Wednesday, March 2, 2011

Article on Maha Shivarathri

Given below is the article on Shivarathri by me published in the current issue (Maasi maatham) of Pujari Murasu circulated among the temple priests of Tamilnadu. The relevance of moon's position in the sky on the day of Shivarathri (Chathurdasi) is highlighted in the article.

An old article by me on the cosmic significance of Mahashivarathri can be read here:-

http://www.tamilhindu.com/2010/01/adimudi-kaanaa-athisayam-a-dimension-of-the-universe/


சிவராத்திரியில் சில சிந்தனைகள்.



மாசி மாதம் ன்றாலே ஹா சிவராத்திரி நினைவுக்கு வரும். அன்று விரதம் இருந்து, தூங்காமல் கண் விழித்து சிவனை வழிபட்டால், மறுபிறவி இல்லாமல் பிறவிக்கடலிலிருந்து விடுபட முடியும். சிவ பதத்தை அடைய முடியும். இந்த நாளின் முக்கியத்துவத்தை ஒட்டி அமைநதுள்ள கதைகள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதனால் அந்த நாளுடன் இணைந்த சில தாத்பரியங்கள், விண்வெளி விவரங்களைப்  பற்றி சிறிது சிந்திப்போம்.

 


மொத்தம் நான்கு சிவராத்திரிகள் உள்ளன என்று கந்த புராணம் கூறுகிறது.

முதலாவதாகச் சொல்லப்படுவது  நித்ய சிவராத்திரி.

இது தினந்தோறும் வருவது. ஒவ்வொரு நாளும் பகல் முடிந்தபிறகு, உயிர்களைத் தூங்க வைக்கும்  இரவாக வருவது நித்திய சிவராத்திரி. ஒவ்வொரு இரவும் சிவனது ராத்திரிதான்.

 


அது எப்படி என்றால், பிரம்மன், விஷ்ணு, சிவன் என்னும் மூன்று கடவுள்களும் முத்தொழில் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் தொழிலான படைத்தல், காத்தல், அழித்தல் என்பவற்றை ஒவ்வொரு நாளும் செய்கிறாகள். அந்த மூன்று கடவுள்களுள், சிவனது பொறுப்பில் வருவது இறப்பு போன்ற உறக்கம். அதே போல் உயிர்களை விழிக்கச் செய்யும் நேரம்,  பிரமனது தொழில் நடைபெறும் நேரமாகும். உயிர்கள் தத்தம் கடமைகளையும், செயல்களையும் செய்யும் நேரம், காக்கும் தெய்வமான விஷ்ணுவின் நேரமாகும்.

 


இதன் அடிப்படையில், பெரியோர்கள்  நாளைப் பகுத்துள்ளனர்.

விடிகாலை 4 மணி முதல் 8 மணி வரை உள்ள நேரம் நான்முகப் பிரமன் செயலாற்றும் நேரம். அந்த நேரத்தில் செய்யும் நியமங்கள் சத்துவத்தை அதிகப்படுத்துவன. அந்நேரத்தில் உட்கொள்ளும் உணவு சுறுசுறுப்புக்கும், உடல் வளர்சிக்கும்,மன வளர்ச்சிக்கும் உதவுவதாக அமையும்.

 


காலை 8 மணி முதல் முன்மாலை 4 மணி வரை விஷ்ணுவின் நேரம். இந்த நேரத்தில் உடலும், உள்ளமும் நன்கு உழைத்து, செயலாற்ற ஒத்துழைக்கும்.

 


மாலை 4 முதல் இரவு 8 மணி வரை மீண்டும் பிரமனின் நேரம். பிரமன் தொழிலாக, மீண்டும் உடல் மற்றும் மனதின் புத்துணர்வுக்கு ஓய்வும், உடலில் உணவும் ஒட்டும் நேரம் இது.

 


இரவு 8 மணிக்குள் உணவை முடித்துக் கொள்வதுதான் நல்லது. அதன் பிறகு, இரவு 8 மணி முதல், காலை மணி வரை சிவனது நேரம். செயல்பாடுகள் நின்று, இறப்பு போன்ற தூக்கத்தில் அமிழும் நேரம் அது.

 


நம் உடலுறுப்புகளின் செயல்பாடும் இப்படியே மூன்று தெய்வங்களது செயல்பாட்டினை ஒட்டியே அமைவதால், ஒவ்வொரு மனிதனின் உடலிலும், மூன்று தெய்வங்களின் அம்சங்களும்  உள்ளன. ஒவ்வொரு னிதனும் மூன்று தெய்வங்களின் அருளால் ஒவ்வொரு நாளும் மூன்று நிலைகளில் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் மூன்று தெய்வங்களும் அவன் உடல், மன நிலைகளை மேற்பார்வை பார்க்கும் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

 


இவற்றுள், அழித்தல் கடவுளான சிவனது நேரம் இரவாக இருக்கவே ஒவ்வொரு இரவும் சிவராத்திரிதான். அழித்தல் என்று எல்லாவற்றையும் ஒடுக்கி விடுவது போன்ற இந்தத் தொழிலின் முக்கிய அம்சம், அழித்தல் மட்டும் அல்ல. அழித்தல் போன்ற உறங்கும் நிலையிலும், நம் உள் மனம் விழித்திருக்கிறது. அந்த விழிப்பிலும் நாம் இறைவனை சிந்திக்க சிந்திக்க மறு பிறப்பில்லா உன்னத நிலை அடைகிறோம்.

 


இரண்டாவது சிவராத்திரி மாத சிவராத்திரி எனப்படுவது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்தசியில் வருவது. இதுவும் ஒருவித அழித்தலைக் குறிப்பது. பௌர்ணமியில் ஒளி வீசிய சந்திரன், தேய்ந்து முழுவதும் மறைவதற்குமுன் வரும் ராத்திரி மாத சிவராத்திரி ஆகும்.

 

மூன்றாவது சிவராத்திரி வருடம்தோறும் மாசி மாதம் தேய்பிறையில் முதல் 13 நாட்களும் அனுஷ்டிக்கப்படுவது.

 


அது முடிந்த 14-ஆம் நாள் வரும் மகா சிவராத்திரி, 4-ஆவது சிவராத்திரி ஆகும்.

இந்த மகா சிவராத்திரி முடிந்த மறுநாள் கலியுகம் ஆரம்பித்தது.  ஒரு அழிவைத் தொடந்து இன்னொரு ஆக்கம் வரும் என்று காட்டுவது இது. ஆயினும், பிறப்பது கலியுகம் என்பதால், அழிவிலிருந்து உண்டாகும் ஆக்கம் சுமாரான ஒன்றாகத் தானே இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். ஒன்றிலிருந்து ஒன்று உருமாறி வரும்போது, அது சுமாராக இருக்கிறது. அதனால் இந்தக் கலியில் அடிக்கடி பிறந்து துன்பத்தில் நாம் உழல வேண்டாம் என்பதற்காக சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

 


 

விண்வெளி விவரங்கள்..

 

சிவராத்திரி சதுர்தசி திதியில் வருகிறது. தினம் தினம் வருவதால் அது திதி எனப்ப்டுகிறது. மொத்தம் 15 திதிகள் உள்ளன. 15 ஆவது திதி அமாவாசையாகவும் வரும். அல்லது பௌர்ணமியாகவும் வரும். அமாவாசை முதல் பௌர்ணமி வரை வளர்பிறை. அதை ஒரு பக்ஷம் என்பார்கள். பௌர்ணமி முதல் அமாவாசை வரை தேய்பிறை. அதையும் பக்ஷம் என்பார்கள். சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்ந்தபிறகு திதிக் கணக்கு ஆரம்பிக்கிறது. அப்படி ஒன்று சேர்ந்த பிறகு, சந்திரன் சூரியனை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறது. ஒரு நாளில் எவ்வளவு தூரம் விலகிச் செல்கிறதோ அது ஒரு திதி. இதன் அளவு 12 டிகிரிகள் ஆகும்.

 


இப்படி விலகி செல்லும் போது, அந்தச் சந்திரனை பூமியும் இழுக்கிறது. சூரியனும் இழுக்கிறது. அதேபோல சூரியனும், சந்திரனும் சேர்ந்து பூமியை இழுக்கின்றன. வானத்தில் பூமி, சூரியன்,சந்திரனுக்கிடையே இப்படி இழுபறி சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அப்படிபட்ட இழுபறியின் காரணமாக பூமியில் வாழும் மக்களாகிய நமது மனோநிலைகளிலும் மாறுதல்கள் ஏற்படுகின்றன. பௌதிக உலகுக்கும் பாதிப்பு உண்டாகிறது.

 


சந்திரன் செல்லும் பயணத்திலும் பாதிப்புகள் அவ்வபோது ஏற்படுகின்றன. அதாவது பூமி மற்றும் சூரியனது ஈர்ப்பு சக்தியை மீறி சந்திரன் தனது வட்டப் பாதையில் செல்லும் போது, 6 இடங்களில் அது உந்துதல் கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. இதை ஜோதிடத்தில் 'பக்ஷ சித்ரம்' (paksha Chidra)  என்கிறார்கள். பக்ஷத்தில் ஓட்டைகள் அல்லது சறுக்கும் இடங்கள் என்று இதற்கு அர்த்தம்.

 


அந்த ஆறு தினக்கள் அதாவது திதிகள், சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, நவமி, துவாதசி, சதுர்தசி என்பன.

 

இந்தத் திதிகள் கவனமாக இருக்க வேண்டிய தினங்கள். எதிர் விளைவுகள், மற்றும் கோபத்தால் செய்யக்கூடிய செயல்களை இந்தத் திதிகளில் செய்யலாம் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. சதுர்த்தியில் எதிரிகளை கட்டுப்படுத்தலாம். ஆயுதப் பயிற்சி செய்யலாம். சஷ்டியில் அறுவைச் சிகிச்சை செய்யலாம். அஷ்டமி, நவமியில் போருக்குச் செல்லலாம். துவாதசி, சதுர்தசியில் விட்டொழிந்தது என்று விட வேண்டியவற்றைச் செய்யலாம். துவாதசியில் மருந்து உண்ணலாம். சதுர்தசியில் வாங்கிய கடனைத் தீர்க்கலாம்.

 


இந்தத் திதிகள் எல்லாம் நம்மை கட்டுக்கு மீறி செயல்பட வைக்கக்கூடியவை. சந்திரனும் இந்தத் திதிகளில் கண்டத்தைத் தாண்டிச் செல்கிறான்.அதனால் இந்தத் திதிகளில் மக்கள் மன அமைதி காக்க வேண்டும். தெய்வ சிந்தனையில் ஈடுபட வேண்டும். அதன் மூலம் என்றென்றும் சாத்வீக எண்ணங்களைக் கொண்டு இருக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம் என்பது போல இந்தத் திதிகளை ஒவ்வொரு கடவுளுக்கும் முக்கியமானதாக வைத்திருக்கிறார்கள்.

 


சதுர்த்தியில் விநாயகரையும், சஷ்டியில் முருகனையும், அஷ்டமியில் கிருஷ்ணனையும், நவமியில் ராமனையும், துவாதசியில் விஷ்ணுவையும், சதுர்தசியில் ருத்திரனையும் வழிபட்டு, விரதம் காத்து, விண்வெளிக் கிரகங்கள் சேட்டை செய்தாலும் அவை நம்மை பாதிக்காமல் இருக்கும் வண்ணம் வழி செய்துள்ளனர் நம் பெரியோர்கள்.

 


இன்றைக்கு பல ஆராய்ச்சிகள் பெருகி விட்ட நிலையில், விஞ்ஞானிகளும் இதை ஒட்டியே கருத்து தெரிவிக்கிறார்கள். சந்திரன், சூரியனது ஈர்ப்பு விசையால், நமது பூமி எந்நேரமும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் துவாதசி தொடங்கி சஷ்டி வரையில் பூமியின் பூகம்ப அதிர்வுகள் அதிகமாக இருக்கின்றன. சக்தி வாய்ந்த பூகம்பங்கள் இந்தத் திதிகளுக்குள் வந்துள்ளன என்று அவர்கள் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 


பூமிக்குள் நடக்கும் அதிர்வை அவர்களது கருவிகள் கண்டு பிடிக்கின்றன. ஆனால் இந்தத் திதிகளில் நமது உடலில் ஏற்படும் அதிர்வுகளை நம் முன்னோர்கள் கண்டறிந்து அந்த அதிர்வுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் வழியாக விரதங்களைக் கொடுத்துள்ளனர். அதன் மூலம் நாம் பிறவிக் கடலைக் கடக்கவும் வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். சிவராத்திரி விரதம் என்பது அப்படிக் கிடைத்துள்ள ஒரு வரப்பரசாதம்.

 

*****************