Monday, December 20, 2010

A common man's appeal to Gov't of Tamil Nadu.


The following is a news report forwarded by a friend about a farmer returning the free-TV given to him by the Tamilnadu Government. The farmer echoes the pangs of worries of every right thinking citizen of this State about the state of affairs that is witnessed at present. The agriculturists are the worst hit in the State due to power cuts. The citizens have been affected in some way or the other by the unproductive expenses of the Government. The working class is lured to the TASMAC shops. With liquor and one rupee rice given through the PDS shops, the working class has been laid unproductive. When our future is in question and the future of our children is in question under these circumstances, how can he watch the TV with a calm mind, asked the farmer. Instead of giving freebies, give us the environment to work and earn our TV, earn our food and earn a a good night's sleep -  demanded this farmer. Hope this becomes the collective view of all the people of Tamilnadu.

This incident happened on 23rd last month in a place called Kotthamangalam, in Pudukkottai district.



புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்
கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு..
செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும்
விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து
விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்
சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு
விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் 'மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட
முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப்
பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த
டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும்
எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு
அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான
மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை
வழங்கினாலே போதும்.

அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து
தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம்,
ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக
நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.
முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும்
உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம்
மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்' என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும்
வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி
வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.

"நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல
போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது.
எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில
படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு
அடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.?
அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்''
என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில் 'கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில்
2518
மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்
பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்'என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும்
லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல்
தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

கு.Kannan
சர்வதேச தமிழர் கழகம்
"தமிழ்க்குடில்"
6/28,
புதுத்தெரு
கண்ணம்மாப்பேட்டை
தியாகராயர்நகர்
சென்னை - 600 01

No comments: