Thursday, January 10, 2013

மழை ஜோதிடம் (பகுதி 1) - கர்போட்டம்

In English


 து ஜோசியத்தின் மூலம் மழை கணிக்கும் தொடர். ஆங்கிலத்தில் நான் எழுதிய இந்தக் கட்டுரையைத் தமிழ் நாடு டெலிகாம் சர்கிள், முன்னாள் சீஃப் ஜெனெரல் மானேஜர் திரு டி.ஜி. ஸாரநாதன் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.

ந்தக் கட்டுரையில் வரும் குறிப்புகளைக் குறைந்த பட்சம் ஐந்து வருடங்களுக்காவது தொடர்ச்சியாகக் கவனித்து வந்தால் நம்பகமான காரணிகளை உருவாக்கிக் கொள்ளலாம். இதை முனைப்போடு யாராவது செய்தால், என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

அறிமுகம்       

வேதத்தில்,மழை அளவு கணிப்பு பூர்வ சித்தி -முன் அறிவு என்று சொல்லப்படுகிறது. (சித்தம் என்பதே இங்கு சித்தி என்று வந்துள்ளது.) அஸ்வமேத யாகத்தில்,சம்பிரதாயமான வினா-விடை பகுதியில், ஒரு கேள்வி:

"எது பூர்வ சித்தி ?"
விடை::" மழையே பூர்வ சித்தி ".

ஏனெனில், ஒரு இடத்தில் மழை உண்டாவதற்கான காரணங்கள் முன்னதாகவே ஏற்படுகின்றன, அதனால் அறியப்படுகின்றன (சித்தம்). அவைகளைச் சரியாகக்வனித்தால், மழை பெய்யுமா இல்லையா என்று சொல்ல முடியும். இதை வராஹமிஹிரரும் வலியுறுத்திச் சொல்கிறார்.

"ஒரு வானியல் நிபுணர் இரவும் பகலும் பாடுபட்டு மழை மேகங்களுக்கான அறிகுறியைக் கண்டறிந்தால், அவர் வாக்கு, ரிஷிகளின் வாக்குப் போல், பொய்யாகாது"

"மற்ற விஷயங்களில் அறிவில்லாது போனாலும், மழை கணிக்கும்  விஞ்ஞானத்தில் ஒருவன் தேர்ச்சி பெற்றால், அவன் பெரிய ஜோதிட விஞ்ஞானியாக கலியுகத்தில் கருதப் படுவான்" (ப்ருஹத் ஸம்ஹிதை -அத.21,ஸ்லோகம் 3 &4)
கர்கர், பராசர்ர், காஷ்யபர், வத்ஸர்  என்று பல முனிவர்கள் மழை கணிப்பு நுட்பத்தைக் கற்ற ஆசிரியர்கள். இவர்கள் அளித்த மழை ஜோதிடக் கருத்துக்களை ப்ருஹத் ஸம்ஹிதை (அத் .21 முதல் 28 வரை), மற்றும் ப்ரச்ன மார்க்கம் (அத்.25), ஆகிய புத்தகங்களில் காணலாம்.

அடிப்படைத் தேவைகள்
·         சாந்திரமான மாதங்களது பெயரையும், அந்த மாதங்கள் வரும் காலங்களையும் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அமாவாசை, பௌர்ணமி தினங்கள் குறிக்கப்பட்ட காலண்டர் இருந்தால் போதும். அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையன்று சந்திர மாதம் ஆரம்பிக்கும். அவற்றின் பெயர், திதிகள் குறிக்கப்பட்ட காலண்டர்கள் இருந்தால் போதும்.

·         வேத ஜோதிடத்தில் வரும் திதி மற்றும் 27  நட்சத்திரங்களைப் பற்றியதான அறிவு. அவற்றின் பெயர் தெரிந்தால் போதும்.

·         அந்த நட்சத்திரங்கள், அவற்றில் சந்திரன் மற்றும் சூரியன் செல்லும் நாள் அல்லது டிகிரியைக் குறிக்கும் ஏதாவது  ஒரு ஜோதிட கணினி மென்பொருள்.

·         முறையான இடைவெளிகளில் நாள் முழுதும் வான் வெளியைக் கூர்ந்து கவனித்தல்.

·         இந்த கவனிப்பு சந்திர மாதம் கார்த்திகை தொடங்கி ச்ரவண மாதம் (ஆவணி) வரை இருத்தல் வேண்டும்.

எப்பொழுதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்?

மூன்று விதமான நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ப்ருஹத் ஸம்ஹிதையில் இரண்டு நாட்களும்,, ப்ரச்ன மார்க்கத்தில் ஒரு நாளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வித்தியாசங்களுக்கு எந்த விளக்கமும் இல்லை. என்னுடைய விளக்கங்களை அடைவுக் குறிகளில் கொடுத்துள்ளேன்.

 1. சாந்திர மாதம் கார்த்திகையில் சுக்ல பக்ஷம் (வளர் பிறை) முதல் நாள், அதாவது பிரதமை. [அக்டோபர்-நவம்பர்]- இதை சித்தசேனர் கூறியுள்ளார் என்பார்கள். (கேரளாவிலோ அல்லது லக்ஷத்தீவுகளிலோ தென் மேற்கு பருவ மழை ஆரம்பிக்கும் நாளைத் தெரிவிக்கிறது என்பது எனது கருத்து. நடைமுறையில் சரி பார்க்கவும் )
 2. மார்கசீர்ஷம் மாதம் (மார்கழி) வளர்பிறையில் சந்திரன் பூராட நக்ஷத்திரத்தை கடக்கும் நாள் [நவம்பர் - டிசம்பர்]- இதை கர்க ரிஷி  கூறியுள்ளார். (மத்திய அல்லது வட இந்தியாவில் பெய்யும் முதல்  மழையாக இருக்க வேண்டும். நடை முறையில் கவனித்துச் சரி பார்க்கவும்.  )
 3. சூரியன் பூராட நக்ஷத்திரத்தில் நுழையும் நாள். இது தனுர் ராசியில் 13 டிகிரி 20 நிமிடங்களில்  சூரியன் நுழையும் நாள். இந்நாளில் ஆரம்பித்துத் தொடர்ந்து 14 நாட்கள் வரை, மழை 'கர்பம் தரிக்கும்  கால கட்டம்' அல்லது 'கர்ப்போட்டம்' என்று தமிழ் நாட்டில் வழங்குவார்கள். இந்தக் கட்டுரை வெளியாகும் இன்றைய தினம் கர்போட்டம் முடிவடைகிறது.

கர்ப்போட்டத்தின் முக்கியத்துவம்

இந்த 14 நாட்களும் சூரியன் பூராட நட்சத்திர மண்டலத்தை   முழுக்கக் கடக்கும் நேரம். ஒரு நக்ஷத்திரத்தின் அளவு 13 டிகிரி 20 நிமிடங்களாகும். சூரியன் ஒரு நாளைக்கு உத்தேசமாக ஒரு டிகிரி கடக்கும். கர்போட்டம் சமயத்தில் சூரியன் பூராட நக்ஷத்திர மண்டலத்திலேயே சஞ்சரிக்கும். இந்த நேரத்தில் வானிலை கணிப்பின் பூர்வாங்கமாக, கரு முகில்கள் ஆகாயத்தில் தென் பட்டு, சூரியனை மறைக்கின்றனவா என்று கவனிக்க  வேண்டும். மேலும் என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.
இந்தக் கட்டுரையில் கூறியுள்ளவை எந்த இடத்திலிருந்து கண்காணிக்கிறோமோ அந்த இடத்திற்கு மட்டுமே பொருந்தும்.

முன் காலங்களில், ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு ஜோசியர் அல்லது கணின் இந்த வேலையைச் செய்து வந்தார். இன்று வானிலை ஆராய்ச்சி பரந்த பிரதேசங்களுக்கு கணிக்கிறது. ஆயினும், பண்டைய இந்திய முறை ஒவ்வொரு இடத்திற்கும்  மழை பெய்யுமா இலையா என்று தெரிவித்தது. இதற்கு கண்காணிப்பவர் தொடர்ச்சியாக அந்த இடத்தில் இருந்து கொண்டு கவனித்து வரவேண்டும். குறைந்த பட்சம் மார்க்கசீருஷ மாதத்திலிருந்து பால்குனி வரை நிச்சயமாக கவனிக்க வேண்டும், மற்றைய மாதங்களில்  குறிப்பிட்ட நாட்களில் மட்டும் கவனிக்க வேண்டும். இங்கு மார்கசீர்ஷம் தொடங்கி பால்குனி வரை என்று சொன்னோம். தமிழ் நாட்டு மக்கள் சூரியமாதங்களுடன் பரிச்சயமானவர்களாக இருப்பதால், மார்கழி முதல் பங்குனி வரை கவனிக்கவும். மார்கழி மாதம் ஆரம்பிப்பதற்கு முன் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையிலிருந்து கவனித்து வரவும்.

இனி கர்ப்போட்டம் என்னும் 14 நாட்களில் (சூரியன் பூராட நட்சத்திரத்தில் செல்லும் நாட்கள். ஜோதிட மென் பொருள் உதவியால் இதை அறியவும்.), ஒவ்வொரு நாளாகக் கவனிக்கவும்.

கர்ப்போட்டம் என்னும் இந்தக் காலக் கட்டத்தில், சூரியனைக் கார்மேகங்கள் சூழ்ந்து மறைத்து இருந்தால்,
·         து கர்போட்டத்தின் முதல் நாளாக இருந்தால், 6 மாதங்களுக்குப் பிறகு, சூரியன் திருவாதிரை நக்ஷத்திரத்தைக் கடக்கும்போது (மிதுன ராசியில்), 14 நாட்களும் அங்குமிங்குமாக, விட்டு விட்டு மழை பெய்யும்.
 • அதே மாதிரி  இரண்டாவது நாள், இப்படிப்பட்ட மேக மூட்டம் சூரியனை மறைத்து இருந்தால், பின்னாளில் சூரியன்  புனர்வசு நக்ஷத்திரத்தைக் கடக்கும் 14 நாட்களின்போதும் (மிதுன,கடக ராசிகளில்) அங்குமிங்குமாக விட்டு விட்டு மழை பெய்யும் 
 • மூன்றாவது நாள் தென்பட்டால், சூரியன் புஷ்ய நக்ஷத்திரத்தை கடக்கும்போது (கடக ராசியில்  ) அதே மாதிரி மழை பெய்யும் 
இதே மாதிரி மூல நக்ஷத்திரம் வரை கணிக்க முடியும்.

மார்கழி மாத கர்போட்டத்தின் 14 நாட்களும், சித்திரை பிறந்து அடுத்த வருடம் ஆரம்பித்தபின், திருவாதிரை தொடங்கி, மூல நட்சத்திரம் வரை 14 நட்சத்திரங்களில் சூரியன் செல்லும் காலத்துடன் தொடர்பு கொண்டவை.

மார்கழி மாத கர்போட்டத்தின் போது சூரியன் செல்லும் ஒவ்வொரு தினத்துடன், ஆனி மாதத்தில் ஆரம்பித்து சூரியன் திருவாதிரை துவங்கி செல்லும் 14 நட்சத்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, கர்ப்போட்டத்தின் 1ம் நாள், திருவாதிரையில் சூரியனின் 14 நாட்களின் சஞ்சரிப்பின்போது பிரதிபலிக்கும்.

1ம் நாள் - திருவாதிரை
2ம் நாள்- புனர்பூசம்
3ம் நாள் - பூசம்
4ம் நாள் - ஆயில்யம்
5ம் நாள் - மகம்
6ம் நாள் - பூரம்
7ம் நாள் - உத்திரம்
8ம் நாள் -ஹஸ்தம்
9ம் நாள் - சித்திரை
10ம் நாள் - சுவாதி
11ம் நாள் - விசாகம்
12ம் நாள் - அனுஷம்
13ம் நாள் - கேட்டை
14ம் நாள் - மூலம்

கர்போட்டத்தின் ஏதேனும் ஒருநாளில் ஆகாயம் நாள்  முழுதும் மேக மூட்டமாக இருந்தால், மேலே அந்த நாளுக்குக் கொடுக்கப்பட்ட நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது மழையை எதிர் பார்க்கலாம்.

இந்த வருடம் 28-12-2012 அன்று கர்ப்போட்டம் ஆரம்பமானது. அன்று முழுதும், நான் தங்கியிருக்கும் சென்னைப் பகுதியில் மேக மூட்டம் இருந்தது. ஆனால் நடு   நிசியில் மழை பெய்தது. இம்மாதிரி மழை 195 நாட்களுக்குப் பின் வரும் மழையைக் கெடுக்கும். ஆகையால், முதல் கட்ட கணிப்பு, நான் இருக்கும் பகுதியில், திருவாதிரை நக்ஷத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது முதல் பாதி காலம் மழை இருக்கும். அதாவது சூரியன் திருவாதிரையில் நுழைந்தவுடன் முதல் 7 நாட்களுக்கு பரவலான மழை இருக்கும். ஜூன் மாதம் (2013) 22 ஆம் தேதி விடிகாலை சூரியன் திருவாதிரை நக்ஷத்திரத்தில் நுழைகிறான். அன்று துவங்கி 7 நாட்கள் சென்னையில் நாம் இருக்கும் பகுதியில் அவ்வபொழுது மழை பெய்யும்.

கர்ப்போட்டத்தின் போது மேக மூட்டம் நல்லது; ஆனால் மழை பெய்வது நல்லதல்ல. சிறு சாரல் பரவாயில்லை, ஆனால் மழை கூடாது. கர்ப்போட்ட முதல் தினத்தின் இரவில் மழை பெய்ததால், ஜூன் மாதம், அடுத்த 7 தினங்களுக்கு (ஜூன் 30 ஆம் தேதி துவங்கி) 7 நாட்களுக்கு மழை குறைந்து விடும்.

கர்ப்போட்டத்தின் மறு நாளும் சென்னையில் நான் வசிக்கும் பகுதியில் மேகமூட்டம் தொடர்ந்தது. ஆகையால், சூரியன் புனர்பூசம் நக்ஷத்திரத்தில் நுழைந்தவுடன் (ஜூலை 6ம் தேதிக்குப் பிறகு) நல்ல மழையை எதிர்ப் பார்க்கலாம்.

இனி கர்ப்போட்டத்தில் கவனிக்க வேண்டிய மற்ற காரணிகளைப் பார்க்கலாம்.

 1. காற்று.
 2. மழை 
 3. மின்னல் 
 4. இடி 
 5. மேகமூட்டம் 

கர்ப்போட்ட்த்தின் 14 நாட்களும், மேற்கண்ட 5  காரணிகளையும் கண்காணிக்க வேண்டும். அதன் பின்னர், அடுத்த நான்கு மாதங்களும், பால்குனி மாதம் முடியும் வரையில், தினந்தோறும் இவற்றைக் கண்காணித்து வரவேண்டும். கர்ப்போட்ட தினம் ஒன்றுக்கு, அதனுடன் தொடர்பாக நாம் மேலே சொன்ன நட்சத்திரத்தில் சூரியன் செல்லும் 14 நாட்களிலும் மழை இருக்கும். ஆனால் கர்போட்டம், முடிந்தவுடன் வரும் ஒவ்வொரு நாளுக்கும், அந்த நாளின் 195 ஆவது நாளில் மட்டுமே மழையை எதிர்பார்க்க முடியும். ஏதாவது ஒருநாளில் இந்த 5 காரணிகளும் நன்கு தென்பட்டால், 195 நாட்களுக்குப் பிறகு, நல்ல மழையை எதிர்ப் பார்க்கலாம்.

இனி 195 ஆவது நாளைக் கணிக்கும் முறையைக் காண்போம். மார்கழி துவங்கி ஒவ்வொரு நாளும் இருக்கும் பட்சம், திதியை குறித்துக் கொள்ளவேண்டும். பட்சம் என்றால் வளர் பிறைக் காலம், தேய்பிறைக் காலம் ஆகும். நாம் காரணிகளைக் கவனித்த நாள் எந்த பட்சம், அன்றைய திதி என்ன என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும். அதற்கு எதிரிடையான மாதம், பட்சம், திதியில் அதாவது 6 மாதங்கள் கழித்து மழை பெய்யும்.

உ-ம்:  மார்கழி மாதம் தேய்பிறை, த்விதீயை திதியன்று மழைக்கான மேலே குறிப்பிட்ட காரணிகளைக் கண்டால், அன்றைய தினத்திலிருந்து ஆறு மாதங்கள் கழித்து, அதாவது ஆடி மாதம் வளர்பிறை த்விதீயை அன்று மழை பெய்யும். மாதக் கணக்கு என்றால், ஆறு மாதங்கள் கழித்து 7 ஆவது மாதம்.

பட்சக் கணக்கில், வளர்பிறையில் காரணிகளைக் கண்டால், 6 மாதம் கழித்து வரும் தேய்பிறையில் மழை என்று சொல்ல வேண்டும். எந்த திதியில் காரணியைக் கண்டோமோ அதே திதியில் அப்பொழுது மழை பெய்யும்.  காரணிகள் தென்பட்ட நேரம் காலை வேளை என்றால், ஆறு மாதம் கழித்து நாம் கணித்த திதியில் மாலை வேலையில் மழை பெய்யும். இரவில் காரணி தென்பட்டால், பகலில் மழை பெய்யும். இவ்வாறு எதிரிடையாகச் சொல்ல வேண்டும்.

மேகங்களும்,காற்றோட்டமும் ஒரு குறிப்பிட்ட திசையிலிருந்தால், கணித்த நாளில், மழை எதிர் திசையில் இருக்கும். நாம் இவற்றையும் , அதாவது காற்று மேகங்கள் செல்லும் திசையையும் குறித்துக் கொள்ளவேண்டும்.

நாம் கண்காணிக்க வேண்டிய அம்சங்கள்:

கர்ப்போட்ட காலத்திலும், மார்கழி துவங்கி, பங்குனி வரையிலும் தினமும் கவனிக்கப்பட வேண்டியவை. 195 நாட்கள் கழித்து அவை காட்டும் பலன்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. காற்றோட்டம் 

மிதமான நல்ல காற்று = நல்ல மழை
வடக்கு, வடகிழக்கிலிருந்து குளிர் மிதமான காற்று= நல்ல மழை
அதிகமான காற்று= மழை மேகங்கள் கூடி சிதறும்.
புழுதிப் புயல் = மழை இருக்காது.

2. மழை

மார்கழி மாதத்தில் மழை இருக்காது. ஆனால் மார்கழியில் அதிகமாக மழை பெய்தால், அதற்குப் பொருத்தமான நாளில் அது மழையைப் பாதிக்கும். இலேசான தூறல் அல்லது சாரல் இருந்தால், ஆறரை மாதங்களுக்குப் பிறகு  (195 ஆம் நாள்) நல்ல மழை உண்டு.

3. மின்னல்

மின்னல் = நல்ல மழை.
வானவில் காலையிலோ அல்லது மாலையிலோ = நல்ல மழை.

4. இடி

மெல்லிய உருட்டொலி = நல்ல மழை
பலத்த இடியோசை = மழை மேகங்கள் உண்டாகிச், சிதறி விடும்.

5. மேகங்கள் 

ஆகாயத்தில் மிகப்பெரிய, பிரகாசமான, அடர்த்தியான மேகங்கள் = நல்ல மழை.
ஊசி, கத்தி வடிவில் மேகங்கள்= நல்ல மழை
இரத்தச் சிவப்பில் மேகங்கள் = நல்ல மழை.

மழை கணிப்பு.

மார்கழியிலிருந்து  பங்குனி வரை, எந்த ஒரு நாளாவது இந்த 5 காரணிகளும் தென்பட்டால், அதற்கான விளைவு நாளில் (அதாவது 195 ஆவது நாள்) மழையின் அளவு ஒரு துரோணமாகும். (ஒரு துரோணம் என்பது  200 பலங்கள் . இதற்கான இன்றைய அளவு தெரியவில்லை. அவ்வாறு மழை பெய்தால், தன் இன்றைய அளவீட்டைக் கொண்டு துரோணம் என்னும் இந்த அளவை அறியலாம்)

இந்த காரணிகளில் எது ஒன்று இல்லையென்றாலும், அளவின் விளைவை கால் பாகம் குறைத்துக் கொள்ளவேண்டும். அதாவது 4 காரணிகள் மட்டும் இருந்தால், துரோணம் என்னும் மழை அளவில் கால் பங்கு குறையும், 3 காரணிகள் மட்டும் இருந்தால் இந்த அளவில் கால் பங்கு குறையும் என்று கணக்கிட வேண்டும். குறைந்தது 5 வருடங்களாவது இவற்றைக் கவனித்து வந்தால், மழை அளவைக் கணிக்க முடியும்.
இனி இன்னும் கவனிக்க வேண்டிய அமைப்புகளைப் பார்க்கலாம்.

மும்முனைக் கண்காணிப்பு

1. தரை சார்ந்தவை
2. வளி மண்டலம் சார்ந்தவை
3. கிரகங்கள் சார்ந்தவை

1. தரை சார்ந்தவற்றைக் கண்காணிப்பது

1. பறவைகளின் கீச்சு கீச்சென்ற சப்தம்
2.மிருகங்களின் நிம்மதியான நடை; இனிய குரலோசை.
3.சிறுவர்களின் குதூகலமான விளையாட்டு
4. மரங்களில் துளிர்
5.நோயில்லாமல் மரங்கள் வளர்தல்.

2.வளிமண்டலம் சார்ந்தவற்றைக் கண்காணிப்பது.

1,மேகங்கள் முத்து அல்லது வெள்ளி நிறமாக இருத்தல்.
2. மேகங்களின் வடிவம், நீர்வாழ் உயிரினங்களை ஒத்தும், அல்லது மிகப் பெரியதாகவும், அடர்த்தியாகவும் இருத்தல்.
3. மேகங்கள் சூரிய ஒளி பட்டு, பிரகாசமாக இருத்தல்.
4. மிதமான காற்று (இந்த 3 ஆவது, 4 ஆவது அமைப்புகள் ஒன்றாகத் தென்பட்டால், 195வது நாள் பேய் மழை பெய்யும்)
5. சூரியன், சந்திரனைச் சுற்றி, பளபளப்புடன் கூடிய பிரகாசமான ஒளிவட்டம் தென்படுதல். இது அடர்த்தியாக இருந்தால் 195 ஆவது நாளன்று நல்ல மழையைக் கொடுக்கும்.
6. ஆகாயத்தில் பருத்த அல்லது பஞ்சு போன்ற மேகம். அல்லது ஊசி அல்லது கத்தி வடிவில் மேகங்கள். (இந்த மேகம் சிர்ரஸ் என்று அழைக்கப் படுவது)
7. சிவப்பு அல்லது  நீல நிறம் கூடிய மேகங்கள்.
8. ரம்மியமான கருக்கல் அல்லது அந்தி வேளை வெளிச்சம்
9. மெல்லிய உருட்டலோசை இடி.
10. கீழ் வானத்தில் வானவில்
11. மார்கழி, தை மாதங்களில் அந்தி விடிகாலை நேரத்தில் தொடுவானம் சிவந்திருத்தல்.
12. ஒளிவட்டத்துடன்  மேகங்கள்

மாதவாரியான கண்காணிப்பு

மார்கழி மாதத்தில்,
·         காலையிலும், மாலையிலும் சிவந்த சூரியன்
·         சூரியோதயத்திலும், ஸ்தமனத்திலும் செவ்வானம்
·         ஒளிவட்டத்துடன் மேகங்கள்
·         கடுங்குளிர்.

தை மாதத்தில்,
·         காலையிலும், மாலையிலும் சிவந்த சூரியன்,
·         ஒளிவட்டத்துடன் மேகங்கள்.
·         அதிகமான பனிப்பொழிவு.
மாசி மாதத்தில்
·         பலத்த காற்று,
·         சூயோதயத்திலும், அச்தமனத்திலும் சூரியனும், சந்திரனும், மேகங்களினாலும், னியாலும் மூடி, மங்கலாகத் தெரிதல்
·         மூடுபனி,
·         அதிகக் குளிர்.
ங்குனி மாதத்தில்,
·         தாறுமாறான,உக்கிரமான காற்று,
·         பழுப்பு மஞ்சள் சூரியன்,
·         சூரியன்  சந்திரனைச் சுற்றி ஒழுங்கில்லாத, உடைந்த ஒளிவட்டங்கள்.
·         ஆகாயத்தில் பளபளப்பான மேகங்கள் சஞ்சரித்தல்.
மேற்க்கண்டவை நல்ல மழைக்கு அறிகுறிகள்.

சித்திரை, வைகாசி மாதங்களில் நல்ல காற்று, மேகங்கள், ஒளிவட்டங்கள் இருப்பின், 195வது நாளில் மழைக்கான அறிகுறிகள் உண்டு.
மார்கழியிலிருந்து  பங்குனி வரைக்குமான நான்கு மாதங்களில் கீழ்க்காணும் அம்சங்கள் தென்பட்டால், மழை உருவாகுவதைக் கெடுக்கும்:

 1. விண்கற்கள் பொழிவு (இந்த மார்கழி மாதம் (ஜனவரி 3 ஆம் தேதி) கர்போட்டத்தின் 6 – 7 ஆம் நாளன்று விண்கற்கள் பொழிந்தன என்று நாசா போன்ற விண்வெளி மையங்கள் தெரிவித்தன. இது ஆவணி மாதம் முற்பாதியில் மழையைக் கெடுக்கும்.)
 2. இடிமின்னல் 
 3. புழுதிப்புயல் 
 4. மேகக் கூட்டங்கள் நகரம் போன்ற வடிவில் தென்படுதல் 
 5. வளி மண்டலத்தில் மேகங்கள் , ஆகாய நிறம் , மற்றும் சூர்யோதயம், ஸ்தமனங்களில், இயற்க்கைக்கு மாறாக நிகழ்வுகள் தென்பட்டால் 
 6. மழை 
 7. வால்  நட்சத்திரம்  
 8. கிரகணங்கள் 
 9. சூரியனில் கரும் புள்ளிகள் 

3.   கிரக மண்டலம் சார்ந்தவற்றைக் கண்காணிப்பது  
மழை உருவாகுவதற்கான நல்ல அறிகுறிகள்,

·         இரவில் கிரகங்கள் தெளிவாகவும், பளிச்சென்றும் தென்படுதல்.
·         கிரகங்கள் வடக்கு சாய்மானமாக (Northern declination) நகர்தல் 
·         சந்திரன், நக்ஷத்திரங்கள் வெண்மையாக தோன்றுதல் 

மழை உருவாகுவதைக் கெடுக்கும் அம்சங்கள்,
·         கிரகணங்கள் 
·         கிரகங்கள் ஒன்றை ஒன்று கடக்கும் போது (மழை நிகழ வேண்டிய காலத்தில் பல நாட்களுக்கு மழையை கெடுக்கும்)

நான்கு மாதங்களில் சந்திரனின் நிலை.

மழை உருவாகுவதற்கு சாதகமான மேற்கூறிய மூன்று அம்சங்களும் இருக்கும் ஒரு நாளில், சந்திரன் பூராடம்,உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி மற்றும் ரோகிணி நக்ஷத்திரங்களைக் கடந்தால்,195 ஆம் நாளன்று மழை அபரிமிதமாக இருக்கும்.

அதேபோல், அந்த மாதிரியான ஒரு நாளில், சந்திரன் திருவாதிரை, ஆயில்யம், மகம், சுவாதி மற்றும் சதய நக்ஷத்திரங்களைக் கடந்தால், 195 ஆம் நாளைத் தொடர்ந்து மழை பலநாள் தொடரும்.
மாறாக, இந்த மூன்று அம்சங்களும் கெட்டால், மழை வறட்சி இருக்கும்.

மார்கழி மாத்தில்,இந்த மூன்று அம்சங்கள் இருந்து, கெடுதல் அம்சங்கள் இல்லாமல் இருந்தால், 195 நாட்களுக்குப் பிறகு, எட்டு நாட்கள் மழை தொடரும்.

அதே போல் தை மாதத்தில் நடந்தால் 6 நாட்கள் தொடரும்.

மாசி மாதத்தில் நடந்தால் , 16 நாட்கள் தொடரும்;

ங்குனி மாதத்தில் நடந்தால்  24 நாட்கள் தொடரும்;

சித்திரை மாதத்தில் நடந்தால் , 20 நாட்கள் தொடரும்;

வைகாசி மாதத்தில் நடந்தால் , 3 நாட்கள் தொடரும்.  

(தொடரும்)

ஆங்கிலத்தில் இக்கட்டுரை:-
தொடர்புள்ள பிற கட்டுரைகள்:-

No comments: