Friday, June 29, 2012

டேனியல் செல்வராஜின் ஆண்டாள் கதை மறு -வாசிப்புக்கு எனது எதிர் வினை

ஆண்டாள் நோன்பும், அடாவடிக் கதையும்.

குரங்கின் கையில் கிடைத்த பூமாலையைப் போல காமுகன் கையில் கிடைத்த பாமாலையும் சின்னாபின்னமாகி விடும். அதுதான் ஆண்டாளது உயரிய பாடல் ஒன்றுக்கு நிகழந்திருக்கிறது. பாவை நோன்பை முடித்த கையோடு, அனங்கனைத் தொழுது வேண்டிக் கொண்ட ஆண்டாள்நாச்சியார் திருமொழியின் முதல் பத்தின் எட்டாவது பாசுரத்தில் "மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே" என்று, மனிதனை மணம் புரிய மாட்டேன், மணந்தால் பார்க்கடல் வண்ணனான பரந்தாமனைத்தான் மணம் புரிவேன் என்று சொன்னாலும் சொன்னாள், முற்போக்கு எழுத்தாளர் ஒருவருக்கு சிந்தனைக் கடல் பொங்கி விட்டது. ஆண்டாள் ஏன் அப்படி எழுதினாள் என்று ஆராய்ந்தார். அந்த ஆராய்ச்சிக்கு எந்த ஆதாரத்தையோ அல்லது சரித்திரச் சான்றுகளையோ அவர் தேடவில்லை. மாறாக, காமக் கண்ணோட்டத்தில் ஒரு கதையைப் பின்னினார். அதை ஆண்டாள் கதையின் மறு வாசிப்பு என்றும் சொல்லிக் கொண்டார். அந்த வாசிப்பைப் பல்கலைக் கழக மாணவர்களுக்கான பாடப்புத்தகத்திலும் வைத்து விட்டார்கள். இதுவே தற்கால மக்களது தரம்!


நோன்பு என்னும் தலைப்பில் இடம்பெற்ற அந்தச் சிறுகதை மனோன்மணியம் சுந்தரனார் கல்லூரி மாணவர்களுக்கான பாடமாக தமிழ்ப் பாடத் திட்டத்தில் நுழைக்கப்பட்டுள்ளது. நோன்பு என்றாலே எந்தத் தமிழ் ஆர்வலருக்கும் பாவை நோன்புதான் நினைவுக்கு வரும். சங்க கால வழக்கமான அந்த நோன்பைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. ஆனால் அதைப் பற்றி நமக்கு ஒரளவேனும் தெரிய வருகிறது என்றால் அதற்கு ஆண்டாள்தான் காரணம். இறைவனுக்குகந்த பூமாலை சூடிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவள் தொடுத்த பாமாலையின் மூலமாகவும் நோன்பைப்பற்றியும், எப்படி நோன்பிருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் மக்குச் சொல்லியிருக்கிறாள். "நோக்கின்ற நோன்பினைக் குறிக் கொள் கண்டாய்" என்று ஆண்டாள் சொல்லிவிட்டதால் அதிலிருந்து 'நோன்பு" என்ற தலைப்பை அந்தக் கதாசிரியர் குறித்துக் கொண்டார். ஆனால் அந்த நோன்பை அவள் ஏன் மேற்கொண்டாள் என்று அவள் மீண்டும் மீண்டும் சொல்வதை மட்டும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் அவர் பெயரிலும், அவர் பின்பற்றும் கொள்கையிலும் இருக்கிறது.


அவரது பெயர் டேனியல் செல்வராஜ். பழைய தமிழ் இலக்கியங்களை முற்போக்குச் சிந்தனையுடனும், தற்காலத்துக்கு ஏற்றவாறும் எழுதி மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்னும் கொள்கை உடைய கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தத்தைப் பின்பற்றுபவர் என்று Frontline கட்டுரை கூறுகிறது. (http://www.hindu.com/fline/fl2416/stories/20070824506012000.htm ). அந்தக் கொள்கையை அவர் சார்ந்திருக்கும் சமயக் கதைகளில் வைத்துக் கொள்ளட்டும். எந்த இலக்கியத்தில் பொருந்துமோ, அதில் முற்போக்கைப் புகுத்திக் கொள்ளட்டும். ஆனால் பூமாதேவியே உருவெடுத்துப் பிறந்தாள் என்று கருதப்படும் ஆண்டாளை தாசிக்குப் பிறந்தவள் என்றும், திருவரங்கப் பெருமானுக்கே மாமனாரான பெரியாழ்வார், கோவிலுக்கு வந்த அப்சரஸ் போன்ற பெண்களைப் பார்த்ததால் எழுந்த உள்ளத்து அரிப்பையும், உடல் தினவையும் தணித்துக் கொள்ள தாசி வீட்டுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தவர் என்றும் எழுதுவதா முற்போக்குச் சிந்தனை?


தெய்வத்தின் மீது கொண்ட காதலால் மனிதனை மணக்க ஆண்டாள் விரும்பவில்லை. ஆனால் இந்த முற்போக்குக் கதாசிரியருக்கு இதெல்லாம் புரியாத விஷயம். ஆண்டாளுக்கு ஏதோ நெருக்கடி ஏற்பட்டது, அதிலிருந்து தப்பிக்க மனிதனை மணக்க மாட்டேன் என்று சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக அவர் புனைகிறார். இந்தப் புனைதலுக்குப் பின்னணியில் காமத்தைத் தவிர வேறு எதையும் யோசிக்க அவருக்குத்  தெரியவில்லை. கற்பனைச் சூழ்நிலைகளைப் புனைவதற்கு எந்தக் கதாசிரியனுக்கும் உரிமை உண்டு. ஆனால் அவற்றை அவர் கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு புனைந்திருந்தால் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. ஆனால் உண்மையில் வாழ்ந்து, உன்னத பிறவிகளாக இருந்து, இன்றும் கொண்டாடப்பட்டு வரும்  பெரியாழ்வார், ஆண்டாள் போன்றவர்களது வரலாற்றைத் திரித்து, காமக் கண்ணோட்டத்தில்  எழுதுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதா?


அதிலும் இந்த இருவரது வாழ்க்கைக் குறிப்புகள் ஏறத்தாழ பத்து மூலங்களில் இருக்கின்றன. அவையாவன:-
(1) இவர்கள் இருவருமே தங்கள் பாசுரங்களில் காட்டுயுள்ள அகச் சான்றுகள்.
(2) 1000 வருடங்களுக்கு முன்பே ராமானுஜர் காலத்தில் கருடவாஹன பண்டிதர் என்பவரால் வடமொழியில் இயற்றப்பட்ட "திவ்யசூரி சரிதம்"
(3) பின்பழகாரம் பெருமாள் ஜீயர் எழுதிய 'குரு பரம்பரா பிரபாவம்"
(4) மணவாள மாமுனிகள் இயர்றிய 'உபதேச ரத்ன மாலை'
(5) வேதாந்த தேசிகர் எழுதிய "தேசிகப் பிரபந்தம்"
(6) மூவாயிரப்படி "குரு பரம்பரா பிரபாவம்"
(7) வடமொழியில் இயற்றப்பட்ட "பிரபந்நாம்ருதம்"
(8) கந்தாடையப்பன் எழுதிய "பெரிய திருமுடியடைவு"
(9) திருவரங்கம் பெரிய கோவில் வரலாறு கூறும் "கோயிலொழுகு"
(10) பல ஆசாரியர்கள் வழங்கிய தனியன்கள், வாழித் திருநாமங்கள்.

பெரியாழ்வாரும், ஆண்டாளும் வாழ்ந்த வாழ்க்கையை விவரிக்க, இத்தனை ஆதார நூல்கள் இருக்க, அவற்றையெல்லாம் ஒதுக்கி, அவை எதிலும் சொல்லப்படாத, யாராலும், கனவிலும் கூட நினைக்க முடியாத பாத்திரப்படைப்பாக செல்வராஜ் அவர்கள் எழுதியிருக்கிறாரே, என்ன காரணம்? இந்து மத துவேஷமா? ஆண்டாள் சரித்திரத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே அவள்பால் மக்கள் ஈர்க்கப்படுவதால், அதைக் கெடுக்க வேண்டும் என்று வேண்டுமென்றே செய்யப்படும் மத மாற்ற மூளைச் சலவை முயற்சியா? அல்லது அவரது மன அழுக்கின் வெளிப்பாடா?  அப்படி எழுதியதன் மூலம் பெரியாழ்வாரையும், ஆண்டாளையும் மட்டும் செல்வராஜ் இழிவுபடுத்தவில்லை. 'பார் முழுதாண்ட பஞ்சவர் குலமுதல்'வனான 'சீர் கெழு செங்கோல் சீவல்லபன்' (சித்தன்ன வாயில் கல்வெட்டு) என்னும் பாண்டிய அரசனையும் இழிவு படுத்தியுள்ளார். தமிழர் கலாசாரத்தையும் கேவலப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்ல, தமிழ் ஒரு காட்டுமிரண்டி மொழி என்று பெரியார் சொன்னதையும் உண்மை என்றே நிரூபித்துள்ளார்.


ஆம், பெரியார் வழித் தோன்றல் இவர் என்று சொல்லும் வண்ணம் எழுதப்பட்ட இந்தச் சிறுகதையின் மூலம் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னதை ஆசிரியர் செல்வராஜ் அவர்கள் மெய்ப்பித்துள்ளார். தமிழை இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதைக் காட்டுமிராண்டித் தமிழ் என்று சொன்னவர் பெரியார். தமிழை அப்படிச் சொன்னீர்களே என்று அவரை ஒரு பேட்டியாளர் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் "ஆமாம் நான் சொன்னேன். என்ன தப்பு.. ஒருத்தனோடு ஒருத்தன் சண்டை போடும் போது திட்டுகிறானே? சண்டை போட்டவனை மட்டுமா திட்டுகிறான்? அவன் மனைவி மக்கள் எல்லோரையும்தானே திட்டுகிறான்? எப்படித் திட்டுகிறான் என்று பெரியார் சொன்னதைக் கேட்டவர் அவ்வார்த்தைகளை எழுத மனமில்லாமல் விட்டு விடுகிறார் " (ஆதாரம், நெல்லை ஜெபமணி அவர்கள் எழுதிய "கண்டு கொள்வோம் கழகங்களை!:"பக் -41). அதாவது பெரியார், தமிழைக் குறை சொல்லவில்லை. அதைப் பேசியவர்களது பேச்சைத்தான் குறை சொல்லியுள்ளார். பேசுபவனால், ஒரு மொழிக்கு உயர்வும், அல்லது காட்டுமிராண்டி மொழி என்ற தாழ்வும் கிடைக்கிறது என்பதை அவரது பேச்சு காட்டுகிறது.


அதைத்தான் நாம் இயல், இசை, நாடகத் தமிழின் மூலம் காண்கிறோம். உன்னத விவரங்களைக் கொடுக்கும் போது, அதைக் கொடுக்க உதவும் மொழியும் உயர்வு பெறுகிறது. அந்த மொழிக்கு சக்தி கூடுகிறது. அதை உறுதிபடுத்தியே ஆண்டாளும், ஏனைய ஆழ்வார்களும், ஒவ்வொரு பாடல் தொகுப்பின் முடிவிலும், அந்தத் தமிழ்ப் பாடல்களைப் பாடுவதால் இன்னின்ன பலன்கள் உண்டாகும் என்று சொல்லியுள்ளார்கள். உதாரணமாக, மானிடருடன் வாழகில்லேன் என்று ஆண்டாள் கூறும் நாச்சியார் திருமொழியின் முதல் பத்தை "விருப்புடை இன் தமிழ்மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவாரே" என்று முடிக்கிறாள். அதாவது இனிய தமிழில் மாலை போல் கோர்க்கப்பட்ட அந்தப் பத்துப் பாடல்களைப் பாடுபவர்கள் விண்ணிலுள்ள தேவர்களுக்கெல்லாம் அரசனான பரந்தாமனது அருகாமையை அடைவார்கள் என்கிறாள். தமிழால் இறைவனை அடைய முடியும் என்பதையும், பக்தியை ஊட்ட முடியும் என்பதையும் இந்த வரிகள் காட்டுகின்றன. ஆண்டாளது மறக்க முடியாத மற்றொரு பாடல் தொகுப்பு, 'வாரணமாயிரம்' என்று தொடங்கும் இறைவனை மணம் செய்து கொண்ட கனவுப் பாடலாகும். அவற்றை முடிக்கும் போது "கோதை சொல் தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர் வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே" என்கிறாள். குழந்தைச் செல்வத்தை ஈட்டித்தரும் வல்லமையைத் தமிழ் பெறும் வண்ணம் ஆண்டாள் இயற்றியிருக்கிறாள். அந்தத் தமிழே மருந்தாகும் வண்ணம் "கோதை சொல் மருந்தாம்" என்று நாச்சியார் திருமொழியை முடிக்கிறாள். தான் இயற்றிய சொல்லால் தமிழை மருந்தாக்கினாள்.


பேசுபவரது குணத்தால், எண்ணத்தால், சொல்லப்படும் சொற்களால் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறியதற்கொப்பாகவே, தங்கள் எண்ணத்தால், பக்தியால், இன் தமிழிலும், தீந்தமிழிலும் இன்ன பிறவாக உயர்வாகச் சொல்லப்பட்ட தமிழிலும், ஆழ்வார்கள் அளித்த சமயத் தமிழால், தமிழும் உயர்வு பெற்றது. அதைப்பாடினவர்களும் உயர்வு பெற்றார்கள்; வருங்காலத்தில் அவற்றைப் பாடுபவர்களும் உயர்வு பெறப்போகிறார்கள் என்பதை ஒவ்வொரு பத்து பாடல்கள் முடிவிலும் ஆழ்வார்கள் சொல்லியுள்ளார்கள். அப்படிப்பட்ட உயர் தமிழ்ப் பாடல்களை ஒன்றியும், ஊன்றியும் படிக்காததால், செல்வராஜ் அவர்கள் கொடுத்த சிறுகதை தமிழுக்கு ஒரு புண்கலனாக அமைந்துள்ளதே தவிர பொன்கலனாக அல்ல. அவர் எழுதிய தமிழைப் படிக்கவும் நா கூசுகிறது. காட்டுமிராண்டித்தமிழ் எப்படி இருக்கும் என்பதை அவர் நன்றாகவே காட்டி விட்டார்.


தமிழைத்தான் இழிவு படுத்தினார் என்பது மட்டுமல்ல, ஆண்டாள் காலக்கட்டத்துக்கு ஒவ்வாத காட்சிகளையும், ஆண்டாள், பெரியாழ்வார், பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபன் ஆகியோரது குணநலன்களையும்வரலாற்று நிகழ்வுகளையும் திரித்து, பொருந்தாத வகையில், அபத்தக் களஞ்சியமாக  சித்தரித்துள்ளார். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1.   ஸ்ரீவில்லிபுத்தூரில் பௌர்ணமி நாளிரவில் கதை நடக்கிறது. பொழுது விடிந்தால் தேர்த் திருவிழாவாம். அந்தத் திருவிழாவைப் பற்றின இன்ப நினைவில் மக்கள் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களாம். தேர்த் திருவிழாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பெயர் போனது என்பது உண்மை. அது இந்தக் கதாசிரியருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அந்தத் தேர்த் திருவிழா என்று, எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பதை அவர் அறியாமல், கதை எழுத வந்துவிட்டார். தேர்த் திருவிழா ஆரம்பித்ததே ஆண்டாள் வைபவம் நிகழ்ந்த பிறகுதான். இறைவனை அவள் மணந்த அதிசய நிகழ்ச்சிக்குப் பிறகுதான் ஆண்டாள் கோவில் கட்டப்பட்டு, அவள் பிறந்த ஆடி மாதம், பூர நட்சத்திரத்தன்று தேர்த் திருவிழா கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டது. அந்த ஆடிப்பூரமும், பௌர்ணமியன்றோ, அதற்கு மறுதினமோ வராது.

2.   அந்தப் பௌர்ணமி இரவில் அரசன் அவனது கோட்டையின் உப்பரிகையில் வருகிறானாம். அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங்கோவிலின் உயர்ந்த கோபுரத்தைக் காண்கிறானாம். ஆண்டாள் வாழ்ந்த காலக்கட்டத்தில் கோபுரம் கட்டப்பட்டதா என்பதே சர்ச்சைக்குரியது. அது மட்டுமல்லாமல், ஸ்ரீவில்லிபுத்தூரில் கோட்டையும், அரண்மனையும் இருந்ததற்கான ஆதாரமும் எதுவும் இல்லை. ஸ்ரீ வல்லபன் காலத்தில், வாணிபப்போக்குவரத்து கொண்ட இடமாக ஸ்ரீவில்லிபுத்தூர் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணும் வண்ணம் 'தேசி உய்யவந்தப் பட்டணம்" என்னும் இடம் அந்தப் பகுதிகளில் இருந்திருக்கிறது. (கல்வெட்டு எண் 269, A.R. No 56 of 1929.  ராமநாதபுர மாவட்டம், திருப்பட்தூர் தாலுகா, சிவபுரியில் உள்ள ஸ்வயம்ப்ரகாசர் கோவில். திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீ வல்லபனது 24 ஆம் ஆட்சியாண்டு) தேசி உய்யவந்த பட்டணம் என்னும் பெயரைக் கொண்டு, இது பிற ஊர்களிலிருந்து வாணிபம் செய்ய வந்த மக்கள் குடியமர்ந்த இடமாக இருந்திருக்கிறது என்று அறியலாம். 'கேரள சிங்க வளநாட்டி'லிருந்து இங்கு மக்கள் வந்திருக்கிறார்கள். (மேற்படி கல்வெட்டு, ஸ்ரீ வல்லபன் காலம்). பின்னாளில் பாளையக்காரர்கள் பாதுகாப்பில் இந்த இடம் இருந்திருக்கிறது. பொதுவாக வாணிப மையங்களைச் சுற்றி பாளையங்கள் மற்றும் காவல் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதை கொங்கு நிலங்களில் காணலாம். ஸ்ரீவில்லிபுத்தூரும், 1750 வரை கொல்லம்கொண்டான் பாளையக்காரர் என்பவர் வசம் இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அவர்களது கோட்டை நவாப் தளாபதிகள் வசம் சென்றது. இந்த விவரங்கள் மூலம், ஸ்ரீவல்லபன் காலத்தில் அவன் தங்கும் வண்ணம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரண்மனை, கோட்டை கொத்தளங்கள் இருந்தனவா என்பது சந்தேகத்துக்குரியது. வெறும் காவல் படை வீடுகள் தான் இருந்திருக்க வேண்டும். மேலும் அந்த அரசன் மதுரையில்தான் வசித்து வந்தான் என்று ஆழ்வார்கள் சரித்திரத்தைக் கூறும் குரு பரம்பரை பிரபாவம் என்னும் நூல் கூறுகிறது. மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சுமார் 75 கி.மீ தொலைவில் இருக்கிறது. எனவே ஸ்ரீவல்லப அரசன் தன் கோட்டையின் உப்பரிகையிலிருந்து வடபெருங் கோவில் கோபுரத்தைக் கண்டான் என்பது, ஏதோ மனதுக்குத் தோன்றினபடி எழுதியதுதான். மொத்தக் கதையுமே தாறுமாறாக மனம் போன போக்கில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் மிக உயர்ந்த உண்மையான பாத்திரங்கள் பெயரில் கதையைப் பின்னியிருப்பதுதான் வேதனைக்குரியது. கண்டனத்துக்குரியது.

3.   கதையின் 2 ஆம் பக்கத்திலேயே கதாசிரியர் சொல்லும் தவறான விவரம், கோவிலை ஒட்டி, கிழக்கு ரத வீதியில், தாசி வீடு இருந்தது என்பது. ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊர் 'அன்ன வயல்'கள் சூழப்பட்டதும், "நீதியால் நல்ல பத்தர் (பக்தர்) வாழுமூர், நான் மறைகள் ஓதும் ஊர்" என்று வைணவ ஆசாரியர்களால் வருணிக்கப்பட்டதுமான சிறப்புடைய ஊர்.  இந்த வருணனை கற்பனை அல்ல என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலின் தெற்குச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டு மூலம் அறியலாம். (கல்வெட்டு எண் 91. A.R. No 548 of 1926) வீரப் பாண்டியனின் 13 ஆம் ஆட்சி எதிராண்டில், செய்யப்பட்ட நில விற்பனைகளையும், கொடைகளையும் இது தெரிவிக்கிறது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூரை மல்லி நாட்டின் 'பிரம்மதேயம்' என்று குறிக்கப்பட்டுள்ளது. பிரம்ம்தேயம் என்றால், வேதவல்லுனர்களுக்குத் தானமாக அளிக்கப்பட்டது என்று பொருள். அங்கு ஒரு கோவில் இருக்கும். அதைச் சுற்றி வேத வல்லுனர்கள் வாழ்வார்கள். அங்குள்ள எல்லா மக்களுமே அந்தக் கோவிலின் உயர்வுக்கும், வேதம் தழைக்கவும் ஏதேனும் ஒரு கைங்கரியத்தில் ஈடுபட்டிருப்பார்கள். சிறந்த பக்தர்களாகவும் இருப்பார்கள். பிரம்மதேயமாக இருந்த அமைப்பைத்தான் ஆசாரியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வாழ்த்துப் பாடலில் பிரதிபலித்துள்ளார்கள். அப்படிப்பட்ட ஒரு பிரம்மதேயத்தில் தாசி வீடுகள் இருக்க முடியாது.

4.   ஒரு ஊரை, பிரம்ம தேயமாக அரசன் அறிவிப்பான். அந்த அறிவிப்பு ஸ்ரீவில்லிபுத்தூரைப் பொருத்தமட்டில், பெரியாழ்வாரை முன்னிட்டுத்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். எந்த அரசனைக் காமாந்தகனாக செல்வராஜ் வர்ணிக்கிறாரோ அந்த அரசனால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஆரம்பத்தில் பெரியாழ்வார் நந்தவனம் அமைத்து, பூமாலைக் கைங்கரியம் செய்து வந்த சாதாரணாராகத்தான் இருந்தார். அவர் ஒரு வேத விற்பன்னர் அல்லர். ஆனால் ஓரிரவில்  தெய்வமே அவரது கனவில் வந்து, மதுரைக்குச் சென்று அரசன் கேட்ட சமயத் தத்துவக் கேள்விக்கு பதில் அளிக்குமாறு சொல்லவே அவர் மதுரைக்குச் சென்று அரசனுக்கு விளக்கம் அளித்தார். திருடனாக இருந்த வால்மீகிக்கு எவ்வாறு திவ்விய ஞானம் பிறந்ததோ, அவ்வாறே ஆழ்வாருக்கும் தெய்வ அனுக்கிரகத்தால் ஞானம் பிறந்தது. அவர் அளித்த விளக்கத்தால் அரசன் உட்பட அனைவரும் தெளிவு பெற்றனர். அவரைப் போற்றி, அவருக்குப் 'பட்டர் பிரான்' என்னும் பட்டமும் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக அவர் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரை பிரம்ம தேயமாக, ஸ்ரீ வல்லபப் பாண்டியன் அறிவித்திருக்க வேண்டும். ஏனெனில், பெரியாழ்வாரும், ஆண்டாளும் எழுதின பல பாசுரங்களில் பெரியாழ்வாரைப் "புதுவை மன்னன் பட்டர்பிரான்", என்றும் "புதுவைக் கோன்" என்றும், 'புத்தூர்க் கோன்' என்றும் பலவாறாகச் சொல்லியுள்ளார்கள். கோன், மன்னன் என்னும் சொற்கள் தலைவன், அரசன் என்று குறிக்கும். இதனால் பட்டர் பிரானாக இவர் பட்டம் பெற்றவுடன், இவர் வாழ்ந்த ஸ்ரீ வில்லிபுத்தூரையும் பிரம்மதேயமாக, அரசன் கொடுத்திருக்க வேண்டும். அதற்கு இவரே தலைவராக இருந்திருக்க வேண்டும்.  இவர்கள் இருவரும் எழுதின அனைத்துப் பாசுரத் தொகுப்புகளிலுமே புத்தூர் கோன் என்னும் அடையாளம் அல்லது பட்டர் என்னும் பெயர் இடம் பெருவதால், பெரியாழ்வார் பட்டர் பிரான் என்னும் பட்டம் பெற்றபிறகே, வில்லிபுத்தூரும் பிரம்மதேயமாக ஆன பின்பே பெரியாழ்வார் திருமொழியும், திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. அதற்கேற்றாற் போல ""திருவில் பொலிமா மறைவாணர் புத்தூர்த் திகழ் பட்டர் பிரான்" (பெ-திரு -3-5-10) என்றும், "திருவிற்பொலி மறைவாணன் பட்டர்பிரான்" (பெரி- திரு – 4-1-10) என்று பெரியாழ்வாரே சொல்லியுள்ளதால், அந்த ஊரின் பிரம்மதேயச் சூழலும், அதன் மகுடம் சூட்டினாற்போல பெரியாழ்வார் விளங்கினதும் புலனாகின்றன. அந்தச் சூழலில் தாசி வீடுகள் இருந்தன என்பதும், ஆண்டாளுக்குப் பெரியாழ்வாரே தனது தகப்பனார் என்று தெரியாமல் 20 வயது வரை வளர்ந்தாள் என்பதும், அபத்தக் கற்பனைகள்.   

5.   பௌர்ணமியன்று கதை தொடங்கும் முதல் பத்தியிலேயே, கண்டனத்துக்கிரிய கருத்தைச் சொல்கிறார் கதாசிரியர். வாழையடி வாழையாக ஆண்டவனுக்குத் தங்களை அடிமைப் பொருளாக அர்பணித்துக் கொண்ட தேவதாசி வம்சத்து ஆண்டாள் என்கிறார். இதுவே தவறான கருத்து. ஆனால் இங்கு அடிமை செய்யும் தேவ தாசி என்பதை மட்டும் பார்ப்போம். ஏனெனில் இதில் தமிழ்ப் பண்பாடும், கோவில் கலாசாரமும் சம்பந்தப்படுகிறது. இந்தக் கதை, தமிழ் நாட்டுக் கோவில்களில் தேவ தாசிகள் இருந்தனர், அவர்களை மக்களும், மன்னனும் காமக்கிழத்திகளாகப் பார்த்தனர் என்பது போன்ற எண்ணங்களை உருவாக்குகிறது. தமிழகக் கோவில் கலாசாரத்தின் உண்மை நிலவரங்களை மக்கள் அறியவில்லை என்றால், இப்படிப்பட்ட கதைகள் சொல்லும் கருத்துக்களே நிலைத்து விடும். எனவே உண்மை நிலையை நிரூபிக்க வேண்டியது அவசியமாகிறது.

6.   இந்து சமயத்தில் அடிமை என்னும் நிலை இருக்கிறது. இதையே தாசன், தாசி என்று இருபாலாருக்கும் சொன்னார்கள். இந்தச் சொற்களுக்கு அடிமை என்றே பொருள். தாசி, தாசன் என்ற சொற்களைப் பக்தர்கள் தங்களைக் குறித்தே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாருக்கு அடிமை என்றால் இறைவனுக்குத்தான் அடிமை. இறைவனுக்கு மட்டுமே அடிமை. மனிதனுக்கு மனிதன் அடிமை என்ற எண்ணமே இந்து மதத்தில் கிடையாது. இந்த அடிமையில் இரண்டு வகை இருந்து வந்திருக்கிறது. ஒன்று ஒரு கோவிலுடன் தன்னை இணைத்துக் கொண்டு, அந்தக் கோவில் இறைவனுக்குத் தன்னை அடிமையாக சாஸனம் செய்து கொண்டு, கோவில் தொண்டுகள் செய்வது. இரண்டாவது தனியாகக் கோவில் பணிகள் என்றில்லாமல், எந்த பணியில் இருந்தாலும், எந்ந்நேரமும், எக்காலமும் இறைவனுக்குத் தான் அடிமை என்னும் எண்ணத்துடன் இருப்பது. இந்த இரண்டு வகைகளுக்குமே இறைவன் தான் எஜமானன். இவர்கள், இறைவனுக்கு மட்டுமே தாங்கள் அடிமை என்று பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். ஆண்டவனுக்குத் தங்களை அடிமையாக அர்ப்பணித்துக் கொணடவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள். பெரியாழ்வாரும், ஆண்டாளும், அன்றைக்கும், இன்றைக்கும் உள்ள பல வைணவ அடியார்களும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள். பெரியாழ்வார், "எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழி வழி ஆட்செய்கின்றோம்" என்று  திருப்பல்லாண்டில் கூறுகிறார். தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா, எள்ளு தாத்தா என்று ஏழேழு தலைமுறைகளாக இறைவனுக்கு அடியவர்களாக ஆட்பட்டிருக்கிறோம் என்கிறார். அவரைப் போலவே ஆண்டாளும், "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம், உனக்கே நாம் ஆட்செய்வோம், மற்றை நம் காமங்கள் மாற்று" என்று கேட்டுக் கொள்கிறாள். இவர்களைப் பின்பற்றியே வைணவப் பெரு மக்கள் அனைவரும், இன்றுவரை தங்களை இறைவனுக்கு அடிமை என்று சொல்லிக் கொண்டும், தாசன், தாசி என்று தங்களை அழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். தன்னைத் தோழர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் செல்வராஜ் அவர்களுக்குப் புரியும் வழியில் சொல்வதென்றால், இறைவன் ஒருவனே முதலாளி என்று அன்றைய மக்கள் நினைத்தனர். மற்றவர்களெல்லாம் அவனுக்கு அடிமைகளே. இன்றும் அப்படி நினைப்பவர் பலர் உண்டு. மக்கள் அனைவரும் அவனுக்கு அடிமைகளே. ஏனெனில் அவனன்றி மக்கள் உற்பத்தியே கிடையாது. அவனே படியளப்பவன். அவனே எல்லாமுமாக இருப்பவன். இந்த அறிவைப் பெற்ற பெரியாழ்வாரும், மற்றும் பலரும், அவனுக்கு அடிமைகளாக இருந்தார்கள்.

7.   அந்த அடிமைத்தனத்துக்கு ஒரு சின்னமும் இருக்கிறது. அவனது சின்னத்தைப் பொறித்துக் கொண்டு, அவனுக்கே தாங்கள் ஆட்பட்டவர்கள் என்று சொன்னார்கள். தன் தந்தை, தாத்தா காலத்திலிருந்து இறைவனுக்கு அடிமைப்பட்டோம் என்றும் சொன்ன பாடலுக்கு அடுத்த பாட்டில் "தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடியாட் செய்கின்றோம்" என்கிறார் பெரியாழ்வார். அதாவது இறைவனிடம் அடிமை செய்பவர்கள் தாங்கள் என்பதை உறுதி படுத்த, அந்த இறைவனது சங்கு சக்கரப் பொறிகளை தீயில் சுட்டு, அவற்றைக் கொண்டு தங்கள் தோள்களில் அழியாத அடையாளச் சின்னங்களை ஏற்படுத்திக் கொண்டு தாங்கள் அவனுக்கு மட்டுமே சேவகம் செய்பவர்கள் என்று காட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த வழக்கம் இன்றும் வைணவத்தைப் பின் பற்றும் மக்களிடையே இருக்கிறது, பெரியாழ்வார் காலத்திலும் இருந்திருக்கிறது.  

8.   இவர்களைத் தவிர இருந்த மற்றொரு வகை அடிமைகள் தங்களையே  கோவிலுக்குத் தானமாகவும், விலைக்கு விற்றுக் கொண்டும் கோவில் அடிமைகளாக இருந்திருக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. நாகப்பட்டினம் கொறுக்கையில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவில் கல்வெட்டின் மூலம், மொத்தம் 100 பேர் தங்கள் குடும்பத்தினர் சகிதமாக இறைவனுக்கு அடிமைகளாக சாசனம் செய்து கொண்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. திருவிடந்தைப் பெருமாள் கோவிலுக்கு 12 குடும்பங்களைச் சேர்ந்த மீன் பிடிப்பவர் தங்களை அடிமைகளாக அர்ப்பணித்துக் கொண்ட சாஸனம் இருக்கிறது. திருவக்கரைக் கோவில், தஞ்சாவூர் கீழையூர்க் கோவில், திருப்பாம்புரம் கோவில் ஆகியவற்றிலும் அடிமைகளாகத் தங்களை  சாஸனம் செய்து கொண்ட ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த அடிமைகளுக்கும் சூலப்பொறி வைத்த குறிப்புகள் இருக்கின்றன. இதைக் கொண்டு ஏதோ அடிமை வியாபாரம் நடந்தது என்று அதீதக் கற்பனையில் எழுதும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெரியாழ்வார் கூறுவதையும், இன்றும்  வைணவ மக்கள் சங்கு சக்கரப் பொறியை தோளில் பொறித்துக் கொள்வதையும் பார்த்தாவது, இறைவனுக்கு ஆட்பட்டு இருத்தலின் அடையாளமாக, சூலப்பொறி இட்டுக்கொள்ளும் வழக்கத்தைப் பின்பற்றியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

9.   இந்த அடிமை விவகாரத்தின் தொடர்ச்சியாக அந்தச் சிறுகதைத் தொகுப்பின் 10, 11 ஆம் பக்கங்களில் இன்னுமொரு மாபெரும் அபத்தம் அரங்கேறுவதைக் காணலாம். ஆண்டாள் தேவ தாசிக்குப் பிறந்தவளாம். தேவதாசி என்றாலே இந்தக் கதாசிரியர் போன்றவர்களுக்கு காமக் கிழத்திகள் என்று எண்ணம். ஆண்டாள் கோவிலில் தேவதாசியாக நடனம் ஆடுவதைப் பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபன் பார்த்தானாம். அதைக் கண்டு அவளை மோகித்து, போகப் பொருளாக எண்ணி அழைத்து விட்டானாம். அதை ஏற்றுச் செல்லாவிட்டால் மறுநாளே அவர்களுக்குக் கிடைக்கும் மானியத்தை நிறுத்துவிட உத்தரவு பிறக்குமாம். ஆண்டாளும் அவள் தாயும் தெருவில் நாய் போலச் சாக வேண்டி வருமாம். என்ன ஒரு முற்போக்குச் சிந்தனை!? ஒருவரையும் பாக்கி வைக்காமல் எல்லோரையும் இழிவு படுத்தி விட்டார் செல்வராஜ். அது மட்டுமல்ல, அந்தக் காலக்கட்டத்தில் கோவிலில் அடிமையாய் சேவகம் செய்தவர்கள் நிலை என்ன, என்ன சேவகம் செய்தார்கள், அவர்களுக்கு என்ன மானியம் கிடைத்தது, அதை அரசன் மனம் போன போக்கில் நிறுத்த முடியுமா என்றேல்லாம் ஆராயாமல், நாலாந்தர சினிமா வசனம் எழுதியிருக்கிறார்.10.  கோவிலில் அடிமைகளாகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெண்கள் தேவரடியார், பதியிலார், தளியிலார், தளிச்சேரிப் பெண்டுகள் என்னும் பல பெயர்களில் அழைக்கப்பட்டனர். தேவரடியாள் என்னும் பெயர் இன்றைக்கு எந்த பொருளில் சொல்லப்படுகிறது என்பதைச் சொல்லத்தேவையில்லை., ஆனால், ஆண்டாள் காலத்தில் அதாவது 1000 ஆண்டுகளுக்கு முந்தின கல்வெட்டுகளில் அது தெய்வத்துக்குத் தங்களை அடிமைகளாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு ஒப்பற்ற நிலையைக் குறித்தது. அந்த நிலையை ஒரு திருத் தொண்டாகச் செய்தனர். தேவரடியார்கள் கோவிலில் திருவலகிடல், திருமெழுகிடல், இறைவனுக்கு அமுது படைப்பதற்கான அரிசியைத் தூய்மை செய்தல், திருப்பதிகம் பாடுதல், இறைவனுக்குக் கவரி வீசுதல் ஆகியவற்றைச் செய்தனர். விழாக் காலங்களில் திரு நீற்றுத் தட்டையும், மலர்த் தட்டையும் ஏந்தியிருந்தனர்.

11.  தளியிலார் என்பவர்கள் ஆடல் பாடல்களில் வல்லவர்கள். இவருள் சிவன் கோவிலில் பணி செய்தவர்கள் 'ரிஷபத் தளியிலார்: என்றும், வைணவக் கோவில்களில் பணி செய்தவர்கள் "ஸ்ரீ வைஷ்ணவ மாணிக்கம்" என்றும் அழைக்கப்பட்டனர். பார்ப்ப்வர்கள் மனம் தறி கெடும் படியும், போகப்பொருளாகாவும் இவர்கள் இருந்தனர் என்றால், இப்படியா சிறப்புப் பெயர் பெற்றிருப்பார்கள்?

12.  பதியிலார் என்போர் பெரிய கோவில்களில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். தஞ்சைப் பெரிய டையார்க் கோவிலில் நானூற்றுக்கும் மேற்பட்டப் பதியிலார் பணியாற்றி இருக்கின்றனர். அவர்களது வீட்டு எண், தெருப் பெயர் போன்ற விவரங்கள் எல்லாம் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. இந்த் தேவரடியார்களும், பதியிலார்களும் ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்களில்லை. எல்லா வகுப்புப் பெண்டிரும் தேவரடியார்களாக இருந்திருக்கின்றனர். முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் 'ஆச்சப் பிடாரன் கணபதி நம்பி' என்கிற அழகிய பாண்டியன் பல்லவரையன் என்னும் படைத் தலைவன், பாலாற்றங்கரையிலுள்ள திருவல்லம் கோவிலில் பணிகள் செய்வதற்கு தன் குடும்ப்ப் பெண்களைத் தேவரடியார்களாக ஒப்படைத்தான். அப்பெண்கள் சூலப்பொறி பொறிக்கப்பட்டு, கோவில் பணிகளில் ஈடுபட்டனர் என்று அந்தக் கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆடல் பாடல் என்பதும் கோவில் பணிகளில் ஒன்றாகச் செய்யப்பட்டது. தெய்வத்துக்கே அர்ப்பணித்துக் கொண்ட இவர்கள் விரும்பினால், ஒருவரை மணம் செய்து கொண்டு வாழவும் வசதியளிக்கப்பட்டது. சதுரள் சதுரி என்ற தேவரடியாள், நாகன் பெருங்காடன் என்பவனை மணந்து கொண்டாள் என்று கூறும் திருவொற்றியூர்க் கல்வெட்டு மூலம் அவர்கள் தெய்வத்துக்கு அடிமைத் தொண்டு செய்தாலும், தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்ற சுதந்திரம் இருந்தது என்பதும் தெரிய வருகிறது. செல்வராஜ் போன்றவர்கள் நினைப்பது போல இறைவனுக்கு ஆடலும் பாடலும் சமர்ப்பித்த பெண்கள், போகப்பொருளாகப் பார்க்கப்படவில்லை. மேற்சொன்ன கல்வெட்டுச் செய்திகள் ஆண்டாள் வாழ்ந்த காலக்கட்டத்தை ஒட்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.

13.  செல்வராஜ் கதையில் சொல்வது போல அரசன் மானியத்தை நிறுத்தி, இவர்கள் நாய் போல நடுத்தெருவுக்கு வரும் நிலை அன்று இல்லவே இல்லை. அரசன் தன் மனம் போன போக்கில் மானியம் தரவில்லை, தந்ததைப் பிடுங்கவும் இல்லை. எந்தக் கொடையையும் சாஸனம் செய்து வைத்தார்கள். அதை முறைப்படி கொடுக்க ஏற்பாடுகளும் செய்திருந்தார்கள். பெரும்பாலான கொடைகள் நிலமாக இருந்தன. அவற்றில் கிடைக்கும் விளைச்சலே இவர்களுக்கு வருமானமாகும். தளியிலார், தேவரடியார், தளிச்சேரிப் பெண்டுகள் ஆகியோருக்கு "பாணக் காணி" "நட்டுவக் காணி" என்னும் பெயரில் நிலங்கள் கொடுக்கப்பட்டன. தமிழ்க் கூத்தாடுபவர்களுக்கு "கூத்தாட்டிக் காணியும்", இசை பாடும் முரலியனுக்கு " முரலியக் காணி"யும் கொடுக்கப்பட்டது. "பதியிலார்க் காணி", "சாக்கைக் காணி", "வீணைக் காணி", "உவச்சக் காணி" போன்றவற்றை இந்த மக்கள் பெற்றனர். அன்றைய வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ளாமல், செல்வராஜ் அவர்கள் கொச்சைப்படுத்தி எழுதிவிட்டார்.


14.  அம்மாவும், பெண்ணுமாக, தங்கள் தாசிக் குலத்தை நொந்து கொள்ளும் வசனத்துக்கிடையே, பெரியாழ்வார் பெற்ற பெண்ணான தான், தாசிக்குப் பிறந்ததால், தாசியாகவே வாழ வேண்டுமா என்று ஆண்டாள் எண்ணுவதாக செல்வராஜ் எழுதுகிறார். அப்பொழுதுதான் ஆண்டாளுக்குப் பெரியாழ்வார் தனது தந்தை என்று தெரிய வந்த்தாம். தன் மனதில் அவள் அரற்றுகிறாளாம்"அப்பா, நான் தேவதாசியின் வயிற்றில் பிறந்ததனால் என் தலைவிதி இதுதானா? படைப்பில் எல்லோரும் சமம் என்று பேசும் உங்கள் தத்துவம் சொல்லித் தந்தது இதுதானா?" செல்வராஜ் போன்றோருக்கு பிடித்தமான பாயிண்ட் இது! ஆனால் சமதர்மத்தைப் பற்றிப் பேச செல்வராஜ் இப்படி ஒரு காட்சியைத் தர வேண்டுமா? பெரியாழ்வார் பாசுரத்தைப் படித்திருந்தாலே தெரிந்திருக்குமே? பெரியாழ்வார் வேயர் குலத்தில் உதித்தவர். வேய் என்பது மூங்கிலைக் குறிக்கும். மூங்கில் கம்புகள் மீது நின்றாடும் கழைக்கூத்து அமைப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர்க் கோவிலில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி ஒருகாலத்தில் மூங்கில் காடாக இருந்திருக்கலாம். மூங்கில் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதால் அந்த ஊருக்கும், அதில் வாழ்ந்த மக்களுக்கும் ஆதியில் வேயர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். அப்பொழுதே சுதை வடிவிலான வடபத்ர சாயி அங்கு கோவில் கொண்டிருக்கிறார். பின்னாளில் வில்லி என்பான் அந்தப் பெருமாளைக் கண்டெடுத்து கோவில் கட்டியிருக்கிறான். அவன் காலத்தில் புதிதாக நிர்மாணம் செய்யவே அது புத்தூர் என்றும், அவன் பெயரைக் கொண்டு வில்லிபுத்தூர் என்றும் பெயர் பெற்றது. அதற்கு முந்தின காலத்திலேயே அந்தப் பகுதியில் இருந்த வேயர் மக்கள் குடியில் பெரியாழ்வார் தோன்றியிருக்க வேண்டும். வேயர் என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. வேயர் என்றால் ஒற்றன் வேலை செய்பவன் என்று பொருள். ஒற்று வேலை என்பது அரசுப் பணியாகும். பல தலைமுறைகளாக அவரது முன்னோர் ஒற்றுப் பணியில் ஈடுபட்டிருக்கக்கூடும். ஒற்றுப் பணியில் இருந்தாலும் வீர்ர்களாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் தன்னை "வீரணி தொல் புகழ் விட்டு சித்தன்" என்று பெரியாழ்வார் திருமொழி 4-6-10 இல் குறிக்கிறார். இன்னொரு இடத்தில் "பாழித்தோள் விட்டு சித்தன்" என்று சொல்லிக் கொள்கிறார் (பெரி-திரு -4-5-10). பாழி என்பதற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஆனால் தோள் என்று சேர்த்துச் சொல்வதால், வலிமை, போர் என்னும் அர்த்தங்களே பொருத்தமாக இருக்கும். வீரத்துக்குப் பெயர் போன மரபில் அவர் வந்தவராக இருக்க வேண்டும். நாளடைவில், அவரது முன்னோர்கள் வேயர்களாகப் பணியாற்றியிருக்க வேண்டும். அதனால் இவர் வேயர் குலத்தவராகிறார். வேயர் குலத்தில் பிறந்த இவர் பாடின திருப்பல்லாண்டைக் கேட்டுத்தான் இன்றைக்கும் எல்லா கோவில்களிலும் பெருமாள் நாளை ஆரம்பிக்கிறார். இவர் பாடின சென்னியோங்கு முதலான பத்துப் பாசுரங்களே, மோட்சத்து வழிகாட்டும் சாதனம் என்று வைணவ ஆச்சாரியர்கள் அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். அதில் "வேயர் தங்கள் குலத்துதித்த விட்டு சித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலன்" என்னும் அந்த நாராயணனை அந்தப் பத்துப் பாசுரங்களால் பாட வல்லார் இறைவனுக்கு அணுக்கர்கள் ஆவார்கள் என்று முடிக்கிறார்உயர் குலம் என்று சொல்லப்படுகிறவர்கள் உள்ளிட்டோர் அனைவருமே இந்தப் பாசுரங்களைப் பாடிப் பாடியே உய்யும் வழி தேடுகின்றனர். சமத்துவம் பற்றிப் பேச செல்வராஜ் அவர்கள் விழைந்தால், வேயர் குலத்துதுதித்த பெரியாழ்வாருக்கு வைணவத்தில் கொடுக்கப்பட்டுள்ள உயர்வையும், மேன்மையையும் பற்றிப் பேசியிருக்கலாம். ஆனால் அவரையல்லவா இழிவுபடுத்திப் பேசி விட்டார்?

15.  செல்வராஜின் காமக் கண்ணில் எல்லாமே காமமாகத் தெரிகிறது. கோவிலில் நடனமாடும் பெண்ணைப் பார்த்து உள்ளம் அரிப்பெடுத்ததாம், உடல் தினவெடுத்ததாம். இதெல்லாம் நடந்தது விட்டுசித்தருக்கு. பெரியாழ்வாரை விட்டு சித்தன் என்றுதான் மக்கள் அழைத்தனர். சதா சர்வ காலமும் விஷ்ணுவையே அவர் நினைத்துக் கொண்டிருந்ததால் அவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது. அப்படிப்பட்டவரை சபல சித்தராக வர்ணிப்பது மன்னிக்க முடியாத குற்றம். வைணவ மரபில் ஒன்று சொல்வார்கள். இறைவன் தனக்கு யாரேனும் அபசாரம் செய்தாலும் பொருட்படுத்த மாட்டான். ஆனால் தனது பக்தனுக்கு அபசாரம் செய்தால் பொறுக்க மாட்டான். தெய்வத்தாலும் பொறுக்க முடியாத குற்றத்தை செல்வராஜ் செய்துள்ளார்.

16.  பூமாலை தொடுத்து, அதை இறைவனுக்கு சாற்றி அழகு பார்த்த விட்டுசித்தர் சாதாரண மானுடப் பெண்ணின் அழகைப் பார்த்து மனம் தடுமாறி இருக்கவே முடியாது. அப்படி தடுமாறி இருந்தாலும், அதை மறைக்கும் பழக்கம் வைணவத்தில் இருந்ததில்லை. உள்ளதை உள்ளபடியே எழுதி வைத்துள்ளார்கள். உதாரணமாக தொண்டரடிப்பொடி ஆழ்வார், பூர்வத்தில் ஒரு வேசியிடம் மயங்கியிருந்ததை மறைக்கவில்லை. திருமங்கை ஆழ்வார் வழிப்பறி செய்ததை மறைக்கவில்லை. பெரியாழ்வார் வாழ்விலும் அப்படிச் சம்பவங்கள் நடந்திருந்தால் அதை மறைத்திருக்க மாட்டார்கள். மேலும் மனம், மொழி, மெய் ஆகியவற்றில் எந்த விஷ்ணு பக்தனும் பிறழ்ந்ததில்லை என்ற நிலை இருந்தது. இந்தக் கதையை எழுதுவதற்கு முன், ஒரு சிறு ஆராய்ச்சி முயற்சியாக, ஆழ்வார்கள் சரித்திரத்தை செல்வராஜ் அவர்கள் படித்திருந்தால், தெரிந்திருக்கும். ஸ்ரீ வைஷ்ணவர்கள் தவறு செய்தவர்களாக இருந்தால் தன்னைப் பாம்பு தீண்டிக் கொல்க என்று சொல்லி பாம்பு இருந்த குடத்தில் கையை விட்டார் குல சேகர ஆழ்வார். பாம்பு அவரைத் தீண்டவில்லை என்ற சம்பவத்தின் மூலம், விஷ்ணு பக்தர்கள் தவறிழைக்க மாட்டவே மாட்டர்கள் என்ற நம்பிக்கை அன்றைக்கு எந்த அளவுக்கு இருந்த்து என்பது தெரிய வந்திருக்கும். பெருமாள் திருமேனியிலேயே எண்ணத்தைச் செலுத்தும் ஆழ்வார் போன்றவர்களுக்கு, எந்தப் பெண்ணின் புற அழகும் சலனப்படுத்தாது. இன்னும் சொல்லப்போனால் புற அழகையே உருமாற்றக் கூடிய சக்தி படைத்தவர்கள் ஆழ்வார்கள் என்பதைத் திருமழிசை ஆழ்வார் வரலாற்றின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். ஒரு கிழவிக்கு இளமையைக் கொடுத்தவர் இந்த ஆழ்வார். அந்த கிழவி செய்து வந்த தொண்டில் மனம் குளிர்ந்து அவள் கேட்டுக் கொண்டதன் படி அவளுக்கு இளமை திரும்புமாறு வரம் கொடுத்தார் திருமழிசை ஆழ்வார். அவள் அடைந்த இளமையும், அழகும் எப்படிப்பட்டதென்றால், அந்த நாட்டுப் பல்லவ அரசன் அவள் அழகில் மயங்கி அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வார், சபலத்துக்கு இடம் கொடுத்தவராகச் சித்தரித்து, எழுதியவரது வக்கிர புத்தியைக் காட்டுகிறது.

17.   அடுத்த வக்கிரம், பெரியாழ்வாருக்குப் பொருள் மேல் ஆசையாம். அதற்காகத்தான் மதுரைக்குச் சென்று விவாதத்தில் கலந்து கொண்டாராம். ஆழ்வாரது பெருஞ்செல்வம் அகாரம்தான். எல்லாவற்றுக்கும் ஆரம்பமாகவும், மூலமாகவும் இருக்கின்ற '' என்னும் எட்டெழுத்துக்களால் அறியப்படுகின்ற அகார வாக்யனான நாராயணனையே தனமாகக் கொண்ட அவர், அந்த அகாரத்தையே விவரித்து விவாதத்தில் வென்றார். அந்த விவாதத்திற்குத் தாமாகவே அவர் செல்லவில்லை. அவர் வணங்கி வந்த வடபத்ரசாயி பெருமான் கனவில் தோன்றி அவரைச் செல்லுமாறு பணிக்கவே அவரும் சென்றார். சென்று வென்ற தனத்தையும் வடபத்ர சாயிக்கே உரியது என்று சமர்ப்பித்தார். "வடபெருங்கோயிலுடையான் திரு முன்பே வைத்து 'தேவரீராலே உண்டான தனம் தேவரீருக்கே' என்று தெண்டன் சமர்ப்பித்தார்" என்று ஆழ்வார்கள் சரித்திரத்தைக் கூறும் குரு பரம்பரைப் பிரபாவம் என்னும் நூல் கூறுகிறது. அந்த தனத்தைக் கொண்டுதான் அவர் கோவிலை விரிவாகக் கட்டியிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்டவரை பணத்துக்கு ஆசைப்பட்டு விவாதத்துக்குச் சென்றார் என்று வாய் கூசாமல் சொல்கிறார் செல்வராஜ்!

18.  எல்லாவற்றையும் தியாகம் செய்தால்தான் இறைவனுக்கு அருகாமையில் செல்ல முடியும் என்பது வைணவக் கருத்து. ''சகல தர்மங்களையும் தியாகம் செய்து விட்டு வா, உன்னைப் பீடிக்கும் எல்லா பாபங்ளிலிருந்தும் நான் காப்பாற்றி உனக்கு மோட்சம் தருகிறேன்'' என்று தேர்த் தட்டில் நின்று அர்ஜுன்னுக்கு கிருஷ்ணன் சொன்ன வாக்கைத் தலையாய வாக்காகப் பின்பற்றும் வைணவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவ்வாறு இருக்க, 1000 வருடங்களுக்கு முன் விட்டுசித்தராக இருந்த ஆழ்வார் பணத்துக்கு ஆசைப்பட்டா விவாதத்துக்குச் சென்றிருப்பார்? ஒன்று பாக்கியில்லாமல் எல்லா வித்த்திலும் character assassination செய்திருக்கிறார் செல்வராஜ்.   

19.  பாண்டிய அரசன் ஸ்ரீ வல்லபன் மிகவும் பராக்கிரமம் கொண்டவன். இவன் குண்ணூர், சிங்களம், விழிஞம் போன்ற இடங்களில் போரிட்டு வென்றவன். இவன் பெற்ற ஈழத்து வெற்றியை மகாவம்சம் குறிப்பிடுகிறது. இவனது வெற்றிகளைப் பறை சாற்றும் சின்னமனூர்ச் செப்பேடுகள் "வாடாத வாகை சூடிக் கோடாத செங்கோல் நடப்ப" என்று புகழ்கின்றன. வளையாத செங்கோலை உடைய மன்னன் பிரம்மதேயமான ஊரில் காமக் கண்ணுடனா செல்வான்? இந்த மன்னன் பல போர்களையும் வென்றவன் என்பதைப் பெரியாழ்வாரும் தன் பாடலில் குறித்துள்ளார். "குறுகாத மன்னரைக் கூடி கலக்கி வெங்கானிடைச் சிறுகால் நெறியே போக்குவிக்கும் செல்வன்" என்று கூறுயுள்ளது இம்மன்னையே. அப்படிப்பட்ட வெற்றிகளைப் பெற்ற மன்னன் பெற வேண்டியது ஒன்று இருந்தது. அது மறுமைக்குத் தேவையான செல்வம். ஒருமுறை மதுரை நகரில் இரவு சோதனைச் சென்ற போது திண்ணை ஒன்றில் படுத்திருந்த ஒரு பார்ப்பனனைக் கண்டு 'நீ யார்?' என்று வினவ, அவன் தான் கங்கையாடி வந்த்தாகச் சொன்னான். அவன் கற்றுக் கொண்ட வந்த விஷயத்தைப் பற்றி மன்னன் வினவ, அவன் 'மழைக்காலத்துக்கு வேண்டியதை மற்ற எட்டு மாதங்களிலும், இரவுக்கு வேண்டியதைப் பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும், மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் தேடுக" என்ற பொருள் படும் ஸ்லோகத்தைச் சொன்னான்.  அரசனிடம் எல்லாம் இருந்தது. ஆனால் மறுமைக்கு என்ன வேண்டும் அதை இம்மையில் எவ்வாறு தேட வேண்டும் என்பது தெரியவில்லை. அதைப் பற்றித் தனது புரோகிதரான செல்வ நம்பியிடம் வினவ, அவர் வித்வான்களை அழைத்து, அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம் என்றார். அப்படி வந்தவர்தான் பெரியாழ்வார். அவர் பரத்தத்துவத்தை நிலைநாட்ட, அவரால் ஈர்க்கப்பட்ட அரசன் ஸ்ரீ வல்லபன், அவருடைய சிஷ்யனானான் என்று ஆதார நூல்கள் கூறுகின்றன. அப்படிப்பட்டவன் அவரது மகளான ஆண்டாளைப் பார்த்துக் காமுறுகிறானாம். அவரையே கைது செய்கிறானாம் (அவனது சிப்பாய்கள் ஆழ்வாரைப் பிடித்து கோவில் சன்னிதியிலே நிறுத்தினராம்). இதெல்லாம் என்ன கற்பனையோ! இந்து மதப் பெரியவர்களைக் கேவலப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களால்தான் இப்படியெல்லாம் எழுத முடியும்.

பெருமாளுக்குக் கண்ணடி படக்கூடாதே என்று பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார். அவர் பரத்தத்துவம் நிர்ணயம் செய்தபின், பட்டர்பிரான் என்ற பட்டத்தைப் பெற்று, அரசனது பட்டத்து யானையின் மீது ஊர்வலம் வரும் போது, மகன் பெரும் பெருமையைக் காண, தாய் தந்தையர் நேரே வந்து பார்ப்பது போல, நாராயணனே, பிராட்டியுடன் கருடன் மீது ஆரோஹணித்து அவருக்குக் காட்சி தர, பெரியாழ்வாருக்குக் கவலை வந்து விடுகிறது. அரக்க, அசுரர்கள் வாழும் பூமியாக இருக்கும் கலி காலம் இது. அந்தக் கலியால் இருள் சூழ்ந்திருக்கும் நேரத்தில் ஒளிமயமாக இந்தத் தெய்வம் காட்சி தருகிறானே, இவனுக்குக் கண் பட்டுவிடாதோ, அதனால் தீங்கு வந்து விடாதோ என்று கவலையுற்று, இறைவன் பல்லாண்டு வாழவேண்டும் என்று வாழ்த்துகிறார். திருப்பல்லாண்டு பாடுகிறார். அப்படிப்பட்ட அவருக்கு இந்தக் கலியுக செல்வராஜால் சொல்லடி கிடைக்கிறது. 'பின்னைகொல், நிலமாமகள் கொல், திருமகள்கொல்  பிறந்திட்டாள்" – இவள் நப்பின்னையோ, பூதேவியோ, ஸ்ரீதேவியோ என்று பெரியாழ்வார் ஆசாரியப்பட்ட ஆண்டாளுக்கு, செல்வராஜ் உபயத்தில் புது அரிதாரம் கிடைத்திருக்கிறது.
பெருமாளுக்குக் கண்ணடி படக்கூடாது என்று பதறிய ஆழ்வார் மீது சொல்லடி விழுகிறதே இதுதான் கலியின் இருள் என்பதா? கலி இருளில் ஞானச் சுடர் விள்க்கேற்றப் பாடினாரே அதற்கு இதுதான் கைமாறா? ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு என்று 30 திருப்பாவை பாசுரங்களையும் அறியாதவர்களை இந்தப் பூமி சுமப்பதால் வம்புதான் நேரிடும் என்றார்களே அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறதா?. செல்வராஜ் போன்றவர்களை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறோமே என்று இந்த வையம் அழுது கொண்டுதானே இருக்கும்


நோன்பு என்ற தலைப்பிட்டு, அந்தத் தலைப்பை எப்படியாவது கதைக்குள் நுழைக்க முயன்ற செல்வராஜ், கடைசி வரியில் அதைக் கொண்டு வருகிறார். 'அந்த மூன்று பேர்கள் நோன்பு ஆரம்பமாயிற்று" என்கிறார். அந்த மூன்று பேர், பெரியாழ்வார், ஆண்டாள், ஸ்ரீ வல்லபன் என்பது செல்வராஜனது நினைப்பு. உண்மையில் இவரைப் போன்றவர்களைப் பெற்றதனால், இந்த பூமித்தாய்தான் நோன்பிருக்க வேண்டும் - இனியும் செல்வராஜைப் போன்றவர்கள் பிறக்கக்கூடாது, இப்படிப்பட்டவர்களை தான் சுமக்கக்கூடாது என்று அவள் எப்படி பரிதவித்துக் கொண்டிருப்பாள்? ஆண்டாளாகப் பிறந்து அன்று நமக்கு ஞானச்சுடர் ஊட்டின பூமாதேவி, இன்று அந்தச் சுடரை அணைக்கப்பார்க்கும் எல்லாப் பதர்களிடமிருந்தும் நம்மைக் காக்க நோன்பிருக்கத்தான் வேண்டும்.

44 comments:

Anonymous said...

Well said. If such blasphemy had been perpetrated on other religions, there would have been a huge hue and cry. Unfortunately in India Hindu Gods and epics are free for all to blaspheme on.

kirtimukha said...

Most of the readers will be frustrated at our helplessness in preventing such deliberate conduct in publishing similar articles ridiculing our Faith and portraying the Gods we worship indecently. I was moved to tears reading this concluding paragraph:
இனியும் செல்வராஜைப் போன்றவர்கள் பிறக்கக்கூடாது, இப்படிப்பட்டவர்களை தான் சுமக்கக்கூடாது என்று அவள் எப்படி பரிதவித்துக் கொண்டிருப்பாள்? ஆண்டாளாகப் பிறந்து அன்று நமக்கு ஞானச்சுடர் ஊட்டின பூமாதேவி, இன்று அந்தச் சுடரை அணைக்கப்பார்க்கும் எல்லாப் பதர்களிடமிருந்தும் நம்மைக் காக்க நோன்பிருக்கத்தான் வேண்டும்.
There is a provision in the Criminal Procedure Code, I believe, to prosecute and punish punish the perpretrator. -- MKK

Suren's Blog said...

Thanks to Mr. Selvaraj's nonsensical story, I have managed to learn a lot about Andal Paeriazhwar!

Anonymous said...

Thanks Madam for suc a detailed reply

ஓகை said...

அற்புதமாக எழுதப்பட்டிருக்கும் உங்கள் கட்டுரைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

Jayasree Saranathan said...

From: S. Kalyanaraman
Date: Fri, Jun 29, 2012 at 2:10 PM
Subject: Re: Non-random-Thoughts:Blasphemous story on Andal and Periyaazhwar. (please read and circulate)
To: jayasree


ஆண்டாளின் அருள் உங்களை காப்பாற்றும். நன்றி. கல்யாணராமன்

Jayasree Saranathan said...

From: BR Haran
Date: 2012/6/29
Subject: ஆண்டாள் நோன்பும், அடாவடிக் கதையும் - ஜெயஸ்ரீ சாரநாதன்
To:


ஜெயஸ்ரீ சாரநாதனின் அறச்சீற்றம்!

காமக் கண்ணன் செல்வராஜின் கண்களுக்குள் ஆண்டாளின் தெய்வத்தமிழை ஆதாரங்களுடன் காய்ச்சி ஊற்றுகிறார் ஜெயஸ்ரீ சாரநாதன்.

ஒரு துளியேனும் பொறுப்பிருக்குமானால் மானம் கெட்ட செல்வராஜ் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீஜி!

தமிழை ஆண்ட கோதை ஆண்டாளின் பரிபூரண அருள் தங்களுக்கு என்றும் உண்டு!

நன்றி, அன்புடன்

ஹரன்

Nithyasamsari said...

Wonderful article and a fitting reply to non believers like (D)evil selvaraj.Hats off to sree Jayasree saranathan for this "Sammattiyadi" or nailing the last nail on christian Selvaraj's coffin.

Vasudevan