Thursday, December 28, 2017

Vedic concept of Creation from the 'navel' and the sound of 'damaru' (Tamil)- Part 3

முந்தைய கட்டுரைள் : 
Part 1:அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
Part 2: வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்

பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்


எண்ணிலடங்கா பிரபஞ்சங்கள் சுழல் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. அவை கால் பங்கு தோன்றும் நிலையிலும், (manifest form) மீதி முக்கால் பங்கு தோற்றம் இல்லா நிலையிலும் இருக்கின்றன என்றும் பார்த்தோம். இவை அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றன என்பதை சக்கரத்தாழ்வாராகவும், இவை அனைத்திலும் யோகேஸ்வரனாக அந்தப் பரம் பொருள் இருக்கின்றான் என்பதை யோக நரசிம்ஹர் நிலை கொண்டிருப்பதிலும் காணலாம்.முடிவில்லா இப் பிரபஞ்சங்கள் எந்நேரமும் இயக்கத்தில் இருக்கின்றன என்பதை நடராஜர் உருவில் காண்கிறோம். ரிக் வேதத்தில் சொல்லப்படும் பிரபஞ்சப் படைப்பு பற்றிய பாடலானது இருளிலும், தோற்றமில்லா நிலையிலும் தொடர்ந்து இந்த இயக்கம் நடந்து கொண்டிருப்பதைக் கூறுகிறது. தோன்றும் பிரபஞ்சத்திலும் இயக்கம் நடக்கிறது. தோற்றம் இல்லாப் பிரபஞ்சத்திலும் (unmanifest) நம் அறிவுக்கு எட்டாத நிலையில் இயக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இயக்கம் அணுவிலும் காணப்படுகிறது. பிரம்மாண்டத்திலும் காணப்படுகிறது. தோன்றும் பிரபஞ்சத்திலும், ஜடப் பொருளிலும், அணுவுக்குள் அணுவாகவும் ஓயாமல் இயங்கிக்கொண்டே இருக்கிறது– என்னும் இவை அனைத்தையும் காட்டுவது நடராஜத் தத்துவமே.

இடைவிடாத இயக்க நிலையை உணர்ந்துள்ள அறிவியலார், அந்த இயக்கத்தை நடராஜர் உருவில் என்றோ நாம் அறிந்துள்ளோம் என்பதை ஆமோதித்து, ஜெனீவாவில் உள்ள நுண்ணணு ஆராய்ச்சி மையமான CERN கழகக் கட்டடத்தின் முன்புறம் இரண்டு மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலையை நிறுவியுள்ளனர். உருவ வழிபாட்டினை இகழ்ச்சியாகப் பார்க்கும் இன்றைய உலகில் அறிஞர்களும், அறிவியலாரும் இவற்றின் பின் அமைத்துள்ள அரும் பெரும் கருத்துக்களை உணர ஆரம்பித்துள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சி.

ஏனோ தானோவென்று ஏற்பட்டதல்ல இந்த இந்து மதம். இந்த மதத்தின் ஒவ்வொரு கருத்துக்கும் பின் சீரிய பலப் பல உண்மைகள் பொதிந்துள்ளன. அறிவியலார் அறிந்துள்ளதோ, முடிவில்லாத இயக்கம் ஒன்றை மட்டுமே. ஆனால் அந்த இயக்கத்தில் நடராஜர் அறிவிக்கும் படைப்புக் கோட்பாடுகளை அவர்கள் அறிந்திலர். அவை என்னவென்று பாப்போம்.


உடுக்கை எழுப்பும் ஒலி

நடராஜரது உடுக்கை ஒலியில் படைப்பு ஆரம்பமாகிறது. உடுக்கை எழுப்பும் ஒலி ஓங்காரமாகும் . தோற்றமில்லா நிலையிலிருந்து ஓடிக்கொண்டே வரும் பிரபஞ்சம், ஓங்கார ஒலியால் மாறுபாடு அடைந்து, தோன்றும் பிரபஞ்சமாக, (manifest Universe) அதாவது படைக்கப்பட்டதென உருமாறுகிறது. இன்றைய அறிவியலில், படைப்பு என்பது பெரும் வெடிப்புச் சிதறலாகவோ (Big Bang) அல்லது கோர்க்கப்பட்ட அமைப்பிலோ (String theory) இருக்கலாம் என்பவையே அனுமானங்கள். ஆனால் நடராஜர் காட்டும் படைப்பு ரகசியம் வேறு. அது ஓங்காரப் பிரம்மத்திலிருந்து ஆக்கம் உண்டாகிறது என்று காட்டுவது.ஓங்காரப் பிரம்மத்தில் அகரம் முதல் அக்ஷரம். ஓங்கார ஒலியின் தொடர்ச்சியாக, பல்வேறு கூறுகளாக இருப்பவை பீஜாக்ஷரங்கள். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவித இயல்பையும், சக்தியையும் கொண்டவை. அவற்றைப் பகுத்து அந்தந்த சக்திகளை ஒவ்வொரு கடவுளாக, அவரவர் மன, குண, ஆன்மிக நிலைக்கு ஏற்ப வழிபட உதவுமாறு அமைத்துள்ளனர் வேத ரிஷிகள். மந்திர, யந்திர, தந்திர வழிகள் என இன்னின்ன சக்திகளை அடைய, இன்னின்ன வழிகள், இன்னின்ன பீஜாக்ஷரங்கள் என்று அமைத்துள்ளனர். இவை யாவுமே எங்கும் வியாபித்துள்ள பரம் பொருளின் உட்-கூறுகள். 

இதை இங்கே சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தமிழ்ப் பற்று என்ற பெயரில் சமஸ்க்ருதத்தை இகழ்வது என்ற கலாசாரம் தமிழ் நாட்டில் இருக்கிறது. சமஸ்க்ருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா? தமிழில் செய்யக் கூடாதா, தமிழில் செய்தால் இறைவனுக்குப் புரியாதா, அவன் தமிழில் கேட்க மாட்டானா, என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.

எந்த மொழியில் வேண்டுமானாலும் இறைவனை நினைக்கலாம், வணங்கலாம், துதிக்கலாம். அவரவர் விருப்பம். இன்னும் சொல்லப்போனால் மனத்தின் மூலமாகத்தான் உள்நோக்கி அவனை நினைக்கிறோம். ஆனால் கோயில் விஷயம் வேறு. கோயில்களில் மந்திர, யந்திர அல்லது தந்திர வழியில் ஆதார பீஜாக்ஷரங்களை நிலை நிறுத்தியிருப்பர். மேலே கூறப்பட்ட அடிப்படை விஷயங்களைப் பாருங்கள். தெய்வங்கள் தொடங்கி, கிரகங்கள் வரை பீஜாக்ஷரத்தால் குறிக்கப்பட்டுள்ளன. அவை அவ்வவற்றின் ஆதார சுருதி. அந்த ஆதாரத்தின் அலை வரிசையை அடையுமாறு அமைக்கப்பட்டவைகளே மந்திரங்கள், உச்சாடனங்கள் முதலியன. அப்படி அமைந்த அலைவரிசையில் அர்ச்சனை நடந்தால் ஆதாரத்தைப் போய் அடையும். அங்கே பார்க்க வேண்டியது என் மொழியா உன் மொழியா என்பது அல்ல. எந்த அலை வரிசை என்பதுதான் முக்கியம். அது அமைந்த மந்திரம் மற்றும் அர்ச்சனைதான் முக்கியம். அது இல்லாமல், தான் விரும்பும் மொழியில்தான் சொல்ல வேண்டும் என்றால், அதற்கு, கோயிலுக்குப் போய்தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே சொல்லிக் கொள்ளலாம். எனவே அந்தந்த கோயில்களில் வழி வழியாக இருந்து வரும் ஆதாரமான வழிமுறைகளைச் சிதைக்கக்கூடாது.

மீண்டும் உடுக்கை ஒலிக்கு வருவோம். ஒலி அலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகளால் படைத்தல் (Creation) ஆரம்பமாகிறது என்று உடுக்கை ஒலி உணர்த்துகிறது. இப்படி இருக்கலாம் என்று அறிவியலாரில் ஒரு சாரார் இப்பொழுது எண்ணத் தொடங்கியிருக்கின்றனர். படைக்கும் நேரத்தில் நடராஜர் அடித்த உடுக்கையின் ரீங்காரம், தோன்றும் பிரபஞ்சம் முழுவதையுமே ஆக்ரமிக்கும். ஓங்கார ரூபமாக அவனே எங்கும் வியாபித்துள்ளான் என்று பிரமாண நூல்கள் சொல்வதால் அண்டம் முழுவதும் அவ்வொலி– அந்த ஓங்கார ஒலி இருக்க வேண்டும். எந்தச் செயலைச் செய்யும் முன்னால், நம்மைச் சுற்றி என்றென்றும் இருக்கும் அந்த ஓங்கார ஒலியை உச்சரித்து, அதன் மூலம் அந்த ஓங்கார ரூபியை நம் செயலுக்கு அதிகாரியாகவும், சாட்சியாகவும் வைக்கிறோம்.

ஓங்காரமே எங்கும் வியாபித்துள்ளது என்பதற்கு சாட்சி என்ன என்றால், இப்படியும் சொல்லலாம்:
அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். அண்டத்தில் பிரம்மாண்டமாக, இடைவிடாத இயக்கத்துடன் நடராஜர் உருவில் பிரபஞ்சங்கள் அடுத்தடுத்து சுழன்று கொண்டிருப்பதைப் போல, அணுவிலும் வட்டப் பாதையில் இடைவிடாமல் இயக்கம் நடந்து கொண்டுருக்கின்றது.

ஓங்காரமும் அப்படியே. அண்டத்தில் எங்கும் ஓங்காரம் ஓடிக்கொண்டிருந்தால், பிண்டத்திலும் அது ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லவா? ஆம். ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இது உண்மையே என்று தெரிந்து கொள்ள நம் உடலில் ஓடும் இயக்கமான ரத்த ஓட்டத்தைக் காது கொடுத்துக் கேளுங்கள். ஸ்டெதெஸ்கோப்பை ரத்த நாளங்கள் உள்ள கை மீது வைத்துக் கவனியுங்கள். அற்புதமான ஓங்கார ஒலியே கேட்கிறது. வாழ்வாதாரமான ரத்தம் ஓங்கார ஒலியுடன் நம் உடலைச் சுற்றிச் சுற்றி வருகிறது– படைப்பின் ஆதாரமாகிய அணுத்துகள்கள் அண்டத்தைச் சுற்றிச் சுற்றி ஓங்கார ஒலியுடன் வருவதைப்போல.

இங்கே ஒரு கேள்வி எழலாம். ஒலி அலைகள் பயணிக்க ஒரு மீடியம் வேண்டுமே, ஒலி அலைகள் வெற்றிடத்தில் பயணிக்காதே என்று கேட்கலாம். அங்கும் நடராஜரது உடுக்கை ஒலி ஒரு க்ளூ கொடுக்கிறது.

எண்ணில்லாத இந்தப் பிரபஞ்சங்கள் முழுவதும் நடராஜரின் இயக்கம் ஊடுருவி இருக்கிறது என்பதை அவரது நடனம் காட்டுகிறது. அப்படி இருக்க அங்கே வெற்றிடம் எப்படி இருக்க முடியும்? வெற்றிடம் என்று நாம் நினைக்கும் பகுதியிலும் பரம் பொருள் ஊடுருவியிருக்கிறான் என்பதல்லவா வேதம் காட்டும் அறிவு? அதன்படி வெற்றிடம் என்பதே கிடையாது. வெற்றிடம் என்று நாம் நினைக்கும் பகுதியிலும் நாமும், நம் அறிவியலாரும் அறியாத ஏதோ ஒரு பொருள் இருக்க வேண்டும். (அதை இன்று அறிவியல்dark matter என்ற பெயரில் ஒத்துக் கொள்கிறது.) உடுக்கையின் ஓங்கார ஒலி அவற்றின் வழியே ஊடுருவி பல நிலைகளிலும் படைப்புக்கு உறுதுணை ஆகிறது என்பதே உடுக்கை ஒலி காட்டும் ஞானம்.

இந்த ஒலி நம் காதுக்குக் கேட்க வேண்டும் என்பதில்லை. அதைக்கேட்க வேண்டுமானால், அந்த மூலாதாரத்தை நோக்கி பக்தியோ, முக்தியோ, சித்தியோ, வித்தையோ (32 வித்தைகள் பற்றிய குறிப்புகள் வெவ்வேறு உபநிஷத்துக்களில் காணப்படுகின்றன.)— ஏதோ ஒரு வழியில் நாம் பயணிக்க வேண்டும்.

அப்படிப் பயணிக்கவில்லை என்றாலும், அந்த ஒலி அலைகள் அடைந்த பரிணாம வகைகளை இன்று நாசா (NASA) விஞ்ஞானியர் செவிமடுத்து, பேச்சிழந்து நிற்கின்றனர்.

சமீபத்திய ஆராய்ச்சிகளின் மூலம் நம் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் ‘பேசி’க் கொள்வதை செவிமடுத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட அலை வரிசையில் கிரகங்கள் ரேடியோ அலைகளை வெளிவிடுகின்றன. இவற்றைக் காதால் கேட்கும் வண்ணம் ஒலி அலைகளாக மாற்ற முடியும். அப்படிச் செய்த போது, இந்த ஓசையை ஓர் இசையாக இந்த கிரகங்கள் வெளிப்படுத்துகின்றன என்று தெரிய வந்துள்ளது. அப்படிக் கேட்ட ஒலியில், சனிக் கிரகத்தின் ஒலி பிரமிக்கத்தக்கதாக உள்ளது. அதை இங்கே கேட்கலாம்.


நாதப் பிரம்மம்

இசை என்று சொல்லும்பொழுது, நாதப் பிரம்மம் என்பது நினைவுக்கு வருகிறது. நாதமே பிரம்மம் என்றால், நான்முகப் பிரம்மன் வெளிப்பட்ட இடமான, தோன்றும் பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் ஓங்காரம் எழும்பிய போது, நாதமும் வெளிப்படிருக்க வேண்டும் அல்லது நாதமாக வெளிப்பட்டிருக்க வேண்டும் என்றாகிறது. இதை விஞ்ஞானம் இன்னும் அறியவில்லை.

இந்த நாதப் பிரம்மம் ஏழு ஸ்வரங்களாக உள்ளது. இவை சாம வேதத்தின் ஆதார ஸ்வரங்கள். எண் வடிவிலும் இவற்றைக் குறிப்பர். அவை தரும் வெவ்வேறு ராகத்தில் கடவுளை அடையும் அலை வரிசை உண்டாகிறது. சாம கானத்தில் இறைவன் இறங்கி வருதல் அதனால் சாத்தியமாகிறது.

தோன்றும் பிரபஞ்சத்தில் அணுக்கள் பயணித்தபோது அவை ஓங்காரத்தையும், நாதத்தையும் சுமந்து கொண்டோ, அல்லது அவற்றால் செலுத்தப்பட்டோ இன்னும் இயக்கத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அறிவியலாருக்கு எட்டியுள்ள Doppler Effect அவற்றுக்கிடையே இருக்கும் ஒருவித பேச்சு அல்லது நாதம் என்று கொள்ளலாம். அவற்றுக்கு அலைவரிசையும், நிறமும், வடிவும் இருக்கிறது என்பதை இன்றைய அறிவியல் மூலமே தெரிந்து கொள்கிறோம்.

இந்த அணுக்களும், அவை கொண்ட பொருள்கள் அனைத்தும் தத்தமக்கென்று பரிபாஷையைக் கொண்டிருக்கும் என்பது சாத்தியமென்று தெரிகிறது. நம்முடைய பிரதேசம் என்று பார்க்கையில் சில விஷயங்கள் முன்னோரால் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, சாயாக் கிரகங்கள் எனப்படும். ராகு, கேது நீங்கலாக மீதி ஏழு கிரகங்களும் இந்த ஏழு ஸ்வரங்களையும் கொண்டவை என்பதே. அவற்றுக்கு நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் உருவாக்கினார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் அடிப்படை என்று ஏதோஒன்று உள்ளது என்று தெரியப்படுத்தும் வண்ணம், சில விஷயங்கள் நம் சிற்றறிவுக்குத் தென்படுகிறது.

நிறம் என்று பார்க்கையில், ஆதார நிறங்கள் பச்சை, சிவப்பு, நீலம் ஆகியவை. கிரகங்களில் இவை முறையே, புதன், செவ்வாய், சனி ஆகும்.

இப்பொழுதுதான் அதிசய ஒற்றுமை வருகிறது. இவற்றின் ஸ்வரங்கள்:

புதன் – ஸ
செவ்வாய் – ரி
சனி – ப

தமிழ்ப் பண்ணில் (ஆய்ச்சியர் குரவையில் காணலாம்) இவை முறையே குரல் (கிருஷ்ணா), துத்தம் (நப்பின்னை), இளி (பலராமன்) ஆவர்! இவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் பல வித இசை எழுந்துள்ளன.

இவற்றின் தெய்வங்கள் யார் என்றால் (இவை நக்ஷத்திர சூக்தம் என்று யஜுர் வேதத்தில் உளளன.)

புதன் – ஸ – த்ரிவிக்ரமன் (வாமனன்)செவ்வாய் – ரி – பூமி
சனி – ப – பிரஜாபதி
 (இவரிடமிருந்து உயிர்கள் உற்பத்தியாகின்றன.)

இவை மூன்றும் படைக்கப்படும் ஆதாரமான விஷயங்கள் மற்றும் அவற்றின் காப்பாக மூவுலகமும் அளப்பவன் (த்ரிவிக்ரமன்). சுருக்கெழுத்துப் போல ஆதாரமான அலைவரிசையிலும், நிறத்திலும், அக்ஷரத்திலும் இவை உள்ளன. ஆரம்பத்தில் இவை ஓங்காரத்தில் கிளம்பி, பிரபஞ்சம் விரிய விரிய இவையும் எளிய பகுப்புகளாக உருமாறி, யாருக்காக இந்த படைத்தலைச் செய்தானோ, அந்த ஜீவர்களாகிய நாம் வாழ வகை செய்துள்ள பாங்கே இவை எல்லாம்.

இதில் இன்னொரு அதிசயமும் உள்ளது.

புதனைக் குறிக்கும் கடவுள் மால் என்னும் மாயோன். மால் என்றால் மயக்குபவன் என்பது பொருள். செவ்வாயைக் குறிக்கும் கடவுள் சேயோன் எனப்படும் மால் மருகன் ஆன முருகன்மருகன் என்றால் மரபில் வந்தவன் என்று பொருள். மாலின் மரபில், அதாவது வழியில் தானும் மயக்குபவன் என்று அர்த்தம். இவர்கள் இருவருமே, சாதாரண மக்களை எளிதில் மயக்கித் தம் பக்கம் திருப்புகின்றனர். அப்படியும் மயங்காதர்களை சனீஸ்வரன் மாற்றுகின்றான்.கிரகங்களுக்குள்ளே, சனிக்குத்தான் சனீஸ்வரன் என்று ஈசன் பட்டம் உண்டு. கிரகங்கள் எல்லாம் மக்களுக்கு நல்லது தரவென்று இறைவனிடம் தத்தமக்கென்று வரம் பெற்ற போது, சனி மட்டும் மக்களுக்குத் துன்பம் தருபவனாக தான் இருக்க வேண்டும் என்று கேட்டாராம். ஏன் அப்படி என்று கேட்டதற்கு, துன்பம் வரும் பொழுதுதான் மக்கள் இறைவனை நினைப்பர். அதனால் சர்வேச்வரனான உன்னை நினைத்துக்கொண்டே இருக்க, நான் அவர்களுக்கு அடுத்தடுத்துத் துன்பம் தரவேண்டும் என்று சொன்னாராம். தன் பெயர் கெட்டாலும் பரவாயில்லை, மக்கள் இறை பக்தியைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் சனிக் கிரகம் கேட்கவே, அவருக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம், சனீஸ்வரன் என்று ஈஸ்வரப் பட்டத்தையும் சேர்த்து அழைக்கும்படி இறைவன் செய்தாராம்.

இதிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், படைப்பின் கடைசிக் கட்டம் வரை அந்தப் பரம் பொருளை அடைய வேண்டுவதற்கான சாத்தியக் கூறுகளை இறைவன் அமைத்துள்ளான்.

கொப்பூழ் தாமரை

படைப்பின் துவக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள மற்றொரு வர்ணனை, திருமாலின் நாபியிலிருந்து எழுந்த தாமரையில் நான்முகப் பிரம்மன் அமர்ந்து உலகத்தைப் படைத்தான் என்பது. இங்கே ஓங்காரம் வரவில்லையே, இந்த வர்ணனையும், உடுக்கை ஒலி வர்ணனையும் ஒத்துப் போகவில்லையே என்று கேட்கலாம்.


இங்கேயும் ஓங்காரம் இருக்கிறது. திருமாலின் கொப்பூழில் மலர்ந்த தாமரை, லக்ஷ்மியின் வடிவம். திருமாலின் இதயம் என்னும் தாமரையில் குடி கொண்டுள்ள லக்ஷ்மியே, தோன்றும் உலகில் தாமரையில் எழுந்தருளுகிறாள். படைப்புக் காலத்தில் கொப்பூழில் மலர்ந்த தாமரை, திருமாலின் அங்கமே. அந்த லக்ஷ்மியைப் பாடும் ஸ்ரீ சூக்தம் என்னும் ரிக் வேதப் பாடல் அவளை எல்லாப் பொருளிலும் உறைபவள் என ‘ஈச்வரீம் சர்வ பூதானாம்’ என்கிறது. அவளை அடைபவர் கேட்கும் ஒலி யானையின் பிளிறல் ஒலி. யானையின் பிளிறல் ஓங்காரமாகும். யானையும் ஓங்கார ஒலியால் அவள் துதிக்கப்படுகிறாள் என்று இந்தப் பாடல் கூறுகிறது. அவள் இருக்கும் இடத்தில் என்றும் ஓங்காரம் கேட்டுக் கொண்டிருக்கும்.

இயக்கத்தைச் செலுத்திக் கொண்டிருப்பவர் நடராஜர் என்றால், படைப்புக்குள் நிழைந்து கொண்டிருக்கும் அண்டங்களுக்கு சுபிட்சத்தை வழங்கிக் கொண்டிருப்பவள் கொப்பூழ் தாமரையான லக்ஷ்மி.உடுக்கை ஒலி கிளம்பிய அதே மூலத்தில் நான்முகப் பிரமம்னும் ஓங்காரத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார். வேதத்தை நினைவுக்குக் கொண்டுவந்து அதை வெளிப்படுத்துவது படைப்பின் அந்த மூலத்தில்தான். இந்த மூன்று கடவுளர்களது ஆதார ரூபத்தை ஒருங்கே வணங்கியவர் முற்காலத் தமிழர்.மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூ’ போல இருந்தது மதுரை மாநகர் என்னும் பரிபாடல் இதைப் பறைசாற்றுகிறது. மதுரையை ஆண்டவன் சோம சேகரக் கடவுளை வணங்கிய பாண்டியன். அவன் ஆண்ட நாடு மாயோன் அளித்த தாமரை போன்றது. (இன்றும் மதுரை நகரம் தாமரை வடிவில்தான் இருக்கிறது). அதனால் சுபிட்சம் பெருகியது. அங்கே ‘பூவினுட் பிறந்தோன் நாவினில் பிறந்த’ – அதாவது பூவில் தோன்றிய நான்முகப் பிரமனது நாவில் தோன்றிய வேத ஒலியைக் கேட்டுத்தான் மதுரை மன்னனும், மக்களும் துயில் எழுவர் (கோயிலில் விடிகாலை வேத முழக்கம் நடந்தது என்று பொருள்).

ஆனால் மற்ற இரு மன்னர்களது தலை நகரங்களான வஞ்சியிலும், உறையூரிலும் கோழி கூவுவதைக் கேட்டுத்தான் துயில் எழுவர் என்கிறது இப்பாடல். சங்க காலத் தமிழர் மும்மூர்த்திகளையும் ஒருங்கே போற்றினர் என்பதற்கு இது ஒரு சான்று. சமயச் சண்டை உருவாகாத காலம் அது.

ஓங்கார ஒலியில் ஆரம்பித்த படைப்பு, மேற்கொண்டு சென்ற விதத்தை இந்தப் பிரபஞ்சவியல் எவ்வாறு விளக்குகிறது என்பதை அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்…)

3 comments:

Don Bosco said...

Some interesting posts are written in tamil
I cannot teaf tamil script.
Also some information on Annunaki wanted.

jayasree said...

@ Don Bosco,

Yes, articles on creation are in Tamil. I will be writing them in English after I finish the priority articles in hand.

On Anunnaki, my opinion is that An / Anu is a a borrowed concept from Hindu Shiva. I happened to see a Shiva linga look-alike in the Oriental National Museum of University of Chicago. I am writing a short series of Hindu God look-alikes found in that Museum, and in the course of it I am comparing An with Shiva. These articles are going to be published in an online magazine. I will notify here when they are published.

From what I have understood so far, a conglomeration of many people / communities at South Mesopotamia for trade purposes had happened from 3rd millennium BCE onwards. Some Indian (Meluhha / saurashtra / Gujarati) community also had entered the place via Persian Gulf. Isin- Larsa period was the peak of both incubation and mixing of cultures and religions of all. After that period not many new concepts entered, but the existing concepts underwent steady changes and re-mixings perhaps due to loss of touch with original concepts and due to whims and influence of rulers.

My 2nd article in the series has something to say on the earliest form and concept of Ishtar. She was Eshwari, consort of Shiva brought in by Gujarati people (Meluhha). Her first location in Mesopotamia was Eshnunna. From that Ishtar and then Inanna were the modifications.

Shiva worship was gone but the shape was retained through the ages and borrowed by the Greek as Omphalos.

Four faced Brahma and Saraswati are also found in Mesopotamia but with modulations. Brahma figure had gone till Serbia as Triglav.

Hanuman look-alike is also found in the Museum of Chicago. It has a parallel with the image carved on the mountain in Iran-Iraq border. https://jayasreesaranathan.blogspot.com/2015/10/rama-in-rock-carvings-of-iraq.html
I find them as the Mundari people of west coast of India who had migrated to Mesopotamia and further absorbed in the region. The ancient south Indian gene pool that Narasimhan et al have seen in Iran- Iraq may perhaps have come from these early migrants from India to Mesopotamia.

Among other Gods, I find Marduk as a modification of Lord Muruga / Karthikeya.


jayasree said...

@ Don Bosco,

Please check here the first article on Mesopotamian God that looks like Hindu God of Tirumala, Lord Venkatesara: http://indiafacts.org/hindu-like-gods-in-south-mesopotamia-of-early-2nd-millennium-bce-i/