Sunday, April 28, 2013

மழை ஜோதிடம் (பகுதி 6) (நக்ஷத்திரங்களும், கிரகங்களும்)


தமிழில்:- திரு டி.ஜி. ஸாரநாதன்


முந்தைய கட்டுரைகள்

பகுதி 4:- மழை ஜோதிடம் (பகுதி 4) (புதன் - சுக்கிரன் அருகாமை )

பகுதி 5:- மழை ஜோதிடம் (பகுதி 5) (கிரகச் சேர்க்கைகள்)

 

 
மது முன்னோர்கள் வகுத்த மழை ஜோதிடத்தில், நக்ஷத்திரங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. வானவெளியானது 27 நக்ஷத்திரங்களாக வகுக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாகமும் 13 டிகிரி 20 நிமிடங்கள் நீளமானவை. இந்த ஒவ்வொரு தூரமும் ஒரு பண்பைக் குறிக்கும். உதாரணமாக, கார்த்திகை நக்ஷத்திரம் தீ உமிழும் நக்ஷத்திரம் என்பர்.  அதற்கு அக்கினி தலைவராவார். உண்மையில் சூரியன் கார்த்திகையைக் கடக்கும் போது, இந்தியாவில் மிக வெப்பமாக இருக்கும். அதே மாதிரி, சுவாதி நக்ஷத்திரம் காற்று வீசும் தன்மை உடையது. உண்மையில், சந்திரன் இந்த நக்ஷத்திரத்தைக் கடக்கும் போது, பலத்த காற்று வீசும். நக்ஷத்திரங்களைப் போலவே, 12 இராசிகளும் தனிப்பட்ட பண்புகளுடன் உள்ளன. இதை வைத்துத் தான், ஜோதிட சாஸ்திரத்தில், வெப்பம், நீர் போன்ற அடையாளங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. 

நக்ஷத்திர - கிரக சேர்க்கை:    

தீர்க்க தரிசிகளான நமது முன்னோர்கள், நக்ஷத்திரங்களையும், கிரகங்களையும், நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் பல்வேறு தோற்றங்களையும் கவனித்து,  சுலபமான விதிகளாக அவற்றை அமைத்து, அவற்றின் மூலம் எதிர்கால மக்கள் எளிதாக மழையைக் கணிக்கும் வழிகளை உருவாக்கியுள்ளார்கள். இந்த வகையில், அவர்கள் " ஸப்த நாடி சக்கரம்" என்று நக்ஷத்திரங்களை 7 குழுக்களாக வகுத்துள்ளார்கள். இந்தச் சக்கரம், ஜோதிட சாஸ்திரத்தில் மிகப் பழமையானது; ஏனெனில், இதில் 28 நக்ஷத்திரங்கள் உள்ளன,  ஆனால் தற்போது வழக்கத்தில் 27 நக்ஷத்திரங்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அதிகப்படியான நக்ஷத்திரம் அபிஜித் எனப்படுவது,  இது மேஷத்திலிருந்து பூஜ்ஜியம் டிகிரியில் துவங்கும் வான்வெளி வட்டத்தில், 276-40 டிகிரிக்கும் 280-54 டிகிரிக்கும் இடைப்பட்ட தூரத்தில் 4-14 டிகிரி நீளத்தில், மகர இராசியில் உள்ளது.

கிரக-நக்ஷத்திர சேர்க்கையால் மழை உண்டா , இல்லையா என்று தீர்மானிக்கும் இந்தச் சக்கரத்தைக் கீழ்க் கண்டவாறு விளக்கலாம். 

1
வாயு நாடி    
கார், விசா,
அனு, பரணி
சனி
காற்று, மழையிமை 


2
வாயு நாடி    
ரோ,சுவா,கேட்,
அஸ்          
சூரியன்
காற்று, மழை 
3
தஹன நாடி    
மிரு,சித்,மூல,
ரேவ            
செவ்வாய்
வெப்பம், வறட்சி 
4
சௌம்ய நாடி  
திருவா,ஹஸ்,
பூரா,
உத்திரட்டாதி
புதன்
காற்று, குறைவான 
மழை 
5
நிர்ஜல நாடி  
புன, உத்திரம், உத்திராடம், பூரட்டாதி                                              
சுக்கிரன் 
மேகமூட்டம்,
மழையின்மை 

6
ஜல நாடி            
புஷ்,பூரம்,
அபிஜித்,
சதயம்
            
குரு
அபரித மழை 

7
அமிர்த நாடி
ஆயி, மகம், திருவோ, அவிட்டம்    
சந்திரன்
அதிகப்படியான 
மழை 




எல்லா நக்ஷத்திரங்களும், கார்த்திகையில் ஆரம்பித்து ஒரு ஒழுங்கு முறையில் அணிவகுக்கப் பட்டிருக்கின்றன. நக்ஷத்திரங்களில், சில  கிரகங்களின் சஞ்சாரங்கள் மழையையோ அல்லது வேறு விதமாகவோ உணர்த்தும். அவை வலது கோடியில் கொடுக்கப் பட்டுள்ளன. சந்திரன், அமிர்த நாடி நக்ஷத்திரங்களைக் கடக்கும்போது, நல்ல மழை பொழியும்.  சந்திரன், குருவுடனும், சுக்கிரனுடனும் அமிர்த, ஜல நாடிகளில் சேர்ந்தால், அபரிதமான மழை இருக்கும். சூரியனும், செவ்வாயும் தஹன நாடி நக்ஷத்திரங்களுடன் சேர்ந்தால், கடும் வெய்யிலும், மழையின்மையும் இருக்கும். இந்த மாதிரி கணிப்பு வேண்டும்.


சந்திரனும், நக்ஷத்திரங்களும்:

மழைக் காலத்தில், சந்திரன் குறிப்பிட்ட நக்ஷத்திரத்தைக் கடப்பதை வைத்து, மழை அளவு கணிப்பு இருக்கும். மிக முக்கியமான நக்ஷத்திரங்கள் ரோஹிணியும் , சுவாதியும்.
சாந்திர மாதங்களான ஆஷாடாவில் (ஆடி)  ரோஹிணியும், ஜ்யேஷ்டா (ஆனி) , ஆஷாடா (ஆடி) மாதங்களில் சுவாதியும் கவனிக்கப்படுகின்றன. ( சாந்திர மாதம் அமாவாசைக்கு மறு நாள் ஆரம்பித்து, அடுத்த அமாவாசை வரைக்கும் நீடிக்கும்.) ஜ்யேஷ்டா (ஆனி) மாதத்திலிருந்து ஆரம்பிக்கும் இந்த கண்காணிப்புகள், வருங்காலங்களில் மழை பெய்யுமா, இல்லையா என்பதை கண்டுபிடிக்க உதவும்.

ரோஹிணி  யோகம் :

சாந்திர மாதம், ஆஷாட மாதத்தில் (ஆடி = ஜூலை-ஆகஸ்ட் ) கிருஷ்ண பக்ஷத்தில், சந்திரன் ரோஹிணியைக் கடக்கும் அந்த ஒரு நாளின் கண்காணிப்பின் மூலம், அடுத்த நான்கு மாதங்களுக்கான மழை அளவை நிர்ணயிக்கலாம். இதை வானிலை விஞ்ஞானிகள் எப்படி அணுகுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், முனிவர்கள் அந்த ஒரு நாளது 24 மணி நேர கண்காணிப்புக்கு, மிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இந்தக் கண்காணிப்பின் அம்சங்களை முதலில் நாரதர் பிருஹஸ்பதிக்குக் கொடுத்தார். அவரிடமிருந்து, கர்கர், பராசரர்,  கஷ்யபர்மயன்  மற்றும் பலர் பெற்றனர்.  இந்த தினத்தை விஞ்ஞான ரீதியாக கவனிப்பது பயனுள்ளது.


நகரத்தின் வட கிழக்கில் வேத யாகங்கள் செய்து  மூன்று நாட்கள் வணங்குவது முக்கிய  அம்சமாகும். மழை அளவு கணிக்கும் ஆர்வலர்களுக்கு, நான் இங்கு கவனிக்க வேண்டிய வானிலை விஷயங்களை மட்டும் கூறுகிறேன். ஆடி மாதத்தில், சூரியன் உதிப்பதற்கு முன்னால், ரோஹிணி கிழக்கில் உதிக்கும். அதே சமயம் தேய்பிறைச் சந்திரனும் தோன்றும். அந்த சூரிய உதயத்திலிருந்து, மறுநாள் சூரிய உதயம் வரை கண்காணிப்பு தொடரும். இதை மூன்று மணிகளான எட்டு பகுதிகளாக வகுத்துக் கொள்ளவேண்டும். சூரிய உதயத்திலிருந்து ஆரம்பிக்கும் ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு பக்ஷத்தை நிர்ணயிக்கும் (பக்ஷம் = 15 நாட்கள் = வளர் பிறை / தேய் பிறை). முதல் பகுதி ஆவணி மாதத்தில் ஆரம்பித்து கடைசி பகுதி கார்த்திகை  மாதத்தில் முடியும். அந்தக் காலங்களில்,    காற்று வீசும் திசையை கண்டறிய, ஒரு கொம்பில் துணியைக் கட்டிப் பறக்க விடுவார்கள்.  இன்று இதை விஞ்ஞானக் கருவிகளால் அறிகிறோம். ஆகையால், ரோஹிணி யோகத்தில் கூறிய துணி படபடக்கும் விவரங்களைச் சொல்லப் போவதில்லை.

ரோஹிணி தினத்தன்று, கீழ்க்கண்ட அம்சங்கள் ஏதாவது மூன்று மணி நேர பகுதியில்  இருக்குமானால், அதற்குத் தகுந்த பக்ஷத்தில் மழை அளவை எதிர்ப் பார்க்கலாம்.
  • மிக முக்கியமாக காற்று வீசுதல் கவனிக்க வேண்டும். காற்று மிக மெதுவாக வீசிக்கொண்டு இருக்க வேண்டும். கொந்தளிப்பாக இருக்கக் கூடாது. எந்த மூன்று மணிநேர பகுதியில் அந்த மாதிரி காற்று வீசுகிறதோ, அதற்குப் பொருத்தமாக ஆவணி மாதம் வளர்பிறையில் ஆரம்பித்து, கார்த்திகை மாதம் தேய்பிறை வரை எட்டுப் பக்ஷங்களில் ஒன்றில், நல்ல மழை பொழியும்.  (உ-ம்:- முதல் 3 மணி நேரத்தில் காற்று மெலிதாக, சுகமாக வீசினால், சொல்லப்பட்ட 8 பக்ஷங்களில் முதலாவதான ஆவணி வளர்பிறையில் நல்ல மழை இருக்கும். நான்காவது 3 மணி நேரத்தில், அதாவது மாலை 4 மணி முதல் 6 மணி வரை சுகமாகக் காற்று வீசினால், சொல்லப்பட்ட 8 பக்ஷங்களில் நான்காவதான புரட்டாசி தேய்பிறை முழுவதும் நல்ல மழை இருக்கும். இவாறு கணிக்க வேண்டும்)

  • மேகங்கள் இல்லாத நிர்மலமான ஆகாயம், சூரிய வெப்பம் அதிகம்.


  • நிர்மலமான இரவு நேர ஆகாயத்தில், நக்ஷத்திரங்கள் பிரகாசமாக சிமிட்டுதல்.

  • மேகங்கள் இருக்குமானால், அவை பெரிதாகவும், வெண்மையுடனும் இருக்க வேண்டும். அவற்றின் ஓரங்கள் சூரியஒளியைப்  பிரதிபலிக்க வேண்டும்.


  • அல்லது, மேகங்கள் பாம்பு போல் பிணைந்து இருக்கவேண்டும்.

  • அல்லது, மேகங்கள் பெரிய யானையைப் போலவும், பக்கவாட்டில், பெரிய பரிவாரங்களுடன் இருக்க வேண்டும்.

  • மேகங்கள் சிறியதாகவும், காற்றில் கரைந்து விடுகிற மாதிரியும், இருக்கக் கூடாது.

  • மேகங்கள் பலவித நிறங்களில் இருக்கலாம். 

  • அல்லது, மேகங்கள்  நீலத் தாமரைப் போன்றோ, அல்லது பீதாம்பரத்துடன் கூடிய விஷ்ணு போன்றோ, சூரிய உதயத்திற்கு முன்போ அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு பின்போ, தென்படலாம்.

  • கருமேகங்களும்,, வானவில்லும் தென்படலாம்; ஆனால், காற்று மெல்லியதாக வீச வேண்டும்.


ஒன்றோ அல்லது பலதோ இந்த அம்சங்கள் சந்திரன் ரோஹிணியைக் கடக்கும் நாளன்று இருக்க வேண்டும். இந்த அம்சங்கள் சந்திரன் ரோஹிணியைக் கடந்த நாளுக்கு அடுத்த மூன்று நாட்களும் தென்பட்டால்வாரி வழங்கும் மழைக் காலமாக இருக்கும். ரோஹிணி தினம் முடியும் அடுத்த நாள் உதய காலத்துக்கு முன்னால், சந்திரன், ரோஹிணிக்கு முன்னால், ரோஹிணிக்கு வடக்கில்  உதயமாக வேண்டும். அப்போது மழைக் காலம் மிகுதியாக வாரி வழங்கும்.

இன்னும் சில அம்சங்களை ரோஹிணி தினத்தன்று நாம் நோக்க வேண்டும்:
  • மேகங்கள் முதலில்  கிழக்கு அல்லது மேற்க்கிலிருந்தோ மட்டும் தோன்றினால், மழைப் பருவம் மிக நன்றாக இருக்கும். 

  • மேகங்கள் முதலில் வடக்கு, வடகிழக்கு அல்லது வடமேற்கிலோ தோன்றினால், அது நல்ல அடையாளம் அல்ல.  மழைக் காலத்தில் குறைவான மழை இருக்கும். 

  • மேகங்கள் முதலில், வேறு திசைகளிலிருந்து தோன்றினால், குறைந்த மழை கணிக்கப்படும். 

  • ரோஹிணி தினத்தன்று முழுமையும்மேகங்களே இல்லாமல், வெப்பமாக இருப்பது நன்று.  

  • அந்த தினத்தில், எரி நக்ஷத்திரங்கள், மின்னல், குமுறும் இடியோசை தென்பட்டால், வறண்ட மழைக் காலத்தை உணர்த்தும்.

இந்த ஆண்டு ரோஹிணி தினம் ஆகஸ்ட் 1-ம் தேதி வருகிறது. சந்திரன், சூரிய உதயத்திற்கு முன்பாகவே, வெள்ளிக் கிழமையன்று, ரோஹிணியைக் கடக்கிறது. ஆனால் கண்காணிப்பு சூரிய  உதயத்திலிருந்து தொடங்க வேண்டும். மறுநாள், சந்திரன், ரோஹிணி உதயமாவதற்கு முன்பேரோஹிணியைக் கடந்திருக்கும். இது நல்ல மழைக்கான ஒரு நல்ல அம்சம். அந்த நாளில், மேகங்களையும், காற்றையும் உற்று கவனிக்க வேண்டும்.


சுவாதி யோகம்:

இதை ஆனி, ஆடி மாதங்களில் கவனிக்க வேண்டும்.சுவாதியிலிருந்து ஆரம்பிக்கும் நான்கு நக்ஷத்திரங்களையும் இந்த மாதங்களில் கவனிக்க வேண்டும். பொதுவாக, சந்திரன், சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை நக்ஷத்திரங்களைக் கடக்கும்போது, வறண்ட காற்றும், புழுதிப் புயலும் இருக்கும்.  கர்போட்ட சமயத்திலும் (பகுதி 1) இந்த நான்கு  நக்ஷத்திரங்களின் நாட்களிலும் காற்று அதிகமாக இருக்கும். அந்த நாட்களில் மழை பொழிந்தால், மழைக் காலம் பொய்க்கும். 

இந்த இரண்டு மாதங்களில், சுவாதி தினம்  ஆனி மாதத்தில் காற்றுடனும், ஆடி மாதத்தில் மழையுடனும் இருக்க வேண்டும். இம்மாதிரி எதிரெதிரான கலவை இருந்தால், வாரிவழங்கும் மழைக் காலத்துக்கு உகந்தது. ஆடி மாதத்திலும் இந்த நான்கு நாட்கள் மட்டுமே மழை பெய்ய வேண்டும். இல்லையெனில், மழைக் காலம் முழுவதும் மிக சொற்ப மழையே இருக்கும். 

இந்த நாட்களின் விசித்திரத் தன்மையே சுவாதி முத்துக்கள் பற்றிய கதைகள் தோன்றக் காரணமாகும். புழுதிக் காற்றால் அடித்துச் செல்லும் தூறலே, ஆடி மாதத்தில் வரும் சுவாதி தினங்களின் சிறப்பு அம்சம். அந்தத் தினங்களில் மழைத் துளிகளை உள்வாங்கும் சிப்பிகளில் நல்முத்து உருவாகிறது. 

இந்த ஆண்டு,  ஆனி மாத  சுவாதி தினங்கள் மதியம் ஜூன் 19ம் தேதி ஆரம்பித்து, 23ந் தேதி சூரிய உதயத்திற்கு முன்னால் வரைக்கும் இருக்கின்றன. நல்ல மழைக் காலத்திற்கு இந்த நாட்களில் வறண்ட காற்று இருக்க வேண்டும்.  

ஆடி மாத சுவாதி தினங்கள் 16ந் தேதி ஜூலை மாதம் நடுநிசிக்கு முன்பு ஆரம்பித்து, ஜூலை 20ந் தேதி  மதியம் முடிகிறது. இந்த எல்லா நாட்களிலுமோ அல்லது ஒரு நாள் மட்டுமோ தூறல் அல்லது மழை இருக்க வேண்டும். 

ஆஷாதி யோகம்:

இது சந்திரமான ஆஷாட / ஆடி  மாதத்தில், சந்திரன் ஆஷாட (பூராடம் , உத்திராடம்) நக்ஷத்திரங்களைக் கடப்பதைப்  பற்றியது.  சந்திரன், பௌர்ணமியன்று உத்திராடம் நக்ஷத்திரத்தைக் கடக்கும்போது, கவனிக்க வேண்டும். ஆஷாதி யோகத்தின் அந்த நாளில் (பௌர்ணமி) சூரிய அஸ்தமனத்திற்குப் பின்பு, காற்று வடகிழக்கிளிருந்தோ, வடமேற்க்கிலிருந்தோ அல்லது கிழக்கிலிருந்தோ வீசினால், அது மழைக்காலம் வாரி வழங்கும் என்பதற்கான அடையாளம். (இந்த ஆண்டு  ஜூலை 22ம் தேதி)

ஆஷாட மாதம் பௌர்ணமிக்குப் பிறகு நான்காம் நாள் (சதுர்த்தி) மழை பெய்தால் வளமான மழை காலத்தைக் குறிக்கும். (இந்த ஆண்டு  ஜூலை 26 ம் தேதி)

இந்த மூன்று யோகங்களும் அதாவது ரோஹிணி யோகம், சுவாதி யோகம், ஆஷாதி யோகம், வானிலை கண்காணிப்புகளின் கடைசி கட்டமாக கருதப்படுகிறது. இவற்றைக் கொண்டுதான் வரப்போகும் மழைக் காலத்தில் மழை நன்கு பெய்யுமா என்று ஊகிக்க முடியும். பிருஹத் சம்ஹிதையில் இந்த மூன்று யோகங்களைப் பற்றி மேலும் பல அம்சங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு, மழையின் அளவு, மழை பரப்பளவு, எவ்வளவு நாள் தொடர்ச்சியான மழை போன்ற விவரங்களை  முன்கூட்டியே அனுமானிக்க முடியும். கடந்த ஆண்டுகளுக்கான இந்த விவரங்களையும், வானிலை மையத்திலிருந்து கிடைக்கும் மழை பெய்த விவரங்களையும் தீர அலசிப் பார்த்தால் வருங்காலத்திற்கு ஒரு செம்மைப் படுத்தப்பட்ட தகவல் அடிப்படையை  உருவாக்கலாம்.  அவை மிக அதிகமாக இருப்பதால் அவற்றை  நான்  இங்கு தரவில்லை. ஆர்வமுள்ளவர்கள் வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதையைப் பார்க்கவும்.


வராஹமிஹிரரின் இந்தப் புத்தகத்தின் ஒரு முக்கிய கருத்து என்னவென்றால் அவருக்கு இந்த அறிவைக் கொடுத்தது பண்டைய முனிவர்களே என்கிறார். இதனால் நமக்குத் தெரிவது, அவருடைய காலத்தில், அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்னால், இந்த அறிவு பரவி இருந்தது. அவர்களுக்கு அந்த அறிவை அவர்களுக்கு முன்னால் இருந்த முனிவர்கள் அருளினார்கள் என்றால், இந்த அறிவின் தொன்மையை நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த அறிவைப் பெற பல்லாயிரம் ஆண்டுகள் அவர்கள் வானிலை நிகழ்வுகளைக் குறித்துக் கொண்டிருந்து ஒரு நுண்ணிய அடிப்படையை வகுத்திருக்க வேண்டும். அதை வைத்துத் தான் இந்த கட்டுரையில் கூறிய பல விவரங்களை சொல்ல முடிந்தது. 

அது மட்டுமல்ல. அந்தக் காலங்களில், ஒரு சாதாரண மனிதன் கூட பலவிதமான தகவல்களையும், மாதந்தோறும் ஏற்ப்படும் கண்காணிப்புகளையும் அறிந்து வைத்து இருந்தான். அவற்றை இந்தக் கட்டுரையின் அடுத்த பகுதியான கடைசிப் பகுதியில் பார்க்கலாம்.

(தொடரும்)  



4 comments:

kalai said...

In India and Sri Lanka we have tropical climate. Can I use tropical chart(without ayanamsa) to predict rainfall?. Tamil calendar is sidereal. Are you using sidereal chart?

Jayasree Saranathan said...

Use sidereal. The predictions are Vedic astrology based. So use Vedic astrology software like Jhora with the settings to lahiri ayanamsa or use Srinivasan pancanga.

Check my recent article in my weather blog on how to predict using the pancanga and the software. You can see the link to my weather blog in the side bar.

kalai said...

ஒரு பந்தியில் ரோகினி நாள் ashada மாதத்தில் என குறிப்பிட்டுள்ளிர்கள் என்னொரு பந்தியில் ரோகினி நாள் jyeshta மாதத்தில் என குறிப்பிட்டுள்ளிர்கள் எந்த மாதத்து ரோகினி நாள்?

Jayasree Saranathan said...

ரோஹிணி நாள் ஆஷாட மாதம் என்பதே சரி. ஆஷாட மாதம், ஆடி என்று எடுத்துக்கொள்ளலாம். ஆடி மாதம் தேய்பிறை ரோஹிணி. சில சமயம் இரண்டு ரோஹிணி வரும்போது, முதல் ரோஹிணியை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் வானிலை ஆர்வலர் என்றால் என்னுடைய வானிலை வலைத் தளத்தைப் படிக்கவும். இங்கு எழுதியவற்றையெல்லாம், சரி பார்த்து, சீர் செய்து வருகிறேன்.

https://jayasreeweatherblog.wordpress.com/