Thursday, June 24, 2010

Chemmozhi theme song (World Tamil conference series - 4)



The theme song for the World Tamil conference is something entertaining to say the least.
அதைப் பற்றி எழுத எனக்கு வெகு நாட்களாக ஆவல். ஆனால் என் குழந்தைகள் என்னைத் தடுத்து விட்டனர். மாநாடு நடக்கும் இந்த நேரத்திலாவது அதைப் பற்றி எழுத் வேண்டும் என்று இங்கே எழுதுகிறேன்.


என் குழந்தைகளின் எண்ணத்தைப் பார்ப்போம். அவர்களைப் பொறுத்த வரையில், முதல்வர் கருணாநிதியின் கதை, கட்டுரை, கவிதை முதலியவற்றை, தமிழ்ப் பாடத்தில் படிக்க வேண்டிய கட்டாயத்தில் படித்துள்ளனர். தி மு க ஆட்சியில் இருக்கும் போதெல்லாம், கருணாநிதி எழுதியவற்றை பள்ளிப் பாடத்தில் நுழைத்து விடுவார்கள். அதிலும் 10 -ஆம் வகுப்பு, 12 -ஆம் வகுப்புப் பாடத்தில் வைத்து விடுவார்கள். அப்படித்தான் என் குழந்தைகள் அவர் எழுதினதைப் படித்துள்ளார்கள். அவர்கள் அனுபவத்தில் இதைச் சொல்லுகிறார்கள்.


அவரது படைப்பாக இருப்பதால், தேர்வில் அதிலிருந்து கேள்விகள் நிச்சயமாக வரும். அதிலும், பத்து மதிப்பெண்கள் போன்ற பெரிய கேள்விகளில் கேட்பார்கள். மற்ற பாடங்களைப் போல கலைஞரின் படைப்புகளில் சொற்சுவை, பொருட் சுவை என்று தேடி மெனெக்கெட்டுத் தேட வேண்டாம். ஒன்றும் இருக்காது. ஆனால் நீங்களே ஏதேனும் கண்டு பிடித்து ஆஹா ஓஹோ என்று எழுத வேண்டும், விடை திருத்துபவருக்குக் குறைத்து மதிப்பெண் கொடுக்கக் கை வராது. அதனால், தேர்வுக்குத் தயார் செய்யும் போதே, choice -இல் விடுவோம் என்று மற்ற கடின பாடங்களை விட்டு விட்டு, கலைஞரின் ’படைப்புகளை’ ஒரு முறை பார்த்து விட்டு (ஒரு முறை பார்த்தால் போதும் அவ்வளவு எளிது) போனால் போதும். மதிப்பெண்கள் கிடைத்து விடும். இது நான் படித்த காலத்திலிருந்து, என் குழந்தைகள் படித்த சமீப காலம் வரை நடந்து வந்திருக்கிறது.


இப்படிப்பட்ட நன்மைகள் செய்யும் ஒரு ’படைப்பாளியின்’ 'கவிதையை' விமரிசிக்கலாமா என்பது என் குழந்தைகளின் கேள்வி. அதனால் இந்தக் கட்டுரையை நான் எழுதக்கூடாது என்று அவர்கள் என்னைத் தடுத்து விட்டார்கள். அவர்கள் நோக்கில், இந்த செம்மொழிப் பாடலை விரைவில் பள்ளிப் பாடத்தில் புகுத்தி விடுவார்கள். ரஹ்மான் இசையில் ஸூபி பாடலாக இழுத்து இழுத்து பாடக் கேட்டு வார்த்தைகள் மனப்பாடம் ஆகி விட்டன. மீண்டும் மீண்டும் தொலைக் காட்சியில் பார்த்து இன்றைய குழந்தைகள் இத்தனை நேரம் நன்கு மனப்பாடம் செய்திருப்பார்கள். பின்னாளில் அவர்கள் பாடத்திட்டத்தில் அதைப் படிக்கும் போது எவ்வளவு எளிதாக இருக்கும்? கண்டிப்பாக அது தேர்விலும் கேட்கப்படுமே?

இந்தப் பாடலை விளக்க சிரமப்பட வேண்டுமா என்ன? கலைஞரே சிரமப்படாமல் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.' என்று சொல்லிவிட்டு அதற்குப் பிறகென்ன? 'பிறந்த பின்னர் யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று எளிதாகச் சொல்லி விட்டார். அதற்கு மேலே, பிறப்பினால் ஒப்புமை எப்படி, கேளிர் என்பவர் யார் என்று உன்னைப் போல பழைய உரையை வைத்துக் கொண்டு சொல்ல வேண்டுமா? அப்படி கலைஞரும் யோசித்திருந்தால் இப்படி வரிகள் எழுதி இருக்க மாட்டாரே? ஏதோ அவரால் மாணவர்களுக்கு எவ்வளவு நன்மை என்று பார்ப்பதை விட்டு விட்டு - பாடல் சரியில்லை என்கிறாயே என்று என்னைக் கேட்கிறார்கள்.


பாடல் வெளியானபோது, ரஹ்மான் அவர்களை உங்களுக்கு இந்தப் பாடலில் எந்த வரிகள் பிடித்திருக்கின்றன என்று கேட்டார்கள். இசையைக் குறித்து கேட்டார்களோ அல்லது பாடலைக் குறித்து கேட்டார்களோ தெரியாது. அதற்கு ரஹ்மான அவர்கள், 'செம்மொழியான தமிழ் மொழியாம்' என்னும் 'அரிய' வரியைச் சொல்லி விட்டு, அடடா, தான் கிண்டல் அடிக்கிறோம் என்று நினைத்து விடுவார்களோ என்று நினைத்தாரோ என்னவோ, அதற்குப் பிறகு அடிக்கடி கலைஞரின் தமிழ் high standard என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். பாவம் அவர் பிழைக்கணும். நமக்கு அப்படியா? நமக்கு என்ன தந்தது இந்த அரசு? இட மாற்றத்தால் சரண்டர் செய்த ஆவணங்களைக் கொடுத்து இரண்டு வருடம் ஆகிறது. ஒரு ரேஷன் கார்டு கொடுக்கக்கூட வக்கில்லை. (அல்லது வாங்கும் திறமை எனக்கில்லையோ? ) அதனால் நான் சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன்.


இந்த செம்மொழிப் பாடலில் ஒன்றும் இல்லை என்று சொல்ல மாட்டேன். சங்க நூல்களிலிருந்து சுட்ட வரிகளில்தான் எத்தனை அர்த்தங்கள் உள்ளன? அவற்றை ஒரு இந்து எதிர்ப்பாளரின் வாயின் வழியாகச் சொல்ல வைத்தது தெய்வமா, அதுதான் விதியா, அல்லது கால தேவனா? என்ற ஆச்சரியம் தான் ஏற்படுகிறது.


எதை எல்லாம் கலைஞர் எதிர்த்தாரோ, எவை எல்லாம் விதிப்பயன் அல்லது வினைப்பயன் என்பார்களோ அந்த கர்ம வினைப்பயன் குறித்த தத்துவக் கருத்துக்களை எல்லாம் அவர் அறியாமல், முக்கியத்துவம் கொடுத்து பாடலில் சேர்த்துள்ளார். அவர் பார்வையில் உள்ள பொருள் ஒன்று. ஆனால் அவற்றின் உட்பொருள், வேறு. அவற்றை அவர் அறியவில்லை என்பது அதிசயம் - அப்படி என்றால் அப்பாடல்களை அவற்றை எழுதிய புலவர்கள் கண்ணோட்டத்தில் அவர் படிக்கவில்லை என்று தெரிகிறது. நாத்திகம் என்ற பெயரிலும், இந்து மத எதிர்ப்பு என்ற பெயரிலும் பழந்தமிழ்ப் பாடல்களைத் தனக்குப் பிடித்த விதத்தில் பொருள் செய்து கொண்டு இத்தனை நாள் கூறி வந்தவர் இப்பொழுது அப்படிப்பட்ட முக்கிய வரிகளை இந்தப் பாடலில் கையாண்டுள்ளது விந்தை. இந்து மதத்திற்கு எப்படிப்பட்ட சேவை இது??


இதில் ஆச்சரியம் என்னவென்றால், எதிர்ப்பாளரான அவரைச் சரியான விஷயங்களை இந்தத் தருணத்தில் சொல்ல வைத்திருக்கிறதே, அதுதான் விதியா? எதை அவர் சொல்ல விரும்ப மாட்டாரோ, அதை அவர் அறியாமல் அவர் வாயிலாகச் சொல்ல வைத்திருக்கிறதே, இதை விதி என்று சொல்லலாம் அல்லவா? மனிதன் விதியின் வசம் தான் என்று நிரூபித்திருக்கிறதே?? 'ஊழிற் பெருவழி யாவுள என்று வள்ளுவர் சும்மாவா சொன்னார்?? கலைஞர் அவர்களை ஊழ் என்பது வழிப்படுத்திக் கொண்டு செல்கிறது.

பாடலுக்கு வருவோம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது இந்த மாநாட்டின் மையக் கருத்து. (இதைப் பற்றி சோ அவர்கள் துக்ளக்கில் எழுதியுள்ளதைக் கீழே கொடுத்துள்ளேன்.) அனைவரும் பிறப்பால் ஒன்றே, அப்படி பிறந்த பின்னால் யாதும் ஊரே, யாவரும் உறவினரே என்பது தமிழனின் கொள்கை என்னும் வண்ணம் கலைஞர் எழுதி உள்ளார்.

இந்தக் கருத்து 972 - குறளில் உள்ளது.
"
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமை யான்'" என்பதே அக்குறள்.
திருவள்ளுவர் சாதிப் பிரிவினையை வேண்டாதவர் என்று இந்தக் குறளை தாங்கள் வசதிக்காக எடுத்துக் கொள்பவர்களுள் கலைஞரும் ஒருவர். ஆனால், இக்குறளுக்கு உரை எழுதின பண்டைய ஆசிரியர்கள் அவ்வாறு எண்ணவில்லை.

'
சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான்' என்று சிறப்பு ஒவ்வா என்னும் பன்மை வினை முற்றால் 'சிறப்பு' என்பது சிறப்பியல்புகளைக் காட்டுவன. செய் தொழில் வேற்றுமையால் என்னும் தொடரால் கருமத்தினால் பெறப்படும் பெருமை மற்றும் சிறுமையைப் பற்றி பேசுகிறார். இந்தக் குறளே 'பெருமை' என்னும் அதிகாரத்தின் கீழ் வருகிறது. ஒருவர் செய்யும் செயலால் பெருமை அல்லது சிறுமை ஏற்படுகிறது என்கிறது இக்குறள்.

முன்னமே, 'தெரிந்து தெளிதல்' அதிகாரத்தில் ' பெருமைக்கும், ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்' என்று சொல்லியுள்ளார். வினைபயனையும், அதனால் விளையும் சிறப்பியல்புகளையும் கூறுவதால், அவற்றைச் செய்யும் ஆதாரமான உடலை எடுத்த பிறப்பைப் பற்றிக் கூறுகிறார். வினைப்பயனகள் வேறு வேறு. அதனால் கிடைக்கும் பெருமையும் சிறுமையும் வேறு வேறு. எனவே வினைப்பயன் ஆற்றும் ஆதாரமான உடலும் வேறு வேறு. ஆனால் அந்த உடலைத் தரும் பிறப்பு என்பது அனைவருக்கும் ஒக்கும். எவ்வாறு?

"
வினை வயத்தால் பஞ்ச பூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தவருக்கும் ஒத்தலின், 'பிறப்பொக்கும்' " என்கிறார் வள்ளுவர் என்று பரிமேலழகர் கூறுகிறார்.

வினைப்பயன் அனுபவிக்கப் பிறப்பெடுக்கிறோம் என்பதே ஒற்றுமை. அனுபவிக்கும் வினைபயனால் அல்லது செய்யும் செயலால் வேறுபாடு என்பதே இக்குறளின் பொருள்.

பிறப்பினால் ஒற்றுமை இல்லை. பிறப்பெடுக்கும் உடலாலும் ஒற்றுமை இல்லை. குறள் 398 - இல் ஒருமைக் கண் தான் கற்ற கல்வி எழுமைக்கும் தொடர்ந்து வரும் என்கிறார். அதைப் பற்றி எழுதுகையில், பரிமேலழகர் இவ்வாறு சொல்கிறார்:- ஒருவன் கற்ற கல்வியானது " வினைகள் போல உயிரின் கண் கிடந்தது அது புக்குழிப் புகுமாகலின், 'எழுமையும் ஏமாப்புடைத்து' என்றார் " எனவே வினைகளைப் போல, ஒருவன் கற்ற கல்வியும் உயிரின் கண் கிடந்தது, அந்த உயிர் பிறப்பெடுக்கும் போது கூடவே பிறந்து, அது செய்யும் செயல்களுக்கு ஆதாரமாக இருக்கும். ஏழு பிறவிக்கும் அந்த அறிவு கூடவே வரும்.

மக்கள் பலரும் கல்விச் செல்வத்தில் வெவ்வேறு நிலையில் இருப்பார்கள். பிறக்கும் போது வினைகள் மற்றும் முற்பிறவி கல்வி தந்த அறிவு ஆகிய இவை இரண்டும் அனைவருக்கும் ஒன்றே போல இருக்காது. அதனால் பிறப்பினால் எவருக்கும் ஒற்றுமை கிடையாது என்பதே வள்ளுவர் ஆங்காங்கே சொன்ன கருத்து. அப்படியும் ஒற்றுமை இருக்கிறது என்றால், பிறவிப்பயனை அனுபவித்தல் என்னும் காரணத்தாலேயே என்பது உரை ஆசிரியர்கள் கருத்து.

இதுவே இந்து மதம் கூறும் கருமவினைக் கருத்தும் கூட. குறள் எங்கணும் இத்தகைய இந்துமதக் கருத்துக்களே உள்ளன. அவற்றுள் மிகவும் நுட்பமான இக்கருத்தை, கலைஞர் அவர்கள்மையக் கருத்தாகக் கொண்டது என்னே விந்தை! அவர் நினைத்த பொருள் ஒன்று. ஆனால் அறிஞர்களும், பின்னாளில் வருபவர்களும் மூல உரையைத்தானே பார்ப்பார்கள்? அந்தக் கருத்துதானே நின்று நிலைத்து இருக்கப் போகிறது?

இந்தக் கருத்தை கலைஞர் எந்த அளவு புரிந்து கொண்டுள்ளார் என்பது கேள்விக்குறியே. புரிந்திருந்தால் இப்படி ராஜ தர்பார் நடத்திக் கொண்டிருக்க மாட்டார். சாதாரணமாகத் தான் புரிந்துள்ளார் என்றாலும், ஒப்புமையான பிறப்புஅவருக்கு என்ன சொல்லித்தர வேண்டும்?

அதை ரஜினிகாந்த் அவர்கள் தர்ம துரை படத்தில் பாடியுள்ளார்.

'
ஆண் என்ன பெண் என்ன, நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம் தான்.
அட நாடென்ன வீடென்ன, காடென்ன மேடென்ன எல்லாம் ஓரிடம் தான்.
நீயும் பத்து மாசம், நானும் பத்து மாசம்..."

இந்த ஒற்றுமை சொல்லும் பாடம் என்ன?

'
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு .. ' அநியாயங்கள் செய்ய வேண்டுமா?
"
ஊருக்கும், பேருக்கும், காருக்கும் இஷ்டப்பட்டு வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்லை"

ஆனால் பேருக்கு ஆசைப்பட்டு வீட்டை எழுதிக் கொடுத்தது பெரிதில்லை. வீட்டை எழுதிக் கொடுக்கும் அளவுக்கு வசதியான நிலையை அடைவதற்குக் கலைஞர் செய்த செயல்பாடுகள் என்னென்ன?  வருடக்கணக்கில் அவர் செய்து வந்த செயல்பாடுகள் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல இன்று நாட்டின் ஆதாரமான ஜன நாயகத்தையே பணநாயகமாக ஆக்கியுள்ளாரே, இந்தச் செயலால் ஏற்படும் வினைப் பயன்கள் கூடவே வரப்போகின்றன அல்லவா? இந்தக் குறள் அந்தக் கருத்தைத் தான் ஊட்டுகிறது.

சரி, முதல் வரியின் தொடர்ச்சியைப் பார்ப்போம்.
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்"

தமிழனுக்கு எல்லா ஊரும் அவனது ஊரே, அனைத்து மக்களும் உறவினரே என்று இந்த வரியைப் பற்றிச் சொல்கிறார்கள். இதன் உண்மையான விளக்கத்தை, கீழே கொடுத்துள்ள சோ அவர்களின் கட்டுரையில் காணலாம்.

இங்கே திரை கடலோடியும் திரவியம் தேடினவன் தமிழன். அதனால் ; யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தோழமை தேடினான் என்று சொல்லவில்லை. இதன் உண்மையான கருத்து இந்து மதத்தின் ஆழ்ந்த தத்துவத்தில் விளைந்த கருத்து. ஆச்சரியமாக, பிறப்பொக்கும் கருத்துக்கு ஒத்துப் போகும் கருத்து அது.

'
யாதும் ஊரே யாவரும் கேளிர்' - என்னும் இந்த ஒரு வரியை மட்டும் மேற்கோளிட்டு, இதுவே பண்டைய தமிழனின் நாகரீகம் என்பர். ஆனால் இந்த வரிகள் எழுதப் பட்ட இடம், பொருள் வேறு. இவை கர்ம வினையின் பாற்பட்டு, ஊழின் கண் அடித்துச் செல்லப்படும் வாழக்கை நிலையைப் புரிந்து கொண்டமையால் ஏற்பட்ட தெளிவின் வெளிப்பாடு. இதைக் கூறியவர் பூங்குன்றன் என்னும் காலக் கணிப்பாளர் எனப்படும் ஒரு ஜோதிடர்.
தீதும், நன்மையும், சாதலும், நோதலும் பிறர் தர வாரா. அவை கர்ம வினையின் படியே ஏற்படுகின்றன. ஒருவர் பெரியோராக இருத்தலும், அல்லது சிறியோராக இருத்தலும், முன் பிறவியில் செய்த வினையின் படியே, எனவே, பெரியோரை வியப்பதும் இல்லை, சிறியோரை இகழ்வதும் இல்லை. மற்றவர் யாரும், நம்முடைய இன்ப துன்பங்களுக்குக் காரணமாகாது, நாமே நம் நிலைக்கு காரணம் ஆகையால், எல்லாரும் நமக்கு ஒன்றுதான். அதனால், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் தத்துவக் கருத்து கொண்டது இப்புறப் பாடல்.
  

இந்தத் தத்துவத்தின் அடிப்படை, ஜோதிடம் தரும் முக்கால அறிவு. இந்த அறிவு வேதாந்தம் கூறும் கருத்து. ஸ்திதப் ப்ரஞன் என்று கீதையில் கண்ணன் கூறுவது. இதையெல்லாம் காணாது, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது தமிழர்கள் கொண்ட நாகரீகம் என்று மட்டும் சொல்லி, அந்த நாகரீகத்திற்கு ஆணி வேரான வேதாந்தத்தின் வழியே வாழ்ந்த வாழ்கையை மறைப்பது ஏமாற்று வேலைதான்.
 

பாடலின் இக்குறிப்பிட்ட பகுதிக்கு உரை எழுதிய உரை ஆசிரியர் (டா. உ.வே. சா. அவர்கள் கண்டெடுத்த பழைய உரை) " உயிர் ஊழின் வழியே படுமேன்பது, நன்மைக் கூறுபாடு அறிவோர் கூறிய நூலாலே தெளிந்தோம் ஆகலின்.." என்று நன்மை எது, தீமை எது என்னும் கூறுபாடுகள் அறிந்தோர் எழுதிய நூல்களில் இருந்து தாம் கற்று அறிந்தோம் என்று புலவர் கூறுவதால், கணியன் பூங்குன்றனார் காலத்து முன்பிருந்தே இந்த வேதாந்தக் கூறுபாடு அறிந்து, தெளிந்த மக்களாக நம் பண்டைய தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்று தெரிகிறது.



ஒருவனது பெருமையும், சிறுமையும் வினைப்பயனால் வருவது. தீமையும் நன்மையையும் பிறர் தர வருவது இல்லை. நாம்தான் அதற்குக் காரணம். அவ்வாறு நாம் செய்வது, கீதையில் சொல்லப்படுவது போல, பிரக்ருதியின் வயப்பட்டு, தன் வயமில்லாமல் வினை ஆற்றுவதால் ஏற்படுவது. நீரோட்டத்துடன் அடித்துச் செல்லப்படும் ஒரு புணையைப் போல நம் வாழ்கையும் அடித்துச் செல்லப்படுகிறது. ஒருவன் உயர்ந்தோனாக இருப்பதும் அந்த வினைப்பயனாலதான். தாழ்ந்தோன் எனப்படுதலும் அந்த வினைப்பயனால்தான். இன்றைக்கு தர்பார் நடத்தும் கலைஞர் இந்த நிலைக்கு வந்ததும் அவர் செய்த வினைப்பயன் தான் எனவே, அவரைப் புகழ்தலும் இலமே என்று இன்றைக்குக் கணியன் பூங்குன்றனார் இருந்திருந்தால் கூறி இருப்பார்.


இதை அறியாது இந்தக் கவிதையை கலைஞர் எழுதியிருப்பது கால தேவனின் லீலை என்றே சொல்லத் தோன்றுகிறது. நம் வயத்தில் இல்லாத புணை போன்ற நம் வாழ்கையை, செயல் பாட்டை - நீரோட்டமான காலதேவன் வழிப்படுத்துகிறான், இப்படிப்பட்ட கருத்துக்களை இலக்கியத்திலிருந்து கலைஞர் உருவி எடுக்கும்படி செய்திருக்கிறான் என்று தோன்றுகிறது.

இதற்கு மேல் அவர் சொல்வது எல்லாம், நல்ல entertainment.
உண்பது நாழி, உடுப்பது இரண்டு என்று புறநானுறு 189 சொல்கிறது. (உடுப்பது நான்கு முழம் என்று நல்வழி 19, 28 கூறுகிறது.)
சொகுசு வாழ்கையை உடைய அரசனாக இருந்தாலும் சரி, தூக்கம் இல்லாமல் ஓடி ஆடி பொருள் தேடும் கல்லாதவனாக இருந்தாலும் சரி அவர்களுக்குத் தேவைபடுவது ஒரு நாழி (அளவை) உணவு. உடுக்க இரண்டு முழம் துணி.


ஆனால் நடைபெறும் மாநாட்டில் நாழிகை தோறும உணவு மேளாதான். கூடவே டாஸ்மாக் சரக்கும் வெள்ளமென ஓடப்போகிறது. அப்படிப்பட்ட மாநாட்டுக்கு 'உண்பது நாழி' கருத்து ரொம்பவும் தேவைதான்.


இதில் இருக்க இடம் பற்றி சங்கப் புலவர்கள் கூறவில்லை. ஆனால் கலைஞர் கூறுகிறார். கலைஞர் பாணியில் பொருள் கொள்ள வேண்டுமானால் - யாதும் ஊரே என்று சொல்லிவிட்டார்களே அதனால் எதற்கு இருக்கும் இடம் தேவை என்று சொல்லி விடலாம். கலைஞர் அப்படி விட்டுவிடவில்லை. உறைவிடம் ஒன்றே என்கிறார்.
அவருக்கு உறைவிடம் ஒன்றே ஒன்று தானா?
No comments.


ஆனால் வேதாந்தக் கருத்தில் தோய்ந்து வாழ்ந்த தமிழர் எண்ணத்தில், இடம் ஒருவனுக்குச் சொந்தம் கிடையாது. இறந்த பின்னும் பிடி மண்தான். எனவே என்னுடையது என்று எதற்கு இடம் ஒன்றை சொந்தம் கொண்டாட வேண்டும் என்று இருந்தவர்கள் தமிழர்கள். அதனால்தான் - நலிந்த காலத்தில், நிம் திரிந்து பாலை ஆகினாலும், ஊர் விட்டு ஊர் சென்று வாழ்க்கையை அவர்கள் தொடர்ந்தார்கள். திரை கடல் தாண்டியவர்கள்தானே தமிழர்கள்? ஓரிடமாக உறைவிடத்தை விரும்பியவர்கள் இல்லை அவர்கள்.


அதற்குப் பிறகு வள்ளுவர் பொதுவுடைமை கூறுகிறார் என்கிறார் கலைஞர். முன் சொன்ன வினைபயன் காரணமாக வாழ்க்கை அமைகிறது என்று சொல்லும் வள்ளுவர் எங்கே பொதுவுடமையைப் பற்றிக் கூறுகிறார் என்று சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.


போரைப் புறம் தள்ளியவர் வள்ளுவர் என்றும் சொல்கிறார். எங்கே சொல்கிறார் என்று தேடிப்பார்க்க வேண்டும். அப்புறம் அய்யன் திருவள்ளுவர் என்கிறார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் ஆர்யன் திருவள்ளுவர். எப்படி என்று இந்தக் கட்டுரையில் விளக்கியுள்ளேன். He is not IYAN Thiruvalluvan, he is ARYAN Thiruvalluvan!


பிறகு தொல்காப்பியமானது ஆறறிவு உயிரினம் வரை உணர்ந்திடும் உடலமைப்பைப் பற்றிக்கூறுவதாகவும் சொல்கிறார். கேட்டுக் கொள்வோம்.


கடைசியில் கம்ப நாட்டாழ்வானையும், கவியரசி அவ்வையையும் புகழ்ந்துள்ளார். இதில் காலதேவன் விளையாட்டு ஏதோ இருக்கிறது. இருக்கும் பல புலவர்களில் கம்பனைக் குறிப்பாக எழுதி உள்ளாரே. சந்தோஷம். சமயத் தமிழ் பற்றி ஆய்வு இல்லைஎன்பதற்குப் பிராயச் சித்தம் போல இருக்கிறது.

கடைசி வரிகள் பிரமாதம். எந்த இலக்கணத்தில் எழுதியுள்ளாரோ தெரியவில்லை. புதிதாகக் கலைஞர் கவிதை இலக்கணம் என்று யாராவது கட்டுரை வாசிப்பார்கள். தெரிந்து கொள்ளலாம்.


ஆகக் கூடி சிந்திக்கும்படி கவிதை தந்துள்ளார். என் குழந்தைகள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டார்கள். இந்தப்பாடலை பரிட்சைக்குப் படிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இல்லை. அதனால் ' நீ ஏதோ சொல்லிக் கொண்டிரு, எங்களுக்கு இந்த விளக்கங்கள் தேவையில்லை, ringtone -இல் கேட்பதே போதும்' என்று சொல்லிவிட்டார்கள். இருக்கவே இருக்கிறது ப்ளாக் என்று இதை எழுதி விட்டேன். இனி படிப்பவர்கள் பாடு!