Wednesday, September 11, 2024

தசரதருக்கு வயது 60,000 ஆண்டுகளாமே?

இராமர் ஆண்ட காலம் 11,000 வருடங்கள் என்பது 11,000 தினங்களுக்கு சமம் என்று வேதப் பிரமாணத்துடன் சொன்னோம். உடனே, அந்தக் கணக்கை தசரதரது வயதுக்கும் பயன்படுத்தி, தசரதர் 60,000 ஆண்டுகள் வாழ்ந்தார்; அப்படியென்றால் 60,000 நாட்கள் என்று அர்த்தமா? 60,000 ÷ 360 = 166.6 வருடங்கள் என்றாகுமே என்று கேட்பவர்களுக்கு உண்டு. அவர்களுக்கும், 60,000 வருடங்கள் வாழ முடியும், அதை நம்ப வேண்டும் என்று சொல்லும் கிரிப்டோ வேடதாரிக்கும் இந்தப் பதிவு.

இராமருக்குச் சொன்ன கணக்கு, அவர் வாழ்க்கை நிகழ்ச்சிகளில், வால்மீகி வெளிப்படையாக வயதினைச் சொல்லாத, இராமரது ஆட்சியாண்டுகளைக் கண்டு பிடிக்க உதவியது. அப்படிப்பட்ட குறிப்பிட்ட வயதும், காலமும் வேறெங்கும் வால்மீகி சொல்லவில்லை.
ஆனால் பல இடங்களில், பல விவரங்களுக்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளை வால்மீகி சொல்லியுள்ளார். உதாரணமாக, தசரதர் தான் பிறந்ததிலிருந்து தனக்கு 60,000 ஆண்டுகள் முடிந்து விட்டன என்று விஸ்வாமித்திரரிடம், தன் மகன்களை அனுப்புமாறு கேட்கும் போது சொல்வார்.
அதே 60,000 வருடங்கள் தான் தன்னுடைய வயதென்று, தசரதரின் நண்பனான
ஜடாயுவும் சொல்கிறார்.
தசரதரது முன்னோர்களான
சகரன் 30,000 ஆண்டுகள் ஆண்டிருக்கிறார்;
திலீபன் 30,000 ஆண்டுகள் ஆண்டிருக்கிறார்.
இப்படி ஆயிரக்கணக்கில் சொல்லப்படும் விவரங்கள் வால்மீகி இராமாயணத்தில் நிறைய இருக்கின்றன.
பிரம்ம ரிஷி பட்டம் பெற விஸ்வாமித்திரர் தவம் செய்த வருடங்கள் 5000.
ஆனால் அத்ரி ரிஷியின் மனைவியான அனசூயா 10,000 வருடங்கள் தவம் செய்திருக்கிறாள்.
அவளைப் போல மண்டகர்ணி என்னும் ரிஷி, நீரில் நின்று கொண்டே, காற்றை மட்டும் ஆகாரமாகக் கொண்டு 10,000 வருடங்கள் தவம் செய்திருக்கிறார்.
இவையெல்லாம் வேறு யுகம். அப்பொழுது காலக் கணக்கு வேறு என்று சொல்பவர்களும் உண்டு. யுகம் என்னும் வாதத்தை எடுத்தீர்கள் என்றால் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். பிரம்மனின் ஆயுளைச் சொல்லும் லக்ஷக் கணக்கான ஆண்டுகளுக்கு அடிப்படை, 30 நாழிகை ( = 24 மணி) கொண்ட ஒரு சூரிய தினம் தான். யுகத்துக்கு யுகம் காலக்கணக்கு மாறவில்லை. அந்தந்த யுகத்தில் மனிதன் ஆயிரம் வருஷம் வாழ்ந்தான் என்று சொல்லப்பட்டுள்ளதே என்று கேட்டால், தொடர் சங்கிலியாக வம்சாவளி அவ்வளவு காலம் சென்றதைக் குறிப்பிடுகிறது. கலி யுகத்தில் கர்பத்திலேயே ஆயுள் முடிந்து விடுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது, இந்த அர்த்தத்தில் தான்.
எனவே வேதப் பிரமாணம் மனித ஆயுள் நூறு வயது என்பதைத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். சில வருடங்கள் கூட, குறைய இருக்கலாம். அதனால் ஆயிரக் கணக்கான வருடங்கள் என்று சொல்லுமிடத்தில் கணக்கில்லாத வருடங்கள் என்றோ, பல வருடங்கள் என்றோ பொருள் கொள்ள வேண்டுமே தவிர, அதன் நேர் பொருளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
உதாரணமாக, புருஷ சூக்தம் சஹஸ்ர சீரிஷா புருஷ, சஹாராக்ஷ சஹஸ்ர பாத் என்று சொல்வதை, அப்படியே பொருள் கொண்டால், ஆயிரம் தலையுடன் இருப்பவன் என்றால், இரண்டாயிரம் கண்கள், இரண்டாயிரம் கால்கள் இருக்க வேண்டுமே. ஆனால் ஆயிரம் கண்கள், ஆயிரம் கால்கள் என்றுதானே சொல்கிறது? அங்கு சஹஸ்ரம் என்பது எண்ணிலடங்காதது என்றுதானே பொருள் கொள்கிறோம்?
அது போல 60,000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றால் பல்லாண்டுகள் வாழ்ந்தார் என்றோ, அல்லது 60 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். அவ்வாறுதான் இதுநாள் வரை பெரியவர்கள் சொல்லி வந்தார்கள். மூதறிஞர் இராஜாஜி அவர்களும் அவ்வாறே, தான் எழுதிய இராமாயணம் ' சக்கரவர்த்தித் திருமகன் ' புத்தகத்திலும் எழுதியுள்ளார்.




அதற்கேற்றாற் போல, இராமாயணத்திலேயே பல இடங்களில், சிறிய காலத்திற்கு, பெரிய அளவில் காலத்தைச் சொல்லி இருப்பதைக் காணலாம்.
உதாரணமாக, இராமர் 14 ஆண்டுகள் செல்ல வேண்டும் காட்டில் இருக்க வேண்டும் என்று கைகேயி சொன்னதும், மிகவும் துக்கப்பட்ட, தந்தை தசரதரைப் பார்த்து இராமர் சொல்கிறார் - நான் வனவாசத்தில் இருக்கும் காலம், நீங்கள் 1000 வருடங்கள் ஆட்சி செய்யுங்கள் - என்று.
வனவாசமோ 14 வருடங்கள் தான். ஆனால் அதை 1000 வருடங்கள் என்று ஏன் இராமர் சொல்ல வேண்டும்? 14 வருடங்கள் கழிவது ஆயிரம் வருடங்கள் போல இருக்கும். அது போல தசரதர் வெகு காலம் வாழ்ந்தது 60,000 ஆண்டுகள் ஆனதைப் போல இருந்திருக்கிறது.
அதுபோல லட்சுமணனும், வனவாசம் செல்ல வேண்டும் என்று கைகேயி சொன்னாள் என்று கேள்விப்பட்டவுடன் கொதித்துப் போகிறான். அப்பொழுது இராமரைப் பார்த்துச் சொல்கிறான் - ஆயிரம் வருடங்கள் நீ ஆண்டு விட்டு அதன் பிறகு உன் குழந்தைகளுக்கு இராஜ்ஜியத்தைக் கொடுத்து விட்டு வானப்பிரஸ்தம் செல்ல வேண்டும். இப்பொழுது ஏன் வனம் போக வேண்டும் என்பான். இராமர் ஆள வேண்டியது 1000 வருடங்கள் என்கிறான், 11,000 வருடங்கள் என்று அல்ல.
வால்மீகி இராமாயணத்தில் இதைப் போல பல வசனங்கள் வருகின்றன. இராமர் வன வாசம் சென்று 5 தினங்களான போது, அது 5 வருடங்கள் போல இருந்தது என்கிறார் கௌசல்யா.
தசரதர் இறந்தவுடன், அந்த ஒரு இராத்திரி பொழுது 100 வருடங்கள் போல இருந்தன என்றனர் ரிஷிகள்.
மழை காலம் என 4 மாதங்கள் தான் காத்திருந்தது 100 வருடங்கள் போல இருந்தது என்று இராமர் சொல்கிறார்.
இது போல தமிழிலும் சொல்லப்பட்டு உள்ளது. தொல்காப்பியத்தை அரங்கேற்றியது பாண்டிய மன்னனான மாகீர்த்தி என்பவனது அவையில். அதைச் சொல்லும் நச்சினார்க்கினியர், அந்த மன்னன் 24,000 வருடங்கள் ஆண்டான் என்கிறார். நமக்கு மிக நன்றாகத் தெரியும், எந்த பாண்டிய அரசனும் அத்துணை காலம் ஆளவில்லை என்று. ஆனால் அப்படிச் சொல்வது 24 வருடங்கள் என்றோ, அல்லது பல்லாண்டுகள் என்றோ பெருள்படுமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
அதுபோலவேதான் தசரதர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் 60,000 ஆண்டுகளும்.


No comments: