Thursday, January 4, 2024

ஸ்ரீலங்கையில் இராவணனது லங்காபுரி

Previous article

 ஸ்ரீலங்காவை, இலங்கை என்றே அழைத்து வந்தார்கள் என்ற கருத்து இருந்து வருகிறது. ஆனால் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னால் வராஹமிஹிரரால் எழுதப்பட்ட ‘ப்ருஹத் சம்ஹிதை’ என்னும் நூலில் நாடுகளின் அமைப்புகளைச் சொல்லுமிடத்தில் தென்திசையில் இலங்கை உள்ளது என்று சொல்லும் பகுதியில், சிங்களம் என்றும் தனியாக ஒரு நாடும் சொல்லப்பட்டுள்ளது (14: 11-16). இன்றைக்கு நாம் அறிந்தவரையில் இலங்கையில் உள்ளவர்கள்தாம் சிங்களர்கள் என்னும் மக்கள். அதனால் இலங்கையே சிங்களம் என்றும் அழைக்கப்படுகிறது என்று நாம் எண்ணுகிறோம். பாரதியாரும், சிங்களத் தீவுக்குப் பாலம் அமைக்க வேண்டும் என்று பாடவில்லையா?

இந்த இரண்டு பெயர்கள் தவிர, இலங்கையை ‘சிலோன்’ என்று சொல்லும் வழக்கமும் இருக்கிறது. அசோக மன்னன் கல்வெட்டுகளைப் பார்த்தால், அவற்றில் இலங்கையைத் ‘தாம்பபண்ணி’ (Tambapanni) என்று குறித்து வைத்துள்ளார்கள்.  மெகஸ்தனிஸ் போன்ற கிரேக்க வரலாற்றாசிரியர்கள், ஸ்ரீலங்காவை ‘தாப்ரோபேன்’ (Taprobane) என்று எழுதி வைத்துள்ளது, ‘தாம்பபண்ணி’ என்னும் பெயரின் திரிபாகத் தெரிகிறது. இந்த காரணங்களால், இராவணனது இலங்கை நகரம் ஸ்ரீலங்காவில்தான் இருந்தது என்று எப்படிச் சொல்லலாம் என்பது பல ஆய்வாளர்களுக்கும் இருக்கும் கேள்வி.

மேலும், ஸ்ரீலங்காவில் எந்த இடத்தில் இராவணனது நகரம் இருந்தது என்பதும் புதிராக இருக்கவே, இராமாயணத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்குபவர்களும் இருக்கிறார்கள்.

கல்வெட்டுகளில் இலங்கை

இந்த சந்தேகங்களுக்கு விடை காண சமீபகாலத்திலிருந்து, நாம் பின்னோக்கிச் செல்வோம். 16-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீலங்காவுக்கு வந்த போர்சுகீசியர், அந்த நாட்டை அவர்கள் மொழியில் ‘சேலன்’ (Seylan) என்றனர். அவர்கள் வைத்திருந்த வரைபடத்தில் அந்தப் பெயரில் இருந்த ஒரு தீவைத் தேடி வந்தார்கள். ஸ்ரீலங்காவைப் பார்த்தபின் அதுவே சேலன் என்று கருதி அந்த நாட்டை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள். அந்தப் பெயரே ‘சிலோன்’ என்றாகியது. எனவே சிலோன் என்பது நானூறு வருடங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட பெயர்.

ஆனால், நம் நாட்டில் ஸ்ரீலங்கா முழுவதையும் இலங்கை என்றே அழைத்து வந்தனர் என்பதை, சோழர் காலக் கல்வெட்டுகள் பலவற்றின் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இராஜேந்திர சோழன் வெளியிட்ட திருவாலங்காடு செப்பேட்டில், அவன் தந்தை இராஜராஜ சோழனைப் பற்றிச் சொல்லுமிடத்தில், இராமன் இலங்கைக்குச் சென்று இலங்கை அரசனை வீழ்த்தியது போல இராஜராஜனும் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்று அதன் அரசனை வென்றான் என்று சொல்வது இன்றைக்கு ஸ்ரீலங்கா என்று அழைக்கப்படும் நாட்டையே.

செப்பேட்டின் விவரம்: (செப்பேட்டுச் செய்யுள்:80)

ராகவர்களின் தலைவன் (அதாவது, இராமன்) திறமையான குரங்குகளைக் கொண்டு சமுத்திரத்தின் நீரின் குறுக்கே பாலம் கட்டி, கூரிய முனைகள் கொண்ட அம்புகளால் லங்கைவின் அரசனை (அதாவது ராவணனை) மிகவும் சிரமத்துடன் கொன்றான்; (ஆனால்) இந்த பயங்கரமான தளபதி (மன்னர் அருண்மொழிவர்மன்) கப்பல்கள் மூலம் சமுத்திரத்தைக் கடந்து இலங்கையின் அதிபதியை எரித்தார். எனவே இராமனை இந்தச் சோழ மன்னன் (இராஜராஜ சோழன்) மிஞ்சினான்.”

இராமனையே மிஞ்சினவன் என்ற புகழ் பாடிக் கொள்ள இவ்வாறு எழுதி வைத்தாலும், நமக்குக் கிடைக்கும் முக்கியச் சான்றான இராவணனது இலங்கை ஸ்ரீலங்காதான் என்பதைச் செப்பேட்டின் இந்த வரிகள் நிரூபிக்கின்றன. கடலுக்குக் குறுக்கே வானரர்களால் பாலம் கட்டிய விவரத்தையும், அந்தக் கடல், சோழ நாட்டுக்கும், ஸ்ரீலங்காவுக்கும் இடையேயான கடல் என்பதையும், அதை கடந்துதான் இலங்கைக்குச் சென்று இராவணனை இராமன் வென்றான் என்பதையும் தெளிவாகக் காட்டும் செப்பேடு இது மட்டுமே. இதில் இலங்கை என்றுதான் குறிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சிங்களமும், தாம்பபண்ணியும்

ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால், சிங்களம் என்ற பெயரும், அதற்கும் முன்னால், தாம்பபண்ணி என்ற பெயரும் வந்துவிட்டது. அது எவ்வாறு என்பதை இலங்கையின் அரச வம்சங்களையும், பௌத்தம் பரவின விதத்தையும் சொல்லும் ‘மஹாவம்சம்’ விவரிக்கிறது. கௌதம புத்தர் இந்த உலகை விட்டு நீங்கின அன்று, விஜயன் என்பவன் பாரத தேசத்திலிருந்த வங்கம் என்னும் நாட்டிலிருந்து இன்றைய ஸ்ரீலங்காவின் வடக்குக் கரைக்கு கப்பல் மூலம் வந்து இறங்கினான். அங்கிருந்த மண் தாமிர வர்ணத்தில் இருந்ததாம். அந்த மண்ணில் அவன் உட்கார்ந்தபோது அவனது கையில் தாமிர வர்ணம் ஒட்டிக் கொள்ளவே அந்த இடத்தை ‘தாம்ரவர்ணி’ என்று அழைத்தான். பௌத்தம் பரவினபோது பாலி மொழியும் அங்கு பேசப்படவே, அந்த மொழியில், தாம்பபண்ணி என்று அழைக்கப்படலாயிற்று. இந்தப் பகுதி, ஸ்ரீலங்காவின் வடக்குப் பகுதியில் உள்ள யாழ்ப்பாணமாகும். ஸ்ரீலங்கா முழுவதற்குமே இந்தப் பெயர் வழங்கப்படவில்லை.

இனி சிங்களம் எது என்று பார்ப்போம். விஜயனது தந்தையின் பெயர் ஸிம்ஹபாஹு அல்லது சீஹபாஹு என்பதே. சிங்கத்தை அடக்கியதால் அந்தப் பெயர். அவன் இருந்த நகரத்துக்கும் சிங்கபுரம் என்று பெயர். அவன் மகனான விஜயனுக்கு விஜய சிங்கன் என்று பெயர். இந்தக் காரணங்களால், விஜயன் வந்திறங்கிய ஸ்ரீலங்கா பகுதிக்கு சிங்களம் என்ற பெயர் ஏற்பட்டது. அவனுடன் வந்த அவனைச் சேர்ந்த மக்கள் சிங்களர் எனப்பட்டனர். இந்தப் பகுதியும் வட ஸ்ரீலங்கா பகுதிதான்.

ஏறத்தாழ கி.மு. 500 வாக்கில் விஜயன் வந்த போது, இந்தப் பெயர்கள் ஏற்பட்டன. அப்பொழுது  ஸ்ரீலங்கை முழுவதையுமே இலங்கை என்றே மஹாவம்சம் குறிப்பிடுகிறது. அந்த காலக் கட்டத்தில் இலங்கையில் இருந்ததாக, இரண்டே இரண்டு நகரங்களைத்தான் மஹாவம்சம் குறிப்பிடுகிறது. ஒன்று வட இலங்கையில் இருந்த ‘சிரீசவத்து’ (ஸிரீஷவஸ்து என்பதன் பாலி மொழித் திரிபு). மற்றொன்று தென்னிலங்கையில் இருந்த லங்காபுரி!

தென்னிலங்கைக் கோமான்’ என்றும் ’தென்னிலங்கைச் செற்றான்’ என்றும் ஆண்டாள் மற்றும் மற்ற ஆழ்வார்கள் கூறுவது, தென் திசையில் இருந்த இலங்கை என்பதற்காக மட்டுமல்ல, இலங்கைத் தீவிலேயே, அதன் தென் பகுதியில் லங்காபுரி என்னும் நகரம் இருந்து, அதனை இராவணன் ஆண்டும் வந்தான் என்பதால் இருக்குமோ என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.

கி.மு. 500 க்கு முன்பே தென்னிலங்கையில் மலைப் பகுதியில் லங்காபுரி இருந்தது என்றும் அங்கு யக்ஷர்கள் வாழ்ந்து வந்தனர் என்றும் மஹாவம்சம் கூறுகிறது. காதும், மூக்கும் அரியப்பட்ட சூர்ப்பனகை, தலையில் அங்கை வைத்து, “மலை இலங்கை புகச் செய்த தடந்தோளன்’ என்று திருமங்கை ஆழ்வார் கூறுவதிலிருந்து மலையின் மீதுதான் இலங்கை இருந்தது என்று தெரிகிறது. (பெரிய திருமொழி: 3-9-4). அவ்வாறே இராவணனும் சீதையிடம் கூறினான் (வா- இராமா: 3-47-29).  

தென்னிலங்கையின் மலைப் பகுதி

இராவணனது தலைநகரம்

இலங்கையில் (ஸ்ரீலங்காவை அவ்வாறே நாம் இனி குறிப்பிடுவோம்), அதன் தென் பகுதியில் மட்டுமே மலைப்பகுதிகள் இருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வெண்டுமென்றால், கொழும்புவுக்குக் கிழக்கே, தென்னிலங்கையின்  மத்தியப் பகுதியில் மலைச் சிகரங்கள் இருக்கின்றன. அங்குதான் லங்காபுரி இருந்தது என்று மஹாவம்சம் கூறுகிறது. அந்தப் பகுதியில் இருக்கும் சிகரமான, ‘ஆதாம் சிகரம்’ எனப்படும் ‘மலய மலை’யே ராவணன் வசித்த பகுதி என்று இலங்கையில் வழங்கி வரும் பௌத்த மத புத்தகமான ‘மஹாயான லங்காவதார சூத்ரம்’ என்னும் நூல் தெரிவிக்கிறது. யக்ஷர்களது தலைவனும், இலங்கையின் அரசனுமான இராவணனது இருப்பிடமான அந்த மலையின் மீது கௌதம புத்தர் தன் கொள்கைகளைப் போதித்த போது இராவணனே ஒரு பூந்தேரில் அங்கு வந்து செவிமடுத்தான் என்று இந்த நூல் கூறுகிறது.

இந்த நூலின் முதல் அத்தியாயத்தில், ஆதாம் மலை என்று இன்று அறியப்படும் மலையே இராவணன் வாழ்ந்த லங்காபுரி என்று சொல்லியிருப்பது கற்பனையாக இருக்க முடியாது. இலங்கையில் புத்த மதம் முதன் முதலில் தழைக்க ஆரம்பித்த காலக் கட்டத்தில், பௌத்தத்தைக் காலூன்றச் செய்வதற்காக, இராவணனே புத்த மதத்தைப் பின்பற்றினான் என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் இராவணனது காலம் மிகவும் முந்தையது என்பதால், கௌதம புத்தர் இலங்கைக்கு வந்தபோது, மேலுலகில் இருந்த இராவணனே நேரில் வந்து தனது நகரமான லங்காபுரிக்கு அழைத்தான் என்றும் அவரிடம் உபதேசம் பெற்று, உயர் நிலையை அடைந்தான் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இராவணன் வந்த விவரம், இந்த நூலின் முந்தைய பதிப்பில் இல்லை என்று கூறப்படுள்ளது. எனினும், போதனை நடந்த இடம், இராவணனது இலங்கை நகரமாக இருந்தது என்பதில் வேறுபட்ட கருத்து காணப்படவில்லை. பௌத்தத்தை இலங்கையில் பரப்புவதற்கு இந்தக் கதை பயன்பட்டிருக்கும். ஆனால், இராவணன் குறித்த விவரமும், அவனது நகரம் இருந்த மலய மலையும் மக்கள் மத்தியில் ஏன் நிலைக்கவில்லை என்ற கேள்வியும் வருகிறது. அதற்கு விடை, காலப்போக்கில் இலங்கையில் மஹாயானம் பின்பற்றப்படவில்லை என்பதே. தேரவாத பௌத்தம் என்னும் பிரிவே இலங்கையில் பிரபலமானது. அதனால் மஹாயானத்தைச் சேர்ந்த நூல்கள் மறக்கடிக்கப்பட்டன. அத்துடன், மஹாயான நூல் கூறும் இராவணனும், அவனது மலையும் மக்களுக்குத் தெரியாமலேயே போய் விட்டது. இலங்கையின் பௌத்தம், இராமாயணத்தை மறக்கடிக்கச் செய்து விட்டது.

இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பிலிருந்து இலங்கையில் வேரூன்றிய பௌத்தம், அதற்குப் பல்லாண்டுகளுக்கு முந்தைய இராமாயண தொடர்புகளை அழித்து விட்டிருக்கிறது. ஆனால், இராவணனது நகரம் என்று மலைப்பாங்கான தென்னிலங்கையின் முக்கிய சிகரத்தைச் சொல்லியுள்ளது, அந்தப் பழைய வரலாற்றை தங்களுக்குச் சாதகமாக எடுத்தாளப் பயன்படுத்திக் கொண்டது எதிர்பார்க்கக்கூடியதே.

வால்மீகி இராமாயணத்தில் காட்டப்படும் வர்ணனைகள் இந்தச் சிகரத்துக்குப் பொருந்துகின்றன. இது அமராவதியைப் போல இருக்க வேண்டும். ஆம், இருக்கிறது. வானிலிருந்து தொங்குவது போல, மேகங்களுடன் உறவாடும் முகட்டைக் கொண்டுள்ளது இந்த மலை. இந்த மலையை ஸ்வர்கம் என்றே குறிப்பிட்டு வருகிறார்கள், ஸ்வர்காரோஹணம் என்னும் பெயரைக் கொண்ட இந்த மலை ‘ரோஹண மலை’ என்றும் நாளடைவில் வழங்கப்படலாயிற்று. மலய மலை என்றும் இலங்கை என்றும் இந்த மலைதான் அழைக்கப்பட்டிருக்கிறது. இன்றும் இந்த மலை அழகும், அற்புதமும் நிறைந்த இடமாகவும், குளுமையும், இயற்கை அழகும் கொண்டதாகவும் இருக்கிறது.

இராமாயணம் இராவணனது இலங்கை மலையை ‘திரிகூடமலை’ என்கிறது (வா. இரா: 5-2-1). திரிகூடம் என்றால் மூன்று சிகரங்களின் சேர்க்கை அல்லது மூன்று கூம்புகளின் (hump) சேர்க்கை என்று அர்த்தம். மூன்று சிகரங்களுடன் தென்னிலங்கையில் மலை எதுவும் இல்லை. ஆனால், மூன்று கூம்புகளுடன், மூன்று முகப்புகளுடன் ஆதாம் மலை என்னும் இந்த மலை காட்சி அளிக்கிறது.

இராவணனது திரிகூட மலை கைலாச மலையைப் போலிருக்கிறது என்று இராமாயணம் கூறுகிறது (வா.இரா: 5-2-23). மூன்று பக்கங்களுடன் பிரமிடு போல கைலாசமும், திரிகூடமும் ஒரே மாதிரி இருக்கின்றன.

கைலாய மலையும், இராவணனது திரிகூட மலையும்

அதனால்தானோ என்னவோ, இலங்கை நகரை நிர்மாணித்த குபேரன், அதை இராவணன் பிடுங்கிக் கொண்டபோது, அந்த மலையைப் போன்ற அமைப்பில் இருந்த கைலாயத்தைத் தனது இருப்பிடமாக ஆக்கிக் கொண்டான் போலிருக்கிறது. மற்றொரு காரணம் கைலாயத்தில் குடி கொண்ட சிவபெருமான் தன்னை இராவணனிடமிருந்து காப்பாற்றுவார் என்பதாக இருக்கும்.

இராவணன் சிவ பக்தன் என்பதால், அவன் இருந்த திரிகூட மலை நாளடைவில் “சிவனொளிபாத மலை’ என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. இதுவே ‘சமனொளி மலை என்று பௌத்தம் வந்ததும் பெயர் பெற்றிருக்கிறது. மக்கள் சமனொளி மலையைச் சுற்றி வலம் வந்தனர் என்ற விவரம் மணிமேகலையில் காணப்படுகிறது. அந்த பெயரைக் கொடுத்தவர் சமன் தேவன் என்னும் பௌத்தர். அவர் இந்த மலையில் வாழ்ந்தார் என்கிறார்கள். அவர் இறந்தபின் இந்த மலையின் காவல் தெய்வமாக ஆகிவிட்டார் என்றும் நம்புகிறார்கள். கௌதம புத்தர் இலங்கைக்கு வந்தபோது, இந்த சமன் என்பவரைச் சந்தித்ததாகவும், அவர் புத்தரிடம் போதனை பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. அது முதல் அவர் புத்த மதத்தின் முக்கியக் கடவுளாக இந்த மலையில் வணங்கப்பட்டிருக்கிறார். இந்த வகையிலும் இராவணன் முழுவதும் மறக்கப்பட்டிருக்கிறான்.

கெலனியா விஹாரத்திலுள்ள சமன் தேவன்

இந்த மலையின் உச்சியில் நின்று கொண்டு ஹனுமான் சுற்றுப் புறத்தைக் கவனித்து இலங்கை நகருக்குள் எவ்வாறு நுழைவது என்று யோசித்திருக்கிறான் (வா.இரா: 5-2-32). மலையின் அமைப்பைப் பார்த்தால் அது சாத்தியம் என்று தெரிகிறது. இராவணனுடைய நகரம் மொத்த மலைப் பகுதியிலும் பரவலாக இருந்திருக்க வேண்டும். முக்கோண மலையாக இருப்பதால், முக்கோண வடிவில் மதிள் சுவர் இருந்திருக்கிறது. அதைத்தான் இராமன் உடைத்தான் என்று தமிழ்ச் சங்க நூல்கள் தெரிவிக்கிறன.

மலை மேல் ‘பாகவ குகை’, ‘தீவ குகை என்ற இரு குகைகள் இருக்கின்றன. மலைச் சரிவிலே மும்மதிள்கள் கட்டி அவற்றுக்குள்ளேயே வனத்தில் சீதையைச் சிறை வைத்திருக்க முடியும். மலை மேலிருந்து பார்த்தால், மேற்கில் கடல் பகுதி தெரிகிறது. கடல் வழியாக யார் வந்தாலும், மலையிலிருந்தே பார்க்க முடியும். மலையைச் சுற்றி ரத்தினங்கள் கிடைக்கின்றன என்பதும் இராமாயணம் சொல்லும் செய்தியை மெய்ப்பிக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, மலையடிவாரத்தில் ரத்தினபுரம் என்னுமிடத்திலிருந்துதான் மலையேறும் பாதை இருந்திருக்கிறது.

இந்த மலை பௌத்தர்கள் காலம் தொடங்கி சமீபத்தில் ஆங்கிலேயர்கள் ஆண்டது வரையில், பலராலும் சொந்தம் கொண்டாடப்பட்டது. எனினும், புத்தரின் காலடி என்று ஒரு பாதச் சுவடு மலை மீது பாதுகாக்கப்பட்டு, அதனால் ‘ஸ்ரீபாத மலை’ என்றும் இது அழைக்கப்படுகிறது.

ஸ்ரீபாதம்

இந்த பாத அமைப்பு கௌதம புத்தருடையது என்று நம்பப்பட்டாலும், அதற்கு ஆதாரம் கிடையாது. பொது யுகத்துக்கு முன்பிலிருந்தே இந்தப் பாதம் இருந்திருக்கிறது. இது கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. இது இருப்பதே யாருக்கும் தெரியாது. பொ.மு. 104 ஆம் வருடம், வாலகம்பன் என்னும் அரசன் மான் வேட்டையாடியபோது, அது இந்த மலை மீது ஏறி விட்டது. அதைத் தொடர்ந்து அந்த மன்னனும் மலை ஏறினான். அப்பொழுதுதான் முதல் முறையாக மலையுச்சியில் பாதம் செதுக்கப்பட்டுள்ளதைப் பார்த்தான். அது புத்தருடைய பாதம் என்று தெய்வம் அவனுக்கு உணர்த்தியது என்றும் அது முதல் அந்தப் பாதம் புத்தரது பாதம் என்றும் மக்கள் நம்ப ஆரம்பித்தார்கள்.

இராவணனது மலையான இந்த மலையில் பௌத்தம் வருவதற்கு முன், இப்படிப்பட்ட பாதம் யாரைக் குறித்து உருவாக்கப்பட்டிருக்க முடியும் என்ற கேள்வி நமக்கு வருகிறது. இராமன் இந்த மலை நகரத்தை வென்றான் என்பதைக் குறிக்க பின்னாளில் யாரேனும் செதுக்கினார்களோ என்ற எண்ணம் நமக்கு எழாமல் இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மறக்கடிக்கப்பட்ட இராவண சரித்திரத்தைத் துழாவி எடுக்க வேண்டியிருக்கிறது.  கண்டி பகுதியில் ஹிந்து அரசர்கள் ஆண்ட பொழுது 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் இந்த மலையிலிருந்த பௌத்தர்களை வெளியேற்றி, ஹிந்து ஸ்தலமாக மாற்றினார்கள். மீண்டும் இது பௌத்த ஸ்தலமாக ஆகி விட்டது. பௌத்தத்தினால், இராமாயண வரலாறே இலங்கையில் மறக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் விட்டது. சமீப காலம் வரை இலங்கைவாசிகள் இராமாயணத்தை உண்மைச் சரித்திரம் என்று நம்பவேயில்லை. இராவணன் ஒரு எதிர்மறை கதாபாத்திரம் என்பது ஒரு காரணம். பௌத்தம் வேரூன்றி இருந்தது என்பது மற்றொரு காரணம். இந்த மலையில் புதைந்துள்ள பல இரகசியங்களை அகழ்வாராய்ச்சியின் மூலம் காண முடியும். ஆனால் அதற்கு இலங்கை தயாராக இருக்க வேண்டும்.

ஆயினும், விபீஷணன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தன் இருப்பைக் காட்டிக் கொண்டு இருந்திருக்கிறான். இராவணனை மறந்தாலும், விபீஷணனை இலங்கை அரசர்கள் மறக்கவில்லை. இராவணனைக் கொன்று இலங்கையை இராமன் எரித்தான். அதற்குப் பிறகு இராவணன் வாழ்ந்த மலையில் விபீஷணன் வாழ்ந்தாற்போலத் தெரியவில்லை. அவனுக்கென்று ஓரிடத்தை வைத்துக் கொண்டிருந்தான் என்று எண்ணும் வண்ணம் மலையடிவாரத்திலிருந்து 120 கிலோமீட்டர் தொலவில் மேற்கே, விபீஷணன் கோயில் இருக்கும் ‘களனி’ (Keleniya) என்னுமிடம் இருக்கிறது. ‘கல்யாண’ என்னும் பெயர் பாலி மொழியில் கெலேனியா என்றாகி, இன்று தமிழில் களனி என்று வழங்கப்படுகிறது. இதற்கு அருகில் கொழும்பு நகரம் இருக்கிறது.

இலங்கையில் எழுந்த பல சந்தேஸ காவியங்கள் களனியில் விபீஷணன் கோயில் இருந்த விவரத்தைச் சொல்கின்றன. பல அரசர்கள், தங்கள் ராஜ்ஜியம் தங்களிடமே இருக்கவும், இழந்த ராஜ்ஜியத்தைப் பெறவும், இராமனால் ராஜ்ஜியம் கிடைக்கப்பட்ட விபீஷணனை வழிபட்டிருக்கின்றனர். சில காவியங்கள் களனி கோயிலில் இருப்பது இராமன் என்றும், விஷ்ணு என்றும் குறிக்கின்றன. இன்று வரை விபீஷணன் கோயில் இருந்து வருவது, ஸ்ரீலங்காதான் இலங்கையின் இருப்பிடம் என்பதைப் பறை சாற்றுவதாக இருக்கிறது.

இராவணனது அடையாளம்

இலங்கையின் பூர்வ குடிகளாக யக்ஷர்கள் இருந்தனர் என்று மஹாவம்சம் கூறுகிறது. குபேரன் ஒரு யக்ஷன் தான். அவன் பராமரித்த இலங்கையை இராவணன் பிடுங்கிக் கொண்டான் என்று இராவணனே, சீதையிடன் சொல்வான் (வா.இரா: 3-48-5). அதுவே இன்றைக்கு ஆதாம் சிகரம் எனப்படும் மலய மலையாக இருக்க வேண்டும். அதையே லங்காபுரி என்று மஹாவம்சம் கூறியிருக்கிறது.

குபேரன் தன் தாயான, யக்ஷர் குலத்தைச் சேர்ந்த ‘இலவிலா’வைப் போல  உருவ அமைப்பில் இருந்திருக்க வேண்டும். குபேரனின் தந்தையான விஸ்ரவஸ், புலஸ்தியருக்குப் பிறந்தவர். ரிஷியான அவர் மானவ குலத்தவராக இருக்க வேண்டும்.  அவரே இராவணனுக்கும் தந்தை ஆவார். அவர் அரக்கியர் குலத்தில் பிறந்த கைகசியை மணம் செய்து இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்னும் மகன்களைப் பெற்றார்.

இராவணன் உருவ அமைப்பில் தன் தாயை ஒத்திருக்க வேண்டும். அவன் மந்தர மலையைப் போல பெருத்த சரீரம் உடையவன் என்று ஓரிரு இடங்களில் வால்மீகி இராமாயணம் கூறுகிறது. அது மட்டுமல்லாமல் அவன் கருமேகம் போல கருத்த சரீரத்துடனும் இருந்தான் என்றும், நல்ல கழுத்து அமைப்புடன் இருந்தான் என்றும் வால்மீகி கூறுகிறார் (வா.இரா: 5-22-24). இந்த விவரங்கள் மூலம் அவன் அரக்கியர் குலத்தவளான தனது தாயைப் போல இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏற்கெனெவே கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள சோமாலியா என்னுமிடம் சுமாலி என்னும் பெயருடன் ஒத்திருக்கிறது என்று சுட்டிக் காட்டினோம். சுமாலி என்பவன் இராவணனுடைய தாய் வழிப் பாட்டன். இராவணனுடைய உருவ விவரங்கள் ஆப்பிரிக்க கருப்பர் இன மக்களுடன் ஒத்துப் போவதை நாம் கவனிக்க வேண்டும்.

இராவணனைப் போலவே அவன் தம்பியான விபீஷணன் இருக்கவில்லை. குணத்தில் அவனைப் போல இல்லை. உருவ அமைப்பிலும் அவனைப் போல இல்லை என்பதை இலங்கையில் எழுந்துள்ள காவியங்களில் அவன் பெயரை ‘உத்பலவர்ணன்’ என்று சொல்லியிருப்பதன் மூலம் தெரிகிறது. அதாவது ‘தாமரை வர்ண’னாக அவன் இருந்திருக்கிறான். அவன் யக்ஷர்களை ஆண்டதைப் போலத் தெரியவில்லை. ஏனெனில், யக்ஷர்கள் என்று சொல்லும் வகையில், இராவணனது மலையைச் சுற்றியுள்ள பல குகைகளில்  ஆதி மனித எலும்புக் கூடுகள் கிடைத்திருக்கின்றன. பலாங்கொடை என்னும் குகையின் பெயரால் ‘பலாங்கொடை மனிதன்’  (Balangoda Man) என்னும் வேறு விதமான மனிதர்கள் 35,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வந்ததாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெருத்த உடல், கழுத்து இல்லாத தோற்றம், சப்பை மூக்கு, துருத்திக் கொண்டிருக்கும் புருவப்பகுதி, கோரமான பற்கள் என்னும் தோற்றத்தில் இருந்த இந்த மக்கள், குபேரன் உருவம் என்று நாம் பார்க்கிறோமே அதை ஒத்து இருக்கிறது. இந்த உருவம் யக்ஷன் உருவம். இந்த உருவம் நம் கோயில் சுவர்களில், உத்தரத்தைத் தாங்கி நிற்கும் உருவங்களாகப் பார்க்கலாம். தென் கிழக்கு ஆசியா முழுவதும், இந்த உருவச் சிலைகளே காணப்படுகின்றன. இவனே இலங்கையின் ஆதி மனிதன்.

இந்த யக்ஷர்களை,  கைகசிக்குப் பிறந்த இராவணன் தனக்குக் கீழ்ப்படியுமாறு வத்திருந்திருக்கிறான்.  இராவணனது கழுத்து நன்கு அமைந்திருந்தது (வா-இரா: 5-22-24) கழுத்தே இல்லாத யக்ஷர்களுக்கு, சிறந்த கழுத்துடைய இராவணனைப் பார்த்தால், பத்து கழுத்துள்ளவன் போலத் தெரிந்திருக்கும். அதனால்தானோ என்னவோ, இராவணன் ‘தசக்ரீவன்’ – பத்து கழுத்துடையவன் – என்னும் பெயர் பெற்றானோ! அதனால் தசமுக இராவணன் எனப் பெயர் பெற்றிருப்பான்.

இராவணன் சொன்னதைச் செய்ய இந்த யக்ஷர்களும், தாய் வழியாக வந்த கருப்பர் இன மக்களும் இருந்திருக்க வேண்டும். சீதைக்குக் காவல் இருந்தவர்கள் அவர்களே. அவர்களைத் திருப்திப்படுத்த தண்டகாரண்யத்துக்கு அனுப்பி, வேண்டியபடி நர மாமிசம் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று இராவணன் விட்டிருப்பான். இராமன் வந்து அவர்கள் அனைவரையும் அழித்தான். ஆனால் இலங்கையில் இருந்த யக்ஷர்கள் பலரும் இராமன் மற்றும் சீதையின் கருணையால் உயிர் தப்பியிருப்பர். அவர்கள் கி.மு.6500 ஆண்டுகள் வரை இருந்த அடையாளம் ஆராய்ச்சியில் தெரிகிறது. அதற்குப் பின்னும் அவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். நாளடைவில் பல மாறுதல்களை அடைந்துள்ளனர். இன்று ‘வெத்தா’ (Vedda) எனப்படும் வேடுவர் மக்கள் அந்த யக்ஷர் (பலாங்கொடை மனிதன்) மரபணுவைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உருவ அமைப்பில் நம்மைப் போல இருக்கவே, நம்மைப் போன்ற மனிதர்களுடன் அவர்கள் கலந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

திரிகூட மலையடிவாரத்தில் யக்ஷர்கள் வாழ்ந்த குகைகள்

இராவணனைப் போன்ற ஆப்பிரிக்கக் கருப்பர் யாரும் இலங்கையில் இன்று இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் அன்றும் அதிகம் இருந்திருக்க மாட்டார்கள். மீதம் இருந்தவர்கள் இராவணன் காலத்துக்குப் பிறகு இலங்கையை விட்டு வெளியேறி இருப்பார்கள்.

இந்த விவரங்கள் மூலம் இராவணன் இருந்தது ஸ்ரீலங்கா என்னும் இலங்கைதான் என்று நாம் நிரூபித்தாலும், அவன் வாழ்ந்த காலம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே என்னும் தோற்றத்தை இந்தக் கட்டுரை எழுப்புகிறது என்ற எண்ணம் வருகிறது அல்லவா? அதையும் ஆராய்ந்து விடுவோம

 

References:

Sri Pada - Adam’s Peak: https://www.buddhanet.net/e-learning/buddhistworld/sri-pada.htm 

Mahayana Lankavatara Sutra:  https://huntingtonarchive.org/resources/downloads/sutras/08technicalMayayana/Lankavatara%20Sutra.doc.pdf

https://www.colombotelegraph.com/index.php/ravana-sinhala-buddhism-a-strained-relationship-ridden-with-contradictions/

Saman Deva: https://sripada.org/saman.htm