Thursday, April 12, 2012

“சித்திரையில்தான் புத்தாண்டு” – (வரலாறு டாட் காமுக்கு அனுப்பிய எனது மறுமொழி)

சித்திரையில் தொடங்கும் புது வருடம் என்னும் தலைப்பில் ஜனவரி 2010 –இல் தமிழ் ஹிந்து தளத்தில் வெளியான எனது இரண்டு கட்டுரைகள் இங்கே:-

http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-1/

http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-2/  

 

இவற்றை விமரிசித்து மார்ச் 2012 இல், வரலாறு டாட் காமில் வெளியிடப்பட்ட தலையங்கம் இங்கே:-

http://www.varalaaru.com/Default.asp?articleid=1094

 

இதற்கு நான் அனுப்பிய இரண்டு மறுமொழிகள் இன்று வரை அந்தத் தளத்தில் பிரசுரிக்கப்படாததால், நாளை வரும் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு என்னுடைய இந்தத் தளத்தில் வெளியிடுகிறேன். சுருக்கமான மறுமொழியை இங்கும், விரிவான மறுமொழியை அடுத்த கட்டுரையிலும் காணலாம். தமிழ் தெரியாத வாசகர்களுக்கென, தனியாக இன்னொரு கட்டுரையை ஆங்கிலத்தில் இதையடுத்து இடுகிறேன். விருப்பமுள்ளவர்கள் இந்தக் கட்டுரைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

 

-ஜெயஸ்ரீ.

 

************************************

 

ஆசிரியர் குழுவினருக்கு,

வணக்கம்.

 

"எதுதான் தமிழ்ப் புத்தாண்டு?" என்னும் தலைப்பில் நீங்கள் இட்ட கட்டுரை எனது கவனத்துக்கு வந்தது. தமிழ் ஹிந்துவில் வெளியான எனது கட்டுரைகளை விமரிசித்து நீங்கள் எழுதியவற்றுக்குச் சுருக்கமாக இந்த மறுமொழியில் எழுதுகிறேன்.

 

உங்கள் கருத்து:- 32 ஆம் பத்தியில் 'விய' வருடம், மற்றும் கணியன் பூங்குன்றனார் பாடலுக்குத் தற்குறிப்பேற்றிச் சொன்னதாக எழுதியுள்ளீர்கள்.

பதில்:- வருடப் பெயரைக் கொண்டு பலன் சொல்வதை நீங்கள் அறியவில்லை என்பதை இது காட்டுகிறது. அதைப் பற்றிய விவரங்கள் தமிழ் ஹிந்து கட்டுரையில் கொடுக்கப்பட்டும், இப்படி எழுதியிருப்பது, பார்வைக் குறை போலும். கணியன் பூங்குன்றனாரது பாடலுக்கு மறு மொழிப் பகுதியில் நான் எழுதியதும், தற்குறிப்பேற்றமல்ல. அது டா..வே. சா. அவர்கள் கண்டெடுத்த மூல உரையில் காணப்படுவது என்று மிகத் தெளிவாக எழுதியிருந்தும் நீங்கள் அதை ஒதுக்கியது, கவனக் குறைவு போலும்.

 

இதற்கு மிக எளிதாக "உரையாசிரியரின் கருத்துக்கள் இரண்டாம் நிலைத் தரவுகளே, மூல பாடம்தான் முதல் நிலைத் தரவாகக் கொள்ளத் தக்கது." என்று நீங்கள் சொல்லியுள்ளீர்கள். எத்தனை மூலத் தரவுகளைக் காட்டி நீங்கள் மறுப்பு எழுதியுள்ளீர்கள் என்று கணக்கு எடுங்கள். அது மட்டுமல்ல, நீங்கள் காட்டிய மறுப்புகள் எல்லாமுமே கடந்த ஒரு நூற்றாண்டின் உரையாசிரியர்கள் எழுதிய அவரவர் அறிவுக்கும், அப்பொழுது நிலவிய நம்பிக்கைக்கும் உட்பட்டதே என்பதை உணராமல் எழுதியிருப்பதன் காரணம் உங்களது கவனக் குறைவா அல்லது, படிப்பவர்கள் கவனிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தின் விளைவா

 

உங்கள் கருத்து:- ஆடு தலையாக என்று சொல்லப்படுவதில், மேட ராசி முதல் ராசிதானா என்றும், வட்டப்பாதையில் தலையும் வாலும் ஏது என்றும் கேட்டு, கோகுல் முதலான என்பதில் உள்ளது போலவே நெடுநல்வாடைப் பாடலைக் காண வேண்டும் என்று எழுதியுள்ளீர்கள்..

 

பதில்:- வட்டத்தில் எத்தனை சுற்று சுற்றுகிறோம் என்பதைக் கணக்கில் கொள்ள ஒரு ஆரம்பத்தை நிர்ணயிக்க வேண்டும். அந்த ஆரம்பம் மேட ராசியாகும். இதைக் குறிக்கும் தமிழ்ப் பாடலை புலிப்பாணி ஜோதிடத்தின் 22, 23 ஆவது பாடலிகளில் காணலாம்.

