Monday, March 4, 2019

கமல் ஹாசனைக் கேள்வி கேட்டு விடாதீர்கள்!

Earlier published in PGurus



'அசட்டுத்தனமான கேள்வியும் அதற்கேற்ற பதிலும்' என்ற தலைப்பில் அந்தநாளில் ஒரு வார இதழில் ஜோக்ஸ்கள் வந்தன. உதாரணத்திற்கு, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒருவனிடம், 'சாப்பிடுகிறீர்களா?' என்று கேட்டால் என்ன அசட்டுத்தனமான கேள்வி அது? அதற்கு அவன் 'இல்லை, சாதம் என்ன கலர்-னு பார்த்துக்கிட்டுருக்கேன்' என்று பதில் சொன்னால் அசட்டுக் கேள்விக்கு சரியான பதில்தானே அது!  

கேள்விக்கேற்றார்ப்போலத்தான் பதில் இருக்க வேண்டும். அசட்டுக் கேள்விக்கு அசட்டுத்தனமான பதில்தான் கொடுக்கவேண்டும். இதுவே ஆக்கபூர்வமான கேள்விக்கு எப்படி பதில் கொடுக்க வேண்டும்? ஆக்க பூர்வமாகத்தானே பதில் கொடுக்க வேண்டும்? ஆனால் அசட்டுத்தனமாக   பதில் கொடுப்பதில் ஒரு ட்ரெண்டை உண்டாக்கிக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன் அவர்கள்.

கமல்ஹாசனைக் கேளுங்கள் என்னும் ஹாஷ்டாகில் (#AskKamalHaasan) அவர் கேள்விகளை வரவேற்கிறார். நல்ல பதிலை வரவழைக்கும்படியாக ஒரு கேள்வி கேட்பதற்கே திறமை வேண்டும். அப்படிப்பட்ட கேள்விகளையே  பதில் கூறுவோர்கள் தேர்ந்தெடுப்பார்கள். கமல் இப்பொழுது அரசியல் அவதாரம் எடுத்திருப்பதால், ஏடாகூடமான கேள்விகள் வரும். அதனால் கவனமாகக் கேள்விகளைத் தேந்தெடுத்து பதில்  கூறுவார் என்றுதான் நாம் எதிர்பார்ப்போம்.

அவரும் ஒரு கேள்வியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். சாதாரண கேள்வி, ஆனால் நல்ல கேள்வி.  ஒரு அறிவுஜீவியாக, படிப்பாளியாகத்  தன்னைக் காட்டிக்  கொள்ளும் கமல் மீது தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் எது என்று அறியும் ஆவலில் அவரது ரசிகர் கேட்கிறார். 


இதற்கு கமல் தரும் பதில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு இருக்கும். ஒன்று ஜோக்கடித்து பதில் சொல்லலாம். அல்லது சீரியஸாக பதில் சொல்லலாம். இரண்டும் இல்லாமல் அசட்டுத்தனமான ஒரு பதிலை கமல் தருகிறார்.
இந்த பதிலைப் படித்துவிட்டு அவரவர் கமலைத் திட்டித் தீர்த்து விட்டார்கள்- பூணூலைக் கேவலப்படுத்திவிட்டார், பார்ப்பனர்களை மட்டம் தட்டுகிறார், தான் திராவிட அரசியல் செய்வதாகக் காட்டிக் கொள்வதற்கு இப்படி ஒரு பதிலைக் கொடுத்திருக்கிறார் என்று ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


கமல் அப்படி என்ன சொல்லிவிட்டார்? பூணூல் அணிந்துகொண்ட காரணத்துக்காகவே பார்ப்பனர்கள் அவமதிக்கப்பட்டார்கள், பாதிக்கப்பட்டார்கள். அதைத்தான் கமலும் சொல்லியிருக்கிறார் - என்னை பாதித்த நூல் பூணூல்- என்று. அதனால் அதைக் கழற்றி வைத்துவிட்டார் போலிருக்கிறது. அத்துடன் நிறுத்திக் கொண்டிருக்கலாம். அதற்கு மேலே போய், 'அதனாலேயே பூணூலைத் தவிர்த்தேன்' என்கிறாரே அதுதான் அசட்டுத்தனம்.

பூணூலைத் தவிர்த்தேன் என்கிறாரே, பூணூல் போட்டுக் கொண்டவரைத் தவிர்த்தாராபரம்பரை பூணூல் இல்லை என்றாலும், திடீர்ப் பூணூல் அணிந்த ராகுல் காந்தியை அவர் தவிர்த்தாரா? இல்லையே.

  
பரம்பரைப் பூணூல் கமலும், திடீர்ப் பூணூல் ராகுலும் தமிழ் நாட்டு அரசியலுக்காகக் கை குலுக்கிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க பூணூலைத் தவிர்த்தேன் என்று ஏன் பதில் சொல்ல வேண்டும்? நாளைக்கு யாராவது இதை பற்றிக் கேள்வி கேட்டால், 'நான் பூணூலைத்  தவிர்த்தேன் என்று சொன்னேனே தவிர பூணூல் போட்டுக் கொள்பவரைத் தவிர்ப்பேன் என்று சொல்லவில்லையே' என்று அசடு வழிய வேண்டியிருக்கும். அதனால்  ஒழுங்காக கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியிருக்கலாம். ஆனால் கமலுக்கு அது சாத்தியமாகாது போலிருக்கிறது.

சமீபத்தில் இன்னொரு கேள்விக்கு அவர் அளித்த பதில் அசட்டுத்தனத்திலிருந்து அபத்தத்துக்கு முன்னேறி இருந்தது.
கமலுடைய  சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லையே என்ற கருத்தில் ஒரு ரசிகர் கேட்கிறார்.

இந்தக் கேள்விக்கு யோசிக்காமல் பதில் சொல்கிறார் கமல். பாரதியார் இவருக்குத் தகப்பனாராம். பாரதியார் முகம்தான் இவரது முகமாம்.


பாரதியார் முகத்தைத் தன் முகமாக ஏற்று கொள்கிறார் என்றால், பாரதியார் சொன்ன கருத்துக்களையும் ஏற்றுக் கொள்கிறார் என்று அர்த்தம் கொள்ளலாமா?


ஜாதிக் கொடுமைகள் வேண்டாம் என்று எட்டு திக்கும் முரசு கொட்டும் பாடலின்  ஆரம்பத்திலேயே 'வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே' என்கிறாரே பாரதியார் அதை கமலஹாசன் வழி மொழிவாரா?

அது மட்டுமா,
'வேதமறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்'
என்று பூணூல் போட்ட பார்ப்பானை உயர்வாகச் சொன்னாரே, அதை ஏற்றுக்  கொள்கிறாரா கமல்?

மேலும்,
'நாலு வகுப்பும் இங்கு ஒன்றே - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை  தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி'

என்று மனுவாதி வர்ணங்களைத் தூக்கிப் பிடித்துள்ளாரே பாரதியார், அவரது அந்த முகம்தான் தனது முகம் என்று கமல் சொல்கிறாரா? இதையும் விடுங்கள். தென் மாநிலங்கள் என்று பாரதத்திலிருந்து பிரித்துப் பேசுகிறாரே கமல், தந்தை என்று சொல்லும் பாரதியார் அதை ஏற்றுக் கொண்டிருப்பாரா? கங்கையையும், காவிரியையும் இணைத்தவர் அவர். 

காசியையும், காஞ்சியையும் ஒரே நோக்கில் பார்த்தவர் அவர். நாக்கில் வேதம், வாக்கில் செப்பு மொழி பதினெட்டு என்று பாரத தேசம் முழுவதையும் ஒருங்கிணைத்துப் பார்த்தவர் பாரதியார். அப்படி இணைப்பதற்கு அடிபப்டையாக வேத மதத்தை ஏற்றுக் கொண்டவர் அவர். அவரைப் போய் தனக்குத் தந்தை என்கிறாரே,  அவரது முகம் தன் முகத்தில் பொருந்துகிறது என்கிறாரே இது அசட்டுத்தனமா, அல்லது அபத்தமா?

ஒரு வேளை தந்தை பெரியார் என்ற எண்ணத்தில் இந்த பதிலைத் தந்திருக்கிறாரோ? இருக்கும், இருக்கும். கேட்ட கேள்விக்கு ஒழுங்கான பதில் சொல்வதில்லை என்று முடிவெடுத்துவிட்டால் இப்படித்தான் அசட்டுத்தனமும், அபத்தமும் அரங்கேறும்.