Friday, September 22, 2023

உடன் கட்டை ஏறுதல் தொல்காப்பியத்தில் உள்ளதே? 'தொல்காப்பிய ஒழிப்பு மாநாடு' நடத்துவார்களா?

சனாதன தமிழர் சமங்கமத்தில் நேரமின்மை காரணமாக நான் சொல்ல வந்த விவரங்கள் அனைத்தையும் சொல்ல முடியவில்லை என்று பலரும் வருத்தப்பட்டு, அவற்றைக் கட்டுரையாக எழுதுமாறு கேட்டுக் கொண்டனர். அதன்படி இந்தக் கட்டுரையில் 

# சனாதனம் என்றால் என்ன? 

# உடன்கட்டை ஏறுதல் சனாதன தர்மத்தின் கொள்கையா? 

என்னும் இரு கேள்விகளை எடுத்துக் கொண்டுள்ளேன். ஜாதி குறித்து நான் பேசியதை தனி கட்டுரையாகக் கொடுக்கிறேன்.



சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று அறை கூவல் விடுக்கும் உதயநிதி உள்ளிட்ட திமுகவினர் அப்படி எதைத்தான் ஒழிக்க நினைக்கிறார்கள் என்று பார்த்தால் விதவைகள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைச் சொல்கிறார்கள். இந்த சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு வந்த எதிர்ப்பைப் பார்த்தோ என்னவோ, அமைச்சர் சேகர் பாபுவும், ‘நாங்கள் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களை எதிர்க்கவில்லை; அந்த சனாதன தர்மக் கொள்கைகளான உடன் கட்டை, குலக்கல்வி, தீண்டாமை முதலியவற்றைத்தான் ஒழிக்க விரும்புகிறோம்,’ என்றார்.

இவையெல்லாம் சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்று யார் சொன்னது? இவர்களுக்கு சனாதன தர்மம் என்றால் என்னவென்று தெரியுமா? என்றென்றைக்கும் சாஸ்வதமாக இருக்கும் கொள்கைகள் மற்றும் வழிமுறைகள்தான்  சனாதன தர்மம் எனப்படும். எந்த வழிமுறைகள் மற்றும் வழக்கங்கள் அனைவருக்கும் பொருந்துமோ அவையே சனாதனக் கொள்கைகள்.

உதாரணமாக, நியூடனது மூன்றாவது விதியான, ஒவ்வொரு செயலுக்கும், எதிர் வினை உண்டு என்பது என்றென்றும் இருப்பது. அதை அழிக்க முடியாது. மனித வாழ்க்கையில் அதன் பதிப்பாக இருப்பது ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பதே. அதை மறுக்கவோ, அழிக்கவோ இயலாது, அதுவே கர்ம வினைக் கருத்தின் அடிப்படையாகும். ஒரு செயலைச் செய்தால், கண்டிப்பாக அதற்கான மறு வினை நம்மை அடைந்தே தீரும். இந்த கர்மவினைக் கருத்து அனைவருக்கும் பொருந்துவது. ஹிந்துவாக இருந்தாலும், பிற மதத்தவராக இருந்தாலும், பல்லாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களாக இருந்தாலும், இனி வரப்போகும் காலத்தில் வாழப்போகிறவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் பொருந்தும். எனவே கர்ம வினை என்பது சனாதன தர்மக் கருத்து.

அந்த மறுவினையை அனுபவிப்பதற்குள், இந்தப் பிறவி முடிந்து விட்டாலும், அதற்காகவே இன்னொரு பிறவி எடுத்து அந்த வினைப்பயனை  அனுபவிக்க வேண்டும். எனவே மறு பிறவி என்பதும் அனைவருக்கும் பொருந்துவது. அதனால் அதுவும் சனாதனதர்மக் கருத்து.

அப்படிச் செய்யும் செயல்கள் நற்செயல்களாக இருந்தால் நல்ல எதிர் வினைகள் கிடைக்கும். அதைப் புண்ணியம் என்கிறோம். தீய செயல்களாக இருந்தால் கஷ்டம் ஏற்படும், அதைப் பாவம் என்கிறோம். எனவே, பாவம், புண்ணியம் என்பதும் சனாதனமானவைதான். அழிக்க இயலாதவை. எல்லோருக்கும் பொருந்துபவை. ஒருவர் அவற்றை நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவை என்றென்றும் இருக்கும். அழிக்க முடியாததாக இருக்கும்.

இப்படிப்பட்ட சனாதனக் கருத்து தமிழர் மரபில் ஊறி இருந்தது என்பதை விளக்கவும், அதிலும் குறிப்பாக உடன் கட்டை ஏறுதல் என்பது சனாதனக் கருத்துதானா என்பதைப் பற்றியும் எழுதுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

கர்மவினை அழிக்க இயலாததா?

நாம் செய்யும் செயலுக்கு எதிர் வினை ஏற்படும் என்பதால் கர்மவினை என்பதே ஒரு கொடிய போக்கு (fatalistic) என்று நினைத்து விடவேண்டாம். அந்த எதிர்வினையைக் குறைக்க வழி கூறுவதே சனாதன தர்மத்தின் ஒரு கூறாகும். நன்னடத்தை, நல் வழியைப் பின்பற்றுதல் என நமக்குக் கூறப்படும் பல நீதிக் கருத்துகளும், அனைவருக்கும் பொருந்தும் சனாதன தர்மமே ஆகும். அறம் செய விரும்பு, ஆறுவது சினம், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது போன்ற அனைத்தும் எந்தக் காலத்துக்கும், யாவருக்கும் பொருந்தும் என்பதால் அவற்றைப் போதிக்கும் தர்மம் சனாதன தர்மம் ஆகும். அந்த வகையில் பதினெண்கணக்கு நூல்களில் பலவும், திருக்குறளும் சனாதன தர்மத்தையே போதிக்கின்றன.

உதாரணமாக, பிறன் மனை நோக்காது இருத்தல் சனாதன தர்மம் என்று இராமன், வாலியிடம் சொல்கிறான் (வா. இரா. 4-18-18). அதையே திருவள்ளுவரும் சொல்கிறார். அது உலகின் எந்தப் பகுதியில் வாழும் மனிதனுக்கும் பொருந்தும். ஆனால், தமிழ்ச் சங்க நூல்களில் பரத்தையரைத் தேடி மக்கள் போனார்கள் என்று வந்துள்ளதே என்று கேட்பீர்கள் என்றால், அது மனித இயல்பைக் காட்டுகிறது. அதனால் கர்ம வினை ஏற்படுவது நிச்சயம். அதைக் காட்டும் விதமாக, ‘தெய்வம் அஞ்சல்’ என்னும் மெய்ப்பாட்டியல் சூத்திரம், தொல்காப்பியத்தில் இருக்கிறது (பொருள்: 268)

இதற்குக் கொடுக்கப்பட்டுள்ள பல பொருள்களுள் ஒன்று, தலைவியிடம் உன்னைப் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்த தலைவன், பரத்தையர் வீட்டில் இருப்பதை அறிந்த தலைவி, அவன் பொய்யாகச் சூளுரைத்ததால் தெய்வம் அவனை என்ன செய்யுமோ என்று அஞ்சுவாளாம். இதைக் காட்டும் விதமாக கலித்தொகைப் பாடல் 75 அமைந்திருக்கிறது. எனவே பரத்தை பின் சென்றாலும், மனைவியைத்தவிர வேறு பெண்ணை நாடினாலும், அதற்கு எதிர் வினையாகக் கர்ம வினை ஏற்படும் என்பதையே தொல்காப்பியமும் கூறுகிறது. ஆனால் பரத்தையர் பின் செல்வதை அது நியாயப்படுத்தவில்லை. அப்படிச் செல்வது மனித இயல்பு. அந்த இயல்பை மனிதன் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே சனாதன தர்மக் கருத்து.

நல்ல இயல்புகளை மனிதன் வளர்த்துக் கொள்ள, வளர்த்துக் கொள்ள அவன் அனுபவிக்க வேண்டிய தீய வினைகள் மட்டுப்படும். அதற்கு உதாரணமாக அனுமனைச் சொல்லலாம். சீதையைத் தேடி அவன் இலங்கைக்குச் சென்ற போது, இந்திரஜித் அவனை பிரம்மாஸ்த்திரத்தால் கட்டி விட்டான். அனுமனால் தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. அப்பொழுது ஒரு பழைய நினைவு அவனுக்கு வருகிறது. அவன் பிரம்மாஸ்த்திரத்தில் கட்டுப்பட வேண்டி இருக்கும் என்றும், ஆனால் அது ஒரு முஹூர்த்த காலம் (48 நிமிடங்கள்) மட்டுமே இருக்கும் என்றும் பிரம்மா வரம் கொடுத்தது நினைவுக்கு வந்தது. அதாவது பிரம்மாஸ்திரத்தில் கட்டுப்படும் வண்ணம் அனுமனுக்கும் ஏதோ ஒரு முன்வினை இருந்திருக்கிறது. அவன் செய்த செயல்கள், தெய்வ நம்பிக்கை காரணமாக, அதன் தீவிரம் குறைந்து ஒரு முஹூர்த்த காலம் மட்டுமே அவன் அவதிப்பட நேரிட்டது.

இதன் மூலம், கர்ம வினை மாற்றத்துக்குரியது என்று தெரிகிறது. அதற்கு உதவியாக இருப்பது ‘தெய்வம்’. சனாதன தர்மத்தில் இங்குதான் தெய்வம் வருகிறது. மற்ற மதங்களில் தெய்வம் எங்கோ தொலைவில், வெளியில் இருக்கிறது. ஆனால் சனாதன தர்மம் தெய்வம் உனக்குள்ளேயே இருக்கிறது என்கிறது. அதன் மூலமாக, ஒருவன் அதனை அடையலாம். God is both the means and an end என்பதே சனாதனக் கொள்கை. அந்தத் தெய்வம் தனக்கு சிலை வைத்து வழிபாடு செய் என்று கேட்கவில்லை. நாம்தான் சிலை வைத்து வழிபடுகிறோம். நமக்குத்தான் தெய்வம் தேவை. அதனால் தெய்வம் யார், எது என்று நமக்குத் தெளிவு வேண்டும் என்பாள் கண்ணகி. அந்தத் தெய்வம் எங்கேயோ இல்லை. மனிதனே தெய்வமாகலாம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று வள்ளுவர் இதனையே கூறுகிறார்.

அந்த வழியில் தெய்வமானவள் கண்ணகி! அவள் வஞ்சியில் ஒரு கோயிலில் தெய்வமாக வழிபடப்பட்ட போது, அவளை வணங்க, கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்த மணிமேகலை வருகிறாள். அப்பொழுது கண்ணகி அவளுக்கு முன் தோன்றி அவளுடன் பேசுவதாக மணிமேகலை கூறுகிறது. அப்பொழுது கண்ணகி சொல்கிறாள்: நான் செய்த நல்வினையால் நான் இப்பொழுது தெய்வமாக இருக்கிறேன். ஆனால் இது என்றுமே நிலைத்திருக்காது. எனது நல்வினையின் பலன் முடிந்ததும், நான் மீண்டும் பூமியில் பிறக்க வேண்டும். ஏனென்றால், என் கணவன் கொல்லப்பட்டான் என்ற கோபத்தில் நான் மதுரையை எரித்தபோது, பலருக்கும் தீயினால் துன்பம் நேரிட்டது. அதற்கு நானல்லவோ காரணம். அதற்காக நான் பிறந்து அந்த வினைப்பயனை அனுபவிக்க வேண்டும் என்றாள் (மணிமேகலை: வஞ்சிமாநகர் புக்கக்காதை: 35-39)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பதும், ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்பது சிலப்பதிகாரம் காட்டும் கருத்துக்களே. அதே நேரம் மனிதனே தெய்வமாகலாம் என்பதையும் காட்டுகிறது. ஆனால் அந்த நிலையைத் தரும் புண்ணியம் தீரும் வரைதான் என்பதை பகவத் கீதையும் கூறுகிறது. ஆனால் பாவ, புண்ணியங்களைத் தாண்டி மனிதன் செல்லும் போது, மீண்டும் பிறவாத தெய்வ நிலையை அடைகிறான்.

இங்கு நாம் பார்க்க வேண்டுவது, தெய்வ நிலையை அடைந்தாலும், மீண்டும் கண்ணகி பூமியில் பிறக்க நேரிடும் என்பதற்கான காரணம். அவள் கணவன் கொலயுண்டு அவளுக்கு அநீதி நிகழ்ந்தது என்பதற்காக இயற்கையே மதுரைக்கு எரியூட்டவில்லை. அவளது வஞ்சினத்தின் காரணமாகவும், தான் பத்தினியே என்று நிரூபிப்பதற்காகவும் அவள் சபித்து எரியூட்டினாள். அவள் கொண்ட சினம், பலரும் இறக்கவும், துன்பப்படவும் காரணமாக இருக்கவே, அதற்குப் பிரதிபலனாக அவள் கர்ம வினையை அனுபவிக்க வேண்டும்.

மதுரையை எரித்ததற்கு அவளுக்குக் கர்மவினை வரும் என்றால், அப்பாவியான விதவையை, அவள் கணவன் இறந்தபின் அவன் உடலுக்கு எரியூட்டும் போது, அவளையும் சேர்த்து உயிருடன் எரித்தல், அதாவது உடன் கட்டை ஏறச் சொல்லுதல் எப்பேற்பட்ட பாவச் செயல்? இதை சனாதன தர்மம் எப்படி அங்கீகரிக்கலாம்?

உடன்கட்டை ஏறுதல் சனாதன தர்மம் அன்று

திமுகவினரது மிகப் பெரிய குற்றச்சாட்டு இந்த உடன் கட்டை விவரம்தான். இதற்காக ஏன் சனாதன தர்மத்தைக் குறை கூறுகிறீர்கள்? குறை கூற வேண்டுமென்றால், தொல்காப்பியத்தைக் குறை கூறுங்கள். அதில்தான், கையறு நிலை என்று விதவைகளது நிலை குறித்து சூத்திரமே இருக்கிறது. புறத்திணை இயல் 77-இல்

“நல்லோள் கணவனோடு நனி அழல் புகீஇச்

சொல்லிடை இட்ட மாலை நிலை”

என்று கணவனை எரிக்கும் தீயில் தானும் புகுவாள் நல்லோள் என்று கணவனை இழந்த பெண் செய்யும் செயலாக ஏன் சொல்லியிருக்கிறது? மனைவி அல்லது பெண் என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. நல்லோள் என்று சொல்வதன் மூலம், அப்படிச் செய்பவள்தான் நல்லோள் என்று நினைக்கப்படுவாள் என்று எண்ணும் வண்ணம் இருக்கிறதே என்று கேட்கலாமே? இது உடன் கட்டை ஏறுவதை ஊக்குவிப்பதாக இருக்கிறது என்று சொல்லலாமே?

இதுவே சனாதன தர்மம் என்றால், இது எல்லோராலும் பின்பற்றப்பட்டிருக்க வேண்டுமே? அப்படி நிகழவில்லையே? கண்ணகி உடன்கட்டை ஏறினாளா? மாதவி உடன் கட்டை ஏறினாளா?

கண்ணகி உடன் கட்டை ஏறுவதைப் பற்றிப் பேசுகிறாள். கோவலன் கொலை செய்யப்பட்டு விட்டான் என்று மாதரி சொன்னதும், கண்ணகி அழுது புலம்புகிறாள். அப்பொழுது சொல்கிறாள்: கணவன் இறந்ததும் அவனைத் தீண்டும் நெருப்பில் புகாமலும், துன்பம் தரும் கைம்மை நோன்பை நோற்காமலும், ஊரார் தூற்ற, அரசன் செய்த பிழைக்கு நானல்லவா அவல வாழ்க்கை வாழ வேண்டியிருக்கிறது என்கிறாள் (சிலப்பதிகாரம்: துன்ப மாலை: 36 – 40)

இப்படிப்பட்ட பேச்சை மணிமேகலையிலும், மாதவி பேசுகிறாள். மணிமேகலை நூலின் இரண்டாவது காதையான ஊர் அலர் உரைத்த காதையில், ஊரார் மாதவியைப் பழித்துப் பேசுகின்றனர். எதற்காக? இந்திரவிழா வந்து விட்டது. அதில் முன்பு மாதவி நடனம் ஆடினாள். நாடகக் கணிகையான அவள், கோவலன் இறந்த பிறகு, துறவறம் மேற்கொண்டு விட்டாள். தன் மகளான மணிமேகலையையும் தனது குலத் தொழிலில் ஈடுபடுத்தி நடனக் கணிகையாக வளர்க்காமல், அவளையும் துறவறத்துக்கு தயார் செய்து கொண்டிருக்கிறாள் என்று ஊரார் தூற்றுகின்றனர். தனது தொழிலை விட்டமைக்காக அவள் நாண வேண்டும் என்று பழிச் சொல் சொல்கின்றனர். அந்தப் பழிச் சொற்களை, மாதவியின் தாயான சித்ராபதியால் தாங்க முடியவில்லை. அவள் மாதவியின் தோழியான வயந்தமாலையை அழைத்து ஊரார் சொல்லும் பழிச் சொற்களை மாதவியிடம் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறாள்.

வயந்தமாலை மாதவியை அடைந்து விவரத்தைச் சொல்கிறாள். அதற்கு மாதவி மூன்று விவரங்களைச் சொல்லி, தான் ஏன் நாண வேண்டும் என்று கேட்கிறாள்.

முதல் விவரமாகச் சொல்கிறாள்: கோவலன் இறந்தவுடனேயே, தானும் இறந்திருக்க வேண்டும். ஆனால் தன் உயிர் போகவில்லையே என்று தான் நாணியிருக்க வேண்டும் என்றாள்.

இரண்டாவதாக, கோவலன் உடலை நெருப்பு தீண்டியபோது, தானும் அவனை விட்டுப் பிரிய மாட்டேன் என்று அந்த நெருப்பில் விழுந்து மாயவில்லையே என்று தான் நாண வேண்டும் என்கிறாள். அதாவது தான் உடன் கட்டை ஏறாததற்கு நாண வேண்டும் என்கிறாள்.

மூன்றாவதாக, அவனை அடுத்த பிறவியிலாவது அடைய வேண்டும் என்று கடுமையான கைம்மை நோன்பு இருந்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லையே என்று தான் நாண வேண்டும் என்கிறாள்.

இதற்கெல்லாம் நாணாமல், நாடகக் கணிகையாக குலத்தொழிலைச் செய்யவில்லையே என்று நாணப்படச் சொல்கிறாயே என்று கேட்கிறாள்.

இதன் மூலம் தெரிவது என்னவென்றால், உடன்கட்டை ஏறுவதாக இருக்கட்டும், குலத் தொழிலச் செய்வதாக இருக்கட்டும், அது அவரவர் விருப்பம். அது சனாதனமானது என்றால், அனைவரும் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. ஒரு மக்கள் கூட்டத்தில் இருந்து வந்த கருத்துக்களை ஒட்டியே இவை எழுந்திருக்கின்றன.

சங்க காலத்திலேயே ஒரு அரசி உடன்கட்டை ஏறியிருக்கிறாள். பூதப் பாண்டியன் என்னும் அரசன் இறந்து விட்டான். அவன் மனைவி – சற்று முதிர்ந்த வயதினள்தான் – தானும் அவனுடன் தீயில் இணைவேன் என்று பிடிவாதம் செய்கிறாள். அவையோர், மக்களெல்லாம் தடுத்தனர். எவ்வளவோ சமாதானங்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால் அவள் கேட்கவேயில்லை. அவள் உடன் கட்டை ஏறின செய்தி புற நானூறு 246, 247 இல் வருகிறது.

246 ஆம் செய்யுளில் அந்தப் பாண்டிய அரசி பெருங்கோப்பெண்டு சொல்லும் ஒரு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவள் சொல்கிறாள். நான் உடன்கட்டை ஏறவில்லை என்றால், என் கணவனுக்காக கைம்மை நோன்பு இருக்க வேண்டும். வேகாத அரிசியில் வெள்ளை எள்ளை அரைத்த விழுதைக் கலந்து புளியை ஊற்றி உண்ண வேண்டும். பருக்கைக் கற்களால் ஆன படுக்கையில் படுக்க வேண்டும். அந்த அவதியைப் பொறுத்துக் கொள்வதற்கு பதில், தீயில் விழுந்து செத்து விடலாம் என்கிறாள். கைம்மை நோன்பு என்பது இதுதான். இதைத்தான் கண்ணகியும் சொன்னாள். மாதவியும் சொன்னாள். இவ்வாறு செய்ய வேண்டும் என்று யார் சொன்னார்கள் என்று பார்த்தால், தொல்காப்பியம் சொன்னதே, ‘நல்லோள்’ என்ற அந்தப் பெயரும், பத்தினி என்ற பெருமையும் மக்கள் தர வேண்டுமென்பதற்காக, பெண்கள் இப்படிப்பட்ட முடிவை எடுத்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த விதமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தொல்காப்பியம் ஒரு விதியாகச் சொல்லவில்லை. இவ்வாறும் பெண்கள் இருந்தனர் என்று சிலர் இருந்த நிலையைச் சொல்கிறது. இந்த நிலைமைக்குக் கைம்மை நோன்புதான் காரணம் என்றால், மாதவியின் கூற்றுப்படி, அந்த நோன்பை, இறந்து போன தனது கணவனே அடுத்த பிறவியில் தனக்குக் கணவனாக வர வேண்டும் என்பதற்காகச் செய்வார்கள் என்று சொல்வதால், ஒரு மக்கள் கூட்டத்தில், ஒரு காலத்தில் இருந்த கருத்து அது என்று தெரிகிறது.

பெண் மட்டுமல்ல, ஆணும் இப்படியெல்லாம் சிந்தித்திருக்கின்றனர். சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, தனது மனைவி இறந்தபோது, தனது மனைவி தீயில் மறைந்து போனாள்; நான் மட்டும் உயிரோடு இருக்கிறேனே என்று புலம்புவது புறநானூறு 245 ஆம் பாடலில் காணப்படுகிறது. அவன் புலம்பினாலும், உயிரை விடவில்லை. பெண்களைப் பொறுத்தமட்டில், உணர்ச்சி வயப்பட்டுவிடுகிறார்கள். அவர்கள் உடன் கட்டை ஏறினது தற்கொலைக்குச் சமமானதே. அதைத் தடுக்க அவர்களுக்கு உளவியலாக ஆறுதல் சொல்லி தடுக்க வேண்டும். அதைச் சிறப்பித்து இருக்கக்கூடாது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் தற்கொலை செய்து கொண்டால், அதற்கு நீட் தேர்வையா குற்றம் சொல்ல முடியும். தோல்வியைத் தாங்கிக் கொள்ளமுடியாத மனநிலையை மாற்ற உதவ வேண்டும் என்கிறோம் அல்லவா? அது போலத்தான் அன்றைய பெண்ணுக்குத் தாங்கும் மனோசக்தியை அளித்திருக்க வேண்டும். உடன்கட்டை ஏறுவதைத் தடுக்க ஆங்கிலேய அரசு சட்டம் இயற்றியபோது, அவ்வாறுதான் செய்தனர் என்று சான்றுகள் இருக்கின்றன. எங்கேனும் யாரேனும் உடன்கட்டை ஏறுவதாக செய்தி வந்தால், உடனேயே அங்கு சென்று அந்தப் பெண்ணுக்கு உளவியல் மாற்றம் செய்ய ஆலோசகர்கள் அனுப்பப்பட்டனர். தென் கொங்கண் பகுதியில் வைஜாத்ரூக் (Vizadroog) என்னுமிடத்தில் ஒரு பெண் உடன் கட்டை ஏறப்போவதைக் கேள்விப்பட்டு, அந்தப் பகுதியின் நீதிபதி ஒருவர், பார்ப்பனரை அனுப்பி, அவளது மனதை மாற்றுமாறு கேட்டுக் கொண்டார். அவரும் ஆத்மஞானம் பற்றிப் பேசி மனதை மாற்றி உடன்கட்டை ஏறும் எண்ணத்தைத் தடுத்தார். பார்ப்பனர் உடன்கட்டை ஏறுவதைத் தடுத்திருக்கின்றனர். உடன்கட்டையை ஊக்குவிக்கவில்லை.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், யாரும் எந்தப் பெண்ணையும் உடன்கட்டை ஏறுமாறு வற்புறுத்தியதாக வரலாறு கிடையாது. சனாதன தர்மமும் அவ்வாறு சொல்லவில்லை. ஆனால் அப்படித் தீப்பாய்பவளை நல்லோள் என்று தொல்காப்பியம் சொல்வதைப் பார்த்தால், அந்தச் செயலை சிலாகித்துப் பேசிகிறாற்போல இருக்கிறது. அதற்காக, உதயநிதி உள்ளிட்ட திமுகவினர் தொல்காப்பிய ஒழிப்பு மாநாடு நடத்துவார்களா? தொல்காப்பியத்தில் ஏன் அப்படி ஒரு வரி வருகிறது? இதை எப்படி சனாதன தர்மம் காட்டும் வழி என்று சொல்லலாம்? சனாதன தர்மம் என்றென்றும், எல்லோருக்கும் பொருந்துவதாகத்தானே இருந்திருக்கும்? சனாதன தர்மம் காட்டாத ஒன்றை, எப்படி சனாதன தர்மம் கொண்டு வந்த விதிமுறை என்று சொல்ல முடியும்? உடன்கட்டை என்பது சனாதன தர்மம் வலியுறுத்திய செயல் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருவது தவறு என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

 

 

 

1 comment:

Aruna said...

Very good one Madam....