Wednesday, August 19, 2009

Kumbabhishekam in New York -Article in Sakthi Vikatan



 
சிறப்பு கட்டுரை
அமெரிக்காவில அனைமுகன்!

நியூயார்க்கிலிருந்து பிரகாஷ் எம்.ஸ்வாமி

கோலாகலமாக கும்பாபிஷேகம் கண்ட
நியூயார்க் விநாயகர் கோயில்!

 

மெரிக்காவில் சிறிதும் பெரிதுமாக சுமார் ஆயிரம் கோயில்கள் இருந்தாலும், முதலில் கட்டப்பட்ட இந்துக் கோயில் என்ற பெருமையைப் பெற்றது... நியூயார்க் மாநகரில் அமைந்துள்ள மகாவல்லப கணபதி திருக்கோயில்! காஞ்சி மகாபெரியவரின் ஆசியுடனும் ஆலோசனையுடனும் 1977-ல் கட்டப்பட்டது இந்தக் கோயில். கடந்த ஜூலை மாதத்தில் இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.


அமெரிக்காவிலேயே முதன்முறையாக கஜபூஜை, கோபூஜை, நாகஸ்வர இசை என்று இருந்ததைக் கண்டு, அமெரிக்கர்களே அசந்து போனார்கள்.


இந்தத் திருக்கோயிலின் மூலவர் மகா வல்லப கணபதி. சிவபெருமான், ஸ்ரீபார்வதி, வள்ளி- தேவசேனா சமேத சுப்பிரமணிய ஸ்வாமி, ஸ்ரீமகாலட்சுமித் தாயார், ஸ்ரீவேங்கடாசலபதி ஆகியோர் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். நவக்கிரகங்கள், ஸ்ரீதுர்கை, ஸ்ரீராம- லக்ஷ்மண- சீதா, ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீஐயப்பன், ஸ்ரீகாமாக்ஷி மற்றும் ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதிகளும் உண்டு. கடந்த மாதத்தில், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆகிய பஞ்சலோக விக்ரகங்களுக்கு சிறிய சந்நிதிகள் அமைத்து கோயிலை விரிவுபடுத்தியுள்ளனர்.


1970-ஆம் ஆண்டில் ஐ.நா. சபையின் மிக உயரிய பணியில் இருந்த சி.வி. நரசிம்மன் மற்றும் ஐ.நா. சபையில் பணியாற்றிய முனைவர் அழகப்பா அழகப்பன் முயற்சியால் உருவான கோயில் இது! சென்னை பெசன்ட் நகர் அறுபடை வீடு உள்ளிட்ட பல கோயில்களைக் கட்டியவர், நியூயார்க்கில் வாழ்ந்து வரும் அழகப்பா அழகப்பன். நியூயார்க்கில் பிளஷ்ஷிங் பகுதியில் விலைக்கு வந்த, பழைய சர்ச் கட்டடம் ஒன்றை விலைக்கு வாங்கி அங்கே கட்டப்பட்டதுதான் இந்த மகா வல்லப கணபதி தேவஸ்தானம்.


ஐந்து நாட்களும்... யாகசாலை பூஜை, கணபதி மகாமந்திர ஜபம், 16 விநாயகர் (ஷோடஸ கணபதி) கல் சிற்பங்களைக் கொண்ட நுழைவாயில் மண்டபத் திறப்பு, மற்றும் பத்தாயிரம் பக்தர்களுக்கு ஐந்து நாட்களும் இரண்டு வேளையும் அன்னதானம் என்று கோயில் களைகட்டியது.


பென்ஸில்வேனியா மாநிலத்தில் காஞ்சி ஸ்வாமிகளின் அருளாசியின்படி கோசாலா நடத்தும் சங்கர் சாஸ்திரி- பசு ஒன்றை அழைத்து வந்து கோயிலில் கோபூஜை செய்ய உதவினார். கனெக்டிகட் மாநிலத்தில் உள்ள 'கம்மர்போர்ட்' எனும் யானைப் பண்ணை, மின்னி எனும் 37 வயது பெண் யானையை, ஸ்பெஷல் வேனில் அனுப்பி வைத்தது.


தெருவில் நின்றிருந்த குழந்தைகளும் பெரியவர்களும் யானையைக் கண்டதும் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டனர். வாழைப்பழம், கரும்பு, வெல்லம் என்று, அன்று அமெரிக்க யானைக்கு இந்திய விருந்துதான். அமெரிக்காவில் யானைகளை தெருவில் அழைத்து வரவும், நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதிலும் ஏகப்பட்ட அரசு கெடுபிடி; போதாக்குறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வேறு! சுஷில்குமார் மற்றும் ஷாஜி என்ற ஐயப்ப பக்தர்கள், இந்த யானைக்காக ஸ்பெஷலாக பத்தனம்திட்டாவில் (சபரிமலை) ஐந்து லட்ச ரூபாய் செலவில் தங்கத்தினால் ஆன முகப்பு செய்து கொண்டு வந்து யானைக்குப் போட்டு அழகு பார்த்தார்கள். நியூயார்க் டைம்ஸ், டெய்லிநியூஸ் ஆகிய பிரபல அமெரிக்க நாளிதழ்களில் கோயிலுக்கு வந்த அமெரிக்க யானைதான் பிரதான நியூஸ்!


