Wednesday, December 29, 2010

மார்கழியும், பாவை நோன்பும்.


The significance of  Maargazhi and Paavai nonbu.
This is an oft written topic by me in my blog.
But this one is recently written for publishing in  a magazine called "Poojari - Murasu" that was made available to the temple priests in all nooks and corners of Tamilnadu.
Posting it here for Tamil readers.



My speech on “Scientific secrets of Paavai nonbu” given in Tamil can be viewed here:


மார்கழியும், பாவை நோன்பும்.


மார்கழி என்றாலே இரண்டு விஷயங்கள் நம் நினைவுக்கு வரும். ஒன்று 'மாதங்களில் நான் மார்கழி' என்று கீதாச்சார்யனான  கிருஷ்ண பரமாத்மா சொன்னது.  மற்றொன்று ஆற்றங்கரையில் பாவை நோன்பு நோற்று அந்தக் கிருஷ்ணனையே கணவனாகப் பெறுவோம் வாருங்கள் என்று ஆண்டாள் அழைக்கும் திருப்பாவைப் பாசுரங்கள். இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

மாதங்களிலேயே  சிறப்பு மார்கழிக்குத்தான். அது தேவர்களது  நாளின் ஆரம்பத்தில் வரும் பிரம்ம முஹூர்த்தம் எனப்படுகிறது . நமக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஒரு நாளில் 24 மணி நேரம் இருக்கிறது. அது போல தேவர்களது நாளான ஒரு வருடத்தில் நம்முடைய ஒவ்வொரு மாதமும் அவர்களது இரண்டு மணி நேரத்துக்குச் சமம். உத்தராயணம்  ஆரம்பிக்கும் தை மாதம் வரும் போது தேவர்களது  நாள் ஆரம்பம் ஆகிறது. அதற்கு முன் வரும் மார்கழி மாதம்விடிவதற்கு முன் வரும் பிரம்ம முஹூர்த்தம் ஆகிறது.  அந்த நேரத்தில் செய்யப்படும் தியானமும், பூஜையும் முழு பலனையும் கொடுக்கும்.

ஒரு நல்லது நடக்கவேண்டும் என்றால், தெய்வ சங்கல்பம் இருந்தால் எப்படியானாலும் அது நடந்து விடும் என்பார்கள். அந்த தெய்வ சங்கல்பம் இயற்கை ரூபத்தில் மார்கழி மாதத்தில் தொக்கி இருக்கிறது. அதனால்தான் மாதங்களில்  மார்கழி மாதமாகக்  கிருஷ்ணன் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறார். இயற்கை ரூபத்தில் தெய்வம் நமக்குத் தரும்  விசேஷங்கள் என்ன  என்று பார்ப்போம்.
  • இந்த மாதம் பிரபஞ்சத்தில் நாம் இருக்கும் 'பால் வெளி மண்டலம்' என்னும் நட்சத்திர மண்டலத்தின் அச்சு போல இருக்கிறது . அந்த அச்சு  தனுர் ராசியில் இருக்கிறது. தனுர் ராசியைச்  சுற்றித்தான் நமது சூரிய மண்டலமும், பிற நட்சத்திர மண்டலங்களும் வலம் வருகின்றன. அந்த தனுர் மாதத்தில் சூரியன் உதிக்கும் காலம் மார்கழி மாதம் எனபப்டுகிறது. மார்கஷிரம் எனப்படும் மிருகசீர்ஷம் என்னும் நட்சத்திரத்திற்கு நேர்க்கோட்டில் தனுர் மாதம் ஆரம்பிக்கிறது. அந்த நக்ஷத்திரம் இருக்கும் திசையில் உலகங்கள் சென்று கொண்டிருக்கின்றன. அதுவே நாம் செல்லும் மார்க்கம் ஆகும்.  எனவே மார்கழி மாதம் என்று பெயர் வந்தது. அந்த மாதத்தில்  நாம் செய்யும் தவமும், தியானமும், தெய்வத்திடம் நம்மை அழைத்துச் செல்வதாலும், நாம் செல்லும் ஆன்மீக மார்கத்துக்கு உறுதுணையாக, ஒருமார்கமாக  இருப்பதாலும் அந்த மாதம் மார்கழி மாதம் என்றாகிறது.

  • மார்கழி மாத விடியலுக்கு முன் ஓசோன் என்னும் பிராணவாயு மண்டலம் பூமண்டலத்தில்  இறங்கி நிற்கிறது. அப்பொழுது வாசல் மொழுகி, கோலமிட்டு, கோவிலுக்கும், பஜனைக்கும் செல்லும் போது உடல் ரீதியான நல்ல மாற்றங்கள் நிகழ்கின்றன. உடலின் புத்துணர்வு, ஆன்மீக வளர்ச்சிக்கும் உறுதுணையாகிறது.

