Monday, December 25, 2023

தொங்கும் மதிள்களை அழித்த இராமன்

Previous article

Published in Geethacharyan 

 

இராமன் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள் என்பதற்கு இலக்கியச் சான்றுகளும் உள்ளன. தமிழ்ச் சங்க நூல்களிலேயே இராமனைச் சோழர் குல முன்னோனாகச் சொல்லும் பாடல்கள் உள்ளன. ஆனால் அவை வெளிப்படையாக இராமன் என்ற பெயரைச் சொல்லாமல், இராமன் செய்த ஒரு செயலைச் சொல்லியே அடையாளப்படுத்துகின்றன. அந்தச் செயல், “தூங்கெயில் எறிதல்”! எயில் என்றால் மதிள் சுவர். தூங்கெயில் என்றால் தொங்கிக் கொண்டிருக்கும் மதிள் என்று பொருள். தொங்கிக் கொண்டிருக்கும் மதிள்களை உடைய இலங்கையை அழித்தான் என்பது பொருள். இலங்கையை அழித்தவன் ஒருவன் தான். அவன் இராமன்!

அது என்ன தொங்கும் மதிள்? மதிள் சுவர்கள் தொங்கிக் கொண்டிருப்பது எவ்வாறு என்ற கேள்வி எழுகிறது. வானிலிருந்து தொங்கிக் கொண்டிருப்பது போன்ற உருவில் நகரங்கள் சொல்லப்பட்டுள்ளன. இதுவரை பாரத நாட்டில் வழங்கி வந்துள்ள கதைகளில், வானின் கண் இருந்ததாகச் சொல்லப்படும் நகரங்கள்  இரண்டு.

ஒன்று, தேவர்களது தலைநகரான அமராவதி என்னும் நகரம். இது வானில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நகரத்தைக் காத்தவன் முசுகுந்தன் என்பவன், அவன் சோழர்களது பரம்பரையில் வந்தவன் என்று சோழர் வம்சாவளி காட்டுகிறது. மாந்தாதா வரையிலும், இராமனது இக்ஷ்வாகு பரம்பரையும், சோழர் பரம்பரையும் ஒரேவிதமான பெயர்களைத்தான் கொண்டிருக்கின்றன. மாந்தாதாவுக்குப் பிறகு முசுகுந்தன் பெயர் சோழர் பரம்பரையில் வருகிறது.

ஒருமுறை இந்திரனுக்கு உதவ அவன் நகரமான அமராவதியைப் பாதுகாத்ததாகவும், அதற்குப் பிரதிபலனாக நாளங்காடி பூதத்தை இந்திரன் கொடுத்ததாகவும், அதை அவன் பூம்புகார் நகரில் நிர்மாணித்ததாகவும் சிலப்பதிகாரம் கூறுகிறது. தஞ்சாவூர் பகுதியிலுள்ள சப்த விடங்க ஸ்தலங்களும் முசுகுந்தனால் நிர்மாணிக்கப்பட்டவையே என்று ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. இங்கு நமக்குத் தேவையான விவரம், அமராவதி வானில் இருந்தது என்று சொல்லப்பட்டதே.

அதைப் போலவே வானில் இருந்ததாகச் சொல்லப்பட்ட மற்றொரு நகரம், ராவணன் ஆண்ட இலங்கை நகரம். அது மலை மீது அமைந்திருந்தது என்று இராவணன் சீதையிடம் கூறுவான் (வா- இராமா: 3-47-29). மலை முகட்டில், மேகங்களினூடே அந்த நகரம் ஒரு ‘தொங்கும் நகரம்’ போல அமைந்திருந்தது. இலங்கை மதிள்களால் சூழப்பட்ட நகரம். மேகங்கள் மலையைச் சூழ்ந்து கொள்ள, கீழேயிருந்து பார்ப்பவர்களுக்கு, மலை உச்சியில் அந்த மதிள்கள் மட்டுமே தென்படும். அவை வானத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போல இருந்தன என்பதால், தொங்கும் மதிள் எனப் பொருள்படும் ‘தூங்கெயில்’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இலங்கை நகரமே வானில் இருக்கும் நகரம் போல கருதப்பட்டிருக்கிறது.

இராவணன் தன் நகரத்தை இந்திரனது அமராவதி நகரம் போல இருக்கிறது என்றும் சொல்கிறான் (வா- இராமா: 3-48-10) இதன் மூலம், அமராவதியும், மலை மேல் அமைந்த ஒரு நகரமாக இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. தேவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் அங்கு வசித்திருக்கலாம். இந்திர த்வீபம் என்று தாய்லாந்து, பர்மா, வியட்நாம் பகுதிகளுக்குப் பெயரிடப்பட்டிருந்தது என்பதை நாம் இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும். இந்திரனைச் சேர்ந்தவர்களும் மனிதர்கள் தான் என்று சொல்லும் வண்ணம், இந்திரனது தேரோட்டியான மாதலி இராமனுக்கும் தேரோட்டினான். இந்திரனையே வென்றதால், இராவணனது மகன் இந்திரஜித் என்ற பட்டம் பெற்றான். இங்கு சொல்லப்படும் இந்திரன் நகமும், சதையுமாக மனித உருவில் வாழ்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும். இராமனது காலக்கட்டத்தில் அமராவதியும், இலங்கையும் மலை மேல் அமைக்கப்பட்ட நகரங்களாகவும், அழகிலும் அமைப்பிலும் ஒன்றை ஒன்று விஞ்சுவதாகவும் இருந்திருக்கின்றன.

இலக்கியத்தில் ‘தூங்கெயில் எறிந்த’ குறிப்புகள்

பொதுவாகவே சங்ககால இலக்கியங்களில், மன்னர் பெயரைக் குறிப்பிடாமல் அவர் செய்த செயலை மட்டுமே குறிப்பிடுவது வழக்கம். சோழர்களைப் பொறுத்தமட்டில் இரண்டு மன்னர்களது செயலைப் பெருமையாகக் குறிப்பிடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. புறாவுக்காகத் தன் தசையைக் கொடுத்த செயலையும், தூங்கெயில் எறிந்ததையும் சொல்லிப் புகழ்வார்கள். இதில் முதலாமவர் சிபி என்பது எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் தூங்கெயில் எறிந்தவன் யார் என்பதை எந்தத் தமிழார்வலரும், ஆய்வாளரும் கண்டு கொள்ளவில்லை. எனவே தூங்கெயில் குறிப்புகளையும் கொடுத்து, தூங்கெயில் அழித்தவன் இராமன் தான் என்பதையும் நாம் இப்பொழுது நிரூபணம் செய்வோம்.

தூங்கெயில் ஏறிந்த விவரம் புறநானூறு 39 ஆம் பாடலில் காணப்படுகிறது. சோழ மன்னன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளி வளவனை, மாறோக்கத்து நப்பசலையார் வாழ்த்துகிறார். அந்த மன்னன் உயிர்களிடத்தில் இரக்கம் கொண்டவன். தன்னை மற்றவர்கள் புகழ வேண்டுமென்று அவன் இரக்கத்தைக் காட்டுபவனில்லை. அவன் முன்னோனான புறாவுக்காத்  தன் உடம்பை அரிந்து கொடுத்தவன் மரபில் வந்துள்ளவன் ஆதலால், அவனுக்கு இரக்கம் காட்டுதல் என்பது இயல்பாக உள்ளது.

இந்த மன்னன் பகைவரை வெல்பவன். அது புகழுக்காகச் செய்வது அல்ல. இவனது முன்னோன் ஒருவன், தேவர்கள் நெருங்குவதற்குப் பயப்படும் ஆகாயத்திலிருந்து  தொங்கும் தூங்கெயிலை வென்றவன். அதனால் அப்படிப் பகைவரை வெல்லுதல் என்பது இவனுக்கு இயல்பாக உள்ளது என்கிறார் புலவர்.

“தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர்நினைப்பின்

அடுதல் நின்புகழும் அன்றே”

 

நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர், சிறுபாணாற்றுப்படை) என்னும் சங்க நூலில்,

தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,

நாடா நல் இசை, நல் தேர்ச் செம்பியன்”  (வரிகள் 81-82)

என்று தூங்கெயில் எறிந்தவனையும், செம்பியன் என்னும் பெயரளித்த சிபியையும் பற்றிச் சொல்கிறார்.

 

தூங்கெயில் அழித்த பாங்கினை முன்றுறை அரையனார் தான் இயற்றிய  பழமொழி நானூறிலும் வைத்துள்ளார்.

