Friday, April 26, 2013

மழை ஜோதிடம் (பகுதி 4) (புதன் - சுக்கிரன் அருகாமை )





தமிழில்:- திரு டி.ஜி. ஸாரநாதன்


முந்தைய கட்டுரைகள்





சித்திரையில்  ஆரம்பித்து கிரகப் பெயர்ச்சிகளைக் குறித்துக் கொள்ளவேண்டும். சில கிரகங்களின் சேர்க்கைகள், சில இராசிகளில் ஏற்படும் போது, அபரிமிதமான மழையோ அல்லது மழையின்மையோ ஏற்படும் . அபரிமிதமான மழைக்குச் சாதகமான அம்மாதிரி கிரக சேர்க்கைகளை அதிவ்ருஷ்டி யோகம் என்பார்கள். அதே மாதிரி மழையின்மைக்குச் சாதகமான கிரக சேர்க்கையை அனாவ்ருஷ்டி யோகம் என்பார்கள்.  அனாவ்ருஷ்டி யோகம் இருந்தால் வறட்சி  ஏற்படும்.


கிரகத்தினால் மழையோ அல்லது மழையிமையோ ஏற்படுகிறதா, என்பது விஞ்ஞானிகள் ஆராய வேண்டிய ஒரு விஷயம். ஆனால், மழை பொழிவதற்கும் சில கிரக சேர்க்கைகளுக்கும் தொடர்பு உள்ளது என்பது கண்கூடு ; இதை நம் முன்னோர்களும், ரிஷிகளும் நமக்கு அறிவுப் பொக்கிஷமாக அளித்துள்ளார்கள். இந்த கிரக சேர்க்கைகளையும், இந்தக் கட்டுரையின் பகுதி 1 ல் கூறப்பட்டுள்ள வானிலை காரணிகளையும் கருத்தில் கொண்டு ஆராய வேண்டும். சாதகமான வானிலை காரணிகளை 195 நாட்களுக்கு முன் (ஆறரை மாதங்களுக்கு முன்) கண்டிருந்து, தற்சமயம் அதிவ்ருஷ்டி யோக கிரக சேர்க்கைகளும் நேரிட்டால், மழை பொழிவது நிச்சயம். ஆனால் வானிலை காரணிகள் இடத்திற்கு இடம் மாறுபடும். ஆகையால், அதிவ்ருஷ்டி யோக கிரக சேர்க்கை இருந்தாலும், உறுதுணையான வானிலை காரணிகள் (196 நாள் முன்பு) சாதகமாக இருந்திருக்கவில்லை என்றால், நல்ல மழையை எதிர்ப்பார்க்க முடியாது. அதனால் தான் மார்கழி மாதத்திலிருந்தே தொடர்ந்து வானிலை நிகழ்வுகளை கூர்ந்து  கவனிக்க வேண்டும் என்பது வற்புறுத்தப்படுகிறது.


க்ராந்தி

கிரகங்களில், சுக்கிரன் (வெள்ளி) அபரிமிதமான மழைக்கு மிக முக்கிய காரணமாகும். சங்க கால தமிழ் இலக்கிய பாடல்கள் பலவற்றில், சுக்கிரன் தெற்கில் நகர்ந்து கொண்டிருந்தால், அங்கு வறட்சி ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.  வானத்தைப் பல ஆண்டுகள் கவனித்து இது   சொல்லப்பட்டதாகும். இங்கு சொல்லப்படுவது, சுக்கிரனின் தெற்கு க்ராந்தியைப் பற்றி. க்ராந்தி என்பது பூமத்திய ரேகைக்கு 24 டிகிரி  வரை  வடக்கிலும், 24 டிகிரி வரை  தெற்கிலும்  உள்ள வானில் உள்ள பிரதேசம். கிரகங்கள் இந்தப் பிரதேசத்தில் மேலும் கீழுமாக சஞ்சரித்துக் கொண்டு இருக்கும். பொதுவாக, எந்த ஒரு கிரகமுமே, வடக்கு க்ராந்தியில் சஞ்சரித்தல் நன்மை பயக்கும் என்று நம்பப் படுகிறது.


