The following is Annexure I of my book in Tamil "Ramanuja Itihasam'. This has additional inputs than the one given in the English edition. Request non-Tamil readers to google translate this and share.
***
இடங்கை- வலங்கையிலிருந்து ஆரம்பித்த ஜாதிச் சண்டைகள்
இடங்கை மற்றும் வலங்கை என்ற பெயருடைய இரண்டு வகுப்புகளைச்
சேர்ந்த மக்கள், தங்களுக்குள் எண்ணற்ற ஜாதிகளைக் (பிரிவுகளை) கொண்டிருந்தனர். இவர்கள்
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்தவர்கள். முக்கியமாக தமிழ்நாடு, மைஸூர் மற்றும்
கன்னடப் பகுதிகளில் காணப்பட்டவர்கள். அவர்களின் தலைமையிடமான காஞ்சியில், அவர்கள்
எப்பொழுதும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டே இருந்தனர். இது பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து
வந்தது. கடைசி முறையாக இத்தகைய சண்டைகள் நடந்ததாக
அறியப்பட்டது 19-ஆம் நூற்றாண்டில் தான். அதற்குப்பின் இடங்கை, வலங்கை என்ற அவர்களுடைய
பெயர்கள் மறைந்து விட்டதற்கான காரணம், நவீன இந்தியாவில் ஏற்பட்ட கால மாறுதல் என்று
கூறலாம். அப்பொழுது தனித்தனி ஜாதிகள் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டன; பல ஜாதிகள் சேர்ந்த
கூட்டமைப்புகள் அல்ல. இதை இடங்கை மற்றும் வலங்கை மக்களோடு இணைத்துப் பேசப்படும் ஜாதிகளின்
குழுக்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
பதினெட்டாம் நூற்றாண்டில் மைஸூருக்கு வருகை தந்த புக்கானன், இடங்கை (இடது கை) மற்றும் வலங்கை (வலது கை) பிரிவுகளைச்
சேர்ந்தவை என்று பின்வரும் ஜாதிகளின் பட்டியலைக் குறிப்பிடுகிறார்.
"பாஞ்சாலர்கள்,
பேரிச்செட்டி வணிகர்கள், தேவாங்கர்
(நெசவாளர்களின் ஒரு குலத்தவர்), ஹேகனிகாரு (ஆலையில் எருதுகளைப் பூட்டி உபயோகப்படுத்துபவர்கள்)
பலிவான்லு (கர்நாடக மாநிலத்தைச் சேராத இரண்டு வகையான விவசாயிகள்), பயிதரு (வேடர்கள்),
மாடிகரு (தோல் பதனிடுபவர்கள் அல்லது செருப்புத் தைப்பவர்கள்), போன்றோர் இடங்கைப் பிரிவைச்
சேர்ந்தவர்கள். பாஞ்சாலர்கள், இந்தக் குழுக்களை வழிநடத்துபவர்கள். (வலங்கை – இடங்கை
ஆகிய) இரண்டு பிரிவுகளுக்கிடையே சண்டை சச்சரவு ஏற்படும்போது மாடிகரு
பிரிவினர் முன்னணியில் நின்று சண்டை போடுவார்கள்.”
பாஞ்சாலர் என்பவர்கள், ஐந்துவித தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள்.
மரம், பொன், இரும்பு, பித்தளை, மண் என்பவற்றில் வேலை செய்யும், தச்சர், பொற்கொல்லர்,
கொல்லர், பித்தளை பாண்டம் செய்பவர், கொத்தனார் என்னும் இந்த ஐந்து பிரிவினர் தாங்கள்
விஶ்வகர்மனின் வழிவந்த விஶ்வ ப்ராம்மணர்கள் என்றும் அழைத்துக் கொண்டனர். இவர்கள் பூணூல்
அணிபவர்கள். ஆச்சாரியர் என்ற பெயரையும் கொண்டிருந்தார்கள். இடங்கைப் பிரிவுகளிடயே இவர்களது
செல்வாக்கு அதிகம்.
வலங்கைப் பிரிவு "பலவிதமான தொழில் செய்யும் பானாஜிகரு,
ஓடிகரு (சூத்திர ஜாதியைச் சேர்ந்த விவசாயிகள், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்),
ஜோதிஃபனா (ஆலையில் ஒரு எருமையை மட்டும் உபயோகப்படுத்தி
எண்ணெய் தயாரிப்பவர்கள்), ரங்கரு (வண்ணம் தீட்டுபவர்கள் மற்றும் தையலாளர்கள்), லாடரு,
குஜராத்தி" போன்றோரைக் கொண்டிருந்தது என்று புக்கானன் கூறுகிறார்.
ப்ராமணர்கள்,
க்ஷத்ரியர்கள் மற்றும் சில வைஶ்ய குலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இரண்டு பிரிவுகளிலும்
சேரவில்லை என்றும் புக்கானன் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ச் சங்க நூல்களில் காணப்படும்
ஜாதிப் பெயர்களை வைத்துப் பார்க்கும் பொழுது இது ஒரு முக்கியமான கருத்தாகும். புறநானூறு
(ஸமுதாயத்தைப் பற்றிய தமிழ்ச் சங்கப் பாடல்களின் தொகுப்பு) என்ற நூலில் இடம்பெறும்
ஜாதிப் பெயர்களின் (குடிப் பெயர்கள்) வரிசையைக் கொண்ட பட்டியல், ப்ராமணர்கள் க்ஷத்ரியர்கள்
மற்றும் வைஶ்யர்கள் ஆகியோர்களின் பெயர்களையும் கொண்டிருக்கிறது. ஆனால் 1914-ஆம் ஆண்டில்
எம். ஸ்ரீனிவாச ஐயங்காரால் வரிசைப்படுத்தப்பட்ட இடங்கை மற்றும் வலங்கை ஜாதிகளின் பட்டியலில்
இவை காணப்படவில்லை. ஏனெனில், இடங்கை, வலங்கை என்னும் பெயர்கள், மற்றும் பிரிவுகள் சங்க
காலத்துக்குப் பிறகுதான், அதாவது கடந்த 2000 ஆண்டுகளுக்குள் தான் உருவாயின.
மேலும், புக்கானன் கூறுகிறார்: வலங்கைப் பிரிவினர், திருமணப்பந்தலில்
12 தூண்கள் வைத்துக் கொள்ளலாம். குதிரை மீது சவாரி செய்யலாம். ஹனுமான் படம் வரையப்பட்ட
கொடியைத் தாங்கிச் செல்லலாம். ஆனால் இவை எதுவும் இடங்கைப் பிரிவினர் செய்யக்கூடாது.
மீறினால், அவர்களுடன் சண்டை ஏற்படும். ஆனால் இடங்கைப் பிரிவினர், இவற்றைச் செய்ய காஞ்சியுறை
காளி தேவி தங்களுக்கு உரிமை கொடுத்துள்ளதாகக் கூறி இவற்றைச் செய்வர். அன்றைய
காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஜாதியினரும், தங்களுக்கென தனிக் கொடி வைத்திருந்தனர்.
பொதுவாக விவசாயம் சார்ந்தவர்கள் வலங்கைப் பிரிவிலும், கைத்தொழில்
செய்தவர்கள் இடங்கைப் பிரிவிலும் இருந்தனர். வெள்ளாளர் வலங்கைப் பிரிவிலும், கம்மாளர்
இடங்கைப் பிரிவிலும் இருந்தனர். ‘தொண்டைமண்டல ஶதகம்’ என்னும் நூலில் வெள்ளாளர்,
கம்மாளருக்கிடையே ஒற்றுமை இன்மை வெளிப்படுகிறது. வெள்ளாளர் தங்களை உயர்வாகவும்,
கம்மாளர் தங்களுக்குக் கட்டுப்பட்டும் இருக்க வேண்டும் என்றும் எண்ணினர்.
அந்நாளில் சில உரிமைகள் அரசனால் கொடுக்கப்பட்டு இருந்தன.
உதாரணமாக, காலில் செருப்பு அணிதல், சங்கு மற்றும் பறை கொட்டுதல், ஓட்டு வீடு கட்டிக்
கொள்ளுதல், இரண்டு வாயில்கள் கொண்ட வீடு கட்டிக் கொள்ளுதல் போன்றவை கம்மாளர்களுக்கு
அரசனால் அங்கீகரிக்கப்பட்டவை என்று கருவூர் பஶுபதீஶ்வரர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது.
செருப்பு அணிவதற்குக் கூடவா அங்கீகாரம் பெற வேண்டும் என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
ஆனால் மன்னராட்சியில் இப்படித்தான் இருந்திருக்கிறது. இதையே இன்று நாம் மனு நீதியும்,
பார்ப்பன ஜாதி வெறியும் உண்டாக்கிய கட்டுப் பாடுகள் என்று விவரம் புரியாமல் பேசிக்
கொண்டிருக்கிறோம். கம்மாளர்கள் (இடங்கை) புலம் பெயர்ந்து வந்தவர்கள். அதனால் அவர்களுக்கு
எல்லா உரிமைகளும் உடனேயே கிடைக்கவில்லை. நாளடைவில் கேட்டுப் பெற்றிருக்கின்றனர்.
இது மண்ணின் மைந்தர்களாகவோ அல்லது அவர்களுக்குப் பல காலம்
முன்பிலிருந்தே அந்த இடத்தில் வசித்து வந்த விவசாயக் குடிகளான வலங்கைப் பிரிவினருக்கு
ஏற்புடையதாக இல்லை. சமூகத்தில், இடங்கையைவிட அதிக அந்தஸ்து வலங்கைக்கு இருந்தது. முதலாம்
ராஜராஜ சோழன் காலத்திலிருந்து, வலங்கைப் பிரிவினருக்கு அரசாங்கத்திலும், ராணுவத்திலும்
உயர் பதவிகள் கிடைத்தன.
பொதுவாகவே, நில உரிமை வலங்கையினரிடமும், அதில் வேலை செய்வது
இடங்கையினராகவும் இருந்தனர். இதனால் இரண்டு பிரிவுக்கும், எப்பொழுதும் ஏதாவது சச்சரவு
இருந்து கொண்டே இருந்தது. இது, இன்றைக்கு, பார்ப்பனீய ஆதிக்கம் என்றும், தாழ்த்தப்பட்டோரை
2000 வருடங்களாக அடக்கி ஆண்டனர் என்று திரிக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பனர்கள், இந்தப்
பிரிவுகளுக்குள் வந்ததேயில்லை. இவர்கள் சச்சரவில் தலையிட்டதும் இல்லை.
1800 களில் பதிவு செய்யப்பட்ட மெக்கன்ஸி பதிவுகளில்,
நகரத்தார், பலிஜாவார் என்னும் இரண்டு பிரிவுகள், இரண்டு குழுக்களாக இருந்தவிதத்தைப்
பற்றிக் கூறப்பட்டுள்ளது. நகரத்தார் உள்நாட்டு வாணிகத்திலும், பலிஜாவார் ஏற்றுமதி,
இறக்குமதியிலும் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்குள் அடிக்கடி சச்சரவுகள் ஏற்பட்டன. தங்களுக்கு
பலம் சேர்க்க, மற்ற பிரிவினரையும் சேர்த்துக் கொண்டனர்.
கோமட்டி, வள்ளுவர், ஶாணார், பறையர் உட்பட 89 பிரிவினரை, பலிஜாக்கள்
தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டனர். செட்டி, பள்ளி, சக்கிலி, கைக்கோளர் போன்ற 14 பிரிவினரை,
நகரத்தார் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டனர். பாஞ்சாலர்களும், நகரத்தார் பக்கம் சேர்ந்து
கொண்டனர்.
சோழன் ஆட்சிக் காலத்தில் இவர்களுக்கிடையேயான சச்சரவு மிகவும்
அதிகமானது. அப்பொழுது, பாஞ்சாலர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதைத் தொடர்ந்து, பலிஜாக்கள்,
இறக்குமதியை நிறுத்தினர். இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவே, சோழ அரசன், இரு
பிரிவினரையும் கூட்டி, காஞ்சி காமாக்ஷி அம்மன் ஆலயத்தில் வைத்து சமரசம் பேசினான்.
அப்பொழுது, அம்மனுக்கு வலது புறம் நின்றவர்கள் வலங்கை என்றும், இடது புறம் நின்றவர்கள்
இடங்கை என்றும் அழைக்கப்பட்டனர்.
சச்சரவைத் தீர்க்க, அந்த இரண்டு குழுக்களும், தனித்தனியே
வாழும்படி அறிவுறுத்தப்பட்டனர். ஒருவரது தெருவில் மற்றொரு பிரிவினர் நுழையக் கூடாது
என்றும், நல்லது, கெட்டது விஷயங்களில், ஒருவருக்கொருவர் கலந்து கொள்ளக் கூடாது என்றும்,
கொடுக்கல், வாங்கல், திருமண உறவு என்று ஒருவருக்கொருவர் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும்
முடிவானது.
இதில் இரண்டு பக்கமும் சேராதவர்கள் மத்யஸ்தர்கள் எனப்பட்டனர்.
ப்ராம்மணர், பட்நூல்காரர், கணக்கர், வெள்ளாளர், ரெட்டி, தோட்டியர், மராத்தியர்,
தெலுங்கர், முஸ்லீம், லப்பை, ராஜபுத்திரர், பண்டாரம் உள்ளிட்ட 69 பிரிவினர், எந்தப்
பக்கமும் சேரவில்லை.
இந்த இரண்டு பிரிவுகளிலுள்ள பல ஜாதி மக்களுமே அநேகமாக உழைக்கும்
வர்க்கத்தை சேர்ந்தவர்கள். துணி நெய்தல், பட்டறை வேலை மற்றும் எல்லா உடல் உழைப்பு வேலைகளைச்
செய்பவர்கள். தோல் தொழிலாளர்களில், சக்கிலியர்
ஜாதியைச் சேர்ந்த பெண்கள் வலங்கையைச் சேர்ந்தவர்களாகவும், ஆண்கள் இடங்கை என்றும் குறிப்பிடப்பட்டனர்.
இது எவ்வளவு பெரிய அழுத்தத்தை உருவாக்கி இருக்கும் என்பதைக் கற்பனை செய்வது எளிதே.
குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு
பிரிவுகளுமே, அவர்களுக்கு என்று சொந்தக் கோயில்களையும், தங்குவதற்கான இடங்களையும்,
தெருக்களையும் கொண்டிருந்தன. அவை மற்ற பிரிவினர் நுழைய முடியாதபடி பாதுகாக்கப்பட்டன. இந்தத் தடையை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான
பின் விளைவுகளைச் சந்திக்க நேரிட்டது. அதன் காரணமாக இரண்டு பிரிவினருக்கும் இடையே மோதல்கள் எழுந்தன. ப்ராமணர்களும்,
க்ஷத்திரியர்கள், வைஶ்யர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களும் இவர்களிடமிருந்தும்,
இந்த மோதல்களிடமிருந்தும் விலகியே இருந்தனர்.
கோயில் நுழைவு மறுப்பு என்பது இடங்கை – வலங்கை வசம் இருந்த
கோயில்களில்தான். சண்டை என்றால், எதிர் தரப்பினர் கோயிலை அழிப்பது என்பதும், முதலாம்
குலோத்துங்கன் காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. உண்மை தெரியாமல், நாம் கோயில்
நுழைவு என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்டது என்று பேசிக் கொண்டிருக்கிறோம்.
வலங்கையின் கண்ணோட்டத்தில் இடங்கை தாழ்ந்தவன். இடங்கைக்கு, வலங்கையைச் சேர்ந்தவன் தாழ்ந்தவன்.
இதுதான் பிரச்சினை.
பல நேரங்ககளில் வெண்குடை, வெள்ளைக் குதிரைகள் மற்றும் சில
குறிப்பிட்ட பொருட்கள், ஆகியவற்றை உபயோகிக்கும் உரிமை உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த
இரண்டு பிரிவினரும் தங்களுக்குள் மோதிக்கொண்டனர். இந்த உரிமைகள் மன்னர்களால் அவர்களுக்கு
வழங்கப்பட்டன என்பதைக் காட்டும் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இதை இப்பொழுதைய ஆராய்ச்சியாளர்கள்,
ஜாதி அடக்குமுறை என்பதற்கான ஆதாரமாக அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் உண்மையான
நிலை என்னவென்றால், அவர்கள் புலம் பெயர்ந்து வந்து, பின்னர் காலப்போக்கில் நிரந்தரமாகத்
தங்கத் தொடங்கிய தொழிலாளர்கள். எனவே காலம் செல்லச் செல்ல, அவர்களுக்குச் சில குறிப்பிட்ட
சலுகைகள் வழங்கப்பட்டதன் மூலம், இயற்கையான குடிமக்களைப் போல ஆக்கப்பட்டனர்.
இடங்கை மற்றும் வலங்கை ஆகிய இரு பிரிவினருக்குமே வரி விதிக்கப்பட்டது
என்பதைக் காட்டும் கல்வெட்டு ஆதாரம் இருக்கிறது. தங்கள் மீது விதிக்கப்பட்ட வரியை நீக்குவதற்காக,
மன்னனுக்கு எதிராக, அவர்கள் ஒற்றுமையாக இணைந்து போராடிய தருணங்களும் உண்டு. ராமானுஜர்
காலத்தில் காஞ்சியில் நாம் காண்பது என்னவென்றால், இரண்டு பிரிவுகளுக்கும் இடையே நிலவிய
உச்சகட்ட அமைதியின்மை, மற்றும் அதன் விளைவாக நடந்த ராஜமஹேந்திரனின் கொலையும், மற்ற
பிரிவினருக்குச் சொந்தமான கோயில்கள் எரிக்கப் பட்டதும் தான்.
காஞ்சியில்மட்டும் ஆறு வைஷ்ணவ திவ்ய தேஶக் கோயில்கள் அழிக்கப்பட்டன.
இவற்றுள், நிலாத்திங்கள் துண்டம் எனப்படும் திவ்யதேஶக் கோயில் பெருமான் இன்று
ஏகாம்பரேஶ்வரர் கோயிலின் உட்ப்ராகாரத்தில் ஒரு சிறிய ஸன்னிதியில் இருக்கிறார்.
கள்வனூர் என்னும் திவ்யதேஶக் கோயிலின் பெருமாளான ஆதிவராஹஸ்வாமி, காமாக்ஷி
அம்மன் சன்னதிக்கு அருகே ஒரு சிறு சன்னதியில் இருக்கிறார். இவை தவிர ஊரகம்,
காரகம் நீரகம், கார்வானம் என்னும் நான்கு வைஷ்ணவ திவ்ய தேஶக் கோயில்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
இவை ஆழ்வார்கள் காலத்தில் இருந்தன, இன்று இல்லை.
இடங்கைப் பிரிவினரில் பலரும் காளாமுக மதத்தைப் பின்பற்றியிருக்க
வேண்டும். அவர்கள் மடம் இருந்த இடங்களில் எல்லாம் வைணவக் கோயில்கள் தாக்கப்பட்டிருக்கின்றன.
அவர்கள் காஞ்சி மற்றும், ஸ்ரீரங்கம் பகுதிகளில்தான் இருந்தார்கள். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள
திருவானக்கோயில், வட ஆற்காடு மாவட்டத்தில் வேடல், தஞ்சாவூரில் கோயில் தேவராயன்பேட்டை,
திருச்சியில் கொடும்பாளூர் ஆகிய இடங்க்களில் காளாமுகர் மடங்கள் இருந்தன என்று ஆதாரம்
இருக்கிறது. இந்தப் பகுதிகளில்தான் இடங்கை- வலங்கை சண்டை, சாவு, விஷ்ணு கோயில் மீது
தாக்குதல் என்றெல்லாம் ஆகியிருக்கின்றன.
இந்தப் பகுதியில் இருந்த ராஜமஹேந்த்ர சதுர்வேதி மங்கலத்திலிருந்த
விஷ்ணு கோயில், குலோத்துங்கனின் இரண்டாம் ஆட்சியாண்டில் தாக்கப்பட்டது என்று ஏற்கெனெவே
பார்த்தோம். தாக்கப்பட்டு, அழிக்கப்பட்ட விஷ்ணு திவ்யதேஶக் கோயில்கள் காஞ்சியைச் சார்ந்தவை.
இவை தவிர வேறு பல கோயில்களும் தாக்கப்பட்டிருக்கின்றன, அல்லது
ஶிவன் கோயில்களாக உருமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. போதிய ஆதாரங்கள் திரட்டாததால்
அவற்றை இங்கே எழுதவில்லை. இந்த அழித்தல்களுக்கு மூலக் காரணம், இடங்கை மக்களுடைய பாஶண்ட
மத நம்பிக்கை. சண்டை வரும்பொழுது, எதிராளியின் சொத்துக்களை அழித்தது மட்டுமல்லாமல்,
அவர்களது கோயில்களையும் அழித்திருக்கிறார்கள்.
சில சமயங்களில் ஒரே கோயிலில் இரு பிரிவினரும் உரிமை கொண்டாடி
இருக்கின்றனர். கோயில் தேரை இழுப்பதற்கும், சண்டை போட்டிருக்கிறார்கள். ஓடும் தேரை
நிறுத்தியும் இருக்கிறார்கள். காஞ்சியில்தான் இவையெல்லாம் நடந்திருக்கிறது. ஆங்கிலேயர்
ஆண்ட பொழுது பலமுறை இந்த விஷயங்கள் கோர்ட்வரை சென்றிருக்கிறது.
அன்று
இடங்கைப் பிரிவினர் கட்டின அல்லது கட்டுப்பாட்டிலுள்ள கோயிகளில் வலங்கை மக்கள் நுழைய
முடியாது. அது போல வலங்கையினர் கோயில்களில் இடங்கையினர் நுழைய முடியாது. இது தாழ்த்தப்பட்ட
மக்களை ஜாதி ஹிந்துக்களும், ப்ராம்மணர்களும் ஒதுக்கியதாகச் சொல்லி அதற்குத் துணையாக
மனுநீதியையும் சேர்த்துக் கொண்டு உச்சகட்ட அரசியல் இன்று நடந்து கொண்டிருக்கிறது. இடங்கை,
வலங்கைப் பிரிவினருக்கு இடையேயான பகைமையைப் பற்றிய, உண்மையான விவரங்களும், மற்றும் பாரபக்ஷமற்ற ஆராய்ச்சிகளும் மக்கள் மத்தியில்
வைக்கப்படவேண்டும். அதுவே எல்லா விவரங்களையும் வெளியில் கொண்டு வரும்.
***
No comments:
Post a Comment