ஒரு வழியாக நல்ல முகூர்த்தம் பார்த்து
சேர்த்திக்குப் பெயர் பெற்ற பங்குனி உத்தரத்தன்று விஜயகாந்த் மக்கள் நலக்
கூட்டணியில் சேர்ந்து விட்டார்.
விஜயகாந்தைப் பொறுத்த வரையில், நாலு பேருக்கு நன்றி. எதற்காக நான்கு பேருக்கு நன்றி என்று நான்
சொல்லத் தேவையில்லை. சினிமா மோகத்திலேயே
தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் நம் மக்களுக்கு 'நாலு பேருக்கு நன்றி' பாட்டு சொல்லும் கருத்து புரியும்.
விஜயகாந்துக்கு 'கிங்' ஆக ஆசை. அந்த நாலு பேர் அதை ஏற்றுக் கொண்டு கிங் மேக்கரா இருப்பதாகச்
சொல்லி விட்டார்கள். அதனால டீல் முடிந்தது, காப்டன் நால்வர் கூட்டணியில் இணைந்தார். அதான் நாலு பேருக்கு நன்றி.
இனி எப்படி இவருடைய கிங் ஆசைய இந்த நாலு பேர்
தோள் கொடுத்துத் தூக்கி செல்வார்கள் என்பதை அந்த சினிமாப் பாட்டே
தெரிவித்து விட்டது.
இவருக்கு நாலு பேருன்னா, அவங்களுக்கு அஞ்சு பேரு. ஏதோ குகனோடு ஐவரானோம்னு ஒரு பிணைப்பைக்
காட்டும் உதாரணத்தை வைகோ எடுத்து விட்டிருக்கலாம். போயும் போயும், பாண்டவர் அணியை எடுத்துக் காட்டியிருக்கிறார். விஜயகாந்த் தருமராம், வைகோ அர்ஜுனராம்; திருமா பீமனாம். கம்யூனிஸ்டுங்க ரெண்டு பேரும் நகுல, சகாதேவனாம். இவங்க, விஜயகாந்தை யாரும் நெருங்க விட
மாட்டங்களாம். அர்ஜுனரான வைகோ தான் தளபதி. இவரும், பீமனும் சேர்ந்து தருமரை
ஒண்ணும் செய்ய விட மாட்டாங்களாம், இவங்களே எல்லாத்தையும் கவனிச்சுப்பாங்களாம்.
இந்த விவரத்தைப் படித்த உடன் சிரிப்பு
தாங்கல. இந்து மதத்தை மதிக்காத இவங்களுக்கு இந்தக் கதையா கிடைத்தது? தருமரைச் சுற்றி இப்படி ஒரு பாதுகாப்பு வளையம் போடப்படுவதை இவங்க
கதையில தான் பார்க்கிறோம். கொஞ்சம் ஏமாந்தா, இந்தத் தருமர் டிமிக்கி கொடுத்து
ஓடிடுவாரு இல்ல!
மகாபாரத தருமர், தன்னை ஒரு கிங்காகவே நினைத்துப் பார்த்ததில்லை. மேலும், மகாபாரதப் போரில் வென்ற பிறகும், அவர் கிங்காகவில்லை, கௌரவர்களது தந்தையான
திருதராஷ்டிரனுக்கே அரசுப் பட்டத்தைத் தந்தார். இந்த உதாரணத்தின் படி, ம.ந.கூ. வெற்றி பெற்றால், கிங்காகும்
விஜயகாந்த் வேறு யாருக்கோ கிங் பதவியைத் தர வேண்டுமே! தேர்தல் முடிவில் கொஞ்சம்
பற்றாக் குறை இருக்கிறது என்று திமுக கூப்பிட்டால் (திமுகவைத் தவிர வேறு யார் கூப்பிடப் போகிறார்கள்?),
தருமராகத் தாராளப் பிரபுவாக விஜயகாந்த் ஆகக்
கூடும் என்பதைச் சொல்லாமல் சொல்ல இந்த தருமர் உதாரணமா?
எது எப்படியோ, இப்போதைக்கு, விஜயகாந்தைச் சுற்றி வளையம் தான்
இடுகிறார்கள். அவர் பேசவே கூடாது என்று சொல்லவில்லை. அவரைப் பேச விடாமல் அடை காக்கவும் இல்லை என்பது எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது தெரியுமா?
இத்தனை நாளா மனம் விட்டு சிரிக்கிறபடி
விஜயகாந்த் பேசி வந்தார். இனியும் அப்படி இருப்பதற்கு வைகோ அணியினர் தடை போடவில்லை என்பது பெரிய
ஆறுதலாக இருக்கிறது.
இந்த சேர்த்தி உத்சவத்தின் போதே அவரைப்
பேச விட்டிருக்கிறார்கள். எவ்வளவு அழகா, கோர்வையா,
சிரிக்காம பேசி நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்
விஜயகாந்த்.
//
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர்
கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள்.அப்போது பேசிய விஜயகாந்த்,
"அனைவருக்கும் வணக்கம், நான் பொதுவா வந்து இந்த கூட்டத்துல நிறைய பேசுவேன். இன்றைக்கு
எனக்கு முன்னதாக நாலு பேரும் நிறைய பேசி விட்டார்கள்.
நான் என்னை மெதுவாக இனி
மாற்றிக்கொள்வேன். படிப்படியாக மாற்றிக்கொள்வேன். மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள்
நான்கு பேர் வந்தார்கள். நீங்க கிங்கா இருங்க, நாங்க கிங்மேக்கரா இருக்கிறோம் என்றார்கள். கூட்டணி ஆட்சி என்று
கேட்டார்கள், தாராளமாக அறிவித்துவிடுங்கள் என்று
கூறிவிட்டேன்.
பணத்தாசையில் விஜயகாந்த் அங்கே
போய்விட்டார், இந்த பக்கம் விலைபோய் விட்டார் என்று
எழுதினார்கள். நான் யாரு பக்கமும் விலை போகவில்லை. அன்றே சொன்னேன், தெய்வத்தோடும், மக்களோடுதான் கூட்டணி. தெய்வம் தான்
வழிகாட்டும். மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுக்கு தெய்வம் பிடிக்குமா பிடிக்காதா
என்று தெரியாது. ஆனால் எனக்கு தெய்வம் பிடிக்கும்.
நான்கு பேரும் நான்கு விதமான கொள்கை
உடையவர்கள் என்று நினைக்காதீர்கள். நான்கு பேரும் ஒரே கொள்கையை கொண்டவர்கள்.
என்னை விட இவர்கள் அனைவரும் மூத்தவர்கள்தான். ஏன் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள்,
என்னை ஏற்றுக்கொண்ட அவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி. அதிக நேரம் நான் பேச விரும்பவில்லை.
இருந்தாலும் இங்கே வந்து எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்களே.
சினிமாவில் வசனம் அந்த பக்கம் இந்த
பக்கம் என கேட்டு கேட்டு பேசுவதால்தான் நான் ஒரே பக்கமாக பார்த்து பேச மாட்டேன்.
பல பக்கம் பார்த்து பேசுவேன். எழுதி படித்தால் கீழே குனிய வேண்டியதிருக்கும்.
அப்போது கத்துவாங்க. கத்துனா எனக்கு கோபம் வரும். இயற்கையான கோபம்தான்.
அவுங்களுக்கு என்னன்னா விஜயகாந்த் பேச்சை நிறுத்திட்டாரே, அப்படி என்கிற கோபம்.
அதற்குத்தான் என் மனைவி பிரேமலதா
சொன்னார்கள். ''இதுக்கே இப்படி கோபப்படுகிறார்களே,
ஒருவர் ஐந்து வருடங்களாக பேசாமல் இருந்தார்
என்று ஒருவர் கிண்டல் செய்தாரே, அவரே அந்தக் கட்சிக்குப்
போயிருக்கிறாரே, அவரை என்னவென்று சொல்வது" என்று
கேட்டார்கள். அன்றைக்கு முதல்வரைக் கிண்டல் அடித்தவர்தான் இன்றைக்கு கட்சிக்கு
போயிருக்கிறார். அதே கட்சிக்குத்தான் போயிருக்கிறார்.
இன்னொரு விஷயம், என் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அண்ணன் வைகோ இருப்பார். இத்துடன்
என் உரையை முடித்துக் கொள்கிறேன். வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றி. மக்கள்
நலக்கூட்டணி தேமுதிக கூட்டணி அமைய பாடுபட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்". //
(Source: http://tamil.oneindia.com/news/tamilnadu/i-have-joined-the-people-s-alliance-says-vijayakanth-249620.html)