 

"சோதியென்ற குருபதியும் வெள்ளி நீலன்

     சொலிக்கின்ற கதிர்மதிசேய் கணக்கன்பாம்பு

ஆதியென்ற ராசிபனி ரெண்டுக்குள்ளே

     அடக்கிவைத்தார் கோள்களையும் ஆயன்தானும்

வாதியென்ற ஞானியும் பலவாறாக

     வையகத்தில் பூட்டிவைத்தார் வரிசையாக

சாதகமாய் சென்மனுக்கு சுட்டிக்காட்டி

     சமர்த்தாகப் பலன்சொல்லும் குறியைக்கேளே""

 

என்று 22 ஆம் பாடலில் ஆயனும் (ஆயர் குலத்தவரான இடைக்காடனார்) வாதி என்ற ஞானியும் (ஆதிநாதர் என்ற சித்தர் அல்லது சூரியனாக இருக்கலாம். பல ஜோதிட நூல்களும், சூரியனைக் குறித்து தவமிருந்து, உபதேசமாகப் பெற்று எழுதப்பட்டவையே) ஒன்பது கிரகங்களைப் பன்னிரண்டு ராசிகளில் அமைத்தனர், அவற்றை வரிசையாகக் கூறுகிறேன் என்று சொல்லி, அடுத்த பாடலில்,

"கேளப்பா மேடமதில் செனித்த பேர்க்கு" என மேட ராசி முதல் ஆரம்பிக்கிறார். இதையே "திண் நிலை மருப்பின் ஆடு தலையாக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து" என்று ஆட்டினைத் தலையாகவும், முதலாவதாகவும் கொண்டு, சூரியன் விண்ணில் ஊர்கிறது என்று நெடுநல் வாடை கூறுகிறது.

*அது மட்டுமல்ல, ஆண்டு என்னும் பொருளில் 'ஆட்டை வட்டம்' என்னும் சொல் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ஆட்டை முதலாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வட்டம் என்பதை இது குறிக்கிறது. இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வண்ணம், உக்கல் திருமால் கோயிலின் மேற்குப் புறச் சுவரில் காணப்படும் பொ.பி. 1014  ஆம் ஆண்டில் வெட்டப்பட்ட முதலாம் ராஜராஜன் கல்வெட்டில், "ராஜராஜன் கிணற்றுக்கும், தொட்டிக்கும் செதத்துக்கும் ஆட்டாண்டு தொறும் புதுக்குப்[புறமாக வெச்ச"  என்று எழுதப்பட்டதில் ஆட்டாண்டு தோறும் என்பது என்ன? அதன் பொருள் ஆண்டு தோறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஆண்டு தோறும் என்னாமல் ஆட்டாண்டு தோறும் என்று ஏன் சொல்லப்பட்டது? இடபத்தைக் கொண்டு மாட்டாண்டுதோறும் என்றா சொன்னார்கள்? ஆட்டினை முதலாகக் கொண்டு ஆரம்பிக்கவே ஆட்டாண்டு தோறும் என்றல்லவா சொல்லியிருக்கிறார்கள்? *

 

மேடமே முதல் ராசி என்பது ஜோதிட விதி. மேடத்துக்குத் தலை ராசி என்று பெயர். அதற்குக் காரணம்

(1) மேடத்தில் ஆரம்பித்து வரும் பன்னிரு ராசிகளையும் கால புருஷன் அல்லது விராட புருஷன் அல்லது விஸ்வ புருஷன் என்னும் பெயரில் ஒரு உருவமாக உருவகப்படுத்தியுள்ளார்கள். அந்த அமைப்பின் தலையில் மேடமும், முகத்தில் இடபமும், கழுத்து, தோள், மற்றும் கைகளில் மிதுனமும் என வரிசையாக உருவகித்து, மீனத்தைப் பாதம் என்று ஜோதிடத்தில் சொல்லியுள்ளார்கள். தை வரும் மகர ராசி தொடையாகும். தொடையில் ஆரம்பித்து ஒரு உருவத்தை அளக்க மாட்டோம், தலையில் ஆரம்பித்து அளப்பது மரபு. எண்ஜாண் உடலுக்கு சிரசே பிரதானம்

 

(2) ஒருவருக்கு வரும் நோய், பாதிக்கப்படும் உறுப்புகள் ஆகியவற்றைக் கண்டறிய இந்தக் கால புருஷன் காட்டும் உடல் உறுப்புகள் உதவுகின்றன. உதாரணமாக, சமீபத்தில் தலையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட தி.மு.. பிரமுகர் திரு ராமஜெயம் அவர்களது ஜாதகத்தில் அவரது இறப்பையும், பட்ட அடியையும் காட்டும் கோள்கள் மேட ராசியுடன் தொடர்பு கொண்டுள்ளதாக அமைந்திருக்கும்.

 

(3) மேடம் ஆரம்பிக்கும் அசுவினி நட்சத்திரத்துக்கு முதனாள் என்ற பெயர் மட்டுமல்ல, தலை எனப் பொருள்படும் சென்னி என்ற பெயரும்  உண்டு. இதைச் சொல்லும் சூடாமணி நிகண்டு சூத்திரம் 1-67 இதோ:-

"பரிமருத்துவநநாள் வாசி பரவுமைப்பசி யாழேறோ

டிரலையே முதனாள் சென்னியென்ப தச்சுவினியின் பேர்."