வீங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில்

தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு

முடியும் திறத்தால் முயல்கதாம் கூரம்

படியிழுப்பின் இல்லை யரண். (49)

நன்கு புடைத்த தோள்களை உடைய செம்பியன் ஆகாயத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த மதிள்களை அழித்ததால், அம்பினை வலிவாகத் தொடுப்பின் கவசமும் பிளந்துபோதல் போல, முடிந்த அளவு முயற்சிசெய்தால் பயன் அடையலாம் என்பதே இந்தச் செய்யுளின் பொருள்.

செயற்கரிய செயலாகத் தூங்கெயில் எறிந்தவிதம் இருக்கவேதான் கடின முயற்சிக்கு எடுத்துக்காட்டாக அதைச் சொல்லியுள்ளார்.

 

மணிமேகலையிலும், இந்திரவிழாவெடுத்த சோழ அரசனைப் பற்றிச் சொல்கையில் “தூங்கெயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்” என்று சீத்தலைச் சாத்தனார் எழுதியுள்ளார்.

பதினோராம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கலிங்கத்துப் பரணியில், ஆசிரியர் ஜெயங்கொண்டார், சோழ பரம்பரையைச் சொல்லுமிடத்தே, “தூங்கெயில் எறிந்தவனைப்” பற்றியும் குறிப்பிடுகிறார்.

 

தூங்கெயில் புதிர் நீக்கும் சிலப்பதிகாரமும், ஆழ்வாரும்

தூங்கெயில் புதிரை அவிழ்க்க சிலப்பதிகாரத்தில் இரண்டு குறிப்புகளைக் காண்கிறோம். முதலாவது, கங்கைக் கரையினில் சேர அரசன் செங்குட்டுவன் இருந்த பொழுது சொல்லப்படுகிறது. கண்ணகிக்குச் சிலை எழுப்ப, இமயத்திலிருந்து கல்லைக் கொண்டுவர சேர அரசன் செங்குட்டுவன் நாட்டை விட்டுக் கிளம்பி முப்பது இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. திரும்பும் வழியில் அவன் கங்கை ஆற்றங்கரையில் தங்கியிருந்தான். அப்பொழுது சேர நாட்டைச் சேர்ந்த மாடலன் என்னும் பார்ப்பனன் கங்கைக்கு தீர்த்த யாத்திரையாக வந்தான். அவனிடம் தமிழ் நாட்டு நிலவரங்களை விசாரித்தான் மன்னன். மன்னனின் மைத்துனன்தான் சோழ நாட்டை ஆண்டு கொண்டிருந்த வளவன் கிள்ளி. அந்த மன்னனைப் பற்றிக் கூறுகையில், தூங்கெயில் மூன்றினை எறிந்தவனும், புறாவுக்காகத் தன் உடம்பைத் தராசுக் கோலில் இட்டவனும் வளர்த்த அறம் கொண்ட செங்கோல் திரிந்து  போகுமா? போகாது. சோழன் செங்கோல் எந்தக் குறைவும் இல்லாமல் இருக்கிறது என்று தூங்கெயில் கதையையும் நினைவு கூர்கிறான் மாடலன்

வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப

எயில் மூன்றெறிந்த இகல் வேல் கொற்றமும்

குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர

எறிதரு பருந்தின் இடும்பை நீங்க

அரிந்து உடம்பிட்டோன் அறந்தரு கோலும்

(சில 27- 164 -168)

தூங்கெயில் மூன்றினை எறிந்தவன் என்று மூன்று மதிள்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறான் மாடலன்.  தொங்கும் மூன்று மதிள்கள் மீண்டும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகின்றன. அதைச் சொல்வது அம்மானை என்னும் விளையாட்டை ஆடிப் பாடும் சிறுமியர்.

 ‘அம்மனை’ என்பது விளையாடப்படும் காய். அதை ‘அம்மானை’ என்று சொல்லி தூக்கிப் போட்டு விளையாடுவார்கள். அப்படிப் போடும் போது, விடுகதை போல ஒரு கேள்வி கேட்க வேண்டும். அம்மனைக் காயைப் பிடிப்பவர் அதற்குப் பதிலாக ஒரு கேள்வியைக் கேட்டு, காயைத் தூக்கிப் போடுவார். அந்தப் புதிர்கள் சுவாரஸ்யமாகவும், சிறுமியருக்கு இருக்கின்ற அறிவு விலாசத்தைக் காட்டுபவதாவும் இருக்கும். உதாரணமாக இங்கு ஒரு அம்மானைப் பாடல்:

பொன்னேறு மார்பர் புகழ்சேர் திருவரங்கர்

எந்நேரமும் பாம்பிலே கிடப்பார் அம்மானை

எந்நேரமும் பாம்பிலே கிடப்பார் ஆமாயின்

என்னே தலைக்கு விடம் ஏறாதோஅம்மானை

ஏறுமோ செங்கருடன் ஏறினால் அம்மானை

எந்நேரமும் பாம்பில் கிடப்பார் திருவரங்கர் என்று ஒரு பெண் அம்மனைக் காயைத் தூக்கிப் போடுகிறாள்.

பாம்பில் கிடந்தால் விஷம் தலைக்கேறாதோ என்று இரண்டாமவள் கூறுகிறாள். கருடன் இருக்க எப்படி விஷம் ஏறும் என்று மூன்றாமவள் கேட்கிறாள்.

சுவையாகச் செல்லும் இந்தப் புதிர் கேள்விகளைப் போல சிலப்பதிகாரத்தில் சோழ மன்னர்களை வைத்து அம்மானைக் கேள்வி கேட்பதாக வருகிறது. அதில் முதல்  கேள்வி, இந்திரனுடைய உயர்ந்த அரண்களைக் காத்த சோழன் யார் அம்மானை?

அதற்குப் பதில் நமக்கும் இப்பொழுது தெரியும். அது முசுகுந்தன் என்னும் முன்னாள் அரசன். ஆனால் அந்த அம்மானைப் பாடலில் வரும் பதில் இப்படி இருக்கிறது: வானின் கண் அசைகின்ற மூன்று மதிள்களை அழித்தவனே அவன்.

“உயர் விசும்பில் தூங்கெயில் மூன்றெறிந்தவன் காண் அம்மானை” (சில: 29-16-4)

இந்திரன் மதிளைக் காத்தவன் முசுகுந்தன். அவன் அழிக்கவில்லை. ஆகவே இந்தப் பதில் அவனைப் பற்றியது அல்ல. இது வேறொரு அரசன் மதிள்களை அழித்த கதையைச் சொல்கிறது. அதிலும் அவை மூன்று மதிள்கள்.

மூன்று மதிள்கள் கொண்ட நகரமா?

அப்படி ஒரு நகரம் இருந்ததா என்றால், அங்குதான் வலிய செயல்களைச் செய்த கலியன் என்னும் திருமங்கை மன்னன் அற்புதமான குறிப்பு கொடுத்திருக்கிறார்.

மும்மதிள் இலங்கை இருகால் வளைய” என்று திருவெழுகூற்றிருக்கையில் ஆணியடித்தாற் போல் சொல்லிவிட்டார்.

மும்மதிளை உடையது இலங்கை. ஆழ்வார்கள் அருளிச் செய்த பல பாடல்களிலும் மதிள் இலங்கை என்ற குறிப்பு வந்தாலும், இந்த ஒரு பாடலில் “மும்மதிள் இலங்கை” என்று குறிப்பிட்டுச் சொல்லி இராமனால் அழிக்கப்பட்ட  இலங்கைக்கு மூன்று மதிள்கள் உண்டு  என்று காட்டிவிட்டார்.

எனவே மும்மதிள் கொண்ட தூங்கெயில் எறிந்தவன் இராமன்தான்.

அவனைத்தான் சோழர்குல முன்னோனாகத் தமிழ்ச் சங்கப் பாடல்கள் சொல்லியுள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரு பெருங்காப்பியங்கள் இயற்றப்பட்ட 2000 ஆண்டுகளுக்கும் முன் வரையிலும், மக்கள் இராமனது இந்த செயலை நினைவு கூர்ந்து, அம்மானைப் பாடலில் சிறுமியரும் சொல்லும் வண்ணம் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுத்திருக்கின்றனர்.

அதற்குப் பிறகு, சங்க காலம் மறைந்து விடவே, கொஞ்சம் கொஞ்சமாக இந்த விவரங்கள் மக்கள் மத்தியில் மறக்கப்பட்டுவிட்டன போலும். ஆயினும், இந்த விவரங்களை, செப்பேடுகளிலும், கல்வெட்டிலும், சோழ மன்னர்கள் வடிக்கலாயினர். பதினோராம் நூற்றாண்டு முதல், இலக்கியங்களிலும் எழுத ஆரம்பித்தனர்.

கலிங்கத்துப் பரணியில் தூங்கெயில் எறிந்தவனைப் பற்றிச் சொன்னதையடுத்து, முதலாம் குலோத்துங்கனது மகனான விக்ரம சோழன் காலத்தில் அவன் மீது ஒட்டக் கூத்தரால் பாடப்பட்ட “விக்ரமசோழன் உலா  என்ற நூலில்

“கூடார்தம் தூங்கும் எயில் எறிந்த சோழனும்” (வரி 17)

என்று சோழர் குல முன்னோனைச் சொல்லுகிறார்.

அவன் பேரனான இரண்டாம் இராஜராஜசோழனைப் புகழும் “இராஜராஜசோழன் உலா” என்னும் இலக்கியத்தில், தசரதனையும் சேர்த்து வம்சாவளி கொடுக்கப்பட்டிருக்கிறது. எழுதியவர் விக்ரமசோழன் உலா எழுதின  ஒட்டக்கூத்தரே.

“இந்திரனை யேறாக்கி யேறினோன் -முந்தும்

ஒரு தேரால் ஐ இரண்டு தேர் ஓட்டி உம்பர்

வரு தேரால் வான் பகையை மாய்த்தோன் - பொருது

சிலையால் வழிபடு தெண் திரையைப் பண்டு

மலையால் வழிபட வைத்தோன் - நிலையாமே

வாங்கும் திருக்கொற்ற வாள் ஒன்றின் வாய்வாய்ப்பத்

தூங்கு புரிசை துணித்தகோன்” (வரிகள் 19-25)

இதன் பொருள்: “வானுலகிலிருந்து வந்த ஒரு தேரால் பத்துத் தேரினையும் துரத்தி பகைவனைத் தொலைத்தவனும், வில்லால் வழிபட்டு வணங்கிய கடலினை முற்காலத்தில் மலைகளால் வழியுண்டாகும்படி செய்தவனும், நிலை நில்லாமல் அழியும்படி செய்யும், ஒரு சிறந்த வாளாயுதத்தால் தொங்கும் கோட்டையைத் துண்டாக்கியழித்த மன்னன்.”

ஐயிரண்டு தேர் என்பது பத்துத்தேர். சம்பரன் என்ற அசுரன் பத்துத் தேருடையவன். ஒரு தேராற் பத்துத் தேரினையும் ஓட்டிப் பகையை மாய்த்தோன் என்கிறது இப்பாடல். அவ்வாறு செய்தவன் தசரதன், பத்துத்தேர்களையும் வென்றதனால் வந்த பெயர் இது. தசம் - பத்து. ரதன் - தேரினை வென்றவன். அடுத்த வரியில், சிலையால் வழிபடு தெண்டிரை என்றது இராமன் சிலை (வில்) வளைத்து அம்பு தொடுத்துக் கடல்நீரை வற்றச் செய்தது கண்டு அஞ்சி வந்து வருணன் வணங்கியதைக் குறிப்பாலுணர்த்தியது. தெண்டிரை என்றால் கடல். இது அதற்குரிய தெய்வமாகிய வருணனைக் குறித்தது. சிலை என்றால் வில். அதன் வலிமையையுணர்த்தியது. இராமன் வில் வலிமையாற் கடல் வற்றியதுகண்டு வருணன் வழிபட்டான் என்பது குறிப்பு.

அடுத்து மலையால் வழிபட என்று சொன்னது மலைகளைக் கொண்டு போட்டதனால் வழியுண்டாக என்று அர்த்தம். இது கடலிற் கரைகட்டி இலங்கைக்கு வழியுண்டாக்கியதைச் சொல்வது. இதைச் செய்தவன்  இராமன்.

இதற்கடுத்துச் சொல்வது “தூங்கு புரிசை துணித்தகோன்” புரிசை என்றால் கோட்டை. தொங்கும் கோட்டையை உடைத்தவன். மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனைப் பற்றியே இங்கு சொல்லியிருப்பதால், தூங்கெயில் எறிந்தவன் யார் என்ற புதிர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டு விட்டது.

அவன் வழி வந்தவர்களே சோழர்கள் என்கையில், இராமன் யார் என்ற கேள்விக்குத் தமிழ்நாட்டில் இடமே இல்லை. நப்பின்னையை மணந்ததன் மூலம் கிருஷ்ணன் தமிழ் மக்களது மருமகன் ஆனான் என்றால், சோழர் மரபையே கொடுத்த இராமன் தமிழ் மண்ணின் மகன் என்று சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும்?