுவின் இருப்பிடத்தில் (கோயிலில்) குஶப் புல்லாலான பாயில் படுத்துறங்கினார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. (வா.இரா 2-6) எனவே ராமன் தனக்கென்று விஷ்ணு விக்ரஹத்தை வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

Sri Ranganatha (Kula Dhanam) 

அந்த விக்ரஹமே குலதனம் என்றால், யாராவது அதை மற்றவர்களுக்குக் கொடுப்பார்களா என்ற கேள்வி வருகிறது. விபீஷணனுக்காக கொடுக்கப்பட்டதென்றால், அவன் ஏன் அதை காவிரியின் நடுவில் விட்டு விட்டுச் செல்ல வேண்டும்? தன் இருப்பிடத்துக்கு (இலங்கைக்கு) எடுத்துச் செல்வதுதானே யாரும் செய்யக்கூடியது?

அவனது இருப்பிடமான இலங்கைக்குச் செல்லும் வழியில், சோழ ராஜ்ஜியம் இருப்பதாலும், திடீரென்று ஏற்பாடு செய்த பட்டாபிஷேகத்துக்கு சோழர்கள் வரமுடியவில்லை என்பதாலும், இராமன் தன் பரிசாக, தான் வழிபட்ட பெருமாளை, தன் குலத்தில் வந்தவர்களான சோழர்களுக்கு அளிக்க, விபீஷணனைப் பணித்தானோ என்று எண்ண இடமிருக்கிறது. இதற்கு வலு சேர்க்கும் வகையில், விபீஷ்ணன் பெருமாளை சோழ நாட்டில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறான். சோழர்களும், ஸ்ரீரங்கநாதரைத் தங்கள் ‘குலதனம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்ரீரங்கம் கோயிலின் வெள்ளைக் கோபுரத்தின் உட்சுவரில் காணப்படும் மூன்றாம் குலோத்துங்கன் காலக் கல்வெட்டில், “குலோத்துங்க சோழ தேவர்க்குக் குலதனமாய் வருகிற கோயிலில்” என்று ஸ்ரீரங்கம் கோயிலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது (SII Vol 24, No. 133, A.R. No. 89 of 1936-37) அந்த அரசனோ சைவத்தில் பற்று கொண்டவன். அவனுக்குக் குலதனமாகக் கிடைத்த கோயில் என்று எழுதப்பட்டுள்ளதால், இந்தப் பெருமாள் இராமனது குலதனமாக சோழர்களுக்குக் கிடைத்தவர் என்று அறிகிறோம். சோழர்களைத்  தன்னுடைய வம்சாவளியினர் என்று இராமன் நினைத்திருக்கவேதான், தான் வழிபட்ட மூர்த்தியை, தன்னுடைய குலதனமாக, சோழர்களுக்கு, விபீஷணன் மூலமாகக் கொடுத்திருக்கிறான்.


மூன்றாம் குலத்துங்க சோழன் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். எனவே இராமனது தொடர்பு என்பது பின்னாளில் இவர்களாகவே கற்பனை செய்துக் கொண்டது என்று யாரேனும் மறுப்பு சொல்லலாம். இராமனது தொடர்பு பின்னாளில் ‘கண்டுபிடித்த’தல்ல. சங்கப் புலவர்களும் இராமனை, சோழர்களது முன்னோன் என்று சொல்லியிருக்கிறார்கள். அவற்றையும் நாம் விவரிப்போம்.