சென்னியில் பயணம் ஆரம்பிக்கும் மேடத்துக்குத் தலை ராசி என்ற பெயரும், அதில் வரும் சித்திரைக்குத் தலை மாதம் மற்றும் முதல் மாதம் என்ற பெயரும், ஜோதிட நாடிச் சுவடிப் பாடல்களில் காணப்படுகின்றன.

உங்கள் குழுவைப் பொறுத்தமட்டில், முதலாக என்று சொன்னால் குழுவில் உள்ள அனைவருக்குமே அது பொருந்தும் என்கிறீர்கள். அப்படிச் சொல்லவில்லையென்றால் உங்களுக்குள் தகராறு ஏற்படும் போலும். ராசிகளுக்குள் அப்படிப்பட்ட தகராறு கிடையாது. அவற்றில் முதல் என்றால் மேடம் தான், சித்திரைதான், கடை என்றால் மீனம் தான், பங்குனிதான்.

இதைக் காட்டும் ஒரு பாடல், கரிநாளைப் பற்றிக் கூறுகையில் கொடுக்கப்பட்டுள்ளது

 

"இன்பமுறு மேடமதிலாறு பதினைந்தாம்" எனத்தொடங்கும் இந்தப் பாடலில் சித்திரை தொடங்கி ஒவ்வொரு மாதப்பெயரையும், மேடம், ஏறு, ஆனி, ஆடி, ஆவணி, கன்னி, துலை, தேள், முனி, கலை, மாசி என்று 11 மாதங்களுக்குச் சொல்லி விட்டு, பங்குனிக்குப் பெயரேதும் சொல்லாமல் 'கடை மாதம்' என்று சொல்லப்பட்டுள்ளது, அகத்தியரால் தரப்பட்ட கரிநாள் கணக்கு என்று சொல்லும் இப்பாடலின் கடை வரிகளைக் காண்போம்.

 

"துதிபெறு மாசி பதினைந்து பதினாறும்

      சொல்லு பதினேழு கடைமாத மதிலாறும்   

பதினைந்து மொன்றொழியைந் நான்குமிகுதீ தாம்

        பகர்ந்தமாதந் தோறுந்தெய் தியெனக் கொண்டு

கதிதரு நற்பொதியை வரைமுனிவ ரைந்திட்ட

        கரிநாண் முப்பா நான்குங் கண்டறிகுவீரே."

(ஆதாரம்: "சித்தர்களின் ஜோதிட வருஷாதி நூல்" பக்கம் 155)

 

கடை மாதம் பங்குனி என்றால், சித்திரையே முதல் மாதம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. கரிநாள் என்பது தமிழ் ஜோதிடத்தில் மட்டுமே உள்ளது. அதைக் கணித்தவர் அகத்தியர், அதைச் சொல்லும் பாடலில் பங்குனி மாதத்தைக் கடை மாதம் என்று சொல்லியுள்ளதால், சித்திரையில் ஆரம்பிக்கும் வருடம் தமிழ் சமுதாயத்துக்கே உரியது என்பது புலனாகிறது.

 

உங்கள் கருத்து:- நெடுநல்வாடையில் முதல் ராசியாக மேட ராசிதான் குறிக்கப்பட்டதா என்று தெளிவாக இல்லை.

 

பதில்:- ராசி அல்ல, அங்கு வருடத்தையே காட்டியுள்ளார் நக்கீரனார் என்றே சொல்லவேண்டும். அந்தப் பாடலில் தலைவியானவள், தலைவனை எப்பொழுது காண்போம் என்ற பிரிவுத் துயரில் ஆழ்ந்திருக்கிறாள். அவள் படுத்திருக்கும் கட்டிலின் விதானத்தில் சித்திரம் எழுதப்பட்டிருந்தது. அந்தச் சித்திரத்தில் சந்திரனோடு நிலைபெற்ற உரோஹிணியைக் கண்டு வாடும் அவள் நிலையைச் சொல்வதற்கு முன் ஆடுதலையாகச் கொண்டு செல்லும் சூரியனை ஏன் நினைவு கூற வேண்டும்? சூரியனிலிருந்து வேறுபட்ட இயல்பைக் (குளுமை என்னும் இயல்பு) கொண்ட சந்திரன் என்று வெறுமனே கூறாமல், ஆட்டினைத் தலையாகக் கொண்ட விண்ணில் சூரியன் ஊர்ந்து செல்லும் பாங்கினைக் கொண்ட மண்டிலம் என்று ஏன் சொல்ல வேண்டும்? சூரியனது ஊர்தலில் மாதங்கள் கடந்து செல்வதை அவள் காணும் வண்ணம் அந்த திரைச் சீலையை அமைத்து, தலைவன் வரும் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறாள் என்பதைத்தானே அது காட்டுகிறது?

 

உங்கள் கருத்து:- 11 ஆம் பரிபாடலில் 'எரிசடை எழில் வேழம்" மற்றும் தெருக்கள் குறித்த கருத்துகள்.

 

பதில்:- அந்தப் பாடல் சொல்லும் அமைப்பு ஜோதிட அமைப்பாகும். அது என்னவென்று அறியாமல் உங்கள் மனம் போன போக்கில் பொருள் சொன்னது மட்டுமல்லாமல், அதற்கு உரை எழுதிய சோமசுந்தரனார் சொல்லாத்தையும் அவர் சொன்னதாக எழுதியிருப்பதிலிருந்து, மூலத் தரவுகளை மட்டுமல்ல, உரைகளையும் நீங்கள் சரிவர படிப்பதில்லை என்று தெரிகிறது.

 

கார்த்திகையை உடைய இடப ராசி என்றும், திருவாதிரையை உடைய மிதுன ராசி என்றும், பரணியை உடைய மேட ராசி என்றும் சோமசுந்தரனார் எழுதியிருப்பதை, கார்த்திகைக்குரிய இடப வீதி என்றும், திருவாதிரைக்குரிய மிதுன வீதி என்றும், பரணிக்குரிய மேட வீதி என்றும் எழுதியிருக்கிறீர்களே, இவை இரண்டுக்கும் பொருள் வேறுபாடு உண்டு என்று தெரிகிறதா?

 

ராசி வேறு, வீதி வேறு. ராசிகள் பன்னிரண்டு, ஆனால் வீதிகள் மூன்று.

 

சித்திரையில் பயணத்தைத் தொடங்கும் சூரியன் மூன்று வீதிகளில் செல்கிறான். அவை மேடவீதி, இடபவீதி, மிதுனவீதி என்பவை. வைகாசி முதல் ஆவணி மாதம் வரை மேடவீதி என்றும், கார்த்திகை முதல் மாசி வரை மிதுன வீதி என்றும், மீதியுள்ள பங்குனி, சித்திரை, புரட்டாசி, ஐப்பசி ஆகிய மாதங்களை இடப வீதி என்றும் கூறுவார்கள். இதைப் பின்வருமாறு காட்டலாம்.

 

 

இதையே பலரும் அறிந்த ஜோதிடக் கட்டம் வாயிலாகப் பின் வருமாறு காட்டலாம்.

 

இந்தப் படத்தில், சூரியன், வைகாசி துவங்கி பூமத்திய ரேகைக்கு  வட பாகத்தில் அதாவது நாம் இருக்கும் பகுதியில் செல்லும், (இடபம் முதல் சிம்மம் வரை) அப்பொழுது பகல் பொழுது வளர்ந்து வரும். இதனால் அதற்கு உத்தர வீதி என்றும், வடக்கு வீதி என்றும் பெயர். வட பகுதியில் இருக்கும் நமக்கு இந்தக் காலம்தான் முக்கியமானது என்பதால், ராசி மண்டலத்தின் முதல் பெயரான மேடத்தை இதற்கிட்டு மேடவீதி என்று அழைத்தார்கள். இங்கு வீதிகளைக் கணக்கில் எடுக்கிகிறார்களே தவிர, ராசிகளை அல்ல. முதலாவது என்றாலே அது மேடத்தில் ஆரம்பிக்கும், முதல் வீதி மேட வீதி ஆகும்..

சூரியன் மிதுன வீதியில் செல்லும் போது நமக்கு இரவுப் பொழுது வளரும். பகம் பொழுது குறையும், (விருச்சிகம் முதல் கும்பம் வரை) அது சூரியனின் தென் பகுதிப் பயணமாதலால், அதற்குத் தட்சிண வீதி அல்லது தெற்கு வீதி என்று பெயர். இது மூன்றாம் வீதியாதலால், ராசி மண்டலத்தின் மூன்றாவது ராசிப் பெயரான மிதுனத்தின் பெயரால் இதை அழைத்தார்கள்.

 

இவை இரண்டுக்கும் இடைப்பட்ட வீதியில், மேட வீதியைத் தாண்டியவுடன் சூரியன் பயணிக்கும் இடத்தை, இரண்டாவது வீதியாகக் கருதி, இரண்டாவது ராசியின் பெயரை அதற்குச் சூட்டினார்கள். (இடப வீதி = கன்னி, துலாம்). அது போல மிதுன வீதியைத் தாண்டியவுடன் இடப வீதி வரும் (மீனம், மேடம்). சூரியன் இடப வீதியில் செல்லும் போது, நமக்குப் பகலும், இரவும் சமப்படும். இதனால் இதற்கு மத்திய வீதி அல்லது நடு வீதி என்ற பெயருண்டு.

இந்தச் சொல்லாடல் பாரதம் முழுவதும் இருந்திருக்கிறது. ராமாயணத்தில் சேதுப் பாலம் கட்டியவுடன் அதை வருணிக்கும் வால்மீகியார், மேலிலிருந்து பார்ப்பதற்கு அந்தப் பாலம் சூரியன் செல்லும் மத்திய வீதியைப் போல இருக்கிறது என்கிறார். வடக்கு, தெற்கு வீதிகளை இரண்டாகப் பிரிக்கும் நடுவீதியைப் போல கடலை இரண்டாகப் பிரிப்பதால் இவ்வாறு சொல்வதாக அவர் எழுதியுள்ளார்

 

மேலே காட்டியுள்ள படங்களிலும், நடு வீதியின் அந்த அமைப்பைக் காணலாம். பரிபாடலிலும், புலவர் மேட வீதியிலிருந்துதான் ஆரம்பிக்கிறார். ஆனால் உங்கள் உரையாசிரியர்தான் வரிசையை மாற்றி விட்டார்.

 

புலவர் சொல்வது என்ன? 'எரி சடை எழில் வேழம்'

எரி என்னும் கார்த்திகை இருக்கும் இடப ராசி = இது மேட வீதி..

சடை என்னும் திருவாதிரை இருக்கும் மிதுன ராசி = இது மிதுன வீதி.

வேழம் என்னும் பரணி இருக்கும் மேட ராசி, = இது இடப வீதி என்கிறார்.

 

அதாவது வடக்கு வீதி, தெற்கு வீதி, நடு வீதி என்ற கணக்கில் புலவர் கொடுத்துள்ளார். எரி என்னும் கார்த்திகையைச் சொல்லி இடபத்தைக் காட்டினாலும், அவர் அது இருக்கும் மேட வீதியைத்தான் உண்மையில் சுட்டுகிறார். கோள்களைச் சொல்ல ஆரம்பிக்கும் போது, முதலில் மேட வீதியில் இருக்கும் கோளைச் சொல்லி விட்டி, பிறகு கோள்களின் வரிசைப்படி சொல்கிறார் என்பதையும் கவனிக்கவும்.

 

உங்கள் கருத்து:- பௌர்ணமி எந்தெந்த  நட்சத்திரங்களில் வருகின்றன  என்று விளக்குகையில், மார்கழி மாதத்தில் மிருக சீரிஷ நட்சத்திரத்தில் வரும் என்று நான் எழுதியதற்கு, இந்த வருடம் அவ்வாறு வரவில்லை,, மாறாக, பௌர்ணமி அன்று (08-01-2012) அதிகாலை 5.45 வரை திருவாதிரையும், அதற்குப் பிறகு புனர் பூசமும், பிறகு கொஞ்சம் பூசமும் வந்தன என்று ஒரு இணைப்பைக் காட்டியுள்ளீர்கள்.

 

பதில்:- நான் சொன்னதைத் தவறு என்று நிரூபிக்க வேண்டும் என்றால் பிற வருடங்களில் வரும் மார்கழிப் பௌர்ணமியையும் சரிபார்த்து விட்டுத்தானே சொல்ல வேண்டும்? நீங்கள் பார்த்த நாள் காட்டி காலண்டரையாவது கவனமாகப் பார்த்திருக்கலாமே? 2012 லேயே இரண்டு மார்கழிப் பௌர்ணமிகள் வந்தனவா என்றாவது சரி பார்த்திருக்கலாமே? இந்த வருடம் ஜனவரியிலும் மார்கழிப் பௌர்ணமி வந்தது. டிசம்பர் 27 ஆம் தேதியும் மார்கழிப் பௌர்ணமி வரப்போகிறது. அதுவும் மிருகசீரிஷத்தில் வரப்போகிறது. டிகிரி சுத்தமாகச் சொல்ல வேண்டுமென்றால், மிருக சீரிஷம் 5 பாகை, 36 கலை, 12.33 விகலையில் சென்னை நேரம் மதியம் 1-27 க்குப் பௌர்ணமி ஆரம்பிக்கிறது.

 

ஏன் சென்னை நேரம் என்று குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், நீங்கள் நாள்காட்டியில் காணும் நேரம், அவ்வளவு ஏன் உங்கள் கைக்கடிகாரத்தில் காணும் நேரம் கூட உண்மையான நேரமல்ல. இந்தியாவின் பொது மணி என்பது அலஹாபாத் இருக்கும் தீர்க்க ரேகையில் வாழ்பவர்களுக்கு மட்டுமே சரியான மணி. மற்ற இடத்தில் இருப்பவர்கள், நேரக் குழப்பத்தைத் தவிர்க்க அதையே பயன்படுத்துகிறோம். ஆனால் ஜோதிடத்தில் மட்டுமே ஒருவர் இருக்கும் இடத்தின் சரியான நேரத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதை உங்களுக்குக் காட்டவே இதை எழுதினேன்.

 

தமிழ் ஹிந்து கட்டுரையின் மறுமொழியிலேயே பௌர்ணமி காணும் நட்சத்திரத்தில் ஏன் வேறுபாடுகள் வருகின்றன என்று விளக்கியுள்ளேன். மேலும் விளக்க வேண்டுமென்றால் சில அடிப்படைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

விண்வெளியில் ஒரு பாகையில் சூரியனும், சந்திரனும் ஓரிடத்தில் சந்தித்த பிறகு அதே பாகையில் 5 வருடங்களுக்குப் பிறகுதான் மீண்டும் சந்தித்துக் கொள்கின்றன. சூரியனது வேகமும், சந்திரனது வேகமும் மாறுபடவே இப்படி ஆகிறது. ஒரு பாகையில் ஆரம்பித்து, ஒரு சுற்று முடித்து அதே பாகையில் சூரியன் வருவதற்கு 365.25 நாட்கள் ஆகின்றன. இது ஒரு சூரிய வருடம். ஆனால் அதற்குள் சந்திரன் 12 சுற்றுகளை முடித்து விடும். 365.25 நாட்களில் சூரியன் முடிக்கும் தூரத்தை (360 பாகைகள்), சந்திரன் 354 நாட்களுக்குள் 12 சுற்றுகளில் முடித்து விடும். அதாவது 11. 25 நாட்கள் முன்னதாகவே முடித்து விடும். இப்படியே தொடர்வதால், 2-1/2 வருடங்களில் சந்திரன் 28. 15 நாட்கள் அதாவது ஏறத்தாழ ஒரு சந்திர மாதத்தை அதிகப்படியாக முடித்திருக்கும். இதனால் 13 சந்திர மாதங்கள் என்றாகி விடும்.

 

இந்த 13 ஆவது மாதத்தைத் திருத்தம் செய்யவில்லையென்றால் கணக்கில்லாமல் போய்க் கொண்டே இருக்கும், அதனால் அதிகப்படியான மாதம் வரும் போது அதை அதிக மாதம் என்று கணக்கில் சேர்க்க மாட்டார்கள். அதற்கடுத்த மாதமே 'நிஜ மாதம்' என்று கணக்கிடப்பட்டு 12 மாதக் கணக்காகக் கொண்டு வருவார்கள். இதற்கிடையே ஒவ்வொரு வருடமும், சந்திரன் 11 நாட்கள் முன்னதாகவே புதுச் சுற்றை ஆரம்பித்து விடுவதால், முதல் சுற்றில் பௌர்ணமி ஏற்பட்ட நட்சத்திரங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அடுத்த நட்சத்திரங்களில் பௌர்ணமி ஏற்படும். அப்படி ஏற்பட்டவையே நீங்கள் சுட்டிக்காட்டியவை. இப்படிக் கணக்கிடுகையில் இந்த வருடம் சந்திரனது 13 ஆவது மாதம் பாத்ரபதம் என்னும் புரட்டாசியில் வருகிறது. அதாவது தமிழ் நாட்டில் ஆவணி நடக்கும்போதே, சந்திர வருடப் புரட்டாசி வந்து விடுகிறது. இந்த வருடம் ஆகஸ்டு 18 முதல், செப்டம்பர் 16 வரை இந்த அதிக மாதம் வருகிறது. அதைக் கழித்த பிறகு, மாதப் பெயரில் வரும் நட்சத்திரங்களில் பௌர்ணமி வர ஆரம்பிக்கும், வரப்போகும் மார்க்கழிப் பௌர்ணமி, மிருகசீரிஷத்தில் வருவது அவ்வாறே.

 

இந்த மாதப் பெயர்கள், ஒரே பாகையில் சூரியனும், சந்திரனும் ஒருங்கிணைந்து ஆரம்பிக்கும் போது மாதாமாதம் பௌர்ணமி ஏற்படும் நட்சத்திரப் பெயர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை.. அப்படி ஆரம்பிக்கும் பாகை, மேடம் பூஜ்ஜியம் பாகை என்பதால், மாதங்களின் ஆரம்பம் மேடமேயாகும். அதாவது நீங்கள் சித்திரை என்றாலும், தை என்றாலும் அந்தப் பெயர்கள் உருவாகக் காரணமான பௌர்ணமி காணும் நட்சத்திரங்கள், மேட ராசி பூஜ்ஜியம் பாகையில் சூரியனும், சந்திரனும் சந்திக்கும் காலத்தின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

 

உங்கள் கருத்து:- '12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது பழைய இடத்திற்கு வருகிற குரு' என்று திரு எஸ் ராமசந்திரன் அவர்கள் சொன்னதற்கும், 'வியாழன் கிரகத்தின் 60 வருட சுழற்சி; என்று நான் சொன்னதற்கும் ஏனிந்த முரண்பாடுகள் என்று கேட்டிருக்கிறீர்கள்.

 

பதில்:- இரண்டுக்கும் ஒரே அர்த்தமா? சொல்லுங்கள். "60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சி முறை வியாழ வட்டம்' என்று அவர் சொன்னதையும் உங்கள் கட்டுரையின் முன் பகுதியில் மேற்கோளிட்டதையும் கவனத்தில் கொள்ளாது நீங்கள் இப்படி எழுதியிருப்பது, ஏதோ குறை கூற வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.

 

உங்கள் கருத்து:- சரியான நேரத்தில் மழை வந்துள்ளதா என்று சொல்லிவிட்டுத்தான் புலவர் பாவை நோன்பைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறார் என்று நான் சொன்னதைத் தற்குறிப்பேற்றம் என்கிறீர்கள்.

 

பதில்:- "விரிகதிர் வேனில் எதிர்வரவு மாரி இயைகென இவ்வாற்றால் புரைகெழு சையம் பொழி மழை தாழ ' என்று அந்தக் கோள் அமைப்பினால் மழை பொழியும் என்பது இயல்பு என்று சொல்லியுள்ளார் புலவர். உங்களது உரையாசிரியரான சோமசுந்தரனாரும், "மழை பெய்க என்ற இவ்விதி வழியாலே" மழை பெய்த்தது என்கிறார் என்பதைப் படிக்கவும்.

 

உங்கள் கருத்து:- அகத்தியன் சூரிய உதயத்துக்கு முன் எழுவெதெல்லாம் இப்பாடலில் இல்லவே இல்லை என்று சொல்லி, HELIACAL RISING  என்பதன் பொருளைத் தேடி எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள்.

 

பதில்:- இந்தக் கருத்தைப் படிக்கப் பரிதாபமாக இருக்கிறது. இவ்வாறு சொல்கிறேனே என்று தவறாக நினைக்காதீர்கள். ரகசியத்தைப் பூட்டி வைத்தாற் போல, நல்லந்துவனார் சொன்ன அருமையான விவரங்கள் இந்தப் பாடலில் இருக்கின்றன என்பது கூட தெரியாமல் இருக்கிறீர்கள் என்பதால் இப்படிச் சொன்னேன். 1940 களிலேயே இந்தப் பாடலில் பூட்டி வைக்கப்பட்டிருக்கிற விண்வெளி ரகசியங்களை வானவியல் அறிந்த ஜோதிடர்கள் தமிழர்கள் அல்லாத பிற மொழி பேசுவோர் - ஆராய்ந்து விட்டனர். தமிழை முழுதும் தெரியாததால் அவர்களால் சரிவரச் சொல்ல முடியவில்லை.

 

இந்தப் பாடலில் உள்ள ரகசியம், இது விடியலுக்குச் சற்று முன் இருந்த விண்கோள் அமைப்பாகும். விடிந்த பிறகு சூரிய கிரகணம் வந்திருக்கிறது. விடிவானம் வெளுப்பதற்கு முன் அகத்திய நட்சத்திரம் உதயமாகி இருக்கிறது. விடியலுக்கு முன் அகத்திய நட்சத்திரம் தெரிய ஆரம்பிக்கும் இடங்களிலெல்லாம் தென் மேற்குப் பருவ மழை ஆரம்பிக்கும். இன்றைய கேரளாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆரம்பிக்கும் இந்த மழை, படிப்படியாக வடக்கு நோக்கி நகரும். ஆவணி பிறந்த பிறகு, தமிழகத்திலிருந்து ஆரம்பித்து, படிப்படியாக வடக்கில் இருப்பவர்களுக்கும் அகஸ்திய நட்சத்திரம் விடியலுக்கு முன் உதயமாகும். இதைப் பற்றிய தனி அத்தியாயத்தையே வராஹமிஹிர்ர், பிருஹத் சம்ஹிதையில் எழுதியுள்ளார். விவரங்களுக்கு எனது கட்டுரையை இங்கே படிக்கலாம் :- http://thamizhan-thiravidana.blogspot.in/2011/09/72.html

 

உங்கள் கருத்து:- மழை பற்றிய காரணிகளைப் பற்றி நான் எழுதியதற்குச் சிரபுஞ்யையையும், கவுஹாத்தியையும் காட்டி சான்றுகள் மறுத்திருக்கிறீர்கள்.

 

பதில்:- இது அடுத்த பரிதாபம். மழை வருகையைக் குறிக்கும் பல காரணிகளையும், தமிழ் மக்கள் அறிந்திருந்தனர் என்பதை நீங்கள் அறியவில்லை. இடத்துக்கிடம் வானிலை மாறுகிறது. நான் எழுதியுள்ள 3 வித காரணிகள் எந்நேரமும் மாறிக் கொண்டிருக்கின்றன. அவை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே இடத்திலும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவற்றை நன்கு கவனித்தே மழை வரவைத் தெரிந்து கொண்டு பயிர்த் தொழில் செய்தனர். அந்தக் காரணிகளது விவரத்தை தமிழ் ஹிந்துவில் நான் எழுதிய பாவை நோன்பைப் பற்றிய கட்டுரையில் காணலாம்.

http://www.tamilhindu.com/2010/01/paavai-nonbu-and-thai-neeraadal/ 

 

பாவை நோன்பினால் ஏற்படும் பலனாக, 'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும்" என்று  ஆண்டாள் சொன்னதையும், திருப்பாவையின் 3,4 ஆவது பாடல்களையும் ஆராயவும். அந்தக் காரணிகளை அறிந்தால் நீங்கள் சிரபுஞ்சிக்குப் போக வேண்டாம், சென்ற வருடம் தானே புயல் ஏன், கடலூரைத் தாக்கியது என்பதற்கும் விளக்கம் கிடைக்கும்.

 

தமிழ்ப் பாடல்களையே எடுத்துக் கொண்டால், "மாரனைக் கடிந்தோன்' என்று துவங்கும் பாடலில் எத்தனை மரக்கால் மழை பொழியும் என்பதையும், "தூரத்திற் சோதி" என்னும் பாடல் மூலம் மழை வரவைப் பற்றியும், ஆடிக் குறி, ஆடி மாத உத்திராடக் காற்று, ஆடித் திதிக் குறி, ஆவணி முழக்கம், ஆவணி மூலம், இந்திர தனுசு, வானவில் குறி, செக்கர் மேகக்குறி, ஜோதி மின்னல், மாதந்தோறும் மழைக்குறி, தேதி மழை, மகவோட்டம், கர்ப்போட்டம், காற்றுக் குறி, மேக பலன் போன்ற பல வகையான மழை பெய்யும் காரணிகளையும் சொல்லும் சித்தர் பாடல்கள் உள்ளன.

 

காளமேகப் புலவரை அறிவீர்கள். அந்தப் பெயருக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? காளமேகம் என்றால் பலமாக வீசும் காற்றுடன் மழை பெய்யும் என்று பொருள். மொத்தம் ஒன்பது மேகங்கள் இருக்கின்றன. தமோ மேகம், வாயு மேகம், வாருண மேகம், நீல மேகம், காளமேகம், துரோண மேகம், புஷ்கல மேகம், சங்க வர்த்த மேகம், ஆவர்த்த மேகம் என்னும் ஒன்பது மேகங்கள் வரிசையாக ஒவ்வொரு வருடமும் வரும். அவற்றின் தொடக்க ஆண்டை கலியுக, சாலிவாகன சகாப்தத்தைக் கொண்டே கணிக்க வேண்டும் என்று சொல்லும் பாடல் சித்தர் சுவடிகளில் உள்ளது.

 

அந்தப் பாடல்:-

 

"கலிசகாத்தாண்டை யெட்டாற் பெருக்கியே

  கழிப்பதொன்பதி லொன்று றிலாவர்த்த

மிலகும்புன்மழை யேசங்க வர்த்தமு

  மெய்துங்காற்றுப் பிரளயப் புட்கலந்

துலைதுரோணவெள் ளங்காள மேகமே

  துளிவளிநீலன் வஞ்சகத் தோயனா

மலையினுநெல் விளையும் வருணனே

  வாயுத்தீது தமோ வெகுமாரியே."

 

இன்ன பிற விவரங்களை ஒரு புத்தகமாகவே போடலாம். குஜராத் வேளாண் பல்கலைக் கழகத்தினர் அதில் இறங்கி விட்டனர். கோள்களும், நட்சத்திரங்களும் மழைக்குக் காரணிகளாகும் என அவர்கள் 'நட்சத்திர சரண்" என்னும் பதிப்பை விவசாயிகளுக்கு அளிக்கின்றனர். விவரங்களுக்கு:-  http://www.littleindia.com/life/6904-i-heard-the-crows-call-for-rain.html

 

உங்கள் கருத்து:- ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் குறித்த விவரங்களை மறுத்து, அது ஆடல்ல, யாடு என்றும், வெற்றி பெற்றதை அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

 

பதில்:- மூலப்பாடல் அவ்வாறு சொல்லவில்லை, வருடை என்றும் ஆடு என்றும் சொல்லி அவற்றைப் பார்ப்பனர் வசம் ஒப்படைத்தான் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த விவரமும், பதிகத்தில் மட்டும் தான் உள்ளது. பிற பாடல்களில் இல்லை என்கிறீர்கள். ஆனால் ஒரு பாடலிலும் சொல்லப்படாத தை என்னும் புத்தாண்டை ஏற்றுக் கொள்ள உங்களால் முடியும் என்பது வியப்பாக இருக்கிறது.

 

இந்த வருடையைப் பற்றி ஆராய்ந்தால், எத்தனை விவரங்கள் கிடைக்கின்றன தெரியுமா? அவற்றைப் பற்றியும், இது வரை சொன்ன பதில்களது விரிவான விளக்கங்களையும், உங்களது கட்டுரையில் உள்ள பல விவரங்களை மறுத்தும் ஒரு நீண்ட மறு மொழியை, இந்த மறுமொழியை அடுத்து அனுப்பியுள்ளேன். பிரசுரித்தால் தமிழ் அறிந்த மக்கள் பயனுறுவர்.

 

இப்படிக்கு,

ஜெயஸ்ரீ சாரநாதன்.


*இக்குறியிட்ட பகுதி இந்தக் கட்டுரையில் சேர்க்கப்பட்டது. வரலாறு டாட் காமுக்கு அனுப்பிய மறுமொழியில் இடம் பெறவில்லை.

 

 

 

2 comments:

Ranganathan N R said...

அன்புடையீர்,
மிகவும் நன்றி. பல விஷயங்களைத் தெறிந்துகொண்டேன். தாங்களுடன் எப்படி தொடர்புகொள்வது. என்னுடைய மொபைல் 9380288980.
ஆவலுடன்,
என்.ஆர். ரங்கனாதன்.
தபோவனம்.

jayasree said...

திரு ரங்கநாதன் அவர்களே,

நன்றி. நேரமின்மை காரணமாக, தொடர்பு எண், முகவரி ஆகியவற்றைக் கொடுப்பதில்லை. பொதுவில் பேசக்கூடிய விவரங்களாக இருப்பின், இந்த வலைத் தளத்திலேயே எழுதவும். தெரிந்த அளவுக்கு பதில் எழுதுகிறேன்.