Thursday, April 16, 2020

Was Lord Ranganatha of Srirangam given by Sri Rama? (Tamil)


Reproducing here my reply to a query in my Tamil video of Indic Past detailing Chola connection to Rama's Ikshvaku dynasty.






#BoycottPaidDarshan திருவரங்கம் கோயில் வந்ததே ஒரு சோழ ராஜாவால் தர்மவர்மா என்று அவர் பெயர் அவர் தசரதன் நடத்திய.அஷ்வமேத யாகத்தில் பங்கேற்றதாகவும் ஶ்ரீரங்கம் கோயிலொழுகு கூறுகிறது. உறையூரை தலைமையிடம கக் கொண்டு ஆண்டு வந்திருக்கிறார். இதை பற்றியும் கொஞ்சம் கூற வேண்டும்.

My reply:

தசரதன் செய்த அஸ்வமேத யாகத்தில் தென் திசையில் உள்ள அரசர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு வசிஷ்டர் மந்திரிக்குக் கட்டளை இடுகிறார் (வா. ரா.- 1-13-28) அது ஒரு சான்று. அது சோழ அரசனையும் குறித்து இருக்க வேண்டும். ஆனால் சோழ நாட்டைப் பற்றி எந்த அறிகுறியுமே வாலமீகி ராமாயணத்தில் இல்லை. பாண்டியன் கவாடம், குடகில் அகஸ்தியர் என்றெல்லாம் வருகிறது. ஆனால் சோழனைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

இப்பொழுதுகுல தனம்’ பற்றிப் பார்ப்போம். பட்டாபிஷேகம் முடிந்து 'குல தனத்துடன்' விபீஷணன் திரும்புகிறான். (வா. ரா. 6-128 -90) மீண்டும் ராமன் மேலுலகம் செல்லத் தயாராகும் போது விபீஷணனிடம் இக்ஷ்வாகு குல தெய்வமான  'ஜெகந்நாதனை' வழிபடுமாறு ராமன் சொல்கிறான். (வா ரா 7-121)

இதற்கு முன்னால் ராமன் விஷ்ணுவை வழிபடுவதைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
பட்டாபிஷேகத்தை முன்னிட்டு அதற்கு முந்தின தினம், ராமனும், சீதையும், அவர்களது வீட்டில் சில நியமங்கள், பூஜைகளை செய்கிறார்கள். அப்பொழுது விஷ்ணுவை வழிபட்டார்கள் என்றும் விஷ்ணுவை முன்னிட்டு ஹோமம் செய்தார்கள் என்றும், அதன் பிறகு விஷ்ணுவின் இருப்பிடத்தில் (கோயிலில்) குசப் புல்லாலான பாயில் படுத்துறங்கினார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. (வா ரா 2-6) எனவே ராமன் தனக்கென்று விஷ்ணு உருவச் சிலையை வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அந்தச் சிலையே குல தனம் என்றால், யாராவது அதை மற்றவர்களுக்குக் கொடுப்பார்களா என்ற கேள்வி வருகிறது.

நிற்க,
இந்தக்குல தனம்’ என்னும் சொல் மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டில் தான் வருகிறது. ரங்கநாதரைக் குலதனமாகக் குறிப்பிடுகிறான். அது எப்படி திருவரங்கம் வந்தது என்பதற்கு செவி வழிக் கதை இருக்கிறதே தவிர, ஆதாரமாகக் காட்டும் வண்ணம் ஒன்றும் இல்லை. கோயில் ஒழுகில்   நீங்கள் சொல்வது போல இருந்தால் அது செவி வழியில் கலப்படமாக வந்துள்ளது என்றே தோன்றுகிறது. ஏனெனில் ராமன் காலத்தில் உறையூர் தலைநகரமாக இருந்திருக்க முடியாது. சிலப்பதிகாரம் காலம் வரை பூம்புகார் மையப்படுத்தப்பட்டுள்ளது.

சோழன், ராம பட்டாபிஷேகத்துக்கு வந்திருக்க முடியாது. ஏனெனில்
பட்டாபிஷேகம் திடுதிப்பென்று நடந்தது. முதல் நாள் ராமன் திரும்புகிறான், மறுநாள் பட்டாபிஷேகம், எனவே கூடவே வந்த விபீஷணன், சுக்ரீவன், வானரர்கள் போன்றவர்களைத் தவிர தொலை தூரத்திலிருந்து யாரும் வந்திருக்க முடியாது.
பட்டாபிஷேகத்தின் போதுதான் குலதனம்  கை மாறுகிறது. தசரதன் செய்த அஸ்வமேத யாகத்தின் போது கொடுக்கப்பட்டிருந்தால் அது ராமன் கொடுத்தது என்று சொல்ல முடியாது. அப்பொழுது ராமனே பிறக்கவில்லை.

எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது என்ன நடந்திருக்கும் என்று இப்படிச் சொல்லலாம்.

சோழ மன்னன், தசரதன் நடத்திய அஸ்வமேத யாகத்துக்கு வந்திருக்கக் கூடும். யாகத்தில் தரப்படும் தானமாக அவன் பல வஸ்துக்களையும் பெற்றிருக்கலாம். பட்டாபிஷேகத்தின் போது சோழ மன்னன் வந்திருக்க முடியாது. பட்டாபிஷேகம் ஆன   பிறகு  ராமன், அதுவரை தான் வழிபட்டுக் கொண்டிருந்த சிலையைப் பிறருக்குக் கொடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறது. முன்னமே அவன் வனவாசம் செல்லும் முன் தன் பொருட்கள் பலவற்றையும் தானம் அளிக்கிறான். இளவரசனாக அவனுக்கு என்று தனியாக வீடு, வாசல், தனம் என்று இருந்திருக்கிறது. பட்டாபிஷேகம் ஆனபிறகு அவன் இக்ஷ்வாகு குலத்தின் வழிபாட்டுச் சிலையை, அதாவது
 அவன் தந்தை வழிபட்ட தெய்வச் சிலையை வழிபட ஆரம்பித்திருக்க வேண்டும்.


அதன் காரணமாக அதுவரை தான் வழிபட்டுக் கொண்டிருந்த ரங்கநாதர் சிலையை விபீஷணனுக்குக் கொடுத்திருக்கிறான். அதை தங்கள் குலத் தோன்றலான சோழ குலத்துக்கே கொடுக்கச் சொல்லி இருக்கலாம். அந்த அளவுக்கு விளக்கங்களை வால்மீகி சொல்லவில்லை. 

 விபீஷணன் தான் திரும்பும் வழியில் சோழ தேசத்தில் சோழ மன்னனிடம் அந்தச் சிலையைக் கொடுத்திருக்கிறான். சோழனும் விபீஷணனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அதனைக் காவிரியின் ஆற்றிடைக் குறையில் எழுந்தருளச் செய்திருக்கிறான். ஆற்றிடைக் குறைக்கு இலங்கை என்று பெயர்!

பெருமாளையும் விபீஷணன் இருக்கும் திக்கு நோக்கி அமைத்திருக்கிறான். ராமன் விபீஷணனிடம் ஜெகந்நாதனை வழிபடு என்று சொன்னது சோழ நாட்டில் எழுந்தருளப்பட்ட ரங்கநாதனைத்தான் இருக்கும். அந்தக் குல தனம் விபீஷணனிடமே இருந்தால், ராமன் இப்படிச் சொல்ல அவசியமில்லை.

இத்தனை விவரங்கள் எங்கும் எழுதப்படாத அந்தக் காலத்தில், அங்கும் இங்கும் காணப்பட்ட தொடர்புகளைக் கொண்டு கோயில் ஒழுகில் அவ்வாறு எழுதப்பட்டிருக்க வேண்டும்.

மேல்கோட்டை செல்வப் பிள்ளையும், ராமனது பேத்தி - குஷனது மகள் திருமண சீதனமாகக் கொடுக்கப்பட்டது என்று ஒரு சொல் வழக்கு இருக்கிறது. செல்வப் பிள்ளையும், ரங்கநாதரும் ஒரே உருவ ஒற்றுமையுடன் இருப்பதைக் காணலாம். ஒரே காலக்கட்டத்தில், ஒரே அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டுமே ராமன் காலத்துடன் தொடர்பு கொண்டிருக்கவே தற்போது வழங்கி  வரும் இரண்டு பெருமாள் வரலாறும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.