Sunday, August 30, 2009

பிள்ளையார் தேசத்தில் சதுர்த்தி விழா - ஒரு பார்வை


From

பிள்ளையார் தேசத்தில் சதுர்த்தி விழா - ஒரு பார்வை



B.R.ஹரன்



இறைபக்தி, தேசபக்தி, மக்கள் ஒற்றுமை


 
ganesha-carrying-to-sea


மூல முதற்பொருளாக விளங்குபவர் பிள்ளையார் பெருமான். இந்துக்களின் வாழ்க்கையில் அவரை துதித்தே அனைத்தையும் ஆரம்பிக்கின்றோம்; செய்து முடிக்கின்றோம். குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானவர் பிள்ளையார். இவரைப் பார்த்த மாத்திரத்திலேயே நம் மனதில் பக்தி தோன்றுகிறது. எல்லோரும் இவரைத் தொழுகின்றோம். அனைவர்க்கும் அந்தரங்கத் தெய்வமாகவும் திகழ்கின்றார். "பிடித்து வைத்தால் பிள்ளையார்" என்று நம் கையாலேயே பிடித்து வைத்து நாம் பூஜை செய்வதால் நமக்குப் பிடித்தமான தெய்வமாக இருக்கிறார். நம் வினைகளைத் தீர்த்து வைப்பதால் விநாயகர் என்று போற்றுகிறோம். சிவ கணங்களுக்குத் தலைவராதலால் கணபதி என்றும் கணேசர் என்றும் வணங்குகிறோம்.



 
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினமான பிள்ளையாரின் பிறந்த தினத்தை, "பிள்ளையார் சதுர்த்தி" என்று விமரிசையாகக் கொண்டாடுவது இந்துக்களின் பழமை வாய்ந்த பாரம்பரியம். அவரவர் வீடுகளிலும் ஆங்காங்கேயுள்ள ஆலயங்களிலும் இவ்விழாவைக் கொண்டாடுவது மரபு. விநாயகரை பூஜித்து, விழா கொண்டாடி முடிந்ததும், அதற்கென்று செய்த அவரின் விக்ரஹத்தை (திருவுருவத்தை, மூர்த்தியை) விஸர்ஜனம் (நீரில் கரைத்தல்) செய்வதற்காக கடல், நதி, ஏரி, வாய்க்கால், கிணறு என்று நீர்நிலைகளை நோக்கி எடுத்துச் சென்று அங்கே கரைத்த பின்னர் அவரவர் வீடு திரும்புவது வழக்கம்.


 
சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்கள் அனைவரையும் ஒன்று

biggest-ganesh-in-hyderabad திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு மாபெரும் சக்தியாக உருவாக்க வேண்டும் என்று நினைத்த மராட்டிய சிங்கம் பால கங்காதரத் திலகர், வீட்டிற்குள்ளும் ஆலயங்களிலும் கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை, ஊர்கூடிக் கொண்டாடும் பொது விழாவாகவும், விஸர்ஜன ஊர்வலத்தை ஊரே திரண்டு வந்து கலந்துகொள்ளும் பழக்கமாகவும் மாற்றினார். மராட்டிய மாநிலத்தில் ஆரம்பித்த அவ்வழக்கம் பின்பு நாளடைவில் எல்லா மாநிலங்களிலும் பரவிவிட்டது. இறைபக்தியுடன் கூடவே, தேசபக்தியும், மக்கள் ஒற்றுமையும் வளர ஏதுவான ஒரு மிகப்பெரும் விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா ஆகிப்போனது.
 



தமிழகத்தில் பிள்ளையார்
 
பிள்ளையாருக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம் தமிழகத்திற்குப் பல நன்மைகளைச் செய்துள்ளார் பிள்ளையார். குடகு மலையில் தவம் புரிந்து கொண்டிருந்த குறுமுனி அகத்தியர், தன் கமண்டலத்தில் அடைத்து வைந்திருந்த காவிரி நதியை, காகம் உருக்கொண்டு கமண்டலத்தைத் தட்டிவிட்டு, அது பெறுக்கெடுத்து நம் தமிழகம் வந்தடையக் காரணமான பூரணப் பொருளன் பிள்ளையார்.


 
rockfort-templeஸ்ரீ ராமபிரான் தன் பட்டாபிஷேகம் முடிந்தவுடன், விபீஷணனுக்கு, தங்கள் வம்சம் பாரம்பரியமாகப் பூஜை செய்து வந்த ஸ்ரீ ரங்கநாதர் விக்ரஹத்தைப் பரிசாக வழங்க, அதை எடுத்துக் கொண்டு விபீஷணன் இலங்கை நோக்கிச் செல்லும்போது, திருச்சி அருகே வந்தவுடன் காவிரியின் அழகைக் கண்டு அந்தப் புண்ணிய நதியில் குளிக்க விழைகிறான். "போகும் வழியில் எங்குவைத்தாலும் அவ்விடத்திலேயே விக்ரஹம் தங்கிவிடும். எனவே எங்கும் தங்காமல் இலங்கை சென்று விடு" என்று ராமர் சொன்னது நினைவுக்கு வர, விக்ரஹத்தைக் கீழே வைக்க முடியாமலும், காவிரியில் குளிக்காமல் செல்ல மனமில்லாமலும் தவித்துக் கொண்டிருந்த விபீஷணனை, பாலகன் உருவத்தில் வந்து ஏமாற்றி, விக்ரஹத்தை அவன் குளிக்கும்வரை தான் வைத்துக்கொள்வதாகக் கூறி, அவன் குளிக்கும்போது அதைக் காவிரிக் கரையிலேயே வைத்துவிட்டு ஓடினார் பிள்ளையார். அவரைத் துரத்திக்கொண்டு கோபம் கொண்ட விபீஷணன் ஓட, அவனைப் பக்கத்தில் உள்ள சிறிய மலையுச்சி வரை வரச்செய்து, தன் உண்மை தரிசனத்தைக் காட்டி அவனுக்கு அருள் பாலித்தார். அந்த மலையே இன்று நாம் அனைவரும் சென்று வணங்கும் பிள்ளையார் குடியிருக்கும் திருச்சி மலைக் கோட்டை ஆகும். விபீஷணன் வேண்டுகோளின்படி ஸ்ரீ ரங்கநாதர் இலங்கை இருக்கும் தெற்கு திசை நோக்கியே அருள் பாலிப்பார் என்ற வரத்தையும் அருள்கிறார் பிள்ளையார். அவ்விடமே தென்திசை இலங்கை நோக்கும் அரங்கனுடம் இன்று உலகம் போற்றும் வைணவத் திருத்தலமாக, ஸ்ரீரங்கம் விளங்குகிறது. எனவே, ஸ்ரீராமரின் பரம்பரைச் சொத்தான ஸ்ரீரங்கநாதர் நம் நாட்டை விட்டு வேறு நாட்டிற்குச் செல்லாமல் காப்பாற்றி, ஸ்ரீரங்கம், மலைகோட்டை என்ற இரண்டு புண்ணியத் தலங்களை நமக்கு ஏற்படுத்தித் தந்தவர் பிள்ளையார் பெருமான்.


 
ஸ்ரீ ராமபிரான்கூட இலங்கை செல்ல, "ராமர் ஸேது" என்று போற்றப்படும் ராமர் பாலத்தைக் கட்டுவதற்கு முன்னால்,  விநாயகரைத் தொழவேண்டும் என்று, ராமநாதபுரத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள "உப்பூர்" என்ற இடத்தில் உள்ள விநாயகர் கோயிலில் பிள்ளையாரைத் தொழுது விட்டுத்தான் பாலத்தைக் கட்டும் பணியில் ஈடுபடுகிறார். மேற்கூரிய புராணச் சரித்திரங்கள் அனைத்தும் காஞ்சி பரமாச்சாரியார் சொல்லி எழுதப்பட்ட "தெய்வத்தின் குரல்" புத்தகத்தில் அருமையாகக் கூறப்பட்டுள்ளன. இப்பேர்பட்ட புண்ணிய பூமியாம் தமிழகம் பிள்ளையாரைப் போற்றுவதில் வியப்பொன்றும் இல்லையே!?
 


திராவிட இன வெறியர்களின் பிள்ளையார் துவேஷம்
 
இருந்தாலும், மக்கள் விநாயகரை வெறுக்கவும் அவர்களை வேறுganehs-visarjan-mumbai விளங்காத பாதையில் வழிநடத்தவும், இனவெறிக் கும்பல் ஒன்று கிளம்பியது. கடவுள் எதிர்ப்புக் கொள்கையும், ஆதாரமற்ற ஆரியர்-திராவிடர் இனவெறிக் கொள்கையும் கொண்ட "திராவிடர் கழகம்" தமிழகத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்ட ஸ்ரீ ராமர், ஸ்ரீ விநாயகர் ஆகிய இரண்டு தெய்வங்களையும், "அவை ஆரியர் தெய்வங்கள், அவைகளைத் தமிழர்கள் வணங்கக் கூடாது" என்று பிரசாரம் செய்து, அத்தெய்வங்களுக்கு செருப்பு மாலைகளும், விளக்குமாறு மாலைகளும் அணிவித்து, அவற்றால் அடித்து, பிள்ளையார் சிலைகளை உடைத்து, ஊர்வலங்கள் நடத்தித் தங்கள் முட்டாள் தனத்தையும் அழுக்குக் கலாசாரத்தையும் உலகுக்குப் பறை சாற்றிக் கொண்டனர்.



 
ganesh-visarjan'பெரியார்' என்று சொல்லப்படும் இனவெறியர் ஈவேரா-வின் தலைமையில், திக, மற்றும் திமுக இரண்டும், மேற்கண்ட விதத்தில் தீவிரப் பிரசாரமும், ஊர்வலங்களும், பல இடங்களில் தமிழகமெங்கும் நடத்தின. ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத விளைவுகள் ஏற்பட்டன. மன்னர்களும், ஆன்மிக குருமார்களும் ஆண்டாண்டு காலமாகச் செய்ய முடியாததை, ஒரு சில நாட்களில் இந்தத் திராவிடத் தலைகள் செய்து முடித்தன. அதாவது, அரசமரம், ஆற்றங்கரை, ஆலயம் என்று மட்டுமே குடியிருந்த பிள்ளையார், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, பொது இடங்கள் என்று தமிழகமெங்கும் நீக்கமற நிறைந்து விட்டார்! பாரத தேசத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழகத்தில் பிள்ளையார் கோயில்கள் பெருகின. தமிழகமே "பிள்ளையார் தேசம்" என்று பெயர் பெற்றது. பக்தி பொங்கும் தமிழ் மக்கள் மனதில் பாசம் மிகுந்த பிள்ளையாகப் பிள்ளையார் பெருமான் வீற்றிருக்கும்போது, பல நூறு சிலைகள் ஈவேரா-விற்கு வைத்தாலும், இந்தப் பிள்ளையார் தேசம் தப்பித் தவறிக்கூட பெரியார் தேசம் ஆகிவிடாது.



 

கலைஞரின் கண்டுபிடிப்பு
 
கடந்த 2007-ஆம் ஆண்டு, விநாயகர் சதுர்த்திக்குச் சில தினங்களே உள்ள சூழ்நிலையில், நமது மாண்புமிகு முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள், "பிள்ளையார் கர்நாடகத்தைச் சேர்ந்த வாதாபியில் பிறந்தவர். அவர் பல்லவர் காலத்தில்தான் தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டார். எனவே அவர் தமிழ் கடவுள் அல்ல" என்கின்ற பேருண்மையைப் பகன்றார். கடவுளற்கு மொழிப் பாகுபாடு கிடையாது என்பது சிறு குழந்தைக்குக் கூட தெரிந்த விஷயம். இருந்தாலும், கலைஞர் பேச்சை ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொள்வோம். சைவ சமயம் தமிழகத்தில் தழைத்தோங்கி வளர்ந்தது என்பதும் சிவபெருமான் தமிழர்களால் பெரிதும் வணங்கப்படுகிறவர் என்பதும், பார்வதி தேவி பல விதமான ஸ்வரூபங்களில் அம்மனாக வழிபடப்படுபவள் என்பதும், சிவ-பார்வதியின் இளைய மகன் முருகப் பெருமான் 'தமிழ் கடவுள்' என்று போற்றப் படுபவன் என்பதும், நம் முதல்வருக்கு நன்றாகத் தெரிந்த விஷயங்கள். சிவ-பார்வதியின் மூத்த மகன், தமிழ்க் கடவுள் முருகனின் தமையன் கணபதி எவ்வாறு தமிழர்களின் கடவுளாக இல்லாமல் போனார்? கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட ஈவேரா-வின் பெயரைச் சொல்லித் தெலுங்கரான கருணாநிதி தமிழகத்தை ஆளும்போது, தமிழர்கள் பிள்ளையாரைத் தெய்வமாக வழிபடுதலில் என்ன தவறு? 



 
ganesh-visarjan-at-chowpatti

கலைஞர் கருணாநிதி தமிழ் இலக்கியங்கள் மெத்தப் படித்தவர். சங்க இலக்கியங்கள் நன்கு தெரிந்தவர். இந்தத் தமிழினத் தலைவருக்கு சங்க இலக்கியங்களில் பிள்ளையாரைப் போற்றியிருப்பது தெரியாதா? அப்பரும், சுந்தரரும், சம்பந்தரும் தங்கள் திருமுறைகளில் பிள்ளையாரைப் போற்றியிருப்பதும் கலைஞருக்குத் தெரியாதா? பழம்பெரும் புலவர் ஔவையார் அற்புதமாக "விநாயகர் அகவல்" அருளியது தெரியாதா? பின்  எதற்காக விநாயகர் சதுர்த்தி சமயத்தில் விநாயகர் வழிபாட்டை எள்ளி நகையாட வேண்டும்? இது தனக்கே உரிய இந்து துவேஷத்தைக் காண்பிப்பதற்கும், சிறுபான்மையின மக்களை சந்தோஷப் படுத்தவும் தான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாதா? இதில் ஒரு தமாஷ் என்னவென்றால், மாறன் குடும்பத்தாருடன் சண்டை போட்டுக் கொண்டு, வேறு வழியில்லாமல் தனக்கென்று ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கியதென்னவோ, அதே விநாயகர் சதுர்த்தி நன்னாளில்தான்! இதே தொலைக்காட்சி நிறுவனம்தான், மற்ற நிறுவனங்கள் விநாயகர் சதுர்த்தி தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்று விளம்பரம் செய்தபோது, தான் மட்டும் 'விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்' என்று வெட்கமில்லாமல் விளம்பரம் செய்தது. என்னே இவர்கள் பகுத்தறிவும் கடவுள் எதிர்ப்புக் கொள்கையும்! 



 
அதே சமயத்தில் கலைஞரின் நண்பரும் தம்பியுமான திரு வீரமணியார் அவர்கள் தன் கழக 'அடிமை'களுக்காக, தான் நடத்திக் கொண்டிருக்கும் 'விடுதலை' பத்திரிகையில் பிள்ளையார் படத்தைப் போட்டு, தரக் குறைவான வார்த்தைகளால் வர்ணித்து, தன் பங்கிற்கு கழகக் கொள்கையை நிலைநாட்டினார்.



 
நம் தமிழகத்தில் நாத்திகத்தை பின்பற்றுபவர்கள் ஐந்து சதவிகிதம் கூட இருக்கமாட்டார்கள். மேலும் கலைஞர் ஆட்சிக்கு வந்தது வெறும் சிறுபான்மையினர் ஒட்டுக்களை மட்டும் பெற்றுக் கொண்டு அல்ல. பெரும்பாலும், கடவுள் நம்பிக்கை கொண்ட தமிழ் இந்துக்களின் ஒட்டுக்களை வைத்துத்தான் திமுக ஆட்சியில் இருக்கிறது; கலைஞரும் முதல்வராக இருக்கிரார். ஒரு முதல்வர் என்கிற முறையில், அனைத்துத் தரப்பினருக்கும், ஜாதி, மத, இன, மொழி, வேறுபாடின்றி அவர் ஆட்சி செலுத்த வேண்டும். ஆனால் அவர் திமுக அரசு ஆட்சி செய்தபோதெல்லாம், தமிழ் இந்துக்களை அலட்சியப்படுத்தி, இந்துக் கடவுளரை அவமானம் செய்து, இந்துக் கலாசாரத்தைப் பற்றி அவதூறு பேசி வந்திருக்கிறார் என்பதே உண்மை.


 

சில நிகழ்வுகள்
 
இந்தத் திராவிட கழகங்களின், மற்றும் தலைவர்களின் பேச்சுகளும், செயல்பாடுகளும், தமிழ் இந்துக்களுக்கு விளைவித்த கொடுமைகளில் தலையானது எதுவென்றால், நாம் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக, நிம்மதியாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட முடியாமல் போனதுதான். இவ்வருடம் நடந்த ஒரு சில நிகழ்வுகளைப் பார்ப்போம்.


  •  
    இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஹேமந்த் என்பவர், தான் வசிக்கும் பகுதியான புதுபேட்டையில் வெங்கடாசல நாயக்கன் தெருவில் விநாயகர் விக்ரஹத்தை வைக்க முயன்றபோது, அப்பகுதியில் உள்ள முஸ்லீம்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்து முன்னணியினர் உறுதியாக இருக்க, காவல் துறையினர் தலையிட்டு கோமளீஸ்வரர் கோயில் அருகே வைக்குமாறு சொல்ல, இந்து முன்னணியினரும் வேறு வழியில்லாமல் அவ்வாறே செய்தனர்.

  •  
    திருப்பூரில் நடந்த விநாயகர் விஸர்ஜன ஊர்வலத்தில் பிச்சம்பாளையம்புதூர்-ஸ்ரீநகர் சாலையில் மசூதி இருக்கின்ற காரணத்தினால் அவ்வழியே ஊர்வலம் செல்லக் கூடாது என்று அப்பகுதியில் வாழும் முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்து, கல்வீச்சில் ஈடுபட்டு, பிள்ளையார் விக்ரஹங்களை உடைத்தும், அவற்றை ஏற்றி வந்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்து முன்னணியினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்த, காவல் துறையினர் வந்து நிலைமையைச் சமாளித்துள்ளனர். இதனால் கிட்டத்தட்ட இரண்டு மணி முதல் மூன்று மணி நேரம் வரை விஸர்ஜனம் தாமதப் பட்டுள்ளது.

  •  
    கன்யாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே வடக்கு மாத்தூரில் வைக்கப் பட்டிருந்த விநாயகர் விக்ரஹத்தை, அப்பகுதியைச் சேர்ந்த சில முஸ்லீம்கள் காவல் துறையினர் போல வேடமிட்டு வந்து, உடைத்து நொறுக்கிவிட்டு அங்கே காவலுக்கு இருந்த ஆறு இந்து இளைஞர்களை கொடூரமாக அரிவாளால் வெட்டித் தாக்குதல் நடத்திச் சென்றுள்ளனர். பூதப்பாண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
     

  • திண்டுக்கல்லில் பாறைப்பட்டி விநாயகர் விஸர்ஜன ஊர்வலம் பேகம்பூர் பள்ளிவாசல் வழியாகத்தான் சென்று கொண்டிருந்தது. 97-ல் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் கலந்து கொண்டபோது அவருக்கு பள்ளிவாசல் சார்பில் மரியாதையும் செய்யப்பட்டுள்ளது. 98-ஆம் ஆண்டிலிருந்து திடீரென்று அப்பகுதி முஸ்லீம்கள் சிலர் ஆட்சேபம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். 2003, 2005, 2008 ஆண்டுகளில் அங்கே கல்வீச்சுத் தாக்குதல்கள் நடந்து கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு அவ்வழியே ஊர்வலம் செல்லத் தடை விதிக்கக் கோரி முஸ்லீம் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்ய, உயர் நீதிமன்றம் அம்மனுவைத் தள்ளுபடி செய்தது. பின்னர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை உயர் அதிகாரிகள், இந்து முஸ்லீம் பிரமுகர்கள் என எல்லோரும் சேர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி, ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளிக்க, அமைதியான முறையில் ஊர்வலம் நடந்துள்ளது. இருந்தும் ஊர்வலம் பள்ளிவாசல் அருகே வந்ததும், அதைக் கடந்து செல்லும்வரை, பிள்ளையாருக்கான இசை, மேள தாள வாத்தியங்கள் வாசிப்பு நிறுத்தப் பட்டுள்ளன.

  •  
    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த மகம்மது சிப்லி என்பவர் விநாயகர் ஊர்வலத்தின் பாதையை மாற்றி அமைக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். தன்னுடைய மனுவில் முத்துப்பேட்டை பகுதியில் பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் வாழ்ந்து வருவதாகவும், ஆண்டு தோறும் ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்படுவதாகவும், லட்சக் கணக்கில் பொதுமக்களின் சொத்துகள் சேதமடைவதாகவும், எனவே மாற்றுப் பாதை அமைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி முருகேசன் அடங்கிய முதல் அமர்வு, மாற்றுப் பாதையை ஆராயுமாறு சொல்லி, அவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஊர்வலத்தின் போது பிரச்சனை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு இட்டுள்ளது.

  •  
    சேலம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டியில் கடந்த 2007-ஆம் ஆண்டு த.மு.மு.க வினரால் கலவரம் ஏற்பட்டு, காவல் துறை கடுமையாகத் தடியடிப் பிரயோகம் செய்து, ஐநூறுக்கும் மேற்பட்ட இந்துக்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. நூற்றுக் கணக்கான முஸ்லீம்கள் விநாயகர் விக்ரஹங்களை எடுக்கச் சொல்லி காவல் நிலையம் முன்னால் மறியல் செய்ததனால், ஆயிரக் கணக்கான இந்துக்கள் பேருந்து நிலையத்தில் திரண்டபோதும், பேருந்துகளின் போக்குவரத்து பாதிக்கவில்லை என்றும், இந்து வியாபாரிகள் அனைவரும் எந்த விதமான தூண்டுதலும் இல்லாமல் தங்கள் வியாபார நிலையங்களைத் தாங்களே தொடர்ந்து ஐந்து நாள்கள் அடைத்து வைத்ததாகவும் செய்திகள் வந்தன. ஜாதி வித்தியாசம் இன்றி, கட்சிப் பாகுபாடு இன்றி, தம்மம்பட்டி இந்துக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் செயல் பட்டதனால் முஸ்லீம்கள் பின்னர் தங்கள் கோரிக்கைகளைக் கைவிட வேண்டியதாயிற்று என்றும், காவல் துறையினரும் அரசும் வியந்து போயினர் என்றும் செய்திகள் வந்தன.

  •  
    இடையே, 2001-ஆம் ஆண்டு, பொது மக்களை அனுமதிக்காமல், காவல் மற்றும் வருவாய்த் துறையினரே விநாயகர் விஸர்ஜனம் செய்தார்கள். இவையெல்லாம் பத்திரிகைகளிலும், நாளேடுகளிலும் வந்த செய்திகள் மட்டுமே. அவைகளில் வராத விஷயங்கள் தமிழகமெங்கும் நடைபெற்றிருக்க வாய்ப்புண்டு.

 
விவரங்களும் வினாக்களும்


 
இந்தச் செய்திகளை ஆராய்ந்ததிலிருந்து நாம் புரிந்து கொண்ட விஷயங்களைப் பட்டியலிடுவோம். சில கேள்விகளும் நம் மனதில் எழுகின்றன.


 
அனைத்து மக்களுக்குமான பொது வழியில் விநாயகர் விஸர்ஜன ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. ஆண்டுக்கு ஒரே ஒரு முறைதான். பாதையில் மசூதி இருப்பதால் அவ்வழியே ஊர்வலம் செல்லக் கூடாது என்பதும், வாத்தியக் கருவிகளின் இசையோசையால் மசூதியில் தொழுகை பாதிக்கப் படுகிறது என்பதும் சற்றும் நியாயமற்ற வாதங்கள்.


அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இக்கலவரங்கள், சில தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப இன்று தமிழகம் முழுதும் பரவி வருகின்றன.


நியாயமற்ற கோரிக்கைகளை ஏற்று, ஊர்வலத்தின் பாதையை மாற்றியமைப்பதும், மசூதியருகே வந்தவுடன் வாத்திய கோஷங்களை நிறுத்தச் சொல்வதும், அரசுக்கோ, காவல் துறைக்கோ அழகல்ல.

lalbagh-cha-raja-biggest-idol-2009

ஆண்டுக்கு ஒரு முறை ஒரு சில நிமிடங்களே தங்கள் பள்ளிவாசலைக் கடந்து செல்லும் ஊர்வலத்தின் வாத்திய கோஷங்களை நிறுத்தக் கோரும் முஸ்லீம் மக்கள், ஆண்டு முழுவதும் தினசரி ஐந்து முறை ஒலிப்பெருக்கி மூலம் மற்றவர்களைப் பாதிக்குமாறு தொழுகை நடத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று சிந்திக்க வேண்டும். பல மசூதிகள் ஆலயங்கள் அருகிலேயே கட்டப் படுகின்றன. அவ்வாலயங்களின் பிரார்த்தனைகளும் பூஜைகளும் ஒலிபெருக்கியிலிருந்து வரும் சத்தத்தினால் பாதிக்கப் படுகின்றன. எனவே ஒலிபெருக்கியில் தொழுவதை நிறுத்த வேண்டும் என்று இந்துக்கள் கோரிக்கை வைத்தால் முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வார்களா? இன்று வரை இந்துக்கள் அவ்வாறு எந்தத் தொந்தரவும் தராமலும், முஸ்லீம்களின் பண்டிகைக் கொண்டாட்டங்களில் தலையிடாமலும், அவர்கள் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து இருப்பதை ஏன் முஸ்லீம் சமுதாயத்தினர் உணர்ந்து கொள்ளவில்லை? அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே அவ்வாறு நடந்து கொள்கிறார்களா?


 
திராவிடக் கழகங்கள் தங்கள் கட்சி மாநாடுகளை சென்னையில் நடத்தும் போது, தமிழகமெங்கும் உள்ள கட்சித் தொண்டர்கள் எவ்வாறு சென்னைக்கு வருவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவ்வாறு வரும்போது அவர்களின் வண்டிகளும், லாரிகளும், பல இடங்களில் மசூதிகளைக் கடந்துதான் வருகின்றன. அப்போதெல்லாம் மசூதிகளில் தொழுகைகள் பாதிக்கப் படுவதில்லையா? அந்த மாதிரியான நாகரீகமற்ற காட்டுக் கூச்சலையெல்லாம் பொறுத்துக் கொள்ளும் முஸ்லீம் மக்கள், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே, கடந்து செல்லும் விநாயகர் ஊர்வலத்தை ஏன் ஆட்சேபிக்க வேண்டும்?


     
coast-guard-chopper-ganesha-visarjanமசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் உபயோகப்படுத்தக் கூடாது என்று இந்துக்கள் கோரிக்கை வைத்தால் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? ஊர்வலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு விக்ரஹங்கள்தான் எடுத்துச் செல்ல வேண்டும்; விக்ரஹங்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் இருக்கக் கூடாது; விநாயகர் விக்ரஹங்களுக்கு நீங்களேதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்; என்றெல்லாம் ஏகப்பட்டக் கட்டுப்பாடுகளை ஏன் காவல் துறை விதிக்கின்றது? சென்னையை விட அதிக அளவில் முஸ்லீம் சமுதாயத்தினர் வாழும் மும்பை, ஐதராபாத் போன்ற பெரிய நகரங்களிலும், மற்ற மாநிலங்களிலும், (அதேபோல் மிகவும் விமரிசையாக துர்க்கா பூஜை கொண்டாடப்படும் கல்கத்தா நகரிலும்) இந்த மாதிரிப் பிரச்சினைகள் இல்லாமல், கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இந்துக்கள் முழுச் சுதந்திரத்துடன் விநாயகர் சதுர்த்தி பண்டிகையைக் கொண்டாட அந்தந்த மாநில அரசுகளும், காவல் துறையும் அனுமதித்து ஏற்பாடுகள் செய்யும்போது தமிழகத்தில் மட்டும் ஏன் அரசும் காவல் துறையும் பாரபட்சத்துடன் நடந்து கொள்கின்றன?


 
திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் இந்துத் துவேஷத்துடன் இந்துக் கடவுளர்களையும், இந்துக் கலாசாரத்தையும் மட்டுமே மட்டம் தட்டி தரக் குறைவாகப் பேசுவதாலும், இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூட சொல்லாமல் இருப்பதாலும், சிறுபான்மையின மக்களின் ஆதரவாகச் செயல் படுவதாலும், அவர்களின் பண்டிகைகளில் மட்டும் கலந்து கொள்வதாலும்தான் முஸ்லீம்கள் இந்த மாதிரி நியாயமற்ற கோரிக்கைகள் வைத்து இந்துக்களுக்கு எதிராக நடந்து கொள்கிறார்களா?
 


நன்மை பயக்கும் முடிவு மக்களிடத்தில்
 
அபூர்வமாக எங்கோ ஒரு இடத்தில் விநாயகர் ஊர்வலத்தை பள்ளிவாசல் முன்னே முஸ்லீம் சமுதாயத்தின் தலைவர்கள் வரவேற்று வாழ்த்தினார்கள் என்றும் செய்தி வருவதுண்டு. இது மிகவும் நல்ல விஷயம் என்றாலும், இவ்வாறு செய்ய வேண்டும் என்றும் இந்து சமுதாயத்தினர் எதிர்பார்ப்பதில்லை. இடையூறு இல்லாமல் இருந்தாலே போதுமானது என்றுதான் அவர்கள் கருதுகின்றார்கள்.


 
"ரோமாபுரியில் ரோமர்களைப் போல் நடந்து கொள்" என்று ஒரு பழமொழி உண்டு. அதைப்போல் ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களைப் போல் நடந்து கொள் என்றெல்லாம் நாம் சொல்லவில்லை. பெரும்பான்மையாக ஹிந்துக்கள் வாழும் இந்தப் புண்ணிய பூமியில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் கடைப்பிடித்து வரும் ஆன்மிகப் பாரம்பரியத்திற்கும், கலாசாரப் பழக்க வழக்கங்களுக்கும் மதிப்பளித்து அவற்றிற்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றுதான் சொல்கின்றோம்.

let-us-pray-for-peace

மதச்சார்பின்மையும், மத நல்லிணக்கமும், அரசியல் வாதிகள் இடத்திலோ, அரசாங்கத்தின் கைகளிலோ, காவல் துறையிடமோ இல்லை. பொது மக்களிடத்தில்தான் உண்டு. ஒவ்வொரு சமுதாயத்தினரும், மற்ற சமுதாயத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவற்றிற்கு மதிப்பளித்து நடந்து கொண்டாலே அன்பு மலரும்; அமைதி நிலவும். விக்னங்கள் தீர்ந்து, அன்பு மலர்ந்து, அமைதி நிலவ, பிள்ளையார் பெருமான் அருள் வேண்டிப் பிரார்த்திப்போம்.


தொடர்புடைய பதிவுகள்




Related post form this blog:-

Antiquity of Vinayaka worship.

Vinayaka in Tamil nadu!




No comments: