எப்படி இருந்த கருணாநிதி, இப்படி ஆகி விட்டார்!!
(நன்றி :- குமுதம் )
கருணாநிதியின் கவலைகளும் பிரபாகரன் பற்றிய கவலைகளும் -
ஞாநி - ஓ-பக்கங்கள்,
குமுதம், 26-5-2009
தொலைக்காட்சிகளில் டெல்லியில் தள்ளு வண்டியில் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை வைத்து தள்ளிக் கொண்டு சென்றபடி அவருடைய குடும்ப உறுப்பினர்களும் குடும்ப விஸ்வாசிகளும் வலம் வந்த காட்சிகளைப் பார்த்தபோது பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை அனுபவத்தை நான் சிறுகதையாக எழுதியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது.
ஒரு டி.வி. நிகழ்ச்சிக்காக அந்த விடுதலை வீரரை நான் சென்னைக்கு வரக் கேட்டிருந்தேன். . அவருக்கு வயது எண்பதுக்கு மேல். உடல் தளர்ச்சி பெரிதாக இல்லாவிட்டாலும் கடும் மன தளர்ச்சியில் இருந்தார். சென்னைக்கு அழைத்து வந்தவர்கள் அவ்ருடைய பிள்ளையும் பேரனும். நிகழ்ச்சிப் பதிவு முடியும்வரை என் வீட்டில் தங்கியிருந்தார்கள். எல்லாம் முடிந்து ஊருக்குத் திரும்பும் தினத்தன்று ரயிலுக்குப் புறப்படுவதற்கு முன்னால் அவர் என் அறைக்கு பேரனுடன் வந்தார். என்னிடம் ஒரு உதவி வேண்டுமென்று தயங்கித் தயங்கிச் சொன்னார். என்னவென்று கேட்டேன் பேரனுக்கு சினிமாவில் சேர ஆசை. எப்படியாவது கமல்ஹாசனிடம் சொல்லி சேர்த்துவிடவேண்டுமென்று கேட்டார் ஆங்கிலேய ஆட்சியில் தேசத்துக்காகஅடி உதை அவமானங்களை சந்தித்திருந்த அந்த விடுதலை வீரர். ஏற்கனவே பல முறை பேரன் சென்னைக்கு வந்து முயற்சித்த கதையையும் சொன்னார். விடுதலை வீரருடன் ரயிலில் வந்தால் உடன் வரும் உதவியாளருக்கு டிக்கட் இலவசம் என்பது அரசு அளித்திருக்கும் சலுகை. எனவே அடிக்கடி இந்த விடுதலை வீரரை பேரன் சென்னைக்கு அழைத்து வந்து நாள் முழுக்க ரயில்வே நிலையத்திலேயே உட்காரவிட்டுவிட்டு, கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கேட்கப் போய்விடுவான். இரவு ரயிலில் ஊர் திரும்பும் வரை ரயிலடியில் விடுதலை வீரர் கிடக்க வேண்டியதுதான்.
தள்ளு வண்டிக் கலைஞரை டெல்லிக் காட்சிகளை டி.வியில் பார்த்தபோது ஏனோ இந்த உண்மைக் கதை நினைவுக்கு வந்தது. ஒரு காலத்தில் மொழிக்காக, தமிழ் மக்களின் உரிமைக்காக, ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து டெல்லிக்கு எதிராகப் போராடிய இளைஞர், இன்று 84 வது வயதில் மகனுக்கும் மகளுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவி பெற்றுத் தருவதற்காக தள்ளு வண்டியில் வைத்து அலைக்கழிக்கப்படுகிறார். விடுதலை வீரருக்கும் இவருக்கும் ஒரே வித்யாசம், இப்படி அலைவது இவருக்கும் பிடித்திருக்கிறது என்பதுதான்.
தி.மு.க என்பது திருக்குவளை மு.கருணாநிதி லிமிடெட் கம்பெனியாகிப் பல காலம் ஆயிற்று. கட்சி என்கிற கம்பெனியின் கண்ட்ரோலிங் ஷேர்ஸ் எல்லாம் குடும்பத்திடமே இருக்கின்றன. குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகள் வரிசையாக நிர்வாகப் பொறுப்புகளுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அதை ஒழுங்காக முடித்துத் தருவதற்காக ஓய்வு பெறும் வயதைத் தாண்டியபிறகும் போர்ட் சேர்மன் பதவியில் கலைஞரை தொடரவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
டி.வியில் பார்த்த டெல்லிக் காட்சிகளில் தள்ளு வண்டி ஊர்வலத்தில் பின்னால் போகிற பிரமுகர்களில் ஒரு பலியாடு மாதிரி முகத்தைப் பார்த்தேன். தெரிந்த முகமாயிருந்தது. வயதாகிவிட்டதால் கொஞ்சம் பின் வழுக்கையும், முன்புறம் வயதை மீறிய கருந்தாடியுமாக - திருச்சி சிவா! தி.மு.கவின் ராஜய சபை உறுப்பினர். ஸ்டாலினுடன் இளைஞர் தி.மு.க உதவி தளபதிகளில் ஒருவராகத் துடிப்புடன் செயல்பட்டு விஸ்வாசமாக சுமார் 30 வருடங்களுக்கு மேல் கட்சியில் இருக்கிறவர். புத்தகம் படிக்கிற ப்ழக்கமும், எழுதுகிற பழக்கமும் உடைய கண்ணியமான மனிதர். கட்சி அவருடைய விஸ்வாசத்துக்கு அளித்த உச்சமான பரிசு எம்.பி.பதவி மட்டும்தான். இந்த முறை அவருக்கு ஓர் இணை மந்திரி பதவியாவது தருவார்கள் என்று நினைத்தேன். ம்ஹூம். எம்.ஜி.ஆர் விஸ்வாசியாக இருந்து கல்வித் தந்தையாக மாறி அண்மையில் தி.மு.கவில் இனைந்து எம்.பியான கோடீஸ்வரர் ஜெகத்ரட்சகனுக்கெல்லாம் மந்திரி பதவி கொடுத்த பிறகு மீதி பதவி எதுவும் இல்லையே. மன்மோகன் சிங் குறைந்தது தி.மு.கவுக்கு பத்து இணை அமைச்சர் பதவிகளையாவது கொடுத்திருந்தால், சிவா மாதிரி அரசியல் அசடுகளுக்கும் வாய்ப்பு கொடுத்திருப்பார்களோ என்னவோ..
மூத்த கட்சிக்காரரான டி.ஆர்.பாலுவை ஓரங்கட்டிவிட்டதாக பத்திரிகைகள் எழுதுகின்றன. இதில் ஒன்றும் வியப்பு இல்லை. பண்ணையார் வீடுகளில் எப்போதும் துடிப்பான புது இளம் கணக்குப் பிள்ளைகள் வந்துவிட்டால், வயசான பழைய கணக்குப் பிள்ளைகள் தாமாகவே குறிப்பறிந்து ஒதுங்கிக் கொள்வதுதான் மரபு. இன்னும் கொஞ்சம் கவுரமாக பாலுவுக்கு ஏதாவது மாநில ஆளுநர் பதவி வாங்கிக் கொடுத்து ரிட்டையர் ஆக்கியிருக்கலாம்.
வாசிப்புப் பழக்கம், எழுதும் ஆற்றல், ஆங்கில அறிவு உடையவர்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு எம்..பிகளாக அனுப்பி தங்கள் கொள்கைகளுக்காக திறமையாக வாதாடக் கூடிய நபர்களை - அண்ணா, சம்பத், நாஞ்சில் மனோகரன் , இரா செழியன்,முரசொலி மாறன், டாக்டர் கலாநிதி, வைகோ போன்றோரை -- அனுப்பும் கட்சியாக இருந்த திமு.க இன்று எப்படிப்பட்டவர்களை அனுப்புகிறது ? யாரெல்லாம் அமைச்சர் ஆக்கப்படுகிறார்கள் ? எப்படி இருந்த தி.மு.க இப்படி ஆகிவிட்டது ? இன்னும் அடுத்த பத்தாண்டுகளில் என்னவெல்லாம் ஆகப்போகிறதோ ?
நீ ஒன்றும் எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று ஆவேசப்பட வேண்டாம். நீங்களேயாவது உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள். என் கவலையெல்லாம் உங்களின் இலவச மயக்கங்களில் சிக்கியிருக்கும் மக்களின் கதியைப் பற்றித்தான்.