Monday, May 6, 2013

தமிழர்களே! ராம சேதுவைக் காக்க ஒன்றுபடுங்கள் (please and share)

மூலக்கட்டுரை: http://jayasreesaranathan.blogspot.in/2013/02/all-tamils-must-unite-to-save-ram-setu.html

தமிழாக்கம்: திரு டி.ஜி. ஸாரநாதன்

 

ரா சேது மீண்டும் செய்திகளில்! இம்முறை காங்கிரஸ் கூட்டணி அரசு, அந்த அரசாலேயே நியமிக்கப்பட்ட புகழ் பெற்ற விஞ்ஞானி பசௌரி தலைமையிலான கமிட்டி கூறியுள்ள, அணையைப் பாதுகாத்து, சுற்றுச் சூழல் கெடாமல் இருப்பதற்கு ராம சேது அணையை இடிக்க வேண்டாம் என்ற   பரிந்துரைகளை நிராகரித்துள்ளது. கருணாநிதியும் "சேது சமுத்திர திட்டத்தை" தீய சக்திகள் தடுக்கின்றனர் என்று பொய்ப் பிரச்சாரம் செய்ய மே 15ம் நாளை எழுச்சி நாள் என்று அறை கூவியுள்ளார்.

இதே வலைப்பதிவில்,  ராம சேது அணையை ஏன் உடைக்கக் கூடாது என்பதைப் பற்றி நிறைய கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த அணையைத் தகர்த்து விட்டால், ஸ்ரீலங்கா, தென் தமிழ் நாடு, கேரளா முதலியவை , சுனாமியால் அழிக்கப்படும் அபாயம் உள்ளது.  அதுமட்டுமன்றி  மிக அரிய தோரியம் தாதுப் பொருட்கள், இந்திய சமுத்திரத்தில் வீசி எறியப்பட்டு உபயோகமில்லாமல் போய்விடும். இந்தக் காரணங்கள் போதாது என்றால், இந்த அணையை ஹிந்துக்களின் நம்பிக்கைக்காகவாவது பாதுகாத்தே தீர வேண்டும். நான் இந்தக் கோணங்களிலிருந்து பலமுறை எழுதியிருந்தாலும், இப்பொழுது தமிழ் மக்களுக்காகவே சில விவரங்களுடன் இந்தப் பிரச்சினையை  அணுக உள்ளேன்.


தமிழ் மக்கள் தங்கள் பாரம்பரியம், கலாசாரம், மொழி முதலியவைகள் பற்றி பெருமை கொள்கிறார்கள். பண்டைய தமிழ் இலக்கியங்களில், நம் இந்திய சரித்திரத்தின், இந்த மனிதகுலத்தின், பல இரகசியங்கள் பொதிந்து கிடக்கின்றன, என்பதைத் தமிழர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.  தமிழ் மக்களின் முன்னோர்கள்தான், பண்டைய காலத்தில், வேத மரபான, ஹிந்துக்களின்  இந்தியக் கலாசாரத்திற்கு, அறங்காவலர்களாக இருந்தனர் என்பதையும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். இராமாயணம், ராமர், சேது என்பவைகள் சரித்திர சான்றுகளே  அன்றி கற்பனைக் கதைகளாக எழுதி கற்ப்பிக்கப் பட்டவை அல்ல என்பதையும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். உண்மையான தமிழன், மதங்கள், கட்சிகளைத் தாண்டி, பண்டைய சரித்திரச் சான்றுகள், கருணாநிதியைப் போன்ற கயவர்களால், அழிக்கப் படுவதைத் தடுக்கவேண்டும்.


தமிழ் மொழியையும், தமிழ் இலக்கியத்தையும் பெருமையுடன் இன்று அனுபவிக்கும் தமிழன், அந்த இலக்கியங்களில் பொதிந்திருக்கும் உண்மைகளை உலகோர் அறியச் செய்து, பதிவுகளைச் சீர் செய்திட வேண்டும். பல தமிழ் இலக்கியங்களில் நான் கண்ட அரும் பெரும் சான்றுகளை இங்கு பதிப்பிக்க எண்ணுகிறேன். இதனால் இந்தப் பிரச்சினை வெறும் மதம் சார்ந்தது மட்டுமின்றி, தேசிய கலாசாரத்தை பாதிக்கும் என்பதை ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து வீறு கொண்டு  எழுந்து, ராம சேதுவை அழிக்கும் எந்த சிறு முயற்சியையும் போராடி முறியடிக்க வேண்டும் என்று உறுதி கொள்ள வேண்டும்.


ராம சேது தமிழகத்திலே இருப்பதால், அதைக் காக்கும் தலையாய பொறுப்பு தமிழனது என்பதை உணரவேண்டும். அலங்காரச் சொற்களாலும், ஆசை, மயக்கு மொழிகளாலும், கருணாநிதி மற்றும்  அவரது ஊது குழல்களின்  வார்த்தைகளை ஒருபோதும் நம்பக் கூடாது. இராமாயணம் கட்டுக்கதை என்கின்றனர். கட்டுக்கதையாக இருந்தால், எப்படிப் பாண்டிய அரசர்கள், தங்களில் ஒருவர் இராவணனுடன் இருந்த ஒரு சம்பவத்தை கூறி இருக்க முடியும்?


இராமாயணம் என்பது ஏதோ லட்சக் கணக்கான ஆண்டுகள் முன்பு நடந்தது இல்லை. அது நம்மால் கண்டறியும்படி சில ஆயிரம் ஆண்டுகள் முன்பே நடந்த ஒரு சரித்திரம். ராமர் வாழந்த காலத்தில், தெற்கே பாண்டியர்களின் பொற்கால இராஜ்ஜியம் தழைத்துக் கொண்டிருந்தது. வால்மீகியின் இராமாயணத்தில், பாண்டியர்களின் இராஜ்ஜியத்தின் தலைநகரம் கவாடபுரம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதை ஆதரிக்கும் வகையில், சின்னமன்னூரில் கண்டெடுக்கப் பட்ட பாண்டியர்களின் பட்டயமான  தாமிரத் தகடுகளில், இராவணனைப் பற்றி குறிப்பும் உள்ளது.


இராவணன் சீதா தேவியை அபகரித்தபோது, பாண்டியர்கள் தென்னாட்டை ஆண்டு வந்தார்கள். சுக்கிரீவன், ஹனுமார் மற்றும் வானர வீரர்களை  தென்திசையில் சீதா தேவியைத் தேடிவரச் சொல்லும்போது, அவர்கள் வழியில் என்னவற்றைக்  கவனிக்க வேண்டும் என்று கூறுகிறான். அப்பொழுது அவர்களிடம், காவிரி நதியைத் தாண்டி, அகத்தியர் வாசஸ்தலம், மற்றும் தாமிரபரணி நதியைக் கடந்தால், பாண்டியர்களின் கவாடம் காண்பீர்கள் என்று  சுக்கிரீவன் கூறுகிறான்.(வா.இரா. 4-41-19). அதன் பிறகு சமுத்திரத்தைக் காண்பீர்கள் என்று கூறுகிறான். அங்கிருக்கும் மகேந்திர மலையிலிருந்து இராவணனின் இலங்கைக்குச் செல்லலாம்.


இரண்டாம் சங்கத்தின் போது கவாடம் (அல்லது கவாடபுரம்) பாண்டியர்களின் தலைநகரமாக இருந்தது. மூன்றாவது ஊழியில் கவாடம் மூழ்கிப் போனது. இது நடந்தது 3500 ஆண்டுகளுக்கு முன்னால். இன்று நாம் மகேந்திர மலையைக் காண்கிறோம்; ஆனால், அதன் தொடர்ச்சி கடலில் மறைந்துள்ளது. சங்க காலங்களில், இந்தத் தொடர்ச்சிக்கு குமரி மலை என்று பெயர். 


வால்மீகி இராமாயணத்தின் இந்தக் கூற்றுப்படி, பாண்டியர்கள் கவாடத்திலிருந்து அரசாட்சி செய்து கொண்டிருந்தபோது, இராவணன் இலங்கையில் ஆண்டு கொண்டிருந்தான்.


பாண்டியர் காலத்துச் சின்னமன்னூர் தாமிரத் தகடுகள், துணை  ஆதாரமாக மேலும் பல தகவல்களைத் தருகின்றன. பாண்டியர்களின் வம்சாவளியைத் தரும்போது, இந்தத் தகடுகளில் எழுதி வைத்தபடி, பழங்காலத்தில் ஒரு பாண்டியனுடன் (பெயர் தரப்படவில்லை), இராவணன் சமாதானம் செய்து கொண்டான் என்பது. 

( ஐந்தாவது செய்யுளை நோக்குக : http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_3/copper_plates_at_tirukkalar.html)


இது வடமொழியிலும் தமிழிலும் எழுதப் பட்டுள்ளது.  வடமொழியில், "தசானன் ஸந்தீப ரக்ஷகார" என்றும், தமிழில், " தசவதனன் சார்பாக சந்து செய்தும்" என்றும் எழுதப் பட்டுள்ளது. பூகோள ரீதியாக பாண்டியர்களும், இராவணனும் அருகில் இருந்தார்கள். பாண்டியர்களுக்கும், இராவணனுக்கும் சிறு சண்டைகள் இருந்திருந்து, ஒரு கால கட்டத்தில், இராவணனோ அல்லது பாண்டியர்களோ சண்டையை நிறுத்தி  சமாதானத்தைக் கோரி இருக்கலாம். இது எப்பொழுது நிகழ்ந்தது, ஏன் என்ற காரணங்கள் தெரியவில்லை. ஆனால், பாண்டியர்களுடன் உடன்பாடு என்பதிலிருந்து இராவணன் என்பவன் ஒரு கற்பனைப் பாத்திரம் அல்ல என்பது உறுதியாகிறது. அதனால், இராமாயணமும் ஒரு கட்டுக்கதை அல்ல என்பது தெளிவாகிறது. இதனால், இராமாயணம் என்பது நம்மால் எளிதில் உணரக்கூடிய சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்தது என்பதும் தெளிவாகிறது.


தமிழ் இலக்கியங்கள் மூன்று சங்க காலங்களின் காலத்தையும் குறிப்பிடுகின்றன.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட இறையனார் அகப் பொருள் உரை என்னும் நூலில், முதற்சங்கம் 4440 ஆண்டுகள்  இருந்தது. அப்பொழுது, தென் மதுரைதான் தலை நகரமாக இருந்து வந்தது. கடல் சீற்றத்தில் தென்மதுரை மறைந்து போனதும், இரண்டாம் சங்கம், கவாடம் நகரில் ஆரம்பமானது. அங்கு 3700 ஆண்டுகள் நடைபெற்றது. வால்மீகியின் இராமாயணம் வழியாகவும், சின்னமன்னூர் செப்புத் தகடுகள் குறிப்புகள் வழியாகவும் இந்த சமயத்தில்தான் இராமாயணம் நிகழ்ந்தது என்று அறிகிறோம்.  இந்த இடமும், ஊழியில் மறைந்த பிறகு, மூன்றாம் சங்கம் தற்போதுள்ள மதுரைக்கு மாற்றப்பட்டது. இங்கு 1850 ஆண்டு காலம் தழைத்தோங்கியது. உக்கிர பெருவழுதி என்ற பாண்டிய அரசனே இதற்குக் கடைசி அரசனாக இருந்து போற்றி வளர்த்தான். இவை எல்லாம் சேர்த்தால்,  சங்க காலம் 9990 ஆண்டுகள் இருந்தது என்று தெரிகிறது.


இது குருட்டாம்போக்கில் வந்த ஒரு கற்பனைக் கணக்கு அல்ல. அதை ஒரு கட்டுக் கதையாகவும் புனையவில்லை. இந்தக் கணக்கைக் கூறியவர் நக்கீரனார்! அவர் புரட்டுக் கவி அல்ல; அவர் வந்த புலவர் பரம்பரை, சரித்திரத்தை கோணலாகவோ, கற்பனையாகவோ எழுத வேண்டிய எந்த நிர்பந்தமும் இல்லாதது. 13,000 ஆண்டுகளுக்கு முன்னால் மறைந்த பனியுகமும், பிரளயங்கள் ஏற்பட்ட சான்றுகளுடனும் இந்தக் கணக்குகள்  ஒத்துப் போகின்றன.  


இன்னொன்று, சங்க கால இலக்கியத்தோடும், சோழர் குறிப்பேடுகள்  சான்றுகளிலிருந்தும், இந்த கணக்கு துணை ஆதாரம் பெறுகிறது.  மூன்றாம் சங்கத்தின் கடைசி போஷகர் பாண்டிய அரசன் உக்கிரப் பெருவழுதி. புகழ் வாய்ந்த ஔவையார் புறநானூற்றில் (பாடல் 367) இவரையும், இவரின் சமகால சோழ அரசரான பெரு நற்கிள்ளியையும் பாடி இருக்கிறார். இந்தப் பெருநற்க்கிள்ளியை பற்றி சோழர் காலத்து திருவாலங்காடு செப்பேடுகளில் காணலாம் (பாடல் 41 http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_3/no_205b_aditya_ii_karikala.html)


இந்தத் திருவாலங்காடு செப்பேடுகளின் படி, இவனுக்குப் (பெருநற்கிள்ளி) பிறகே புகழ் வாய்ந்த கரிகால சோழன் தோன்றினான். இரண்டாம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட சிலப்பதிகாரத்திற்கு முற்ப்பட்டவன் கரிகாலன்.  இதிலிருந்து பெருநற்கிள்ளியும் , உக்கிர பெருவழுதியும் முதல் நூற்றாண்டிலோ அல்லது அதன் தொடக்கத்திலோ வாழ்ந்திருப்பார்கள் என்று தெரிகிறது. இதனால், மூன்றாம் சங்கம் இன்றைக்குச் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் முடிவடைந்திருக்கும். இந்த நிகழ்வுகளிலிருந்து நாம் மூன்று சங்கங்களின் காலத்தை நிர்ணயம் செய்யலாம். 

மூன்றாம் சங்கம்  - கி.மு. 1850 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன் வரை.

இரண்டாம் சங்கம் - கி. மு. 1850 முதல் கி.மு.5550 வரை.

முதல் சங்கம் – கி.மு 5550 முதல் கி.மு 9990 வரை.


முனைவர் புஷ்கர் பட்நாகர் என்ற ஆராய்ச்சியாளர், வால்மீகி இராமாயணத்தில் கிடைக்கும் பல ஜோதிட தகவல்களைக் கொண்டு இராமாயண காலத்தை நிர்ணயித்துள்ளார்.  அந்த ஆய்வின்படி ஸ்ரீ இராமனின் பிறந்த ஆண்டு கி. மு.5114! (பார்க்க http://jayasreesaranathan.blogspot.in/2010/10/ramas-birth-date.html)

 

அது இரண்டாம் சங்க காலக் கட்டத்தில் வருவதை மேலே காட்டிய காலக் கணக்கில் காணலாம். பாண்டியனது கவாடம் என்று வால்மீகி கூறுவதும் இதை ஊர்ஜிதப்படுத்துகிறது.

 

இதே திருவாலங்காடு செப்பேடுகளில், ராம சேது பற்றி ஆதாரமும் கிடைக்கிறது. இராஜேந்திர சோழன்  ஆண்டு வந்த காலத்தில் வெளியிடப்பட்ட இந்தச் செப்பெடுகளில, அவனுடைய தந்தையான இராஜராஜ சோழன் என்னும் அருள்மொழி வர்மனைப் பற்றிய (பொன்னியின் செல்வன் கதாநாயகன்) குறிப்புகள் இருக்கின்றன. அந்தக் குறிப்புகள் இராஜராஜ சோழனின் வெற்றியைத் தெரிவிக்கின்றன. அவற்றில் ஒரு இடத்தில், இராஜராஜ சோழனின் இலங்கைப் படையெடுப்பைப் பற்றிய குறிப்பு உள்ளது. அந்தப் போரில் இலங்கை அரசன் சத்யாஸ்ரயனை தோற்கடித்தான். அந்தப் பாடல் 80 கூறுவது:

"ராகவர்களின் நாயகன் (ராமர்) குரங்குகளின் உதவியோடு கடலில் அணையைக் கட்டி, மிகுந்த சிரமத்துடன் இலங்கை அரசனை (இராவணனை) கூரிய அம்புகளால் கொன்றான்; ஆனால், இந்த வீரத்தளபதி (அருள்மொழி வர்மன்), கப்பல்கள் மூலம் கடலைக் கடந்து இலங்கையை எரித்தானே, ராமனைக் காட்டிலும் இவனே சிறந்தவன்"

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_3/no_205c_aditya_ii_karikala.html

 

ஆகையால் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, சுமார் 7000  ஆண்டுகளுக்கு முன்னால்  இராமாயணம் ஒரு நடந்த சம்பவம். அந்த நேரத்தில்தான் பாண்டிய தேசத்து அரசர்களால், இரண்டாம் தமிழ்ச் சங்கம், கவாடத்தில், போற்றி வளர்க்கப்பட்டு வந்தது.


இதற்கு இன்னொரு ஆதாரம் மகாகவியான காளிதாசரின் ரகுவம்சத்திலும் கிடைக்கிறது. அதில், ராமனின் பாட்டியான இந்துமதி என்பவளின் சுயம்வரத்திற்கு, பாண்டிய அரசன் வந்திருந்தான் என்னும் செய்தி இருக்கிறது! அவள் அஜன்  என்பவனை தேர்ந்தெடுத்து மணம் புரிகிறாள். அஜன் ராமனின் தாத்தா!


ந்த  விவரங்களினால் நாம் அறிந்து கொண்டு உறுதிப் படுத்திக் கொள்ளவேண்டியது - இராமாயணம் ஒரு  உண்மைச் சரித்திரம். இனியும் நாம் இராமாயமோ, அதில் காணப்படும் பாத்திரங்களோ அல்லது பலவகைப்பட்ட நிகழ்ச்சிகளோ, கட்டுக் கதை அல்லது கற்பனை என்ற எண்ணத்திற்கு ஒருபோதும் இடம் கொடுக்கவே கூடாது. இராமாயணம் 7000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு. அதில், மைய நிகழ்ச்சி, சீதா தேவியை அபகரித்தலும்,  ராமன் கடலைத் தாண்டி  அவளை மீட்பதும். அதற்காக  ராமன்,  தென்னிந்தியாவின் கோடிக்கும், இலங்கைக்கும் ஒரு அணையைக், கட்டுவித்தான். சேது என்றால் அணை. அதைப் பாலம் என்று கூற ஆரம்பித்தது சமீப காலத்தில் தான். நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள், நம்முடைய சரித்தரத்தில் குளறுபடி செய்து, சேதுவுக்கு ஆதாம் பாலம் என்று பெயர் வைத்தார்கள். பதிவுகளிலிருந்து (  Thomas Williamson, (1810), East India Vade- Mecum, VOL I, London, Black, Parry, and Kingsbury, p.125) நமக்குத் தெரிவது அந்தக் காலங்களில், பல மலை முகடுகளோடும் இந்த அணை கடலில் இருந்தது.


பதிவுகளின் வார்த்தைகளில் : " ஆதாம் பாலம் என்னும் இந்தத் தொடர், பல மலை உச்சிகளால் உருவாக்கப்பட்டு, பயங்கர கொந்தளிப்பினால், கடலில் அமிழ்ந்து போயின.அதற்க்கு முன்னால், அது ஒரு பூசந்தியாக (இரு நிலப்பரப்புகளை இணைக்கும் நில இடுக்கு) , டாரியன் மாதிரி, இலங்கையை கண்டத்துடன் இணைப்பதாக இருந்தது."

       

  கீழே உள்ள படம் 93 கி. மீ. உயரத்திலிருந்து  எடுத்தது. ராம சேது மனிதர்களால் செயற்கையாக , இயற்கையாக அல்ல, ஏற்ப்படுத்தப்பட்ட ஒரு அணை என்பது தெளிவாகத் தெரிகிறது.


கீழேயுள்ள படம் 1 கி. மீ. உயரத்திலிருந்து எடுத்தது. படுகை மடிப்புக்களைக் காணலாம். இவை இயற்கையில் இம்மாதிரி அமைய முடியாது. தண்ணீருக்கடியில் இருக்கும் அணையின் பாகம்.


கட்டும்போதே ராம சேது ஓர் அற்புதம். ராமர் அணையைக் கட்டி இலங்கையில் நுழைந்து விட்டார் என்று கேள்விப்பட்ட உடனே, இராவணனின் மனைவி மண்டோதரிக்கு இராவணன் தோற்றுப்  போவான் என்பது நிதர்சனமாயிற்று. அது ஒரு ஒப்பிடமுடியாத சாதனை. அந்த சாதனையாளரை வெல்வது என்பது முடியாத ஒரு காரியம். இராவணன் இறந்த பின்பு அவன் சடலத்தைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டே கூறினாள்: " என்று குரங்குகளைக் கொண்டு கடல் மேல் அணையைக் கட்டினாரோ, அன்றே எனக்குத்தெரிந்துவிட்டது, ராமன் ஒரு சாதாரண மானிடப் பிறவி அல்ல என்பது". (வா. இரா. 6-111-11)


கருணாநிதி தன் தமிழ்ப் பற்றைக் காண்பிக்க சிலப்பதிகாரத்தை நாடுவார். அதிலிருந்து சில தகவல்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சிலப்பதிகாரத்தில் ராமனைக் குறித்த கருத்துகள் இருக்கின்றன. கருணாநிதி சிலப்பதிகாரத்தின் கதாநாயகியான கண்ணகியை  ஒப்புக் கொள்வாரென்றால், ற்ற பாத்திரங்கள் கூறும் ராமாயணக் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும் .


கோவலன், கண்ணகியுடனும், கவுந்தி அடிகளுடனும் வெளியே சென்றபோது, கோவலனின் தந்தை மிகவும் கவலையுற்று, கோவலன் நகரத்திற்கு திரும்ப வேண்டும் என்று விரும்பினார். அவருடைய தூதர்கள், கோவலனை வழியில் சந்தித்து, அவன் தந்தையின் கவலையை தெரியப் படுத்தினார்கள். அப்போது அவர்கள் கோவலனை ராமனுடன் ஒப்பிட்டார்கள்! ராமன் வெளியேறியபோது அயோத்தியா நகரம் எப்படி தள்ளாடியதோ, அதே மாதிரி புகாரும் (கோவலனின் நகரம்) கோவலன் வெளியேறியபோது வாடியது.

பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப் 

(மதுரைக் காண்டம் - புறஞ்சேரியிறுத்த காதை - வரிகள் 63- 65)


சிலப்பதிகாரத்தில் இன்னுமொருமுறை ராமன் காட்டிற்குச் சென்றது குறிக்கப் படுகின்றது. கோவலன் கவுந்தி அடிகளிடம் தான் கண்ணகியுடன் புகாரை விட்டு வெளியேறியதை வருத்தத்துடன் சொல்லும்போது, கவுந்தி அடிகள் அவனையும் கண்ணகியையும், ராமர் சீதை காட்டிற்கு சென்றதோடு ஒப்பிட்டார். 

 

தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோ னென்பது
நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ 

(மதுரைக் காண்டம்: ஊர் காண் காதை  வரிகள் 45 - 49)

சொன்னது சமணத்துறவி. ராமாயணம் ஒரு உண்மை நிகழ்ச்சியாக இருக்கவேதான், ஒரு சமணத் துறவியும் அதை நினைவு கூர்ந்து, கோவலனை சமாதானப்படுத்தி இருக்கிறார். இவற்றைச் சொல்லும் சிலப்பதிகாரம், 1800 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப் பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ராமனின் கதை அந்தக் காலத்திலேயே நம்பப்படும் கதையாக இருந்தாலொழிய, இலக்கியத்தில் அந்த குறிப்புகள் இடம் பெற்றிருக்க முடியாது. ராமன் காட்டுக்கு ஏகினான் என்பதிலிருந்தே, சீதையை அபகரித்தது, சேது அணை  கட்டியது  முதலிய நிகழ்வுகளும் நடந்திருக்க வேண்டும் என்பது கண்கூடு.


சங்க இலக்கியத்தில்  சீதா தேவியை அபகரித்ததைப் பற்றி குறிப்பு உள்ளது.

புறநானூறு பாடல் 378ல் , பரிசுப் பொருளாக வந்த நகைகளைப் பற்றி ஒரு செய்தி வருகிறது. சோழ அரசரிடமிருந்து பாணர்கள் பல நகைகளை பரிசாகப் பெற்றனர். அவைகளை எவ்வாறு, எங்கே அணிய வேண்டும் என்று தெரியாமல் குழம்பினார்கள். கை  வளைகளை காதிலும், காது அணிகலன்களை கழுத்திலும் மாட்டிக் கொண்டனர். பாடிய புலவர் இதை வருணிக்கும் போது, இராவணன் அபகரித்துக் கொண்டு வானில் பறக்கும்போது, சீதா தேவி தன அணிகலன்களை கீழே தூக்கி எறிய,  அவற்றை எடுத்துக் கொண்ட வானரங்கள் அந்த அணிகலன்களை அணியத் தெரியாமல் குழம்பிய மாதிரி இருந்தது என்கிறார்!ட்

 

"...இலம்பா(டு) இழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
அரைக்(கு)அமை மரபின மிடற்றுயாக் குநரும்
மிடற்(று)அமை மரபின அரைக்குயாக் குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்(கு)
அறாஅ அருநகை இனிதுபெற்(று) இகுமே"
[
புறநானூறு: 378:13-21]


என்னே ஒரு ஒப்பீடு, இராமாயணத்துடன், 2000 ஆண்டுகளுக்கு முன்பு! இந்த உவமையைப் புலவர் ஊன்பொதி பசுங்குடையார்  எவ்வளவு அழகாகக் கையாண்டிருக்கிறார்!  இந்த இராமாயணக் குறிப்பை நம்ப முடியாது என்றால், கண்ணகியின் கதையை மட்டும் ஏன் நம்ப வேண்டும்? சிலப்பதிகாரத்தை ஏன் நம்ப வேண்டும்? 


இன்னொரு சங்க இலக்கியத்தில், ராமன் கடலைக் கடக்குமுன் இருந்த செய்தியை தெரிவிக்கிறது. அகநானூறு 70 ல், ஒரு கணவன்  தன மனைவியிடம்  தங்கள் காதலைப் பற்றி நினைவூட்டுகிறான். கலியாணத்திற்கு முன்பு, ஊரார் பேச்செல்லாம்  தங்கள் காதலைப் பற்றியே இருந்தது.  ஆனால் திருமணத்திற்குப் பிறகு அந்தப் பேச்செல்லாம் மறைந்து மௌனமாகி விட்டன என்கிறான். அந்த மௌனம், பாண்டிய தேசத்தின் கடற்கரையில் ஆலமரத்தடியில் அமர்ந்து, வரப்போகும் யுத்த யுக்திகளை எவ்வாறு கையாளலாம் என்று ராமன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, அங்கிருந்த பறவைகளும் மௌனம் காத்தது போல் இருந்தது. 

 

"நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்
பலரும் ஆங்(கு)அறிந்தனர் மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றை....
...
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்(கு) அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்(று)இவ் அழுங்கல் ஊரே". (அகநானூறு:70:5-17)


இங்கு கவனிக்க வேண்டியது, பாண்டிய தேசத்து இடம் என்று எதைக் குறிப்பிடுகிறார் என்பதே. சேது இருக்கும் கடற்கரையையே பாண்டிய தேசம் என்று குறிப்பிடுகிறார் என்பது வெளிப்படை. அங்குதான் ராமன் மூன்று நாட்கள் தர்ப்ப சயனத்தில் இருந்து, இன்னும் சில நாட்கள் தங்கி சேது அணையைக் கட்டினான். இந்தக் காட்சி, சேது அணையைக்  கட்டுவதற்கு முன்பு  ராமன் ஆல மரத்தின் அடியில் அமர்ந்து யோசிக்கும் காட்சி. இது ராமன் பாண்டிய தேசத்திலிருந்து தான் ராமன் சென்றான் என்பதை வலியுறுத்துகிறது. பாண்டிய தேசத்தின் இந்தப் பகுதியில் வாழ்ந்த  தமிழர்களுக்கு ராமனைப் பற்றிய உள்ளூர்க் கதைகளும், நிகழ்வுகளும் நிறையத் தெரிந்திருக்க வேண்டும். அவற்றில் ஒரு சிறு துளிதான் நாம் இப்பொழுது கண்ட பாடல்!


வரலாற்று ஆதாரங்கள் தொடர்ந்து இருக்கின்றன, சேதுவிற்காக ஒரு பாதுகாப்பு காவலர்களின் வம்சமே உருவானது! தமிழகத்தின் அந்தப் பகுதியில் சேதுபதி என்ற பட்டப் பெயரோடு அரசர்கள் ஆண்டு வந்தார்கள். பழைய குறிப்பேடுகளைப் படித்துக் கொண்டு வருகையில், நான் 1714ம் ஆண்டு விஜய ரகுநாத சேதுபதி என்னும் புரவலர் வெளியிட்ட ஒரு குறிப்பேடைக் கண்டேன். அது ஒரு நாட்டியக்காரனுக்கு அளித்த உபகாரம் பற்றியது. அந்த மரபுப்படி, அந்த குறிப்பேட்டின் இறுதியில் ' யாராகிலும் இந்தக் கொடையை தொடர்ந்து வழங்குவதைத் தடுத்தால், அவர்களுக்கு ஒரு பசுவை சேதுவிலோ அல்லது கங்கை நதியிலோ, கொலை செய்த பாவம் வந்து சேரும்', என்று குறிப்பிட்டிருந்தது. ( பார்க்க: தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி துறை காலாண்டுக்கு வெளியிடும் பத்திரிக்கை 'கல்வெட்டு', ஜனவரி, 2010, இதழ்). இதிலிருந்து ராம சேது, கங்கைக்கு இணையாக போற்றப்பட்டிருந்தது என்பது தெளிவாகிறது!


இதற்கான  காரணத்தை நான் வெகு விரிவாக இன்னொரு வலைப் பதிவான 'தமிழன் திராவிடனா?' வில் எழுதியுள்ளேன். ( http://thamizhan-thiravidana.blogspot.in/2011/03/47.html). இங்கு அதனைச் சுருக்கமாகத் தருகிறேன். சேது என்னும் இந்த இடத்தில் தான் முதன் முதலில், கங்கை நதி வந்து சேர்ந்தாள். (ராமனின்  மூதாதையர்களான) சகரர்கள் (சாபத்தினால் எரிந்துபோன அவர்களின்) சாம்பலை கரைத்து அவர்களின் ஆத்மா மேலுலகம் ஏகும்படி செய்தது  இந்த இட்த்தில்தான். பகீரதன் (ராமனின் முன்னோர்) பிரயத்னப் பட்டு கங்கையைக் கொண்டு வருவதற்கு முன்னால், கங்கை என்று ஒரு நதி நம் நாட்டில் இருக்கவில்லை. பனியுகக் காலங்களில், அது கங்கோத்திரியில், பனிப்பாறையாகவே இருந்தது. பனியுகத்திற்குப் பிறகே கங்கை ஓடத் தொடங்கியது. கங்கை, சகரர்கள்  வெட்டி ஏற்படுத்தி இருந்த பாதையிலேயே பாய்ந்தோடினாள். அந்தப் பாதை வங்காள விரிகுடாவின் கிழக்குப் பகுதியில் இருந்தது.


அந்தக் காலங்களில் விரிகுடாவின் கடற்கரை இன்றுள்ளதைக் காட்டிலும், இன்னும் கிழக்கே தள்ளி இருந்தது. சகரர்கள் (அஸ்வமேதக்) குதிரையைத் தேடிக்கொண்டு வெட்டிய பாதை, அன்றைய விரிகுடாவின் கரையோரத்தை ஒட்டி, இலங்கையைச் சுற்றி, சேதுவில் முடிந்திருந்தது. அந்த இடம் அதிக  வெப்பத்துடன் இருந்ததால், அவர்கள் எல்லோரும் அங்கேயே சாம்பலானார்கள். இன்றும் கூட இராமேஸ்வரம் அருகில் உள்ள கடலை அக்னி தீர்த்தம் என்றே அழைப்பார்கள்.

 

வங்காள விரிகுடாக் கடலின் ஆழங்களை ஆராய்ந்த போது, நான்கு நிலைகளைக் கண்டறிந்துள்ளனர். அவை கடலோரக் கரையை ஒட்டி, 130, 80, 60, 30 மீட்டர்களாலான ஒரு கால்வாயை ஒத்திருந்தது. பனியுகக் காலத்தின்போது (13,500 ஆண்டுகளுக்கு முன்பு)  வங்காள விரிகுடாக் கடல் மேல்பரப்பு இன்றையதைக் காட்டிலும் 120 மீட்டர் கீழ் இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்றிருப்பது போல் நீருமின்றி இந்திய பெருங்கடலைக் காட்டிலும் வறண்டிருந்தது. இந்தியப் பெருங்கடலின் அடிப் பரப்பு, வங்காள விரிகுடாக் கடலின் அடிப்பரப்பைக் காட்டிலும், கீழிருந்தது.


http://drs.nio.org/drs/bitstream/2264/449/1/J_Indian_Geophys_Union_4_185.pdf


ஆரம்பத்தில், சகரர்கள் வெட்டிஇந்தக் கால்வாய்கள் வழியே கங்கை நதி ஓடிக் கொண்டிருந்தது. தற்போது அறியப்படும், வங்காள விரிகுடா, உண்மையில் வங்காள சாகரம் எனப்படும் கங்கா சாகரம் எனப்பட்டது. அதுதான், கங்கையின் இறுதியாக வந்து முடிந்த இடமாகும். காலப் போக்கில், பனியுகம் முடிவடைந்த பிறகு,  கங்கையில் வெள்ளம் ஓட ஆரம்பித்தது. கங்கை முழுப் பிரவாகத்துடன் பாய்ந்தோடியது. இராமாயண காலத்தின் போது, 7000 வருடங்களுக்கு முன்பு, வங்காள விரிகுடாக் கடலும், தற்போதுள்ள நிலையை அடைந்தது. அந்த சமயத்தில் தான், வங்காள விரிகுடாக் டலும், இந்தியப் பெருங்கடலும், தற்போதுள்ள நீர் மட்டத்தை  அடைந்தன. அதனால், அந்தக் கால்வாய்களும் தண்ணீரில் அமிழ்ந்து மறைந்தன. சேதுவின் இடமும் தண்ணீரில் அமிழ்ந்து இருந்தது. கங்கையை அடைவதற்கு, காசி, கயா  போன்ற க்ஷேத்திரங்கள் சுலபமான இடங்களாக இருந்தன. அதனால் தான், கங்கையின் பெருமையை ஹிமாலயத்திளிருந்து சேது வரைக்கும் (' சேது ஹிமாச்சலா') என்று கூறுகிறோம். 


நீல அம்புக் குறிகள் கங்கையின் சேது வரைக்குமான ஆரம்ப ஓட்டத்தை காண்பிக்கின்றன. பச்சை அம்புக்குறிகள், சேதுவிலிருந்து கங்கையின் பெருமையின் வழியைக் காட்டுகின்றன.


இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான பூசந்தியை சகரர்களும் வெட்டவில்லை; ராமரும் முதலில் அங்கு பிரம்மாஸ்திரம் செலுத்த நினைத்தபோதும் அதைச் சேதப் படுத்த எண்ணவில்லை. சமுத்திர ராஜன் ராமரை அஸ்திரத்தை வேறு இடத்திற்கு செலுத்தும்படி வேண்டிக் கொண்டார். இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால், அது ராமர் சேதுப் பகுதியில் உள்ள கடலுக்கு அடிப்பகுதியில் உள்ள பூமியின் அமைப்பே. அங்கு எரிமலைகளின் முகட்டுகள் பூமியின் மேற் புறத்தால் மூடப் பட்டுள்ளன. ஹனுமான் கடலைத் தாண்டும்போது அவரை எதிர்க் கொண்ட மைனாகமும் ஒரு எரிமலையே! அதன் தீக்குழம்பு அதன் அடியில் இருந்தது. தோரியம் தாதுப் பொருள் வளமையும் செழிப்பும், இராமாயணத்தில் கூறியுள்ள சேதுவின் அடியில் உள்ள இந்த எரிமலை பிரதேசத்தை உறுதிப் படுத்துகின்றன. ஒரு தையல் போலுள்ள இந்த இடத்தில் எரிமலைகள் வெடித்து பேரழிவை உண்டாக்காமல், சேது அணை  காப்பாற்றி வருகிறது.


இராமாயணம் காலத்தில் (7000 ஆண்டுகளுக்கு முன்பு) இயற்கையாக இருந்த பூசந்தி தண்ணீருக்கடியில் இருந்தது. அதன் மேலேயே அணையை எழுப்பியது ராமர் தலைமையிலான வானர சேனை. கங்கை முகத்துவாரம் ஆரம்பித்து, இந்தியாவின் கிழக்குக் கரையில் விழும் கிருஷ்ணா, கோதாவரி போன்ற எல்லா ஆறுகளது நீரும் கடல் நீருடன் கலந்து ஓடி வரும் போது, ந்த அணை,  அடிக்கடலில் ஓடும் ஆற்று நீரோட்டத்தை (வங்காள விரிகுடாவுக்கும், இந்து மகாசமுத்திரத்திற்க்கும் இடையே) தடை செய்கிறது. ஆகவே, சேதுவில் நீராடினால், கங்கையிலிருந்து, எல்லா புண்ணிய நதிகளின் நீரும் சங்கமிருக்கும் நீரில் நீராடிய புண்ணியம் கிடைக்க ராமர் வழி செய்தார்.


இந்த சேது, ஹிந்துக்களின் முக்கிய புண்ணிய ஸ்தலமாகப்  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. ராமரே இலங்கைக்குப் புறப்படும் முன் இந்தப் புண்ணிய நீரில் ஸ்நானம் செய்தார். பராசர மகரிஷி தன்னுடைய ப்ருஹத் பராசர ஹோரை   சாஸ்த்திரம் நூலில், இந்த புண்ணிய நீரில் நீராடினால், இழந்த செல்வம், மனைவி, குடும்பம் ஆகியவற்றை ஒரு பக்ஷத்திலேயே (15 நாட்களில்) திரும்பப் பெறுவர் என்று கூறுகிறார். சந்திர தோஷம் உடையவர்கள் மற்றும்  தாயார்களின் சாபம் பெற்றவர்களுக்கு ராம சேது ஒரு பரிகார ஸ்தலமாகக் கருதப்படுகிறது.


தமிழ்  நூல்களில் வங்காள விரிகுடாக் கடலில் தோண்டிய விவரங்கள் இருப்பதை தமிழர்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.

 

பண்டைய தமிழ் நூல்களில் வங்காள விரிகுடாக் கடல்,  தொடு கடல் என்று குறிக்கப் படுகிறது. அப்படி என்றால் தோண்டப்பட்ட கடல் என்று அர்த்தம். புற நானூறு பாடல் 6 ல், இந்தக் குறிப்பு சகரர்களைப் பற்றி சொல்லும்போது வருகிறது. இது சிலப்பதிகாரத்திலும் இரண்டு முறை வருகிறது. இலங்கையை, அகழ் இலங்கை, அதாவது தோண்டப்பட்ட இலங்கை, என்று குறிப்பிடுகிறது. இலங்கையின் அமைப்பு இயற்க்கையானதுஅல்ல; சகரர்கள் இலங்கையைச் சுற்றி தோண்டி வந்து அமைத்தார்கள். அவர்களால், சேது வரைக்கும் மட்டுமே தோண்ட முடிந்தது. சேதுவில் இருந்த பூசந்தியை அவர்களால் வெட்ட முடியவில்லை. சிலப்பதிகாரத்தில் இரண்டொரு இடங்களில் இந்த விவரங்கள் வருகின்றன. கருணாநிதிக்கு தமிழ் உணர்வு இருந்தால், சிலப்பதிகாரத்தில் உள்ள இந்த விவரங்களை அறிந்து தன்னுடைய நிலைப்பாட்டை தக்கபடி மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் தமிழைத் தனக்கு சேவை செய்ய உபயோகிக்கிறாரே தவிர தான் தமிழுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை.


தமிழ் நூல்களில் சகரர்கள் தோண்டிய இந்த விவரங்கள், வால்மீகி இராமாயணத்திலும் காணலாம். ஹனுமாருக்கு சிரம பரிகாரம் செய்துகொள்ள மைநாகம் மலை மேலே எழும்பியது. ஒரு காலத்தில் இக்ஷ்வாகு மன்னர்கள் கடலைத் தோண்டிய உதவியை மறக்காமல், பிரதி உபகாரம் செய்ய ஆசைப் பட்டது. அதனுடைய இருப்பிடம் சேதுவில் தான் என்பதை நாம் மறக்கலாகாது. அந்த இருப்பிடம், எங்கோ வட இந்தியாவில் இருக்கவில்லை; நம்முடைய தமிழ் நாட்டுக் கரையிலேயே இருக்கிறது. விபீஷணன் ராமனை சமுத்திர ராஜனின் உதவியை நாடச் சொன்னதும் இதே சேதுக் கரையில் தான். ராமனின் முன்னோர்கள் புண்ணிய நதிகளின் நீரைக் கடலில் கலக்கும் படி செய்ததால், அந்த ஒரு உதவிக்காக, சமுத்திர ராஜன் ராமனுக்கு உதவுவான் என்று விபீஷணன் கூறினான். அந்த இடம் ராமர் சேது. இதன் மூலமாக, கங்கை சேது வரைக்கும் பாய்ந்து வந்தது என்பது உறுதிப் படுகிறது.


இங்கு ஒரு ஐயம் ஏற்படலாம். ராம இராவண யுத்தத்தின்போது, பாண்டியர்கள் இருந்திருந்தால், ஏன் அவர்கள் ராமனுக்கு துணை நின்றிருக்கக் கூடாது? 

இதற்கான விடை பின்வருமாறு. பாண்டியர்கள் இராவணனுக்கு எதிரான போரில் பங்கு கொள்ளவில்லை. அதற்கான காரணங்கள்:

1) முதலில் ராமனுக்கு சீதாதேவியை யார், எங்கு அபகரித்துச் சென்றுள்ளார்கள் என்று தெரியாது. வானர வீரர்கள் எல்லா திக்குகளிலும் தேடிப் பார்க்க அனுப்பப் பட்டனர். ஹனுமான் தென் திசைக்கு அனுப்பப்பட்டார். முதலில் அவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. அவரும், அங்கதன் மற்றுமுள்ள வானரர்களும் நம்பிக்கை இழந்த சமயத்தில், கழுகு அரசன் சம்பாதி வழியாக இராவணன் இலங்கைக்கு அபகரித்துச் சென்றதை அறிந்தனர். உடனே, ஹனுமான் இலங்கைக்குப் பறந்து சென்றான். அதன் பின் சம்பவங்கள் மளமளவென்று அரங்கேறின. ஒரு சாயங்காலம் (பிரதோஷம்) இலங்கையை அடைந்து அன்று இரவே சீதா தேவியை சந்தித்து, மறு நாள் இராவணனையும் சந்தித்து, அதற்கு அடுத்த நாள் மதியம் அளவில் ராமனை சந்தித்தான் ஹனுமான். விவரங்களைக் கேட்டறிந்தவுடன் ராமன் உடனே இராமேஸ்வரம் நோக்கி வந்தான். சீதா தேவியும் ஒரு மாதமே கெடு வைத்திருந்தாள். ஆகையால், ராமனுக்குப் பிறரின் துணை நாட, திட்டமிட நேரம் இருக்கவில்லை. பாண்டிய அரசனுக்கும் அவ்வளவு விரைவாக ராமன் இலங்கைக்குச் செல்லும் திட்டம் தெரிந்திருக்காது.


2) வாலிக்கு மட்டுமே இராவணன் சீதா தேவியை அபகரித்துச் சென்றது தெரிந்து இருந்தது. பாண்டியனுக்கும் அதே மாதிரி தெரிந்ததா என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. அந்தச் சமயத்தில் இராவணனுடன் மற்ற அரசர்கள் யாருக்கும் தொடர்பு இருக்கவில்லை. ஆனால் வாலிக்கும் இராவணனுக்கும்  ஒரு சச்சரவு இருந்திருக்கிறது. (சின்னமன்னூர் செப்பேடுகளிலிருந்து, பாண்டியனுக்கும், இராவணனுக்கும் கூட சச்சரவு இருந்திருக்கின்றது என்பதை முன்னமே கூறினோம்). வாலியின் கிஷ்கிந்தை இராவணன் இலங்கைக்குப் பறந்த வழியில் இருந்தது; ஆனால், பாண்டியர்களின் கவாடம், அந்த வழியில் இருக்கவில்லை.  இதுவேகூட ராமன் பாண்டியன் துணை நாடாமல் இருந்ததற்குக் காரணமாக இருக்கும். ராமன் காட்டிலேயே (14 ஆண்டுகளும்) இருப்பேன்  என்று சபதம் செய்துள்ளான். இந்தக் காரணங்களினாலும் ராமன் வேறு எந்த நாட்டுக்கும் சென்று உதவியை நாடாமல் இருந்திருக்கலாம்.


இதைத்தவிர, இலங்கைத் தீவு முழுக்கவும் மக்கள் இருந்திருக்கவில்லை, அக்காலங்களில்  இராமாயண காலத்தில், இராவணனின் இராஜ்ஜியம் வெறும் திரிகோண மலையைச் சார்ந்தே இருந்தது. அதனால், பாண்டியர்களுக்கு இராவணனின் நடத்தைகள் தெரியாமல் இருக்கலாம்.


3) சின்னமன்னூர் செப்பேடுகளில் இராவணனுடன் சமரசம் செய்து கொண்ட, பாண்டிய அரசனின் பெயர் ஏன் குறிப்பிடவில்லை என்பது ஒரு புதிராக இருக்கிறது. குறைந்தது, இராமாயணத்திற்குப் பிறகாவது  அவர்கள் அந்தச் சம்பவத்தைப் பெருமையுடன் கூறிக் கொண்டிருக்கலாம். ஒரு வேளை பாண்டியர்களும், இராவணனும் இருவருமே தீவிர சிவ பக்தர்கள் என்ற காரணமோ என்று நான் நினைக்கிறேன். ஒரு சிவபக்தன் இன்னொரு சிவபக்தனுக்குத் தீங்கு செய்யவோ,  அல்லது தீங்கு செய்ய வேண்டும் என்று நினைத்துப் பார்க்கவோ மாட்டான். ஆகையால், அந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியைப் பற்றி - செப்பேடுகளில் சொல்லப்பட்ட சமரசத்துக்கு மூலக் காரணமான சண்டையைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்களா? இதற்கு உதாரணம் சிவனடியார் கோலத்தில் இருந்த முத்த நாதனுக்குத்  தீங்கு செய்யாமலிருந்த உண்மையான சிவனடியாரான மெய்ப்பொருள் நாயனார். இதைப் பற்றிய விவரங்கள் என்னுடைய இந்த லிங்கில் பார்க்கவும்: http://jayasreesaranathan.blogspot.in/2010/03/temple-where-ravanas-wife-worshipped.html


4) இங்கு ஒரு சுவாரசியமான தகவல், இராவணனுடைய மாமனார் மயன் என்பது! மயனின் ஐந்திறம் நூல் இரண்டாம் சங்கத்தில் அரங்கேறியது. இது நாம் மேலே குறிப்பிட்ட 2 ஆம் சங்க காலத்துடன் ஒத்துப் போகிறது.

5) எனக்குத் தெரிந்த சங்க நூல்களின் குறிப்புக்களையே நான் கொடுத்து இருக்கிறேன். நான் அறியாத இன்னும் குறிப்புகள், வேறு இலக்கியங்களில் மறைந்திருக்கலாம். நம்மிடம் இருக்கும் சங்க கால நூல்கள், சங்க காலங்களில் அரங்கேறிய நூல்களைக் காட்டிலும் மிக, மிகக் குறைவு. முதலாம், இரண்டாம் சங்க கால நூல்கள் கிடைக்கவில்லை. நம்மிடம் இருப்பது மூன்றாம் சங்க நூல்கள் சிலவே.


இன்று தமிழர்கள் சேது சமுத்திரம் திட்டத்தைப் பற்றி அசிரத்தையாக உள்ளனர். அவர்களைப் பொருத்தவரை அது ஹிந்து நம்பிக்கையைப் பற்றியது, அல்லது ஜெயலலிதா கருணாநிதி அரசியல் என்று நினைக்கிறார்கள். ஆனால் சேதுக் கால்வாய்த் திட்டத்தினால், தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம் பாதிக்கப் படுகிறது என்பதை மறக்கக் கூடாது. முன் காலத்தில் இம்மாதிரி ஒரு சம்பவம் எற்ப்பட்டிருந்தால், தமிழர்கள் வாளாவிருந்திருக்க மாட்டார்கள்.

 

சேதுக் கால்வாய்த் திட்டம் எந்தத் தமிழனும் கனவு கண்ட திட்டம் அல்ல. ஆனால் அப்படி ஒரு பொய் பரப்பப்படுகிறது. முதன் முதலில் டச்சுக்காரன் சேதுவுக்குக் குறுக்கே படகு, கப்பல் விட விரும்பினான். 1484 ஆம் வருடம் அடித்த புயலில் முதன் முதலில் பாம்பன் கடலில் கடல் அரிப்பு ஏற்பட்டது. புதுச்சேரியை டச்சுக் காரன் ஆக்கிரமித்தபோது, அந்த அரிப்பைத் தோண்டி கொஞ்சம் ஆழப்படுத்தினான். அந்த இடத்தில்தான் இப்பொழுது பாம்பன் பாலம் செல்கிறது. அது ராமரால் கட்டப்பட்ட சேதுவல்ல. அது நிலநீட்சி. அற்கப்பால் ராமேஸ்வரம் வரை நிலநீட்சி இருந்தது. அங்கிருந்துதான் சேது அணை ஆரம்பிக்கிறது.

http://hemanththiru.blogspot.in/2010/08/hes-so-hhhot.html


அதை வெட்ட வேண்டும் என்று எந்தத் தமிழனும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால், மகாகவி பாரதியார் 'சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்' என்றுதான் கூறியுள்ளார். தமிழன் கனவு என்று கருணாநிதி சொல்கிறாரே, இதுதான் தமிழன் கனவாக இருந்தது. ஆங்கிலேயன் தான் ரோடு போட்டது போல, ரயில்பாதை போட்டது போல, கடலில் கால்வாய் வெட்ட முடியுமா என்று ஆராய்ந்தான். ஆனால் அந்த ஆராய்ச்சியில், அந்த இடம் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த்து என்று கண்டு கொண்டான்.


1912 முதல் 1919 வரை மெட்ராஸ் ப்ரெசிடென்சியின் கவர்னராக இருந்த லார்ட் பெண்ட்லாண்ட் (Lord Pentland) என்பவர் இந்தியாவின் வைசிராயாக இருந்த லார்டு ஹார்டிங் அவர்களுக்கு எழுதிய அறிக்கையில் ராமர் சேது (ஆதாம் பாலம்) அமைப்பைத் தொல்பொருள் அமைப்பக அறிவிக்க வேண்டும் என்றார்.

"I would earnestly request you to direct the Archaeological Survey of
India to undertake an extensive and intensive survey of Rameshwaram
and its beautiful environs, particularly with reference to historic
and primordial Adam's Bridge, for declaring it as a national
monument,"
Lord Pentland wrote to Lord Hardinge after touring
Rameshwaram in 1914.


சுதந்திரத்துக்குப் பிறகு, மத்திய அரசு மீண்டும் ஆய்வில் இறங்கியது. அதில் ராமர் சேதுவை உடைப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாது என்று சொல்லப்பட்டாலும், 1961, 1968, 1996 ஆம் ஆண்டுகளில் சமர்ப்பிக்க அறிக்கைகள் ராமர் சேதுவைத் தொடவில்லை. முன்பு புயலால் அரிக்கப்பட்ட நிலநீட்சி வழியாக்க் கால்வாய் அமைப்பதையே அவை சாத்தியமாகக் கூறின. ஆனால் கருணாநிதி தொடர்பு ஏற்பட்ட பிறகு, இயற்கைச் சமன்பாட்டையும், கலாசாரத்தையும் அழிக்கும் செயலாக, ராமர் சேதுவை அழிக்கும் நிகழச்சி நடந்தேறி வருகிறது.

 


முந்தைய தமிழர்கள் இயற்கைக்கு ஊறு விளைவிக்கும் எந்தச் செயலையும் செய்திருக்க மாட்டார்கள். தங்களுடைய கலாசாரத்தை அழிக்கும் எந்த ஒரு செயலையும் அனுமதித்திருக்க மாட்டார்கள். இது தமிழர்களின், பாண்டியர்கள் முதல் சேதுபதி மன்னர்கள் வரை அரும் பாடு பட்டு போற்றிப் பாதுகாத்த ஒரு கலாச்சாரச் சின்னம். முற்றிலும் தங்கள் சொந்த வருமானங்களைப் பெருக்கவும், ஒட்டு வங்கிக்காகவும் கருணாநிதியும், ஊழலில் திளைக்கும் காங்கிரஸ் ஆட்சியாளர்களும், தமிழர் கலாச்சாரத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலையின்றி இந்த திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று துடிக்கிறார்கள். அப்படிச் செய்தால், சுற்றுச் சூழ்நிலை பாதிக்கப்படுவதைப் பற்றியோ, வருங்காலத்தில் ஏற்படப் போகும், நினைத்துப் பார்க்க முடியாத தீய விளைவுகளையும், அவற்றினால் அழியப் போகும் தமிழகத்தைப் பற்றியும் அவர்களுக்குக் கவலை இல்லை.

ஆனால் தமிழர்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கலாமா?

நம்முடைய பிற்கால சந்ததியினர் சுனாமியாலும், எரிமலை வெடிப்புக்களாலும் அழியக் கூடிய நிலமைக்கு நாம்  துணை போகலாமா?  சிந்திப்பீர்!

 

2 comments:

Prasad said...

ராமர் சேதுவை அரசியலாக்கி பிழைக்க வழி தேடும் தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு தவறு என்று நிரூபிக்க ஒரு முயற்சி.
நிற்க.
இந்த இராமர் பாலம் பற்றி பல அறிவியல் அறிஞர்களும் விஞ்ஞானிகளும்
பல கருதுக்களை முன் வைத்துள்ளனர்.
வங்காள விரிகுடா கடல் பகுதியை விட குமரிக்கு தெற்கே உள்ள இந்தியப்பெருங்கடல் பகுதி தாழ்வாக உள்ளது. இது இயற்கையாக அமைந்துள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு காரணமாக கடல் நீர், பாக் ஜல சந்தி வழியாக, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது, இதன் காரணமாக பாக் ஜல சந்தியில் மணல் சேருகிறது. கிழக்கே இலங்கை இருப்பதினால் குறுகிய இந்தப்பகுதியில் கடல் ஆழம் குறைந்து அலைகள் குறைவாக உள்ளது. இயற்கையின் இந்த அமைப்பினால் பல அறிய கடல் வாழ் பிராணிகளும், தாவரங்களும் இப்பகுதில் உண்டு என்பது உண்மை.
இயற்கையிலயே ஆழம் குறைந்ததும், பாறைகள் நிறைந்ததும், மணல் மேடு இடுவதும் ஆன கடல் பகுதியில் பெரிய கப்பல்கள் செல்வது இயலாதது. மிகவும் ஆபத்தானது. இதனை ஆழப்படுத்தினால், மிகக்குறுகிய காலத்திலேயே, தோண்டிய இடத்தில் மணல் சேர்ந்து ஆழம் குறைந்து விடும், இயற்க்கைக்கு எதிரான இச்செயல் பலன் தராது. மேலும் சிறிய கப்பல்களே செல்ல முடியம். பெரிய சரக்கு கப்பல்கள் செல்ல முடியாது. ஆகவே பாக் ஜல சந்தியை கப்பல் போக்குவதுக்காக ஆழப்படுத்துவது பொருளாதார ரீதியாகவும் நல்ல திட்டம் அல்ல. ஆக இந்த சேது சமுத்திர திட்டம் தனி நபர்கள் (அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள்) தங்கள் வருமானத்தை பெருக்கிக்கொள்ள உதவுமே அன்றி வேறு பயன்கள் கிட்டாது. பொருளாதார ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பயன் தராத திட்டத்தை அடியோடு நிறுத்துவதுதான் சமுதாயத்துக்கு நாம் செய்யும்
தொண்டு.
தவற்றை தெரிந்து செய்ய முற்படுவது அறிவீனம் மற்றும் அல்ல, மிக மோசமான சமுதாய துரோகமும் கூட.
ஆகவே மதத்தையும் அரசியலையும் தாண்டி விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட உண்மைகளை ஏற்பது விவேகம்.
ஆகவே சேது சமுத்திர திட்டம் நிறுத்தப்பட வேண்டும்.

சு சுந்தர ராமன்
திருவரங்கம்

Suresh said...

We all are presuming that Mr. Karunanidhi is atheist. But it is not so, he is just only against Hinduism. If you watch his comments and his channel too indicates the same. The highlights are that, he never commented against Christianity and Islamism. Due to the fact of vote fever. Not only that, he
utterly supports Christianity religion. In his kalaignar channel, if there are Hindu religions festivals, they are portrait-ed as holiday celebration programs. It is not the case for Christmas. We have to ignore or better eliminate this guy for the cause of Hinduism.