Saturday, June 1, 2024

Review of my book 'Who killed Aditya Karikala?' (Tamil) by Mr. Aswath

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?


எழுதியவர்: ஜெயஸ்ரீ சாரநாதன்
வெளியீட்டாளர் ஸ்வாசம் பதிப்பகம்
தொடர்புக்கு: swasambookmart.com
பொன்னியின் செல்வனைக் கல்கி எழுதி இருக்காவிட்டால் இந்தத் தலைப்பு இவ்வளவு தூரம் போணி ஆகியிருக்காது. கல்கி எழுதியது ஒரு புனைவு. அதைச் சில சரித்திர உண்மைகளை வைத்து கட்டமைத்து இருக்கிறார் என்பதைத் தவிர அது பல உண்மைகளுக்குச் சமீபத்தில் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. என்றாலும் அதில் உள்ள பல விஷயங்களை படித்த எல்லோருமே நம்பிக் கொண்டும் நம்ப விரும்பிக்கொண்டும் தான் இருக்கிறார்கள். கல்கி எழுத்தின் வீச்சு அப்படிப் பட்டது. சோழ நாட்டுக்காரர் ஆன அவர் சோழர்களை உயர்த்தியும் பாண்டியர்களை மட்டம் தட்டியும் எழுதி இருக்கிறார். அதற்குத் தகுந்த மாதிரி பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகள் நந்தினி ஈழத்து ராணி உத்தம சோழனின் பிரதியாக மதுராந்தகன் (இருவரும் ஒருவர் தான்) என்று கற்பனா கதா பாத்திரங்களை வைத்துப் புகுந்து விளையாடி இருக்கிறார்.

ஆதித்த கரிகாலன் படு கொலையில் சரித்திரக் கல்வெட்டுகளை ஆய்ந்து எழுதிய சதாசிவப் பண்டாரத்தாருக்கும் நீலகண்ட சாஸ்திரிக்குமே அபிப்ராய பேதங்கள். நீலகண்ட சாஸ்திரி உத்தம சோழனுக்கு கரிகாலன் கொலையில் சம்பந்தம் இருக்கலாம் என்று எழுத பண்டாரத்தார் அந்தணர்களின் சதியால் அவன் கொல்லப் பட்டிருக்கக் கூடும் என்று கருதினார். கல்கி எழுதியதே புனைவு எனும்போது 'உடையாரில்' பாலகுமாரன் தோன்றியதை எல்லாம் எழுதி விட்டுப் போனார். போதாது என்று மணிரத்தினத்தின் கூத்து வேறு.

ஆதித்தன் கொலை குறித்த கல்வெட்டுச் சான்றுகள் கொஞ்சம் தான். அதில் குறிப்பாக உடையான்குடிக் கல்வெட்டு பெருத்த முக்கியத்துவம் பெறுகிறது. இதில் ரேவதாச கிரமவித்தன், ரவிதாசன் (பஞ்சவன் பிரம்மாதி ராஜன்), இருமுடிச் சோழ பிரம்மாதி ராஜன் போன்ற பிராமணர்களின் பெயர்கள் கொலையில் சம்பந்தப் பட்டிருப்பதாய்க் குறிப்பிடப் படுகிறார்கள். கல்கியின் பொன்னியின் செல்வனையும் இந்தக் கொலைக்கு காரணிகளையும் மட்டுமே வைத்து இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார் ஜெயஸ்ரீ.

பொதுவாக சரித்திர ஆராய்ச்சி செய்பவர்கள் பல விஷயங்களை ஒப்பு நோக்க வேண்டும்.
1. கல்வெட்டு என்றால் அதை ஒப்பீடு செய்யும் விதமாக வேறு கல்வெட்டுகளையும் ஆராய வேண்டும். ஏன் என்றால் கல்வெட்டுகளிலும் உண்மைக்குப் புறம்பான புனைவுகள் உண்டு.
2. இவற்றை இலக்கிய ஆதாரங்கள் மற்றும் செவி வழிச் செய்திகளுடனும் ஒப்பு நோக்க வேண்டும்.
3. இவற்றிற்கான கால நிர்ணயத்தை துல்லியமாகச் செய்ய வேண்டும். இதற்கு வெளி நாட்டுக் கணக்கீடு முறைகள் பயன் அளிக்காது. ஏன் என்றால் இந்தியக் கணக்கீடு முறைகளும் அன்னியக் கணக்கீடு முறைகளும் வெவ்வேறானவை.
இந்த மூன்று முறைகளையும் கச்சிதமாகப் பயன் படுத்தி இருக்கிறார் ஜெயஸ்ரீ. இதை வைத்து இவர் வரும் முடிவுகள் பின் வருமாறு:

1. ஆதித்தன் சுந்தர சோழன் இறந்த பின் தான் கொல்லப் பட்டான்.

2. உத்தம சோழனும் மதுராந்தகனும் ஒருவனே.

3. பார்த்திபேந்திரனும் ஆதித்தனும் ஒருவனே.

4. கண்டராதித்தன் வீர பாண்டியனால் கொலை உண்டான்.

5. இதற்குப் பழி வாங்க ஆதித்தன் வீர பாண்டியனைக் கொலை செய்தான்.

6. ராஜராஜன் ஆண்ட காலம் கி பி 976 இல் தொடங்குகிறது; 985 இல் அன்று.

7. அப்போதைய வழக்கத்தில் ராஜா இருக்கும் போது வாரிசு யுவராஜாவாக அங்கீகரிக்கப் பட்டால் அவன் ஆட்சியையும் அப்போதில் இருந்தே ஆரம்பிக்கிறது.

8. இந்தக் கணக்கில் ஆதித்தனும் உத்தம சோழனும் இணையாக ஆட்சி செய்து இருக்கிறார்கள். ஆதித்தன் கொலையுண்ட பின் ராஜராஜன் இளவரசுப் பட்டம் ஏற்று இருக்கிறான். எனவே ராஜராஜன் பட்டம் ஏற்ற இரண்டாம் ஆண்டிலேயே ஆதித்தன் கொலையாளிகள் கண்டு பிடிக்கப் பட்டு தண்டிக்கப் பட்டு இருக்கிறார்கள்.

9. ராஜராஜன் அழித்த காந்தளூர் சாலை உண்மையில் வேத பாட சாலை இல்லை; அது விழிஞம் துறைமுகமாக இருத்தல் கூடும்.

10. கொலையில் சம்பந்தப் பட்ட பிராமணர்கள் கொலையாளிகளுக்கு அறியாமலே உதவி இருக்கக் கூடும். அதனாலேயே அவர்களுக்கு அளிக்கப் பட்ட தண்டனை கடுமையாக இல்லை.

11. பாண்டிய நாடு சதிகாரர்கள் அல்லது சேர நாட்டு சதிகாரர்கள் சம்பந்தப் பட்டு இருக்கலாம்.

இந்த விஷயம் குறித்து தமிழ் நாட்டின் பொது புத்தி ஒன்று உண்டு. திராவிட இயக்கங்கள் தலை எடுத்த பின் நீண்ட நாட்களாய் 'பிராமணர்கள் சுயநலவாதிகள்; கோழைகள்; சதி செய்பவர்கள்; என்ன தவறு செய்தாலும் சட்டம் அவர்களை தண்டிக்காது; தேச துரோகிகள்' என்றெல்லாம் பிம்பம் கட்டமைக்கப் பட்டு கோலோச்சி வருகிறது. தனிப்பட்ட முறையில் பிராமணர்களிடம் உதவி பெற்றவர்களும் பொது என்று வரும்போது இந்தக் குற்றச்சாட்டுகளில் கலந்து கொள்வது வழக்கம். விதி விலக்கானவர்கள் நிறைய உண்டு; அவர்கள் குரல் எப்போதும் எடு படுவதில்லை. வெறும் வாயை மென்று கொண்டிருந்த இவர்களுக்கு உடையான்குடி கல்வெட்டு அவல் போல் ஆகி விட்டது.

இதை முறியடிக்க ஜெயஸ்ரீ வைக்கும் வாதங்கள் குறைவு தான். அவர் கூறுவது எல்லாம் 'மனு நீதி பிரகாரம் பிராமணர்கள் விடுவிக்கப் படவில்லை; பல சமயங்களில் பிராமணர்கள் தண்டிக்கப் பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன; தவிரவும் ராஜேந்திர சோழன் நிறைய பிராமணர்களைக் கொன்றதற்கு சான்றுகள் இருக்கின்றன' என்கிறார். சோழ பரம்பரை வாரிசுகளையும், அவர்களின் காலங்களையும், அவர்கள் செய்த போர்களையும் ஆராய விரிவான தளம் அமைத்துக் கொண்ட அவர் கொலையாளிகளை பற்றிய விரிவான அலசலைச் செய்வதற்குக் குறைவான பக்கங்களையே எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படிப் பார்க்கும் போது வானியலும் ஜோசியமும் தெரிந்த இவர் செய்த ஆராய்ச்சி நுட்பமானது; பாராட்டுக்குரியது. ஆனால் ஆதித்தன் கொலையாளிகளை விரிவாக அலசவில்லை என்று தான் தோன்றுகிறது. கிடைத்த தரவுகளும் குறைவாக இருந்திருக்கலாம். இதற்கான முயற்சியில் இவர் இன்னும் தீவிரமாக ஈடு படுவார் என்றும் இன்னும் விரிவாக வேறொரு புத்தகம் எழுதுவார் என்றும் எதிர் பார்க்கலாம்.

அன்புடன்
அஸ்வத்

***
எனது பதில்:

எனது புத்தகத்தை ஆய்வு செய்தமைக்கு மிக்க நன்றி.

9-ஆவது பாயின்ட் நீங்கள் எழுதியது போலல்ல. காந்தளூர் சாலை ஒரு வேதபாட சாலை என்றுதான் சொல்லியுள்ளேன். பார்த்திவசேகரபுர செப்பேடுகள் மூலம் காந்தளூர்சாலை வேதபாட சாலை என்பது தெரிய வருகிறது என்று சொல்லியுள்ளேன். சதிகாரர்களுக்கு அது புகலிடம் கொடுக்கவே, அங்கு மறைந்திருந்த மலை ஆளர்களை ராஜராஜன் கொன்றிருக்கிறான். விழிஞம் துறைமுகத்துக்கு, காந்தளூர்சாலை என்ற ஊர் பெயர் இருந்திருக்க வேண்டும் என்று எழுதி இருப்பேன்.

நீங்கள் சொன்னது போல கொலயாளிகள் குறித்து அதிகம் தரவுகள் இல்லை. இது வரை கிடைத்துள்ள தரவுகள் அடிப்படையிலும், அந்தப் பார்ப்பனர்களுக்குக் கொலை செய்ய motive இல்லை என்பதாலும், கொடுக்கப்பட்ட தணடனையைப் பொறுத்தும் எழுதியுள்ளேன்.

இந்த நூலின் முக்கியத்துவம், வருடக் கணக்கீட்டை நாம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பதும், அப்படி ஒரு மறு ஆய்வை நான் செய்தும் உள்ளேன் என்பதே. உதாரணமாக, தஞ்சைப் பெரிய கோயிலின் காலம் தவறானது என்றும், அது எத்தனை ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்றும் காட்டியிருப்பேன்.

*** புத்தகத்தைப் பெற இங்கே க்ளிக் செய்யவும்: சுவாசம்

No comments: