This review is by Mr. Mahara Sadagopan who has authored four books on Sri Vaishnavism. My sincere thanks to him for writing a review of my book 'Ramanuja Itihasam'.
From https://harshaaintutions.blogspot.com/2024/05/blog-post_31.html
திரு நாகஸ்வாமி என்ற தொல்லியல் துறை வல்லுநர், இராமானுசரின் வாழ்க்கை சம்பவங்கள் என்பது புனைவு என்றும், பொய் என்றும் சொல்லி அவரது சைவ வெறியைக் தீர்த்து ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதாவது இராமானுசரின் வாழ்க்கை பொய் என்று நிரூபித்து விட்டால் வைணவத்தை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற அற்ப சந்தோஷத்தின் காரணமாக, வெறி உந்தப்பட்டு எழுதிய புத்தகம் “Ramanuja myth and Reality“.
அவர் எடுத்து வைத்த வாதங்களில் முக்கியமாக இரண்டு வாதங்கள் என்பது,
1. இராமானுஜர் சோழ தேசத்திலிருந்து வெளியேறியது என்பது சோழ அரசனின் துன்புறுத்தல் அல்ல, அப்பொழுது ஆட்சி செய்த குலோத்துங்கன் சமய வெறுப்பு அற்றவன், மேலும் பல கைங்ஙர்யங்களைச் செய்தவன் என்று கல்வெட்டு மூலம் நிரூபித்து , வைணவர்கள் புனைந்து சோழ அரசின் மீது பழியை வீசுகின்றனர் . ஆதலால் எந்தவொரு கொடுமையும் நடக்கவில்லை , நடக்காத ஒன்றை பொய் பரப்புகின்றனர்.
2. இராமானுஜர் மேலக்கோட்டை சென்று, அங்குள்ள உற்சவ மூர்த்தியை டில்லியிலிருந்து மீட்க வில்லை, ஏனென்றால் மேலக்கோட்டை மற்றும் தென்னிந்தியா பகுதிகள் இராமானுஜ வாழ்ந்த காலத்தில் முஸ்லீம் படையெடுப்பால் பாதிக்கப்படவில்லை. அப்படியிருக்க இடிந்த கோயில்களை புனர்நிர்மாணம் செய்தது, டில்லி சுல்தான் அரண்மனையிலிருந்து உற்சவ மூர்த்தியை மீட்டது எல்லாம் வைணவர்களால் புனைந்து கூறப்பட்ட தகவல்கள் என்று கூறி, அதுவும் பொய் என்று எழுதியிருந்தார்.
மேலும் இந்த இரண்டு செய்திகளுடன் இராமானுஜர் வாழ்ந்த காலம் என்பது 120 என்பது ஒரு கற்பனை, பல வைணவ ஆசாரியார்கள் 100 வயதைக் கடந்து வாழ்ந்தார்கள் என்று கூறுவதும் ஒரு பொய் என்று திரு நாகஸ்வாமி அவர்கள் எழுதியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வண்ணம் முதலில் ஶ்ரீ வைஷ்ணவ ஶ்ரீ கிருஷ்ணமாச்சாரி ஸ்வாமி “Ramanuja A Reality Not a myth “ என்ற புத்தகத்தை அக்டோபர் 2009 ல் வெளியிட்டார். அதில் இராமானுஜரின் சமகாலத்தில் வாழ்ந்த வைணவ ஆசாரியர்களின் நூல்களிலிருந்து பல செய்திகளை வழங்கி திரு நாகஸ்வாமி சொல்வது தவறு என்று எழுதியிருந்தார். ஆனால் வரலாற்று ஆதாரங்களுடன், சம்பவங்களின் காலத்தை நிரூபிக்கும்போது மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். சமுதாயமும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.
இராமானுஜ வாழ்க்கை சம்பவங்களின் நிகழ்வுகளை ஆசாரியர்களின் நூல்கள், அரசின் கல்வெட்டுகள், செப்பேடுகள், அரசர்கள் வாழ்ந்த காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் இவற்றையெல்லாம் உற்று நோக்கி, அதில் குறிப்பிட்டுள்ள காலத்தை பொது யுகம் காலத்துடன் ஒப்பிட்டு, சம்பவங்களின் காலத்தை இராமானுஜர் வாழ்க்கையுடன் நிரூபித்து, வைணவ ஆசாரியர்கள் எழுதிய செய்திகள் அனைத்தும் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை என்று எழுதிய நூல்தான் “இராமானுஜ இதிகாசம்” என்ற அருமையான நூல். நூலாசிரியர் ஜெயஶ்ரீ சாரநாதன் அவர்கள் காலத்தால் அழிக்கப்படமுடியாத அளவுக்குக் காலத்தை நிர்ணயித்து, வைணவ ஆசாரியர்கள் நூல்களில் கூறிய சம்பவங்களுக்கு மேலும் நம்பகத் தன்மையை அதிகரிக்கும் வண்ணம் எழுதப்பட்ட இந்த அதி அற்புதமான நூலை ஒவ்வொரு வைணவனும் வீட்டில் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டியது தலையாயக் கடமை.
நூலாசிரியர் இந்த புத்தகத்தில் முதன்மை ஆதாரமாக இராமானுஜர் காலத்தில் வாழ்ந்த வைணவ ஆசாரியர்கள் நூல்களான குறிப்பாக ஶ்ரீ வடுக நம்பி எழுதிய யதிராஜ வைபவம் , ஶ்ரீ இராமானுஜ அஷ்டோத்தரசத நாமாவளி, திருவரங்கத்து அமுதனார் எழுதிய இராமானுஜ நூற்றந்தாதி, கெருட வாகன பண்டிதர் எழுதிய “ திவ்யசூரி சரிதம்”, இரண்டாம் தர ஆதாரமாகக் கோயில் ஒழுகு , மற்றும் பின்பழகிய பெருமாள் ஜீயர் எழுதிய குருபரம்பரா ஆறாயிரப்படி போன்றவற்றிலிருந்து செய்திகளை எடுத்துக் கொண்டு, அதை நிரூபிக்கும் வண்ணம் ஃபிரான்ஸிஸ் புக்கானன் நூல் குறிப்புகள், பி.எல்.ரைஸ் நூல் குறிப்புகள், கலிங்கத்து பரணி, விக்ரமாங்க தேவ சரிதம்,விக்கிரம சோழன் உலா, குலோத்துங்கச் சோழன் உலா, ராஜராஜ சோழன் உலா போன்ற நூல்களிலிருந்தும், பல கல்வெட்டுகள், செப்பேடுகள் செய்திகளையும் ஒப்பிட்டு, சம்பவங்களின் காலத்தை இராமானுஜரின் வயதுடன் நிரூபணம் செய்து, இராமானுசரின் வாழ்க்கை நிகழ்வுகளை உண்மை என்று இந்த புத்தகத்தில் நிரூபணம் செய்துள்ளார். இது காலத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய நூல். ஒவ்வொரு இராமானுஜ சீடனும் படித்து நிகழ்வுகளை உள்வாங்கி மனதில் நிறுத்த வேண்டிய பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் புதைந்து கிடக்கின்றன.
திரு நாகஸ்வாமி அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வண்ணம், இந்த நூலில் காலத்துடன் இராமானுஜர் பிறந்த பிங்கல வருடம், பொ.யு.1017லிருந்து பின்வருமாறு நிரூபித்துள்ளார்
1. இராமானுஜர் கர்நாடக சென்ற வருடம் காளயுக்தி என்றும், அதாவது அவரது வயது 61. பொ.யு. 1078.
2. தொண்டனூரில் 21 ஆண்டுக் காலம் தங்கி, அவர் மேலைக் கோட்டை சென்ற வருடம் பஹுதான்ய பொ.யு. 1099. இராமானுஜர் வயது 81.
3. 12 வருட காலம் இருந்து , கிருமி கண்ட சோழன் இறந்த பிறகு ஶ்ரீரங்கம் திரும்பியது கர வருடம் பொ.யு.1111. இராமானுஜர் வயது 94.
4. திருப்பதி மடம் நிறுவுதல் விகாரி வருடம் பொ.யு.1120 , அவரது வயது 102.
5. திருப்பதியில் சிதம்பர கோவில் கோவிந்த ராஜரைப் பிரதிஷ்டை செய்த வருடம் ஸௌம்ய, பொ.யு.1130. அவரது வயது 112.
தொண்டனூரிலுள்ள மீர்பகதியார் என்ற துருக்கியரின் கல்லறையின் மூலம் முஸ்லீம் படையெடுப்பு என்பது தென்னிந்தியாவில் 1031ம் ஆண்டு நடைபெற்றது என்று ஆதாரத்துடன் நிரூபணம் செய்ததன் மூலம், முதல் தகவல் வைணவ ஆசாரியர்களின் கருத்து என்பது உண்மை என்று உரைத்துள்ளார் நூலாசிரியர்.
வரலாற்றாளர்கள் அதிராஜேந்திரன் ஒருவனே கிருமி நோயால் பாதிக்கப்பட்ட சோழன், அவன் 1068ம் ஆண்டு பதவியேற்று மூன்று ஆண்டுகளில் அதாவது 1070ம் ஆண்டு இறந்து விட்டதாகவும் கூறி, இராமானுஜரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளனர்.
மாறாக இந்த புத்தகத்தில் அதிராஜேந்திரன் இறந்த வருடம் என்பது பொ.யு. 1111 (அதாவது இராமானுஜர் ஶ்ரீரங்கம் திரும்பிய வருடம்) என்று நூலாசிரியர் நிரூபணம் செய்வதன் மூலம் அனைத்தும் உண்மை என்று நிரூபணம் ஆகிவிட்டது.
மேலும் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சிதம்பரம் கோவிந்த ராஜருக்கு ஏற்பட்ட சம்பவத்தையும் (கடலில் தூக்கி எறியப்பட்ட) ஆதாரத்துடன் ஆசிரியர் நிரூபித்துள்ளார்.
மேலும் திப்புசுல்தான் காலத்தில் வைணவம் சந்தித்த இன்னல்களையும் ஆதாரத்துடன் எழுதியுள்ளார்.
இராமானுசரின் வாழ்க்கை என்பது சரித்திரத்தின் உண்மையை நிலை நாட்டுவதற்குத் துணை நின்றுள்ளது என்பது இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. வரலாற்று ஆசிரியர்கள் அறியப்படமுடியாத சம்பவங்கள் வைணவ ஆசாரியர்கள் அவர்கள் எழுதிய நூல்களில் இருப்பது என்பதும், அவைகள் அனைத்தும் உண்மை என்று இந்த புத்தகம் காட்டுகிறது.
ஒவ்வொரு இராமானுஜ சீடர்களும், வரலாற்றாளர்களும் படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய அற்புதமான நூல்.
மகர சடகோபன் தென்திருப்பேரை
***
புத்தகத்தைப் பெற இங்கே க்ளிக் செய்யவும்
சுவாசம்