Friday, July 19, 2024

அறிந்து கொள்வோம் யுகங்களை!

யுகம் என்றால் என்ன?

‘யுக்மா’ என்னும் சம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து யுகம் என்ற சொல் வந்தது.

யுக்மா என்றால் ‘இரட்டை’ (twins) அல்லது ‘ஜோடி’ (pair) என்று பொருள்.

அதிலிருந்து வந்த யுகம் என்னும் சொல்லுக்கு ஜோடி என்றும் பொருள், மிகப் பெரிய காலம் அல்லது பேரூழி (aeon) என்றும் பொருள்.

யுகம் என்பது ஜோடி என்னும் பொருளில் வரும் பொழுது, அதற்கு  ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசை என்று இரண்டு கூறுகள் அல்லது ஜோடி இருக்கும்.

அவ்வாறு இருக்கும் இரட்டைக் கூறுகளை ஒரு நுகத்தடியாக (yoke) இணப்பதுதான் யுகம்.  

அதன்படி ஒரு நாள் என்பது ஒரு யுகம், ஏனென்றால் அது ஒரு பகல் நேரத்தையும் ஒரு இரவு நேரத்தையும் உள்ளடக்கியது.

ஒரு மாதம் (சந்திர மாதம்) என்பது ஒரு யுகம், ஏனெனில் அது சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை பக்ஷங்களைக் கொண்டது.

ஒரு வருடம் என்பது ஒரு யுகம், ஏனென்றால் அது இரண்டு அயனங்களைக் கொண்டது.

இந்த அர்த்தத்தைத் தவிர யுகம் என்பதற்கு வேறொரு அர்த்தமும் உள்ளது. அது அளத்தல் என்னும் பொருள். அளப்பது என்றால் 86 அங்குலம் ஒரு யுகம் என்று சுல்பசூத்திரம் சொல்கிறது. அது போல உலகத்தின் வயதை அளப்பதற்கும், மாபெரும் காலத்தை அளப்பதற்கும் யுகம் என்பதே அளவுகோலாக இருக்கிறது.

இதைத் தமிழில் ‘பேரூழி’ என்றும், ஆங்கிலத்தில் AEON அல்லது EPOCH என்றும் குறிப்பிடுகிறார்கள்.  

காலத்தை அளக்கும் போது, யுகம் என்பது மூன்று விதமாக இருக்கிறது.

அவையாவன:

1.      ஐந்தண்டு யுகம்

2.      தர்ம யுகம்

3.      திவ்ய யுகம் (பேரூழி)

 

இவற்றுள், பலரும் பொதுவாக அறிந்துள்ளது திவ்ய யுகம் என்னும் பேரூழி ஆகும்.

அந்தக் கால அளவில்தான் இராமன் பிறந்தான் என்று பலரும் நினைக்கவே, முதலில், திவ்ய யுகத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.

 

1.     திவ்ய யுகம்.

 

இந்த யுகம் பெரும் காலத்தை, அதாவது உலகின் தோற்றம், மற்றும் படைப்புக் கடவுளான பிரம்மாவின் வயதை அளக்கப் பயன்படுவது. இதனுடைய அளவீடு கணிதம் சார்ந்தது. வானவியலில் பேசப்படுவது. இது குறித்த பொது விவரம் பல புராணங்களில் இருந்தாலும், இந்த யுகத்தைக் கணக்கிடும் கணித முறைகள் ஜோதிட சித்தாந்தங்களில்தான் உள்ளன. எந்தப் புராணமும், சமய நூலும், இந்தத் திவ்ய யுகம் கணக்கிடும் வழிமுறைகளைப் பற்றிப் பேசுவதில்லை. இது முழுவதும் கணிதம் சார்ந்தது.

 

இதன் அடிப்படை வேத மரபிலுள்ள நவ கிரகங்களின் சாரம்.

இராகு கிரகம் தவிர்த்து, ஏனைய எட்டு கிரகங்களான சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி, கேது ஆகியவை மேஷ ராசியின் ஆரம்பத்தில் ஒன்று சேர்ந்தால், கிருத யுகம் ஆரம்பிக்கும். இதனை ‘கிரஹ சாமான்யம் யுகம்’ என்கிறார் ஆர்யபட்டர். இந்தச் சேர்க்கை புதன் கிழமையன்று நடந்தது என்று தன்னுடைய ஜோதிட சித்தாந்த நூலான ஆர்யபட்டீயத்தில் எழுதியுள்ளார். (ஆர்யபட்டீயம் – 1- 3 & 4).

 

இராகுவும், கேதுவும் ஒன்றுக்கொன்று 180 பாகைகள் எதிரெதிராக இருப்பதால், இராகு இல்லாமல், கேதுவுடன் மீதமுள்ள கிரகங்கள் சமமாக இருக்கும் பொழுது கிருத யுகம் ஆரம்பிக்கும் என்கிறார். சமமாக என்றால் வானத்தில் பார்க்கும் பொழுது, ஒன்றின் பக்கத்தில் ஒன்றாக, ஒரே சரியாக, இந்தப் படத்தில் உள்ளது போலத் தெரியும். ஜாதகக் கட்டத்தில், மேஷ- மீன சந்திப்பில் இந்த எட்டு கிரகங்கள் இருக்கும்.

 

மற்றொரு முக்கியமான ஜோதிட சித்தாந்த நூலான சூரிய சித்தாந்தம், கிருத யுகத்தின் முடிவிலும், மேற்சொன்ன கிரகங்கள் அனைத்தும் மேஷ ராசியின் ஆரம்பத்தில் இணையும் என்கிறது. (சூ-சி: 1-57).

இந்த சித்தாந்தங்கள் கொடுக்கும் விவரங்களின் படி, அடிப்படை அளவு, 4,32,000 சூரிய வருடங்கள் ஆகும்.

இதை ஒன்று என்ற பொருள்படும் கலி என்கிறார்கள்.

இரண்டு என்பதை துவாபரம் என்ற சொல்லால் குறிக்கிறார்கள்.

மூன்று என்பது திரேதா.

நான்கு என்பது கிருதம்.

மஹாபாரதத்தில் சகுனியும், தருமரும் விளையாடும் சொக்கட்டானில், (அக்ஷ விளையாட்டு என்று மஹாபாரதம் குறிக்கிறது)  ஒன்றா, இரண்டா, மூன்றா, நான்கா என்று எண்ணிக்கையைச் சொல்லித்தான் காயை உருட்டுவார்கள். அதைக் கலி, துவாபரம், திரேதா, கிருதம் என்று சொல்லித்தான் உருட்டுவார்கள்.

ஒன்று என்று பொருள்படும் கலியின் அளவு 4,32,000 வருடங்கள். அந்த அளவு காலத்தை அளப்பதால் அது யுகம். கலி யுகம் ஆகும்.

அது மேஷத்தின் ஆரம்பத்தில் எட்டு கிரக சேர்க்கையுடன் ஆரம்பிக்கிறது. மீண்டும் அதே இடத்தில் அதே மாதிரி சேர்க்கை நடக்க 4,32,000 வருடங்கள் ஆகும். இதை இன்னும் புரிந்து கொள்ள, நீங்கள் இதைப் படிக்கும் நேரத்தைப் பாருங்கள். இந்த கணத்தில் (க்ஷணத்தில்) இருக்கும் கிரக அமைப்புகளைப் பாருங்கள். எவை எவை எந்த ராசியில், எந்த பாகையில் இருக்கின்றன என்று பாருங்கள். இதே அமைப்பு மீண்டும் வர வேண்டுமென்றால், 4,32,000 வருடங்கள் ஆகும். அதற்குள் அந்த கிரகங்கள் மீண்டும் இந்த கணத்தில் இருப்பதைப் போல வராது.

அதுபோல இராமன் பிறந்த கிரக சூழ்நிலைகள் பொ. மு. 5114 இல் இருக்கின்றன. அதே அமைப்பு அதற்கு முன் பொ. மு. 4,37,114  (5114 + 4,32,000) ஆம் ஆண்டுதான் தோன்ற முடியும். எனவே ஒன்பது கிரக அமைப்பு எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை தோன்றுகிறது என்ற அடிப்படையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

இந்த 4,32,000 என்பது ஒரு அளவுகோல்.

கலி அளவு ஒன்று = 4,32,000

அதன் இரண்டு மடங்கு துவாபரம் =4,32,000 + 4,32,000

அதன் மூன்று மடங்கு திரேதா = 4,32,000 + 4,32,000 + 4,32,000

அதன் நான்கு மடங்கு = 4,32,000 + 4,32,000 + 4,32,000 + 4,32,000

இவை அனைத்தையும் கூட்டினால் அதற்கு சதுர் மஹா யுகம் என்று பெயர்.

அதன் அளவு 43,20,000 வருடங்கள்.

 

இங்கு ஒன்றைக் கவனித்திருப்பீர்கள்.

இந்த யுகக் கணக்கில் ஏறுமுகம், இறங்கு முகம் கிடையாது,

அதாவது, இரட்டை அல்லது ஜோடி கிடையாது.

அதனால் இது பேரூழி (AEON) அல்லது பெரும் காலத்தை அளக்கப் பயன்படுவது.

 

பெருங்காலத்தை எதற்காக அளக்க வேண்டும்?

படைப்புக் கடவுள் பிரம்மன் எத்தனை காலம் படைப்புத்தொழிலைச் செய்வான் என்பதை அறிய.

 

எனவே இந்தக் கால அளவு மேலும் செல்கிறது.

ஆயிரம் மடங்கு சதுர் யுகம் பிரம்மாவின் ஒரு பகல் அல்லது ஒரு இரவு.

இதனை ஒரு கல்பம் எங்கிறோம்.

இதன் அளவு 432,00,00,000 வருடங்கள். அதாவது 432 கோடி அல்லது 4.32 பில்லியன்.

இப்பொழுது நடக்கும் ஸ்வேத வராஹ கல்பம் ஆரம்பித்து 1.97 பில்லியன் வருடங்கள் ஆகின்றன.

 

ஒரு கல்பம் என்பது, ஏறக்குறைய உலகம் தோன்றிய காலம்.

இரண்டு கல்பங்கள் என்பது பிரம்மாவின் ஒரு நாள்.

அது ஏறக்குறைய சூரியனுடைய வயது.

 

பெரு வெடிப்பு (Big Bang) உண்டாகி, இப்பொழுது நாம் இரண்டாம் நாள் பகல் நேரத்தில் இருக்கிறோம் (பிரம்மனின் பகல் நேரத்தில் உயிரினங்கள் படைக்கப்படுகின்றன.

 

இதுவரை பிரம்மனுக்கு 50 வயது ஆகிவிட்டது என்பதே நூல்கள் சொல்லும் செய்தி.

அதை அளக்க இந்த யுகக்கணக்கு பயன்படுகிறது.

1 நாள் = 8.64 பில்லியன் வருடங்கள்

360 நாள் = 1 வருடம் = 8.64 x 360 = 3110.4 பில்லியன் வருடங்கள்.

50 வருடம் = 3110.4 x 50 = 1,55,520 பில்லியன் வருடங்கள்.

இந்தக் கணக்கில் தெய்வமான பிரம்மனின் காலம் அளக்கப்படுகிறது.

இந்தக் கணக்கில் பிரபஞ்சமும், நக்ஷத்திரங்களும் அடக்கம்.

நக்ஷத்திரங்களே புருஷனுடைய ரூபம், அவையே தெய்வங்கள்.

ஆகவே, தெய்வத்திற்கும், வேத வேள்விக்கும், பிரபஞ்சத்தில் மற்றுமொரு காலக் கணக்கில் இருக்கும் பித்ரு லோகத்தில் இருப்பவர்களுக்கும், இந்தக் கால அளவில் சங்கல்பம் செய்து வழிபடுகிறோம்.

இது மக்களுக்கானது அல்ல. தெய்வங்களுக்கானது என்பதால் இதனை திவ்ய யுகம் என்கிறோம். இது பெரும் காலத்தைக் கணிக்கும் AEON அல்லது EPOCH.

இந்த காலக் கணக்கில் இதிஹாசங்ககளில் எங்குமே இராமன் காலத்தைச் சொல்லவில்லை.

இந்த யுகத்தைக் கணக்கிட, கிரகங்களைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். சனி கிரகமும், புதன் கிரகமும் கடைசியாகக் கண்டு பிடிக்கப்பட்டது என்பதை நூல்கள் மூலம் அறிகிறோம். அதற்குப் பிறகுதான் கிரக சுழற்சியைக் கவனித்து, கணக்கிட்டிருக்கிறார்கள். அது எப்பொழுது என்பதை எனது மஹாபாரத புத்தகத்தில் படிக்கலாம். அல்லது இந்த லிங்கில் படிக்கலாம். (https://jayasreesaranathan.blogspot.com/2021/03/yuga-computation-took-place-only-after.html )

 

2.     ஐந்தாண்டு யுகம்

அடுத்து ஐந்தாண்டு யுகத்தைப் பார்ப்போம். இந்தக் கணக்கில், சூரியனும் சந்திரனும் வானத்தின் ஒரு புள்ளியில் இருந்து ஒன்றாகத் தங்கள் பயணத்தைத் தொடங்கியபோது, அவை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான்

அதே புள்ளியில் மீண்டும் இணைகின்றன. இதனை பஞ்சவர்ஷத்மக யுகம் அதாவது ஐந்தாண்டு யுகம் என்றனர்.

 

இந்த யுகமே இராமர், கிருஷ்ணர் ஆகியோரது காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதனை வேத யுகம் அல்லது வேதாங்க யுகம் என்றும் சொல்வதுண்டு. இந்த யுகத்தைக் கணிக்கும் விவரங்ககளை ரிக் வேதாங்க ஜோதிடம் என்று லகத மஹரிஷி கொடுத்துள்ளார். இந்த நூல் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நூல் தரும் யுகக் கணக்கு இன்றைக்கு 3500 வருடங்களுக்கு முன், அதாவது பொ.மு. 1500 வாக்கில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறது எனவே இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் வரையில் இந்த யுகமே வழக்கில் இருந்து வந்துள்ளது என்று தெரிகிறது.  

 

ஐந்தாண்டு யுகத்தில் உள்ள இரட்டை

இந்த யுகம் சூரியன் உத்தராயணத்தை அடையும்போதோ அல்லது அடைந்த பிறகோ வரும் அமாவாசையைக் கணக்கில் கொள்கிறது. அந்த அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும். அதற்கு மறுநாள் இந்த யுகத்தில் முதல் வருடம் ஆரம்பிக்கும். அது வளர்பிறை பிரதமை.

சூரியனது சாரமும், சந்திரனது சாரமும் வேறு வேறு வேகத்தில் இருப்பவை. சூரியன் ஒரு நாளுக்கு ஒரு பாகை நகர்கிறான். இவ்வாறு முப்பது நாட்களில் முப்பது பாகைகள் நகர்கிறான். ஆனால் அதே முப்பது நாட்களில், சந்திரன் முப்பத்தோரு பாகைகள் நகர்ந்து விடுகிறான்.

நாள் கணக்கில் சொல்வதென்றால். சூரியன் ஒரு மாதம் நகர்ந்தால், அதே நேரத்தில் சந்திரன் ஒரு மாதம் மற்றும் ஒரு நாள் நகர்ந்திருப்பான். இவ்வாறு, ஒரு வருடத்தில் (12 மாதங்கள்) சந்திரன் 12 நாட்கள் அதிகப்படியாக கடந்திருப்பான். இரண்டு வருடத்தில் 24 நாட்கள் அதிகப்படியாகக் கடந்திருப்பான்.

இரண்டரை வருடத்தில் (30 மாதம்) முப்பது நாட்கள், அதாவது ஒரு மாதம் அதிகம் கடந்து சென்றிருப்பான். அப்படி அதிகப்படியாக சென்ற மாதத்தை, அதிக மாதம் என்று கழித்து விடுகிறோம்.

அடுத்த இரண்டரை வருடத்தில் இன்னொரு அதிக மாதம் வந்து விடும்.

அதையும் கழித்தால்தான். இரண்டரை + இரண்டரை = ஐந்து வருட முடிவில், சந்திரனும், சூரியனும் மீண்டும் ஆரம்பித்த புள்ளியில் சேர்வார்கள்.

எனவேதான் ஐந்தாண்டு காலம், இரட்டை எனப் பொருள்படும் ஒரு யுகம் எனப்பட்டது.

இதில் ஒவ்வொரு வருடத்துக்கும் ஒரு பெயர் உண்டு. அவையாவன:

1.      ஸம்வத்ஸரம்

2.      பரிவத்ஸரம்

3.      இடவத்ஸரம்

4.      இத்வத்ஸரம்

5.      வத்ஸரம்

 

இந்த ஐந்து வருட யுகத்தைத்தான் மஹாபாரதத்தில் பீஷ்மர் கணக்கிடுவார்.

தங்களது வனவாசம் முடிவதற்கு முன்பே அர்ஜுனன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விட்டான் என்று கௌரவர்கள் சொன்னபொழுது, பீஷ்மர் ஒரு கணக்கு சொல்வார்.

“காலச் சக்கரம் காலங்கள், காஷ்டங்கள், முஹூர்த்தங்கள், நாட்கள், பதினைந்து நாட்கள், மாதங்கள், விண்மீன்கள், கோள்கள், பருவங்கள், வருடங்கள் என அதன் பிரிவுகளுடன் சுழல்கிறது. அவற்றின் பகுதியளவு அதிகப்படியான விலகல்களின் விளைவாக, ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இரண்டு மாதங்கள் அதிகரிக்கிறது. இதைக் கணக்கிட்டால், பதின்மூன்று ஆண்டுகளில் ஐந்து மாதங்கள் மற்றும் பன்னிரண்டு இரவுகள் அதிகமாக இருக்கின்றன.” என்கிறார் பீஷ்மர். (4-47-1 முதல் 5 வரை)

மஹாபாரத காலத்தில் இந்த ஐந்தாண்டு யுகமே பயன் பாட்டில் இருந்தது. இதன் அடிப்படையில் உருவாக்கிய மஹாபாரத பஞ்சாங்கத்தை எனது ‘மஹாபாரதம் பொ.மு. 3136’ என்னும் புத்தகத்தில் காணலாம். அதை இங்கு கொடுத்துள்ளேன்.

 

அப்பொழுது உத்தராயணத்தில்தான் வருடம் ஆரம்பித்தது. தற்காலத்தில் உள்ளது போல சித்திரை மாதப் பிறப்பில் அல்ல.

அந்த வருடப்பிறப்பின் போது, அவர்கள் செய்த சங்கல்பம் ‘துவாபரே யுகே’ என்று ஆரம்பிக்கவில்லை. ‘ஸம்வத்ஸரே’ என்று முதல் வருடத்திலும், ‘பரிவத்ஸரே’ என்று இரண்டாவது வருடத்திலும், அவ்வாறே, அந்தந்த வருடப்பெயரால் அந்தந்த வருடத்திலும் சங்கல்பம் செய்திருக்க வேண்டும்.

பீஷ்மர் வாக்கு மட்டுமல்லாமல், கிரக சூழ்நிலையைச் சொல்லும்  ஸம்வத்ஸர ஸ்தாயினௌ ச க்ரஹௌ ப்ரஜ்வலிதௌ…’ (6-3-25) என்று தொடங்கும் ஸ்லோகத்தில் ஸம்வத்ஸரம் என்னும் முதல் வருடத்தில் இருந்த கிரக அமைப்பை மஹாபாரதம் சொல்கிறது. இங்கு ஸம்வத்ஸரம் என்பது வருடம் என்ற அர்த்தமல்ல. ஐந்தாண்டு யுகத்தின் முதல் வருடம் என்ற அர்த்தத்தில் வருகிறது.

 

ரிக் வேதத்தில் ஐந்தாண்டு யுகம்.

ரிக்வேதம் முதல் மண்டலத்தில் இதே யுகக் கணக்கு வருகிறது. ஒருவரது ஆயுளைக் குறிக்கவும் இந்த யுகக் கணக்கு பயன்பட்டது என்பதை இந்த ஸ்லோகம் தெரிவிக்கிறது.

“தீர்கதமா மாமதேயோ ஜுஜுர்வான் தஸமே யுகே” (1-158-6) என்னும் இந்த ஸ்லோகம் தீர்கதமஸ் என்னும் ரிஷி தனது பத்தாவது யுகத்தில் மூப்பு எய்தினார் என்று சொல்வது, பத்தாவது யுகமான, ஐம்பதாவது வயது முதல் ஐம்பத்தைதுக்குள் அவர் மூப்பு எய்தினார் என்று தெரிவிக்கிறது. அதாவது தீர்கதமஸ் காலத்தில் ஐந்தாண்டு யுகம் பயன்பாட்டில் இருந்துள்ளது என்று தெரிகிறது.


இராமன் காலத்தில் ஐந்தாண்டு யுகம்

தீர்கதமஸ் காலத்தில் ஐந்தாண்டு யுகம் பயன்பாட்டில் இருந்ததென்றால், இராமன் காலத்தில் அந்த யுகம் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி வருகிறது.

ஆனால் தீர்கதமஸைப் போலவே,  வாயு புராணத்தில் இராமனது சந்ததியினரைச் சொல்லும் இடத்தில், சீக்ரஹனின் மகனான மரு என்பவன் கலாபகிராமம் என்னும் இடத்தில் யோகத்தில் ஆழ்ந்து விட்டான் என்றும், பத்தொன்பதாவது யுகத்தில்தான் அரசப் பொறுப்புகளை ஏற்று க்ஷத்திரிய வம்சத்தை மிளிரச் செய்தான் என்றும் சொல்லப்பட்டுள்ளது. (2-26-209) பத்தொன்பாவது யுகம் என்பது 95 வயதுக்கு மேல் என்று அர்த்தம். எனவே ஐந்தாண்டு யுகமே இராமன் காலத்திற்குப் பின்பும் பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது என்று தெரிகிறது.

மஹாபாரதத்தில் காட்டப்பட்டுள்ளது போல இராமாயணத்தில் எந்த யுகக் கணக்கும் சொல்லப்படவில்லை. ஆனால் தீர்கதமஸின் காலத்தை அறிந்து கொண்டால் இராமாயண கால யுகக் கணக்கைச் சொல்ல முடியும்.

தீர்கதமஸுக்குப் பிறந்தவர்களே அங்கன், வங்கன், கலிங்கன், புண்டரன், சுங்கன் என்று விஷ்ணு புராணம் (4-18) தெரிவிக்கிறது. அந்தப் பெயர்களைக் கொண்டே அவர்கள் அங்க நாடு, வங்க நாடு, கலிங்க நாடு, புண்டர நாடு, சுங்க நாடு என்ற நாடுகளையும் உருவாக்கினார்கள் என்று விஷ்ணு புராணம் மேலும் தெரிவிக்கிறது.

இந்த நாடுகள் வால்மீகி இராமாயண காலத்தில் இருந்திருக்கின்றன. கைகேயியை சமாதானப்படுத்தும் போது, தசரதன் அங்க, வங்க நாடுகளில் உள்ள செல்வம் வேண்டுமா, உனக்குக் கொடுக்கிறேன் என்கிறார் (வா.இரா: 2-10-37)

கிஷ்கிந்தா காண்டத்தில், வங்க, கலிங்க, புண்டர நாடுகளில் சீதையைத் தேடுங்கள் என்று சுக்ரீவன் வானரர்களிடம் சொல்கிறான் (வா-இரா: 4-41-11).

இந்தப் பெயர்களைக் கொண்ட நாடுகள் இராமன் காலத்தில் இருந்தன என்றால், அவற்றை உருவாக்கியவர்களுக்குத் தந்தையான தீர்கதமஸ் இராமன் காலத்துக்கு முற்பட்டவர் என்று தெரிகிறது.

தீர்கதமஸ் காலத்தில் ஐந்தாண்டு யுகம் இருந்தது என்று ரிக் வேதம் காட்டுவதால், அவருடைய காலத்துக்கும், ஐந்தாண்டு யுகம் பின்பற்றப்பட்ட மஹாபாரத காலத்துக்கும் இடையேயான இராமாயண காலத்தில் ஐந்தாண்டு யுகமே பின்பற்றப்பட்டு வந்தது என்பது தெரிகிறது.

இராமன், திரேதா யுகே என்று சங்கல்பம் செய்யவில்லை.

ஸம்வத்ஸரே, பரிவத்ஸரே என்றுதான் சங்கல்பம் செய்திருக்கிறான்.

அப்படியென்றால் இராமன் திரேதா யுகத்தைச் சேர்ந்தவன் என்ற கருத்து எப்படி உருவானது?

 

இராமாயணத்தில் யுகக் கருத்து.

இந்தக் கேள்விக்குப் பதில் பெற, நாம் வால்மீகி இராமாயணத்தையே தேடுவோம்.

இராமாயணத்தின் முதல் ஆறு காண்டங்களில் இரண்டு முறைதான்  யுகம் என்ற பேச்சே வருகிறது.

முதல் காண்டமான பால காண்டத்தின் முதல் ஸர்கத்தில் நாரதர், வால்மீகிக்கு இராமனது கதையைச் சொல்கிறார். அப்பொழுது, கதை முடிவில் இராமனது ஆட்சியைப் பற்றிச் சொல்லும் போது, மக்கள் அனைவரும் கிருத யுகத்தில் இருப்பது போல மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்று,

“நித்யம் ப்ரமுதிதா ஸர்வே யதா க்ருத யுகே ததா(வா-இரா: 1-1-93)

என்கிறார். அதாவது இராமன் ஆண்ட பொழுது கிருத யுகம் இருந்தது என்கிறார்.

அடுத்த விவரம் யுத்த காண்டத்தில், இராமன் இலங்கையை அடைந்து விட்டான் என்று தெரிந்தவுடன், இராவணனிடம், அவன் பெரிய தாத்தாவான மால்யவான் சொல்வது.

“தர்மோ வை க்ரஸ்தே அதர்மம் தத க்ருதம் அபூத் யுகம்/

அதர்மோ க்ரஸ்தே தர்மம் தத திஷ்ய ப்ரவர்ததே // (வா-இரா: 6-35-14)

“தர்மம், அதர்மத்தை விழுங்கினால் அங்கு க்ருத யுகம் இருக்கும்.

அதர்மம், தர்மத்தை விழுங்கினால் அங்கு திஷ்ய யுகம் உண்டாகும்” 

என்கிறார்.

திஷ்ய யுகம் என்பது புஷ்ய யுகம் எனப்படும் கலியுகம் ஆகும்.

 

மேலும் அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறார்,

இராவணா, நீ செல்லுமிடமெல்லாம் தர்மம் அழிக்கப்பட்டு அதர்மமே இருக்கிறது என்று,

“தத் த்வயா சரதா லோகான் தர்மோ விநிஹதோ மஹான்

அதர்ம ப்ரக்ரீதஸ் ச தேன அஸ்மத் பலின பரே// (வா-இரா: 6-35-15)

என்கிறார்.

முந்தின ஸ்லோகத்தில் மால்யவான் சொன்னதைப் போல இராவணன் செல்லுமிடமெல்லாம் கலியுகம் இருந்தது. அதனால் அவனுடைய எதிரிக்கு (இராமனுக்கு) பலம் அதிகமாக இருக்கிறது என்கிறார்.

அதாவது இராமனிடம் தர்மம் அதிகமாக இருப்பதால் அவன் இருக்குமிடம் க்ருத யுகமாகவும், இராவணனிடம் அதர்மம் அதிகமாக இருப்பதால் அவன் இருக்குமிடத்தில் கலி யுகம் இருப்பதாகவும் சொல்கிறார்.

இதுதான் யுகம் பற்றி இராமாயணம் சொல்வது. மஹாபாரதத்தில் பல இடங்களில் சொல்லப்படுவது.

இனி இந்த தர்மம் சார்ந்த யுகம் என்னவென்று பார்ப்போம்.


3.     தர்ம யுகம்.

 

தர்ம யுகத்தைப் புரிந்துகொள்ள புராணங்களே சிறந்த ஆதாரங்கள். வாயு புராணம் (1.57) மற்றும் பிரம்மாண்ட புராணம் (1.29) ஆகிய இரண்டும், தர்மத்தின் அடிப்படையில் யுகங்களைச் சொல்கின்றன. மஹாபாரதம் வன பர்வத்தில் பாண்டவர்களைச் சந்திக்கும் மார்கண்டேய மஹரிஷி, வாயு புராணத்தில் காலப் பிரமாணம் எவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளதோ அவ்வாறே சொல்கிறேன் என்பார். புராணங்கள் பல இருந்தாலும், தர்மம் சார்ந்த யுகத்தைப் பற்றி இந்த இரண்டு புராணங்கள் விவரிப்பது, இதிஹாசங்களிலும் இடம் பெறுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

 

நான்கு யுகங்களுக்கு (கிருதம், திரேதா போன்றவை) ஆறு அம்சங்கள் உள்ளன என்று கூறுகின்றன.

1. யுகம்

2. யுகங்களின் வேறுபாடு (யுக பேதம்)

3. யுக தர்மம் (யுகத்தின் தனித்துவமான பண்புகள்)

4. யுக சந்தி (யுகங்களின் சந்திப்பு)

5. யுக சத்யாம்ஸம்  (சந்தியின் ஒரு பகுதி)

6. யுக சந்தானம் (இரண்டு யுகங்களின் சேர்க்கை)

 

இந்த ஆறு அம்சங்களையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

இந்த யுகக் கணக்கில் இரட்டை அல்லது ஜோடி வருகிறது.

தர்மமும், அதர்மமும் இணைந்து யுகமாக இருக்கிறது.

 

தர்மமும் அதர்மமும் வெவ்வேறு விகிதத்தில் சேரும் போது வெவ்வேறு யுகங்கள் உண்டாகின்றன.  

தர்மம் : அதர்மம்

கிருத யுகத்தில் 4:0

திரேதாவில் 3:1,

துவாபரத்தில் 2:2,

கலியுகத்தில் 1:3 என்ற விகிதத்தைக் கொண்டுள்ளது.

 

இதை பின்வரும் வழியிலும் சொல்லலாம்:

 

கிருதம் = 1 பங்கு தர்மம் + 0 அதர்மம்

திரேதா = 3/4 பங்கு தர்மம் + 1/4 அதர்மம்

துவாபரம் = 1/2 தர்மம் + 1/2 அதர்மம்

கலி = 1/4 தர்மம் + 3/4 அதர்மம்

 

மேலே சொன்ன ஆறு அம்சங்களில், இரண்டாவது அம்சம் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான விகிதத்தில் உள்ள வேறுபாட்டின் காரணமாக எழும் யுகங்களுக்கிடையேயான வேறுபாடுகளைப் பற்றியது. இந்த வேறுபாடு சில நேரங்களில் மாறுபடலாம், மாறுபாடு அளவு நீடிக்கும் வரை மற்றொரு யுகம் தோன்றுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. இவ்வாறாக இராமன் இருக்குமிடத்தில் கிருத யுகம் இருந்தது. இராவணன் சென்ற இடமெல்லாம் கலியுகம் தோன்றியது.

 

மூன்றாவது அம்சமான யுக தர்மம் ஒவ்வொரு யுகத்திற்கும் தனித்துவமானது. இது அடிப்படையில் குணத்தின் ஆதிக்கத்தால் ஏற்படுவது.

கிருதத்தில் சத்வ குணமும்,

திரேதாவில் ராஜஸமும்,

துவாபரத்தில் ராஜஸ- தாமஸ கலப்பும்,

கலியுகத்தில் தாமஸம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. 

 

நான்காவது அம்சமான யுக சந்தி என்பது, ஒரு யுகத்தின் தர்மம் நான்கில் ஒரு பங்காக வீழ்ச்சியடையும் போது தோன்றுகிறது, இது அந்த யுகத்தின் தர்மம் மற்றும் அதர்மத்தின் விகிதத்தை தலைகீழாக மாற்றுகிறது.

 

இதைத் தொடர்ந்து ஐந்தாவது அம்சமான சந்தியாம்சம் வருகிறது, சந்தி காலத்தில் ஏற்கனவே வீழ்ச்சியடைந்த யுக தர்மம் நான்கில் ஒரு பங்காக மேலும் குறைகிறது. ஆது சந்தியாம்சம் ஆகும். சந்தியாம்சம் என்றால் சந்தியின் ஒரு பகுதி என்று பொருள். எனவே, இது சந்தியில் இருக்கும் தர்மத்தின் அளவில் மேலும் சரிவைக் காட்டுகிறது.

 

சந்தியாம்ச காலத்தில் இருக்கும் தர்மத்தின் எஞ்சிய பகுதி அடுத்த யுகத்தின் தர்மமாக மாறுகிறது. இது யுக சந்தானம் எனப்படும் ஆறாவது அம்சமாகும். இந்த காலக்கட்டத்தில், முந்தைய யுகத்தின் சந்தியாம்சமும், அடுத்த யுகத்தின் தொடக்கமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து உள்ளது.

 

அவ்வாறு புதிய யுகம் வந்துவிட்டதா என்பதை இந்த காலக்கட்டத்தின் அரசன் அல்லது நடத்தை விதிகள் காட்டுகின்றன.

எனவே, இந்த வகைப்பாட்டிற்கு உறுதியான வரையறுக்கும் வரம்பு (Limit) இல்லை. சட்டத்தின் ஆட்சி, மற்றும் தர்மத்தின் அளவுகோல் மட்டுமே புதிய யுகம் தொடங்கியுள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.

 

யுக தர்மம் எவ்வாறு அதன் சந்தி மற்றும் சந்தியாம்சத்தில் குறைகிறது என்பதைப் பின்வருமாறு கூறலாம்:

 

கிருத யுகம் – தர்மம் 1 பகுதி +0 அதர்மம்.

கிருத ஸந்தி – 1/4 தர்மம்

கிருத ஸந்தியாம்சம் = 1/4 இல் 1/4 = 1/16

கிருத யுக தர்மத்தின் 1/16 பங்கு, திரேதா யுகத்தின் தர்மமாகிறது.

 

திரேதா யுகத்தில் 3/4 தர்மமும் 1/4 அதர்மமும் இருப்பதால், அதன் தர்மப் பகுதி கிருத யுக தர்மத்தின் 1/16 க்கு மட்டுமே சமம்.

 

திரேதா சந்தியில் இந்தத் தர்மம் மேலும் 1/4 பங்காகக் குறைகிறது

அதாவது திரேதா யுகத்திலுள்ள கிருத யுக தர்மத்தின் அளவான 1/ 64 என்பது

திரேதா ஸந்தியாம்சத்தில் ¼ பங்காகிறது.

திரேதா சந்தியாம்சம் = 1/64 இல் 1/4 = 1/256

 

திரேதா யுகத்தின் முடிவில் கிருத யுகத்தின் 1/256 தர்மம் மட்டுமே எஞ்சியுள்ளது.

 

இது துவாபர யுகத்தில் 1/2 பங்கு தர்மமும் 1/2 பங்கு அதர்மமும் கொண்ட தர்மத்தின் அளவாகிறது

எஞ்சியிருக்கும் கிருத தர்மத்தின் அடிப்படையில் தொடர்வதன் மூலம்,

துவாபர சந்தி = 1/256 இல் 1/4 தர்மம் = 1/1024

துவாபர ஸந்தியாம்சம் = 1/1/1024 இல் 1/4 = 1/4096

 

மகாபாரதப் போர் துவாபர சந்தியில் நடந்தது என்றால், அப்பொழுது கிருத யுக தர்மத்தில் 1/1024 பங்கு மட்டுமே இருந்தது என்று அர்த்தம்.

 

துவாபர சந்தியாம்சம் = 1/4096 = கலி யுக தர்மம் 1 பங்கு. (அப்பொழுது அதர்மம் ¾ பங்கு).

 

எனவே கலி யுகத்தில் கிருத யுகத்தில் இருந்த தர்மத்தில் 4096 -இல் ஒரு பங்குதான் இருக்கிறது என்று அர்த்தம்.

 

இராமாயணமும், மஹாபாரதமும் நிகழ்ந்த காலங்கள்.

 

இந்த வகையான சந்தி காலங்களில்தான் இராமாயணமும், மஹாபாரதமும் நடந்தன. இதற்கு ஒரே ஒரு தரவுதான் இதிஹாசங்களில் உள்ளன.

 

மஹாபாரதத்தில், ஸுத முனிவர் மற்ற ரிஷிகளுக்கு மஹாபாரதத்தை விவரிக்கையில் முதலில், குருக்ஷேத்திரத்தைக் காட்டுகிறார். அதற்கு ‘சமந்த பஞ்சகம்’ என்று பெயர். ஐந்து குளங்கள் கொண்டது என்று பொருள்.

 

அந்தக் குளங்களில், த்ரேதா த்வாபர சந்தியில், பரசுராமரால் கொல்லப்பட்ட க்ஷத்திரியர்களது இரத்தம் நிரம்பி இருந்தது (ம-பா 1-2-3)

 

அதே குளங்களில் துவாபர – கலி சந்தியில், மஹாபாரதப் போரில் இறந்த க்ஷத்திரியர்களது இரத்தம் நிரம்பி இருந்தது (ம-பா: 1-2-9) என்கிறார்.

 

பரசுராமர், இராமன் காலத்தவர். எனவே இராமனும் திரேதா- துவாபர சந்தியில் வாழ்ந்தவன் என்பதற்கு இதுவே ஆதாரம்.

 

இராமன் காலத்தில் இருந்த சமந்த பஞ்சக குளங்கள் அப்படியே, மஹாபாரத காலத்தில் இருந்தன. மஹாபாரதம் நடந்து 5000 ஆண்டுகள் ஆன நிலையில், இன்று அந்த குளங்கள் அழிந்து போயின. ஆனால், இராமாயண – மஹாபாரத காலங்களுக்கு இடையே அவை இருந்தன என்றால் அவற்றுக்குள்ள கால வித்தியாசம் அதிகம் இல்லை என்று புலனாகிறது.

 

யுக தர்மத்தை ஒட்டியே ஒரு யுகம் இயங்குகிறது என்பதை உத்தர காண்டத்தில் நாரதர் சொல்லக் கேட்கிறோம். ஒரு சிறுவன் அகால மரணம் அடைந்து விடவே, இராமன் அனைத்து ரிஷிகளையும் கூட்டி, கருத்து கேட்கிறான். அப்பொழுது நாரதர் சொல்கிறார், கிருத யுகத்தில் பிராம்மணர்கள் தவம் செய்வார்கள். திரேதா யுகத்தில் அவர்கள் செய்யும் தவத்தில் குறைபாடுகள் ஏற்படுகின்றன. க்ஷத்திரியர்கள் திரேதா யுகத்தில் தவம் செய்கின்றனர். மேலும் தர்மம் சீரழிந்து துவாபர யுகம் வரும்போது, வைசியர்கள் தவம் செய்கின்றனர். அந்த யுக தர்மமும் குறையும் போது கலி யுகம் வருகிறது. அப்பொழுது சூத்திரர்கள் தவம் செய்கின்றனர். என்கிறார். (வா-இரா: 7-87).

 

அவ்வாறு சொல்லும்போதுதான், அப்பொழுதைய திரேதா யுகத்தில் க்ஷத்திரியர் அல்லாத வேறு ஒருவர் தவம் செய்கிறார் என்றால்தான் இப்படி அகால மரணம் ஏற்படும் என்கிறார். இதைத் தொடர்ந்துதான் சம்பூக வதம் நடக்கிறது.

 

இவ்வாறு தர்மத்தின் அளவைக் கொண்டு கிருதம், திரேதா, துவாபரம், கலி என்று வகைப்படுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில்தான் மஹாபாரதத்தில், அக்ஷ விளையாட்டுக்கு பாண்டவர்களை அழைக்கப்போவதாக துரியோதனன் விதுரரிடம் சொன்னபோது, “கலித்வாரம் உபாஷிதம்” – கலி வந்துவிட்டது என்று விளையாட்டுக்கு முன்பே விதுரர் சொல்கிறார் (ம-பா: 2-48-50)

 

யுத்தத்தில் கலி இருக்கும் என்ற பொருள்பட “யுத்தே க்ருஷ்ணா கலிர் நித்யம்” என்று தரும புத்திரர் சொல்கிறார். (ம-பா: 5-70-49).

 

கிருஷ்ணரும், கர்ணனிடம் பேசும்போது, யுத்தம் வந்தால் அங்கு கிருதம் இருக்காது, திரேதா இருக்காது, துவாபரம் இருக்காது, கலி தான் இருக்கும் என்று பல முறை சொல்கிறார் (ம-பா: 5-140 – 7 முதல் 15 வரை)

 

அதுபோல பீமன், துரியோதனனைத் தொடைக்குக் கீழே அடித்து வீழ்த்தியபோது, ‘ப்ராப்தம் கலியுகம் வித்தி’ என்று, கலியுகம் வந்து விட்டது என்று கிருஷ்ணன் சொல்கிறார். (ம-பா: 9-59-21). அப்படிச் சொன்னது துவாபர யுக சந்தியில்!

 

எனவே தர்மத்தின் அளவைக் கொண்டுதான் யுகத்தை நிறுவினார்கள்.

 

ஆசார்ய ஹ்ருதயம் என்னும் வைணவ நூலிலும் தர்மம் (யுக தர்மம்) என்றால் முறையே தியானம், யஜ்னம், அர்ச்சனம், சங்கீர்த்தனம் என்று நான்கு யுகங்களுக்குச் சொல்லியுள்ளார்கள். (முதல் பிரகரணம், 16 ஆவது சூரணை)

 

திரேதா யுக ஆரம்பம்

 

வாயு, பிரம்மாண்ட புராணங்கள் திரேதா யுகம் ஆரம்பிக்கும் காலத்தையும் சொல்கின்றன. மழை ஆரம்பித்தவுடன் த்ரேதா யுகம் ஆரம்பிக்கிறது.அதற்கு முன் வரை கிருத யுகம் இருந்தது. அப்பொழுது வந்த முதல் கடல் வெள்ளத்தில் வைவஸ்வத மனு அடித்துச் செல்லப்பட்டு சரஸ்வதி நதியில் நுழைந்து, இமய மலையில் நௌபந்தனம் என்னுமிடத்தை அடைந்தான். (விவரங்களை மஹாபாரதம் புத்தகத்தில் காண்க).

 

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக உலகமே பனி யுகத்தில் முடங்கி இருந்தபிறகு, 12,000 ஆண்டுகளுக்கு முன் சூரிய வெப்பம் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்தது. அதில்தான், முதல் முறையாக வெள்ளங்கள் வந்தன. வெப்பத்தின் காரணமாக மழையும் வந்தது.

 

ஆராய்சிகளின்படி, 30,000 வருடங்களுக்கு மேலாக பாரத தேசத்தில் மழை இல்லை. அப்பொழுது பனி யுகம் நடந்து கொண்டிருந்தது. தண்டகாரண்யம் இல்லை. அது பாலைவனமாக இருந்தது. இதை உத்தர இராமாயணமும் சொல்கிறது. ஆராய்ச்சிகளும் சொல்கின்றன. 

 

முதல் மழையில் செடிகள் முளைத்தன. பிறகு சிறிது காலம் மழை இல்லாமல் இருந்தது. பிறகு மீண்டும் மழை ஆரம்பித்தது. அப்பொழுது நதிகள் ஓட ஆரம்பித்தன என்று இந்த இரு புராணங்களும் கூறுகின்றன.

மழை வந்த பிறகுதான் வர்ணாஸ்ரம தர்மமே ஏற்பட்டது. மக்களுக்கு ஆசையும், தேவைகளும் அதிகரித்தன.


மழை பெய்த காலம் குறித்த ஆராய்ச்சி:


மழைக்கு முன் தென்னிந்தியா பாலைவனமாக இருந்தது என்ற ஆராய்ச்சி:

 


மழை வர ஆரம்பித்தபிறகுதான் மேற்குத் தொடர்ச்சி மலையில் பசுமை வர ஆரம்பித்தது. காலம் இன்றைக்கு 12,400 வருடங்களுக்கு முன்:

 

இரண்டாவது மழையில் தான் நதிகள் ஓடின. அதிலும் கங்கை உருகி வரும் அளவுக்கு வெப்பம் வரவில்லை.

இதன் காலம் 10,000 ஆண்டுகளுக்குப் பிறகுதான்.

மழையின் காரணமாக பயிர்த் தொழில் ஆரம்பித்தது. பயிர்களைக் காக்க க்ஷத்திரியர்கள் உருவாயினர்.

இதற்குப் பிறகுதான் இராமனே வருகிறான். இராமாயணத்தில் அரிசி விளைச்சல் இருக்கிறது. ஆராய்சிகளிலும், சரயு பகுதியில் 7000 ஆண்டுகளுக்கு முன் அரிசி விளைந்திருக்கிறது என்று தெரிய வருகிறது. பின்னர் பயிர்களை எளிதாக வளர்க்க முடியாத ஒரு காலம் வந்தது, இது நிலத்தின் இயற்கை ஊட்டச்சத்துக்களை முழுமையாக சுரண்டுவதைக் குறிக்கிறது. இதன் விளைவாக புதிய நிலங்கள் மற்றும் சாகுபடி முறைகளைக் கண்டுபிடிப்பதற்கான உடலுழைப்பு முயற்சிகள் ஏற்பட்டன. இது திரேதா யுகத்தின் முடிவைக் குறிக்கிறது.

பரசுராமன், கோடரியை ஏந்திய அவதாரம் என்பது காடுகளை அழித்து மக்கள் வசிப்பதற்கும் சாகுபடி செய்வதற்கும் வழிவகுப்பதாகும். இந்த காலகட்டத்தில் அயோத்தியின் இராமனும் வாழ்ந்தார். இவர்களது காலக்கட்டம் திரேதா மற்றும் துவாபர தர்ம யுகத்தின் சந்தி காலமாகும், அப்போது ராஜஸம் அதிகரிக்கவே பரசுராமனால் க்ஷத்திரியர்கள் அழிக்கப்பட்டனர்.

சந்தி என்னும் பகுதி இங்கே இரண்டு காரணிகளால் அடையாளம் காணப்படுகிறது: உடலுழைப்புடன் கூடிய பயிர் சாகுபடி மற்றும் ராஜஸம் மிகுந்த க்ஷத்திரியர்கள் அதிகம் இருந்தனர். தற்போது கிடைக்கக்கூடிய ஆய்வுகளின்படி நெல் சாகுபடியின் கீழ் வரம்பு திரேதா யுகத்தின் கீழ் எல்லையை அடையாளம் காண உதவுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள சோனே பள்ளத்தாக்கில் கிமு 6000 முதல் 5000 ஆம் வரை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி ஜமதக்னி வழி வந்தவர்களால்  ஆக்கிரமிக்கப்பட்டது. வடக்குப் பகுதிகளை விட பிற்காலத்தில் இப்பகுதியில் நெல் சாகுபடி செய்யப்பட்டதற்கான சான்றுகள் இருக்கின்றன. இப்பகுதியில் நெல் சாகுபடியின் மேல் எல்லை திரேதா யுகத்தின் கீழ் எல்லையாகிறது. எனவே திரேதா யுக சந்தி கி.மு 6000 ஆண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து, சந்தியாம்சம் விரைவாகக் கடந்து சென்றதாகத் தெரிகிறது, இதில் கிமு 5000 ஆண்டின் முற்பகுதியில் துவாபர யுகம் பிறந்தது.

துவாபர தர்ம யுகம் 2000 ஆண்டுகள் சென்றது – கி.மு 5000 மற்றும் 4000ஆம் ஆண்டில். தர்மத்தின் அளவுகோலின்படி, துவாபர சந்தி பகடை விளையாட்டு மற்றும் திரௌபதி வஸ்த்ராஹரணத்துடன் தொடங்கியிருக்க வேண்டும். மகாபாரதப் போரின் போது, சந்தி காலம் துவாபர தர்மத்தின் 1/4 பங்குடன் இருந்தது.

அதன் பிறகு திவ்ய யுகக் கணக்கில் பகவான் கிருஷ்ணன் வைகுந்தம் சென்ற நாளில் கலி மஹா யுகம் ஆரம்பித்தது. அப்பொழுது, அபிமன்யுவின் மகன் அரசாண்டான். அவன்  காலத்தில், தர்மத்தின் வீழ்ச்சி தடுக்கப்பட்டது, இது துவாபர சந்தி காலம் நீட்டிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. அதாவது திவ்ய யுகத்தில் கலி மஹா யுகம் ஆரம்பித்து விட்டாலும் (பொ.மு. 3101), தர்ம யுகக் கணக்கில் துவாபர சந்தியே நடந்து கொண்டிருந்தது.

அடுத்த காலகட்டம் ஹரப்பா நாகரிக காலத்துடன் ஒத்துப்போகிறது. இந்தக் காலகட்டத்தின் வர்த்தக நிகழ்வுகளின் சீரான செயல்பாடு, அப்பொழுது ஆண்ட அரசர்கள் தர்மவாங்களாக இருந்திருக்கிறார்கள்  என்று காட்டுகிறது. யுக தர்மத்தை நிலைநிறுத்துவதற்கு அரசனது பங்கு முக்கியமானது.

பொ.மு. 1500 இல் ஹரப்பா கலாச்சாரத்தின் வீழ்ச்சி வரை, துவாபர சந்தி தொடர்ந்தது

அதற்கடுத்த காலகட்டத்தில் துவாபர சந்தியாம்சத்தைக்  குறிக்கும் பாஷண்ட மதங்கள், மிலேச்ச மதங்கள் வளர்ச்சி அடைந்தன.

நந்த வம்சம் ஆட்சி செய்யத் தொடங்கியது முதல் கலி யுகம் ஆரம்பித்தது என்று ஸ்ரீமத் பாகவதம்  கூறுகிறது.(12-2-31) இந்த காலக்கட்டத்தில் சப்தரிஷிகள் மக நக்ஷத்திரத்தில் சஞ்சரித்தனர் என்று இந்தப் புராணம் சொல்கிறது. இது குறிக்கும் காலம் பிருஹத் சம்ஹிதையில் யுதிஷ்டிர சகம் 2526 என்று சொல்லப்பட்டுள்ளது. க்ரிகோரியன் தேதியில் இது பொ.மு. 575 வருடம் ஆகும்.

அப்பொழுதுதான் கலி (அ)தர்ம யுகம் ஆரம்பித்தது.

ஆனால், கலி மஹாயுகம் என்பது கிருஷ்ணர் நீங்கியபோது ஏற்பட்டது என்றும் ஸ்ரீமத் பாகவதம் தெளிவு படுத்துகிறது. (12-2-33)

அதாவது அடுத்தடுத்த ஸ்லோகங்களில், கலி தர்ம யுகத்தையும், திவ்ய யுகக் கணக்கில் கலி மஹா யுகத்தையும் எடுத்து கூறி அவை வேறுபட்டவை என்று ஸ்ரீமத் பாகவதம் காட்டுகிறது. கலி தர்ம யுகம் அரசாட்சியை முன்னிட்டு வருவது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறே திரேதா சந்தியில் இராமன் வாழ்ந்தான். துவாபர சந்தியில் கிருஷ்ணன் வாழ்ந்தான்.

இவ்வாறு வேத  கலாச்சாரத்தின் வளர்ச்சி மழையின் வருகையுடன் தொடங்கியது. மழைப்பொழிவு தாவரங்கள் மற்றும் ஆறுகள், வாழ்விடங்களை உருவாக்குவதாலும், ஒரு சமூகத்தின் செயல்பாட்டிற்கும் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் உதவும் வர்ணாஸ்ரம தர்மத்தின் வளர்ச்சியாலும், தர்ம அடிப்படையிலான யுக வகைப்பாடு பாரத வர்ஷத்துக்கு  மட்டுமே பொருந்தும்!

இந்த தர்ம அடிப்படையிலான வகைப்பாடு கடந்த காலத்தில் யுகங்களின் பல சுழற்சிகளின் சாத்தியக்கூறுகளை உறுதிப்படுத்துகிறது.  உதாரணமாக, நாம் 28 ஆம் சதுர் யுகத்தில் இருக்கிறோம், அப்போது கிருஷ்ண துவைபாயனர் துவாபர யுகத்தின் இறுதியில் வேதங்களைத் தொகுத்தார். தற்போதைய சதுர்யுக சக்கரம் 13,000 ஆண்டுகளே இருந்தது. தர்மத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக மழை அமைந்தது. இந்த மழைப்பொழிவு உலகளாவிய குளிர் மற்றும் சூடான நிலைமைகளுடன் மாறி மாறி இருக்கும். வறண்ட நிலத்தில் பல சுற்றுகள் புதிய மழை பெய்வதற்கான நிகழ்தகள் மிக அதிகமாக உள்ளன. இது புதிய கலாச்சாரங்கள் செழிக்க வாய்ப்பளிக்கிறது. அந்த வகையில் நாம் 28-வது சுற்றில் இருக்கிறோம்.

தர்மத்தின் வடிவம் மழை மற்றும் அதனுடன் இணைந்த கலாசாரத்தால் தீர்மானிக்கப்படுவதாகத் தோன்றுகிறது, இராமன் அனைத்து நற்பண்புகளின் உருவகமாக நின்றபோது மனித நாகரிகம் உச்சத்தில் இருந்திருக்கிறது. மகாபாரதத்தின் பகடை விளையாட்டில் அதே கலாசாரம் வீழ்ச்சியடைந்து, தற்போதைய காலத்தின் கலியுகத்தில் மோசமான நிலையை அடைந்திருக்கிறது. இந்த யுக சக்கரத்தில்தான் இராமன், கிருஷ்ணன், கலியுகத்தின் மிலேச்சத்தனம் ஆகியவை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கின்றன.

பாரத வர்ஷத்தில்தான் யுகக் கணக்குகள் நடக்கின்றன என்று நூல்கள் சொல்வது இந்த தர்ம-அதர்மச் சேர்க்கையை அடிப்படையாகக் கொண்டது. மாறாக, திவ்ய யுகம் பிரபஞ்சம் சார்ந்தது.

ஹோலோசீன் (Holocene) என்னும் தர்போதைய காலக்கட்டம் துவங்கி, மழையும், அதன் காரணமாக திரேதா யுகமும் ஆரம்பித்தது. இப்படிப்பட்ட யுகக் கணக்கைத்தான்  பொ.யு. 10 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட முதலாம் இராஜேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேடுகள் காட்டுகின்றன.

செப்பேடுகளில் குறிப்பிடப்படும் சோழ வம்சத்தைச் சேர்ந்த முற்கால மன்னர்களின் யுக காலம் இராமனின் வம்சாவளியுடன் ஒப்பிடத்தக்கது. சோழர்கள் சிபி மற்றும் ராமன் ஆகியோரிடமிருந்து வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர். இதன் அட்டவணை படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


 

இந்த அட்டவணையில் கிருத யுகத்தின் இறுதி வரை இரு வம்சாவளியைச் சேர்ந்த மன்னர்களின் பெயர்கள் காட்டப்பட்டுள்ளன. இப்பெயர்கள் இருவருக்கும் பொதுவானவையாக இருப்பதால், கிருத யுகம் மக்கள் பரவலைக் காணவில்லை என்று கருதப்படுகிறது. இது கிமு 9,500 வரை இருந்தது. முதல் சோழன் திரேதா யுகத்தில் துஷ்யந்தனுக்கும் சகுந்தலாவுக்கும் பிறந்த பரதனின் மகனாவான். அவன் தெற்கு நோக்கிப் பயணம் செய்து பூம்புகார் பகுதியில் குடியேறினான்.

முதலாம் இராஜேந்திர சோழனின் மகனான வீரராஜேந்திரனின் கல்வெட்டில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. பகீரதன் கங்கை நதியைக் கொண்டு வந்த சில காலத்திற்குப் பிறகு, திரேதா யுகத்தில், குடகிலிருந்து காவிரி நதி கொண்டு வரப்பட்டது. இராமனின் மூதாதையரான நாபாகர் சோழ பரம்பரையில் சுரகுரு என்ற பெயரில் காணப்படுகிறார். இந்த கல்வெட்டின் யுக வகைப்பாடு தர்ம யுக அளவீட்டை பிரதிபலிக்கிறது, இதன் மூலம் பாரத வர்ஷத்தில் தர்ம அடிப்படையிலான சதுர்யுகம் பயன்படுத்தப்பட்டதற்கான உறுதியான ஆதாரமாக நிற்கிறது.

 

திவ்ய யுகத்துக்கும், தர்ம யுகத்துக்கும் உள்ள வேறுபாடு

யுகக் குழப்பம் தீர வேண்டுமென்றால், திவ்ய யுகத்துக்கும், தர்ம யுகத்துக்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.      திவ்ய யுகம் இரட்டை அல்ல. அது பேரூழி.

தர்ம யுகம் தர்மம்- அதர்மம் கொண்ட இரட்டை. எனவே அதுவே யுகம்.

 

2.      திவ்ய யுகம் வேறுபாடில்லாமல் நீண்டு கொண்டே போகும் காலமாகும்.

தர்ம யுகம், தர்ம – அதர்ம வேறுபாடுகளால் அவ்வபொழுது மாறும். அதன் அடிப்படையில் சில காலமே செல்லும்.

 

3.      திவ்ய யுகம் கடவுளர்களது கால அளவு.

தர்ம யுகம் மனிதர்களது கால அளவு.

 

4.      திவ்ய யுகம் கிரகங்களால் அளக்கப்படுவது. அதை அளக்க கணிதம், வானவியல் தேவை.

தர்ம யுகம் அரசனது நேர்மை, நீதியால் அளக்கப்படுவது. அதை அளக்க முடியாது. தர்மத்தின் அளவைக் கொண்டுதான் தெரிந்து கொள்ள முடியும்.

 

5.      திவ்ய யுகத்தின் முன்னும் பின்னும் 10-% சந்தி காலம் உள்ளது. உதாரணமாக கலி யுகம் 4,32,000 என்பதால், அதற்கு முன்னும் பின்னும் 43,200 ஆண்டுகள் சந்தி இருக்கும். கிரகங்களால் அளக்கப்படுவதால், இந்த 10 % என்பது பிழை விளிம்பு (error margin) எனலாம்.

தர்ம யுகத்தில், அதைத் தொடர்ந்து சந்தி, சந்தியாம்சம் வரும். திவ்ய யுகத்தைப் போல முன்னும் பின்னும் வராது.

 

6.      ஒரு திவ்ய யுகத்தில் பல தர்ம யுகங்கள் வரலாம்.

தர்ம யுகம் பல முறை வரலாம் அதற்கும் திவ்ய யுகத்துக்கும் தொடர்பு கிடையாது.

 

7.      திவ்ய யுகத்தின் வரிசை:

கிருத யுக சந்தி – கிருத மஹாயுகம் – கிருத யுக சந்தி – திரேதா யுக சந்தி – திரேதா மஹா யுகம் – திரேதா யுக சந்தி – துவாபர யுக சந்தி – துவாபர மஹா யுகம் – துவாபர யுக சந்தி – கலி யுக சந்தி – கலி மஹா யுகம் – கலி யுக சந்தி (மீண்டும்) கிருத யுக சந்தி – கிருத மஹா யுகம் என்று தொடரும்.

அதாவது இரண்டு யுக சந்திகள் அடுத்தடுத்து வரும்.

தர்ம யுக வரிசை:

கிருத தர்ம யுகம் – கிருத சந்தி – கிருத சந்தியாம்சம் – திரேதா யுகம் – திரேதா யுக சந்தி – திரேதா யுக சந்தியாம்சம் – துவாபர யுகம் – துவாபர சந்தி- துவாபர சந்தியாம்சம் – கலி யுகம் – கலி சந்தி – கலி சந்தியாம்சம் – கிருத யுகம் – கிருத சந்தி – கிருத சந்தியாம்சம் எனத் தொடரும்.

 

8.      திவ்ய யுகத்தில் கிருத யுகம் மேஷ ராசியின் ஆரம்பத்தில் எட்டு கிரக சேர்க்கையுடன் ஆரம்பிக்கும். ஒவ்வொரு யுகமும் அங்குதான் ஆரம்பிக்கும்.

தர்ம யுகத்தில், கிருத யுகம், கடக இராசியில் சூரியன், சந்திரன், குரு ஆகியவை  சேரும் போது ஆரம்பிக்கும்.(விஷ்ணு புராணம்: 4-24)

இதையே மஹாபாரதத்தில் மார்கண்டேய ரிஷியும் கூறுகிறார்.

திவ்ய யுக ஆரம்பமும், தர்ம யுக ஆரம்பமும் ஒன்றல்ல என்பதே இவை வேறுபட்டவை என்பதைத் தெள்ளத்தெளிவாக உரைப்பவை.


தர்ம யுகக் கணக்கு

மழைப்பொழிவின் அம்சங்களிலிருந்து பெறப்பட்ட காலவரிசை சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

Ø  வைவஸ்வத மனுவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் (தென்மேற்கு பருவமழையின் முதல் வரவு) – பொ,மு. 11,000 முதல் 10,500 வரை.

Ø  கிருத யுகம் –பொ.மு. 9500 வரை .

Ø  திரேதா யுகம்  - பொ.மு 9,500 இல் தொடங்கியது.

Ø  தண்டக வனம்  உருவாக்கம் – பொ. மு 8000 முதல்.

Ø  தக்காண ஆறுகள் – பொ. மு 8000 முதல்

Ø  கங்கை நதியின் பிறப்பு – பொ. மு 8,000 முதல் 7,500 வரை.

Ø  இராமன் காலம் – பொ.மு. 6000

Ø  திரேதா யுகத்தின் முடிவு சந்தி மற்றும் சந்த்யாம்சம்- பொ. மு 6000

Ø  துவாபர யுகம் தொடங்கியது – பொ. மு 5000 முற்பகுதி.

Ø  துவாபர சந்தி – பொ. மு 4000 பிற்பகுதி.

Ø  கலி மகா யுகம் தொடங்கியது – பொ. மு 3101 (தர்ம யுகத்தில் த்வாபர சந்தி = திவ்ய யுகத்தில் கலி மஹா யுகம்)

Ø  துவாபர சந்த்யாம்சம் – பொ. மு 575 வரை (யுதிஷ்டிர சகம் 2526).

Ø  கலி தர்ம யுகம் – பொ. மு 575 முதல்.

ஹோலோசீன் எனப்படும் கடந்த 10,000 வருடங்களில்தான் திரேதா, துவாபர, கலி யுகங்கள் தர்ம- அதர்மத்தின் அடிப்படையில் ஏற்பட்டன. இவற்றில்தான் இராமனும், கிருஷ்ணனும் பிறந்தனர். இவற்றைப் பேரூழியான திவ்ய யுகத்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது.

 

***