Wednesday, September 9, 2009

மூதாதையர் குரல்



மூதாதையர் குரல்

via jeyamohan.in

by ஜெயமோகன் on 9/7/09

[5-  9 - 2009 அன்று கலிஃபோர்னியா ஃப்ரீமான்ட் நகரில் நடந்த கூட்டத்தில் ஆற்றிய உரை]


சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சி. எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியவர் 'சார் என் குரலை தெரியுதா?' என்றார். நான் தெரியவில்லையே என்றேன். 'நான் எம் ஜி ஆர் ரசிகன் சார்…உங்களை போனவருஷம் கூப்பிட்டு திட்டியிருக்கேன்" என்றார்


சென்றவருடம் நான் எழுதிய சாதாரணமான நகைச்சுவைக்கட்டுரைகளை ஆனந்த விகடன் பெரிதுபடுத்தியமையால் ஒரு விவாதம் எழுந்தது நினைவிருக்கலாம். அந்த விவாதத்தில் மனம் புண்பட்ட எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பலர் என்னை ·போனில் கூப்பிட்டு கடுமையாக வசை பாடினார்கள். அதில் ஒருவர் அவர்


எனக்கு குரல் தெரியவில்லை. இருந்தாலும் தெரிகிறது என்றேன். "சார் என்பேரு கணேசன், டெய்லரா இருக்கேன். நான்லாம் குடிச்சு சீரழிஞ்சவன் சார். வாத்தியார் படம்பாத்துத்தான் திருந்தினேன். இன்னைக்கு நல்லா இருக்கேன்…" என்றார் கணேசன் "…வாத்தியார் செத்தபிறகுதான் சார் நான்லாம் படமே பாக்க ஆரம்பிச்சேன். அவரு என் தெய்வம். அவர நீங்க கிண்டல் பண்ணினதாலே கொஞ்சம் ஜாஸ்தியா பேசிட்டேன். மன்னிச்சுக்குங்க…"


"பரவாயில்லை.உங்க மனசு எனக்கு புரியுது…" என்றேன். "அதில்லை சார்…நான் ரொம்ப ஓவரா பேசிட்டேன். மன்னிச்சுக்குங்க…" என்றார் அவர். "சரிங்க" என்றேன். "மனசிலே ஒண்ணும் வைச்சுக்காதீங்க சார்" "இல்லைங்க கணேசன்..நான் அதை அப்பவே விட்டாச்சு…"


"இல்ல சார், இப்ப எனக்கு பையன் பொறந்திருக்கான். என் மனைவி என்ன சொல்றான்னா நீங்க சரஸ்வதி கடாச்சம் உள்ளவரு. உங்களை திட்டினதனாலே பையனுக்கு படிப்பு வராம போயிடும்கிறா சார்…" எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை "அதெல்லாம் ஒண்ணும் இல்லை கணேசன்…"என்றேன்


"நீங்க என்னைய மன்னிக்கணும் சார். பையனை ஆசீர்வாதம் பண்ணணும்.." "கண்டிப்பா…பையனுக்கு என்னோட ஆசீர்வாதம் முழுக்க உண்டு…" "பையனுக்கு முனியராஜ்னு பேருசார்.." "முனியராஜுக்கு நல்லாவே படிப்பு வரும். நான் ஆசீர்வாதம் பண்ணியாச்சு …" "ரொம்ப தாங்க்ஸ் சார்…ஊருக்கு வந்தா புள்ளைய பாக்க எங்கூட்டுக்கு வாங்க சார்"


கணேசனின் மனநிலையைக்குறித்தே யோசித்துக்கொண்டிருந்தேன். அவருக்கு எழுத்தாளனைப்பற்றியோ இலக்கியம் பற்றியோ ஒன்றும் தெரியாது. ஆனால் 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்' என்ற ஞானம் அவருக்கு நம் மரபால் அளிக்கப்பட்டிருக்கிறது. சமீபகாலமாக் நம் நாட்டில் ஒருவேளை கல்வி பரவலாக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் கல்வியை வழிபடும் ஒரு மனநிலை எப்போதும் எங்கும் இருந்துகொண்டிருக்கிறது.


இப்போது தென் தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரிலும் அருகிலும் புராதனமான தாழிகளும் பானைகளும் கிடைக்கின்றன. குறைந்தது ஐயாயிரம் வருடப் பாரம்பரியம் கொண்ட ஒரு நாகரீகத்தின் சாட்சியங்கள் அவை. அவற்றை ஆராய்ந்த ஐராவதம் மகாதேவன் போன்ற ஆய்வாளர்கள் சொல்லும் முக்கியமான ஒரு கருத்து உள்ளது. அவற்றில் அன்றாட உபயோகத்துக்குரிய மண்பானைகளில்கூட எழுத்துக்கள் உள்ளன. அதாவது எழுத்து என்பது தினசரி வாழ்க்கை சார்ந்ததாக இருந்திருக்கிறது. சாதாரணமாக பானைகளை புழங்கியவர்களுக்குக் கூட எழுத்தும் வாசிப்பும் தெரிந்திருக்கிறது. கல்வி பரவலாக ஆகிவிட்டிருந்த ஒரு காலகட்டம் அது. எத்தனை தொன்மையான காலம் அது! இன்று நாகரீகம் மிக்க நாடுகளாக இருக்கும் பல பிரதேசங்களில் சுட்டுத்தின்னத்தெரியாத தொல்குடிகள் வாழ்ந்திருந்த காலம்!  உலகின் பெரும்பாலான பகுதிகளில் மனிதர்கள் வேட்டைக்கருவிகளையோ ஆடைகளையோ கண்டறிந்திராத காலம்!


அந்த மரபு தொடர்ச்சியாக இருப்பதையே நாம் சங்க காலத்தில் காண்கிறோம்.

காமம் காமம் என்ப
காமம் அணங்கும் பிணியும் அன்றே, நினைப்பின்
முதைச்சுவர் கலித்த முற்றா இளம்புல்
மூதாதைவந்தாங்கு
விருந்தே காமம் பெருந்தோளாயே


பெரிய தோள் கொண்டவனே, காமம் காமம் என்று சொல்கிறார்களே அது  தெய்வம் ஆவேசிப்பதோ அல்லது நோயோ அல்ல. நினைத்துப்பார்த்தால் மேட்டு நிலத்தில் முளைத்த இளம்புல்லை பல்போன பசு சப்பிப்பார்ப்பதைப்போல ஒரு தீரா விருந்து
என்ற அபாரமான கவிதையை பாடியவன் கொல்லன் அழிசி.


இரும்படிக்கும் தொழிலாளி. ஆனால் இக்கவிதை தொழிலாளர் பாடும் ஒரு நாட்டுப்புறப்பாடல் அல்ல. கனகச்சிதமான செவ்வியல் வடிவம் கொண்டது. ஒரு சொல் கூட இதில் மிகை இல்லை. கவிதை சொல்லியதைவிட சொல்லாது குறிப்புணர்த்திய விஷயங்களாலேயே தன்னை நிகழ்த்துகிறது. இரண்டாயிரம் வருடத்தில் கவிதையிலக்கணம் எத்தனையோ முறை மாறியபின்னரும் அழியாத கவித்துவம் கொண்டது. என்றும் நிலைத்திருக்கும் மகத்தான விவேகம் ஒன்றை முன்வைக்கிறது.


செவ்வியல் சாதாரணமாக உருவாகி வரக்கூடியதல்ல. செவ்வியலுக்குபின்னால் ஒரு நீண்டகால இலக்கிய வரலாறு இருந்தாகவேண்டும். கவிதைகள் எழுதப்பட்டு வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு செம்மைசெய்யப்பட்டு வந்திருக்க வேண்டும். அதன் விளைவாக அச்சமூகத்தில் கவிதையின் வடிவம் குறித்தும் உள்ளடக்கம் குறித்தும் ஒரு தெளிவு உருவாகி வந்திருக்கும். அதுவே செவ்வியல் இலக்கணமாக ஆகிறது


மேலும் அச்சமூகம் ஒரு பெரும் பண்பாட்டு பின்புலம் கொண்டதாக இருக்கவேண்டும். குடிமைநீதி கொண்டதாக, தத்துவ விவாதம் நிகழ்ந்து கொண்டிருப்பதாக அச்சமூகம் இருந்தாகவேண்டும்.  அப்போதுதான் செவ்வியலின் சாராம்சமாக இருக்கும் விவேகத்தை அச்சமூகம் அடைய முடியும். அதாவது கொல்லன் அழிசி ஒரு தனி மனிதன் அல்ல. அவன் ஒரு பெரும் பண்பாட்டு மரபின் துளி. கல்வி ஓங்கியிருந்த ஒரு சமூகத்தின் பிரதிநிதி


இங்கே அமெரிக்காவெங்கும் சென்றபோது நான் மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஒரு கேள்வி உண்டு. என்ன ஆயிற்று இந்தியாவுக்கு என்று. இந்திய மரபின் பெருமைகளை நாம் பேசுகிறோம்.  ஆனால் நாம் பழைமையை எண்ணி மட்டுமே பெருமைகொள்ள வேண்டிய ஒரு மக்கள்கூட்டம் மட்டும்தானா? நண்பர்களே, இக்கேள்வியை என்னிடம் கேட்காதவர்களே அனேகமாக கிடையாது.


அதற்கு நான் ஒரு சிறு வரலாற்றுச் சித்திரத்தை அளிப்பதுண்டு. வரலாற்றில் எப்போதும் நிகழும் ஓர் அபத்தமான பரிணாமகதி.
ஹெர்மன் ஹெஸ்ஸி 'நகரம்' என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அந்தக்கதை ஒரு நகரம் நூற்றாண்டுகள் வழியாக எப்படி பரிணாமம் கொண்டது என்பதைப் பற்றிய ஒரு சுருக்கமான கவித்துவமான சித்திரம். அந்நகரம் முதலில் வேட்டைக்காரர்கள் ஓய்வெடுக்கும் மையமாக உருவாகியது. பின்னர் அந்தவேட்டைக்காரர்கள் ஒரு குடியாக ஆனார்கள். உக்கிரமான போர்வீரர்களாக மாறினார்கள். அவர்கள் பிற நிலப்பகுதிகளை தாக்கிக் கொள்ளையடித்தார்கள். கொள்ளையடித்த செல்வத்தால் மேலும் ஆயுதங்களை செய்தார்கள். அந்த ஆயுதத்தால் மேலும் கொள்ளையடித்தார்ககள்.


மெல்ல மெல்ல அந்நகரம் செல்வ வளம் மிக்கதாக ஆகியது.செல்வம் உயர்பண்பாட்டை உருவாக்கியது. கல்வியை வளர்த்தது. கல்வி மேலும் சிறப்பான விழுமியங்களை உருவாக்கியது. கலைகளும் இலக்கியங்களும் வளர்ந்தன. அந்நகர மக்கள் பண்பட்டவர்களாக ஆனார்கள். காலம் செல்லச்செல்ல அம்மக்கள் போரை மறந்தார்கள். வன்முறையை இழந்து நுண்ணிய மனம் கொண்ட சான்றோர்களாக ஆனார்கள்.
அந்நிலையில் அருகே இருந்த இன்னொரு காட்டுப்பகுதியில் வாழ்ந்த ஒரு வேட்டைக்குழுவினர் ஆயுதங்களுடன் திரண்டு வந்து அந்நகரத்தை தாக்கினார்கள்.  அந்த மூர்க்கமான மக்களை இந்த நகரத்து மக்களால் எதிர்கொள்ள முடியவில்லை. நகரம் சூறையாடப்பட்டது.  எரியூட்டப்பட்டது.  அந்நகரின் செல்வம் முழுக்க அதைவிட்டு அகன்றது. அது நினைவுகளின் நகரமாக ஆகிறது.


இதுவே மானுட வரலாறு. இந்திய வரலாற்றில் ஒரே ஒரு வித்தியாசம்தான். இந்தியா  வன்முறைமூலம் பிறரை சூறையாடுவதன்மூலம் அதன் செல்வத்தை அடையவில்லை.  அதற்கான தேவை அதற்கு இருக்கவில்லை. முடிவிலாத இயற்கை வளம் மிக்க மண் அதற்கு வாய்த்தது. ஜீவநதிகளின் கரையில் அதன் நாகரீகம் வளர்ந்தது.


பத்தாம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வரலாறு என்பது செல்வச்செழிப்பின் பண்பாட்டுச்செழிப்பின் வரலாறு. அதன் பின்னர் வரண்ட பாலைநில மக்களின் மூர்க்கமான தாக்குதல்களால் அதன் அனைத்து அமைப்புகளும் ஆட்டம் கண்டன. பேராலயங்கள் இடித்தழிக்கப்பட்டன. நகரங்கள் குலைந்தன. தட்சசிலா பல்கலையும் நாலந்தா பல்கலையும் எரியூட்டப்பட்டன. இந்த மண்ணின் வளர்ச்சியும் மேன்மையும் தேக்கம் கண்டன.


காந்தாரம் முதல் துருக்கி வரை பரவியிருந்த அந்த  பாலைநில மக்களுக்கும் பின்னர் அதுவே நிகழ்ந்தது. அவர்கள் கீழை நாடுகளைச் சூறையாடிப் பெற்ற செல்வத்தால் செழித்தார்கள். காலப்போக்கில் உயர்பண்பாட்டை உருவாக்கினார்கள். அவர்களை சூறையாட மங்கோலியப் பாலைநிலத்தில் இருந்து ஜெங்கிஸ்கான் கிளம்பி வந்தான்.


வரலாறு அளித்த பெரும் அடிகளுக்குப்பின் இந்த தேசம் மீண்டும் தளிர்த்தது இரண்டு வழிகளில். ஒன்று இந்த மண்ணின் பன்முகத்தன்மையை உணர்ந்து இதை மீண்டும் கட்டி எழுப்பிய விவேகம் மிக்க முகலாய ஆட்சியாளர்களால். அக்பர்,  ஜகாங்கீர், ஷாஜகான் ஆகியோரின் ஆட்சியில் பல சிக்கல்களையும் தாண்டி இந்த தேசம் இன்னொரு வகையில் தன்னை திரட்டிக்கொண்டு மேலெழுந்தது.  இந்நிலப்பரப்பில் உறுதியான ஆட்சியும் பொருளியல் நிர்வாகமும் உருவாகியது. இந்தன் செல்வம் அன்னியப்படைகளால் சூறையாடப்படாமல் காக்கப்பட்டது


இன்னொன்று முகலாய ஆட்சிக்கு எதிராக எழுந்த இரு பேரரசுகளால். முதலில் விஜயநகரப்பேரரசு. பின்னர் மராட்டியப்பேரரசு. இந்நாட்டின் பண்பாட்டுப்பாரம்பரியம்  அவர்களால் பாதுகாப்பட்டது. நாம் இன்று காணும் பண்பாட்டுச் சின்னங்கள் அனைத்துமே அவர்களால் உருவாக்கப்பட்டன. பின்னடைவிலிருந்து சற்றே மீள நாம் முயன்ற காலம் இது எனலாம்.


ஆனால் நமக்கு வரலாறு மேலும் அடிகளை வைத்திருந்தது.  முகலாய அரசு மீது ஜெங்கிஸ்கானின் பலத்த தாக்குதல் நிகழ்ந்தது. அந்த மரண அடியில் இருந்து அது மீளவேயில்லை. டெல்லி ஆட்சி வலுவிழந்து சிதறியது. மராட்டிய, விஜயநகர அரசுகள்  அந்த சிதறிய அரசின்  பகுதிகளுடன் மோதி சீரழிந்தன. இந்தச்  சிதறிய துண்டுகள் ஒன்றுடன் ஒன்று போராடின. இந்தியா முழுக்க போரின் அழிவும் அராஜகமும் நிலவியது. நாம் மேலும் பின்னடைவை சந்தித்தோம்.


நமது பண்பாடு முந்நூறு வருடப்பின்னடைவைச் சந்தித்த அதே காலகட்டத்தில் ஐரோப்பாவில் அவர்களின் பண்பாடு பலமடங்கு வேகத்துடன் முன்னோக்கிப் பாய்ந்தது. அவர்கள் உலகையே காலனியாக்கினார்கள். நம்மை அவர்கள் அடிமை கொண்டார்கள்.


ஒரு சமூகம் இயற்கையை எதிர்கொள்ளும் சவால்கள் மூலம் அது தன் தனித்தன்மைகளை உருவாக்கிக் கொள்கிறது என்று சொல்லலாம். நமது பண்பாட்டு வெற்றிகள் இந்திய நிலத்தின் நதிகளாலும் மழையாலும் காடுகளாலும் மக்கள் பெருக்கத்தாலும் நாம் அடைந்தவை.


அப்படிப்பார்த்தால் எந்த இயற்கைச் சக்தி ஐரோப்பாவை உருவாக்கியது? ஒன்று, குறைவான மக்கள்தொகை. இரண்டு, குளிர்காலம். மூன்று கடல்வழித்தொடர்பின் கட்டாயம். மக்கள்தொகைக்குறைவும் குளிரும் அவர்களை கருவிகளையும் இயந்திரங்களையும் நோக்கித்தள்ளிக்கொண்டே இருந்திருக்கிறது. குளிர் காரணமாக புதிய எரிபொருட்களுக்கான நிரந்தரமான தேடலில் இருந்தார்கள். கடல் அவர்களை மாலுமிகள் ஆக்கியது. குளிர் இல்லையேல் நிலக்கரியை கண்டிருக்க மாட்டார்கள். ஆவிக்கப்பல்கள் தோன்றியிருக்காது. புதிய வணிக வழிகளை, வெடி ஆயுதங்களை அறிந்திருக்கமாட்டார்கள். உலகம் மீது அவர்களுக்கு மேலாதிக்கம் உருவாகியிருக்காது.


உண்மையில் இதெல்லாம் ஊகங்கள். சில பகுதிகள் சில வரலாற்றுச் சந்திகளில் ஏன் எழுந்து வருகின்றன என்பது ஒரு வரலாற்றுப்புதிர் தான். எப்படியோ ஐரோப்பா உலகத்தை உண்ண ஆரம்பித்தது. பேரரசுகள் பெரும் நிலப்பகுதிகளை கொள்ளையடித்தே உருவாக முடியும். ஐரோப்பாவில் ஒரே சமயம் எட்டு பேரரசுகள் உருவாயின. அவர்களுக்கு பூமி போதவில்லை


நண்பர்களே, இந்தியா பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் ஒரு சீரழிந்த நிலையை அடைந்திருந்தது. அந்த சீரழிந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு காலனிய ஆட்சிகள் இந்தியாவில் வேரூன்றின. முதலில் போர்ச்சுகல் ஆட்சி. பின்னர் டச்சு ஆட்சி. பின்னர் பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும்

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நிலையான உறுதியான ஆட்சி ஒன்றை உருவாக்கினார்கள். புறவயமான நீதியமைப்பை நிறுவினார்கள். போக்குவரத்து துறையை நவீனப்படுத்தி இந்தியா நவீனமயமவதை தொடங்கி வைத்தார்கள். ஆனால் பதினொன்றான் நூற்றாண்டு துருக்கிய ஆப்கானிய படையெடுப்புக்குப் பின்னர் இந்தியாவின் செல்வம் பெருமளவில் கொள்ளை சென்றது பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்திலேயே.


நமது பேரிலக்கியங்களை எடுத்துப்பார்த்தால் பஞ்சங்களைப் பற்றிய குறிப்புகள் வந்தபடியே இருக்கின்றன. மகாபாரதத்திலேயே மழை பெய்யாமல் அங்கநாடு வரண்டதைப்பற்றிய குறிப்பு உள்ளது.  ஐவகை நிலமும் வயின் வயின் திரிந்து பாலை ஆகும் என்று  தமிழிலக்கணம் சொல்கிறது.  காரணம் நம் நாடு பருவமழையை நம்பி இருக்கும் பகுதி. ஆனால் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சாகும் பெரும் பஞ்சங்களை நாம் சந்தித்ததே இல்லை! அதைப்பற்றிய குறிப்பே நம் இலக்கியத்தில் இல்லை.


ஏன் என்றால் பாலைநிலங்களில் பஞ்சத்தால் மக்கள் மடிவதில்லை என்பதே காரணம். பஞ்சம் வருமென அவர்களுக்குத் தெரியும். அதைச் சமாளிக்க அவர்கள் பயின்றிருப்பார்கள். அதற்கான சமூகஅமைப்புகள் அவர்களிடம் இருக்கும்.


இந்தியாவெங்கும் இருந்த பொது நிதி அமைப்பு பஞ்சம் தாங்கும் தன்மை கொண்டது. சில இடங்களில் விளைச்சலில் நாலில் ஒருபங்கு கூட வரியாக விதிக்கப்பட்டிருந்தது. அவற்றில் நேர் பாதி அந்தந்த இடங்களில் கோயில்களிலும் பிற களஞ்சியங்களிலும் சேமிக்கப்பட்டது.


பஞ்சம் வரும்போது பெரும் பொதுக்கட்டுமானங்கள் செய்யபப்ட்டன. இந்தியாவின் பெரும் கோபுரங்கள் பெரும்பாலும் பஞ்ச காலத்தில் கட்டப்பட்டவையே. ஏரிகள் பஞ்ச காலத்தில் வெட்டப்பட்டவையே.  கோபுரம் கட்டினால் பஞ்சம் நீங்கும் என்ற நம்பிக்கையாக இந்த பொருளியல் திட்டம் அக்காலத்தில் இருந்தது. அவ்வாறு செல்வம் வினியோகம் ஆகி பஞ்சம் நீங்கியது– கீய்ன்ஸின் பொருளியல் கொள்கையேதான்


ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி உருவான ஐம்பதே வருடத்தில் அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆண்ட பகுதிகளில் கடுமையான பஞ்சம் வந்தது. 1776ல் வந்த முதல் பஞ்சத்தில் கிட்டத்தட்ட 35 லட்சம் பேர் செத்து அழிந்தார்கள். கிரேட் பெங்கால் ·பேமைன் என்று சொல்லப்படுகிறது இது. தமிழில் தாது வருடப்பஞ்சம் என்று.


அதுவரை நாம் அத்தகைய பஞ்சத்தைப் பார்த்ததில்லை. ஆகவே நம் நாட்டுப்புற இலக்கியங்களில் எல்லாமே அந்தப் பஞ்சத்தைப்பற்றிய வருணனைகள் திகட்டத் திகட்ட இடம்பெற்றன. மீண்டும் அடுத்த பெரும் பஞ்சம் 1884ல் வந்தது. 15 லட்சம் பேர் இறந்தார்கள்.

ஏன் இத்தனை மரணம்? ஏன் என்றால் பஞ்சத்தை சமாளிக்கும் இந்திய அரச அமைப்புகள் அனைத்தும் பிரிட்டிஷ் ஆட்சியால் செயலிழக்க வைக்கப்பட்டிருந்தன என்பதே. இந்திய சமூகத்தில் இருந்த உபரி சேமிப்பு முழுக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஒட்டச்சுரண்டப்பட்டிருந்தது. பல நூற்றாண்டுகளாக இந்திய அரசாங்கத்திலும் கோயில்களிலும் நிலப்பிரபுக்களிலும் சேர்ந்திருந்த செல்வம் முழுக்க வெளியே போய்விட்டது!


பிரிட்டிஷ் வரிவசூல் முறையே இதற்குக் காரணம். சிறுகச் சிறுக வரியை ஏற்றிக்கொண்டே இருந்தார்கள் பிரிட்டிஷார். அவர்கள் ஐரோப்பாவில் நடத்திய எல்லா போர்களுக்கும் இந்தியாவில் வரி வசூல் செய்தார்கள். எத்தனை வரிபோட்டும் அவர்களின் உலக அரசாங்கத்தின் போர்ச்செலவை சமாளிக்க பணம் போதவில்லை.

பிரிட்டிஷார் தாங்கள் ஆண்ட பகுதிகளில் ஜமீந்தார்களை நியமித்து அவர்களிடம் வரி வசூலித்தார்கள். தங்களுக்குக் கட்டுப்பட்ட மன்னர்களிடம் ஒட்டுமொத்த வரிவசூல் செய்தார்கள். அதாவது வரிவசூல் செய்வது மட்டுமே அவர்களின் வேலை. ஆட்சி செய்ய வேண்டியவர்கள் இந்திய மன்னர்களும் ஜமீந்தார்களும்தான். இந்தியாவின் எந்த பிரச்சினைக்கும் பிரிட்டிஷார் பொறுப்பல்ல. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய மக்களுக்கு எதுவுமே செய்யவேண்டியதில்லை. தங்கள் ஆட்சி வசதிக்காக சில இடங்களில் சாலைகளையும் ரயில்பாதைகளையும் தபால்நிலையங்களையும் அமைத்தது தவிர அவர்கள் எதையுமே செய்யவில்லை.


ஒட்டச்சுரண்டப்பட்ட இந்தியாவில் முதலில் மன்னர்களிடம் இருந்த செல்வம் போயிற்று.பிறகு கோயில் செல்வங்கள் போயின. கடைசியாக தனிப்பட்ட விவசாயிகள் வைத்திருந்த குறைந்தபட்ச சேமிப்புகள் கூட பறிபோயின. அதன்பின் பஞ்சம் வந்தபோது மக்கள் கூட்டம் கூட்டமாக செத்துக்குவிந்தார்கள். இன்று கிழக்கே ·பிஜி தீவுகள் முதல் மேற்கே வெஸ்ட் இண்டீஸ் தீவுகள் வரை உலகம்  பரவியிருக்கும் இந்தியர்கள் அந்த பெரும்பஞ்சங்களில் ஒருவேளை சாப்பாட்டுக்காக தங்களைத்தாங்களே அடிமைகளாக விற்றுக்கொண்டவர்கள்தான்


இந்தப் பெரும்பஞ்சங்களில் மக்கள் சாகும்போதே பிரிட்டிஷ் ஆட்சி பஞ்சாபில் இருந்து கோதுமையை தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றது. தென்னகத்தில் இருந்த காடுகளை வெட்டி மரங்களைக் கொண்டு சென்றது. இதற்கு அப்பால் லார்ட் வேவல் பஞ்சத்துக்கு ஒரு விளக்கமும் அளித்தார். பிரிட்டிஷ் ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்தமையால் நிறைய சாப்பிட்டுவிட்டார்கள். ஆகவேதான் பஞ்சம் வந்தது என்று. அவர்தான் நம் ஜார்ஜ் புஷ்ஹ¤க்கு முப்பாட்டா!


இந்தியா சுதந்திரம் கிடைக்கும்போது பஞ்சப்பராரி நாடாக இருந்தது நண்பர்களே. 1943ல் தென்னகத்தில் வந்த பஞ்சத்தில் பல்லாயிரம்பேர் செத்தார்கள். மீண்டும் 1950களில் வடக்கே வந்த பஞ்சத்தில் பல்லாயிரம்பேர் தெருவுக்கு வந்தார்கள்.


ஆனால் இப்போது நேரு தலைமை தாங்கிய அரசாங்கம் இருந்தது. உலகம் முழுக்க கையேந்தி பிச்சை எடுத்து மக்களைக் காப்பாற்றினார் நேரு. இக்காலகட்டத்தில் அமெரிக்கா செய்த உதவி என்றும் இந்தியா நினைக்கத்தக்கது. அப்போதைய  அமெரிக்க தூதர் மொய்னிகான் இந்தியாவுக்கு 'டு த பீப்பிள் ஆ·ப் இண்டியா' என்று எழுதிய செக் தான் உலக வரலாற்றிலேயே ஒரு தர்மகாரியத்துக்காக எழுதப்பட்ட மிகப்பெரிய செக் என்று ஹ¥ஸ்டனில் ஆய்வாளர் நா.கணேசன் சொன்னார். நூறுகோடி இந்திய ரூபாய்! அந்த நன்றிக்கடனுக்காக இந்தியா அமெரிக்காவுக்கு ஐந்துகோடி ரூபாய்க்கு புத்தகங்கள் அளித்ததாம். அந்நூல்கள் இன்றும் பெர்க்கிலி பல்கலையில் உள்ளனவாம்.


அந்த நாடு எப்படி முன்னேறியது? முதல் இருபது வருடம் உலகம் முழுக்க சென்று சமாதானக்கொடியை பறக்கவிட்டுக்கொண்டே இருந்தார் நேரு. கையிருப்பின் எல்லா செல்வத்தையும் செலவழித்து அணைகள் கட்டினார். இந்திய விளைநிலத்தின் அளவை நாற்பது சதவீதம் பெருக்கினார். அதன் விளைவாக பஞ்சம் அழிந்தது. இந்தியா உணவை உபரியாக உற்பத்தி செய்தது. பொதுத்துறையை நிறுவி மெல்ல மெல்ல இந்திய தொழில்களை உருவாக்கி வளர்த்தார்


வெறும் ஐம்பதாண்டுகள். இன்று உலகின் மாபெரும் வளரும் பொருளாதாரங்களில் ஒன்று நம்முடையது. சிந்தித்துப்பாருங்கள் பஞ்சத்தால் மக்கள் சாகும் எத்தியோப்பியா 2060 ல் ஓர் உலக பொருளியல்சக்தியாக ஆகுமென்றால் அது எத்தனை பெரிய ஆச்சரியம்! அந்த ஆச்சரியம்தன் இந்தியாவில் நடந்தது!


இந்தியாவின் இறந்த காலத்துக்காக மட்டுமல்ல அதன் நிகழ்காலத்துக்காகவும் நீங்கள் பெருமைப்படலாம். ஆம், நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.நம்மிடம் வறுமை இருக்கிரது. ஊழல் இருக்கிறது. எத்தனையோ சமூகத்தீமைகள் இருக்கின்றன. ஆனால் நாம் வந்த தூரம் அதிகம். பிரமிப்பூட்டும் அளவுக்கு அதிகம்.


நண்பர்களே அது இந்த அமெரிக்கா வந்த தூரத்தைவிட அதிகம் என்றால் ஆச்சரியப்படுவீர்க்ள். சொல்லப்போனால் மொத்த ஐரோப்பா வந்த தூரத்தை விட அதிகம்! சிந்தனை செய்து பாருங்கள். அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கனடாவும் அந்த புதிய நிலத்தின் அளவில்லாத கனிவளத்தை பயன்படுத்தத்த்தான் நவீன மயமாவதற்கு தேவையான முதலீட்டை உருவாக்கிக் கொண்டன. உலகநாடுகளில் பாதியை காலனியாக ஆக்கி சுரண்டி அந்தச் செல்வத்தை பயன்படுத்திக்கொண்டுதான் ஐரோப்பா நவீனமயமாகியது


நவீனமயமாதல் என்பது மூன்று தளங்கள் கொண்டது. ஒன்று நவீன போக்குவரத்து, செய்தித்தொடர்பு , நவீனக் கல்வி ஆகியவற்றின் மூலம் ஒரு சமப்படுத்தபப்ட்ட தரப்படுத்தப்பட்ட சமூகத்தை உருவாக்குதல். இரண்டு, நவீன தொழில் உற்பத்தி முறைகள் மூலம் ஒட்டுமொத்த பொருளியல் அமைப்பை உருவாக்குதல். மூன்று நவீன ஜனநாயக அரசு. இதில் முதல் மூன்றுக்கும் பெரும் முதலீடு தேவை


நாம் பட்டினிதேசமாக ஆரம்பித்தோம். முதலீடே இல்லாமல் நவீன யுகத்தில் நுழைந்தோம்.  எப்படி நாம் நம்மை உருவாக்கிக் கொண்டோம்?   ஒரு முப்பது வருடத்தை உங்களால் பார்க்கமுடிந்தால் அதைக் கண்கூடாகவே காணமுடியும்.  வெறும் மேய்ச்சல்நிலமாக இருந்ததுதான் கொங்குமண்டலம். அங்கே சுற்றிலும் பரம்பிக்குளம் ஆளியாறு மேல்பவானி கீழ் பவானி அமராவதி குந்தா என அணைகள் எழுந்தன . மக்கள் மண்ணில் குடும்பம் குடும்பமாக இரவுபகலாக  உழைத்தார்கள்


கொங்குநாட்டில் வயல் தோறும் ஒரு கூழாங்கல் மலை இருக்கும். வேளாண்மைக்கு தகுதியற்ற கூழாங்கல் நிலம் அது. கையாலெயே கூழாங்கற்களை பொறுக்கி பொறுக்கி அதை விளைநிலமாக ஆக்கினார்கள் நம் மக்கள். வேளாண்மையில் கிடைத்த செல்வத்தை உண்ணாமல் உடுக்காமல் பைசா பைசாவாகச் சேர்த்து தொழில்களில் முதலீடு செய்தார்கள். இன்று கொங்குமண்டலத்தில் வருடத்துக்கு ஏறத்தாழ ஒருலட்சம்கோடி ரூபாய் புரள்கிறது என்கிறார்கள். அப்படி எத்தனை சமூகங்கள் இந்த ஐம்பது வருடங்களில் எழுந்து வந்திருக்கின்றன இந்தியா எங்கும். அவைதான் இந்தியாவை மீண்டும் கட்டிஎ ழுப்பிய சக்திகள்.



எந்த மனநிலை நம்மை உருவாக்கியது? இரண்டு அடிபப்டைக்கூறுகளை நான் சுட்டிக்காட்டுவேன். ஒன்று நம் குடும்ப அமைப்பு.  நம்மில் பெரும்பாலானவர்களின் தாத்தாக்கள் பட்டினி கிடந்தவர்கள்தான். மாடுமேய்த்தவர்கள். பொட்டலில் உழுதவர்கள். அவர்கள் தங்கள் ஒவ்வொரு துளி குருதியையும் வியர்வையாக்கி தங்கள் அடுத்த தலைமுறையை உருவாக்கினார்கள். நம் அப்பாக்கள் பள்ளிக்குச் சென்றார்கள்.நம் அப்பாக்களின் குருதியை உண்டு நாம் கல்லூரிக்குச் சென்றோம்.


ஒவ்வொரு குடும்பமும் தன்னைத்தானே மேலே தூக்கிக் கொள்ள கணம்தோறும் உழைக்கிறது இந்தியாவில். ஒவ்வொரு தனி மனிதனுக்குப் பின்னாலும் ஒரு குடும்பம் கண்விழித்திருக்கிறது. வெற்றி பெற்ற ஒவ்வொருவரைத்தொடர்ந்தும் ஒரு குடும்பம் மேலெழுந்து வருகிரது. அது நம்முடைய மிகப்பெரிய ஆற்றல். நமது குடும்ப விழுமியங்கள் நம்மை உருவாக்கிய பெரும் சக்தி


அதைவிட முக்கியமானது நமக்கு கல்விமேல் உள்ள அபரிமிதமான பற்று.  ஒவ்வொரு சாமானியனும் கல்வியை உள்ளூர மதிக்கும் தன்மை . தன் மகனுக்கு சரஸ்வதி கடாட்சம் வேண்டும் என்று சொன்ன அந்த எளிய தொழிலாளி ஒரு பெரும் பண்பாட்டின் சாரமான மனநிலையை வெளிக்காட்டுகிறார்.


ஆதிச்சநல்லூரில் உறங்கும் நம் மூதாதையர் நமக்கு விட்டுச்சென்ற செய்தி அதுவே. நாம் தோற்காதவர்கள். எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் எழும் மாபெரும் தேசம் நாம். 'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு' என உணர்ந்தவர்கள். அந்த செல்வமே நமக்கு பிற அனைத்துச் செல்வங்களையும் அளிக்கக்கூடியது



அந்த தேசத்துக்காக பெருமைப்படுங்கள். எங்கே வாழ்ந்தாலும் அந்த மகத்தான மண்ணின் அதில் உறங்கும் மூதாதையரின் வாரிசுகள் என்பதை மறவாதிருங்கள். அமெரிக்கா முழுக்க இதையே நான் சொன்னேன். அதை மீண்டும் இங்கே உறுதி செய்து முடிக்கிறேன். நன்றி





No comments: