அறிவு என்பது இரண்டு வகைப்பட்டது. சாஸ்த்திரங்களிலிருந்து பெறுவது ஒரு வகை. அவ்வாறு பெற்றதை உள்வாங்கி ஆராய்ந்து புரிந்து கொள்வது இன்னொரு வகை. இவ்வாறு புரிந்து கொண்ட அறிவின் மூலம்தான் சூரியன் இருளை நீக்குவதைப் போல அறியாமையை நீக்கிக் கொள்ள முடியும் என்று விஷ்ணு புராணம் (6-5) கூறுகிறது.
ஆனால் கோனார் நோட்ஸை மனப்பாடம் செய்தது போல ஒப்பிக்கும் அறிஞர்கள் உள்ள இந்த காலக் கட்டத்தில், அதிலும் அவர்களை ஆட்டுவிக்கும் சூத்திரதாரியாக கிரிப்டோ வேடதாரி இருக்கையில் அறிவு எங்கிருந்து, எப்படி வரும்? கோடிகளிலேயே திளைக்கும் கிரிப்டோவுக்கு அடங்கி மூளையையும் அடகு வைத்து விட்ட அறிஞர்களுக்கும், கிரிபட்டோ வேடதாரிக்கும் கொஞ்சம் யுகம் பற்றிய அறிவைப் புகட்டும் பதிவு இது.
யுகம் என்றால் என்ன?
யுக்மா என்னும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து யுகம் என்னும் சொல் வந்தது.
யுக்மா என்றால் இரட்டை (twin) அல்லது ஜோடி (pair) என்று பொருள்.
அது மட்டுமல்ல, பேரூழி (eon) என்பதையும் யுகம் என்பார்கள்.
இவற்றுள் பேரூழியைக் கணிக்கும் யுகக் கணக்கையே, இராமர் வாழ்ந்த காலத்துக்குச் சொல்வது கிரிப்டோவுக்கு
சௌகரியமான ஒன்று, இராமர் வாழ்ந்ததே கற்பனை என்று சொல்லிவிடலாமே. இந்த அழகில் சயின்ஸ் கூடாது என்று சொல்லிக் கொண்டே, லட்சக் கணக்கான, இல்லை இல்லை, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று இந்த யுகக் கணக்கை எடுப்பவர்கள், அது சயன்ஸ்ஸில் தான் வருகிறது என்பதை அறிந்திருக்கவில்லை.
ஆமாம். பேரூழியான யுகக் கணக்கு, கணிதம், கோளம் சார்ந்த ஜோதிட சித்தாந்தத்தில் வருவது. இதை ஆங்கிலத்தில் astronomy என்பார்கள். அது முழுவதும் கணக்கு. அதிலும் நவ கிரகங்களின் சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவது.
இராகு கிரகம் தவிர்த்து, மீதி 8 கிரகங்கள் ஒரு முறை மேஷ இராசியின் ஆரம்பத்தில் சந்தித்தால், மீண்டும் அதே புள்ளியில் இணைய 4,32,000 வருடங்கள் ஆகும். இது ஒரு பங்கு. ஒன்று என்பதற்குக் ' கலி என்று பெயர்.
அதன் இரண்டு மடங்கு (8, 64,000) துவாபரம் என்று பெயர். அதற்கு இரண்டு என்று அர்த்தம்.
அதன் மூன்று மடங்கு (12,96,000) திரேதா எனப்படும். திரேதா என்றால் மூன்று என்று பொருள்.
அதன் நான்கு மடங்கு (17, 28,000) கிருதம் எனப்படும். கிருதம் என்றால் நான்கு என்று பொருள்.
இவை வெறும் எண்கள்தான். இந்த எண்களைத்தான் மகாபாரதத்தில் அக்ஷ விளையாட்டு (சூதாட்டம் என்று மகாபாரதம் சொல்லவில்லை) அல்லது பாசக விளையாட்டு என்று சகுனியும், தரும புத்திரரும் விளையாடும் போது, கிருதமா, திரேதாவா, துவாபரமா, கலியா என்று கேட்டு விபீதகம் என்னும் அஷ காய்களை உருட்டுவார்கள். நாம் சிறு வயதில், ஒற்றையா, இரட்டையா, பரட்டையா என்று புளியங் கொட்டையை
வைத்து விளையாடுவோமே, அது போல.
நம் அறிஞர்கள் கோனார் நோட்சை தாண்டி படிக்கணும். கலி, துவாபரம் என்ற கணக்குதான் மேலே சொன்ன யுகக் கணக்கு. இந்த கணக்கு பிரம்மனுடைய நாள் எனப்படும் கல்பம், அவரது ஆயுசான 100 வயது ஆகியவற்றைக் கணிக்கப் பயன் படுவது. ஜோதிட சித்தாந்தங்களில் விவரிக்கப்படும் இது, ஆன்மீகத்திலும், மனிதனது வாழ்க்கையை கணிக்கவும் கொடுக்கப்படவில்லை. இது படைப்புக் கடவுளான பிரம்மன் ஆயுளை அளக்கப் பயன்படுவது.
இது ஶ்ரீமத் பாகவதம் 12- 4 இல் விளக்கப்படுகிறது. இதைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே
சதுர் யுக சஹஸ்ரம் து
பிரஹ்ம்மனோ தினம் உச்யதே (12-4-2)
என்று ஆயிரக் கணக்கான ஆண்டுகள் கொண்ட சதுர் யுகம் பிரம்மனுடைய தினத்தைக் குறிப்பது என்பர், என்கிறது.
அப்படியென்றால், இதை நம்முடைய காலத்தை அளக்க, கலி யுகம் 5126 என்று நாம் பயன் படுத்துகிறோமே என்று கேட்டால், நாம் தான் கோனார் நோட்ஸ் நெட்ரு போடுகிறவர்களாயிற்றே, அறிவு, சிந்தனை என்பதெல்லாம் நமக்குக் கிடையாதே. அதனால் வேத வியாசரும், அன்றைய பூர்வ ரிஷிகளும் ஒரேடியாக 4,32,000 ஆண்டுகளை ஆறு சாகைகள் என்று பிரித்து கொடுத்து விட்டார்கள். அதன் படி இப்பொழுது மூன்றாவது சாகையான சாலிவாஹன சகத்தில் நாம் இருக்கிறோம்.
ஆர்யபட்டர் கொடுத்துள்ள இப்படிப்பட்ட கணிதம் சார்ந்த யுகக் கணக்கை, கீழே பார்க்கவும்.
நான்கு யுகங்கள் சேர்ந்த சதுர் மஹா யுகம் (43,20,000) மேஷ இராசியின் துவக்கத்தில் ஆரம்பிக்கும் என்று எழுதியுள்ளார். அதாவது, கிருத யுகம் மேஷத்தில் ஆரம்பிக்கும்.
இது ஒரு வகை யுகம். இது இரட்டை அல்ல என்பதைக் கவனிக்கவும்.
இன்னொரு வகை இருக்கிறது. அது தர்மம், அதர்மம் என்ற இரட்டையைக் கொண்டது. எப்படி இரண்டு மாடுகள் வண்டியை இழுக்கின்றனவோ அவ்வாறே தர்மமும், அதர்மமும் மனிதனுடைய காலத்தை இழுக்கின்றன.
இந்த விவரங்களை, ஶ்ரீமத் பாகவதம் 12-2 இல் பூமி கீதம் என்னும் பகுதியில் காணலாம். நன்றாகக் கவனியுங்கள். 2 ஆவது அத்தியாயத்தில் தர்மம் சார்ந்த யுகமாகவும், 4- ஆவது அத்தியாயத்தில் பிரம்மனின் தினத்தைச் சொல்லும் ஆயிரக் கணக்கான வருடங்களைக் கொண்ட யுகமாகவும் ஶ்ரீமத் பாகவதம் வேறு படுத்திக் காட்டியுள்ளதைக் கவனிக்கவும். இரண்டும் ஒன்றல்ல. பிரம்மனுக்குச் சொல்லப்பட்டதை பூமி கீதம் அத்தியாயத்தில் சொல்லவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இனி இந்த 2- ஆவது அத்தியாயத்தில் சொல்லப்பட்ட விவரத்தைக் காண்போம்.
பல மன்னர்களால் ஆளப்படும் இந்த பூமியில், சதுஷ் பாதத்தில் தர்மம் நிற்கும் போது, அது
கிருத யுகம்.
மூன்று பாதத்தில் தர்மம் நிற்கும் போது ஒரு பாதம் அதர்மம் என காலம் திரேதா யுகத்தைக் காட்டும்.
இரண்டு பாதத்தில் தர்மம் நிற்கும் போது, இரண்டு பாதம் அதர்மத்துடன் துவாபர யுகத்தை இழுத்துச் செல்லும்.
ஒரு பாதத்தில் தர்மம் நிற்கும் போது, மூன்று பாதத்தில் அதர்மம் கலி யுகம் என நடத்திச் செல்லும்.
இதை சத்வம், ராஜசம், தாமசம் அடிப்படையிலும் சொல்லப்படுகிறது. கிருதத்தில் சாத்வீகமும், திரேதாவில் ராஜசமும், துவாபரத்தில் ராஜச- தாமசமும், கலியில் தாமசம் மட்டுமே தூக்கலாக இருக்கும்.
இதைச் சொல்லும் ஶ்ரீமத் பாகவதம், மேலும் ஒன்றைச் சொல்கிறது. தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக பகவான் இப்படிப்பட்ட காலக் கணக்கில்தான் அவதரிப்பார்.
கல்கியின் அவதாரத்தைப் பற்றிச் சொல்லும் ஶ்ரீமத் பாகவதம் தர்ம பதியாக கல்கி அவதாரம் எடுத்து கிருத யுகதைக் கொண்டு வருவார் என்கிறது.
அப்பொழுது சொல்லப்படுவதைக் கவனமாகக் கேளுங்கள்.
ஆரியபட்டீயத்தில் சொல்லப்பட்டுள்ளது போல இந்த காலக் கணக்கில் கிருத யுகம் மேஷத்தில் ஆரம்பிக்கவில்லை.
கடக இராசியில், சூரியன், சந்திரன், குரு ஆகிய மூன்றும் பூச நட்சத்திரத்தில் சேரும் போது கிருத யுகம் ஆரம்பிக்கும்.
இந்தச் சேர்க்கை நூறு வருடங்களுக்கு ஒரு முறை உண்டாகும். ஆனால் அப்பொழுதெல்லாம் கிருதம் உண்டாகாது. தர்மத்தின் அளவு நான்கு பங்காகி, கல்கி அவதாரம் எடுத்தபின் இந்தக் கிருத யுகம் உண்டாகும்.
இந்த தர்மம் சார்ந்த யுகத்தில் திரேதாவில் இராமர் பிறந்தார். இது அரசனின் தர்ம பரிபாலனத்தைப் பொறுத்தே அமைகிறது என்று வால்மீகி இராமாயணமும், மகாபாரதமும் பல இடங்களில் சொல்கிறது.
மூன்றாவதாக, வேதாங்க ஜோதிடத்தில் யுகக் கணக்கு வருகிறது. அதில் யுகம் என்பது இரட்டை. சூரியனும், சந்திரனும் உத்தராயணத்தில் ஆரம்பிக்கும் பயணம் மீண்டும் அதே புள்ளியில் வருவதற்கு 5 வருடங்கள் ஆகின்றன. அதற்குள் இரண்டு அதிக மாதம் வருகிறது. அதிக மாதத்துடன் ஒரு ஏறு முகம், ஒரு இறங்கு முகம் என இரட்டை இருக்கிறது.
இதையே, மகாபாரதத்தில் பின் பற்றினார்கள். இதையே இராமாயண காலத்திலும் பின்பற்றி இருக்க வேண்டும். ஏனெனில் இராமர் யஜூர் வேதத்தில் சமர்த்தர் என்றும், வேதாங்கங்களை அறிந்தவர் என்றும் ஹனுமன் கூறுகிறார். பஞ்ச வர்ஷாத்மக யுகம் எனப்படும் இந்த யுகத்தைத்தான் இராமரும், அவர் காலத்தவரும் பின்பற்றியிருக்க வேண்டும்.
இராமருக்கு முன்னால் வாழ்ந்த தீர்கதமஸ் முனிவர் 10 - ஆவது யுகத்தில் மூப்பு எய்தினார் என்று ரிக் வேதம் சொல்வதன் மூலம் இராமருக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இந்த 5- வருட வேதாங்க யுகம் பயன் பாட்டில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.
" தீர்கதமா மாமதேயோ ஜுஜுர்வான் தஸமே யுகே” (ரிக் வேதம் 1-158-6) என்னும் இந்த ஸ்லோகத்தில்,
10- ஆவது யுகம் என்றால் தீர்கதமஸ் 50 முதல் 55 வயதுக்குள் மூப்படைந்தார் என்று அர்த்தம்.
இந்த யுகம் உத்தராயணத்தில் ஆரம்பிக்கிறது. இதன் ஐந்து வருடங்களுக்கும் சம்வத்சரம், பரிவத்சரம், இடாவத்சரம், அனுவத்சரம், வத்சரம் என்று பெயர். அந்தந்த வருடத்தில், அதன் பெயரைக் கொண்டுதான், சங்கல்பம் செய்திருக்க வேண்டும்.
இந்த யுகக் கணக்கை கீழே பார்க்கலாம்.
Y-VJ என்பது யஜூர் வேதாங்க ஜோதிடக் கணக்கைத் காட்டுகிறது. யஜூர் வேதியான இராமர் இதைத்தான் பின்பற்றியிருக்க வேண்டும். மஹாபாரத காலத்து 5 வருட யுக காலண்டரை மஹாபாரத புத்தகத்தில் கொடுத்தேன். அதுபோல இராமாயண காலத்து 5 வருட காலண்டரை வரப்போகும் இராமாயண புத்தகத்தில் கொடுக்கிறேன்.
இராமர் காலத்தில் இருந்த தர்மத்தின் அளவின் அடிப்படையில் திரேதா யுகமாக இருந்திருக்கிறது. அதாவது அப்பொழுது ராஜசம் அதிகமாக இருந்திருக்கிறது. அதீத ராஜசத்தால் மன்னர்கள் ஆட்டம் போடவே பரசுராமர் அவர்களை அழித்தார்.
அந்த யுகத்தின் தர்ம அளவைக் காப்பதற்கு, நாரதர் முதலானோர் அறிவுரைப்படி இராமர் சம்பூக வதம் செய்திருக்கிறார்.
ஆக, யுகக் கணக்கு இவ்வாறாக இருக்க, எல்லா சாஸ்திரங்களையும் ஆராயாமல் பொத்தாம் பொதுவாக கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் வாழ்ந்தார் என்று சொல்வது கிரிப்டோக்களின் அஜெண்டா தான்.
சுஸ்ருத சம்ஹிதை 1.4.7 சொல்கிறது
एकं शास्त्रमधीयानो न विध्याच्छास्त्रनिश्चयं ।।
तस्माद्बहुश्रुत : शास्त्रं विजानीयाच्चिक्थसह: ।।
ஒரே ஒரு சாஸ்திரத்தை ஒருவன் படித்து, சாஸ்திரம் சொல்லும் முடிவை அறிய முடியாது. அதனால் சிகிச்சை செய்பவன் பல சாஸ்திரங்களையும் அறிந்திருந்தால் தான் சரியான முடிவு எடுக்க முடியும்.
இதையே சுக்ர நீதியும் சொல்கிறது.
இந்த அணுகு முறையைக் கொண்டுதான், சாஸ்திர நிரூபணம் செய்ய வேண்டும்.
இராமர் கால நிரூபணமும் இந்த அணுகு முறையைக் கொண்டுதான் செய்ய முடியும்.
தாமசம் ஓங்கியுள்ள இந்த காலக் கட்டத்தில், மடாதிபதிகளையே ஆட்டிப் படைக்கும் வேடதாரி அசுரர்கள் இருக்கும் இந்த காலத்தில், சாஸ்திரம் மக்களைச் சென்று அடைவது கடினம். அடைந்தால், அதைப் பெற்றவர்கள் செய்த பாக்கியம்.
பி.கு:
தர்ம யுகத்தில் திரேதா யுகம் எப்பொழுது ஆரம்பித்தது என்பதை வாயு புராணம், பிரம்மாண்ட புராணத்தில் படிக்கலாம். அவற்றை எனது வலைத்தளத்தில் எழுதியுள்ளேன். எனது மகாபாரதம் புத்தகத்திலும் எழுதியுள்ளேன். வரப்போகும் இராமாயண புத்தகத்திலும் இவை இடம் பெறப் போகின்றன.
அத்துடன், இராமாயண காலம் பற்றிப் புரிந்து கொள்ள சூரிய சித்தாந்தம் தரும் வானவியல் சாஸ்திர அறிவும், சிசுமாரத்தில் பொருந்தியுள்ள துருவ நக்ஷத்திரங்களைப் பற்றிய அறிவும் தேவை. இராமாயண கால துருவ நக்ஷத்திரத்தை வால்மீகி சொல்கிறார்.
அவையும் புத்தகத்தில் இடம் பெறும். இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் இருந்தால், ரிஷிகள் தந்துள்ள ஞானத்தை ஒதுக்குகிறோம், இழக்கிறோம் என்று அர்த்தம்.