முக்கியமாக, சுக்கிரன் பூமிக்கு வடக்குப்  பகுதியில் சஞ்சரித்தால் நல்ல மழை பெய்யும். மழைக் காலங்களில் அது சுற்றுப்பாதைக்கு தெற்கில் சஞ்சரிக்கக் கூடாது. நமது முன்னோர்கள் வெறும் வெளி வானில்  ராசி மண்டலத்தைப் பார்த்தே, சுற்றுப்பாதைக்கு எது வடக்கு, எது தெற்கு என்று கூறும் அறிவு பெற்றிருந்தார்கள். இன்று நாம் இந்த அறிவுக்காக, வலைத்தளத்தைப் பார்க்கிறோம்! மழையைக் கணிக்கும் ஆர்வலர், இந்த க்ராந்தி வரைபடங்களை தொடர்ந்து கண்காணித்து சுக்கிரனின் தடத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.



ஏப்ரல் 2013 க்கான க்ராந்தி வரைபடம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. சுக்கிரன் வடக்கு க்ராந்தியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான்; வரும் மாதங்களில் அவனுடைய சஞ்சாரம், வடக்கு நோக்கியே இருக்கிறது. மழை பொழிதலுக்கு இது சுக்கிரனுக்கான பிரதான காரணி. வரைபடத்தில் சுக்கிரனை   இந்த அடையாளத்தில் கண்டு கொள்ளலாம்.






நாம் நோக்க வேண்டிய அடுத்த அம்சம், சுக்கிரன்,  அஸ்தமனமாகிறதா, இல்லையா என்பது. அஸ்தமனம் என்றால், சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதால், கிரகம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது. அஸ்தமனமாகி இருக்கும் நேரம் கிரகத்திற்கு கிரகம் மாறுபடும். ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களின் அஸ்தமன நேரம் (டிகிரியில்) பின்வருமாறு:


செவ்வாய் = 17 டிகிரி 
புதன் = 14 டிகிரி 
குரு = 11 டிகிரி 
சுக்கிரன் = 10 டிகிரி 
சனி = 15 டிகிரி 

(எப்படி உபயோகிப்பது = உதாரணமாக, செவ்வாய் 17 டிகிரி என்றால், அஸ்தமன நேரம் செவ்வாய் சூரியனை நெருங்குவதற்கு முன்னால் 17 டிகிரியில் ஆரம்பித்து, சூரியனுக்கு 17 டிகிரி பின்னால் இருக்கும் வரை).


எந்த ஒரு கிரகமும் அஸ்தமனமாகும் போது மழை பொழியும். அதே மாதிரி உதயமாகும் போதும் மழை பொழியும். சுக்கிரனைப் பொருத்தவரை, ஒரு நக்ஷத்திரத்திலிருந்து உதயம் ஆவது குறிப்பிட்ட விதிகளின் படியே. இந்த நோக்கில், வானம் ஆறு நக்ஷத்திர மண்டலங்களாக பிரிக்கப் படுகிறது. 

அவை பின்வருமாறு:


  • 1ம் மண்டலம் = பரணி, கிருத்திகை, ரோகிணி , மிருகசீருஷம் (4 நக்ஷத்திரங்கள்)
  • 2ம் மண்டலம் = திருவாதிரை, புனர்பூசம் பூசம், ஆயில்யம் ( அடுத்த 4 நக்ஷத்திரங்கள்)
  • 3ம் மண்டலம் = மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை (அடுத்த 5 நக்ஷத்திரங்கள்)
  • 4ம் மண்டலம் = சுவாதி, விசாகம், அனுஷம் (அடுத்த 3 நக்ஷத்திரங்கள்)
  • 5ம் மண்டலம் = கேட்டை, மூலம், பூராடம் உத்திராடம், திருவோணம் (அடுத்த 5 நக்ஷத்திரங்கள்)
  • 6ம் மண்டலம் = அவிட்டம், சதயம் பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அஸ்வினி  (அடுத்த 6 நக்ஷத்திரங்கள்) 
சுக்கிரன் 1ம், 2ம் மண்டலங்களில் உதயமானால், மழை அளவு சராசரிக்குக் கீழே இருக்கும்.
3ம், 5ம் மண்டலங்களில் உதயம்  என்றால், சொற்ப மழையுடன் வறட்சி   ஏற்படும்.

4ம், 6ம் மண்டலங்களில் உதயம் என்றால், ஏராளமாக மழை பொழியும்.

இந்தக் கட்டுரை எழுதும்போது சுக்கிரன், மேஷ இராசியில் அஸ்தமனமாகிறான். மே மாதம் 6 ம் தேதி (2013) கிருத்திகை நக்ஷத்திரத்தில் உதயமாகிறான். இது 1 ம் மண்டலமாகும். இது முன்-பருவ மழைக் காலமாகும்.  இந்த விதியின் படி குறைந்த அளவு முன்-பருவ மழை இருக்கும். 


( இங்கு கூறியுள்ள விதிகளை நான் தனிப்பட்ட முறையில் சோதித்துப் பார்த்ததில்லை. மழை கணிப்பு ஆர்வலர்களை குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்காகவது சோதனை செய்து பார்க்க வேண்டிக் கொள்கிறேன். பழைய ஏடுகளில் காணப்பட்டதை அப்படியே இங்கு தருகிறேன்)


மண்டலங்களில் உதயமாவது சுக்கிரனுக்கு மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளது; மற்ற கிரகங்களுக்கு இல்லை. ஆனால் எல்லா கிரகங்களுக்கும் அஸ்தமனம், உதயம் இரண்டையும் குறித்துக் கொண்டு, அவற்றின் சாதக பாதகங்களை மதிப்பிட வேண்டும்.


புதன் - சுக்கிரன் அருகாமை 

  • சுக்கிரனும், புதனும் சூரியனுக்கு முன்னும், பின்னும் எப்பொழுதும் சுற்றி வரும். சூரியன், புதன், சுக்கிரன் மூன்றும் ஒரே இராசியில் இருந்தால் மழை பொழியும். அவை மூன்றும் ஒரே நவாம்சத்தில் இருந்தால், பலத்த மழை பெய்யும். இராசியும், நவாம்சமும் நீர் சம்பந்தப்பட்டதாக இருந்தால் (கடகம், விருச்சிகம், மீனம்) மிக பலத்த மழை பொழியும். அதற்கிணங்கவே மழையைத் தீர்மானிக்க வேண்டும்.  
  • சுக்கிரனும், புதனும் ஒரே இராசியிலும், ஒரே நவாம்சத்திலும் இருந்து, சுக்கிரன் செவ்வாய்க்குப் பின்னால் இருந்தால், அதிகமான மழை பொழியும். 
  • சூரியன், பூமி சம்பந்தப்பட்ட இராசியில் (ரிஷப, கன்னி இராசிகள்)  இருந்தும், சந்திரன், புதன், சுக்கிரன் நீர் சம்பந்தப்பட்ட இராசி, நவாம்சதிலும் இருந்தும், அந்த சமயத்தில் மேற்கே வானவில் தென்பட்டாலும், நிறைய மழை பொழிவு இருக்கும். 
(வானவில்லைப் பற்றி ஒரு குறிப்பு: மழைக் காலங்களில், மேற்கே வானவில் எப்பொழுது தோன்றினாலும், மழைக்கான வாய்ப்பு உண்டு. வானவில் கிழக்கில் தென்பட்டால், மழை பெய்யாது)


சுக்கிரனும், புதனும் எவ்வளவு அருகாமையில் உள்ளனரோ அவ்வளவு மழை பொழியும். இவற்றுக்கிடையே அதிக பட்சமாக 30 டிகிரி தூரம் இருப்பது மழை பொழிய உகந்தது. இவை அடுத்தடுத்து சஞ்சரிக்கும் போது, சுக்கிரன், புதனுக்கு முன்னால்  போவது நன்மை. புதன் சுக்கிரனுக்கு முன்னால் சென்றால், மழை மேகங்கள் வந்தாலும், அவை காற்றால் வீசப்பட்டு கலைந்து போகும். அதிருஷ்டவசமாக, இந்த வருடம் மழைக் காலம் பூராவும், சுக்கிரன் புதனை முந்தியே செல்கிறது. இது சென்ற வருடத்திய நிகழ்வுக்கு எதிராக உள்ளது. சென்ற வருடம், சுக்கிரனும், புதனும் வெகு அருகாமையில் இருந்து சஞ்சரித்தாலும் புதன் அடிக்கடி சுக்கிரனை முந்தியது. இந்த ஆண்டு (2013) முழுதுமே, சுக்கிரன் புதனை முந்தியே செல்கிறது. ஜனவரி மாதம் (2014) மட்டுமே, புதன் சுக்கிரனை முந்துகிறது. 


சுக்கிரனுக்கும், புதனுக்கும் உள்ள  இடைப்பட்ட தூரம் 8 டிகிரியிலிருந்து 30 டிகிரி வரை இருந்தால், அது புத சுக்கிர  அருகாமை எனப்படும். இந்த நெருக்கம், ஜோதிடத்தில் பஹு வர்ஷம் எனப்படும். இந்த இரு கிரகங்களின் நெருக்கம், மழைப் பொழிவை பாதிக்கும் முக்கிய காரணியாகும். சென்ற வருடத்தை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு இந்த கிரகங்களின் நெருக்கம் நீடித்து இருப்பதால், இந்த வருடம் மழை பொழிவு, போதுமானதாக இருக்கும். 


இந்த (2013) ஆண்டிற்கான அருகாமை நீடிக்கும் காலம்:

மே 12 லிருந்து ஜூலை 11 வரைக்கும்(முன்- பருவமழைக்காலம்),

ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 30 வரை (மழைக் கால முக்கிய பகுதி),

டிசம்பர் 30 முதல் ஜனவரி 11வரை (குளிர்/பனி பொழிவு காலம்),

பிப்ரவரி 16 முதல் விஜய ஆண்டு முடிவு வரை ( குளிர் காலம்).



மேலே கூறியவற்றிலிருந்து அனுமானிக்க வேண்டியவை:


  • முன் பருவ மழை பொய்த்தாலும், அல்லது குறைந்தாலும், பருவ மழை எதிர்ப் பார்த்தபடி சரியான நேரத்தில் ஆரம்பிக்கும். ஏனென்றால், புதன் சுக்கிரன் நெருக்கத்தில் எந்தத் தடங்கலும் இல்லை.
  • பருவ மழை, ஜூலை பிற்பாதியிலிருந்து ஆகஸ்ட் முற்பாதி  வரை சற்று மந்தமாக இருந்தாலும்,  பிறகு புத்துயிர்க் கொள்ளும். துல்லியமான கணிப்புக்கு, கர்ப்போட்ட மதிப்பீடுகளையும் மார்கழி   மாதத்திலிருந்து பங்குனி மாதம் வரையிலான குறிப்புகளையும் சேர்த்து, மழை அளவைக் கணிக்க வேண்டும்.
  • கிரக அருகாமை 3 மாதத்திற்கு (அக்டோபர், நவம்பர், டிசம்பர்) இல்லாததால், தென் கிழக்கு பருவ மழை பொய்க்கும். இக்கட்டுரையின் அடுத்த பகுதியில், மற்ற காரணிகளையும் சரி பார்த்து, இதற்குப் பரிகாரம் இருக்கிறதா என்று பார்ப்போம். 
  • சுக்கிரன் புதன் நெருக்கம், இந்த ஆண்டிற்கான குளிரும், பனிப் பொழிவும்  (எங்கெல்லாம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளதோ) அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதனால், அடுத்த கர்போட்ட சமயத்திலும், அதற்கடுத்த நான்கு மாதங்களிலும், மூடு பனி இருக்கும். இது அதற்கு அடுத்தாற்போல் வரும் மழைக் காலத்திற்கு சாதகமாக இருக்கும். 
உடனடியாக, புதனும், சுக்கிரனும் மே 12 முதல் நெருங்குகிறார்கள், அவர்களுடன் குரு, மே கடைசி வாரம் சேர்ந்து கொள்கிறான். இந்த மூவர் கூட்டணி நல்ல மழைக்கு அறிகுறி! அந்த சமயத்தில், பருவ மழை லக்ஷத் தீவுகளிலும், கேரளாவிலும் ஆரம்பிக்கும். அதன் பின்னர் சுக்கிரனும், புதனும் எந்தத் தடங்கலும் இன்றி செப்டெம்பர் வரை சஞ்சரிப்பார்கள்.


(தொடரும்) *

No comments: