Friday, March 11, 2016

தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட விஜயகாந்த்!



விஜயகாந்த்  தன் முடிவைச் சொல்லி விட்டார், தனித்துப் போட்டியிடுவதாக.



நேற்று வரை இவருக்கே இந்த முடிவு தெரிந்திருக்குமா  என்பதே  சந்தேகம் தான், அப்படிப்பட்ட ஒரு முடிவை, யாருமே எதிர்பார்க்காத இன்றைக்கு, அதிலும், எந்தப் பாலில் இந்தப் பழம் விழும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சொன்னது ஆச்சரியத்தை மட்டுமல்ல, சில கேள்விகளையும் எழுப்புகிறது.

தனித்துதான் போட்டியிடுவது என்றால், அதற்கு இத்தனை பில்ட்-அப் தேவையா?
ஒரு 'திருப்பு முனை' மாநாடும் தேவையா?
எல்லோரும்  எங்கள் முடிவுக்காக காத்திருக்கிறார்கள் என்ற வெத்துப் பெருமையும் தேவை தானா?
இந்த முடிவை எடுப்பதற்கு முன்னால் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு நடந்தது என்ற ஊகங்கள் நடப்பது பற்றி பொது மேடைகளில் பீற்றிக் கொண்டதில் ஒன்றும் குறைச்சல் இல்லையே.
அப்படி இருக்க, திடீரென இந்த முடிவு ஏன்?

அதிலும் ஒரு குளறுபடி.
தனித்துப் போட்டியிடுவேன் என்று விஜயகாந்த் சொன்னதை அடுத்துப் பேசிய பிரேமலதா, கூட்டணிக்கு மற்ற கட்சிகளை அழைக்கிறார்.  அதான், தனித்துப் போட்டி என்று காப்டன் சொல்லி விட்டாரல்லவா, அதற்குப் பிறகு, கடை விரித்து, கூட்டணிக்கு யாரெல்லாம் வரீங்களோ வாங்க என்று கூவாத குறையாக அழைப்பதுதான் தனித்து நிற்பது என்பதன் லட்சணமா?

அப்படி ஆள் சேர வேண்டும் என்றால், நேற்று முன் தினம் வரை பாஜக தயாராக இருந்ததே, அவங்களோடு சேர்ந்து, 'தனித்துப்' போட்டியிட்டிருக்கலாமே.
தங்களுக்கும் பிரயோஜனம் இல்லாமல், பிறருக்கும்  பிரயோஜனம் இல்லாமல் என்ன முடிவு இது என்று எழுத வரும்போது, இப்படித் தோன்றுகிறது. பிரயோஜனம் இல்லாமல் இல்லை. இவரது இந்த முடிவால், நாட்டுக்கு நல்லது ஏற்பட்டிருக்கிறது. ஒழிய வேண்டிய கட்சிகளெல்லாம், இந்தத் தேர்தலில் காணாமல் போய் விடப்போகின்றன, விஜயகாந்தின் கட்சியையும் சேர்த்து. இது தமிழ் நாட்டுக்கும், ஏன் இந்தியாவுக்குமே நல்ல விஷயம் தான். காங்கிரசும், கலைஞரும் துளிர் விட்டால், எதிர் கால மத்திய அரசு அளவிலும்,    நாடளாவிய அளவிலும் அது நல்லதல்ல. அந்த வரையில், விஜயகாந்த்துக்கு கோடி நன்றிகள்.

ஆனால் நெருடலாக இருப்பது, என்ன நடந்தது என்ற கேள்வி. தேர்தலுக்குப் பிறகு தேமுதிக காணாமல் போய் விடுவதற்கு முன்னாடியே, இப்பொழுதே நிறைய prospective தேமுதிக வேட்பாளர்கள் காணாமல் போய் விடுவார்களே, இது  விஜயகாந்த்துக்குத் தெரியாததா? விஜயகாந்த் தான் சிங்கம் என்றும், மற்ற கட்சிகளெல்லாம் அந்தச் சிங்கத்தைப் பின்தொடர்வது போல  படமெல்லாம் போட்டுக் கொண்டார்களே, இன்னிக்கு என்ன ஆச்சு



திமுக என்னும் வேடன், இந்தச் சிங்கத்தின் கட்சி காரர்களைத் தன் வலையில் வீழச் செய்ய எவ்வளவு நேரம் ஆகப்போகிறது? அன்று மேல் தட்டு கட்சிக்காரர்கள், விஜயகாந்தின் எதிர்ப்பு அரசியல் காரணமாக  அதிமுக பக்கம் சாய்ந்தார்கள். மீதம் இருப்பவர்கள், இப்பொழுது தங்கள் எதிர்காலத்துக்கு, காரண்டியா திமுக பக்கம் சாய்வதற்கு சாத்தியம் இருக்கிறதே. அந்தக் கட்சிக்காரர்களை சொஸ்து பண்ணத்தானே, எந்த திமுகவை எதிர்த்து கட்சியை ஆரம்பித்தாரோ, அதே திமுகவுடன் சமரசம் செய்ய விஜயகாந்த் துணிந்தார்? நிலைமை அப்படி இருக்க, இந்த முடிவு ஏன்?

இந்த முடிவுக்குப் பின் இருந்த கதை வசனத்தை, சென்ற ஓரிரு நாட்களில் நிகழ்ந்த சீன்கள் மூலம் ஊகிக்கலாம். ஓரிரு நாட்கள் முன் வரை, சீன் மாறவேயில்லை. பாஜக கூப்பிட்டுக் கொண்டே இருந்தது, விஜயகாந்த் முரண்டு பிடித்துக்  கொண்டே இருந்தார். பாஜக ஒபனாகக் கூப்பிட்டது, திமுக திரை மறைவிலும், கருணாநிதி வசனத்திலும் கூப்பிட்டது. திமுக பக்கம் தான் விஜயகாந்த் சாய்வார் என்று பலமாக செய்திகள் அடிபட்ட போது, ஒரு விஷயம் நடந்தது. பாஜக தரப்பில் மத்தியிலிருந்து  ஜாவேத்கர் களமிறங்கினார். அதி முக்கியமாக சரத் குமாரைக் கூட்டணியில் சேர்த்து (அல்லது இன்னும் சேர வில்லையோ), சம்பிரதாயமாக மற்ற 'கூட்டணிக்' கட்சியினரையும் பார்த்து விட்டு, நம் காப்டனையும் வீடு தேடிச் சென்று பார்த்தார். அங்குதான் சீன் மாறுகிறது.

விஜயகாந்த் ஏடாகூடமாகக் கேள்விகள் கேட்டதாகக் கேள்வி. அதில் சில, பாஜக தலைமையைக் குறித்தும் கூட. அதனால், ஜாவேத்கர், தலைமையைக் கலந்தாலோசித்து வருவதாகக் கூறிச் செல்கிறார். ஆனால், அவர் தலை மறைந்த அடுத்த நிமிடமே, தேமுதிகவிடமிருந்து அறிக்கை வருகிறது, மரியாதை நிமித்தமே ஜாவேத்கர் சந்தித்தார் என்று. இது பாஜகவினரை ரொம்பவுமே கடுப்பேத்தியது. 

மறு நாளே ஜாவேத்கர் வருகிறார், தலைமையிடமிருந்து, ஏதோ ஒரு  செய்தியைத் தாங்கி.
ஆனால், நம் காப்டன் எஸ்கேப் ஆகி விடுகிறார்- தொகுதி விசிட் என்று.
வந்த ஜாவேத்கர் ஒசைப்படால், அதாவது, தமிழ் நாடு பாஜக காரர்களுக்கே வந்த சுவடு தெரியாமல், திரும்பி விடுகிறார்.
அதன் பிறகு என்ன ஆயிற்று?

எப்படியும், அவர் தலைமையுடன், அதாவது, கட்சித் தலைவர் அமித் ஷாவுடன் பேசி இருப்பார். அமித் ஷாவும் ஏதோ ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதன் விளைவுதான் அதற்கடுத்த நியூஸ், கூட்டணி வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தேமுதிக கொள்கைப் பரப்பு செயளாலர் பெயரில் வந்த ஒரு அறிக்கை.

அதை அடுத்து, எந்த  ஜாவேட்கரை முகத்தில் அறைந்தாற் போல் திருப்பி அனுப்பினார்களோ, அதே ஜாவேட்கரை டெல்லிக்குப் போய் சந்திப்பதற்காக சுதீஷ் முதலான தேமுதிகவினர் சென்றனர். எதற்கு? இவர்கள் சொன்ன அதே 'மரியாதை' நிமித்தமா? இங்கு வந்த போது பார்க்க முடியவில்லை, அவர் போனப்புறம், அங்கு போய் பார்ப்பது எந்த 'மரியாதை நிமித்தத்தில்' சேர்த்தி?

ஏதோ கிரைசிஸ் (crisis) வந்திருக்கு. அதான் டெல்லிக்கு ஓடி இருக்கிறார்கள்.  இவர்கள்  டெல்லிக்குச்  சென்ற  செய்தி எல்லா தொலைக் காட்சிகளிலும், அன்றைக்கு ஒரு நாள் வரை வந்து கொண்டே இருந்தது. அப்பொழுதெல்லாம், தேமுதிகவினர் அதை மறுக்க வில்லை.
ஆனால், டெல்லி சென்றவர்களை, ஜாவேத்கர் சந்திக்கவில்லை, அவர் சந்திக்க மறுத்து விட்டார் என்றும் ஒரு செய்தி. அதற்குப் பிறகு போன மச்சான் திரும்பி வந்த கதையா வந்தவங்க, கந்தல் கூளமாகி போயிட்டானுங்க போலிருக்கு. ஏனெனில், டெல்லி சென்ற செய்தியையே மறுத்தனர். டெல்லி சென்ற  செய்தி  3 நாட்களுக்கு முந்தின ஹிந்து பத்திரிகையிலும் வந்தது. ஆனால் இப்பொழுது அதை எடுத்து விட்டார்கள்.

செய்தியை மறுத்த கையோடு, அடுத்த 2 நாட்களில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, இந்த அறிவிப்பைச் செய்திருக்கிறார் விஜயகாந்த். பின்னாடியே தொடர்ந்த பாஜகவை, போ போ என்று விரட்டி விட்ட பிறகு, விரட்டப்பட்ட அந்தப் பெரும் சிங்கம், எதிர்த்து விட்டதா? அது கொடுத்த ஒரு சமிஞ்சையில் விஜயகாந்துக்கு மரண அடி விழுந்து விட்டதா?

அந்த  சமிஞ்சை காட்டும் பாதகத்தில்  விஜயகாந்த் வெல வெலத்துப் போய் விட்டாராஅதனால்தான் குழந்தைகள்  சொல்வது போல, நான் இல்ல, நான் இல்ல, எனக்கு ஒண்ணும் தெரியாது, நான் பாட்டுக்கு நான் உண்டு என் வேலை உண்டுன்னு கட்சி நடத்தறேன். யாராச்சும் ஏதாவது பண்ணிக்குங்க, நான் பாட்டுக்கு ஏதோ என் வரைக்கும் கதை, அதாவது கட்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் - இப்படித்தானே இப்ப கதை வசனம் இருக்கு?

இந்த சீனில் இருக்கும் இண்டரஸ்டிங் ஷாட்தமிழிசையின் முதல் ரியாக்ஷன்.
 தேமுதிக, திமுக பக்கம் போகலையே, சந்தோஷம் என்றார், தந்தி டிவி தொலைபேசி தொடர்பில்.


ஸோ, திமுக தலையெடுக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவுக்கும், (அதன்  மத்திய தலைமைக்கு) முக்கியக் குறிக்கோள். பெரும்பாலான தமிழக மக்களின் முதல் குறிக்கோளும் அதுவே. அதற்கு ஆப்பு வைப்பது போல விஜயகாந்த் செயல் பட்டுக்கொண்டிருந்தார்.

அவரைத் தன் பக்கம் இழுக்க பாஜக எவ்வளவோ முயற்சி செய்தது. ஆனால் அவர் டிமிக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பாஜகவுடன் சேர்ந்தால் தனக்கு ஒரு சீட்டும் கிடைக்காது. திமுகவுடன் சேர்ந்தால், ஏதோ அரசியல் வாழ்வு கிடைக்கும் என்ற எண்ணம் தான் காரணம்.

அவரை இழுக்க முடியாமல் போனதால், அப்பொழுதே பாஜக தலைமை அளவில் டிஸ்கஷன் நடந்திருக்கிறது. அதன் விளைவே சுப்பிரமணியன் சுவாமியின் 'கலைஞர் இல்லாத திமுக'வும், ஸ்டாலினுடன் 'விளையாட' விருப்பமும். ஆனால் பெத்த பிள்ளையையே நம்ப முடியாத கலைஞர், கூடா நட்பை கூட்டிக் கொண்டு வந்து விட்டார். அது அப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்த பாஜக, விஜயகாந்துக்கு 'அறிவுறுத்தின' முதல் ப்ளான் அது. எங்களை விட்டு விட்டு, கலைஞருடன் சேர்ந்தால், கூடவே காங்கிரசின் பாவங்களையும், சுமந்து கொண்டுதான் நீங்கள், தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே அது.

அதைப் பிரேமலதா புரிந்து கொண்டு, வெளிப்படையாகச் சொல்லவும் சொன்னார். திருப்பு முனை மாநாட்டுப் பந்தலை பார்வையிட அவர் வந்த போது பேசினதுதான், வெளிப்படையாக, திமுகவை விமரிசித்தது. அது சுவாமி எபக்ட்.

திருப்பு முனை மாநாட்டில் உண்மையாகவே ஒரு திருப்பு முனையை, இதன் அடிப்படையில் தருவார் என்று எதிர்பார்த்தது வீணாயிற்று. இன்னும் மும்முரமாக, திமுக தரப்புடன், பேச்சு வார்த்தை நடந்தது. இப்பொழுது  பாஜக தலைமை சீரியஸாகி விட்டது. தேமுதிகவுடன் கூட்டணி என்பதை  விடதிமுக - காங்கிரசுக்கு மறு வாழ்வு கிடைக்கக் கூடாது என்ற நல்ல எண்ணம் தான் காரணம். சுவாமி எபக்ட் புஸ்வாணம் ஆனதால், அமித் ஷாவே களம் இறங்கி ஜாவேட்கரை அனுப்பி இருக்கிறார். அவர் மீண்டும் இரண்டாவது தடவை வந்த போது, விஜயகாந்த் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். ஆனால், முகத்தில் அடித்தாற் போல் டிமிக்கி கொடுத்து விட்டார். மூன்று முறை பொறுத்தாங்க. அதற்கு மேல ஆப்பு வைச்சிட்டாங்க.

விஜயகாந்த் அலறிக் கொண்டு சுதீஷை டெல்லிக்கு அனுப்பினார்.
அவங்க தண்ணி காமிச்சிட்டாங்க. அதன் விளவு விஜயகாந்த் அடங்கி ஒடுங்கி, பல்லு பிடுங்கின சிங்கமாகி தனி ஒருவனாகி விட்டார். பொண்டாட்டி வேறு அவருக்கு சைனஸ், அதான் அவர் பேசுவது புரிவதில்லை என்றார். நெஜமாகவே தான் என்ன பேசுகிறோம், தனது தனி ஒருவன் பேச்சின் விளைவு என்னவாக இருக்கும், அடுத்த எலெக்ஷனில் தன் கட்சி இருக்குமா என்பதையெல்லாம்  புரிந்து கொண்டுதான் அவர் தன் முடிவைச் சொன்னாரா? புரிந்து கொண்டுதான் சொன்னார் என்றால், இங்கே நான் எழுதிய கதை- வசனம் தான் நிகழ்ந்திருக்க வேண்டும்.

விஜயகாந்த் ஒன்றை கவனிக்கத் தவறி விட்டார். அவரைத் துரத்தோ துரத்து என்று  துரத்தி, ஓவரா பில்ட் அப் கொடுத்தது பாஜகதான். அது தனக்காகத்தான் என்று விஜயகாந்த் இறுமாந்து விட்டார். பாஜகவின் இலக்கு, காங்கிரசுடன் கூடிய, திமுக பலம் பெறக் கூடாது என்பதே. அந்த பலத்தைக் கூட்டுவதற்காக  ஓடப் பார்த்தார் விஜயகாந்த். அதைத் தடுக்க பாஜக மேலும் முயன்றது. அதனால், தானே மிகப் பெரிய பயில்வான் என்று விஜயகாந்த் பிரமையில் போய் விட்டார். பாஜகவின் கேம் ப்ளானில் தன்னை safe -ஆ வைத்துக் கொள்ள வேண்டும் என்று புரிந்து கொள்ளாமல், ரொம்ப வாலை ஆட்டி விட்டார். தன்னாலத் தான் அதிமுகவுக்கு ஆப்பு, பாஜாகவுக்கு ஆப்பு என்றெல்லம் நினைத்து, தனக்கே ஆப்பு வைத்துக் கொண்டு விட்டார் விஜயகாந்த்.


இந்த அழகில், அவரது உருவாக்கப்பட்ட 'பயில்வான்' தோற்றத்தையே ஊடகங்கள் பிடித்துக் கொண்டு, விஜயகாந்த் தலைமயில் பாஜக சேருமா என்று மெனக்கெட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக பாஜகவுடன் சேர அவருக்கு விருப்பமில்லையோ, அந்தக் காரணமே இப்பொழுது பழம் நழுவி பாலில் விழாமல், எதிர் பார்த்தவர்களின் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போய் விட்டது. இனிமேல், விஜயகாந்துடன், பாஜக சேர்ந்தால் என்ன அல்லது பாஜகவுடன் விஜய்காந்த் சேராவிட்டால்தான் என்ன? விஜயகாந்தின் அவசியம் முடிந்து போய் விட்டது. அமித் ஷாவின் தமிழ் நாடு ப்ளான் வெற்றி. தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பர்மனன்ட் தலைவலி இந்தத் தேர்தலுடன் முடிந்து விடும். இனி அம்மாவைத்தான் கவனிக்கணும்.