Thursday, December 28, 2017

Vedic concept of path of the Earth covering Vaikunta Ekadasi & Maha Shivaratri (Tamil) - Part 5

முந்தைய கட்டுரைள் : 
Part 1:அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
Part 2: வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்
Part 3: பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்
Part 4: பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்

பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்


நான்முகப் பிரம்மன் நான்கு திசைகளிலும் பார்த்து படைப்பை ஆரம்பித்தார். இவற்றுள் இரண்டு திசைகள் நிச்சயமானவை. அவை வடக்கும், தெற்கும் ஆகும். பொதுவாகவே அண்ட வெளியில் நாம் இருக்கும் மண்டலத்துக்கு மேல் புறம் இருப்பது உத்தரம் என்னும் வடக்கு. அதற்கு நேர் எதிரே இருப்பது, அதாவது நாம் இருக்கும் மண்டலத்துக்குக் கீழே இருப்பது தக்ஷிணம் என்னும் தெற்கு. நான்முகப் பிரமன் தனக்கு மேலும், கீழும் பார்த்த திசைகள் வடக்கு, தெற்கு என்று ஆயின.

பிரம்மம் என்ற சொல்லுக்கு பெரிதானது, வளர்ந்து கொண்டே போவது என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. தோன்றும் பிரபஞ்சத்தில் நுழைந்தவுடன், உப்பிக் கொண்டே போவதுபோல் படைப்பு வளரலாயிற்று. நான்முகப் பிரம்மனும் தானும் அப்படியே பயணிக்கிறார். மேல் எழும்ப எழும்ப அந்தத் திசை வடக்காயிற்று. அவர் கீழே விட்டுச் சென்ற பகுதி தெற்கு ஆயிற்று. இதையே வேறு விதமாகச் சொல்வதென்றால், முதலில் தெற்கில் அண்டங்கள் தோன்றி, அழிந்து, மீண்டும் சிதறலிருந்து உருவாகிக் கொண்டிருக்கின்றன. வடக்கு நோக்கிப் போகப் போக புதிதாகப் படைப்பு எழுந்து கொண்டே இருக்கின்றது.

ஆனால் ஒரேயடியாக வடக்கு முகமாகவே செல்ல முடியாது. குயவனின் சக்கரத்தைப் போன்ற ஆதார சக்தியின் இழுப்பினால், எப்பொழுதுமே கிழக்கு அல்லது வலப் புறம் நோக்கியே திரும்பி சென்று கொண்டிருக்க வேண்டும். கிழக்கு என்பது அவரும், அவரது படைத்தலும் பயணிக்க வேண்டிய திசை. நடராஜரது உருவத்தில் அந்த திசை உடுக்கையில் கிளம்பி, அக்னியை நோக்கிச் செல்வது. இது நேர்ச் சுற்று அல்லது வலச் சுழி, அதாவது clockwise direction ஆகும். நான்முகப் பிரம்மன் முதலில் மேல் முகமாகப் பார்த்து, பின் தான் பயணிக்க வேண்டிய திக்கை நோக்கி, அதற்குப் பின் கீழ் முகமாக நோக்கும் போதும் வலச் சுற்று வருகிறது. இப்படி இந்த சுற்று வடக்கிலிருந்து தெற்கை நோக்கிச் செல்வதால் இதைப் பிரதட்சிணம் என்கிறோம்.

இந்தப் பிரபஞ்சமும், நடுவில் ஆதார அச்சாக இருக்கும் பரம் பொருளான இறைவனைப் பிரதட்சிணம் செய்து வருகிறது. விநாயகப் பெருமான் தன் தாய் தந்தையைச் சுற்றி வந்ததாலேயே உலகைச் சுற்றி வந்ததாக அறிவுறித்தியது, அந்தப் பரம்பொருளான இறைவனை ஆதாரமாக வைத்து உலகங்கள் அனைத்தும் சுற்றி வருகின்றன என்பதைக் காட்டவும், அது மட்டுமல்லாமல் அவரைச் சுற்றுவதால் அனைத்து உலகங்களும், அனைத்து பிரபஞ்சங்களும் செல்லும் மாபெரும் முழுச் சுற்றினையுமே செய்வதற்கு ஒப்பாகும் என்பதை உள் பொருளாக உணர்த்தவும் எழுந்தது என்றும் சொல்லலாம்.அண்ட சராசரங்களும் அவனைச் சுற்றுவது போல, அண்ட சராசங்களுக்கும் அதிபதியான பரம்பொருளை நாமும் கோயிலில் பிரதட்சிணம் செய்கிறோம்.

பிரபஞ்சம் செல்லும் பாதையே பிரதட்சிணமானது என்று நாம் சொல்வதை, நாம் கண்கூடாகப் பார்க்கும் வான்வெளி அண்டங்கள் மெய்ப்பிக்கின்றதா? வானில் காணும் நட்சத்திரங்களும், அவற்றின் கூட்டங்களும் வேறு வேறு திசையில் சென்று கொண்டிருக்கின்றன அல்லவா என்ற கேள்வி எழுகிறது. தோன்றிப் பல காலம் ஆகவே (10 to the power of 17 வருடங்கள் ஆகிவிட்டன; இன்னமும் அவ்வளவு வருடங்கள் செல்ல வேண்டும் என்பது பண்டைய ஜோதிட- வான இயல் நிபுணரான பாஸ்கராச்சரியார் கணிப்பு.) அண்டங்கள் மோதி, உருண்டு, பிறழ்ந்து தற்சமயம் வேறு வேறு திக்கில் போவது போல் தோற்றம் அளிக்கிறது. மேலும் ஒவ்வொரு கலக்சி கூட்டமும் இன்னொரு கலக்சி கூட்டத்தைச் சுற்றுகிறது. ஆகையால் அப்படி உருமாறி வந்துள்ள மூன்றாம் தலைமுறை நட்சத்திரமான நமது சூரியக் குடும்பத்தில் உள்ள நம் பூமி இப்பொழுது உள்ள நிலையில் எது வடக்கு, எது கிழக்கு என்று எப்படிச் சொல்ல முடியும் என்ற கேள்வி வருகிறது. மனித சமுதாயத்தின் நன்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ரிஷிகள் வேத விஞானத்திலிருந்து நமக்கு இந்த விவரங்களை எடுத்துக் கொடுத்துள்ளனர்.

அவர்கள் வாயிலாக நமக்குக் கிடைத்துள்ள விவரம், நம் பூமி தன் சுழற்சிக்கு ஆதாரமாகக் கொண்டுள்ள வட துருவப் பகுதியே பிரம்மன் பயணிக்கும் வடதிசை என்பதாகும். நம் சூரிய மண்டலத்திலேயே மற்ற கிரகங்கள் சுழலும் அச்சு வேறு வேறு திசையில் உள்ளன. ஆனால் பூமி சுழலும் அச்சு வடதிசையில் உள்ள பிரம்ம லோகத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டது. நான்முகப் பிரம்மன் நம்மை விடாமல் பற்றிக் கொண்டு, பிடித்து இழுத்துச் செல்வது போல் நாம் இந்தப் பிரபஞ்சத்தில் பயணிக்கிறோம்.


தென் திசை என்பது முடிந்து போன விஷயங்கள் கொண்டவை. Re-cycling ஆகிக் கொண்டிருக்கும் இடம். தெற்கிலிருந்து உயர வேண்டும் என்றால் நாம் இருக்கும் பூ மண்டலத்துக்கு வர வேண்டும். இங்கிருந்து உயர வேண்டும் என்றால் பிரம்மனை நோக்கிய பயணம்தான்.

அதனால் மறு பிறவிக்குக் காத்திருக்கும் இறந்தோர் செல்லும் இடம் தென் புலம் என்றாயிற்று. அது செல்லும் மார்க்கம் பித்ருயானம் எனப்பட்டது. மீண்டும் பிறப்பெடுக்க வேண்டாத நிலையில் தெய்வீக நிலையை அடைவோரும், முக்தர்களும் செல்லும் திசை வட திசை ஆனது. அது செல்லும் மார்க்கம் தேவயானம் எனப்பட்டது.

முற்காலத்தில் வடக்கிருத்தல் என்று வட திசை நோக்கி த்யானத்தில் அமர்ந்து உயிரை விட்டதும், இந்த தேவயானத்தைப் பிடித்து பிரம்ம லோகத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே. பிதாமகர் பீஷ்மரும் அம்புப் படுக்கையில் படுத்து, சூரியனின் வடக்கு அயனத்திற்காகக் காத்திருந்தது இந்த தேவயான வழியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே. குறிப்பாக அந்த வழி எது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

நாம் இருக்கும் பகுதிக்கு வடக்கு முகமாக – அதாவது – துருவ நட்சத்திரப் பகுதியை நோக்கி, மேலாக ஏழு உலகங்கள் இருக்கின்றன. Realms of Existence என்று சொல்லலாம். நற் கர்மங்களைச் செய்தவர் அவரவர் நிலைக்கு ஏற்றவாறு இந்த பகுதிகளில் சஞ்சரிப்பர், இதில் முடிவான கடைசி நிலை பிரம்ம லோகம். நான்முகப் பிரம்மனும், பிரம்ம ஞானிகளும், முக்தர்களும் நிலை பெற்ற இடம்.

நாம் இருக்கும் பகுதிக்குத் தென் முகமாக ஏழு உலகங்கள் அல்லது நிலைகள் உள்ளன. மீண்டும் உலகில் பிறந்து உழல வேண்டிய நிலையில் இருப்பவர்கள் சஞ்சரிக்கும் இடங்கள் இவை.

இந்த அமைப்பை நோக்கினால் நாம் வாழும் பூமி பரிவாரங்களுடன் பயணம் செல்லும் ஒரு பயணியைப் போல உள்ளது. நமக்குக் கீழே (தென்புலம்) உள்ளவர்களுக்கு பூமியே கதி. அவர்கள் பூமியில் பிறந்து, உய்ந்து, மேல் முகப் பயணத்திற்கு மாற வேண்டும். மேல்முகப் பயணத்தில் இருப்பவர்கள் மேலும் மேலும் உயர்ந்து முடிவான பிரம்ம பதத்தை அடைய வேண்டும். இதில் நாம் வாழும் பூமி நடுவானது – விசேஷமானது. இதுதான் transit zone.

இங்கே ஒரு கேள்வி வரலாம்.

பூமியில் மட்டும்தான் உயிரினம் உள்ளதா? வேறு கிரகங்களில் இல்லையா? 

வேத மதம் காட்டும் பிரபஞ்சவியலில், சரீரம் கொண்ட – அதாவது பௌதிகமான உருவில் உள்ள உயிரினம் என்பது எந்த ஒரு காலக் கட்டத்திலும், ஒரு இடத்தில் தான் இருக்க முடியும். நாம் இருக்கும் காலக் கட்டத்தில் நாம் இருக்கும் பூமியில் இப்பொழுது இருக்கவே, வேறு எங்கும் இருக்க முடியாது. விஞ்ஞானிகள் என்ன தேடினாலும் நம் அறிவுக்கு எட்டக்கூடிய உயிரினங்களை எங்கும் கண்டுபிடிக்க இயலாது.

ஆனால் நாம் இருக்கும் பூமியிலேயே, மேலும் கீழும் என்று ஏழும், ஏழுமான பதினான்கு உலகங்களைச் சொன்னோமே, அந்த உலக ஜீவர்கள் உலவலாம், அல்லது வந்து போகலாம். அவர்களும் நம்மைப் போன்ற ஜீவர்களே. நாமும் நம் நிலையிலிருந்து உயர்ந்தால் மேலுலக ஜீவர்களைப் போல ஆவோம். அவர்களை ஊனக் கண்ணால் காண இயலாது. நமது பௌதிக விதிகளுக்கு வேறுபட்ட விதிகளுக்கு உட்பட்ட நிலையில் உள்ளவர்கள் அவர்கள். தெய்வமாக, தேவதையாக, நல்லோராக, வழிகாட்டியாக, பித்ருவாக அவர்கள் வந்து போவதை சிலரால், சில நேரங்களில் உணர முடியும்.

பிரபஞ்சத்தின் வடக்கு – தெற்கைப் பார்த்தோம். இனி பூமி செல்லும் பிரபஞ்சப் பயணத்தைப் பார்க்கலாம். அதற்கு முன் நம் பூமியின் திசைகள் எவை, அவற்றின் மூலம் பிரபஞ்சம் செல்லும் திசை எது என்று அறிய முடியுமா என்று பார்ப்போம்.

பூமியின் திசைகள்
    பூமியின் அச்சு வட, தென் துருவங்களை இணைக்கிறது. இலங்கையும், உஜ்ஜயினி நகரும் இந்த அச்சுப்பாதையில் உள்ளன. வட துருவத்திற்கு நேர் தெற்கே இலங்கை இருக்கிறது. (விவரங்களை சூரிய சித்தாந்தம், சித்தாந்த சிரோமணி போன்ற நூல்களில் காணலாம்.) வட துருவப் பகுதியிலிருந்து வலச் சுற்றாகப் (clockwise) பார்க்கும் பொழுது இலங்கைக்கு 90 டிகிரி வலது புறம் கிழக்கு. 90 டிகிரி இடது புறம் மேற்கு. இந்த கல்பத்தின் முதல் நாள் சூரியன் மேஷ ராசி 0 டிகிரியில் இலங்கைக்கு 90 டிகிரி கிழக்கில் உதயமானது. உதயமான திசை பூமிக்குக் கிழக்கு என்றானது. அந்த திசை இன்று உலக வழக்கில் உள்ள கிழக்குத் திசையான ஜப்பான் உள்ள திசைதான். அங்கே யமகோடி என்னும் இடம் இருந்தது. தற்சமயம், இந்த இடம் பசிபிக் கடலுக்குள் உள்ளது.


    இலங்கைக்கு இடது புறம் 90 டிகிரி தொலைவில் இருந்த இடம் மேற்கு திசையைக் காட்டுவது. இது ரோமக தேசம் எனப்பட்டது. (தற்போதுள்ள ரோம் அல்ல. 0 டிகிரி க்ரீன்விச்சுக்கு சிறிது மேற்கே அட்லாண்டிக் கடலில் இந்த இடம் இருக்கிறது.) இந்த ரோமக தேசத்தில் இருந்த மயன் என்னும் தானவன், சூரியனிடமிருந்து ‘சூரிய சித்தாந்தம்’ என்னும் வான இயல் சாஸ்திரத்தை உபதேசமாகப் பெற்றான்.

    இலங்கைக்கு நேர் எதிர் புறம், 180 டிகிரி தொலைவில் இருந்த ஊர் ‘சித்தபுரம்’

    வட துருவம் காட்டும் திசை வடக்கு ஆகும். அதற்கு நேர் எதிரே தென் துருவம் காட்டுவது தென் திசை. இரு துருவங்களையும் இணைக்கும் அச்சு இலங்கை, உஜ்ஜயனி வழியாகச் செல்கிறது. இந்த அச்சு மேரு எனப்பபட்டது. மேருவின் உச்சி வட துருவம்.

    இப்படி பூமிக்குக் சொல்லப்பட்ட திசைகள் இன்றும் உலகெங்கும் பயனில் இருக்கவே, வேத மத வழக்கமே இதற்கு ஆதாரமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

    படைப்பு முன்னேறும் திசை
இனி பூமி செல்லும் திசை, அதாவது இந்தப் படைப்பு நகரும் திசை எது என்று பார்ப்போம். நாம் இருக்கும் பால்வெளி காலக்ஸியின் நடுவில் இருப்பது மார்கழி மாதம் சூரியன் உதிக்கும் தனுர் ராசி. இதை மையமாக வைத்து பால்வெளியும் (நமது கலாக்சியும்) , நமது சூரிய மண்டலமும் சுற்றி வருகின்றன. இந்த மையத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் முதியவை என்றும், நமது கலக்சியின் ஓரப் பகுதிகளில் இருப்பவை இளையவை என்றும் சொல்லலாம். ஓரப்பகுதியில் இன்னும் புதிதாக நட்சத்திரங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மார்கழி மாத தனுர் ராசி (Sagittarius )மையம் என்றால், ஆனி மாத மிதுன ராசி (Gemini) ஓரம். இது நாம் இருக்கும் பால் வெளி கலக்சியின் ஒரு பக்கம். இந்தப் பக்கத்தில், இந்தப் பாதையில் நாம் இருக்கும் சூரிய மண்டலம், இதன் மையப் பகுதியிலிருந்து முக்கால் பங்கு (3/4 ) தொலைவில் இருக்கிறது.

ஜாதகக் கட்டம் என்று நாம் சொல்வது உண்மையில் விண்வெளியின் அமைப்பைக் காட்டும் வரை படம். கீழுள்ள படத்தில் விண்வெளியின் திசைகள் காட்டப்பட்டுள்ளன. நாமிருக்கும் கலக்சீயையும் காணலாம்.


Sagittarius எனப்படும் தனுர் ராசி, நம் பால் வெளி கலக்சியின் மையப் பகுதி. சூரியன் இந்த ராசியில் மார்கழி மாதம் சஞ்சரிக்கும். வெளி ஓரம் Geminiஎன்னும் மிதுனம்.

மிதுனத்தில் உள்ள மிருகசீர்ஷம் என்னும் நட்சத்திரம் இருக்கும் பகுதியை நோக்கி நாமும், நம் பிரபஞ்சமும் முன்னேறிச் செல்லும் பாதை செல்கிறது. மார்கழி மாதத்தில் மிருக சீரிஷத்தில் பௌர்ணமி வரவே, அந்த மாதத்திற்கு மார்கழி என்னும் பெயரும், மார்கஷிர என்னும் பெயரும் வந்தது. பயணம் செல்லும் மார்க்கத்தைக் குறிப்பது என்பது இதன் பொருள்.

இந்தப் பயணம் செல்லும் திசை மார்கழி வடமேற்கு — ஆனி தென்கிழக்கு. அதாவது பிரபஞ்சப் பாதை வடமேற்கிலிருந்து தென் கிழக்கு நோக்கிச் செல்கிறது. அதர்வண வேதத்தின் உபவேதமான வாஸ்து சாஸ்திரத்தின்படி தென் கிழக்கு அக்னியையும், வட மேற்கு வாயுவையும் குறிப்பது. இதன் காரணம் பிரபஞ்சத்தின் பயணம் நடராஜர் கையிலிருக்கும் அக்னியை நோக்கிச் செல்கிறது. இந்தப் பயணம் ஆரம்பித்தது, வாயுவில் (பராவஹன்) தாங்கி, வாயுவால் செலுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

இந்த அமைப்பில் வடகிழக்கு நோக்கி நமது துருவப் பகுதி அமைந்துள்ளது. அதாவது, பிரபஞ்சத்தின் வடக்கு திசையானது, பயணத்தில் திரும்பிச் செல்லும் போது வடகிழக்கைக் காட்டி அமைகிறது. இந்த விவரங்களைக் கொண்டு பிரபஞ்சத்தின் அடிப்படைகளையே கொடுத்துள்ளனர் நம் முன்னோர்.



இந்தப் படத்தில் வட மேற்கில் தனுர் ராசியில் சூரியன் வரும் போது மார்கழி மாதம்.

தென் கிழக்கில் மிதுன ராசியில் வரும் சூரியன் வரும்போது ஆனி மாதம்

இந்தப் பாதைக்குச் செங்குத்தான கோடு வட கிழக்கையும், தென் மேற்கையும் இணைக்கிறது. இதில் வட கிழக்கில் மீன ராசியில் சூரியன் வரும் போது பங்குனி மாதம். இந்தப் பாதையைத் தொடர்ந்து மேல் நோக்கிப் போவது தேவ யானம் என்னும் தெய்வ உலகுக்கான, பிரம்ம லோகத்துக்கான திசை.

இதன் எதிர் புறம் வரும் தென் மேற்கில் கன்னி ராசி உள்ளது. புரட்டாசி மாதம் சூரியன் இந்த திசையில் சஞ்சரிக்கும். இந்த வழி பித்ரு யானம் எனபப்டும். இன்று வரையில் அறிவியல் தெரிந்துகொண்டுள்ள விவரம், நாம் இருக்கும் பால் வெளி கலக்சி, மற்ற கலக்சீகளுடன் சேர்ந்து, கன்னி ராசி தென்படும் Virgo Super Cluster என்னும் பெரும் பகுதியை மையமாகக் கொண்டு சுற்றி வருகிறது. இந்த விவரம் வேதம் கூறும் பிரபஞ்சஇயலுடன் ஒத்துப் போகிறது. பிரபஞ்சவியலின் படி நாம் தென்புறத்தவர். மீண்டும், மீண்டும் பிறந்திறந்து நாம் இன்னும் இங்கேதான் இருக்கிறோம். இங்கிருந்து மீளும்போது, வடதிசைப் பயணம் மேற்கொள்வோம்.

இந்த அமைப்பில் முக்கியப் பாதைகள் வருகின்றன.
1. பிரபஞ்சமும், படைப்பும் முன்னேறும் பாதை.

இது வ.மே – தெ.கி நோக்கிச் செல்வது.
வாயுவிலிருந்து அக்னி நோக்கிச் செல்லும் பாதை.

2. ஜீவர்கள் போய் வரும் பித்ருயான – தேவயானப் பாதை.
இது தெ. மே -வ. கி பாதை.

இந்தப் பாதை ஒரே நேர்க் கோட்டில் இருந்தாலும் எதிர் எதிரே செல்லும் தன்மை உடையவை.

இந்தப் பாதையில் நிகழும் போக்குவரத்து காந்த மண்டலக் கோடுகள் போல இருக்கும். தேவ யானத்தில் சென்றவர்கள் செயல்களில் குறைவு ஏற்பட்டால், பூமிக்கு வந்து நிவர்த்தி செய்து விட்டுப் போக வேண்டும். பீஷ்மர் முதலானோர் பூமியில் பிறந்து இப்படியே.

கீழ் புறம் உள்ள பித்ருயானத்தில் சென்றோர், பூமியை அடை வேண்டும். சிறந்த கர்மங்களைச் செய்தால், அவர்கள் பயணம் மேல்நோக்கி அமையும். மேலும் கீழுமானவை ஜீவர்கள் செல்லும் பாதை. குறுக்காகச் செல்வது பிரபஞ்சம் செல்லும் பாதை.

முக்கிய விரத நாட்களான வைகுண்ட எகாதசி , மகா சிவராத்திரி போன்றவை வரும் போது இருக்கும் விண்வெளி அமைப்பைப் பார்த்தால், நாம் சரியாகவே இந்தப் பாதையைக் கணித்துளோம் என்று அறியலாம். இந்த விரதங்களின் தாத்பரியத்தின் அடிப்டையை வைத்துப் பார்க்கும் போது, நாம் கண்டுள்ள பிரபஞ்சவியல் கூறும் பாதையும், அதில் நான்முகப் பிரம்மனின் செல்லும் பயணம் என்று நாம் கூறுவதும் சரியே என்று தெரிகிறது.

இந்தப் படத்தில் மார்கழி மாத அமைப்பு காட்டப்பட்டுள்ளது. மார்கழியில் சூரியன் தனுர் ராசியிலும், சந்திரன் மிதுனத்திலும் இருக்கும்போது பிரபஞ்சம் செல்லும் பாதையில் சூரியன், பூமி, சந்திரன் வருகின்றன. இது பிரபஞ்சப் பாதை. அதற்குச் செங்குத்தான பகுதியில் வருவது பங்குனி மாதம் வரும் மீன ராசி. இது மோக்ஷ ஸ்தானம் எனப்படும். இது தேவயான வழி. இதை ஈசான திசை என்றும் சொல்கிறோம். காரணம் என்னவென்று இப்பொழுது எளிதாகப் புரியும் என்று நினைக்கிறேன். பிரம்ம லோகம் இந்தத் திசையில் இருக்கவே, இந்த திசை தெய்வீகத்தைக் குறிப்பது. இந்தத் திசை வழியே இந்தக் கர்மச் சக்கரத்தை விட்டு முக்தர்கள் செல்லவே, திரும்பி வராமல் நிலைத்து இருக்கும் பரமபதம் அடையவே, வைகுண்ட ஏகாதசி இந்த அமைப்பில் வருகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று சந்திரன் தேவயானப் பகுதியைக் கடக்கிறான். அப்பொழுது பரமபத வாயில் திறந்து, நாம் பிறவா நிலையைத் தரும் பெரும் பதத்தை அடைகிறோம் என்கிறோம்.

அதே மார்கழி மாதம் பௌர்ணமியன்று சந்திரன் மிருக சீரிஷத்தில் இருக்கிறான். அப்பொழுது பிரபஞ்சம் செல்லும் வட மேற்கு- தென் கிழக்குப் பாதையில் சூரியனும், சந்திரனும், பூமியும் வருகின்றன. இங்கு மிருக சீரிஷத்திலும் சில சிறப்புக்கள் நம் வேத மதம் கூறுகிறது.

மிருகசீரிஷத்தின் நக்ஷத்திர தெய்வம் சோமன் என்னும் சந்திரன். சோம பானம் பற்றிப் பல இடங்களிலும், பல தத்துவங்களுடனும் சொல்லப்பட்டிருந்தாலும், இங்கே சோமன் என்பது சாவாமை தரும் அமிர்தம். இறவாமல் மேலும் மேலும் உற்பத்தி ஆகிக் கொண்டே போகும் வழி என்பதால் இந்தப் பகுதியில் தெரியும் இந்த நட்சத்திரம் சோமனது அருளால் உண்டான நட்சத்திரம் எனப்பட்டது. தலையைத் துருத்திக் கொண்டு துள்ளி ஓடும் மான் போன்று இது இருக்கிறது என்பதால் இந்தப் பெயர். மிருக சீரிஷம் என்றால், மானின் தலை என்று பொருள்.

நாம் மிருகசீரிஷம இருக்கும் திசையை, அல்லது பகுதியை நோக்கினால் அதுவே நமது பிரபஞ்சமும் முன்னேறும் பாதை என்று தெரிந்து கொள்ளலாம். இந்தப் பாதையைக் காட்டும் மார்கழி பௌர்ணமி தினத்தின் போது நம் தமிழ் முன்னோர் பாவை நோன்பை ஆரம்பித்தனர். இரண்டு நோக்கங்களுடன் பாவை நோன்பு செய்யப்படுகிறது. ஒன்று, மழை வேண்டி, மற்றொன்று, கொண்ட கணவனை இந்தப் பிறவி மட்டுமல்லாமல், வரப் போகும் பிறவியிலும் கணவனாகப் பெற வேண்டும் என்பதே.


இவை இரண்டும் எதிர் காலம் பற்றியவை. மழையின் சிறப்பு உயிர்களுக்கு ஆதாரமாக இருப்பது. உயிர்களை வளர்க்க ஏதுவாக இருப்பது. வளர்ந்து செல்லும் படைப்பை வழி நடத்திச் செல்லும் – சோமன் காட்டும் – இந்தப் பாதையைக் காட்டிலும் வேறெந்தப் பாதை இதற்குத் தகுதியாக இருக்கும்?

பாவை நோன்பு எதிர்காலத்தைப் பற்றி வேண்டப்படுவதாக உள்ளது. வீடு பேறு பெறுவதுதான் நம் மதத்தின் குறிக்கோள். ஆனால் அதைப் பெற வேண்டும் என்றால், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று இயல்களிலும் நாம் நம் வாழ்க்கையைச் செம்மையாகக் கழிக்க வேண்டும். இவற்றை தனியாகச் செய்ய முடியாது. ஒருவருக்கொருவர் நிறை செய்வதாக, (complementary role) ஆண், பெண் இருவருமாக மனையறத்தில் இருந்தால்தான் முடியும். இதில் இந்த மூன்று இயல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இவற்றைச் செயலாற்றப் போகும் அங்கங்களான ஆணும், பெண்ணும் சிறந்த ஜோடியாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இப்பிறவியில் அவர்கள் அன்னியோனியம், அது மட்டுமல்ல, பிறவி தோறும் தொடரும் அன்னியோன்னியம் தேவை என்று எங்கேயோ போய் விட்டார்கள் நம் முன்னோர்!

இந்தக் கருத்தை, செயலை ஆயிரம் வருடங்கள் முன் வரை கடை பிடித்து வந்தவர்கள், பாரத வரலாற்றிலேயே நம் தமிழ் மக்கள்தான். இந்த மண்ணிலேதான் குஷ்பூ-கொள்கைகளும் காலூன்றி வருகின்றன. நம் பாரம்பரியம் நினைத்தபோக்கில் உருவாக்கப்பட்டவை அல்ல. நாம் இதுவரை கூறிய பிரபஞ்சக் கொள்கை கண்ணோட்டத்தில் பார்த்தால் நம் பாரம்பரியத்தின் ஆழமும், இந்து மதத்தின் தொலை நோக்கமும் விளங்கும்.


மீண்டும் மிருகசீர்ச நட்சத்திரத்துக்கு வருவோம்.

இதன் முந்தின நட்சத்திரம் ரோஹிணி. ரோஹிணியின் தெய்வம் பிரஜாபதி என்னும் உயிர்களை உண்டு பண்ணும் பிரம்மன் ஆவார். இதன் பிந்தின நட்சத்திரம் ருத்திரனைத் தெய்வமாகக் கொண்ட திருவாதிரை ஆகும். ரோஹிணி, மிருக சீரிஷம், திருவாதிரை என்னும் மூன்று நட்சத்திரங்களும் பிறப்பு, நடப்பு, முடிவு என்பவற்றைக் குறிப்பவை. மிருகசீரிஷம் காட்டும் பாதை, முடிவில் ருத்திரனில் ஐக்கியமாகி விடுகிறது. தோன்றும் பிரபஞ்சம் முடியும் இடத்தில் ருத்திரன் காட்சி தருகிறார். அதை நினைவு படுத்தி மார்கழி மிருக சீரிஷம் முடிந்த அடுத்த நாள் ஆருத்ரா தரிசனம் வருகிறது. இவை அனைத்துக்கும் பல கதைகள் உள்ளன. ஆனால் பிரபஞ்சவியலில் இவை எல்லாம் சில முக்கிய அமைப்புகளைக் குறிப்பதைக் காணலாம். அதனால் மீண்டும் மீண்டும் சொல்லத் தோன்றுகிறது – ஏனோ தானோ என்று எழுந்ததல்ல இந்து மதம்.

மேல் சொன்ன விவரங்களின் தொடர்பாக மேலும் சில விவரங்கள்:

மார்கழி பௌர்ணமியின் போது நமது தென் துருவம் புரட்டாசி மாதம் காட்டும் கன்னி ராசியை நோக்கி உள்ளது. அது பித்ருயானம். புரட்டாசியில் சூரியன் கன்னி ராசிக்கு வரும்போது, சூரியன் இருக்கும் திசையை (ராசியை , மாதத்தை) முன்னிட்டு அந்த மாதம் பித்ருக்களுக்கு முக்கியமாகிறது. அப்பொழுது பித்ருக்கள் பூமிக்கு வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் அது.
இதைப் போன்ற ஒருங்கிணைப்பு வரும் மற்றொரு மாதம் பங்குனி மாதம். பங்குனி மாதத்தில் சூரியன் தேவ யானம் காட்டும் வட கிழக்கு திசையில் வருகிறது. இதனால் பங்குனி மாதம் எல்லாக் கோயில்களுக்கும் விசேஷமாகிறது. பங்குனியில் சேர்த்தியும், தெய்வங்களின் கல்யாணமும் நடப்பது, அந்த தெய்வத்துடன் ஒரு நாள் நாமும் இணைய வேண்டியதை நினைவு படுத்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. பாவை நோன்பின் பயனாக நோன்பு முடிந்து எண்ணம் கை கூடும் மாதமும் பங்குனி தான். பங்குனி உத்தரத்தில், பிரமம் லோகமும், நமது வட துருவமும், சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க் கோட்டில் வருகின்றன.

மகாசிவராத்திரி வரும் நேரத்தில் இந்தப் பாதைகள் அமையும் விதத்தைப் படத்தில் காணலாம்.


தேவயான அமைப்புக்குச் சற்று முன்னதாகவே மாசி மாத தேய்பிறை சதுர்தசி வந்து விடுகிறது. சில டிகிரி வித்தியாசம் வருகிறது. (அதைக் கணக்கிட முடியும்) . அதே போல இந்த அமைப்புக்குச் செங்குத்தாக வரும் கோடு பிரபஞ்சப் பாதையில் அமைகிறது. அங்கும் அந்த அளவு டிகிரி வித்தியாசம் வரும். இந்த வித்தியாசம்தான் பிரபஞ்சம் வளையும் அளவாக (curvature) இருக்க முடியும்.

இப்படி அமைவதில் ஒரு சிறப்பைக் காணலாம். மகாப் பிரளயம் நடக்கும்போது, பிரம்ம லோகம், பிரபஞ்சப் பாதையில் இன்னும் முன்னேறி விட்டிருக்கும். பிரளயம் நடக்கும் நேரத்தில், பிரம்மனும் அவரது உலகை அடைந்த முக்தர்களும் பிரபஞ்சப் பாதையை விட்டு நீங்கி விட்டிருப்பார்கள். அவரோடு நீங்குபவர்களில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவர் அருளாலும் மறு பிறவியைக் கடந்தவர்கள் அடங்குவர்.

சிவனுக்கு இன்னும் வேலை முடியவில்லை; வேலை என்றும் முடியாது. Conveyor belt -இல் வருகிறார்போல அண்டங்கள் வந்து கொண்டே இருக்கும். அவற்றை தோற்றமில்லாப் பிரபஞ்சத்தில் அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதும் தோன்றும் பிரபஞ்சத்தில் படைப்பு ஆரம்பித்துக் கொண்டே இருக்கும். உடுக்கையும், அக்னியும் தூக்கின இரண்டு கைகளுக்கும் ஓய்வே கிடையாது. தூக்கினது தூக்கினபடி இருந்தால்தான் அண்டங்கள் இயங்க முடியும்.

தோன்றும் பிரபஞ்சத்திலும், எங்கெல்லாம் அழிவிலிருந்து ஆக்கம் வருகிறதோ, அங்கெல்லாம் சிவனது உடுக்கை ஒலி கேட்கும். இமயமலை வளர்ந்தபோது அப்படித்தான் ஓயாமல் உடுக்கை ஒலி கேட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. அப்பகுதியில் இருந்த கடலை முட்டி, அப்பால் இருந்த நிலப்பகுதியை மோதி, மேற்கொண்டு போக வழியில்லாமல் போகவே, மலையாக வளர்ந்தது இமய மலை என்று புவி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடலை அழித்து, மலை வந்தது. அது உடுக்கை ஒலி காட்டும் படைப்பு. அதனால் அங்கு சிவன் அம்சம் இருக்கிறது. அவனை அடைய விரும்பும் சித்தர்களும் அங்கு தான் சித்தி பெறுகின்றனர். இமய மலையில் சித்தாஷ்ரமம் இருந்தது என்றும், அங்கு விஸ்வாமித்திரர் போன்ற ரிஷிகள் வசித்தனர் என்றும், வாமன அவதாரம் அங்கே தோன்றியது என்றும் வால்மீகி ராமாயணம் கூறுகிறது.

எங்கெல்லாம் அழிவிலிருந்து ஆக்கம் வருகிறதோ அது சித்தி பெரும் இடமாகிறது. அப்படிப்பட்ட மற்றொரு இடம் திருவண்ணாமலை. அந்த மலை அணைந்த எரிமலை என்று புவியியலார் கருதுகின்றனர். ஒருகாலத்தில் பிரளய கால அக்னியைப் போல விண்ணளவு உயரும் நெருப்பைக் கக்கிகொண்டிருந்த இடம் அது. அந்த அக்னி அழிக்கவில்லை. சித்தி பெரும் இடமாக ஆக்கி விட்டிருக்கிறது.

இன்றைக்கு நாம் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு இருக்கிறோம்?


    இந்தக் கேள்விக்கு சிவபெருமானே காலக் கடிகாரமாக உதவுகிறார்.



    நாம் இருக்கும் இந்தக் காலக்கட்டம் நான்முகப் பிரம்மனின் ஆயுளில் பாதி முடிந்து, அதாவது 50 வருடங்கள் முடிந்து, 51 ஆவது வருடத்தின் முதல் நாள் மதியம் உச்சிப்பொழுது தாண்டி இருக்கும் நேரம் (இந்த விவரங்களைப் பிறகு பார்ப்போம்). நடராஜர் தாண்டவக் கோலம் காட்டும் பிரபஞ்சப் பயணத்தில், அவர் முடி மேல் நம் இப்பொழுது இருக்கிறோம். அதை இவ்வாறு காட்டலாம்.பாதையைத் தெரிந்து கொண்டோம்.

    இனி படைப்பு எப்படி நடந்தது, நடக்கிறது என்று இந்தப் பிரபஞ்சவியல் கூறுவதைப் பார்ப்போம்.



(தொடரும்)