  • மார்கழி மாதத்தில் சூரியன் பூராடம் நக்ஷத்திரத்தில் பயணிக்கும் காலத்தை  "கர்போட்டம்" என்பார்கள். அதாவது மார்கழி மாதத்தில் அமையும் அந்த நேரம் மழைக்குக் கர்ப்பம் தரிக்கும் காலம். அடுத்த வருடம் வரும் மழைக் காலம், அதற்கு முன்னாலேயே மார்கழி மாதத்தில் சூல் கொள்கிறது என்பது அதன் பொருள்.  அந்த சமயத்தில் வாயு மண்டலத்தில் தென்படும் மேகக்கூட்டங்களின் அமைப்பு, காற்றின் தன்மை, பனி, வைகறையில் காணப்படும் வானத்தின் நிறம் ஆகியவற்றைப் பொருத்து மழைக்காலம் அமையும். அது மட்டுமல்ல, மார்கழி மாதத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலை, கிரக யுத்தம், கிரகணம் போன்றவற்றின் அடிப்படையிலும், வரப்போகும் மழைக்காலம் அமையும்.  இப்படி வளி மண்டலத்திலும், விண் வெளியிலும் மார்கழி மாதத்தில் இருக்கும் நிலையைப் பொருத்து, குறிப்பாக  சூரியன்  பூராடத்தில், சஞ்சரிக்கும்  காலத்தில் இருக்கும் இந்த அமைப்புகளைப் பொருத்து, மழைக்கான கர்ப்பம் தரித்ததா இல்லையா என்று ரிஷிகள் சொன்னார்கள்.  சரியான அளவு மழை இருந்தால்தான் நாடும் , மக்களும் சுபிக்ஷமாக இருப்பார்கள். அதை அருளும் தெய்வ சங்கல்பமாக மார்கழி மாதத்தில் இயற்கை உறுதுணை செய்கிறது.

  • மார்கழி மாத விடியலுக்கு முன் இருக்கும் பனிச் சூழலில் குழந்தைகள், மக்கள், பறவையினங்கள், பசுக்கூட்டங்கள் ஏற்படுத்தும் சலசலப்பு காற்று மண்டலத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதனால் ஆறு மாதங்கள் கழித்து வரும்  மழைக் காலம் பொய்க்காமல் நல்ல மழையைத் தரும். வசிஷ்டர், காஷ்யபர் போன்ற மாமுனிவர்கள் இந்தக் கருத்துக்களைச்  சொல்லி உள்ளார்கள். வராஹமிஹிரர் அவற்றை, 'ப்ரிஹத் சம்ஹிதை' என்னும் நூலில் எழுதி உள்ளார். மக்களுடைய நற் கதிக்கும் உலக நன்மைக்கும்  உதவுவதால் மார்கழி மாதத்தை நன்றாகப் பயன் படுத்திக் கொள்ள  வேண்டும் என்று கொண்டு வந்த ஒரு நோன்பே பாவை நோன்பு ஆகும்.


பாவை நோன்பு.

தமிழ் நிலங்களில் தொன்று தொட்டு பாவை நோன்பு நோற்று வந்திருக்க வேண்டும். குழந்தைகளின் வளரும் பருவத்தைப் பற்றி விளக்கும் பிள்ளைத் தமிழ் இலக்கணத்தில், ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலான பெண் குழந்தைகள் மணலில் பாவை என்னும் பொம்மைகள் வடித்து, குளிர்ந்த ஆற்று நீரில் குளித்து  காம தேவனை வழி படுவர் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பருவத்துப் பெண்கள் பொம்மை விளையாட்டு விளையாடுவதில் ஆர்வமாக இருப்பர். அந்தப் பருவத்தில் வீட்டுக்கு வெளியில் சென்று விளையாடுவர். இந்த இயல்பை சில நல்ல நோக்கங்களுக்காக உபயோகப்படுத்திக் கொண்டுள்ளனர் நம் பெரியோர்கள்.

அந்த நோக்கங்கள் என்னவென்றால், தெய்வ நம்பிக்கையை இளமையிலேயே குழந்தைகள் மனத்தில் விதைக்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக தெய்வ நம்பிக்கையை எடுத்துச் செல்வது பெண்களே. எனவே பெண் குழந்தைகளிடம் விளையாட்டுத்தனமாக இந்த நம்பிக்கைகளைப் பாவை நோன்பு மூலம் விதைத்தனர்.

மார்கழி மாதத்தில் விடிகாலைக் குளிரில் குழந்தைகள் எழுப்பும் ஓசை, அவர்களது ஓட்டம், குளிர்ந்த ஆற்று நீரில் குளிப்பதன் மூலம் சலனம் ஏற்படுத்துதல் போன்ற செயல்களைச் செய்வது மார்கழி மாத கர்போட்டத்துக்கு நல்லது. இவற்றைப் பெண் குழந்தைகள் செய்வார்கள். ஆண்டாள் திருப்பாவையில் ஆனைச்சாத்தன் 'கீசு கீசு' என்று சப்தம் செய்வது போன்றவற்றைக் குறிப்பிடுவது, இந்த கர்போட்டத்துக்கு இயற்கை செய்யும் உதவிகள் ஆகும்.

அவ்வாறு குழந்தைகளை விளையாட்டுதனமாக ஈடுபடுத்தும் செயலில்பக்தியையும், நம்பிக்கையையும் விதைத்துள்ளனர். அந்த  நாளில், சிறு வயதிலேயே திருமணம் செய்து  விடுவார்கள். அதனால் அந்தக் குழந்தைகள் நல்ல கணவனை அடைய வேண்டும் என்று  பாவை விளையாட்டிலேயே ஒரு வேண்டுதலை இணைத்தனர்.மார்கழியில்  செய்யப்படும் நோன்பும், வேண்டுதலும் நிச்சயம் பலன் கொடுக்கும் என்பதால், அத்தகைய வேண்டுதலைப் பாவை நோன்புடன் இணைத்தனர்.

கணவன் மனைவி உறவு என்பது ஒரு பிறவியுடன் முடிந்து விடுவதில்லை. முன் பிறப்பில் கணவன் எவனோ அவனையே, இப்பிறப்பிலும், மீண்டும் அடுத்த பிறவியிலும் பெற வேண்டும் என்பதே அந்த நாளைய மக்களது வேண்டுதலாக இருந்தது. இதற்குக் காரணம், திருமணம் என்பது தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கு நிலைகளைத் தாண்டுவதற்குப் பயன்படுவது என்பதே ஹிந்து மத நம்பிக்கை. இவற்றுள் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று நிலைகளையும் கணவன் - மனைவி என்னும் ஒரே ஜோடியாக எல்லாப் பிறவிகளிலும் தாண்டி, முடிவில் வீடு பேற்றை அடைய வேண்டும் என்று அந்த நாளைய மக்கள் விரும்பினர். அதை ஒரு வேண்டுதலாக, அறியாப்பருவத்திலிருந்தே செய்ய ஊக்கம் கொடுத்தனர். அதுவே பாவை நோன்பின் தாத்பரியம்.

திருமணம் ஆன பிறகும். பாவை நோன்பைச் செய்தனர். ஆனால் மணலில் பாவையை வடிக்கவில்லை. நோன்புக்கான சடங்குகளைச் செய்தனர். பாவை வடித்து பூஜை செய்யும் முறையைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தனர்.


பாவை நோன்பு ஆரம்பிக்கும் காலம்"மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்" என்று ஆண்டாள் சொல்கிறாளே, மார்கழி மாதத்தின் மதி நிறைந்த நாளான திருவாதிரை நக்ஷத்திரத்தில் சந்திரன் பூரணம் அடையும் பௌர்ணமி நாள் ஆகும். அன்று விடிவதற்கு முன், ஆண்களும், பெண்களும் ஆற்றங்கரைக்குச் செல்வார்கள். ஆற்றில் குளித்து, பிறகு ஆற்றங்கரையில் ஹோமத்தீ வளர்ப்பார்கள். ஆதி இறை என்பதாலும், திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி என்பதாலும், ஆதிரையான் என அழைக்கப்பட்ட முக்கண்ணனுக்கு இந்த ஹோமம் நடக்கும்.  மழைக்குத் திருவாதிரை நக்ஷத்திரம் முக்கியம். சூரியன் திருவாதிரையில் நுழையும் நேரத்தைப் பொறுத்தே அந்த வருடத்தின் மழை அமையும் என்பது ஜோதிட வழக்கு. அதனாலும் இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது.

திருமணமான பெண்களும், திருமணத்துக்குக்  காத்துக் கொண்டிருக்கும் பெண்களும், சிறு பெண் குழந்தைகளும் குளிர்ந்த ஆற்று நீரில் நீராடி, ருத்ரனுக்கு நடக்கும் ஹோமத்தீயை வலம் வந்து வணங்குவர். கொண்ட கணவன் என்றும் பிரியாமல் இருக்க வேண்டும் என்று திருமணமானவர்களும், நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று கன்னிப் பெண்களும் வேண்டிக் கொள்வார்கள். குழந்தைகள் ஆற்று மணலில் பொம்மை வடித்து அதற்குப் பூஜை செய்வார்கள். அந்தப் பொம்மை (பாவை) கார்த்த்யாயினி அல்லது பாவை என்னும் பெண் தெய்வம் என்று பலவாக இருந்திருக்கின்றது. ஓரளவு விவரம் புரியும் காலத்தில், தனக்கு வரப்போகும் கணவன் இப்படித் தான் இருப்பான் என்று பெண் குழந்தைகள் தன் மனதில் தோன்றும் உருவத்தைச் செய்வார்கள். ஆறு சாட்சியாக, தெய்வம் சாட்சியாக முற் பிறவிகளிலும், அந்தப் பெண் இப்படி பாவை நோன்பு நோற்றவள் ஆதலால், அவள் வடிக்கும் வடிவம் தவறாகாது,  அந்த வடிவம் உண்மையில் அவளை மணக்கப்போகும் வரனே என்ற நம்பிக்கை அன்று இருந்தது.

இதைக் கூறும் ஒரும் சம்பவம் சிலப்பதிகாரத்தில் வருகிறது. புகார் நகரில் வாழ்ந்த ஏழு பத்தினிப் பெண்டிரில் ஒருவராக ஒரு இளம் பெண் வடித்த பாவை பற்றிய குறிப்பு வருகிறது. பொன்னிக் கரையில் மணல் பாவை அமைக்கிறாள் அந்தப் பெண். அதுவே அவள் கணவனாகும் என்று மற்ற பெண்கள் சொல்லுகின்றனர். பிறகு அவர்கள் எல்லோரும் வீடு திரும்பிய பின்னரும், அந்தப் பெண் மட்டும் அங்கிருந்து அகலவே இல்லை. அந்தப் பாவையே தன் கணவன் என்று அவள் அந்த இடத்திலேயே இருக்கிறாள். அப்பொழுது ஆற்று நீர் கரை புரண்டு மணலில் பாய்கிறது. ஆனால் அவள் வடித்த பாவையை மட்டும் அழிக்காமல், அதைச் சுற்றிக் கொண்டு போகிறது. தான் வடித்த பாவை தன் கணவன்தான் என்று அவள் இருந்தமை அவள் பத்தினித்தனத்துக்குச் சாட்சி என்று மக்கள் அவளைக் கொண்டாடியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

இந்த வகையில் சிந்திக்கும் போது, ஆண்டாள் வடிவமைத்த பாவை நிச்சயமாக கண்ணன் அல்லது விஷ்ணுவின் அவதாரங்களாகவோ அல்லது வேங்கடம், மாலிரும் சோலை போன்ற பதிகளில் உள்ள திருமால் உருவமாகவோ இருந்திருக்க வேண்டும். மேலும் பாவை நோன்புக்கும் மழைக்கும்  உள்ள தொடர்பையும், ஆண்டாள் வெளிப்படுத்தி உள்ளாள். 'நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராட்டினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும்" என்று கூறியுள்ளாள்.

கடந்த ஆயிரம் வருடங்களில் இந்தப் பாவை நோன்பு கலாச்சாரம் மறைந்து விட்டது. ஆனால் தெய்வ சங்கல்பம் மனித வர்க்கத்தைக் கை விடவில்லை. ஆண்டாளது காலத்திற்குப் பிறகு, அவள் எழுதிய திருப்பாவையே மார்கழி வைகறையில் நம்மைத் தெய்வ சிந்தனையில் ஈடுபட வைத்துள்ளது. மார்கழி மாதம் விடிகாலையில் பஜனை செய்வது எனபது பல காலமாகவே நடந்து வருகிறது. இப்பொழுது ஐயப்ப பக்தர்கள் பெருமளவில் மார்கழியில், வைகறைச் சலனங்களை எழுப்பி, குளிர்ந்த நீரில் நீராடி, கோயில்களுக்குச் சென்று பஜனை பாடி, மார்கழி மாத கர்போட்டதுக்கு உறுதுணை செய்கிறார்கள். எனவே காலம் மாறலாம். ஆனால் காட்சிகள் மாறாது.  மார்கழியாக இருக்கும் பகவான் மாற விடமாட்டான்.