சுமார் 250 கிராம் தங்கத்தில் ஸ்வர்ணபந்தனம் செய்து மகா வல்லப கணபதிக்கு சார்த்தினார்கள். அமெரிக்காவில் உள்ள கோயில் நிர்வாகங் களுக்கெல்லாம் ஒற்றுமையை போதிக்கும் வகையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஸ்ரீமுருகன் கோயிலின் தலைவர் குருசாமி, கும்பாபிஷேகத்துக்கு பட்டுவேஷ்டி, புடவை மற்றும் மாலை- மரியாதைகளை கோயில் டிரஸ்டிகளிடம் நேரில் சமர்ப்பித்தார். இப்படி, தம்பியிடமிருந்து அண்ணனுக்கு கும்பாபிஷேக மரியாதை வந்து சேர்ந்தது!

அன்று காலை, சுமார் 10 மணிக்கு சூரியன் பிரகாசிக்க... அதே நேரம், எதிர்புறம் சந்திரன் 'இதோ... நானும் இருக்கிறேன்' என்று காட்சி தந்த போது, கலசங்கள் மீது தீர்த்தவாரி நடைபெற்றதைக் கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். கோயிலின் தலைவி டாக்டர் உமா கும்பாபிஷேகப் பணிகளை சிறப்புறச் செய்திருந்தார். சுமார் 15 ஆண்டுகளாக, தனது கொழிக்கும் மருத்துவத் தொழிலை விட்டு, கணபதி பணியே முக்கியப் பணி என்று சதாசர்வகாலமும் கோயிலில் பணிசெய்யும் உமா, அமெரிக்க இந்துமதத் தலைவர்களில் மிக முக்கியமானவர்! வெள்ளை மாளிகையில் மூன்று அதிபர்களிடம் சென்று இந்து மதம் குறித்து உரையாற்றியவர்.


பிரபல ஸ்தபதி முத்தையாவின் முழு ஒத்துழைப்புடன், கும்பாபிஷேகம் சிறப்புற நடந்தது. 20 உதவியாளர்களை அனுப்பி சிற்ப வேலைகளைச் செய்து முடித்தார், அவர். அமெரிக்கா வருவதற்கு சிவாச்சார்யர்களுக்கு விசா மறுக்கப்பட்டதால், பாஸ்டன் மாநகர் மகாலக்ஷ்மி கோயில் தலைமை சிவாச்சார்யரான பைரவ சுந்தரம் கும்பாபிஷேகம் செய்து வைத்தார். இவர் காளிகாம்பாள் கோயில் சாம்பமூர்த்தி சிவாச்சார்யரின் மருமகன். அவருக்கு உதவியாக... கோயில் அர்ச்சகர், சுவாமிமலையைச் சேர்ந்த சிவகுமார் சிவாச்சார்யர், ஹூஸ்டன் மீனாக்ஷி கோயிலைச் சேர்ந்த மதுரை மாணிக்கபட்டர், ஸ்ரீமுருகன் கோயில் அர்ச்சகர் கணேஷ் பட்டர் ஆகியோர் கும்பாபிஷேகம் நடக்க பெரிதும் உதவினர். தலைமை ஆச்சார்யர்களாக நியூயார்க்கில் வசிக்கும் 115 வயது பூவா ஸ்வாமி மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த இளம் துறவி ஜயேந்திரபுரி ஸ்வாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


விநாயக சதுர்த்தியன்று கணபதி வெள்ளித்தேரில் வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. கட்டுமானப் பணிகள் முழுவதும் பூர்த்தியடையாத நிலையில் விநாயக சதுர்த்தி வேளையில், கோயில் மூடியிருக்கக் கூடாது என்று எண்ணி கும்பாபிஷேகம் நடத்தினர்.


''அமெரிக்காவில் கோயில்கள் கட்டத் துவங்கும்போது, இது வெறும் மியூசியமாகத்தான் இருக்கும் என்று கேலி செய்தனர். இப்போதோ கூட்டம் அலைமோதுகிறது. உள்ளே நிற்க இடமில்லை; அவ்வளவு கூட்டம்! கடுங்குளிரில் பெண்களும் குழந்தைகளுமாக வெளியே நிற்கிறார்கள். எனவேதான் மகாமண்டபத்தை இடித்து, 250 பேருக்குப் பதிலாக 800 பேர் அமரும்படி கட்டியிருக்கிறோம். இனி அமெரிக்க கோயில்களை இங்கே பிறந்து வளர்ந்த நம் இளைஞர்கள்தான் நிர்வகிக்கப் போகிறார்கள். இவர்கள் கட்டுப்பாடாகவும் இருக்கின்றனர்; பக்தியும் அதிகம். கார்ப்பரேட் மற்றும் மைக்ரோசாப்ட் கம்பெனிகளைப்போல் ஆலயங்களையும் திறம்பட நிர்வகிப்பார்கள். இவர்களுக்கு கோயில் நிர்வாகம் பற்றி வகுப்புகளைத் துவக்கியுள்ளோம்.'' என்றார் டாக்டர் உமா.


மகா வல்லப கணபதி கோயிலில் இரண்டு கல்யாண மண்டபங்கள், ஆடிட்டோரியம், நூலகம், கேன்டீன் ஆகியவற்றைக் கட்டிய பெருமை உமாவைச் சேரும். ஐந்து மில்லியன் டாலர்கள் செலவில் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகத்தை முடித்துள்ளார்.


கோயில்கள்... அமெரிக்காவில் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல... தமிழ், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளும் இங்கே கற்றுக் கொடுக்கப்படுகின்றன. யோகா, பிராணாயாமம், வாய்ப்பாட்டு, பரதநாட்டிய வகுப்புகளும் உண்டு. மேலும், ஹிரண்ய சிராத்தம், சுபகாரியங்கள் ஆகியவை செய்வதற்கான இடம்! இட்லி- தோசை, சாம்பார் பொடி, ரசப்பொடி விற்கும் மல்டி-பர்ப்பஸ் இடமாகவும் திகழ்கிறது இங்குள்ள ஆலயங்கள்.


தமிழகத்திலிருந்து அர்ச்சகர்கள் வந்தாலும் பூஜை மட்டுமே செய்ய முடியும். ஆகவே மாலையில் அமெரிக்காவில் தெரியும் தமிழ் டி.வி. சீரியல்களை மறந்து குடும்பத் தலைவிகள் பலர் பூமாலை கட்டுவது, பூஜைப் பொருட்களை எடுத்து வைப்பது என பல வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்கின்றனர்.


'இந்துக்களுக்கு மட்டும் அனுமதி' - போன்ற அறிவிப்புப் பலகைகள் இங்கே இல்லை. அமெரிக்கர்கள், சீனர்கள் மற்றும் ஸ்பானிஷ்காரர்களும் வந்து வழிபடுகின்றனர்; நாமசங்கீர்த்தனத்தில் பங்கு பெறுகின்றனர். இந்த உடை தான் அணிந்து வரவேண்டும் என்று எதுவும் கிடையாது. ஆண்கள் பர்முடாவிலும் பெண்கள் ப்ராக் அணிந்தும் வருவார்கள். முழு சுதந்திரம் உண்டு. பல கோயில்களில் பக்தர்களே பூஜை செய்யவும் அனுமதிக்கின்றனர்.


கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது இங்கேயும் பொருந்தும். அமெரிக்க நகரங்கள் பலவற்றிலும் கோயில்கள் கட்டப்பட்டு, அனைவராலும் வழிபடப்பட்டு வருகின்றன என்பது சந்தோஷ சங்கதி.


அமெரிக்காவில் பரவும் சனாதன தர்மம்

''அமெரிக்காவில் 34 கோயில்களில் கும்பாபிஷேகம் செய்துள்ளேன். கணபதி விக்கிரகத்தை மட்டும் இடமாற்றம் செய்யவில்லை. கருவறை, விமானம் கோபுரம் ஆகியவற்றை புதிதாகக் கட்டி இருக்கிறோம். 55 அடி உயர ராஜகோபுரம், பிரமாண்டமாகக் காட்சி அளிக்கிறது. மேலும் துணை கோபுரங்களும் எழுப்பியுள்ளோம்.

ஸ்ரீகணபதி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். துவார சோபை கட்டுகிறோம். துவஜஸ்தம்பம், மூஷிகம், பலிபீடம் புதிதாக அமைத்துள்ளோம். அக்னி மூலையில் இருந்த வாசலை மூடியுள்ளோம். பூஸ்பரிசம், அர்த்த மண்டபம் ஏற்படுத்தியுள்ளோம். சிற்ப வேலைகளை சாஸ்திரப்படி செய்து, தமிழகத்தில் இருந்து கப்பலில் கொண்டு வந்து இறக்கினோம். ஒவ்வொரு சந்நிதியையும் தனித் தனியே பிராகார வலம் வரலாம். கருங்கல் திருப்பணி; இங்கே வந்து சிற்ப வேலைப்பாடுகளை செய்வதற்கு சுமார் 50 சிற்பிகள் தேவை; விசா பிரச்னை வேறு! எனவே மிகுந்த சிரமத்துக்கிடையேதான் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இது கணேச பஞ்சாயதன அமைப்பில் அமைந்த ஆலயம்! கோயில் பூஜா விதிகளும் அப்படியே! இந்தியாவில் கும்பாபிஷேகம் செய்வது போலவே இங்கும் செய்தோம். அமெரிக்க கோயில்களிலும் சிற்ப சாஸ்திரத்தின் முறைப்படியே கோயில் அமைத்துள்ளோம். அமெரிக்காவில், நம் சனாதன தர்மம் அதிகரித்து வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது...'' - என்றார் பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி.

 
 

No comments: