Sunday, December 31, 2023

இராவணனது இலங்கை எது?

Earlier published in Geethacharyan Monthly.

 Previous article to be read here to have continuity

இராமாவதாரத்தின் முக்கிய நோக்கமே இராவண வதம்தான். இராவணனை அவனுடைய இருப்பிடத்துக்கே சென்று அழித்தான் இராமன். அந்த இடம் இராவணனுடைய நகரமான இலங்கை. அது எங்கிருக்கிறது? இது நாள் வரை அது எங்கே இருக்கிறது என்ற சந்தேகமே எழவில்லை. தனுஷ்கோடியிலிருந்து ஆரம்பிக்கும் சேதுக் கரையைக் கடந்தால் எதிர்ப்புறம் இருக்கும் ஸ்ரீலங்காவில்தான் இராவணனது இலங்கை இருந்தது என்றுதான் சொல்லி வந்தார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகு, ‘ஆராய்ச்சி’ என்ற போர்வையில் இராமாயணம் நிகழ்ந்தது என்பதையும் நம்ப மறுத்தார்கள்; இராவணன் வாழ்ந்த இலங்கை, இன்றைய இலங்கைதான் என்பதையும் ஏற்க மறுத்தார்கள். ஆங்கிலேயர்களைப் பின்பற்றி நம் நாட்டவர்களும் ஆராயத் தொடங்கி, இராமாயணம் உண்மையாக நடந்த ஒரு வரலாறு என்பதை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உழன்றனர். வேறு சிலர், இராமாயணம் உண்மைதான், ஆனால் இலங்கை, இன்றைய இலங்கையல்ல என்று தாங்களும் குழம்பி, மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே எங்கே இலங்கை, எது இராவணன் இலங்கை என்பதை நிறுவுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இந்தக் குழப்பங்களுக்கு முக்கியக் காரணங்கள் மூன்று. அவை ஒவ்வொன்றையும் ஆராய்வோம்.

1. பாரத தேசத்திலேயே பல இலங்கைகள்

நம் நாட்டிலேயே இலங்கை என்ற பெயருடன் பல இடங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இராவணனது இலங்கையாக இருக்க வேண்டும் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  அப்படி சொல்லப்படும் இலங்கையில் ஒன்று, ஒரிஸா மாநிலத்தில் ஸோன்பூர் என்னுமிடத்தில் மஹாநதியின் நடுவில் ஒரு மலையின் மீது ‘லங்கேஸ்வரி’ என்னும் கோயிலாக அமைந்துள்ளது. ஒரு காலத்தில் ஸோன்பூரை ‘பஸ்சிம லங்கை’ என்றே அழைத்தார்கள் என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

லங்கேஸ்வரி

இன்னும் சிலர், மத்திய பிரதேசத்திலிருக்கும் ஜபல்பூரின் அருகே உள்ள ‘இந்திராணா’ மலையே இலங்கை என்றும் கூறுகின்றனர். இது நர்மதை ஆற்றின் நடுவே அமைந்துள்ளது.

வேறு சிலர், நர்மதை நதி ஆரம்பிக்கும் இடமான ‘அமர்கண்டக்’ மலையே இராவணனது இலங்கையாக இருக்க வேண்டும் என்கின்றனர். மற்றும் சிலர் மத்திய பிரதேசத்திலுள்ள ‘பஸ்தர்’ (Bastar) என்னுமிடமே இலங்கை என்கின்றனர்.

இன்னொரு இடம், குஜராத் கரையோரமுள்ள ‘பகத்ரவ்’ (Bhagatrav) என்னுமிடம். இராமாயணத்தில் தென்கடல் என்று சொல்லியிருப்பது குஜராத்தின் தெற்கிலுள்ள அரபிக் கடல் என்னும் எண்ணத்தில் இந்த இடத்தையும் ஆராய்ச்சியாளர்கள் விட்டுவைக்கவில்லை.

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் இராவணனை வழிபடுகிறார்கள். இந்த இடங்களில் பல இடங்கள் இலங்கை என்ற பெயருடன் முடிகின்றன. எனவே இராவணன் இந்தப் பகுதியில்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது மற்றும் சிலரது கருத்து.

ஸ்ரீலங்காவைத் தவிர, மற்ற இடங்களில் எல்லாம் இலங்கையைக் கண்டுவிட்டார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

2. நூறு யோஜனைத் தொலைவில் இலங்கை

இவ்வாறு இலங்கையை பாரத தேசத்துக்குள்ளேயே தேடுவதற்கு ஒரு காரணமாக, சம்பாதி சொல்லும் விவரத்தை ஆராய்ச்சியாளர்கள் காட்டுகிறார்கள். சீதையைத் தேடிக் கிடைக்காமல், நம்பிக்கை இழந்த நிலையில் அங்கதன் முதலான வானரர்கள் இருந்த போது, சம்பாதியை விந்திய மலைச் சாரலில் சந்தித்தனர். இராவணன், சீதையை அபகரித்துச் சென்றதைக் கண்டதாகச் சொல்லும் சம்பாதி, இராவணனது நகரமான இலங்கை, அந்த இடத்திலிருந்து நூறு யோஜனைத் தொலைவில் உள்ளது என்கிறான் (வா.இரா: 4-58-20).

ஒரு யோஜனை என்பது 8 மைல்கள் என்று எடுத்துக் கொண்டு, விந்திய மலையிலிருந்து 800 மைல் தொலைவில் இலங்கை இருப்பதாக அவன் சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டு, அதை விட அதிக தூரத்தில் ஸ்ரீலங்கா இருக்கவே, விந்திய மலைக்கு அருகிலேயே எங்கோ இலங்கை இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

3. பூமத்திய ரேகையின் மீது இலங்கை

மூன்றாவதாக, இலங்கை என்பது வானசாஸ்திரத்தில் பூமத்திய ரேகை மீது உள்ளதாகக் கூறப்படுகிறது. சூரிய சித்தாந்தம், சிந்தாந்த சிரோமணி போன்ற வான சாஸ்திர நூல்கள், பூமியின் அச்சு, குருக்ஷேத்திரம், உஜ்ஜயினி ஆகியவற்றையும், பூமத்தியரேகையில் உள்ள இலங்கையையும் ஒரே நேர்க் கோட்டில் இணைக்கிறது என்று சொல்வதால் ஸ்ரீலங்கா இலங்கை அல்ல என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.

இவர்கள் காட்டும் இன்னொரு காரணம், கடலைக் கடக்க சேதுவை உருவாக்கினபோது, அது 100 யோஜனை தூரம் கட்டப்பட்டது என்று இராமாயணம் சொல்கிறது (வா.இரா: 6-22). அது 800 மைல்களுக்குச் சமானம். ஆனால் இராமர் சேது 30 கிலோமீட்டர் நீளமே உள்ளது. எனவே அது இராமாயணம் சொன்ன சேது அல்ல என்றும், அது இணைக்கும் ஸ்ரீலங்கா, இலங்கையுமல்ல என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இப்படிச் சொல்பவர்கள் இலங்கை என்று காட்டுமிடம், பாரதத்தின் தென் முனையிலிருந்து, இந்தியப் பெருங்கடலில் 800 மைல் தொலைவில் இலங்கை இருந்திருக்க வேண்டும் என்பதே. அங்கு ஆழமான கடல்தான் இருக்கிறது. ஆனால் அங்குதான் இலங்கை இருந்திருக்க வேண்டும் என்றும் அது கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்றும் இந்தத் தரப்பினர் சாதிக்கிறார்கள்.

இந்தக் கருத்துக்கள் ஏற்கத்தக்கவையா என்று பார்ப்போம்.

இலங்கை என்பதன் அர்த்தம்.

பல இடங்கள் இலங்கை என்று ஏன் அழைக்கப்படுகின்றன என்று நாம் யோசிக்க வேண்டும். இலங்கை என்பது ‘ஆற்றிடைக்குறை’ என்று அகராதிகளும், நிகண்டுகளும் கூறுகின்றன. ஒரு ஆறுக்கு நடுவே மேடிட்ட பகுதிக்கு ஆற்றிடைக் குறை என்று பெயர். அது தீவு போல இருக்கும்.

இலங்கையும் துருத்தியும் எனவரும் பெயரோ(டு)

அரங்கமும், ஆற்றிடைக் குறையென வறைவர்

என்று சேந்தன் திவாகர நிகண்டும்,

“இலங்கை அரங்கம் துருத்தி, ஆற்றிடைக் குறை

என்று பிங்கல நிகண்டும் தெரிவிக்கின்றன.

இலங்கை என்ற சொல் மட்டுமல்ல, அரங்கம் என்ற சொல்லும் ஆற்றிடைக் குறை என்பதைக் குறிக்கும் என்று கூறப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றின் நடுவே மேட்டில் பெரிய கோயில் அமைந்துள்ள இடத்தைத் ‘திருவரங்கம்’ என்கிறோம் என்பது நிகண்டுகள் காட்டும் கருத்து. எந்த ஆற்றுக்கு நடுவிலும் மேடிட்டிருந்தாலும், அல்லது நிலம் இருந்தாலும் அது இலங்கை எனப்படும் என்பதும் நிகண்டுகள் மூலம் நமக்குத் தெரிகிறது.

‘லங்கேஸ்வரி’ மஹாநதியின் நடுவில் ஒரு மலை மீது இருக்கவே அந்தப் பெயரைப் பெற்றிருக்கிறது. அங்குள்ள சோன்பூருக்கு பஸ்சிம இலங்கை என்னும் பெயர் இருந்தது என்றால், மேற்கு இலங்கை என்று அர்த்தம். இலங்கை மேற்கில் இருந்ததாக இராமாயணம் சொல்லவில்லை. ‘தென்னிலங்கை’ என்றுதான் ஆழ்வார்களும் இருபத்தைந்து பாசுரங்களில் சொல்லியிருக்க, மேற்கிலங்கை இராவணனது இலங்கையாக இருக்க முடியாது.

அதைப் போலவே, இந்திராணா, அமர்கண்டக் போன்ற மற்ற இடங்கள் எல்லாமே ‘இலங்கை’ என்னும் ஆற்றிடைக் குறை அமைப்புக்குள் வந்துவிடுகின்றன. நர்மதையில் பல இலங்கைகள் இருப்பதாகச் சொல்லப்படும் அனைத்துமே ஆற்றின் நடுவே இருப்பவைதான். கோதாவரி ஆற்றின் மத்தியிலும், இலங்கைகள் உள்ளன. இந்தப் பெயரின் ஆரம்பத்தைத் தேடினால் இது, பழங்குடியின மக்களான ‘முண்டர்’ (Munda) என்பவர்கள் மொழியில் இருப்பது தெரிகிறது. ஆற்றிடைக் குறை, தீவு, ஏரிக்கு நடுவில் உள்ள அமைப்பு, சமவெளிப் பகுதியில் தனியாக நிற்கும் ஒரு மலை ஆகியவற்றை இலங்கை என்று அந்த மக்கள் அழைக்கிறார்கள். எனவே பாரதம் முழுவதும், ஆங்காங்கே இலங்கைகள் இருந்திருக்கின்றன.

நூறு என்னும் எண்ணின் பொதுத் தன்மை

அடுத்ததாக சம்பாதி சொன்ன நூறு யோஜனை தூரம், சம்பாதியின் வாக்கிலேயே மீண்டும் வருகிறது. ஆனால் இப்பொழுது சமுத்திரத்தில் நூறு யோஜனை தூரம் செல்லவேண்டும் என்று சொல்கிறான் (வா;இரா: 4-58-24). விந்திய மலையிலிருந்து நூறு யோஜனையில் இலங்கை இருக்கிறது என்ற சொன்ன ஓரிரு வரிகளுக்குப் பிறகு,  சமுத்திரத்தைக் கடக்க நூறு யோஜனை செல்ல வேண்டும் என்கிறான். ஒரே பேச்சிலேயே, இரண்டுவிதமாக நூறு யோஜனை என்பதை ஸம்பாதி சொல்வதன் மூலம், அது  பொதுப்படையாக சொல்லப்படும் எண் என்று தெரிகிறது.  

நூறு யோஜனைப் பேச்சு அனுமன் சமுத்திரத்தைத் தாண்டும்போதும் வருகிறது. இங்கு சமுத்ரராஜன், மைனாக மலையிடம் அனுமன் இளைப்பாற இடம் கொடுக்கச் சொல்கிறான். அப்பொழுது அவன் சொல்வது – நூறு யோஜனை கடந்தபின் அனுமன் இளைப்பாற நீ இடம் கொடு; அதன் பிறகு அவன் மீதி தூரத்தைக் கடக்கட்டும் - என்று நூறு யோஜனை முடிந்த பிறகு என்று இளைப்பாறட்டும் என்கிறான். ஆனால் தாண்ட வேண்டிய தூரம் நூறு யோஜனை மட்டுமே என்று சம்பாதியும் சொல்லியிருக்கிறான். கடலைத் தாண்டியபிறகு நூறு யோஜனை தூரம் அனுமன் தாண்டினான் என்று வால்மீகியும் சொல்கிறார் (வா.இரா: 5-1-200).

இதற்கிடையில் அனுமனை இடைமறித்த சுரஸா என்னும் நாக மாதாவின் வாயில் புகுந்து புறப்பட, அனுமன் 90 யோஜனை அளவு தன் உடலைப் பெரிதாக்கிக் கொண்டான் என்றும் சொல்லப்படவே (வா.இரா: 5-1-166) அப்படியே, கடலைத் தாண்டி இருக்கலாமே என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? எனவே நூறு என்ற அளவு, பெரிய அளவைக் குறிக்கப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. சீதையும், அனுமனைப் பார்க்கும்போது, ஒருவன் பிழைத்து மாத்திரம் இருந்தால், நூறு வருஷங்களுக்குப் பிறகாவது ஸந்தோஷத்தை அனுபவிக்காமல் இருக்க மாட்டான் என்று நூறு என்பதை ஒரு பெரிய அளவீடாகக் கூறுகிறாள் (வா.இரா: 5-34-6). எனவே நூறு யோஜனை என்பதைக் கொண்டு இலங்கை இருக்கும் பகுதியை நிர்ணயிக்கக்கூடாது.

வான சாஸ்திரத்தில் இலங்கை

நாம் ஏற்கெனெவே இலங்கை என்பதன் பொருள் என்ன என்று குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், பூமத்திய ரேகைப் பகுதியில் ஒரு அமைப்பு இருந்திருக்க வேண்டும். உலக வரைபடத்தில், குருக்ஷேத்திரத்தையும், உஜ்ஜயினியையும் இணத்து ஒரு நேர்க்கோடு வரைந்தால், அது பூமத்திய ரேகையைத் தொடும் இடத்தில் மாலதீவுக் கூட்டம் இருக்கிறது. பூமியின் அச்சு செல்லுமிடத்தில் இன்று நிலம் இல்லை. கடல் நீர்தான் இருக்கிறது. ஆனால் அந்த இடத்தைச் சுற்றி மாலத்தீவின் தீவுப் பகுதிகள் இருக்கின்றன.


இராஜராஜ சோழன் கல்வெட்டில் காணப்படும் பழந்தீவு பன்னீராயிரம் என்பது மாலத்தீவாகத்தான் இருக்க வேண்டும். அவன் காலத்திலும், அதற்கு முன்பும் பல ஆயிரக்கணக்கான தீவுகள் இருந்திருக்க வேண்டும். அவற்றுள் ஒன்று பூமியின் அச்சு செல்லும் இலங்கையாக இருந்திருக்க வேண்டும். இன்று பன்னிரெண்டாயிரம் தீவுகள் இல்லை. ஆயிரத்து இருநூறுக்கும்  குறைவான தீவுகளே உள்ளன.

மாலத்தீவு, அதன் தலைநகரம் மாலே போன்ற பெயர்களைப் பார்க்கும்போது, அந்த இடங்கள், இராவணனது தாய்வழிப் பாட்டனான சுமாலியின் தம்பி மாலியின் பெயரை ஒத்திருக்கிறது. சுமாலி என்ற பெயருக்கு ஒத்தாற்போல சோமாலியா என்னும் நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில், மாலத்தீவுக்கு மேற்கே சிறிது தொலைவில் இருக்கிறது. அந்தப் பகுதிகளிலிருந்து, ஸ்ரீலங்கா பகுதியில் இருந்த இலங்கையில் வாழ்ந்த புலஸ்தியருக்குத் தங்கள் மகளான கைகசியை மணம் செய்து வைத்தனர் என்பது பொருத்தமாகவே இருக்கிறது. எனவே இராவணன் கிருஹத்தை ஸ்ரீலங்காவில் தேடுவதே பொருத்தமானது.

ஸ்ரீலங்காவில் தென்னிலங்கை

இராவணன் ஆண்ட இலங்கை என்பது ஸ்ரீலங்காவில்தான் உள்ளது என்று சொல்லும் வண்ணம் ‘தென்னிலங்கை’ என்று ஆழ்வார்கள் 25 பாசுரங்களில் குறித்துள்ளனர். குறிப்பாக இரண்டு பாசுரங்களில், தெற்கேதான் இலங்கை உள்ளது என்று அருளியுள்ளார்கள்.

“குடதிசை முடியை வைத்துக்

குண திசை பாதம் நீட்டி,

வடதிசை பின்பு காட்டித்

தென் திசை யிலங்கை நோக்கி”

என்று திருவங்கத்துக்குத் தெற்கில் இலங்கை இருப்பதைத் தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலையில் (19) சொல்வதன் மூலமும்,

தென்பால் இலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார்”

என்று தென்புறம் இருக்கும் இலங்கை என்று நம்மாழ்வார் திருவிருத்தத்தில் (77) அருளியதன் மூலமும், இராவணனது இலங்கை, தென் திசையில்தான் இருந்தது என்பது தெளிவாகிறது. அதை பாரதத்திற்குள் தேடி ஆராய்ச்சியாளர்கள் ஏமாறவேண்டாம்.

மொத்தம் 134 இடங்களில் ஆழ்வார்கள் இலங்கையைக் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றுள் 22 பாசுரங்களில் கடல் நீரால் சூழப்பட்ட இலங்கை என்று சொல்லியிருக்கவே, பாரதத்தில் இருக்கும் இலங்கை என்னும் இடங்களுக்கும் இராவணனது இலங்கைக்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாகிறது. மேலும், இராமாயணத்திலேயே, கடலுக்கு அப்பால், எதிர்க் கரையில்தான் இலங்கை இருக்கிறது என்றும் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவில் இலங்கை இருக்கிறது என்று இராவணனே சீதையிடம் சொல்கிறான் (வா-இரா: 3-47-29).

அது ஸ்ரீலங்கைதானா என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். ஸ்ரீலங்காவை சிலோன் என்று சொல்லவில்லையா? சிம்ஹளம் என்றும், இலங்கை என்றும் சொல்கிறார்களே, அத்துடன் ‘தாம்பபண்ணி’ என்றும் பண்டைக் காலத்தில் சொல்லியிருக்கவே ஸ்ரீலங்காதான், இராவணனது இலங்கை என்று எதன் அடிப்படையில் சொல்ல முடியும் என்றும் கேட்கிறார்கள். அவற்றுக்கும் விடை காண்போம்.

(to be continued) 

 

No comments: