Saturday, September 7, 2024

இராமாயணத்துக்கும், மஹாபாரதத்துக்கும் இடையே உள்ள கால இடைவெளி

மகாபாரதத்தைக் கற்பனை என்று நம்ப வைப்பது கடினம். ஏனெனில் கிருஷ்ணர் தனது மனித சரீரத்தை விட்ட வருடத்திற்கு 35 வருடங்களுக்கு முன் மஹாபாரத யுத்தம் நடந்தது என்பதற்கு மகாபாரதத்தில் ஆதாரங்கள் இருக்கவே, மஹாபாரத யுத்தம் நடந்தது பொ. மு. 3136 என்பதை எளிதில் ஒதுக்கிவிட முடியாது.

ஆனால் இராமாயணத்தில் அப்படி ஒரு சான்று இல்லை என்பதால், இராமாயணம் கோடிக் கணக்கான வருடங்களுக்கு முன்னால் அல்லது லட்சக் கணக்கான வருடங்களுக்கு முன்னால் நடந்தது என்று இஷ்டத்துக்கு அடித்து விடுவார்கள். அத்தனை வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை என்றால் வால்மீகி இராமாயணம் எப்படி இவ்வளவு காலம் உரு மாறாமல் இருக்க முடியும்?
இந்தக் கேள்வி கிரிப்டோக்களுக்குத் தேவையில்லை. நீங்கள் நம்ப வேண்டும். அவ்வளவுதான். அப்படி பலரும் நம்ப ஆரம்பித்தால்தான், பின்னால் எளிதில் நம்மை முட்டாள்கள் என்று முத்திரை குத்தி, இராமாயணம் ஒரு கற்பனைக் கதை என்று சொல்லிவிட முடியும்.
ஆனால் கிரிப்டோக்களுக்குத் தெரியாது, இராமாயண காலத்தைக் கணக்கிடும் வண்ணம் ரிஷிகள் விவரங்களைத் தந்துள்ளார்கள் என்பது.
அவர்கள் யாரும் இராமாயணம் கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்றோ, லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்றோ சொல்லவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். உண்மையில் எந்த இதிகாசமும், புராணமும் இராமர், கோடிக் கணக்கான அல்லது லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார் என்று சொல்லவில்லை.
அவை சொல்வதெல்லாம் இக்ஷ்வாகு வம்சாவளியில் வந்தவர்கள் யார் என்பதே. உண்மையில் புராணங்கள் தரும் அரசர் பட்டியலைக் கொண்டுதான், நாம் மௌரியர், சுங்க வம்சத்து அரசர்களைக் கண்டு பிடித்துள்ளோம்.
அது போல இக்ஷ்வாகு குலத்தில் இராமருக்கு முன் வாழ்ந்த அரசர்கள் யார் என்றும், இராமருக்குப் பின்னால் யார் யார் அந்த குலத்தில் ஆண்டார்கள் என்றும் ரிஷிகள் எழுதி வைத்திருக்கிறார்கள். அதிலும், கிருஷ்ணர் வாழ்ந்த காலம் வரை யாரெல்லாம் அயோத்தியை ஆண்டார்கள் என்பதை ஒரு ரிஷி அல்ல பல ரிஷிகள், பல புராணங்களில் சொல்லியுள்ளனர்.
அதிலும் பொத்தாம் பொதுவாகச் சொல்லவில்லை. இராமர் மகன் குசன், அவர் மகன், அதிதி, அவர் மகன் நிஷதன் என்று இன்னார் மகன் இன்னார் ஆண்டார் என்றும், இவருக்குப் பிறகு இவர் என்றும் தொடர்ச்சியாக அரசர்கள் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். நடுவில் ஓரிரண்டு பெயர்கள் விடுபட்டிருக்கலாம். ஆனால் மொத்தம் 30 முதல் 31 வரை மட்டுமே இக்ஷ்வாகு குலப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு புராணம் (4-22), வாயு புராணம் (2-26), பாகவத புராணம் (9-12) என மூன்று புராணங்களில் வேறு வேறு ரிஷிகள் கொடுத்துள்ள தொடர் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



இவர்கள் அனைவரும், பிருஹத்பலன் என்ற அரசனில் முடிக்கின்றனர். இவன் மகாபாரதப் போரில் போரிட்டிருக்கிறான். அபிமன்யுவால் கொல்லப் பட்டிருக்கிறான்.
இதைச் சொல்லும் பாகவத புராணம் ஸ்லோகங்களை கீழே கொடுத்துள்ளேன்.



குசனில் ஆரம்பித்து, பிருஹத்பலனில் முடியும் இந்தப் பட்டியலை சுக முனிவர் பரிக்ஷித் அரசனிடம் சொல்லி, உன் தந்தையால் அவன் கொல்லப்பட்டான் என்கிறார்.
இப்பொழுது கணக்கிடுங்கள். இராமர் முதல், கிருஷ்ணர் (மகாபாரதம்) வரை 30 அல்லது 31 அரசர்கள்தான் தொடர்ந்து இருந்திருக்கிறார்கள். இவர்கள் ஆண்ட மொத்த காலம் எவ்வளவு இருக்க முடியும்?
அதன் மூலம், இராமாயணத்துக்கும், மகாபாரதத்துக்கும் இடையே எத்தனை ஆண்டுகள் இடைவெளி இருந்திருக்கும்?

No comments: