Wednesday, September 25, 2013

Islamic University in Tirupathi - a status report.(in Tamil)

Previous article:-

After Christians, Muslims are targeting Tirupathi - an Arabic College in Tirupathi!



http://www.vsrc.in/index.php/articles/2013-04-20-19-52-39/item/74-2013-09-24-11-33-01.html


திருமலை அடியில் இஸ்லாமிய பல்கலை





முன்னுரை


உலகின் மிகவும் சுறுசுறுப்பான புனிதத்தலம்; 100 சதவிகிதம் ஹிந்து அடையாளமும் ஹிந்துத் தன்மையும் கொண்டது; ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகியவற்றின் பாரம்பரியத்திற்குச் சிறந்த பெயர் பெற்ற தலம்; அதுவே திருப்பதி!

 

பழம்பெருமை வாய்ந்த ஆலயங்களும் ஸ்வர்ணமுகி நதியும் இந்தப் புனிதத் தலத்தின் பெருமையைப் பறைசாற்றுகின்றன. திருப்பதி நகர்வாழும் மக்கள் தங்களுடைய வாழ்வுக்குத் திருமலை வேங்கடேசப் பெருமாளே காரணம் என்று நம்பி அவருக்கு நன்றி தெரிவிக்கின்றனர். அவரை நம்பி அவர் பெயரிலேயே அனைத்துக் காரியங்களையும் செய்கின்றனர்.

 

Massive-six-storeyed-structure islamicதற்போது திருப்பதி தன்னுடைய புனிதத் தன்மையையும் அமைதியையும் இழந்துவிடுமோ என்கிற அச்சம் அம்மக்களிடையே இருக்கிறது. ஒரு பன்னாட்டு இஸ்லாமிய தொழில் நிறுவனம் திருமலை அடிவாரத்தில் இஸ்லாமியப் பல்கலைக் கழகம் ஒன்றை நிறுவ முயற்சிப்பதே அதற்குக் காரணம். திருப்பதி நகர மையத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் தொண்டவடா பஞ்சாயத்தில் உள்ள சந்திரகிரி என்னும் கிராமத்தில், ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள ஹீரா இஸ்லாமிய தொழிற் குழுமம்பிரம்மாண்டமான ஆறு மாடிக் கட்டிடம் ஒன்றைக் கட்டிவருகின்றது.

 

heera international

 ஹீரா சர்வதேச இஸ்லாமியக் கல்லூரி என்கிற பெயரில் அந்தக் கட்டிடம் கட்டப்படுவது திருப்பதிவாழ் மக்கள் மனதில் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது. கூடிய விரைவில் அதற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்து நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. எந்தவிதமான முன்யோசனையும் இன்றி அந்தக் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதியளித்த அரசு அதிகாரிகளே இந்நிலைக்குக் காரணம்.


 சந்திரகிரியின் ஆன்மீக முக்கியத்துவம்


Dilapidated Temple Towerசந்திரகிரியின் ஆன்மீக முக்கியத்துவத்தைப் பற்றி, திருப்பதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் கட்டுரையாளருமான எஸ்.வி.பத்ரி விளக்கினார். "லட்டு ஐயங்கார்" என்று அனைவராலும் பாசத்துடனும் அன்புடனும் அழைக்கப்பட்ட, உலகப் புகழ் பெற்ற திருப்பதி லட்டை உருவாக்கியவரான காலஞ்சென்ற உயர்திரு கல்யாணம் ஐயங்காரின் பெயரன் தான் எஸ்.வி.பத்ரி அவர்கள்.

 

"மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீனிவாசப் பெருமாள் லக்ஷ்மியின் அவதாரமான பத்மாவதித் தாயாரை நாராயண வனம் என்கிற இடத்தில் திருமணம் முடித்து, ஸ்ரீனிவாச மங்காபுரம் (தொண்டவடா அருகில்) என்னும் ஊருக்கு வருகிறார். அங்கே பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் இருக்கின்றது. மேலும் அருகே ஸ்வர்ணமுகி நதியின் கரையில், அகத்திய முனிவர் எழுப்பிய சிவன் கோவில் ஒன்று இருந்தது, அகத்திய முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டதால் இறைவனுக்கு அகஸ்தீஸ்வரன் என்று பெயர். ஸ்ரீனிவாச மங்காபுரத்திற்கு வந்த ஸ்ரீனிவாசப் பெருமாளும், பத்மாவதித் தாயாரும் அகஸ்தீஸ்வரன் ஆலயத்தில் அகத்திய முனிவருக்கு ஆறுமாத காலம் பணிவிடைகள் செய்து பின்னர் திருமலைக்குச் சென்றதாக இத்தல புராணம் கூறுகிறது. மேலும் ஸ்வர்ணமுகி நதியின் கரையோரமாக ஐந்து சிவாலயங்களை அகத்திய முனிவர் ஸ்தாபித்ததாகவும் இந்தத் தலபுராணம் கூறுகின்றது. இப்பேர்பட்ட ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில், ஹிந்துக்களின் புனிதத் தலத்தில் இஸ்லாமியக் கல்லூரி வருவது பேரதிர்ச்சி தருவதாய் இருக்கின்றது" என்றார் எஸ்.வி.பத்ரி.

 

ஹீரா இஸ்லாமிய தொழிற் குழுமம்


heera-logo


"ஈமான் வழிகாட்டுதலில், ஷரியா சட்டத்தின்படி, ஹராம் தவிர்த்து, ஹலால் பயன்படுத்தி, உலகின் நான்கு மூலைகளுக்கும் அல்லாஹ்வின் அறிவையும் புகழையும் பரப்புவதே எங்கள் நோக்கம்"என்கிறது ஹீரா இஸ்லாமிய தொழிற்குழுமத்தின் பணி அறிக்கை. மிகவும் குறுகிய காலத்தில் நம்பமுடியாத அளவிற்கு அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது என்கிற வகையில் அந்தக் குழுமத்தின் சரித்திரமும், நிறுவனரின் விவரமும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

 

திருமதி.நோவேரா ஷேக் என்னும் பெண்மணிதான் ஹீரா குழுமத்தின் நிறுவனத் தலைவி ஆவார். அவருடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி ( http://nowherashaik.com/index.php/about-nowhera ) திரு நானா சாஹேப் ஷேக் திருமதி பில்கிஸ் ஷேக் ஆகிய தம்பதியருக்கு மகளாக 1973-ல் பிறந்தவர் நோவேரா ஷேக். இவருடைய பாட்டனார் திரு கோல்கர் மதார்சாஹேப் ஷேக் 1920-ல் எஸ்.என்.எஸ். டிரான்ஸ்போர்ட் ( "SNS Transports" ) என்கிற போக்குவரத்து நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். பின்னர் பழங்கள், காய்கறிகள், துணிகள் ஆகியவற்றை மொத்தக் கொள்முதல் வியாபாரம் செய்து வெற்றியடைந்துள்ளார். தன்னுடைய தந்தையார் மற்றும் பாட்டனாரிடமிருந்து ஆன்மீக கலாச்சாரப் பாரம்பரியத்தையும் வியாபார நுணுக்கங்களையும் மரபுவழியில் பெற்ற நோவேரா ஷேக், 1998-ல் 'மதரஸா நிஸ்வான்' என்கிற பெண்களுக்கான இஸ்லாமிய மதப்பள்ளியை திருப்பதியில் 150 ஏழை முஸ்லிம் சிறுமிகளுக்காகத் தொடங்கியுள்ளார்.

 
இதன் பிறகுதான் பிரமிப்பு ஏற்படுத்தி தலைசுற்ற வைக்கும் தகவலைத் தருகின்றது அவருடைய இணையதளம். அதாவது, நாளடைவில் மதரஸாவில் பயிலும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகமாக அதற்கேற்றவாறு செலவினங்களும் அதிகமாகியதாகவும், செலவினங்களை ஈடு செய்யும் நோக்கத்துடன்"ஹீரா கோல்டு எக்ஸ்போர்ட்ஸ் அண்டு இம்போர்ட்ஸ்" என்கிற பெயரில் தங்கத்தை ஏற்றுமதி-இறக்குமதி செய்யும் நிறுவனத்தை 2008-ல் நோவேரா தொடங்கியதாகவும் தெரிவிக்கின்றது.

 

அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து, பல தளங்களில் புதிய புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குகிறார் நோவேரா! ஐந்தே ஆண்டுகளில் 19 நிறுவனங்கள் கொண்ட மாபெரும் தொழிற் குழுமத்தை உருவாக்குகிறார் நோவேரா ஷேக்! ஹீரா ஜுவெல்லர்ஸ், ஹீரா பியூர் டிராப் (மினரல் வாட்டர் வியாபரம்), ஹீரா டெக்ஸ்டைல்ஸ், ஹீரா கிரானைட்ஸ், ஹீரா ரைஸ் (அரிசி வியாபாரம்), ஹீரா எலெக்டிரானிக்ஸ், ஹீரா ரியல் எஸ்டேட்ஸ், ஹீரா டெவலப்பர்ஸ், ஹீரா ஃபுடெக்ஸ், ஹீரா கோல்டு எக்ஸிம் ல்மிட், ஹீரா டைமண்ட் எக்ஸ்போர்ட் இம்போர்ட் சீனா லிட் (Heera Diamond Exports Imports China Ltd), ஹீரா கோல்டு எக்ஸ்போர்ட்ஸ் கானா லிமிட் (Heera Gold Exports Ghana Ltd), ஹீரா ஜெனரல் டிரேடிங் எக்ஸ்போர்ட் அண்டு இம்போர்ட்ஸ் (ஐக்கிய அரபு எமரேட்ஸ்) லிமிட், ஹீரா ஃபின்காபிடல் இந்தியா லிமிட் (Heera Fincapital India Ltd), ஹீரா ஹஜ் உம்ரா டிராவல் சர்வீஸ்ஸ் பிரைவெட் லிமிட், ஹீரா டூர்ஸ் அண்டு டிராவல்ஸ் லிமிட், ஹீரா பில்டிங் மெடீரியல்ஸ், மற்றும் பல.

 

ஆயினும், அவருடைய அதிகாரப் பூர்வ இணையதளத்தில் அவருடைய கல்வித்தகுதிகள் பற்றியோ, அவருடைய ஆரம்பகால வாழ்க்கை, படித்த பள்ளி, கல்லூரி பற்றிய தகவல்களோ, எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால் "இஸ்லாமிய அறிஞர்" என்கிற தலைப்பின் கீழ், அவர் தன்னுடைய 19-வது வயதில் 6 சிறுமிகள் கொண்ட ஒரு மதரஸா மதப் பள்ளியைத் தொடங்கி புனித குரானும் ஹதீத்துகளும் கற்றுக்கொடுத்ததாகவும், அந்த மதரஸாவில் தற்போது 300 சிறுமிகள் பயில்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மற்றொரு புறத்தில், ஒரு தொழிற்வல்லுனர் என்கிற வகையிலும் அவருடைய பெரும் வளர்ச்சி நம்பமுடியாத அளவிற்கு உள்ளது. அவருடைய பாட்டனார் 1920-ல் தொடங்கிய எஸ்.என்.எஸ் டிரான்ஸ்போர்ட்ஸ் பற்றியோ, பழம்-காய்கறி-துணிகள் மொத்தக் கொள்முதல் வியாபாரம் பற்றியோ எந்தத் தகவலும் ஹீரா இஸ்லாமிய தொழிற்குழுமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்படவில்லை. அந்தக் குழுமத்தின் (http://heeraibg.com/heeraibg/ ) என்ற இணையதளத்தில் இஸ்லாமிய மதரஸா ஆசிரியர் என்ற நிலையிலிருந்து, 2008-ல் தங்கம் ஏற்றுமதி-இறக்குமதி செய்து பின்னர் ஐந்தே வருடங்களில் பல்வேறு தளங்களில் புதிய நிறுவனங்களை ஆரம்பித்து உலகமே வியக்கும்படி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் நோவேரா ஷேக் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட நிறுவனங்களை இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரம், கேரளம், உத்திரப் பிரதேசம், தில்லி, குஜராத், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மட்டுமல்லாமல், சீனா, கனடா, மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் நிறுவியுள்ளார் என்கிறது அந்தக் குழுமத்தின் இணையதளம்.

 

குழுமத்தின் இணையதளம் 2012 டிசம்பர் மாதம் தான் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. ஆனால் குழுமத்தின் மற்ற நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி இணையதளங்களைக் கொண்டிருக்கின்றன. அனைத்து நிறுவனங்களின் இணையதளங்களிலும் குழுமத் தலைவி நோவேரா ஷேக்கின் விவரங்கள் மட்டும் ஒரே மாதிரியாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மற்றபடி, அந்நிறுவனங்களின் மற்ற இயக்குனர்கள் (Board of Directors) பற்றியோ, நிர்வாகிகள் குழுமம் (Management Committee) பற்றியோ, நிதி அறிக்கைககள் (Finanacial Statements), வரவு-செலவு கணக்குகள் (Balance Sheet) போன்ற தகவல்களோ எதுவும் கொடுக்கப்படவில்லை. அந்த இணைய தளங்களைப் பார்வையிடும்போது அந்நிறுவன்ங்களைப் பற்றியும் அக்குழுமத்தைப் பற்றியும் நம் மனதில் பலவிதமான சந்தேகங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.


மேலும் குழுமத்தின் தலைவி திருமதி.நோவேரா ஷேக் ( https://www.facebook.com/nowherashaik ) என்கிற முகநூல் (Facebook) பக்கத்தையும் ஒரு மாதத்திற்கு முன்பு (ஆகஸ்டு மாதம்) தொடங்கியுள்ளார். அதில் தன்னைப்பற்றிய சுயபுராணங்களை மட்டுமே பதிவு செய்து வருகிறார்.


எதிர்ப்புகள்


bhanuprakashசந்திரகிரியில் சத்தமில்லாமல் இஸ்லாமியக் கல்லூரி கட்டப்பட்டுக் கொண்டிருப்பதை முதலில் நுகர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர்.பா.ஜ.கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் பானு பிரகாஷ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து தன்னுடைய எதிர்ப்புகளை தெரிவித்துள்ளார். திருப்பதி போன்ற ஹிந்துக்களின் புனிதத் தலத்தில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் எவ்வாறு நிறுவப்படலாம் என்று மத்திய மாநில அரசுகள் விளக்கம் தரவேண்டும் என்று கோரியுள்ளார். திருமலை வெங்கடேசப் பெருமாள் ஆலயமும், திருப்பதி நகரும் பயங்கரவாதிகளினால் தாக்கப்படக்கூடும் என்று மத்திய மாநில உளவுத்துறைகள் எச்சரிக்கைத் தகவல்கள் தெரிவித்துவரும் நிலையில், 0.09% மட்டுமே முஸ்லிம்கள் உள்ள இச்சிறிய நகரில் ஒரு இஸ்லாமியப் பல்கலைக்கழகம் நிறுவ்வேண்டிய அவசியம் என்ன, என்றும் கேட்டுள்ளார் அவர்.

 
மற்றொரு அமைப்பான "ஆதி ஹிந்து பரிரக்ஷண சமிதி" என்கிற அமைப்பும் தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. அவ்வமைப்பின் தலைவர் திரு கல்லூரி செங்கையா அவர்கள், பயங்கரவாதிகள் மூலம் ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையில் இங்கே இஸ்லாமியப் பல்கலைக்கழகம் நிறுவ அனுமதி அளிக்கக்கூடாது, அந்தப் பல்கலையை நாங்கள் அனுமதிக்க மாட்டோம், அது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பாகும், எப்பாடு பட்டேனும் அதைத் தடுத்தே தீருவோம் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளர்.

 

ஹிந்து மதத்தையும் ஹிந்து ஆலயங்களையும் பாதுகாக்கும் தெய்வீகப் பணியை நோக்கமாகக் கொண்டு அமெரிக்காவிலிருந்து செயல்பட்டு வரும் "குளோபல் ஹிந்து ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன்" (Global Hindu Heritage Foundation) என்கிற அமைப்பும் இவ்விஷயத்தில் தன்னுடைய அக்கறையையும் கவலையையும் தெரிவித்துள்ளது. அவ்வமைப்பின் இயக்குனர்களுள் ஒருவரான டாக்டர் பிரகாஷ் ராவ் வேலகப்புடிஅவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடைய கவலையை எங்களிடம் தெரிவித்தார். அவர், "திருப்பதியில் இருக்கும் எங்களுடைய நண்பர்கள் மூலம் இந்த இஸ்லாமியப் பல்கலைக் கட்டப்படுவதைப் பற்றி நாங்கள் பல விவரங்களைப் பெற்றுள்ளோம். அந்தக் கட்டிடம் கோவில் நிலத்தில் கட்டப்படுவதாகவும், திருப்பதி நகர மேம்பாட்டு ஆணையத்தின் (TUDA - Tirupathi Urban Development Authority) விதிகளை மீறிக் கட்டப்படுவதாகவும் எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. திருப்பதி உலகெங்கும் உள்ள ஹிந்துக்களின் புனிதத்தலமாகும். திருமலை, திருச்சாணூர் மட்டுமல்லாமல், மேலும் பல பழம்பெருமை வாய்ந்த கோவில்கள் உள்ள புண்ணியத்தலம் திருப்பதி. திருப்பதி நகரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 0.09% தான் எனும்போது அங்கே ஒரு இஸ்லாமியப் பல்கலையைக் கொண்டுவர முயற்சி செய்வது மிகவும் சந்தேகத்திற்குரியது. எனவே, இம்முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் தொடர்பாளர்கள் மூலம் இந்த இஸ்லாமியப் பல்கலையைப் பற்றிக் கிடைத்துள்ள அனைத்துத் தகவல்களையும், உலகெங்கும் உள்ள ஹிந்துக்களுக்குத் தெரிவித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, எங்களின் www.savetemples.org என்கிற இணையதளத்தில் கொடுத்துள்ளோம். இவ்விஷயம் எங்களை மிகவும் பாதித்து எங்கள் மதவுணர்வுகளையும் புண்படுத்துவதாகவும் உள்ளது. எனவே, அரசு இதை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.

 

கருத்துகள்


பெரிதும் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், 19 நிறுவனங்கள் கொண்ட ஹீரா இஸ்லாமிய தொழிற்குழுமம் திருப்பதியில் தன்னுடைய பதிவு அலுவலகத்தைக் கொண்டிருந்தாலும், உள்ளூர் மக்கள் யாருக்கும் இப்படி ஒரு தொழிற்குழுமம் இருப்பது தெரியவே இல்லை என்பதுதான்.  

 

திருப்பதி நகராட்சியின் முன்னாள் தலைவரும் காங்கிரஸ் கட்சிப் பிரமுகருமான பிரசன்ன குமார் ரெட்டிPrasanna-Kumar-Reddy---Congress-Party-Leader அவர்கள், "இங்கு மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ள முஸ்லிம்கள் திருமலை வெங்கடேசப் பெருமாளை மிகவும் போற்றுபவர்கள். அவர்கள் எங்களுடன் சகோதர பாசத்துடன் பழகி அமைதியாக வாழ்ந்து வருபவர்கள். இருப்பினும் இந்த மாதிரியான பல்கலை தொடங்கப்பட்டால் வெளியூர்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்களும், ஆசிரியர்களும் மற்ற ஆர்வலர்களும் நாளடைவில் வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அவர்கள் உள்ளூர் மக்களின் மனத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துக்களையும் வஹாபியக் கலாச்சாரத்தையும் விதைத்துவிட்டார்கள் என்றால் இங்கே தற்போது நிலவி வரும் அமைதி கண்டிப்பாக கெட்டுப்போகும். அதனால் பல விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும்" என்று தன் கருத்தைத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

 

Adikesavulu-Reddy---YSR-Congress-Leaderஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிரமுகரும் அக்கட்சியின் விவசாயிகள் அணியின் தலைவருமான ஆதிகேசவுலு ரெட்டி அவர்கள், "ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முக்கியமான கல்விச் சாலைகளில் திருப்பதி நகரமும் ஒன்று. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தின் கீழ் இங்கே மருத்துவக் கல்லூரிகள், பொறியியற் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மேநிலைப் பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகள் என்று சகலமும் இயங்குகின்றன. உலகத்தரம் வாய்ந்த ராஷ்டரீய சம்ஸ்க்ருத வித்யா பீடமும் இங்கே இயங்கி வருகின்றது. இங்கே உள்ள 0.09% முஸ்லிம்கள் இங்கேயுள்ள பள்ளி கல்லூரி வசதிகளும் அவைகள் தரும் பாடத்திட்டங்களும் சிறந்தவையாக உள்ளன என்று மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். எனவே, இங்கே ஒரு இஸ்லாமியப் பல்கலை தொடங்கும் அவசியமே இல்லை. மேலும், இந்த இஸ்லாமியப் பல்கலையைத் தொடங்குவதற்கு, இடைநிலைக் கல்வி வாரியம் (Board of Intermediate Education) மற்றும் பல்கலை மானியக் குழு (University Grants Commission) ஆகியவற்றிடமிருந்து இந்த ஹீரா தொழிற்குழுமம் அனுமதி வாங்கியுள்ளதாகத் தெரியவில்லை. அவர்கள் திருப்பதி நகர்புற வளர்ச்சிக் ஆணையத்தின் விதிகளை மீறியுள்ளார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். கோவில் நிலங்களை கையகப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன" என்றார்.

 

திருப்பதியில் 30 வருடங்களுக்கும் மேலாக மார்கெட் காண்டிராக்டராக இருந்து வரும் சமீர் பாஷா என்னும் Shamir-Bashaஇஸ்லாமியர், "நாங்கள் இங்கே அமைதியாக வாழ்ந்து வருகிறோம். உள்ளூர் ஹிந்துக்கள் எங்கள் பண்டிகைகளில் சகோதரர்களாகக் கலந்து கொள்கின்றனர். இந்த அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் எந்த ஏற்பாட்டையும் நாங்கள் விரும்பவில்லை. நோவேரா ஷேக் என்னும் பெண்மணியைப் பற்றியோ, ஹீரா தொழிற்குழுமத்தைப் பற்றியோ இதற்கு முன்னால் நாங்கள் கேள்விப்பட்டதில்லை. வெளிப்படையான கல்வி நிறுவனமாக இல்லாமல் பல ரகசியங்களைத் தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும் ஒரு நிறுவனத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி ஒரு கல்வி நிறுவனம் எங்களுக்குத் தேவையுமில்லை. வெளிநாடுகளிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் வருபவர்கள் மூலம் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நாங்கள் எந்தவிதமான பிரச்சனையையும் விரும்பவில்லை. ஏழுமலை ஆண்டவனின் அருளில் அமைதியான நிம்மதியான வாழ்க்கை பெற்றுள்ளோம். இந்த அழகிய நகரின் அமைதியும் மத நல்லிணக்கமும் வெளியாட்களால் பாதிக்கப்படக் கூடாது"  என்று தன் கருத்தை ஒளிவு மறைவின்றி தெரிவித்தார்.

 

Manoharan-Thasildarநாங்கள் சென்ற சமயத்தில் (செவ்வாய்க் கிழமை செப்டம்பர் 17-ம் தேதி) திருப்பதி நகரில் ஆங்காங்கே அரசு அலுவலர்களும் பொதுமக்களும் தெலங்கானா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தனர். அவ்வாறான ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்த தொண்டவாடா தாசில்தார் திரு மனோகரன் அவர்களையும் சந்தித்தோம். ஆர்பாட்டங்களுக்கு இடையே பேசிய அவர், "இஸ்லாமியக் கல்லூரி கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இடம் பட்டா நிலம். அவர்கள் பெயரில் பட்டா இருந்ததாலும், தொண்டவாடா பஞ்சாயத்தின் தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளதாலும் கட்டிடம் கட்ட அனுமதி அளித்தோம்"  என்றார்.


பத்திரிகையாளர் சந்திப்பு


Opening Press Meet


செப்டம்பர் 17 செவ்வாய்க்கிழமை அன்று திருப்பதி சென்ற போது ஹீரா தொழிற்குழுமத்தினர் அன்று பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியாது. பல்கலைப் பற்றி விசாரித்து வருவோம், முடிந்தால் குழுமத்தினரையும் அக்குழுமத்தின் தலைவி திருமதி நோவேரா ஷேக் அவர்களையும் சந்தித்து பேட்டி கண்டு வருவோம், என்கிற எண்ணத்தில்தான் திருப்பதி சென்றோம். ஆனால் அன்றைய தினமே பத்திரிகையாளர் சந்திப்பையும் மதியம் 3 மணி அளவில் அவர்களே ஏற்பாடு செய்திருந்தது வசதியாகப் போயிற்று.

 

Press Persons under the Shamianaஆனால் அந்நிகழ்ச்சி திட்டமிட்டு ஒத்திகைப் பார்த்து நடத்தப்பட்டதைப் போல் தோன்றியது. கல்லூரி வளாகத்தின் நுழைவு வாயில் அருகிலேயே ஷாமியானா ஒன்றும் நூற்றுக்கணக்கான நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. காணொளி காட்டுவதற்காக வெண்திரையும் புரொஜெக்டரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சரியாக 2.45 மணி அளவில் பேருந்துகள் சில வந்து நிற்க அவற்றிலிருந்து கண்கள் மட்டுமே வெளியில் தெரியும் வகையில் முழுமையாக பர்கா அணிந்த மாணவிகள் வரிசையாக வந்து போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து பர்கா அணிந்த ஆசிரியைகளும் வந்து அமர்ந்தனர். வந்திருந்த ஊடக நிருபர்களுக்கும் புகைப்பட நிருபர்களுக்கும் "ஹீரா பியூர் டிராப்" குடிநீர் பாட்டில் ஒன்று கொடுக்கப்பட்டது. பிறகு திடீரென்று எவ்வித அறிவிப்பும் இன்றி வெண் திரையும் புரொஜெக்டரும் அகற்றப்பட்டன. பிறகு தன் அலுவலர்களுடன் (இரண்டு ஆண்கள்; இரண்டு பெண்கள்) வந்த திருமதி நோவேரா ஷேக், தொடர்ந்து அரை மணி நேரம் தட்டுத் தடங்கலின்றி தெலுங்கு மொழியில் தன்னைப் பற்றியும் தன் குழுமத்தைப் பற்றியும் பேசினார்.

 

தொடங்கிய கணத்திலிருந்து பாஜகவையும் அதன் செய்தித் தொடர்பாளர் பானு பிரகாஷையும் விமரிசனம் செய்தார். Ms.Nowhera-Sheik"அவர்கள் எங்கள் மேல் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களைக் கூறுகிறார்கள். நாங்கள் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் செய்யவில்லை. உலக அளவில் 19 நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். அனைத்து நாடுகளிலும் அந்நாடுகளின் சட்ட திட்டங்களின் படிதான் தொழில் செய்து வருகிறோம். நான் திருப்பதியைச் சேர்ந்தவள். சொல்லப்போனால், 1920-ல் என் பாட்டனார் இங்கே தான் தன்னுடைய டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தைத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து வெற்றிகரமாக வியாபாரம் செய்த என் தந்தையிடமிருந்துதான் நான் வியாபர நுணுக்கங்களைக் கற்றேன். தற்போது இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளேன். ஒரு பக்கம் தொழில் முன்னேற்றத்தைக் கவனித்துக்கொண்டு மறுபக்கம் முஸ்லிம் பெண்களின் மேம்பாட்டிற்கும் சேவை செய்துகொண்டிருக்கிறேன். நான் இந்த ஊரைச் சேர்ந்தவள் என்பதால் இங்குள்ள முஸ்லிம் பெண்களின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு இந்தக் கல்லூரியைத் தொடங்கியுள்ளேன். சித்தூர் மாவட்டத்தில் 3.5 லக்ஷம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு பெண்கள் என்று வைத்துக்கொண்டால்கூட 6 லக்ஷம் பெண்கள் இருக்கின்றார்கள். அந்த 6 லக்ஷம் பெண்களுக்கும் கல்வி தந்து முன்னேற்றுவதே என் லட்சியம். பாஜகவினர் வெற்றுக் குற்றச்சாட்டுகளை வீசுகின்றனர். நாங்கள் வேறொருவரிடமிருந்து வாங்கி எங்கள் பெயரில் பதிவு செய்துகொண்ட பட்டா நிலத்தில்தான் இந்தக் கட்டிட்த்தை எழுப்புகிறோம். இது கோவில் நிலம் கிடையாது, கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வாங்கியுள்ளோம். ஒவ்வொரு படியாகச் செல்வோம். எங்கள் மதரசாவில் நாங்கள் கொடுக்கும் கல்வி மற்ற பள்ளிகளில் கொடுக்கும் உயர்நிலைக் கல்விக்கு ஈடானது. உருது, அரபி மொழிகள் மட்டுமல்லாமல் கணிதம், அறிவியல், வரலாறு, பூகோளம் ஆகியவையும் கற்றுத் தருகிறோம். அதோடு மட்டுமல்லாமல் இஸ்லாமிய கலாச்சார பண்பாட்டையும் கற்றுத்தருகிறோம். மேற்கொண்டு கணினி கல்வி, செவிலியர் கல்வி போன்றவற்றிலும் பயிற்சி அளிக்கிறோம்" என்றார்.

 

Students Teachers Press Meetஅதனைத் தொடர்ந்து, ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை, மதச்சார்பின்மை, மனித உரிமை, இந்திய அரசின் மதச்சார்பின்மைக் கொள்கை, அரசு சிறுபான்மையினத்தவரைப் பாதுகாப்பது ஆகியவற்றைப் பற்றியும் பேசினார். "நான் உலகில் எங்குவேண்டுமானாலும் இந்தப் பல்கலைக்கழகத்தைத் தொடங்க முடியும். ஆனால் இந்திய முஸ்லிம் பெண்களுக்குச் சேவை செய்யவே விரும்புகிறென். அதையும் என் சொந்த ஊரான திருப்பதியில் இருந்தே ஆரம்பிக்க விரும்புகிறேன்." என்றார்.

 

தங்கள் மேல் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுத்துப்பேசினாலும், எதற்கும் தகுந்த ஆதாரங்களை அவர் காண்பிக்கவில்லை. அவர் அருகே அமர்ந்திருந்த பெண்மணி "கல்லூரியின் முதல்வர்" என்று அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் கையில் ஏராளமான தாள்கள் இருந்தன. தன்னுடைய பேச்சுக்கிடையில் திருமதி நோவேரா தூண்டியபோதெல்லாம் அந்தத் தாள்களில் ஒன்றை எடுத்துக் காட்டினார் அவர். சுற்றி அமர்ந்திருந்த நூற்றுக்கணக்கான மாணவிகள் அவருடைய பேச்சுக்கிடையே அவ்வப்போது சொல்லி வைத்தாற்போல் ஒரே மாதிரியாகக் கைதட்டி ஆர்ப்பரித்தனர். ஆனால் எந்தவிதமான சான்றின் நகலும் ஊடகத்தினருக்குக் கொடுக்கப்படவில்லை. அவர்களுடைய பத்திரிகை அறிக்கைகூட அச்சிட்டுக் கொடுக்கப்படவில்லை. பலமுறை கேட்ட பிறகும் அது கொடுக்கப்படவில்லை. காணொளியைக் காண்பிக்காததற்கும் எந்த விளக்கமும் தரப்படவில்லை.

 

அவருடைய நீண்ட பேச்சு முடிந்த பிறகு பத்திரிகை நிருபர்கள் கேட்ட எந்த ஒரு குறிப்பிட்ட கேள்விக்கும் அவர் சரியான ஒத்துக்கொள்ளும்படியான பதிலைத் தரவில்லை. இவ்வளவு பெரிய தொழிற்குழுமமாக இருந்தும் உள்ளூர் மக்களுக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியவில்லையே, ஏன்? 3.5 லக்ஷம் வாக்காளர் எண்ணிக்கையிலிருந்து 6 லக்ஷம் பெண்கள் எண்ணிக்கைக்கு எப்படி வந்தீர்கள்? மதரசாவிலும் கல்லூரியிலும் நடத்தப்படும் பாடத் திட்டங்கள் யாவை? கட்டிடத்திற்கான அனுமதி கல்லூரி என்ற பெயரில் பெறப்பட்டதா அல்லது மதரசா என்ற பெயரிலா? போன்ற கேள்விகளுக்கெல்லாம் மழுப்பலான பதில்களே கிடைத்தது.

 

பின்னர் அவருடைய கல்வித்தகுதிகள் பற்றி கேட்டபோது பதில்தர மறுத்தார். தொடர்ந்து வற்புறுத்திய பின்னர், தான் சென்னையில் ஒரு பள்ளியில் படித்ததாகத் தெரிவித்தார். அந்தப் பள்ளியின் பெயரைக் கேட்டபோது அது ஒரு இஸ்லாமியப் பள்ளி என்று சொன்னார். சென்னையின் எந்தப் பகுதியில் உள்ளது என்று கேட்டதற்குப் பதில் தரவில்லை. சர்வதேச அளவில் அவ்வளவு பெரிய தொழிற்குழுமத்தை நடத்துபவர் ஒரு சில ஆங்கில வார்த்தைகள் கூடப் பேசத்தெரியாமல் இருந்தது பத்திரிகையாளர்களுக்கு வியப்பாக இருந்தது. தெலுங்கிலும் ஹிந்தியிலும் மட்டுமே பேசினார்.

 

Closing-of-the-Press-Meetகூட்டம் முடிந்தவுடன் ஒரு பத்திரிகை நண்பர் தனிப்பட்ட முறையில் ஒரு சந்தேகத்தை எழுப்பினார். "நம்மிடம் பேசியவர்தான் திருமதி நோவேரா ஷேக் என்று எப்படி நம்புவது? இதற்கு முன்னால் அவரைப் பார்த்த்தில்லையே! காணொளியையும் அவர்கள் காண்பிக்கவில்லை; அதைக் காட்டியிருந்தாலாவது அவரை அடையாளம் கண்டு கொண்டிருக்கலாம். பத்திரிகை அறிக்கையும் நம் கையில் கொடுக்கவில்லை. அவர்தான் நம்மிடம் பேசியவர் என்று என்ன நிச்சயம்?" என்று கேட்டார் அந்த நண்பர்.


பத்திரிகையாளர் கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு உளவுத்துறை அலுவலர், "குறுகியகாலத்தில் இவரின் அபரிமிதமான வளர்ச்சி வியக்க வைக்கிறது; 2008 வரை இவர் யாரென்றே இங்குள்ள மக்களுக்குத் தெரியாது. இவருடைய வளர்ச்சிக்கு மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளுடனான தொடர்புகள் காரணமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்" என்றார்.

 

கோவில், பூமி, நீர்


Dilapidated Temple- Islamic Universityதிருப்பதியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான திரு சொரகாயல கிருஷ்ணா ரெட்டி அந்தப் பகுதியின் சரித்திரப் பின்னணியை நமக்கு எடுத்துரைத்தார். இஸ்லாமியப் பல்கலை பற்றி ஏற்கனவே தெரிந்துவைத்திருந்த அவர், "கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கல்லூரியின் வெகு அருகாமையில் பாழடைந்த கோவில் கோபுரத்தின் அடிப்பாகத்தை நீங்கள் கண்டிருக்கலாம். சான்றோரும் இசைக்குறவருமான அன்னமாச்சாரியார் அவர்களுடைய பெயரன் திருவேங்கட நாதன் என்பவர் 16-ம் நூற்றாண்டில் (1542-ம் வருடம்) கட்டிய கோவில்தான் அது. அந்தக் கோவிலின் பிரதம இறைவனாக வேங்கடேசப் பெருமாள் அருள்பாலித்தார். இக்கோவில் பின்னாளில் ஹைதர் அலி என்னும் இஸ்லாமியனின் படையெடுப்பில் 18-ம் நூற்றாண்டில் (1782-ம் வருடம்) அழிக்கப்பட்டது. தற்போது அந்தக் கோவிலின் குளம் இருந்த இடத்தின் மீதே இந்தக் கட்டிடம் கட்டப்படுகின்றது. இந்தப் பாழடைந்த கோவிலைச் சுற்றியிருக்கும் நிலம் அனைத்தும் கோவிலுக்குச் சொந்தமானதே. கோவிலைப் பராமரித்து வந்த பிராம்மணர்கள் இந்நிலத்தில் பயிர்செய்து வந்ததற்கான ஆவணங்களும் இருக்கும். இந்நிலங்களை பராமரிக்க மட்டுமே அந்தப் பிராம்மணர்களுக்கு உரிமை உண்டே தவிர, விற்பதற்கு இல்லை. ஆனால் அவர்களிடமிருந்து இந்நிலங்கள் எப்படி கைமாறின என்பதை விசாரிக்க வேண்டும். மேலும் "பக்ரா அக்ரஹாரம்" என்று சொல்லப்பட்ட அந்த அக்ரஹாரத்தில் தற்போது பிராம்மணர் யாரும் இல்லை. இருந்த பிராம்மணர் குடும்பங்கள் குடிபெயர்வதற்கு முன்னால் விற்றார்களா அல்லது அவர்கள் குடிபெயர்ந்த பிறகு அரசு அதிகாரிகள் உதவியுடன் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கையகப் படுத்திக்கொண்டார்களா என்பதையும் விசாரிக்க வேண்டும். ஆனால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அருங்காட்சியகத்தில் இந்த நிலத்தின் தகவல்களும் ஆவணங்களும் கண்டிப்பாகக் கிடைக்கும். இந்தக் கோவிலின் நிலம் இந்த இஸ்லாமியக் குழுமத்தின் கைக்கு எப்படிச் சென்றது என்று தெரியவில்லை." என்றார்.

 

College Name Board and Project Name Boardகல்லூரியைச் சுற்றியுள்ள 12 அடி உயரமான சுற்றுப்புறச் சுவரின் தொடக்கத்தில், மாநில நெடுஞ்சாலையிலிருந்து தெரு திரும்பும் முனையில், இந்தக் கல்லூரி நிறுவனம் ஒரு பெயர் பலகையை வைத்துள்ளது. அப்பலகையில், "ஹீரா சர்வதேச இஸ்லாமிய கல்லூரி" ('Heera International Islamic College') என்றும் "மகளிர் அரபு கல்லூரி" ('Womens Arabic College') என்றும் எழுதப்பட்டுள்ளது. ஆயினும் அந்த நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதில் "ஹீரா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம்" ('HIIU' -   'Heera International Islamic University') என்று உள்ளது. அந்தப் பெயர்பலகையின் கீழே பாறாங்கல்லில் "ஸ்வர்ணமுகி நதி மீட்புத் திட்டம் – துணை மேற்பரப்பு அணை கட்டுதல், சந்திரகிரி" ("Swarnamuki River Rejuvenation Project – Construction of Sub-Surface Dam, Chandragiri")  என்று பொறிக்கப்பட்டுள்ளது.

 

வற்றிப்போன ஸ்வர்ணமுகி நதியை மீட்க வேண்டும் என்கிற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட திட்டமே இது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள சில அரசு சாரா அமைப்புகள் (NGOs) சேர்ந்து ராஷ்டரீய சேவா சமிதி (Rashtriya Seva Samithi  - RASS)  என்கிற அமைப்பின் தலைமையில் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டன. மக்கள் இயக்கம் மற்றும் ஊரக தொழில்நுட்பத்திற்கான அமைப்பு (CAPART – Council for Advancement of People's Action and Rural Technology), மாநில அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம், மத்திய அரசு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆகியவை இந்த்த் திட்டத்திற்கு உதவின.

 

ராஷ்டரீய சேவா சமிதியின் ( http://www.rassngo.org/natural_resources_management.html ) என்கிற இணைய தளத்தில், "ஸ்வர்ணமுகி நதி மீட்புத் திட்டமானது, சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது மண்டலங்களின் 400 குடியிருப்புகளின் வேளாண்மை மற்றும் குடிநீர் தேவையை நோக்கமாகக் கொண்டு, திருப்பதி, திருமலை, காளஹஸ்தி ஆகிய புனிதத் தலங்களும் பயனடையச் செய்வதாகும்; 49,411 ஹெக்டேர் தரிசு நிலத்தின் உயிரினத் தொகுதியை அதிகரிப்பதாகும்; 70,799 ஹெக்டேர் வேளாண்மை நிலத்தில் நீர்பாசனம் உறுதி செய்யப்பட்டு அவற்றில் விவசாயம் மேற்கொள்ளச் செய்வதாகும்; வேலைவாய்ப்பையும் தனிநபர் வருமானத்தையும் அதிகரிக்கச் செய்வதாகும்" என்று குறிபிடப்பட்டுள்ளது.

 

எனவே, இந்நிலம் பட்டா நிலமாக இருக்கக்கூடிய வாய்ப்பில்லை என்கிற குற்றச்சாட்டை புறந்தள்ளிவிட முடியாது. இந்நிலத்தைப் பற்றிய உண்மையை அறிய வேண்டிய பொறுப்பு மாநில அரசையே சாரும்.

 

முடிவுரை


ஹீரா தொழிற்குழுமத்தின் நம்பகத்தன்மை, திருமதி நோவேரா ஷேக்கின் பின்னணி, அவர்களுடைய நிதி ஆதாரங்கள், கல்லூரி கட்டுவதற்கு நிதி திரட்டப்பட்ட விதம், கணக்கு வழக்குகள், குழுமத்தின் வருமான வரி விவரங்கள், போன்றவைகளை ஆராய்ந்து அறிக்கை தயார் செய்ய, உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப் படவேண்டும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பானு பிரகாஷ் கோரியுள்ளார். பல்கலைக்கு எதிரான போராட்டங்கள் இத்திட்டத்தை அரசு தடுத்து நிறுத்தும்வரை தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறினார். அதே போலவே ஆதி ஹிந்து பரிரக்ஷண சமிதியும் தொடர் போராட்டங்கள் நடத்தும் என்று அவ்வமைப்பின் தலைவர் கல்லூரி செங்கையாவும் கூறினார்.

 
இந்தப் பிரச்சனையானது 2006-ல் இதே போல ஏற்பட்ட மற்றொரு பிரச்சனையை நினைவு படுத்துகிறது. திருமலை-திருப்பதி பகுதிகளில் கிறிஸ்தவ மதமாற்ற, மதப்பிரச்சார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்திய முன்னாள் ஆந்திர முதல்வர் காலஞ்சென்ற சாமுவேல் ராஜசேகர ரெட்டி அவர்கள், "27.5 சதுர கிலோமீட்டர் அளவு கொண்ட இரு மலைகள் மட்டுமே வேங்கடேசப் பெருமாளுக்குச் சொந்தம் என்றும் மற்ற ஐந்து மலைகளை அரசு எடுத்துக்கொண்டு சுற்றுலாத்தலமாக மாற்றும்" என்றும் அரசாணை ஒன்றை வெளியிட்டார். ஆனால் ஹிந்து இயக்கங்களும் அமைப்புகளும் உத்வேகத்துடன் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதனாலும், ஆந்திர உயர்நீதிமன்றம் அவர் வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ததாலும், வேறு வழியில்லாமல் தன் முயற்சியைக் கைவிட்டார் சாமுவேல் ராஜசேகர ரெட்டி. கிட்டத்தட்ட அதே மாதிரியான பிரச்சனையைத் தான் தற்போது திருப்பதி சந்திக்கிறது.

 

தெலுங்கானா தவிர்த்து ஏனைய சீமாந்திரா (ராயலசீமா மற்றும் கடற்புற ஆந்திரம்) பகுதிகள் கடந்த ஒன்றரை மாதங்களாக் தெலுங்கானா பிரிவினைக்கு எதிராகக் கொந்தளிப்பில் உள்ளன. மக்கள் போராட்டத்தினால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என்று எவையும் சரியாக நடைபெறுவதில்லை. வங்கிகளும் சில நாட்கள் மட்டுமே இயங்குகின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில், மக்களை மத அடிப்படையில் பிரிக்கக்கூடிய இந்தப் பிரச்சனையை சுமுகமான முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய மாபெரும் பொறுப்பு அரசுக்குத்தான் இருக்கிறது.    

   
குறிப்புகள்
http://en.wikipedia.org/wiki/Tirupati_(city)
http://www.statscrop.com/www/heeraibg.com
http://www.apsmfc.com/ministry-population-cenus.html
http://heeraibg.com/heeraibg/
http://www.savetemples.org/2013/09/14/international-islamic-college-coming-near-tirupathi-is-there-a-plan-to-silence-the-bells-and-stop-aarathi-at-balaji-temple/
https://www.facebook.com/nowherashaik
http://www.thehindu.com/news/national/andhra-pradesh/furore-over-establishment-of-islamic-university-in-tirupati/article5126602.ece



No comments: